Followers

Wednesday, 10 November 2021

த்ரிவிக்ரம அவதாரம் நமக்கு நேராக நடப்பது போலவே, நமக்கு காட்டுகிறார் ஆழ்வார்.. பாசுரம் அர்த்தம் "ஒண் மிதியில் புனலுருவி.." தெரிந்து கொள்வோம்.

த்ரிவிக்ரம அவதாரம் நமக்கு நேராக நடப்பது போலவே, நமக்கு காட்டுகிறார் ஆழ்வார். ஆச்சர்யமான  பாடல். 

ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப

ஒரு காலுங் காமருசீர்

அவுணன் உள்ளத்து எண்மதியுங் கடந்து

அண்ட மீது போகி

இரு விசும்பி னூடு போய் எழுந்து

மேலை தண்மதியும் கதிரவனும் தவிர ஓடி

தாரகையின் புறந்தடவி

அப்பால் மிக்கு

மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை!

மலர்புரையும் திருவடியே வணங்கினேனே!

- திருநெடுந்தாண்டகம் (திருமங்கையாழ்வார்)


அசுர குணம் உள்ளதால், இந்திரன் முதல் அனைவரையும் அடக்கி, பூலோகம் முதல் சத்ய லோகம் வரை பிடித்து விட்டான் பலி சக்கரவர்த்தி .

பிரகலாதனின் பேரன் தான் என்றாலும், "தான்" என்ற கர்வம் கொண்டிருந்தான். 

ஆனால், 

தன் தாத்தாவை போல, உள்ளூர நாராயணனிடம் பக்தியும் கொண்டிருந்தான்.

இந்திரன் பிரம்மாவிடம் முறையிட்டு அழ, ப்ரம்மா பெருமாளிடம் பிரார்த்தனை செய்ய, "ஹிரண்யகசிபு போல தீயவனாக இருந்தால் வதம் செய்யலாம். ஆனால் இவன் தர்மம் தெரிந்தவன் என்பதால், வதம் செய்ய முடியாது. நானே இவனிடம் கை நீட்டி தானமாக வாங்கி தருகிறேன்" என்று பெருமாள் அனுக்கிரஹம் செய்து விட்டார்.





இந்திரனின் தம்பியாக "உபேந்திரன்" என்ற வாமன ரூபத்தில், ஒரு பிராம்மண சிறுவனாக பலி சக்கரவர்த்தியை பார்க்க வந்து விட்டார் பெருமாள்.

பலி சக்கரவர்த்தியிடம் தன் காலால் 3 அடி தானமாக கேட்க, "தந்தேன் !" என்று வாமன பகவானிடம் தீர்த்தம் விட்டதும், கிடு கிடுவென்று வளர்ந்து விட்டார்.

அவர் எத்தனை தூரம் வளர்ந்தார்? என்று நமக்கு நேராக காட்டுகிறார் ஆழ்வார்.

தன்னுடைய பெரிய ஒரு திருவடியால் (ஒருகால்), இந்த பூமி முழுவதிலும் கால் பதித்து (ஒண் மிதியில்) நிற்க (நிற்ப), அவர் அழுத்திய அழுத்தில், பூமிக்கு அடியில் உள்ள நீர்(புனல்) பீச்சிக்கொண்டு (உருவி) வெளியே தெறித்ததாம்.

வாம பகவானுடைய அழகையும் பெருமையையும் நேரில் கண்ணாலே காணப்பெற்றவன் அல்லவா பலி சக்கரவர்த்தி. இவனைப்போல பாக்யசாலியுண்டோ என்று நினைத்த ஆழ்வார், பலி சக்கரவர்தியை "காமருசீர்" என்று அழைக்கிறார்.

 

பூலோகம் முதல் சத்ய லோகம் வரை பிடித்து வைத்திருந்த பலி சக்கரவர்த்தி, "பூமியை இழந்து விட்டோம். பரவாயில்லை.. நம்மிடம் மேலுலகம் உள்ளதே!" என்று நினைத்து இருக்க, அவன் எண்ணத்தில் இடி விழுந்தது போல (அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து), பெருமாள், மற்றொரு காலால் பூலோகம் தாண்டி, சொர்க்க லோகம் தாண்டி, மகர லோகம் தாண்டி, ஜன லோகம் தாண்டி, தப லோகம் தாண்டி, சத்ய லோகமும் தாண்டி இருக்கும் அண்டத்தின் மூடி மீது போய் ஒரு இடி இடித்தாராம் (அண்ட மீது போகி).


