Saturday, 27 January 2018

திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் செய்த உபதேசம்

திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள், தன்னை உலகிற்கு வெளிக்காட்டி கொள்ள சங்கல்பித்தார்.

தொண்டைமான் சக்கரவர்த்தி இந்த தேசத்தை, அந்த சமயம் ஆண்டு கொண்டிருந்தார்.

வராக (பன்றி) அவதாரம் எடுத்து, திருப்பதி மலையில் ஒரு வேடுவன் கண்ணில் படுமாறு நிற்க, அந்த வேடுவன் துரத்த, வேகமாக ஓடிய வராக மூர்த்தியாக இருந்த பெருமாள், ஒரு பாம்பு புற்றுக்குள் நுழைந்து மறைந்து விட்டார்.

பாம்பு புற்று எத்தனை சிறியது? அதற்குள் எப்படி அவ்வளவு பெரிய பன்றி நுழைய முடியும்? எப்படி நுழைந்தது? இது சாத்தியமா?

கண்ணால் நம்பமுடியாத ஆச்சரியம் கண் முன் நடந்ததை கண்ட வேடுவன், இது இந்த மலையின் மகத்துவம்  என்று மட்டும் உணர்ந்தான்.

ஆஞ்சநேயர் இந்த திருப்பதி மலையில் த்ரேதா யுகத்தில் அஞ்சனா தேவிக்கு மகனாக  அவதரித்தார்.
இதனால் ஒரு மலைக்கு, அஞ்சனாத்ரி என்ற பெயர் ஏற்பட்டது.

வ்ருஷபன் என்ற அசுரன் ஞானம் பெற்றதால், வ்ருஷபாத்ரி என்று ஒரு மலைக்கு பெயர் ஏற்பட்டது.

பாவங்களை பொசுக்கும் வெங்கடாத்ரி என்று ஒரு மலைக்கு பெயர் ஏற்பட்டது.

சேஷாத்ரியாக ஒரு மலையும்,

கருடாத்ரி என்று ஒரு மலையும்,

நாராயண என்ற வைகானச முனிவரின் பெயரால் நாராயணத்ரி என்ற மலையும், ஏற்பட்டு ஏழு மலையும் தெய்வீகம் உடையது என்பது மட்டும் அனைவருக்கும் தெரிந்த காலம் அது.

பெருமாள் சாந்நித்யம் இருந்ததே தவிர, ஸ்ரீனிவாச பெருமாள் இன்னும் ப்ரத்யக்ஷம் ஆகவில்லை.

இந்த சமயத்தில், ஸ்ரீனிவாசன் தன்னை வெளிக்காட்ட திருவுள்ளம் கொண்டார்.
கலியில் வரப்போகும் ஜனங்களுக்கு கருணை செய்யும் நோக்கில் அர்ச்ச அவதாரம் செய்ய சங்கல்பித்தார்.

ஒரு பெரிய பன்றி, சிறிய பாம்பு புற்றுக்குள் நுழைந்து மறைந்து விட்ட அதிசயத்தை வேடுவன், தனது அரசன் தொண்டைமானிடம் சொன்னான்.

இது ஏதோ தெய்வ சம்பந்தமான விஷயம் என்று உணர்ந்து, வேத கோஷங்கள் முழங்க, அந்த புற்றில் குடம் குடமாக பசும் பாலை ஊற்றி அபிஷேகம் செய்ய சொன்னார்.

புற்று மண் கரைய கரைய, அதி ஆச்சர்யமாக, சுயம்புவாக வராஹ மூர்த்தி ஆவி்ர்பவித்தார்.

இந்த வராஹ மூர்த்தி தான் நாம் இன்றும் தரிசனம் செய்யும் வண்ணம் திருப்பதியில் தரிசனம் தருகிறார்.

மேலும் பாலை ஊற்ற, அதி ஆச்சர்யமான நம் ஸ்ரீநிவாச பெருமாள் அர்ச்சா மூர்த்தியாக வெளிப்பட்டார்.

அர்ச்சா மூர்த்தியாக இருந்த ஸ்ரீனிவாசன் தொண்டைமானை அர்ஜுனனுக்கு நிகரான நண்பனாக ஏற்றார்.

அர்ச்சா மூர்த்தியாகவே தொண்டைமானிடம் பேசினார். அவர் கட்டிய கோவிலே நாம் காணும் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்.

தன் பஞ்ச ஆயுதங்களை தொண்டைமானுக்கு ஒரு போரில் கொடுத்து விட்டார்.

போர் முடிந்து வெற்றி பெற்ற தொண்டைமான், அதை திருப்பி கொடுக்க, நண்பனான நீயே வைத்துக்கொள் என்று கூறி விட்டார்.

