Followers

Search Here...

Showing posts with label பாசுரம். Show all posts
Showing posts with label பாசுரம். Show all posts

Tuesday 28 December 2021

தமிழா! தமிழ் இலக்கணம் பாசுரங்களில் எப்படி உள்ளது? என்று தெரிந்து கொள்வோமே நாலு கவி பெருமாள் என்று பெயர் பெற்ற திருமங்கையாழ்வாரின், பெருமையை அறிந்து கொள்வோமே! திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டாகம் என்றால் என்ன? தெரிந்து கொள்வோம்.

திருமங்கையாழ்வார் 30 பாடல்களை 'நெடுந்தாண்டகம்' என்ற செய்யுள் நடையில் எம்பெருமானை பாடினார். 

"திருநெடுந்தாண்டகம்" என்று பெயர்.

திருமங்கையாழ்வார் 20 பாடல்கள் 'குறுந்தாண்டகம்' என்ற நடையில் எம்பெருமானை பாடினார்.


ஒரு பாடலில்,

  1. ஒவ்வொரு அடியிலும் 8 சீர் இருந்தால்,
  2. அந்த பாடல் தெய்வத்தை பற்றியோ, ஒரு நாயகனை பற்றியோ பாடினால்,
  3. ஒவ்வொரு 8 சீரிலும், 
    • 1,2,5,6 ஆகிய நான்கு சீர்கள் காய்ச்சீர்களாகவும்
    • 3,4,7,8 ஆகிய நான்கு சீர்கள் இயற்சீர்களாகவும், குறிப்பாக இயற்சீர் நான்கினுள் (தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்) 
      • 3,7 ஆகிய சீர்கள் புளிமா, அல்லது தேமாவாக, 
      • 4,8 ஆகிய சீர்கள் தேமாவாக மட்டுமே அமைந்தால்,

அதற்கு "நெடுந்தாண்டகம்" என்று பெயர்.

திருமங்கையாழ்வார் பாடிய பாசுரங்கள் எப்படி  நெடுந்தாண்டகத்தில் அமைந்து இருக்கிறது?

பாசுரம்: 

முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும்

அற்றாள் தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்

பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி

பொற்றாம ரைக்கயம்நீ ரா டப் போனாள் பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே


இந்த பாசுரத்தில், 

ஒவ்வொரு அடியிலும் 8 சீர் இருக்கிறது

பெருமாளே இங்கு நாயகன். 

பாசுரத்தின் முதல் அடி (உதாரணத்திற்கு):

  1. முற்/றா/ரா - நேர் நேர் நேர்  - தேமாங்காய் (காய் சீர்)
  2. வன/முலை/யாள் - நிரை நிரை நேர் - கருவிளங்காய் (காய் சீர்)
  3. பா/வை - நேர் நேர் - தேமா  (மா சீர்)
  4. மா/யன் - நேர் நேர் - தேமா  (மா சீர்)
  5. மொய்/யக/லத் - நேர் நிரை நேர் - கூவிளங்காய் (காய் சீர்)
  6. துள்/ளிருப்/பாள் - நேர் நிரை நேர் - கூவிளங்காய் (காய் சீர்)
  7. அஃ/தும் - நேர் நேர் - தேமா  (மா சீர்)
  8. கண்/டும்- நேர் நேர் - தேமா  (மா சீர்)

1,2,5,6 - காய் சீராக அமைந்து இருக்கிறது.

3,7, 4,8 - மா சீராக அமைந்து இருக்கிறது.

எழுத்துகள் சேர்ந்து "நேர்" அல்லது "நிரை" அசையாகும்,

அசைகள் சேர்ந்து சீராகும்,

 

"முற்றாரா" என்பது ஒரு சீர். இதில் இரண்டு தமிழ் சொற்கள் இருக்கிறது (முற்று ஆரா)

"மொய்யகலத் துள்ளிருப்பாள்" என்ற இரண்டு சீரில் 3 தமிழ் சொற்கள் இருக்கிறது (மொய் அதலத்துள் இருப்பாள்)

பெருமாளை பற்றி இந்த 'நெடுந்தாண்டகம் என்ற விருத்தத்திலேயே 30 பாடல்கள் பாடுகிறார்' நம்முடைய திருமங்கையாழ்வார்.






ஒரு பாடலில்,

  1. ஒவ்வொரு அடியிலும் 6 சீர் இருந்தால்,
  2. அந்த பாடல் தெய்வத்தை பற்றி பாடினால்,
    • ஒவ்வொரு 6 சீரிலும், பொதுவாக எல்லா சீர்களும் இயற்சீர்களாகவே வந்தால் (சிலசமயங்களில் காய்ச்சீரும் இருப்பதுண்டு), 
      • பெரும்பாலும் 1,4 ஆகிய சீர்கள் விளச்சீராகவும் (கருவிளம் or கூவிளம்), 
      • 2,3,5,6 ஆகிய சீர்கள் மாச்சீர்களாகவும் (தேமா, புளிமா) வந்தால்,

அதற்கு "குறுந்தாண்டகம்" என்று பெயர்.

திருமங்கையாழ்வார் பாடிய பாசுரங்கள் எப்படி  குறுந்தாண்டகத்தில் அமைந்து இருக்கிறது?

பாசுரம்:

வானவர் தங்கள் கோனும் மலர்மிசை அயனும் நாளும்

தேமலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை

மானவேல் கலியன் சொன்ன வண்டமிழ் மாலை நாலைந்தும்

ஊனம தின்றி வல்லார் ஒளிவிசும் பாள்வ ர் தாமே


இந்த பாசுரத்தில், 

ஒவ்வொரு அடியிலும் 6 சீர் இருக்கிறது. 

பெருமாளே இங்கு நாயகன். 

பாசுரத்தில் முதல் அடி (உதாரணத்திற்கு):

  1. வா//வர் - நேர் நிரை  - கருவிளம் (விள சீர்)
  2. தங்/கள் -  நேர் நேர்  - தேமா (மா சீர்)
  3. கோ/ணும்  - நேர் நேர் - தேமா (மா சீர்)
  4. மலர்/மிசை - நிரை நிரை  - கருவிளம் (விள சீர்)
  5. அய/னும்  - நேர் நேர் - தேமா (மா சீர்)
  6. நா/ளும் - நேர் நேர் - தேமா (மா சீர்)

 

இங்கு, 

1,4 - விள சீராக அமைந்து இருக்கிறது..

2,3,5,6 - மா சீராக அமைந்து இருக்கிறது.

திருமங்கையாழ்வாரின் கவித் திறனை பார்த்து, முருகப்பெருமானே  அவருக்கு 'நாலு கவி பெருமாள்' என்று பட்டமளித்து அவருக்கு "வேல்" பரிசாக அளித்தார். (சைவர்கள், முருகப்பெருமானின் அவதாரமான ஞானசம்பந்தர் கொடுத்தார் என்று சொல்கின்றனர்)

ஆழ்வார்களில், வேல் வைத்திருக்கும் ஒரே ஆழ்வார் இவர் ஒருவரே!

திருமங்கைமன்னன் என்றும் பரகாலன் என்றும் நீலன் என்றும் கலியன் என்றும் அழைக்கப்படும் திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.

பெருமாளின் இதயத்தில் பெரியபிராட்டி இருக்கிறாள் என்று தெரிந்தும், பெருமாளை பரகால நாயகி ஆசைப்படுகிறாள். பாசுரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்வோம். முற்றாரா வனமுலையாள்...

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

முற்று ஆராவனம் முலையாள் பாவை மாயன்

மொய் அதலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்

அற்றாள் தன் நிறைவு அழிந்தாள் ஆவிக்கின்றாள்

'அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ' என்னும்

பெற்றேன் வாய் சொல்லி இறையும் பேச கேளாள்

பேர்ப்பாடி தண்குடந்தை நகரும் பாடி

பொற்றாமரை கயம் நீராட போனாள்

பொருவு அற்றாள் என் மகள்

உம் பொன்னும் அஃதே?

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)

பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.

"அழகிய முத்து ஹாரங்களை மார்பில் அணிந்து இருக்கும், அம்ருதம் கடையும் போது அம்ருதம் போல வெளிப்பட்ட அழகில் நிகரில்லாத 'பெரியபிராட்டி, ஆராவமுதனான எம்பெருமானின் அழகிய திருமார்பினுள் இருக்கிறாள்' என்பதை நேராக கண்ட பிறகும், தன் ஆசையை விட மறுக்கிறாளே என்னுடைய மகள் !

(முற்று ஆராவனம் முலையாள் பாவை மாயன் மொய் அதலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்)


'அச்சம் மடம் நாணம்' இது தானே பெண்ணுக்கு லக்ஷணம்! யார் என்ன சொல்வார்களோ! என்ற அச்சமும் இவளிடம் இல்லை. நாணமும் இல்லையே! தன்னுடைய வெட்கத்தை விட்டு, 'தனக்கும் எம்பெருமானிடத்தில் ஒரு இடம் கிடைக்குமா?' என்று கேட்டுக்கொண்டு பெரு மூச்சு விட்டு நிற்கிறாளே !

(அற்றாள் தன் நிறைவு அழிந்தாள் ஆவிக்கின்றாள்)




அருகில் இருக்கும் தோழியை பார்த்து, பயமே இல்லாமல், 'தோழீ! திருவரங்கம் சென்று ஒரு குதி குதித்து ஆடினால் தான் மனதுக்கு சமாதானம் ஆகும் போல இருக்கிறது. திருவரங்கம் சென்று ஆடுவோமா?‘ என்கிறாளே !

('அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ' என்னும்)

பெற்றவள் அருகிலேயே இருக்கிறேன். தாயிடம் சொல்லிக்கொண்டு போகவேண்டும் என்று கூட இவளுக்கு தோன்றவில்லையே! 'என் வார்த்தையை கொஞ்சமாவது கேள்' என்று சொன்னாலும் 'கேட்கமாட்டேன்' என்கிறாள்.

(பெற்றேன் வாய் சொல்லி இறையும் பேச கேளாள்)

எப்பொழுது பார்த்தாலும் வாயில் நாம சங்கீர்த்தனமே செய்கிறாள். இப்படி சதா சர்வகாலமும் பஜனை செய்தே கெட்டு போய் விட்டாளே !

