Followers

Search Here...

Friday 19 June 2020

பிராணாயாமம் - ஓம் பூ:, ஓம் புவ:, ஓம் ஸுவ: என்று ஏன் சொல்கிறோம்? 7 பாதாள லோகங்களை சொல்வதில்லையே... ஏன்?

பூலோகத்துக்கு (பூ:) கீழே, 7 பாதாள லோகங்கள் உள்ளது.
பலி சக்கரவர்த்தி பூலோகம் முதல் பிரம்ம லோகம் (ஸ்த்ய லோகம்) வரை பிடித்து விட்டார்.
பலி சக்கரவர்த்தியிடம் வாமன அவதாரம் செய்து தானமாக வாங்கி தேவர்களை, மனிதர்களை, ரிஷிகளை வாழ வைத்தார் பரவாசுதேவன்.


7 பாதாள லோகங்களில் ஒன்றான "சுதலம்" என்ற லோகத்தில், பலி சக்கரவர்த்தியை இருக்க சொல்லி, அவனுக்கு காவலனாக தானே "கதாதரனாக" நிற்கிறார்.
"அடுத்த தேவ இந்திரன் பலி சக்கரவர்த்தி" என்றும் ஆசிர்வதித்து விட்டார்.

இனி,
பிராணாயாமம் சொல்லும் போதும், 
காயத்ரி மந்திரம் சொல்லும் போதும், 
இந்த பாதாள லோகங்களை சொல்வதில்லை. இது ஏன்?

மாறாக,
"ஓம் பூ, ஓம் புவ, ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓஹும் சத்யம்"
என்று நமக்கு மேல் இருக்கும் லோகங்களை சொல்கிறோம்.
பூலோகத்தில் (ஓம் பூ:) இருக்கும் நாம், நம்முடைய புண்ணியங்களை உயர்த்தி உயர்த்தி, 

  • பித்ருக்கள் உள்ள லோகமான புவர் லோகத்துக்கும்
  • தேவர்கள் உள்ள சொர்க்க லோகத்துக்கும்
  • துருவனை போன்றோர் நக்ஷத்திரமாக இருக்கும் மகர லோகத்துக்கும்
  • ரிஷிகள், யோகிகள், முனிகள் வாழும் ஜன மற்றும் தப லோகத்துக்கும்
  • பிரம்ம தேவன் வசிக்கும் சத்ய லோகத்துக்கும் 

செல்ல ஆசைப்பட வேண்டுமே தவிர, கீழ்த்தரமான வாழ்க்கை வாழ்ந்து,
'பாதாள லோகங்களுக்கு சென்று விட கூடாது' என்று நம்மை நிதானப்படுத்துகிறது.




சத்ய லோகத்துக்கும் காரணமான வைகுண்ட நாதனை அடைய ஆசைப்படும் புண்ணிய ஆத்மாக்கள், பிரம்ம தேவன் படைத்த இந்த 14 உலகங்களையும் விட்டு விட்டு, வைகுண்டம் என்ற பரமபதம் அடைந்து விடுகிறான்.

புண்ணியங்கள் செய்து, 
ஜீவ ஹிம்சை செய்யாமல், 
ஜீவ ஹிம்சையான உணவு உண்ணாமல், 
மற்றவர்களுக்கு உபயோகமாக வாழ்ந்து, 
தெய்வத்திடம் பக்தி கொண்டு மனிதன் வாழ வேண்டும் 
என்று வழிகாட்டுகிறது இந்த மந்திரங்கள்..
"ஓம் பூ, ஓம் புவ, ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓஹும் சத்யம்"
என்று சொல்லும் போதே, நாம் செல்ல வேண்டிய பாதை என்ன? என்று காட்டுகிறது..

இந்த அனுபவத்துடன் பிராணாயாமம் செய்வோம். ஆத்மாவை உயர்த்துவோம்..

Wednesday 17 June 2020

சோகத்தில் உள்ளவர்களுக்கு தர்மம் உபதேசிக்க வேண்டுமா? ஞானத்தை உபதேசிக்க வேண்டுமா?.. எது முதலில் தேவை?. ரகசியத்தை தெரிந்து கொள்வோம்..