இப்படி அதி ஆச்சர்யமாக மற்றொரு காலால் பெரிய ஆகாசம் வரை எழுந்து (இரு விசும்பினூடு போய் எழுந்து), மேலே உள்ள சந்திரன், சூரிய மண்டலத்தையும் தாண்டி ஓடி(மேலை தண்மதியும் கதிரவனும் தவிர ஓடி), வானில் உள்ள நக்ஷத்திரங்களை தொட்டு கொண்டே (தாரகையின் புறந்தடவி), சத்ய லோகம் தாண்டி  (அப்பால் மிக்கு) த்ரிவிக்ர பெருமாள் நிற்க, "மூன்றாவது அடி கொடுக்க இனி ஒரு சொத்து இல்லை" என்றபடி கடன்காரனாக பலி சக்கரவர்த்தியை நிறுத்தி விட்டாராம்.

இப்படி இரண்டே அடியில், பூலோகம் முதல் சத்ய லோகம் வரை (மண் முழுதும்) தன் வசப்படுத்தி (அகப்படுத்து) "மூன்றாவது அடி எங்கே?" என்று கேட்டு நின்ற என் அப்பா! (எந்தை) 

உங்கள் மலர் போன்ற (மலர்புரையும்) திருவடியை அந்த பலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்தீரே ! அந்த திருவடியை நானும் வணங்கினேனே! 

என்று த்ரிவிக்ரம அவதாரத்தை ஆச்சர்யமாக ஒரே பாசுரத்தில் நமக்கு காட்டி, "தன் தலையிலும் அந்த திருவடி படுமோ?" என்று ஆசைப்படுகிறார் திருமங்கையாழ்வார்.





ஆளவந்தார், திருக்கோவிலூர் த்ரிவிக்ரம பெருமாளை பார்த்து கேட்கிறார்.

"த்ரிவிக்ரமா! உங்களுடைய திருவடி என் தலையிலும் படவேண்டுமே!" என்று  பிரார்த்தித்தார்.

உடனே பெருமாள், "உலகம் முழுவதுமே அளந்தேனே! அப்பொழுதே அனைவரின் தலையிலும் என் திருவடி பட்டு விட்டதே. உன் தலையிலும் என் திருவடி பட்டு விட்டதே!" என்றாராம்.

உடனே ஆளவந்தார், "சரணாம்புஜ த்வயம்" என்று பிரார்த்தித்தார்.

அதாவது,

"த்ரிவிக்ரமா ! உலகத்தை அளந்த போது, ஒரு திருவடி தானே பூலோகத்தில் பட்டது. மற்றொரு திருவடி மேலுலகங்களை அல்லவா அளந்தது. எனக்கு உங்களுடைய இரண்டு திருவடியும் என் தலையில் பட வேண்டுமே!" என்று கேட்டுக்கொண்டாராம்.

உடனே பெருமாள், "பலி சக்கரவர்த்தி என்னுடைய ஒரு திருவடியின் ஸ்பரிசம் கிடைக்க, தான் சம்பாதித்த சொத்தான பூலோகம் முதல் சத்ய லோகம் வரை கொடுத்தானே! நீர், என் இரண்டு திருவடியின் ஸ்பரிசமும் கேட்கிறீரே!" என்றாராம்.

உடனே ஆளவந்தார், "கோவிலுக்கு உங்களை பார்க்க யார் யாரோ வருகிறார்கள். யார் வந்தாலும், ஒன்றுமே கொடுக்காமல் போனாலும், உள்ளே வந்து கொஞ்சம் தலையை காட்டினாலேயே உங்கள் திருவடி பட்ட சடாரி கிடைக்கிறதே! உங்களுடைய இரு திருவடியும் என் தலையில் பட கூடாதா?" என்று பிரார்த்திக்கிறார்.

குருநாதர் துணை

No comments: