Followers

Search Here...

Saturday 27 January 2018

உலகம், வேத சப்தத்தால் உருவானது

உலகம், வேத சப்தத்தால் உருவானது என்கிறது நம் சனாதன தர்மம்.

வரிசையாய் சொல்ல வேண்டுமென்றால், ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், பூமி என்று உலக ஸ்ருஷ்டி சொல்லப்படுகிறது நம் சாஸ்திரத்தில்.

அதாவது,
கண்ணுக்கு தெரியாத ஒலியால், அதன் அதிர்வால் அணுக்கள் நகர்ந்து, கண்ணுக்கு புலப்படும் இந்த உலகமும், அதில் பல வித உடல்களும், நதிகளும் உருவாகின என்கிறது நம் தர்மம்.

எத்தனை தெளிவு மற்றும் உண்மை இருந்தால், ஒலியில் இருந்து உலகம் பிறந்தது என்று சொல்ல தைரியம் வரும் நம் ரிஷிகளுக்கு?

உலகம் உருண்டை என்று நம் தர்மம் சொல்ல, வராக மூர்த்தியாக வந்த பெருமாள் உருண்டையான உலகை காத்தார் என்று புராணங்கள் சொல்ல, பின்னால் மனிதனால் ஏற்பட்ட பொய் மதங்கள், உலகம் தட்டை என்று புது விஞ்ஞானம் சொன்னது.

விளைவு?

அறிவியல் மூலம் கலிலியோ என்ற விஞ்ஞானி உலகம் உருண்டை தான் என்று ஆராய்ச்சி செய்து சொல்ல, தங்கள் புத்தியை கொண்டு உருவாக்கப்பட்ட மத நம்பிக்கையை இது குலைப்பதாக உள்ளது என்று 1633ADல் ஆயுள் தண்டனை கொடுத்தனர்.

இதுவே நம் ரிஷிகளின் பெருமையையும், மனிதர்களால் உருவாக்கப்பட்ட மற்ற மதங்ளுக்கும் உள்ள வேறுபாடு.

ஹிந்து மதம் என்ற ரிஷி தர்மம் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தெய்வங்களின் தொடர்பால் உருவானது.
ஹிந்துவாய் பிறந்ததற்கே கோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.
இதன் அருமையை உணர்ந்தவன் கோடி புண்ணியம் செய்தவன். பெருமையை உணர்ந்து, வாழ்வில் கடைபிடிப்பவன் அதை விட புண்ணியம் செய்தவன்.

அதுவே உண்மை என்றும் இன்றைய  விஞ்ஞானம் சொல்கிறது.

உலகத்தில் மழை இல்லை என்றால், உலகத்தில் துன்பங்கள் ஏற்பட்டால், உடலில் உபாதை ஏற்பட்டாலும், சரி செய்வதற்கு, பொதுவாக அததற்கு வேத மந்திரங்கள் உண்டு.

மழை வேண்டி வருண ஜெபம் செய்யும் வேதியர்கள் இன்றும் உண்டு.

வேத மந்திரங்கள் ஒலிக்கும் இடங்களில், அந்த இடங்களில் உள்ள தோஷங்கள் தானே விலகி விடுகிறது.

வேத சப்தத்தால் உருவானது தான் இந்த உலகமே, என்பதே இதற்கு காரணம்.

இந்த ரகசியத்தை புரிந்து கொண்டாலே, உலக பிரச்சனைக்கும், நம் உடல் மன பிரச்சனைக்கும் வேத மந்திரங்கள் கொண்டு சரி செய்து கொள்ளலாம் என்று தெரிகிறது.

வேதியர்களை கொண்டாடிய இந்த பாரதம், தன்னிறைவு பெற்ற நாடாக இருந்தது 947AD வரை.

பாரத மண்ணில் இருந்தவன் எவனும் பொருள் சம்பாதிக்க வெளிநாடு போகவில்லை.

உலகமே பாரதத்தை நோக்கி படை எடுத்து செல்வங்களை எடுத்து செல்ல முயன்றது என்பது நடந்த வரலாறு.