சோகத்தில் உள்ளவனை எப்படி சமாதானம் செய்ய வேண்டும்? 
என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் காட்டுகிறார்...
சோகத்தில் இருப்பவனிடம் உடனேயே தர்மம் பேச கூடாது. 
சோகத்தில் இருப்பவனிடம் தர்மம் பேசினால் கேட்க மாட்டான்.
மேலும்
சோகத்தில் இருப்பவனிடம் 'தர்மம் பேச பேச, கேட்பவனுக்கு சோகம் அதிகமாகிவிடும்'.




சோகம் இல்லாமல் இருக்கும் போது தான் "தர்மம் பேச வேண்டும்".

"சோகம் இல்லாமல் இருக்கும் போது தான், தர்மம் புரியும்.
ஆதலால், 
சோகத்தை முதலில் நீக்கி விட்டு தான், தர்மம் பேச வேண்டும்"
என்று நமக்கு காட்டுகிறார் கிருஷ்ண பரமாத்மா.
"கர்ம யோகம், ஞான கர்ம சந்யாச யோகம், கர்ம சந்யாச யோகம், தியான யோகம், ஞான விஞ்ஞான யோகம்,ராஜ வித்யா யோகம், பக்தி யோகம்"
என்று பல வித தர்மங்களை சொன்னார் ஸ்ரீகிருஷ்ணர் என்று பார்க்கிறோம்.

அர்ஜுனன் சோகத்தில் ஆழ்ந்த போது, உடனே "கர்ம யோகம் என்ற தர்மத்தை சொல்கிறேன் கேள்" என்று ஆரம்பிக்கவில்லை என்று கவனிக்க வேண்டும்.

"சோகத்தில் மூழ்கியவனிடம் முதலில் ஞான யோகத்தை (ஸாங்க்ய யோகம்) (Jnana Yoga) பேசி விட்டு தான், 
பிறகு பல வித தர்மங்களை பற்றி பேசுகிறார்" 
ஸ்ரீ கிருஷ்ணர் என்று கவனிக்கலாம்.

"பாண்டவர்களுக்கு குண்டூசி சொத்து கூட தர முடியாது" என்று சொன்ன துரியோதனிடம் போரிடலாம் என்று வந்த அர்ஜுனன், இப்படி என் தாத்தாவையும், குருவையும் எதிர்க்கும் படியாக செய்து விட்டானே! 
இப்படி சொத்துக்காக என் தாத்தாவை கொன்று, குருவை கொன்று, என்ன சாதிக்கப்போகிறேன்?  
நான் போர் செய்ய மாட்டேன். 
பிச்சை எடுத்தாவது வாழ்கிறேன்"
என்று காண்டீபத்தை கீழே வைத்து விட்டான் அர்ஜுனன்.

சோக கடலில் மூழ்கி விட்டான் அர்ஜுனன்.

உடனே "கர்ம யோகம் சொல்கிறேன் கேள்" என்று ஸ்ரீ கிருஷ்ணர் ஆரம்பிக்கவில்லை.

கர்ம யோகப்படி,
"கர்மாவை செய். நீ ஷத்ரியன். க்ஷத்ரியனாக போர் செய்.
தாத்தாவாக இருந்தாலும், குருவாக இருந்தாலும், அதர்மம் செய்யும் துரியோதனன் பக்கம் இருக்கும் இவர்களை கொன்று விடு.
பலனை என்னிடம் விடு"
என்று உடனேயே கர்ம யோகம் பேசி இருந்தால்,
அர்ஜுனன் மேலும் சோகத்தில் ஆழ்ந்து போயிருப்பான்.




சோகம் உள்ளவனிடம், தர்மத்தை பேசுவதை காட்டிலும், "ஆத்ம ஞானத்தை சொன்னால் தான் சோகம் அடங்கும்".

பகவத் கீதை, முதல் அத்யாயத்திலேயே அர்ஜுனன் சோகத்தில் ஆழ்ந்து விடுகிறான்.

கிருஷ்ண பரமாத்மாவை சரணடைந்து வழி கேட்கிறான்.
முதலில் அவன் சோகத்தை போக்க "ஆத்மாவின் உண்மையான நிலை என்ன?" என்று சொல்லி,
ஞான யோகத்தை சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

இரண்டாவது அத்யாயம் முழுக்க "ஞான யோகத்தை" (ஸாங்க்ய யோகம்) பேசி, அவன் சோகத்தை முழுவதுமாக போக்கிவிடுகிறார்.

இரண்டாவது அத்யாயம் முடிவிலேயே அர்ஜுனன் சோகத்தை விட்டு விடுகிறான்.

சோகம் இல்லாமல் இருக்கும் அர்ஜுனன் பிறகு பல கேள்விகள் தர்ம விஷயமாக கேட்கிறான்.
அவன் கேட்கும் பல கேள்விகளுக்கு, பல தர்மங்களை சொல்லி உபதேசம் செய்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர் என்று பார்க்கிறோம்.

சோகம் அதிகமாக இருப்பவர்கள், இரண்டாவது அத்தியாயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லும் உபதேசங்களை படித்தாலே சோகம் பறந்து விடும்.
சோகத்தில் சிக்கியவர்களை பார்த்து, கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்...
"கவலை பட தகுதியில்லாத உலக விஷயங்களுக்கு நீ சோகப்படாதே !
போனவனை பற்றியும் கவலை படாதே!  இப்போது சில காலம் இருப்பவனை பற்றியும் கவலைப்படாதே! 

அல்ப காலம் இந்த உடலில் இருக்க போகும் நீ, இதற்கெல்லாம் கவலை படுவதே வீண்!
உடல் அழியக்கூடியது.  
இது சம்பந்தமாக கவலைப்படுவதே வீண் !




ஆத்மா அழியாதது.  
நீயும், நானும் ஆத்மாவே! 
நாம் என்றுமே அழிவதில்லை. 
எந்த ஆத்மாவும் அழிவதில்லை.

இந்த ஆத்மா இந்த உடலுக்குள் சில காலம் இருந்தது. 
இந்த உடல் சிறு குழந்தையாக, சிறுவனாக, வாலிபனாக, கிழவனாக ஆகி விழுந்து விட்டது. 
ஆனால் உள்ளே இருக்கும் ஆத்மா இந்த உடலுக்குள் இருந்த போது எப்படி இருந்ததோ அதே போல எப்பொழுதும் இருந்தது... 
உடல் விழுந்தவுடன், இந்த ஆத்மா வேறு உடலுக்கு போகிறது. 
அவ்வளவு தான்.

இந்த உடலும், மனதும் தான் சோகம், சந்தோஷம், வெற்றி, தோல்வியை கொடுக்கிறது, அனுபவிக்கிறது.  
நீயோ ஆத்மா !  
இந்த உடல் தரும் இந்த வெற்றியையும் லட்சியம் செய்யாதே ! அவமானங்களையும் லட்சியம் செய்யாதே !
சாதாரணமாகவே இரு.
நீ தனியானவன்.  
நீ ஆத்மா.  

சிறிது காலம் இந்த உடலில் இருக்கிறாய். 
இந்த உடலை வைத்து என்ன நல்ல காரியங்கள் செய்ய முடியுமோ செய். 

மற்றபடி இந்த உடலால், மனதால் வரும் அனுபவங்களை சிறிதும் மதிக்காதே !"
என்று "ஞான யோகத்தை" சொல்லி, அர்ஜுனனின் சோகத்தை சரி செய்கிறார் கிருஷ்ணர்.
சோகம் தெளிந்து இருக்கும் அர்ஜுனனுக்கு பிறகு, 'கர்ம யோகம், பக்தி யோகம்' என்று பல வித தர்மங்களை சொல்லி...
"எந்த தர்மமும் உன்னால் கடைபிடிக்க முடியாது என்றால், என் மீது நம்பிக்கை வைத்து என்னையே சரணடைந்து விடு. நான் உன்னை காத்து, மோக்ஷம் வரை கூட்டி செல்கிறேன்"
என்று கீதையை முடிக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

சோகத்தில் இருப்பவர்கள், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன 2வது அத்தியாயம் கட்டாயம் அர்த்தம் புரிந்து படிக்க வேண்டும். 
நம்மைவிட்டு, சோகம் ஓடி விடும்.

தர்மங்கள் தெரிந்து கொள்ள ஆசை இருந்தால், 3வது அத்தியாயம் ஆரம்பித்து பல தர்மங்களை அர்த்தம் புரிந்து படிக்கலாம்.

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர்.
வாழ்க குருநாதர்.