பகவானுடைய பக்த வாத்சல்யத்தை நினைத்த ஆழ்வார், 'பெருமாளே அமுதம் போன்று இருக்கிறாரே' என்று நினைக்கிறார்.
பெருமாளுக்கே 'அம்ருத ஸ்வரூபன்' என்று பெயர்.
"அச்சுவை பெறினும் வேண்டேன்" என்று சொல்பவர்களான ஆழ்வார்கள், பெருமாளே போதும் என்று இருப்பார்கள்.
பெருமாளே 'அமுதம்!' என்று தெரியாத தேவர்கள் ஒரு சமயம், அவரிடம் போய் தனியாக அம்ருதம் கேட்கிறார்களே! என்று நினைத்த ஆழ்வார், மேலும் பாடுகிறார்.
பாய் இரும் பரவை தன்னுள்,
பருவரை திரித்து வானோர்க்காய் இருந்து
அமுதம் கொண்ட அப்பனை எம்பிரானை!
வேயிருஞ்சோலை சூழ்ந்து விரி கதிர் இரிய நின்ற
மாயிருஞ்சோலை மேய, மைந்தனை வணங்கினேனே
- திருமங்கையாழ்வார் (திருகுறுந்தாண்டாகம்)
தகப்பன் பொதுவாக 'தன் பிள்ளை பசியோடு இருக்க கூடாது' என்று நினைப்பான்.
தேவர்களுக்கு ஒரு நாள் பசி ஏற்பட்டுவிட்டது.,
தானே அமுதனாக இருந்த போதிலும், 'தேவர்கள் கேட்கிறார்களே!' என்பதற்காக தனியாக ஒரு அமுதம் கொடுக்க,
"பரந்து இருக்கக்கூடிய திருப்பாற்கடலில் (பாய் இரும் பரவை தன்னுள்) பெரிய மலையை (பருவரை) போட்டு சுழற்றி (திரித்து). உதவிக்கு கூடவே இருந்து (இருந்து)
மலையை முதுகில் தாங்கி, மலையின் கொடி முடியையும் தானே பிடித்து கொண்டு, விஷம் வெளிப்பட்ட போது தேவர்களும் அசுரர்களும் ஓடி விட, அந்த சமயம் இரண்டு பக்கமும் தானே இருந்து கொண்டு கடைந்து, பெரிதும் சிரமப்பட்டு தேவர்களுக்கு (வானோர்க்காய்) அமுதம் கொடுத்த, என் அப்பனே !" என்கிறார்.
வீட்டுக்கு வந்த பிள்ளைகளுக்கு ஏதோ அவர்கள் கேட்டதை கொடுத்து அனுப்பி விட்டு, தன் பிள்ளைக்கு தனியாக மிகவும் உயர்ந்த பதார்த்தம் கொடுப்பது போல, என் அப்பன், அம்ருதம் வேண்டும் என்று கேட்ட இந்த பிள்ளைகளுக்கு ஏதோ அம்ருதம் என்று ஒன்றை கடைந்து கொடுத்து விட்டு, 'பக்தனான எனக்கு, தன்னையே தந்து விட்டாரே!' என்றதும், தனக்கு 'அப்பனை' என்கிறார்.
"இப்படி ஒரு அப்பனை போல, அங்கும் இங்கும் ஓடி ஆடி வேலை செய்து, தேவர்களுக்காக பரிஸ்ரமபட்டு வெப்பம் ஏறி, வியர்த்திருந்த எம் பெருமான் (எம்பிரானை), 'எங்காவது குளிர்ந்த இடம் இருக்குமா?' என்று உலவி (மேய),
கடைசியில் மூங்கில் மரங்களால் சூழப்பட்ட, அதில் உள்ள குளிர்ச்சியான இலைகள் சூழ்ந்து சோலையாக தெரிய (வேயிருஞ்சோலை சூழ்ந்து), சூரிய வெப்பம் உள்ளே புக முடியாதபடி இருக்கும் (விரி கதிர் இரிய நின்ற) திருமாலிருஞ்சோலை என்ற அழகர் மலையிலே (வேயிருஞ்சோலை) நித்ய வாஸம் செய்கின்ற அந்த மைந்தனை வணங்கினேன்" என்கிறார் ஆழ்வார்.
திருப்பாற்கடலில் தேவர்களுக்காக அமுதம் கொடுக்கும் போது, அங்கும் இங்கும் ஓடி வேலை செய்வதை பார்த்தால், ஒரு அப்பன் போல தெரிந்ததாம் ஆழ்வாருக்கு.
அதே பெருமாள், குளிச்சியான நூபுர கங்கை ஓடும் திருமாலிருஞ்சோலை வந்ததும், புஷ்டியாகி, பார்ப்பதற்கு சிறு பாலகன் போல தெரிய, 'மைந்தனை' என்று கொஞ்சுகிறார்.
கிருஷ்ணன் பார்க்க பாலகனாக இருந்தாலும், ப்ரம்ம தேவனே காலில் விழுந்து நமஸ்கரிக்கும் சர்வேஸ்வரன் அல்லவா இவர்! என்றதும், "மைந்தனை வணங்கினேனே' என்கிறார் ஆழ்வார்.
No comments:
Post a Comment