1947ல் பிச்சைகாரர்களாக விடப்பட்ட பாரத மக்கள், வேதத்தின் மகிமையை மறந்து இருந்தனர்.

1300 வருட கலாச்சார சீற்கேட்டால், வேதத்தின் மகத்துவம் அந்த 1947ல் இருந்த தலைமுறையில் மறைந்து இருந்தது.

இதனால் வேதமும் புறக்கணிக்கப்பட்டு, வேதியர்களும் புறக்கணிக்கப்பட, வேத சப்தங்கள் குறைய, சீர்கெட்டு போகும் உலகம், உருவாகியது. இன்னும் சீரழிகிறது.

பாரத மண்ணில் இருந்தவன் எவனும் பொருள் சம்பாதிக்க வெளிநாடு போகவில்லை என்ற நிலை மாறி, பிச்சைக்காரன் போன்று விடப்பட்ட பாரத மக்கள், எங்கு பணம் கொடுத்தாலும், எவன் கொடுத்தாலும், அங்கே சென்று வாழ்வதற்கும் தயார் என்ற நிலையில் இன்று உள்ளனர்.

வேதம் என்ற ஒலியால், உலகம் ஸ்ருஷ்டி ஆனது என்ற பொழுது, அந்த ஒலியை அதற்கு உரிய மாத்திரைகளில் உச்சரிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது.

சரியான உச்சரிப்பே வேத சப்தத்திற்கு முக்கியம்.

இதனால் வேதத்தை சரியான உச்சரிப்புடன் சொல்ல தன் வாழ்வை இதை கற்பதற்காக, சொல்வதற்காக வேதியர்கள் என்ற பிராம்மண சமுதாயத்துக்கு இந்த கடும் சவாலான பொறுப்பு கொடுக்கப்பட்டது.
உலக விஷயங்கள், பொருள் சேர்ப்பது போன்றவை தடுக்கப்பட்டது.

12 வருடங்கள் வேதத்திற்காகவே வாழ்ந்து, வேதம் மட்டுமே கற்று, வாழ்நாள் முழுவதும் வேதத்தை மட்டுமே சொல்லி கொண்டு, இன்றும் வேதியர்களாக சிலர், உலகம் பொருளை நோக்கி ஓடினாலும், இன்றும் கோவிலையும், வேதத்தையும் காப்பாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இன்றைய அறிவியல் wave energy, sound energy போன்ற ஆராய்ச்சியில் உலகம் ஒலியால் உருவானது என்கிறது.

அணுக்களை ஏதோ ஒரு சப்தத்தால் நகர்ந்து கொண்டே இருக்கிறது என்கிறது.

இந்த நகர்வின் காரணமாக தான், நம் உடம்பிலும் உள்ள அணுக்களும் நகர்வதின் காரணத்தால், வயது ஆகி கிழ வயது வருகிறது.

இந்த நகர்வின் காரணமாக தான், 100 வருஷம் முன் கட்டிய கட்டிடம் கூட உலுத்து போகிறது.

சரியான பராமரிப்பு செய்தால், கட்டிடங்கள் காலத்துக்கும் நிற்கவும் செய்கிறது.
பராமரிப்பு என்று நிற்கிறதோ, அன்றிலிருந்து அழிய தொடங்குகிறது.

உடலும் இதே போல சரியான பராமரிப்புடன் கவனிக்கபட்டால், காப்பாற்ற படுகிறது. இதற்கும் யோகம், சித்த வைத்தியம் என்று நம் ரிஷிகள் நீண்ட ஆயுசுடன் வாழ வழி செய்துள்ளனர். ஆரோக்கியத்துடன் வாழ்ந்து காட்டியும் உள்ளனர்.

இந்த நகர்வால், அணுக்கள் சேரும் போது கண்ணுக்கு புலனாக ஒரு உலகமாக உருவெடுத்து, அதில் பல திரவியங்கள், உலோகங்கள், மனித, மர, விலங்கு, பறவை உடல்கள் உருவாகின்றன என்கிறது.

இதை எப்பொழுதோ சொல்லிவிட்டது நம் சனாதன தர்மம்.

ஒலி அலைகளால், அணுக்கள் நகர்ந்து உருவம் தரிக்கிறது. இதை இன்று அறிவியல் கண்டுபிடிக்கிறது.

இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள், ஒரு ஆக்சிஜன் அணுவோடு சேர, தண்ணீர் உருவாகி, அதுவே நதியாக, கடலாக ஓடுகிறது.

இதை முன்னமே நம் ரிஷி தர்மம், வேத சப்தத்தால் உலகம் உண்டாகிறது என்று சொல்லி விட்டது.

ஹிந்துவாக இருப்பவன், தன்  வேதத்தின் மகிமையை எதிர்ப்பானா?
வேதத்திற்கே மூலமாக இருக்கும் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் மகிமையை எதிர்ப்பானா?
எந்த ஹிந்து இப்படிபட்ட பிரணவ மந்திரத்தையும், பிரணவத்தில் இருந்து உருவான வேதத்தையும் எதிர்ப்பான்.
எந்த ஹிந்து நான் இப்படிப்பட்ட ரிஷியின் வம்சத்தில் வந்தவன் அல்ல, ஆடையில்லா முட்டாள் ஆதாம், ஏவாள் மூலம் வந்தவன் என்று சொல்வான்?

அறிவியல் சொல்லும் அந்த ஒலி "வேதம்" என்றும் கண்டுபிடித்து, அந்த வேத மந்திரங்கள் என்னென்ன என்றும் ரிஷிகளின் தவ வலிமையால் நமக்கு கொடுத்து விட்டனர்.

இதையும் தாண்டி, இந்த வேதமே "ஓம்" என்ற பிரணவத்தில் அடக்கம் என்றும் கண்டுபிடித்தனர்.
இதை படைத்தவனும் யார் என்றும் சொல்கின்றனர்.

வேதம் "ஓம்" என்ற பிரணவத்தில் இருந்து உண்டானது.
ஓம் அந்த பரவாசுதேவனால் உண்டானது.

அந்த பரவாசுதேவன்  நாராயணனே என்றும் தெளிவாக "ஹரி: ஓம்" என்று வேதம் ஹரியின் பெயரை சொல்லி அதற்கு பின் தான் பிரணவம் என்கிறது.

அந்த பரவாசுதேவன் படைத்த ப்ரம்ம தேவனுக்கு வேதத்தை கொடுத்து, உலகை படைக்க ஆணை இட்டார் பரப்ரம்மாவாகிய வாசுதேவன்.

வேத சப்தங்கள் கொண்டு ப்ரம்ம தேவன் உலகை ஸ்ருஷ்டி செய்தார்.
உலகில் நாம் (ஜீவாத்மா) பிறக்கிறோம்.
நம்மை (ஜீவாத்மா) படைத்தவன் அந்த பரவாசுதேவன்.
நமக்கு உடல் என்ற மெய் கொடுத்தவர் ப்ரம்ம தேவன்.

வேதத்தை கொண்டு உலகை படைத்து, அதை நடத்தி கொண்டிருக்கிறார் ப்ரம்ம தேவன்.

வேதமே 'ஓம்' என்ற பிரணவத்தில் அடக்கம் என்பதால், வேதம் முழுவதும் படிப்பதற்கு சமமானது "ஓம்" என்ற பிரணவ மந்திரம்.

அந்த ஓம் என்ற பிரணவமும் மூன்று அக்ஷரங்களால் ஆனது.

அந்த மூன்று அக்ஷரங்கள் "அ உ ம" எனப்படும்.

உலகம் வேதத்தில் அடங்குகிறது.
வேதம் பிரணவத்தில் அடங்குகிறது.
பிரணவம் "அ" என்ற அக்ஷரத்தில் ஆரம்பிக்கிறது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கீதையில், அக்ஷரங்களில் நான் "அ" என்ற அக்ஷரமாக இருக்கிறேன் என்கிறார்.

ஸ்ரீ கிருஷ்ணர் இதன் மூலம் என்ன சொல்கிறார்?

உலகமே வேதத்தில் அடக்கம். வேதமே பிரணவத்தில் அடக்கம்.