'பகவத் பஜனை தானே ! செய்யட்டும்' என்று கொஞ்சம் இடம் கொடுத்தால், இவளோ இப்படி பஜனையிலேயே மூழ்கி போய் விட்டாளே !

'திருக்குடந்தை ஆராவமுதனை பார்க்க போகிறேன் என்று பஜனை செய்கிறாளே !"

(பேர்ப்பாடி தண்குடந்தை நகரும் பாடி)

'எம்பெருமானை அடைய முடியாததால் ஏற்பட்ட விரகத்தை தனித்து கொள்ள, பொற்றாமரை குளத்தில் சென்று நீராடி விட்டு வருகிறேன்' என்று சொல்லி விட்டு சென்று விட்டாளே !

(பொற்றாமரை கயம் நீராட போனாள்)

உலகத்தில் பெண்கள் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்.. என்னுடைய மகள் மட்டும் இப்படி வேறுபட்டு இருக்கிறாளே!!"

என்று பரகால நாயகியின் தாய் வருத்தப்பட்டாள்.

'பரகால நாயகியாக' இருப்பவர் திருமங்கையாழ்வார் தான்.

இவரை போலவே, 

நம்மாழ்வாரும் தன்னை 'பராங்குச நாயகியாக' வரித்து கொண்டு, எம்பெருமானை அடைய பல பாசுரங்கள் பாடி இருக்கிறார்.

திருமங்கையாழ்வாருக்கு 'நம்மாழ்வார் நிலையும், தன் நிலையும் ஒன்று போல இருக்க', தனக்கு தாயாக இருப்பவள், பராங்குச நாயகியின் தாயாரை பார்த்து, 

"தோழீ! என் மகள் (திருமங்கையாழ்வார்) தான் இப்படி இருக்கிறாளா? அல்லது உன் பெண்ணுக்கும் (நம்மாழ்வார்) இதே நிலை தானோ?"

(பொருவு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே?) என்று கேட்பது போல பாடுகிறார்.

பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.

நம்மாழ்வாராகிய பராங்குச நாயகியின் தாயார், திருமங்கையாழ்வாராகிய பரகால நாயகியின் தாய் சொன்னதை கேட்டு விட்டு சொல்கிறாள்,

"தோழீ! என் மகளை பார்த்தால், 'இவள் நப்பின்னை என்ற ஆயர் குலமகளோ! அல்லது பூமி தேவியோ! அல்லது சாக்ஷாத் மஹாலட்சுமியோ! என்பது போல, எப்பொழுது பார்த்தாலும் 'தொலைவில்லி மங்கலம்... தொலைவில்லி மங்கலம்" என்றே சொல்லி கொண்டிருந்தவள், என்னிடம் சொல்லிக்கொள்ளாமலேயே சென்று விட்டாள். உன் மகளாவது பொற்றாமரை குளம் செல்கிறேன் என்று சொல்லி விட்டு தானே சென்று இருக்கிறாள்.

இருவருமே அநேகமாக 'தொலைவில்லி மங்கலம்' (இரட்டை திருப்பதி) தான் சென்று இருப்பார்கள். வா 'தொலைவில்லி மங்கலம்' செல்வோம்" என்று சமாதானம் செய்தாள்.

பின்னை கொல்?

நில மா மகள் கொல்? 

திருமகள் கொல்? பிறந்திட்டாள், என்ன மாயங்கொலோ இவள்? 'நெடுமால்' என்றே நின்று கூவுமால்

முன்னி வந்தவன் நின்று இருந்து 

உறையும் தொலைவில்லி மங்கலம் 

சென்னியால் வணங்கும்  

அவ்வூர் திரு நாமம் கேட்பது சிந்தையே!

- நம்மாழ்வார் (திருவாய்மொழி)

Monday 27 December 2021

வெட்கத்தை விட்டு 'நான் திருநீர்மலையே போய் விடுகிறேன்' என்று பேசும் பரகால நாயகியின் நிலை. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் - திருமங்கையாழ்வார்

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

கார்வண்ணம் திருமேனி !

கண்ணும், வாயும், கைத்தலமும், அடியிணையும் கமல வண்ணம் !

பார்வண்ண மடமங்கை பத்தர் ! 

பித்தர் பனிமலர்மேல் பாவைக்கு ! 

பாவம் செய்தேன் !

ஏர் வண்ண என் பேதை! என் சொல் கேளாள் !

'எம்பெருமான் திருவரங்கம் எங்கே?' என்னும்

'நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன்' என்னும்

இதுவன்றோ நிறைவு அழிந்தார் நிற்குமாறே?

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)

பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.

"எம்பெருமானின் ரூப சௌந்தர்யத்தையே நினைத்து நினைத்து மயங்கி போகிறாள் என்னுடைய பெண்குழந்தை. 

அவர் திருமேனி அங்கம் எப்படி இருக்கும் தெரியுமா? 'நீருண்ட மேகம் போல இருக்கும்' என்று சொல்கிறாள். 

(கார்வண்ணம் திருமேனி)


அவர் கண்கள் எப்படி இருக்கும் தெரியுமா? 

அவர் உதடுகள் எப்படி இருக்கும் தெரியுமா? 

அவர் திருக்கைகள் எப்படி இருக்கும் தெரியுமா? 

அவர் திருவடிகள் எப்படி இருக்கும் தெரியுமா? 

'இவை ஒவ்வொன்றும் செந்தாமரை பூத்தது போல சிவந்து இருக்கும்' என்று சொல்கிறாள்.

(கண்ணும், வாயும், கைத்தலமும், அடியிணையும் கமல வண்ணம்)

'எம்பெருமானுக்கு 'ஸ்ரீதேவி, பூதேவி' என்று இரு பிராட்டி. 

பூதேவியின் பக்தியை மதிக்கிறார். அவள் அன்புக்கு (பற்றுக்கு) கட்டுப்பட்டு இருக்கிறார்' என்று சொல்கிறாள்.

(பார்வண்ண மடமங்கை பத்தர்)





'தாமரை மேல் அமர்ந்து இருக்கும் ஸ்ரீதேவிக்கோ இவர் ஒரு பித்தர். அவளிடத்தில் அவ்வளவு மோகம் கொண்டு இருக்கிறார்.' என்று சொல்கிறாள்.

(பனிமலர்மேல் பாவைக்கு பித்தர்)

உடனே 

'நானும் ஒரு நாயகி இங்கு இருக்கிறேனே! ஆனால் எனக்கு மட்டும் இவர் கிடைக்கவில்லையே! என்ன பாவம் செய்தேனோ?' என்று சொல்லி அழுகிறாள் என் குழந்தை.


என்னுடைய பெண்பிள்ளை இப்படி இருக்கிறாளே! இது நான் செய்த  பாவமோ?" என்று பரகால நாயகியின் தாயும் வருந்துகிறாள்.

(பாவம் செய்தேன்?)

மேலும்,

"நல்ல அழகான வண்ணமுடைய என்னுடைய பெண் குழந்தை, முக்தமான ஸ்வபாவமுடைய என்னுடைய மகள், என்னுடைய பேச்சை கேட்காமல், எப்பொழுது பார்த்தாலும் 'எம்பெருமான் திருவரங்கம் எங்கே? எங்கே? என்றே பாடிக்கொண்டு இருக்கிறாளே!

(ஏர் வண்ண என் பேதை ! என் சொல் கேளாள் ! எம்பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்)

'இப்படியெல்லாம் பாடாதே! நிறுத்து !' என்று இவளை அதட்டினால், 

'நான் நீர்வண்ணன் இருக்கும் (சென்னை) திருநீர்மலைக்கே போய் விடுகிறேன்.' என்று பேசுகிறாளே! 

(நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன்! என்னும்)


ஒரு பெண்ணுக்கு, 'அச்சம், மடம், நாணம்' என்ற ஸ்த்ரீ லக்ஷணம் இருக்க வேண்டாமா? 

இப்படி வெட்கத்தை விட்டு, 'ரங்கா ரங்கா ரங்கா..  கோவிந்தா கோவிந்தா கோவிந்தா' என்று உரக்க சொல்கிறாளே! 

இப்படி வெட்கத்தை விட்டு, ஒரு பெண் இருப்பாளோ?  வெட்கத்தை விட்ட பெண்ணை பெற்றவர்களின் நிலைமை இப்படி தான் இருக்குமோ!"

(இதுவன்றோ நிறைவு அழிந்தார் நிற்குமாறே?)

என்று பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.

ஜோடி புறாக்கள் கொஞ்சுவதை கேட்டு உருகி போகும் பரகால நாயகியின் நிலை. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. பொங்கு ஆர் மெல் இளங்கொங்கை - திருமங்கையாழ்வார்

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

பொங்கு ஆர் மெல் இளங்கொங்கை பொன்னே பூப்ப !

பொரு கயல் கண் நீர் அரும்ப போந்து நின்று

செங்கால மட புறவம் பெடைக்கு பேசும்

சிறு குரலுக்கு உடலுருகி சிந்தித்து ஆங்கே

தண்காலும் தண்குடந்தை நகரும் பாடி

தண்கோவலூர் பாடி ஆட கேட்டு

நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன?

நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே!

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)

பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.

இளம் கன்னிகையாக பொற்குடம் போன்ற அழகிய மார்புடைய என் பெண் குழந்தை, கிருஷ்ண விரகம் என்ற அக்னியால், சாம்பல் பூத்தது போல ஆகிவிட்டாளே! என்னுடைய பெண், இப்படி விரகத்தில் உருக்குலைந்து போய் விட்டாளே! 

(பொங்கு ஆர் மெல் இளங்கொங்கை பொன்னே பூப்ப)


கண்களில் எப்பொழுதும் கண்ணீரோடு இருக்கிறாளே! நிலைகொள்ள முடியவில்லையே ! ஒரு இடத்தில இவளால் உட்கார முடியவில்லையே! எழுந்திருந்து எழுந்திருந்து யாரையோ தேடி தேடி எதிர்பார்க்கிறாள், உட்காருகிறாள். மறுபடியும் எழுந்திருக்கிறாள். மறுபடியும் உட்காருகிறாளே ! 

(பொரு கயல் கண் நீர் அரும்ப போந்து நின்று)




பாம்புக்கு பயந்து, புலியின் வாயிலே விழுந்தது போல, தாய் கண்டிக்கிறாள் என்று வாசலுக்கு சென்ற என் பெண் இரண்டு ஜோடி புறா கொஞ்சிக்கொள்வதை கேட்டு விட்டு, "அதைவிட கொடிய சொல் செவியிலே விழுந்தது" என்கிறாளே!

அழகியதான சிவந்த கால்களை உடைய இரண்டு ஜோடி புறாக்கள் கொஞ்சி கொண்டு இருக்க, அவை கொஞ்சி பேசிக்கொள்ளும் குரலை கேட்டு விட்டு, இவள் உடலுருகி போய் விடுகிறாளே !

"இவை கூட தம் தம் ஜோடியோடு களித்து இருக்கிறதே! நம் நிலைமை இப்படியாயிற்றே!" என்று சிந்தித்து உடலுருகி அங்கேயே நிற்கிறாளே! 

(செங்கால மட புறவம் பெடைக்கு பேசும் சிறு குரலுக்கு உடலுருகி சிந்தித்து ஆங்கே)

இப்படியே நிற்கும் இவள், அடுத்த நொடி, காஞ்சியில் இருக்கும் விளக்கொளி பெருமாளை நினைத்து கொண்டு 'திருத்தண்கால்" (தூப்புல்) என்று திவ்ய தேசத்தின் பெயரை சொல்கிறாள்.

"என்னடிம்மா சொல்கிறாய்? என்று கேட்டால்,

கும்பகோணத்தில் இருக்கும் சாரங்கபாணியை நினைத்துக்கொண்டு "திரு குடந்தை" என்று சொல்கிறாள். 

(தண்காலும் தண்குடந்தை நகரும் பாடி)


'இவள் ஒரு நிலையில் இல்லையே !' என்று கவலைப்பட்டு இருக்க, 

இவளோ த்ரிவிக்ரம பெருமாளை நினைத்து கொண்டு "திருக்கோவலூர்" என்று சொல்லி பாடுகிறாள், ஆடுகிறாள். 

இப்படி இவள் சொல்வதை கேட்டு, "குழந்தை! நம்முடைய குடும்பத்திற்கு இது பழக்கமா? இப்படி செய்யலாமா? நீ ஒரு பெண் குழந்தையாக இருந்து கொண்டு, இப்படி செய்யலாமா? நம்முடைய குடும்பத்திற்கு இது நன்றாகவா இருக்கிறது? என்று கேட்டால், 

(தண்கோவலூர் பாடி ஆட, கேட்டு, நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன?)

"அம்மா! திரு நறையூரும் (எனும் நாச்சியார் கோவில்) பாடுவேன்.. கேள்" என்கிறாளே !

(நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே)

என்று பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.

திவ்ய தேசத்தின் பெயரை சொல்லி சொல்லி உருகி போகும் பரகால நாயகியின் நிலை. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. கன்று மேய்த்து இனிது உகந்த - திருமங்கையாழ்வார்

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

'கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்' என்றும்,

'கடிபொழில் சூழ் கணபுரத்து என் கனியே' என்றும்,

'மன்று அமர கூத்தாடி மகிழ்ந்தாய்' என்றும்,

'வட திருவேங்கடம் மேய மைந்தா' என்றும்,

'வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே' என்றும்,

'விரிபொழில் சூழ் திருநறையூர் நின்றாய்' என்றும்,

'துன்று குழல் கருநிறத்து என் துணையே' என்றும்

துணைமுலை மேல் துளிசோர சோர்கின்றாளே!!

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)

பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.

'யாரை பற்றி நினைத்தால் மூர்ச்சை ஆகிறதோ, அவரை பற்றி நினைக்காதே' என்று சொன்னாலும் கேட்காமல், அவரையே நினைத்து நினைத்து மூர்ச்சை அடைகிறாள் என்னுடைய பெண்.


திவ்ய தேசத்து பெயரை யாராவது தப்பி தவறி சொல்லிவிட்டால் கூட, இவள் அழுது அழுது சோர்ந்து விடுகிறாள்.


'அவரை பற்றி நினைக்காதே! பேசாதே!' என்று சொன்னால், விரகத்தினாலே இவளுக்கு உயிர் போய் விடுமோ! என்றும் கவலையாக இருக்கிறது.


'சரி அனுமதிப்போம்' என்று நினைத்து, 'நீ உன் ஆசை தீர பாடம்மா' என்று சொன்னால், பாட பாட அழுது சோர்ந்து விடுகிறாள் என்னுடைய பெண்.

'பக்தி செய்யாதே' என்று இவளிடம் சொன்னாலும் ஆபத்தாக இருக்கிறது.

'பக்தி செய்' என்று சொன்னாலும் ஆபத்தாக இருக்கிறது.


'பக்தி என்றால் என்ன?' என்று தெரியாத எனக்கோ, இவளிடத்தில் பாசம் மட்டுமே இருக்கிறது.


'என் பெண் குழந்தை இப்படி இருக்கிறாளே! இவளை எந்த வழியில் கொண்டு போய் சரி செய்வது?' என்று தெரியவில்லையே!!





பசு மாடுகளை மேய்த்து அதை காப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்ளும் இளம் பருவத்தில் இருக்கும் காளையே! கோபாலா! கோபாலா! கோபாலா! என்று அழைக்கிறாள்.. 

(கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்' என்றும்)


நாற்புறமும் நந்தவனம் சூழ்ந்த திருகண்ணபுர பெருமாளை நினைத்து 'கனியே' என்று அழைக்கிறாள்.

(கடிபொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்)


கூத்து ஆடுபவனை கண்டால், பார்ப்பவர்கள் தான் பொதுவாக ஆனந்தப்படுவார்கள். கண்ணனோ, தலையில் குடத்தை வைத்து கொண்டு அரங்கத்தில் பலர் மகிழ ஆட, பிறர் மட்டுமின்றி, தானும் தன் ஆட்டத்தை கண்டு ரசிக்கிறார்.

தலையில் குடத்தை வைத்து கொண்டு அரங்கத்தில்  (மன்று) ஆட, அந்த நடனத்தை பார்த்து மக்கள் அனைவரும் சபாஷ் போட, தன் ஆட்டத்தை கண்டு தானே மகிழும் குடக்கூத்தனே! என்று அழைக்கிறாள். 

('மன்று அமர கூத்தாடி மகிழ்ந்தாய்' என்றும்)


வட திருவேங்கடம் என்ற திருப்பதியில் வீற்று இருப்பவரே! கோவிந்தா! கோவிந்தா! என்று அழைக்கிறாள்.

('வட திருவேங்கடம் மேய மைந்தா' என்றும்)

அசுர ராக்ஷஸ கூட்டங்களை ஒழித்து வெற்றி பெற்ற பெருவீரனே! வேந்தே! என்று அழைக்கிறாள்.

('வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே' என்றும்)


எங்கும் பச்சை பசேல் என்று சோலையாக காணப்படும் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படும் திருநறையூரில் இருக்கும் பெருமானே! என்று அழைக்கிறாள்.

('விரிபொழில் சூழ் திருநறையூர் நின்றாய்' என்றும்)


நெருக்கமான, சுருள் சுருளான கேசத்துடன், நீலமேக ச்யாமள ரூபத்துடன் எனக்கு துணையாக இருப்பவரே! என்று சொல்கிறாள்.

('துன்று குழல் கருநிறத்து என் துணையே' என்றும்)

இப்படி சொல்லி சொல்லி, கண்களில் இருந்து கண்ணீர் அவர் மார்பில் விழும் படியாக அழுது அழுது சோர்ந்து விடுகிறாளே! 

(துணைமுலை மேல் துளிசோர சோர்க்கின்றாளே!!)

என்று பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.


Monday 20 December 2021

ஆழ்வார் தன்னையே கோபிகையாக ஆகி வீணையோடு பேசிக்கொண்டு தானாக சிரிப்பதை பார்த்து, பரகால நாயகியின் தாயார் புலம்புவது போல பாடுகிறார். கல்லுயர்ந்த நெடுமதி்ள் சூழ்.. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

'கல் உயர்ந்த நெடுமதி்ள் சூழ் 

கச்சி மேய களியே' என்றும் 

'கடல் கிடந்த கனியே' என்றும்

'அல்லியம் பூ மலர் பொய்கை  பழனம் வேலி

அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான்' என்றும்

சொல் உயர்ந்த நெடுவீணை 

முலைமேல் தாங்கி தூமுறுவல் 

நகை இறையே தோன்ற நக்கு

மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே

மென்கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே 

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)


பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, பாடுகிறாள்.

"கருங்கற்களால் மதிற்சுவர்கள் ஓங்கி உயர்ந்து காஞ்சிபுரத்தை சூழ்ந்திருக்க (கல் உயர்ந்த நெடுமதி்ள் சூழ் கச்சி) அங்கு எழுந்தருளியிருக்கும் (மேய) மதயானை போன்ற ஹஸ்தி வரதனே ! என்று இவள் பாட (களியே என்றும்)

திருப்பாற்கடலில் படுத்திருக்கும் கனிபோன்றவனே! என்று இவள் பாட (கடல் கிடந்த கனியே)

சுகந்தமுடைய அல்லி பூக்கள் பூக்கும் தடாகங்களையும் (அல்லியம் பூ மலர் பொய்கை) நீர்நிலைகளையுமே (பழனம்) வேலியாக உடைய (வேலி) அழகிய திருவழுந்தூரிலே (தேரழுந்தூர்) நின்று (அணி அழுந்தூர் நின்று), உள்ளம் உகந்து இருக்கும் என் ஸ்வாமியே! என்று இவள் பாட (உகந்த அம்மான்' என்றும்

அவள் பாடிய இந்த திவ்ய நாமசங்கீர்த்தனத்தை கேட்டு (சொல் உயர்ந்த) அந்த நீண்ட வீணையும் திருப்பி பாட (நெடுவீணை), தனது நாதனை இந்த வீணையும் பாடுகிறதே என்ற பூரிப்பில், தனது மார்பின் மீது தாங்கி கொண்டு (முலைமேல் தாங்கி) பெருமாளையே ஸ்பரிசித்து விட்டது போன்று புன்முறுவல் செய்கிறாள் (தூமுறுவல்). 




பல்வரிசைகள் (நகை) தெரியும் படி (இறையே தோன்ற) தனக்கு தானே சிரிக்கிறாள் (நக்கு). 

இயற்கையாகவே சிவந்து இருக்கும் விரல்கள் இன்னமும் சிவக்கும்படி நாள் முழுவதும் தந்தி கம்பிகளை வருடி (மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி அந்த வீணையை) அதற்கும்  மேலே (ஆங்கே) தானே ஒரு கிளிப்பிள்ளை போலே (மென்கிளி போல்) மழலைச்சொற்களால் பாடிக்கொண்டு நிற்கிறாள் (மிகமிழற்றும்). 

என் வயிற்றில் பிறந்த அறியா பெண்ணான இவள், இவையெல்லாம் எங்கே கற்றாள்? (என் பேதையே)"

என்று பரகால நாயகியின் தாய், தன் பெண் (திருமங்கையாழ்வார்) நிலை கண்டு வருந்துகிறாள்.


Tuesday 9 November 2021

மாயவரம் என்ற மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள இந்தளூர் என்ற திவ்ய தேசத்தில் உள்ள பெருமாளை நினைத்து திருமங்கையாழ்வார் பாடிய பாசுரம் "முன்னை வண்ணம்". அர்த்தம் தெரிந்து கொள்வோம்..

மயிலாடுதுறை பெருமை கொள்ள முக்கிய காரணம் பரிமள ரங்கநாதன் ஆலயம் இருக்கும் "திருஇந்தளூர்" என்ற திவ்ய தேசம். 

ஹிந்துவாக பிறந்தவர்கள் வாழ்நாளில் காணவேண்டிய ஆலயங்களில் ஒன்று !

காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் இது.

மாயவரம் அல்லது மயிலாடுதுறையில் இருக்கும் இந்த திருஇந்தளூர் கோயிலின்  மூலவர் பெயர்: பரிமள ரங்கநாதன்.   

இவருக்கு இன்னொரு பெயர்: மருவினிய மைந்தன். 

உற்சவர் பெயர்:  சுகந்தவ நாதன்

108 திருத்தலங்களில் 86 தலங்களை நேரில் கண்டு பாடியவர் திருமங்கையாழ்வார்.

ஒரு சமயம், 

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ‘திருஇந்தளூர்’ என்னும் திவ்ய தேசத்தில் குடி கொண்டிருக்கும் ‘பரிமள ரங்கனாதரை’ தரிசிக்கச் சென்ற பொழுது,  அர்ச்சகர் பூஜை முடிந்து, கதவு சாத்தி சென்று விட்டார்.

கோவில் சன்னதி மூடி இருந்ததால் பெருமாளை தரிசிக்க முடியவில்லை.

பெருமாளை பார்க்க முடியவில்லையே! என்ற தாபம் ஆழ்வாருக்கு ஏற்பட்டது.

நமக்கு வேண்டிய ஒருவன், நமக்குரிய பொருளை தரமறுத்தால் நாம் என்ன சொல்வோம்?

”பரவாயில்லை! நீரே வைத்துக் கொண்டு நலமாய் வாழுங்கள்" என்று உரிமையாக கோபத்தோடு சொல்வோம் இல்லையா?

அது போல,

ஆழ்வார்,  உள்ளே இருக்கும் பரிமள ரங்கநாதரை நோக்கி, "நான் உனது அடிமை என்று அறிந்த பின்னும், காட்சி கொடுக்காமல் தாழிட்டுக் கொள்வது உமக்குப் பழியைத் தேடித் தரும். உமது அழகை நீரே வைத்துக் கொள்ளவும்"

என்று பெருமாளிடம் உரிமையாக கோபப்பட, உள்ளே இருந்த பெருமாள், ஆழ்வாரை காண தானே வந்து விட்டார். 


பெருமாள், ஆழ்வாரை  பார்த்து, "என்னை பாரும்" என்று  சொல்லி, "நான் ஒவ்வொரு யுகத்திலும் எப்படி இருந்தேன் தெரியுமா? க்ருத யுகத்தில் வெண்மையாக இருந்தேன். த்ரேதா யுகத்திலே சிவப்பாக இருந்தேன். த்வாபரயுகத்தில் நீல வர்ணத்தில் இருந்தேன்" என்று காட்ட, தான் கண்ட காட்சியை பாசுரமாக நமக்கு தருகிறார்.




முன்னை வண்ணம் பாலின் வண்ணம்

முழுதும் நிலைநின்ற பின்னை வண்ணம்

கொண்டல் வண்ணம்

வண்ணம் எண்ணுங்கால்

பொன்னின் வண்ணம்

மணியின் வண்ணம் 

புரையும் திருமேனி இன்ன வண்ணம்

என்று காட்டீர், இந்தளூரீரே !

- பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார்)

க்ருத யுகத்தில் ஸத்வ குணம் நிறைந்தவர்களாக பெரும்பாலும் இருப்பதால், பால் போன்ற 'வெண்மை' நிறத்தை கொண்டீர்கள்

த்ரேதா யுகத்திலே 'சிவந்த' நிறத்தை கொண்டீர்கள். 

த்வாபர யுகத்தில் 'நீல' நிறத்தை கொண்டீர்கள். 

இந்தளூரில் உள்ள பெருமானே ! 

உமக்கு பல நிறங்கள் உள்ளனவாக சாஸ்த்ரங்கள் சொல்கிறது.

இங்கு அர்ச்சையாக எழுந்தருளியிருக்கும் இருப்பிலே எந்த நிறம் கொண்டிருக்கிறீர் என்பதை அடியேன் அறியவேண்டாமோ?" என்று கேட்க,

“இதோ பாராய், இதுவே என் வண்ணம்” என்று சொல்லி பரிமள ரங்கநாதர் ஆழ்வாருக்கு தன் அர்ச்சா ரூபத்தை காட்டி அருளினார்.

திருமங்கை ஆழ்வாரின் அழகு தமிழை பருக விரும்பியதே பரிமள ரங்கனின் விவாதத்தின் நோக்கம்!

இறுதியில், ஆழ்வார் அரங்கனைத் தரிசித்துவிட்டே சென்றார்!

மூலவர்: பரிமளரங்கநாதர்

தாயார்: பரிமள ரங்கநாயகி என்ற புண்டரீகவல்லி

Thursday 29 July 2021

ஸ்ரீரங்கம் பெருமை... பாசுரம் (அர்த்தம்) - "பச்சை மா-மலை போல் மேனி". ஸ்ரீரங்கத்தில் (திருச்சி மாவட்டம்) வீற்று இருக்கும் ரங்கநாத பெருமாளை தொழும் பாசுரம். தொண்டரடிப்பொடியாழ்வார் வர்ணிக்கிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோமே !

ஸ்ரீரங்கத்தின் பெருமை....

பச்சை மா-மலை போல் மேனி!
பவள-வாய் கமல-செங்கண்!
அச்சுதா!
அமரர் ஏறே!
ஆயர்தம் கொழுந்தே! என்னும்,
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம்  ஆளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன்!
அரங்க மாநகர் உளானே!

வேதநூல் பிராயம் நூறு
மனிசர்தாம் புகுவரேலும்,
பாதியும் உறங்கிப் போகும்
நின்றதில் பதினை  ஆண்டு,
பேதை பாலகன்  அதாகும்
பிணி! பசி! மூப்பு! துன்பம்!
ஆதலால், "பிறவி வேண்டேன்"
அரங்கமா நகர் உளானே !
- திருமாலை (தொண்டரடிப்பொடியாழ்வார்)

ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டு இருக்கும் ரங்கநாதரை பார்த்து 
"எனக்கு பரலோகமும் வேண்டாம், இக லோகமும் வேண்டாம்" என்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

பெருமாளுக்கு இகலோகம், பரலோகம் - என்ற இரு சொத்துக்கள் தானே உள்ளது !!




நமக்கு இகலோகம் பிடிக்கவில்லை என்றால், "சரி.. பரலோகம் செல்" என்பார்.

பரலோகம் செல்ல நம்மில் பலருக்கு இன்னும் ஆசை வரவே இல்லை! 
ஆதலால், "சரி.. இகலோகத்திலேயே இரு" என்று நம்மை மீண்டும் மீண்டும் பிறக்க செய்கிறார்.

ஆழ்வாரோ, தனக்கு "அச்சுவை பெறினும் வேண்டேன்" என்று சொல்லி "பரலோகம் கூட வேண்டாம்' என்கிறார்.

"சரி... இகலோகம் தரட்டுமா?' என்றால்... 'அதுவும் வேண்டாம்' என்கிறார்.

'ஏன் இகலோகம் வேண்டாம்?' என்று பெருமாள் கேட்டால்,

ஆழ்வார் தன் மனசாட்சியையே கேட்டு பதில் சொல்கிறார்..
"உலகத்திற்கு எத்தனை ஆயுசு கொடுக்கப்பட்டு இருக்கிறது?
ஆகாசத்திற்கு எத்தனை ஆயுசு? ஆகாசம் எவ்வளவு காலம் இருக்கிறது? 
இந்த பூமி எவ்வளவு காலம் இருக்க போகிறது? 
கடல் எவ்வளவு காலம் இருக்கப்போகிறது? 
மலை எவ்வளவு காலம் இருக்கப்போகிறது?

இவைகளின் ஆயுசை பார்க்கும் போது, இவ்வளவு பெரிய உலகத்தில், இந்த மனிதனுக்கு எத்தனை சொற்ப காலம் ஆயுசு உள்ளது !!

ஆகாசம் அளவுக்கு ஆயுசு இல்லாவிட்டாலும், ஒரு ஆயிரம் வருடமாவது மனிதனுக்கு ஆயுசு இருந்தால் பரவாயில்லை.

நூறு வயது காலம் தான் "மனித ஆயுசு" என்று எல்லை வைக்கிறதே!! (வேதநூல் பிராயம் நூறு)

வேதம், 'மனிதனுக்கு 100 வயது' என்று சொன்னாலும், அந்த நூறு வயதை தொடுபவன் கூட கோடியில் ஒரு சிலர் தானே !




50 வயதிலோ, 25 வயதிலோ, குழந்தையாக இருக்கும் போதோ, 'பட்' என்று ஆயுசு முடிந்து விடுகிறது.

கல்யாணம் ஆன பிறகு சிலருக்கு மரணம் ஏற்பட்டு விடுகிறது. கல்யாணம் ஆகாமலேயே மரணம் சிலருக்கு.

சொந்த வீட்டில் இறந்து போகிறான்.
வீடு இருந்தும் எங்கேயோ விபத்தில் இறந்து விடுகிறான். 

பந்துக்கள் சூழ்ந்து இருக்கும் போது இறந்து போகிறான். அனாதையாக இறந்து போகிறான்.

ஆஸ்பத்திரியில் இறந்து விடுகிறான். மாரடைப்பு ஏற்பட்டு மரணம். 
கொடுக்கப்பட்ட 100 வயதை கழிப்பதற்குள், வித விதமான வழிகளில் மனிதனுக்கு மரணம் ஏற்பட்டு விடுகிறது.

ஒன்று நிச்சயாமாகிறது.

'ஒரு நாள், இந்த உயிர், இந்த உடலை விட்டு கிளம்பி விடும்' என்று நிச்சயமாக தெரிகிறது.

சரி.. கிடைத்த ஆயுசை என்ன செய்கிறான் என்று பார்த்தால்!! பாதி நாள் தூக்கத்திலேயே கழிக்கிறான்.

வாழ்ந்த நாட்களில் "பகல் முழுக்க முழித்து கொண்டு இருந்தான்" என்பது தான் மனித பிறவியின் ப்ரயோஜனமா?

சரி..  முழித்து கொண்டு இருக்கும் வேளையில் நன்றாகவே இருக்கிறானா? அதுவும் இல்லை.. 

முதல் 15 வருடங்கள் பாலகனாக விளையாடி வீணடித்து விடுகிறான்.

பிறகு, மிச்ச ஆயுசை பிணியாலும், பசியாலும், மூப்பினாலும், பல வித விதமான துன்பங்களாலும் அனுபவித்து செலவு செய்கிறான்.

சீ ! இந்த உலக வாழ்க்கை வெறுக்கத்தக்கதாக இருக்கிறதே !

ஏதோ பூர்வ கர்மாவால், இந்த ஜென்மாவை எடுத்து விட்டேன். எனக்கு இக லோகமும் பிடிக்கவில்லை.

பரலோகமான இந்திர லோகம் ஆளும், அச்சுவை பெறினும் வேண்டேன்!"
(ஆதலால், "பிறவி வேண்டேன்") என்று பிரார்த்திக்கிறார்.

இப்படி ஆழ்வார் "இகலோகமும் வேண்டாம், பரலோகமும் வேண்டாம்" என்று சொல்ல, 
ஸ்ரீரங்கநாதர், 'இகலோகம், பரலோகம் என்ற இரண்டு சொத்து தானே என்னிடம் இருக்கிறது. இரண்டுமே வேண்டாம் என்றால் எப்படி? இப்படி பிடிவாதம் செய்ய கூடாது.' என்றார்




தாய் தன் குழந்தையை மடியில் வைத்து கொண்டாள். "மடியில் இருக்க மாட்டேன்" என்று கத்தி பிடிவாதம் செய்தது.

"சரி..." என்று கீழே இறக்கிவிட்டாள். 
"கீழே இறக்கி விடாதே" என்று அழுதது.

'குழந்தையை எப்படி சமாதானப்படுத்துவது?' என்று புரியாமல் தாய் தவிப்பது போல, 
'எனக்கு இகமும் வேண்டாம்.. பரமும் வேண்டாம்' என்று புலம்பி அழும் தொண்டரடிப்பொடியாழ்வாரை சமாதானம் செய்ய முடியாமல் பெருமாள் திகைக்க, ஆழ்வாரே தனக்கு வேண்டியதை ரகசியமாக கேட்கிறார்.

'அரங்க மாநகர் உளானே' என்று சொல்லும் போது... "எனக்கு இக லோகமும் வேண்டாம்.. பரலோகமும் வேண்டாம் .. ஆனால், யாருக்கும் தெரியப்படுத்தாமல், ரகசியமாக வைத்து இருக்கும் உங்கள் மூன்றாவது சொத்தான ஸ்ரீரங்கத்தில் நீங்கள் வாசம் செய்ய, உங்களுக்கு ஏதாவது சிறு கைங்கர்யம் செய்து கொண்டு ஸ்ரீரங்க வாசம் செய்யும் பாக்கியத்தை தாருங்கள்" 
என்று கேட்காமல் கேட்கிறார்.

"ஸ்ரீரங்கம் இகலோகத்தில் தானே இருக்கிறது..  நீர் தான் இகலோகம் வேண்டாம் என்கிறீரே?" என்று பெருமாள் கேட்க...

"ஸ்ரீரங்கநாதருக்கு கைங்கர்யம் செய்பவருக்கு இக லோக துக்கமே தெரியவில்லையே!" என்கிறார்.

"சரி.. ஸ்ரீரங்கம் பரமபதத்தை காட்டிலும் உயர்ந்ததோ?" என்று கேட்க..

"பரமபதம் உயர்ந்தது தான் என்றாலும்..  அங்கு பரமபத நாதன் எப்பொழுதும் தரிசன ஆனந்தம் மட்டும் தானே தருகிறார். 
இங்கோ ! 
அதே பரமபத நாதன் 'ரங்கநாதனாக' இருந்து கொண்டு, தரிசன ஆனந்தம் கொடுத்து, பற்பல உற்சவங்கள் செய்து கொண்டு பஞ்ச இந்திரியங்களுக்கும் ஆனந்தம் கொடுக்கிறாரே! 
அவருக்கு விதவிதமான கைங்கர்யம் செய்வதால், கைங்கர்ய ஆனந்தமும் கிடைக்கிறதே!. பரமபதத்தை விட, எனக்கு ஸ்ரீரங்கம் பேரானந்தத்தை தருகிறதே!" என்கிறார்.

இப்படி. ஆச்சர்யமாக, ஆழ்வார், 'எனக்கு ஸ்ரீ ரங்கநாதரே போதும்.. ஸ்ரீரங்கமே போதும்... வேறு எதுவும் வேண்டாம்' 
என்று சொல்லி கதறி அழும் பாசுரம் இது.

'பக்தி என்றால் என்ன?
என்பதை ஆழ்வார் பாசுரங்களை படித்து அர்த்தம் தெரிந்து கொண்டாலே நாம் புரிந்து கொள்ள முடிகிறது..

தமிழனாய் பிறந்தவன் - வாழும் சில வருட வாழ்நாளில், ஒரு வருடமாவது 4000 தமிழ் பாசுரங்களை அர்த்தம் தெரிந்து படிக்க முயற்சிக்க வேண்டும்.

குருநாதர் துணை

Wednesday 23 December 2020

பாசுரம் (அர்த்தம்) - "வையம் ஏழும் உண்டு". திருவஹீந்திரபுரத்தில் (கடலூர் மாவட்டம்) வீற்றுஇருக்கும் தேவநாத பெருமாளை தொழும் பாசுரம். திருமங்கையாழ்வார் வர்ணிக்கிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோமே !

திருவஹீந்திரபுரம் திவ்ய தேசம்…  (கடலூர் மாவட்டம் அருகில் உள்ளது.)

பெருமாள்:  தேவநாதன். தாயார்: ஹேமாம்புஜவல்லி

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்யும் போது, இந்த பெருமாளோடு, அந்த ஊரின் அழகை பார்த்து அப்படியே வர்ணித்து திவ்ய தேசத்தை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறார்.

வையம் ஏழும் உண்டு 

ஆலிலை வைகிய மாயவன்! 

அடியவர்க்கு மெய்யனாகிய தெய்வநாயகன் இடம் !

மெய்தகு வரைச்சாரல் 

மொய்கொள் 

மாதவி சண்பகம் முயங்கிய

முல்லையங் கொடியாட !

செய்ய தாமரைச் 

செழும்பணை திகழ்தரு 

திருவயிந்திரபுரமே !

 - பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார் )

இந்த பாசுரத்தை பாடும் போதே, இந்த திவ்ய தேசம் அவரை எப்படி வரவேற்றது? என்று காட்டுவது போல இருக்கிறது.


அந்த திவ்ய தேசத்தில் கழனி வழிகள் எப்படி இருந்தது? முல்லை எப்படி இருந்தது? என்று சொல்லி கொண்டே ஆழ்வார் வர, பெருமாளோடு, திவ்ய தேசத்தையும் சேர்த்து நமக்கு காட்டி விடுகிறார்.


அந்த ஓஷதி மலையில் சாரல் விழ (மெய்தகு வரைச்சாரல் ), அந்த மலையில் எங்கு பார்த்தாலும் வளர்ந்து இருக்கும் செண்பக மரத்தின் (மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய) மேல் முல்லை கொடி படர்ந்து ஆட (முல்லையங் கொடியாட), தடாகங்களில் நன்கு செழித்து ஓங்கிய தாமரையும் (செய்ய தாமரைச்), மலை ஓரங்களில் செழித்து ஓங்கிய பனை மரங்களும் (செழும் பணை திகழ்தரு) நிரம்பி இருக்க, அதை பார்த்த ஆழ்வாருக்கு தன்னை ஆசையோடு திவ்ய தேசமே வரவேற்ப்பது போல இருந்ததாம்.


இப்படி திவ்ய தேசத்தின் அழகை நம் கண் முன்னே கொண்டு வந்த ஆழ்வார், அப்படிப்பட்ட அழகிய திவ்ய தேசத்தில், ஏழு உலகங்களையும் உண்டு தன் திருவயிற்றில் வைத்து கொண்டு (வையம் ஏழும் உண்டு), பிரளய ஜலத்தில் ஒரு பயமுமில்லாமல் ஒரு சிறு ஆலிலையில் படுத்து உறங்கும் மாயன் (ஆலிலை வைகிய மாயவன்!) அங்கு இருக்கிறார் என்று பாடுகிறார்.


'கல் என்றால் கல், பெருமாள் என்றால் பெருமாள். உண்டு என்றால் உண்டு. இல்லை என்றால் இல்லை' என்று நம் பக்தியை பொறுத்து, தான் இருப்பதை நமக்கு காட்டும் படியாக அடியவர்க்கு மெய்யனாகிய தேவநாதன், என்கிறார்.


'ஆஸ்ரயித்து உபாசனை செய்யத்தக்க பெருமாள், தேவநாத பெருமாள்' என்கிறார் தேசிகர்.

தேசிகர் அவதரித்த ஸ்தலம் "தூப்புல்" (காஞ்சிபுரம்).

வேதாந்த தேசிகருக்கு, அவதார ஸ்தலம் காஞ்சிபுரமாக இருந்தாலும், பெருமாளின் சாஷாத்காரம் கிடைத்த இடமோ "திருவஹீந்திரபுரம்".


காலத்தில் உபநயனம் ஆகி சாஸ்திரங்கள் அனைத்தும் அத்யயனம் செய்து முடித்தும் திருப்தி ஏற்படவில்லை தேசிகருக்கு.

'படிப்பு தானே இவை.. படித்தது அனுபவத்தில் வந்தால் தானே முழுமை' என்று நினைத்தார் வேதாந்த தேசிகர்.

'வேதாந்தம் படித்தும் அனுபவத்தில் வரவில்லையென்றால், பெருமாள் கிடைக்க மாட்டார்' என்று புரிந்து கொண்டார் ஸ்வாமி தேசிகர்.


'சாஸ்திரமும் கற்றதன் பலனாக, பெருமாளை நேரில் பார்க்க வேண்டும்' என்று ஆசைப்பட்டார் ஸ்வாமி தேசிகர்.


இந்த சிந்தனையோடு, 'தீர்த்தம், மூர்த்தி, மலை, திவ்ய தேசம்' இவை நான்கும் சேர்ந்த திவ்ய தேசத்தை தேடி வந்தார் ஸ்வாமி தேசிகர்.


'கடில தீர்த்தம், ஓஷதி மலை, தேவநாத பெருமாள், திவ்ய தேசம்' என்று நான்கும் பொருந்தி இருக்கும் இடமாக திருவஹீந்திரபுரம் இருப்பதை கண்டு கொண்டார்.


இந்த திவ்ய தேசத்தில் இவருடைய மாமா "கிடாம்பி அப்புள்ளார்" என்ற பரம வைஷ்ணவர் இருந்தார்.

இவரை பார்க்க வந்த தேசிகர், தன் மாமாவிடம் "பெருமாள் தனக்கு ப்ரத்யக்ஷம் ஆவாரா?" என்று கேட்டார்.

உடனே அப்புள்ளார், தேசிகருக்கு, கருட மந்திரத்தை உபதேசம் செய்தார்.

மேலும்,

'எந்த கருடன் பெருமாளை இங்கு சாஷாத்கரிக்க வந்தாரோ! அந்த கருடனை குறித்து இங்கு நீ பக்தியோடு தியானம் செய். 

இந்த கருட மலையில் அமர்ந்து கொண்டு, கருட மந்திரத்தை அக்ஷரத்துக்கு லட்சம் ஜபம் செய்' என்று சொல்ல, 

அது போலவே தேசிகரும் பக்தி யோகத்தால் தியானம் செய்ய, கருடன் தேசிகருக்கு ப்ரத்யக்ஷமானார்.




கருடன் தேசிகருக்கு "ஹயக்ரீவ மந்திரத்தை தானே உபதேசிக்க", அதையும் ஈடுபாடு குறையாத பக்தியோடு ஜபம் செய்ய, பெருமாள், தேசிகருக்கு இந்த மலையில் ஹயக்ரீவ மூர்த்தியாகவே ப்ரத்யக்ஷமாகி காட்சி கொடுத்தார்.

ஹயக்ரீவ தரிசனம் ஏற்பட்டதுமே, படித்தது எல்லாம் அனுபவ பூர்வமாகி தெளிந்த ஞானம் ஏற்பட்டது தேசிகருக்கு.

சர்வ கலையும் தெரிந்தவராகி இருந்தார், ஸ்வாமி தேசிகர்.

இதனை கேட்டு அசூயை பட்ட ஒரு சிற்பி, 'சர்வ கலையும் தெரிந்தவர் என்றால், சிற்ப கலை தெரியுமா? அதிலும் தன்னையே சிற்பமாக அப்படியே செதுக்கி காட்ட முடியுமா?" என்று கேட்க, 

தேசிகர், 'தன்னையே சிற்பமாக வடித்து கொடுத்து விட்டார்".


ஒரு சிற்பிக்கு மற்றவர் உருவத்தை செதுக்குவது எளிது

தன் ரூபத்தை தானே வடிப்பது என்பது சிற்ப கலையில் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே முடியும்.


'சிற்ப கலையும் தெரிந்தவர்' என்று தானே தன்னை அப்படியே சிலையாக வடித்து விட்டார் தேசிகர். 

அந்த சிற்பி அமைதியாக திரும்பி விட்டான். 

தானே செய்த தன் திருமேனியை தானே ஆலிங்கனம் செய்து கொண்டு, தன் சிஷ்யர்களுக்கு ஆராதனைக்காக கொடுத்து விட்டார் தேசிகர்.

தேசிகரே வடித்த, தேசிகரே ஆலிங்கனம் செய்து கொண்ட, அந்த அர்ச்சா திருமேனி இன்றும் உள்ளது. 


இப்படி பின்னாளில் தேசிகர் போன்ற பல அடியவர்க்கு, ப்ரத்யக்ஷமாகும் (மெய்யனாகிய) தேவநாத பெருமாள் (தெய்வ நாயகன்) வீற்று இருக்கும் இடம், திருவஹீந்திரபுரம் என்று, இனி வரும் பக்தர்களுக்கும் ப்ரத்யக்ஷமாகும் பெருமாள் என்று அப்போதே பாடி மங்களாசாசனம் செய்து விட்டார் திருமங்கையாழ்வார்


இங்கு திருமங்கையாழ்வார் "தெய்வ நாயகன்" என்று பாடியதை விளக்கி தேசிகர் சொல்லும் போது, 

தேவர்களுக்கும் நாயகன் என்ற கருத்தில் மட்டும் ஆழ்வார் இந்த பதத்தை குறிப்பிடவில்லை, 

தெய்வ சாரூப்யம் கொண்ட, வைகுண்டத்திலேயே இருக்கும் நித்ய பார்க்ஷதர்களான,  கருடனுக்கும், அஹீந்திரனுக்கும் தெய்வம் என்ற கருத்தில், திருமங்கையாழ்வார் 'தெய்வ நாயகன்" என்று பெருமாளை பாடுகிறார் என்று விளக்கினார். 

இதுவும் பொருத்தமானதே

மேலும், தெய்வ சாரூப்யம் கொண்ட கருடனுக்கும், அஹீந்திரனுக்கும் அனுக்கிரகம் செய்து கொண்டு பரமபத்திலேயே இருக்கலாமே பெருமாள். எதற்காக திருவஹீந்திரபுரம் வந்தார்? என்ற கேள்வி எழலாம்..

அதற்கான பதிலாக "அடியவர்க்கு மெய்யனாகிய" என்ற பதத்தில் ஆழ்வார் காட்டுவதை விளக்குகிறார் பெரியவாச்சான் பிள்ளை.


மோக்ஷன் அடைந்து விட்ட, நித்ய சூரிகளான கருடனும், அஹீந்திரனுமே (தெய்வ) வணங்கும் பெருமாள் (நாதன்), கருணையின் காரணமாக, தன்னை பல 'அடியார்களும் ஆச்ரயிக்க வேண்டுமே' என்று ஆசைப்பட்டு, வைகுண்டத்தை விட்டு விட்டு, கூடவே தெய்வ சாரூப்யம் அடைந்த கருடனையும், அஹீந்திரனையும் (தெய்வ) கூடவே அழைத்து கொண்டு வந்து விட்டார் என்று, 'அடியவர்க்கு மெய்யனாகிய" என்ற பதத்தில் உள்ள ஆழ்ந்த அர்த்தத்தை நமக்கு விளக்குகிறார்.

மேலும், தேசிகர் மங்களாசாசனம் செய்கிறார்.

தேசிகர் தன் அனுபவத்தை சொல்வதாக உள்ளது..

ப்ரணத சுர கிரீட ப்ராந்த மந்தார மாலா 

விகளித மகரந்த ஸ்நிக்த பாதாரவிந்த: |

பசுபதி விதி பூஜ்ய: |

பத்ம பத்ரா யதாக்ஷகா |

ஹனி பதிபுர நாத: |

பாது மாம் தேவநாத: |

 - தேசிகர்

திருவஹீந்திரபுர 'தேவநாத பெருமாளை' மங்களாசாசனம் செய்கிறார்

தமிழ் அர்த்தம்.

தேவர்கள், மந்தார புஷ்பத்தை எடுத்து கொண்டு வந்து தேவநாத பெருமாளின் திருவடியில் சமர்பிக்கிறார்களாம்.

அந்த மந்தாரபூக்களில் வழிந்து வரும் தேனாலேயே பெருமாளுக்கு பாத பூஜை (பாத்யம்) செய்தார்களாம் தேவர்கள்.

எந்த தேவர்கள் வந்தார்களாம்? முப்பத்து முக்கோடி தேவர்களோ?

அவர்களுக்கும் மேற்பட்ட தேவனான, கைலாயத்தில் உள்ள பசுபதியும், சத்ய லோகத்தில் உள்ள ப்ராம்மாவும் மிகவும் ப்ரகாசனான முகத்தோடு, இந்த தேவநாத பெருமாளின் இருபக்கமும் இருந்து கொண்டு பூஜித்து கொண்டிருக்க, 'தேவாதி தேவனாக இருக்கும், அஹீந்திரனுக்கு தேவனாக இருக்கும் இந்த பெருமாள் என்னை ரக்ஷிக்கட்டும்

என்று பாடுகிறார் தேசிகர்.

குருநாதர் துணை..


Saturday 5 December 2020

தொட்டாச்சாரியார் கைங்கர்யம் செய்த தக்கான் பெருமாள்... பாசுரம் (அர்த்தம்) - "மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை". சோளிங்கர் பெருமாளுக்கு திருமங்கையாழ்வார் இங்கு மங்களாசாசனம் செய்கிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோமே!! !

சப்தரிஷிகளுக்கும் குருவாக கடிகாசலத்தில் இருக்கும் யோக ஆஞ்சநேயர், வழிபட்ட யோக நரசிம்மர் இன்றும் கடிகாசலத்தில் வீற்று இருக்கிறார்.

திருகடிகை என்றும் கடிகாசலம் என்றும் சோளிங்கர் என்றும் அழைக்கப்படும் இந்த திவ்ய தேசம், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட புண்ணிய க்ஷேத்திரம்.

திருமங்கையாழ்வார் இந்த திவ்ய தேசத்துக்கு வந்து மங்களாசாசனம் செய்த பாசுரம்:

மிக்கானை 

மறையாய் விரிந்த விளக்கை 

என்னுள் புக்கானை

புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை தக்கானை

கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை 

அடைந்து உய்ந்து போனேனே

என்று பாடுகிறார்.

பெரிய திருமொழியில் இந்த பாசுரம் உள்ளது.




கடிகாசலம் (சோளிங்கர்) பெருமாளை பார்த்து கொஞ்சி பேசுகிறார், திருமங்கையாழ்வார்.

பெருமாளின் பெருமையை நினைத்ததும்,

யாரும் சமமில்லாத, எல்லாருக்கும் மேற்பட்டவனே ! (மிக்கானை) என்று ரசிக்கிறார். 

மேலும்,

அழியாத வேத விளக்காக இருக்கிறார் (மறையாய் விரிந்த விளக்கை) என்றும் ரசிக்கிறார்.

அப்படிப்பட்ட பெருமைமிக்க பெருமாள், தன் ஆத்மாவாகவும் இருக்கிறாரே என்றதும், உடனே,

எனக்கு அந்தர்யாமியாக இருப்பவனே ! (என்னுள் புக்கானை) என்று ரசிக்கிறார்.

உடல் ரீதியாக பார்த்தால், பெருமாளும் நாமும் ஒன்றாகி விட முடியாது.. 

ஆனால், 

'ஆத்மா' என்று பார்க்கும் போது, நாமும் (ஜீவனும்), பெருமாளும் (பரமாத்மாவும்) ஞான ஸ்வரூபம் தானே..

வேதமும் ஜீவனையும், பரமாத்மாவையும் நண்பர்கள் என்று இரு கிளியை காட்டி சொல்வது ஞாபகம் வர, திருமங்கையாழ்வார், பெருமாளும், தானும் நண்பன் என்று வேதமே சொல்வதால், சமமானவன் (தக்கானை) என்று சொல்லி ஆனந்தப்படுகிறார்.

மேலும் வாக்குக்கு அப்பாற்பட்ட பெருமாளை! தெவிட்டாத இன்பமாக இருக்கும் பெருமாளை! எப்படி கொஞ்சுவது? என்று ஒரு பக்கம் திகைத்து, கொஞ்சவும் ஆசை ஏற்பட்டதால், உலகத்தில் கிடைக்கும் தித்திப்பான அக்கார வடிசில் (அக்காரமே!), கனியே! என்று ஆசை தீர கொஞ்சுகிறார்.

இப்படி திருமங்கையாழ்வார், கடிகாசலம் (சோளிங்கர்) பெருமாளை பார்த்து "தக்கானை" என்றும், "அக்கார கனி" என்றும் அழைத்ததே, பெருமாளுக்கு பெயரும் ஆனது.

இங்கு தாயார் திருநாமம் சுதாவல்லி நாச்சியார் என்ற அம்ருதவல்லி

பெருமாள் பெயரால் 'தக்கான் குளம்' எனற தீர்த்தம் உள்ளது.

தொட்டாச்சாரியார் (தொட்டையாசாரியார்) என்ற ஒரு மகான் இருந்தார்.
அவருக்கு அக்கார கனி எம்பெருமானிடம் தான் அதிக ஈடுபாடு.

சில சந்தர்ப்பம், காஞ்சி வரதன் சேவைக்கு இவர் வருவார்.

வரதராஜன் சந்நிதியில், பிரம்மோற்சவம் போன்ற உத்சவ காலங்களில், கைங்கர்யத்துக்கு வருவது வழக்கம்.

மற்ற கோவில்களின் அர்ச்சகர்களை, சில சமயம் ஆச்சார்யர்களையும்  உத்சவ காலங்களில் வரதனுக்கு கைங்கர்யம் செய்ய அழைப்பார்கள்.
அவரவர்கள் முடிந்த கைங்கர்யம் செய்வார்கள்.

கருட சேவைக்கு மிகவும் ப்ரஸித்தமானவர் காஞ்சி வரதன்.

இங்கு இருக்கும் விசாலமான வீதியில், கருடன் மேல் அமர்ந்து பெருமாள் புறப்படும் அழகும், வேகமும், ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாத பெருமாள் கருடசேவையை காட்டிலும் அழகாக இருக்கும்.

பெருமாள் ஒவ்வொரு இடத்தில் ஒரு தனியான அழகுடன் இருக்கிறார்.
திருப்பதியில், ரத உத்சவம் ப்ரஸித்தி.
திருமாலிருஞ்சோலையில் குதிரை (வையாளி) சேவை மிகவும் ப்ரஸித்தி.
அதேபோல, 
ரங்கநாதருக்கும் குதிரை (வையாளி) சேவை மிகவும் ப்ரஸித்தி.
இது பக்தர்களின் அனுபவம்.

அந்த ஊரிலேயே பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யும் ஒருவர், கருட சேவையில் காஞ்சி வரதன் வரும் அழகை பார்த்து பெருமிதத்துடன், அருகில் நின்று கொண்டிருந்த, அக்காரகனி எம்பெருமானுக்கே கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் தொட்டாச்சாரியாரிடம் தன் மன உகப்பை பகிர்ந்து கொண்டார். 
அந்த வைஷ்ணவர், காஞ்சி வரதனை பார்த்து கொண்டே, 
"ஆஹா.. ஆஹா.. இந்த சேவை வேறு எங்கு கிடைக்கும்?..." என்று சொல்ல,தொட்டாச்சாரியார் "ஆஹா.. என்ன தரிசனம்..என்ன தரிசனம்" என்று என்று சொல்லியிருக்கலாம்!!.

அந்த வைஷ்ணவர் "இந்த சேவை வேறு எங்கு கிடைக்கும்?" என்று சொன்ன சொல் இவருக்கு சுருக்கென்று குத்த, 
அக்கார கனி (தக்கான்) பெருமாள் மீது கொண்ட அன்பினால், தொட்டாச்சாரியார் உடனே "தக்கானுக்கு மிக்கான் இல்லை" என்று தன் பெருமானிடம் உள்ள பிரியத்தால், சொல்லிவிட்டார்.
கடிகாசலத்தில் இருக்கும் பெருமாளுக்கு மிஞ்சி யாரும் இல்லை (தக்கானுக்கு மிக்கான் இல்லை) 
என்று இவர் சொன்னதும், கூட இருந்த வைஷ்ணவருக்கு, 'காஞ்சி வரதனை குறைத்து பேசி விட்டாரே!!' என்ற வருத்தம் உண்டானது. 

'பெருமாள் ஒன்று தான்' என்பதால், 'காஞ்சி வரதனை விட சோளிங்க பெருமாள் உயர்ந்தவரா?' என்று பெருமாளையே தாழ்த்தி பேசவும் முடியாது.. 

தக்கானிடத்தில் இருந்த பக்தி விசேஷத்தால் தொட்டாச்சாரியார் இப்படி பேசிவிட்டார் என்பதால், வைஷ்ணவர்களுக்குள் சண்டை வேண்டாம், பகவத் அபசாரமும் வேண்டாம் என்று  அமைதியாக இருந்து விட்டார்.

"இனி இது மாதிரியான சங்கடங்கள் ஏற்பட கூடாது. 
அதற்கு ஒரே வழி.. இனி தொட்டாச்சாரியாரை வரதன் கைங்கர்யத்துக்கு அழைக்க கூடாது" என்று தீர்மானித்து விட்டனர் அங்கு இருந்த வைஷ்ணவர்கள்.




வருடாவருடம் வரதன் கைங்கர்யத்துக்கு தொட்டாச்சாரியாரை அழைப்பது வழக்கம்.
அடுத்த வருடம், இவருக்கு அழைப்பு வரவில்லை.

அழைப்பு வராததால், இவர் காஞ்சிபுரம் வரவில்லை. 
சோளிங்க பெருமாளுக்கே கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்.

அன்று விடியற்காலை வரதனுக்கு காஞ்சியில் கருட சேவை ஆரம்பமானது.
தொட்டாச்சாரியார் வழக்கமாக, தக்கான் குளத்தில் தான் விடியற்காலை தீர்த்தமாட வருவார்.

தீர்த்தமாடி முடித்து விட்டு வந்ததுமே, காஞ்சி வரதனின் கருட சேவை நினைவுக்கு வந்தது.
"போன வருடம் இதே சமயம் காஞ்சி வரதனின் கருட சேவையை தரிசனம் செய்து கொண்டிருந்தோமே!! தேவப்பெருமாள், இந்த சமயம் கருட சேவையில் கிளம்பி இருப்பாரே! இந்த வருடம் நாம் போக பிராப்தி இல்லையே!" 
என்று கண்ணீர் பெருகி நினைக்க, அந்த குள கரையிலேயே அவர் கண்ணெதிரே காஞ்சி வரதன் கருட சேவையில் காட்சி அளித்தார்.
உடனே "தேவப்பெருமாள்… இதோ வந்துட்டார்… தேவப்பெருமாள் இதோ வந்துட்டார்… தேவப்பெருமாள் … இதோ பாரும்…" என்று இவர் கத்த, அங்கே குளித்து கொண்டிருந்த மற்றொருவன், "பைத்தியம் ஏதாவது பிடித்து இருக்கோ? தேவப்பெருமாள் இங்கு வந்து இருக்கிறாரா?" என்று சொல்ல, தொட்டாச்சாரியார் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதே சமயம், இந்த ஊரிலிருந்து சிலர் கருட சேவையை பார்க்க, காஞ்சி வரதனை பார்க்க சென்று இருந்தனர்.
காஞ்சி வரதன், கருட சேவையில் கிளம்பி வாசலில் வேகமாக வரும் போது, ஜல் என்று நின்றுவிட்டார் அன்று.
ஸ்ரீபாதம் தாங்கிகளால் பெருமாளை சில நிமிடங்கள் நகர்த்தவே முடியவில்லை..
என்ன காரணம்? என்றே தெரியாமல் போக, பெருமாளிடமே இவர்கள் விண்ணப்பிக்க, காஞ்சி வரதனே, அர்ச்சகரிடம் ஆவேசித்து, 
"நாம் தொட்டாச்சாரியாருக்கு சேவை சாதிக்க, கடிகாசலம் போய் இருக்கிறோம்" என்று சொல்ல, 
அதை பார்த்த இந்த ஊர் ஜனங்கள், உத்சவம் முடிந்து, ஊர் திரும்பி, நடந்த விஷயத்தை பேசி கொள்ள, அதே சமயம், தொட்டாச்சாரியார் தக்கான் குளத்தில் "தேவப்பெருமாள்…இதோ வந்துட்டார்… தேவப்பெருமாள் இதோ வந்துட்டார்… தேவப்பெருமாள் … இதோ பாரும்…" என்று கத்தியதை சொல்ல, தொட்டாச்சாரியாரின் 'அனுபவம் சத்தியம்' என்று அறிந்து கொண்டார்கள்.

தொட்டாச்சாரியார் பெற்ற அனுகிரஹத்தை இன்று நாமும் ஸ்மரிக்க காஞ்சி வரதன் கருட சேவை சாதித்து புறப்படும் போது, கருடனை போல வேகமாக கிளம்பும் போது, ஒரு நிமிடம் நின்று விட்டு, செல்கிறார்.

அக்கார கனி எம்பெருமானையே ஆஸ்ரயித்து வாழ்ந்த தொட்டாச்சாரியார் போன்ற பக்தர்கள் வாழ்ந்த புண்ணிய ஸ்தலமாக இருக்கிறது "கடிகாசலம்" என்ற சோளிங்கர் என்ற திவ்ய தேசம்.

Sunday 26 July 2020

பாசுரம் (அர்த்தம்) - "தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த". கண்டம் என்னும் கடிகையில் (தேவப்ரயாகையில்) வீற்றுஇருக்கும் ராமபிரானை தொழும் பாசுரம். பெரியாழ்வார் வர்ணிக்கிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோமே !

பரவாசுதேவன் நாராயணன், ராமபிரானாக அயோத்தியில் அவதாரம் செய்து விட்டார்.

வனவாச சமயத்தில் பரத்வாஜ ரிஷியை சந்தித்தார் ராமபிரான். பிறகு சித்ரகூடம் சென்று தங்கி இருந்தார்.

14 வருட வனவாசத்தில்,
அயோத்தியில் ஆரம்பித்து, ராமேஸ்வரம் வரை நடந்தே வந்தார் ராமபிரான்.

ராமபிரானின் பாதம் படும் பாக்கியத்தை அயோத்திக்கு தெற்கே உள்ள பாரத தேசங்கள் முழுவதும் பெற்றது.



இலங்கையில் இருந்த ராக்ஷஸன் ராவணனின் தலையை கொய்து, அவன் தம்பி விபீஷணனுக்கு முடி சூட்டிவிட்டு, அயோத்தியில் இருந்து இலங்கை வரை தன் ஆளுமையை பறைசாற்றினார் ராமபிரான்.

பிறகு, சீதா தேவியுடன் பட்டாபிஷேகம் செய்து, அயோத்தியை அரசாட்சி செய்து கொண்டிருந்தார்.

அயோத்தியில் ஆரம்பித்து, ராமரின் பாதம் தெற்கு பாரதம் முழுக்க பட்டுவிட்டது.
ஆனால், அயோத்திக்கு மேல் உள்ள ஹிமாசலம் போன்ற வ்டபாரத தேசங்கள் ராம பாதம் கிடைக்காமல் இருந்தது.

"புனிதமான கங்கை நதி பாயும் ஹிமாலயத்திலும் ராமபிரான் பாதம் படவேண்டும்"
என்று ஆசைப்பட்டார் பரத்வாஜ ரிஷி.

அதற்காக கண்டம் என்னும் கடிகையில், சித்ரகூடம் போலவே ஒரு குடில் அமைத்து, அயோத்தி மன்னன் னை அழைத்தார்.
பரத்வாஜ ரிஷி அழைப்பை ஏற்று, ராமபிரான் புனிதமான கங்கை ஓடும் இந்த கடிகையில் வந்து சிலகாலம் தங்கினார்.

இந்த 'கடிகை' என்ற திவ்ய தேசமே 'தேவப்ரயாகை' என்றும் அழைக்கபடுகிறது.

இங்குள்ள ரகுநாத் கோவிலில், ராமபிரான் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறார்.

"பாரத தேசம் முழுவதும் ராம ராஜ்யமே"
என்று பறைசாற்றினார்.



"கங்கையில் நின்று, எங்கும் தன் புகழை பரப்பி, பாரத தேசம் முழுவதும் ஆளும் என் புருஷோத்தமனே"
என்று பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்கிறார் இந்த பாசுரத்தில்.

தங்கையை மூக்கும்
தமையனைத் தலையும் தடிந்த
எம் தாசரதி போய்
எங்கும் தன் புகழாய் இருந்து
அரசாண்ட எம் புருஷோத்தமன் இருக்கை
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே
கடுவினை களைந்திடகிற்கும்
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற
கண்டம் என்னும் கடிநகரே
திருமொழி (பெரியாழ்வார்)
கண்டம் என்னும் கடிநகர், இன்று "தேவப்ரயாகை" (Uttarakhand) என்ற பெயருடன் இருக்கிறது.

வீட்டில் உள்ள வாளி ஜலத்தில் குளிக்கும் போது "கங்கே கங்கே" என்ற சொன்னால் கூட, அந்த சொல்லே குளிப்பவனின் பாவங்களை போக்கி, புனிதமாக்கிவிடும். (கங்கை கங்கை என்ற வாசகத்தாலே
கடுவினை களைந்திடகிற்கும்)

'கங்கை' என்ற சொல்லுக்கே அத்தனை மகத்துவம் சொல்லப்படுகிறது.

அப்படிப்பட்ட பெருமைமிகு கங்கை, கடிகை என்ற தேவப்ரயாகையில் ஓடிக்கொண்டு இருக்க, ராமேஸ்வரம் முதல் ஹிமாச்சலம் வரை தன் பாதம் பதித்த ராமபிரானை கண்டு (எம் தாசரதி போய் எங்கும் தன் புகழாய் இருந்து அரசாண்ட எம் புருஷோத்தமன் இருக்கை),
'அந்த கங்கையில் மேல் நின்ற என் புருஷோத்தமனே' என்று ராமபிரானை கை தொழுது சேவிக்கிறார், பெரியாழ்வார். (கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற)

ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார், வடதேசத்தில் உள்ள  தேவப்ரயாகை வரை சென்று ராமபிரானை சேவித்து இருக்கிறார் என்பது தெரிகிறது.
"ராமபிரான் பாரத தேசம் முழுவதும் தன் பாதத்தை பதித்து, கங்கையில் வந்து ரகுநாதனாக நிற்கிறார். அந்த ரகுநாதனை தொழுவோம்"
என்று மட்டும் பெரியாழ்வார் சொல்லி இருக்கலாமே!
ஆனால்,
ஏன், சூர்பனகை மூக்கை அறுத்த, அவள் அண்ணன் ராவணன் தலையை அறுத்த ராமபிரான் என்று சேர்த்து சொன்னார்?

ராக்ஷஸ தாயாருக்கும், ரிஷியான விஸ்ரவசுக்கும் பிறந்தவன் ராவணன். ராவணனும் ஒரு விதத்தில் பிராம்மணன். வேதம் கற்றவன். 
பெரியாழ்வார் பிராம்மணர்.
இப்படி ராவணன் தலையை கொய்து எறிந்த ராமபிரான் என்று சொல்ல காரணம் என்ன?

இதற்கான காரணத்தை பெரியவாச்சான் பிள்ளை சொல்லியிருந்தாலும், அந்த அர்த்தங்கள் நமக்கு கிடைக்காமல் போய் விட்டது.
அதற்கு பின் வந்த மணவாள மாமுனிகள், பெரியாழ்வார் என்ன காரணத்தினால் இப்படி சொன்னார்? என்று நமக்கு காட்டுகிறார்.

உண்மையான பக்தன் பெருமாளையும், பிராட்டியையும் சேர்த்து சேவிக்கவே விரும்புவான். பிரித்து வைக்க விரும்பமாட்டான்.
ஹனுமான் ராமபிரானையும், சீதையும் சேர்க்க பாடுபட்டார். பிரிந்து இருப்பதை கண்டு வருத்தப்பட்டார்.
சேர்த்து வைக்க ஆசைப்பட்ட ஹநுமானுக்கு ராமபிரான் பெரும் புகழை கொடுத்தார்.



ஹனுமானுக்கு கோவில் காட்டினால், அங்கு ஒரு சிறிய சன்னதியில் கூட ராமபிரான் இருக்க சம்மத்தித்து விடுகிறார்.
ராமருக்கே கோவில் காட்டினாலும், அங்கு இருக்கும் சிறு ஹனுமான் சன்னதியை சுற்றுபவர்களே அதிகம்.
ஹநுமானுக்கு ஏன் எந்த ஏற்றம்? 
பெருமாளையும், பிராட்டியையும் சேர்த்து சேவிக்க ஆசைப்பட்டதால், ஹநுமானுக்கு எந்த ஏற்றம் கிடைத்தது.
பெருமாளை பிராட்டியிடமிருந்து பிரித்து பார்க்க ஆசைப்பட்டாள் - 'சூர்ப்பனகை'.
இந்த பாபத்துக்கு மூக்கு அறுபட்டு தண்டிக்கப்பட்டாள்.

பிராட்டியை பெருமாளிடமிருந்து பிரித்து பார்க்க ஆசைப்பட்டான் - 'ராவணன்'.
தலையே போனது அவனுக்கு.

பக்தன் 'பெருமாளையும் பிராட்டியையும் பிரித்து பார்க்க கூடாது' என்று நமக்கு சொல்லவே  பெரியாழ்வார் "தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த" என்று மணவாள மாமுனிகள் நமக்கு விளக்குகிறார்..

ராமபிரானையும், சீதாதேவியையும் சேர்த்தே வணங்குவோம்.
ஹநுமானை போல, பெருமையை அடைவோம்.

குருநாதர் துணை.