வற்புறுத்தி கொடுக்க, நீயும் பஞ்ச ஆயுதங்கள் இல்லாமல் இருக்க, எனக்கு மட்டும் ஏதற்கு என்று எறிந்தார்.
அதுவே சக்கர தீர்த்தம், சங்கு தீர்த்தம் என்று 5 புனித தீர்த்தங்கள் ஆனது.

இப்படி தன்னை பெருமாள், நண்பனாக ஏற்கிறார் என்ற பெருமை இருந்தாலும், பேசினாலும், அர்ஜுனனை போல, தனக்கு "பகவத் கீதை" போன்று உபதேசிக்கவில்லையே என்ற குறை இருந்தது.

இதை ஒரு சமயம், ஸ்ரீனிவாச பெருமாளிடமே கேட்டு விட, பக்தியுடன் கேட்கும் தொண்டைமானுக்கு ஞானத்தை உபதேசம் செய்ய சங்கல்பித்தார்.

தன் திருவாயால், திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை அதன் பொருளை, தொண்டைமானுக்கு ஞான உபதேசம் செய்தார் ஸ்ரீனிவாச பெருமாள்.

மோக்ஷத்திற்க்கான ஞானத்தை கொடுத்து, தொண்டைமான் காலம் முடிந்ததும், பரமபதம் கொடுத்து விட்டார்.

தொன்டைமான் காலத்துக்கு பின்னும், ஆயுதம் இல்லாமல் ஸ்ரீனிவாசன் இருந்ததால், பலர் இவரை சொந்தம் கொண்டாடினர்.

சிலர் இவரை சுப்ரமணியன், பாலாஜி என்று சொந்தம் கொண்டாடினர்.

சிலர் சிரித்த முகத்துடன் பார்க்க  பாலை(சிறுமி) போல இருப்பதால் அம்பாள் என்றனர். கோவிலை சொந்தம் கொண்டாடினர்.
இப்படி சில காலங்கள் ஓடியது. பெருமாள் அவர்கள் எப்படி வணங்குகிறார்களோ அப்படியே ஏற்று அமைதியாக இருந்தார்.

1017ல் அவதரித்த ராமானுஜர், இவர் பாலாஜி அல்ல, காளி அல்ல, சிவனும் அல்ல, இவரே அந்த நாராயணன், பரவாசுதேவன், ஸ்ரீனிவாசன் என்று நிரூபித்து, திருப்பதி பெருமாளை பெருமாளாக மீட்டார்.  ஸ்ரீனிவாசனே மீண்டும் சங்கு சக்கரம் கையில் எடுத்து, தான் ஸ்ரீனிவாசன் என்று ராமானுஜருக்காக உலகிற்கு காட்டினார்.

ஏன் இத்தனை காலங்கள், வேறு வேறு தெய்வங்களாக இருந்தீர்கள் என்றதற்கு, 'அனைத்து தேவதைகளும் தன் அங்கங்களே என்பதால் தான்  பெருமாள் தடுக்கவில்லை' என்று உணர்ந்தார் ராமானுஜர்.

அன்றிலிருந்து, ஸ்ரீனிவாசன் கோடி உலக மக்களை தன் பக்கம் தினமும் இழுத்து, அவர்கள் வேண்டுவதை அருளிக்கொண்டு இருக்கிறார்.

ஸ்ரீனிவாசனை மீட்ட ராமானுஜர், "ஓம் நமோ நாராயாணா" என்ற திரு அஷ்டாக்ஷர (8 எழுத்து) மந்திரத்தின் ரகசியம் அறிய ஸ்ரீரங்கத்தில் இருந்து, 18 முறை திருகோஷ்டியூர் வரை நடையாய் நடந்து சென்று, கடைசியில் ஸ்ரீ ரங்கநாதரே நம்பியிடம், ராமானுஜருக்கு அணுகிரஹிக்கும் படி நியமிக்க, இறுதியில், திரு அஷ்டாக்ஷர மந்திரத்தின் ரகசியத்தை ராமானுஜருக்கு, திருகோஷ்டியூர் நம்பி உபதேசம் செய்தார்.

தனக்கு நரகமே கிடைத்தாலும் பரவாயில்லை, ஆனால் மோக்ஷம் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்று, தனக்கு கிடைத்த ரகசியத்தை அனைவருக்கும் வாரி கொடுத்து விட்டார் வள்ளல் ஸ்ரீ ராமானுஜர்.

நாம் பிறவி கடலை கடக்க, ராமானுஜர் நமக்கு செய்த பெரிய உபகாரம் இது.
ராமானுஜர் போன்ற தயாளு எங்கும் இல்லை.

No comments: