Followers

Search Here...

Wednesday 27 December 2017

கங்கை நதி சரித்திரம் தெரிந்து கொள்வோமே....பூமிக்கு பாய்ந்து வந்த விஷ்ணு பாதத்தில் இருந்து உண்டான கங்கை

பூலோகம் ஆரம்பித்து சத்ய லோகமான ப்ரம்ம லோகம் வரை, தன் தவத்தால், பலத்தால் கைப்பற்றி இருந்த பலி (bali) சக்ரவர்த்தியிடம் மூன்று அடி தானமாக கேட்டு,
* ஒரு அடி பூலோகம் ஆரம்பித்து,
* மற்றொரு அடியை ப்ரம்ம லோகம் வரை அளந்து,
* இன்னும் ஒரு அடி எங்கே? என்றார் த்ரிவிக்ரம பெருமாளாக நின்ற நாராயணன்.




மூன்றாம் அடியாக தன்னையே சமர்ப்பணம் செய்தார் பலி சக்ரவர்த்தி.

இவரே அடுத்த இந்திர ராஜன் என்று நியமிக்கப்பட்டு, இன்று வரை பாதாள லோகத்தில் அரசாட்சி புரிகிறார்.
இப்படி ப்ரம்ம லோகம் வரை பெருமாள் திருவடி செல்ல, ப்ரம்ம தேவன், "விஷ்ணு பதி" என்ற பெயருடன் அங்கு ஓடிக்கொண்டிருக்கும் ஜலத்தால், அவர் திருவடியை அபிஷேகம் செய்தார்.

நாராயணன் கால் நகம் பட்ட அபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர், ப்ரம்ம லோகத்தின் கீழ் உள்ள துருவ மண்டலத்தில் விழுந்தது.
நாராயணன் பாதம் பட்ட புனித தீர்த்தம் என்பதை அறிந்து, பக்தியுடன் நீராடினார் துருவன்.

துருவ மண்டலத்தில் இருந்து ஜன மற்றும் தப லோகங்களை வந்து அடைந்தாள், 'விஷ்ணு பதி" என்ற நதி தேவதை.
அங்கு சப்த ரிஷிகளும், முனிவர்களும் ஸ்நானம் செய்தனர்.

பின் அங்கிருந்து சொர்க்க லோகம் வந்து அடைந்தாள் விஷ்ணுபதி. அங்கு உள்ள தேவர்களும், அப்சரஸ் போன்றவர்களும் நாராயண பாதம் பட்ட தீர்த்தம் என்று பக்தியுடன் கொண்டாடினர். ஸ்நானம் செய்தனர். தேவலோகத்தில் "மந்தாகினி" என்ற பெயர் பெற்றாள்.

இப்படி ப்ரம்ம லோகத்தில் இருந்து கீழ் இறங்கி வந்த விஷ்ணுபதி, பூமிக்கு வர மறுத்து, சொர்க்க லோகத்திலேயே தங்கி விட்டாள்.

சத்ய யுகத்தில், ஸ்ரீ ராமர் பிறந்த குலத்தில், ராமருக்கும் முன், ஸகர சக்கரவர்த்தி என்ற அரசன் ஆண்டு வந்தார்.

இவருக்கு 60,000 பிள்ளைகள். மூத்த பிள்ளையின் பெயர் "அஸமஞ்சன்".

இவன் யாரிடமும் சமமாக பழகாமல் இருந்ததால், ஆட்சி செய்ய தகுதி இல்லாதவனாக இருந்தான். இதனால் நாடு கடத்தப்பட்டான்.

"அம்சுமான்" என்ற ஒரு மகன் இவனுக்கு உண்டு. 'அம்சுமான்' தன் தாத்தா ஸகர சக்கரவர்த்தியுடன் இருந்து வந்தார்.

சக்கரவர்த்தியாக இருப்பதால், ராஜா "அஸ்வமேத யாகம்" நடத்த திட்டமிட்டார்.

இந்திரன் தன் பதவி் போய் விடுமோ என்று எண்ணி, அந்த யாகத்திற்காக அனைத்து நாட்டுக்கும் செல்ல தயாராக இருந்த அஸ்வமேத குதிரையை கைப்பற்றி, பாதாள லோகத்திற்கு கொண்டு சென்று, அங்கு இருந்த கபில மகரிஷியின் ஆஸ்ரமத்தில் கட்டி விட்டு சென்று விட்டான்.

சகர சக்கரவர்த்தி, அஸமஞ்சன் தவிர்த்து, மற்ற 60000 மகன்களையும், "அந்த குதிரையை மீட்டு கொண்டு வாருங்கள்" என்று சொல்ல, தேடி தேடி, இறுதியில் பாதாள லோகத்தில் கபில ஆஸ்ரமத்தில் இருப்பதை கண்டு, கபில மகரிஷி தான் திருடி கொண்டு வந்து விட்டார் என்று தவறாக முடிவு செய்தனர்.
அவரை தாக்க சண்டைக்கு தயாரான போது, தியானத்தில் இருந்த கபில மகரிஷி கண் திறந்து பார்க்க, அவரின் தவ வலிமையினால் அவர் கண்ணிலிருந்து வந்த தீ ஜ்வாலையில், அந்த இடத்திலேயே 60000 பேரும் பொசுங்கி போயினர்.
சகர சக்கரவர்த்தி அனுப்பிய பிள்ளைகள் வராமல் போக, தன் பேரனை (அம்சுமான்) அனுப்பி வைத்தார்.




அம்சுமான் இறுதியில் கபில மகரிஷியின் ஆஸ்ரமம் வந்து குதிரை இருப்பதை கவனிக்க, 60000 பேரும் (சித்தப்பா முறை) சாம்பலாகி கிடைப்பதை பார்த்து, அவசரப்பட்டுவிடாமல், நிதானமாக, பணிவுடன் கபில மகரிஷியின் முன் வந்து, நடந்த விவரத்தை கூறுமாறு வேண்டினார்.

கபில மகரிஷி, "இந்திரன் நீங்கள் செய்யும் யாகத்தை பங்கம் செய்வதற்காக, குதிரையை இங்கு வந்து கட்டி விட்டு சென்று விட்டான். இதை அறியாமல், என்ன நடந்தது என்று விசாரிக்காமல், என்னிடம் இவர்கள் செய்த அபசாரமே இவர்களை இந்த நிலைக்கு தள்ளி விட்டது" என்றார்.
துர்மரணம் அடைந்த தன் சிறிய தகப்பனார்களுக்கு நல்ல கதி கிடைக்க வேண்டும் என்று எண்ணிய அம்சுமான், கபிலரிடமே கேட்க, அவர் "இந்திரன் ஆளும் சொர்க்க லோகத்தில் இருக்கும் விஷ்ணுபதி என்ற நதியின் தீர்த்தம் இவர்களின் சாம்பல் மேல் பட்டால், இவர்கள் அனைவரும் நல்ல கதியை அடைவர்" என்று சமாதானம் செய்தார்.

விடைபெற்ற அம்சுமான், குதிரையுடன் திரும்பி வந்து, நடந்ததை சகர சக்கரவர்த்தியிடம் சொன்னான்.

சகர சக்கரவர்த்தி "அஸ்வமேத யாகம்" நடத்தி முடித்து, பின்பு நாட்டை அம்சுமானிடம் ஒப்படைத்து, சொர்க்கம் சென்றார்.

அம்சுமான் நாட்டை கவனிப்பதே பெரிய காரியமாக இருப்பதால், அவர் காலம் வரை ஆட்சி செய்து விட்டு மறைந்தார்.
"மந்தாகினி" என்ற நதியை சொர்க்க லோகத்தில் இருந்து பூமிக்கு கொண்டு வர வைப்பது என்பது சாதாரண காரியமும் இல்லை. மேலும் பின் வந்த அரசர்களுக்கு நாட்டை ஆள்வதில் உள்ள சிரமங்கள், பொறுப்புகள் அதிகமாகி போக, இதை மறந்தே விட்டனர்.

இந்த வம்சத்தில் வந்த "பகீரதன்" என்ற அரசன், தன் மூதாதையர்கள் துர்மரணம் அடைந்து, இன்னும் விமோசனம் அடையாமல் இருப்பதை அறிந்து, தன் அரசாட்சியை தன் மந்திரிகளிடம் கொடுத்து, கடும் தவம் மேற்கொண்டான்.

மந்தாகினி என்ற நதியின் தேவதை ப்ரத்யக்ஷ்ம் ஆனாள்.

பகீரதன் நோக்கம் புரிந்தாலும், சொர்க்கம் வரை வந்த இவள், பூமியை தொடுவதற்கு அருவெறுப்பு கொண்டாள்.
மேலும் பகீரதனை பார்த்து "நான் பவன பாவனமாக, சுத்தமாக இருந்து வருகிறேன். என்னை போய் இந்த பூமிக்கு வரச் சொல்லி கூப்பிடுகிறாயே !! நான் உனக்காக வருகிறேன் என்று சம்மதித்தால், இதன் காரணமாக மகா பாவங்கள் செய்தவர்கள் எல்லாம் வந்து ஸ்நானம் செய்வார்களே !!" என்றாள்.

உடனே பகீரதன் "தேவி, பாவம் செய்தவர்கள் வந்து ஸ்நானம் செய்வார்கள் என்று நினைத்து கூசுகிறாயே, அதே ஸமயத்தில் ஹரி நாமம் சொல்லும் ஹரி தாசர்கள், பாகவதர்கள் வந்தும் ஸ்நானம் செய்வார்களே. இந்த பாக்கியத்தை நீ அனுபவிக்க வேண்டாமா ?




பாவிகள் வந்து ஸ்நானம் செய்யும் போது, அவர்கள் செய்த பாவம் உன்னை சேர்ந்து விடும். இவர்கள் கொடுத்த பாவத்தை எங்கு தொலைப்பேன் என்று நினைத்து தான் நீ பூமிக்கு வர தயங்குகிறாய் என்று அறிவேன்.

ஹரி தாசர்கள் வந்து ஸ்நானம் செய்யும் போதே உன்னிடம் சேர்ந்த பாவங்களை ஓடி விடும்.

ஹரி தாசர்களுக்கு என்ன அப்படி விசேஷம்?

உலக வாழ்வில் நாட்டம் உள்ள லௌகீகர்கள், உன்னிடம் வந்து ஸ்நானம் செய்யும் போது, 'எத்தனை குளிர்ச்சியாக இருக்கிறது, ஆஹா அருமை' என்று சொல்லிக்கொண்டு, உலக விஷயமாக பேசிக்கொண்டு ஸ்நானம் செய்வார்கள். அவர்களின் பாவங்களையெல்லாம் உன்னிடம் கரைத்து விடுவார்கள்.

புண்ணியம் செய்தவர்களோ, கரையில் அமர்ந்து சங்கல்பம் செய்து, தன் பாவங்கள் அனைத்தையும் சொல்லி உன்னிடமே கரைத்து விடுவர்.

இப்படி லௌகீகர்கள், புண்ணியம் செய்தவர்களின் மொத்த பாவத்தையும் சுமந்து இருக்கும் உனக்கு, எதையும் எதிர்பார்க்காமல், ஹரி தாசர்கள் ஸ்நானம் செய்ய வரும் போது, விஷ்ணுபதியே !! அவர்கள் வாய் நிறைய "ஹரி, ஹரி, ஹரி" என்று சொல்லி ஸ்நானம் செய்வார்கள். அந்த நாமமே உன்னிடம் சேர்ந்த அனைத்து பாவங்களும் விலகச் செய்து விடும்.

ஆகையால், அப்படிப்பட்ட பாகவதர்கள் சம்பந்தம் உனக்கு கிடைக்க இஷ்டம் இருந்தால், என்னோடு வா" என்றார்.
இதை கேட்ட மந்தாகினி தேவிக்கு பரமானந்தம் உண்டாகி பாகவதர்களை காணும் ஆசையில் சொர்க்கத்தில் இருந்து உற்சாகம் பொங்க பூமிக்கு வர ஆசை கொண்டாள்.
பகீரதனை பார்த்து "நான் இங்கிருந்து வரும் வேகத்தை பூமியில் யார் தாங்க முடியும்?" என்று கேட்டாள்.

பகீரதன், "அதற்கு நீயே தான் வழி சொல்ல முடியும்" என்றார்.

தேவி, "நான் வரும் வேகத்தை சிவபெருமான் மட்டுமே தரிக்க முடியும்" என்று சொல்ல, மீண்டும் பகீரதன், சிவனை நோக்கி பல வருடங்கள் தவம் செய்து, அவரின் தரிசனம் கண்டு, இந்த காரியத்துக்கு உதவி கேட்டார்.

மகிழ்ச்சியுடன் சிவபெருமான் சம்மதித்தார்.
ஹரி தாசர்களும், பாகவதர்களும் ஸ்நானம் செய்வார்கள் என்று சொன்ன காரணத்தினால் பூமிக்கு வர சம்மதித்த மந்தாகினிக்கு, முதல் பாகவதராக சிவபெருமானே முதலில் வந்து தன் தலையில் ஹரி பாத தீர்த்தம் படட்டும் என்று முன் வந்தார்.

"வைஷ்ணவானாம் யதா ஷம்பு:" என்று, சிவபெருமான் 'தானே முதல் வைஷ்ணவன்' என்று காட்டினார்.

இவர் தலையில் விழுந்து, பூமியில் இமாலய பர்வதத்தில் ஓடி வரும் வரும்போது, மந்தாகினி சிவபெருமானின் கேசத்தை ஆனந்தப்படுத்ததினால், "அலகனந்தா" என்ற பெயர் பெற்றாள்.

பகீரதனை பின் தொடர்ந்து வந்ததால், "பாகீரதி" என்ற பெயரும் கொண்டு, இமயமலையில் இருந்து, "பாகீரதி", "அலகனந்தா" என்ற பெயரில் பூமியை நோக்கி வேகமாக வந்தாள்.

இப்படி ஓடி வருபவள், பூமியை அடைந்தபோது, "பாகீரதி", "அலகனந்தா" என்ற பெயரில் தேவப்ரயாகை என்ற இடத்தில் ஒரு நதியாக இணைந்து, "கங்கா" என்ற பெயர் பெற்றாள்.

தலையில் தாங்கியதால், சிவபெருமான் "கங்காதரன்" என்று பெயர் பெற்றார்.
இப்படி பாய்ந்து வந்த கங்கை பாதாளம் வரை பாய்ந்து, அங்கு இருந்த 60000 பேரின் சாம்பலில் பட்டதற்கே, பித்ருலோகம் அடையாமல் இருந்த அவர்களின் ஆத்மாக்கள் புண்ணிய லோகம் சென்றனர்.

உயிர் போன பின், உடல் எரிந்து அந்த சாம்பலில் கங்கை பட்டாலே அந்த ஆத்மா புண்ணிய லோகம் அடையும் என்றால், உயிருடன் இருக்கும் போது நாம் சென்று ஹரி நாமம் சொல்லி ஸ்நானம் செய்தால் புண்ணிய கிடைக்கும், பாவம் தொலையும் என்பதில் சந்தேகம் என்ன !!




இப்படி பாகவதர்களை எதிர்பார்த்து வரும் கங்கையில் ஸ்நானம் செய்யும் பாக்கியம் கிடைத்தால் நாம் சொல்ல வேண்டிய ஸ்லோகம் :

விஷ்ணு பாத சமுத் பூதே ! (விஷ்ணு பாதத்தில் இருந்து உண்டானவளே )
கங்கே த்ரிபத காமினி !!
(மூன்று உலகங்களிலும் சஞ்சரிப்பவளே )
தர்மத்த்ரவேதி விக்யாதே
(தர்மத்த்ரவம் என்ற பெயர் உடையவளே)
பாபம் மே ஹர ஜான்ஹவி
(என்னுடைய பாவங்களை நீக்கு)

கங்கையை ஸ்மரித்துக் கொண்டு, பொதுவாகவே நாம் எந்த ஜலத்திலும் ஸ்நானம் செய்தாலும், கங்கையில் ஸ்நானம் செய்தது போலாகும்.

நம்மிடம் உள்ள 2 பெரிய குறைகள்


தலைமுடியில், ஒரு முடி வெள்ளையாக தெரிய ஆரம்பித்தாலும், அதை பார்த்து வருத்தப்பட்டு, எப்படியாவது அதை கறுப்பு ஆக்க அல்லது மறைக்க பார்க்கிறோம்.

ஷவரம் (shave) செய்தாலும், சரியாக செய்து இருக்கிறோமா என்று பல முறை கண்ணாடியில் சரி பார்க்கிறோம்.

அலங்காரம் செய்து கொள்ள எத்தனையோ நேரம் செலவு செய்கிறோம்.

ஒரு எறும்பு கடித்தாலும், கடித்த இடத்தை பார்த்து உடனே ஏதாவது சிகிச்சை செய்து கொள்கிறோம்.

இந்த உடம்பை பாதுகாக்க எவ்வளவு பாடுபடுகிறோம்.

இப்படி உடம்பை பார்த்து பார்த்து கவலைபடுகிறோமே, இது தவறா ?
உடம்பை பார்த்துக்கொள்வது தவறே இல்லை.

இப்படி உடம்பை பார்த்து பார்த்து கவலைப்படுகிறோமே, எப்பொழுதாவது நம் மனசை பற்றியோ, நாம் உண்ணும் உணவை பற்றியோ கவலைப்படுகிறோமா ? இல்லை.

கொஞ்சம் இந்த உடம்பின் உள்ளே இருக்கும், ஆத்மாவுக்கும் இந்த ஆர்வம், பாதுகாப்பு கொடுக்கிறோமா? இல்லவே இல்லை.

இந்த ஆத்மா இருக்கும் வரை தான், இந்த உடம்புக்கு மரியாதை.
இந்த அறிவு நமக்கு முதலில் வர வேண்டும்.

ஆத்மா போய்விட்டால் பிணம்.

சாஸ்திரங்கள் இதை நமக்கு சொல்லி கொடுக்கிறது. சாஸ்திரங்கள் நமக்கு நன்மை மட்டுமே சொல்கிறது.

இப்பொழுது பொதுவாக குறைந்த ஆயுள், நோயுடன் சாவு அமைவதற்கு காரணம் என்ன?

நம்மிடம் உள்ள 2 பெரிய குறைகளே காரணம். அது என்ன தெரியுமா?

1. நம் மனதை நாம் கவனிப்பதே இல்லை. இந்த மனசை தேவை இல்லாமால், பல துக்கத்துக்கு நாம் விரும்பாமலே ஆழ்த்துகிறோம்.

மனசு சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்ற உண்மையான அறிவு இல்லாததே நோய்க்கு காரணம். ஆயுள் குறைவுக்கும் காரணம்.

2. உணவு கட்டுப்பாடு என்பதே இன்று நம்மிடம் கிடையாது.

நாக்குக்கு பிடித்தால் உடனே வயிறுக்குள்ளே தள்ளுகிறோம் நாம்.

உடம்புக்கு நல்லதா, நீண்ட நாள் இந்த ஆத்மாவை இந்த உடம்பில் வாழ வைக்குமா என்பதில் கவனமே இல்லை நமக்கு.

சரீரம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற உண்மையான அறிவு இல்லாததே நோய்க்கு காரணம். ஆயுள் குறைவுக்கும் காரணம்.

ஆக, நம் ஆயுளை குறைப்பவை இரண்டு :

- மனதில் துக்கம் ஆயுளை குறைக்கும்.
- உணவு கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை ஆயுளை குறைக்கும்.

1. மனதை எப்படி துக்கம் இல்லாமல், சுத்தமாக வைத்து கொள்ள முடியும்?

மனது சொல்வதை எல்லாம் அறிவு (புத்தி) கேட்க கூடாது. மனதை புத்தியால் ஒழுங்குபடுத்த வேண்டும். மனசு நல்ல விஷயத்துக்கும் ஆசை படும். பல நேரம், கெட்ட விஷயத்துக்கும் (விஷத்துக்கும்) ஆசைபடும்.

புத்தியை கொண்டு, நல்ல விஷயத்துக்கு மட்டும் நம்மை நகர்த்த வேண்டும்.

இந்த மனசை புத்தியால் கவனிக்க கவனிக்க, அது தானாக செயல்படாமல் புத்தி சொல்வதை கேட்டு அடங்கி நடக்கும்.

பகவத் கீதையில் இதையே ஸ்ரீகிருஷ்ணரும் சொல்கிறார்.

மனசை புத்தி கொண்டு அடக்க முடியுமா? என்று கேட்கும் அர்ஜுனனுக்கு, ஸ்ரீகிருஷ்ணர் "வைராக்கியத்துடன், விடா முயற்சி செய்து கொண்டே இருந்தால், புத்திக்கு மனசு அடங்கும்" என்கிறார். பிராணாயாமம் என்ற யோகா செய்வதின் மூலமாக கூட மனசை அடக்க முடியும் என்று யோகத்தை சொல்கிறார். புத்திக்கு வழிகாட்டி நம் சாஸ்திரங்கள்.
ப்ராம்மண குலத்தில் பிறந்த ஆண் சாகும் வரை காயத்ரி ஜபம் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்த்திரம். தினமும் 1008 தடவை, 3 காலமும் சொல்ல சொல்ல, இவனிடம் இருக்கும் பாப மூட்டைகள் அழியும், முக்திக்கு வழி வகுக்கும். அப்படியானால், பெண்கள், மற்ற குலத்தில் உள்ளவர்கள் ஒன்றுமே சொல்லாமல் இருந்து விடலாமா ?
சாஸ்த்திரம் அப்படி எல்லாம் விட்டு விடாது. கடினமான கட்டுப்பாடு ப்ராம்மண குலத்தில் பிறந்துவனுக்கு விதிக்கும் நம் சாஸ்திரம், அதே புண்ணியத்தை எளிதாக "ராம, ராம" என்று இடைவிடாது சொல் என்று பெண்களையும், ஆண்களையும் எப்பொழுதும் சொல்ல சொல்கிறது.
"ராம, ராம" என்று எப்போதும் சொல்லி கொண்டு இருப்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல.
சாக்ஷாத் ருத்திரன் சிவபெருமானே "ராம, ராம" என்று சொல்கிறார். காசியில் உயிர் போகும் அனைவருக்கும் தானே அவர்கள் காதில் "ராம, ராம" என்று சொல்கிறார். இன்றும் வட இந்தியர்கள் இதையே "ராம நாம் சத்ய ஹை" என்று சொல்லிக்கொண்டே தகனம் செய்கின்றனர். ஹனுமான் "ராம, ராம" என்று சொல்கிறார். காந்தி சொன்ன கடைசி சொல்லும் "ராம்".
எவன் ஒருவனுக்கு எப்பொழுதும் "ராம, ராம" என்று மனதில் எப்பொழுதும் ஒடுகிறதோ, அவன் வாழ்வில் அசம்பாவிதம் ஏதும் நடக்காது. எந்த துன்பமும், வந்தது தெரியாமல் மறைந்து விடும். சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். ஆச்சர்யங்களும், வாழ்வில் சுகமும் நிகழும்.

எளிதாக இருக்கிறதே என்று பிராணாயாமத்தையும், ராம நாமத்தையும், காயத்ரி மந்திரத்தையும் சாதாரணமாக நினைத்து விட கூடாது. சொல்வது யார் என்று பார்க்க வேண்டும். ப்ரம்ம ரிஷியான விஸ்வாமித்திரர் வாக்கில் வந்தது காயத்ரி மந்திரம். சிவபெருமான், மற்றும் பதஞ்சலி போன்ற ரிஷிகளின் மூலம் கிடைத்தது யோகா.

நாம் எதற்கும் தகுதி இல்லாதவர்கள். மனதை அடக்க முடியாதவர்கள். மந்திரங்கள் கண்டுபிடிக்கும் திறன் இல்லாதவர்கள். யோக முறைகள் கண்டுபிடிக்க முடியாதவர்கள்.
ஒரு ரத்தினத்தில் ஒரு நூலை கொண்டு துளை போட முடியுமா? முடியாது. ரத்தினத்தில் துளை போடும் அளவிற்கு ஒரு நூலுக்கு திறன் கிடையாது.
அது போல நமக்கு மனதை அடக்கி, முக்தி அடையும் அளவுக்கு திறன் கிடையாது. ஆனால் முக்தி அடையாமல் இருந்தால், பிறந்து கொண்டே இருக்க வேண்டியது தான். சாஸ்திரம் நம்மை அப்படியே பிறந்து இறந்து கொண்டே இருங்கள் என்று விட்டு விடுமா? வழியை காட்டுகிறது.

ஒரு கூர்மையான ஊசி ஒரு ரத்தினத்தையும் துளை போடும் திறன் கொண்டிருக்கும். இந்த கூர்மையான ஊசியே காயத்ரி மந்திரம், ராம நாம மந்திரம். எப்படி ஒரு ஊசியின் நுனியில் ஒரு துளையில் நூலை கோர்த்து, அதே ரத்தினத்தின் உள்ளே ஊசியுடன் சேர்ந்து நூலும் மறு வழியே வருமோ, அது போல, எதற்கும் தகுதி இல்லாத நாமும் இந்த மந்திரங்களை நம் மனதில் நுழைத்துக் கொண்டே, பிறவி கடலில் இருந்து வெளியே சென்று விடலாம்.
கிடைத்தற்கு அறிய ராம நாம மந்திரத்தை விட்டு, காலத்தை வீணடிக்காமல் மனதில் உரு போட, பல ஜென்மங்களாக இன்று வரை சேர்த்த பாவ மூட்டை அழிவதால், உலகிலும் சுகமாக இருந்து, மோக்ஷமும் எளிதாக கிடைக்கும்.
பிராம்மணன் சம்பாதிக்கிறானோ இல்லையோ, கட்டாயம் காயத்ரி மந்திரமும் சேர்த்து 3 வேலையும் சொல்ல வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

ஒருவன் நன்றாக வேலை செய்தும், அவன் மேல் அதிகாரி, இன்னொருவனுக்கு வேலை சுமாராக செய்தாலும், அவனுக்கு உயர் பதவி, அதிக சம்பளம் கொடுத்துவிட்டார். உடனே இவன் மனசு "இது நியாயமா, தர்மமா ?" என்று கேள்வி எழுப்பியது. மனதை கெடுத்துக் கொண்டால் ஆயுள் குறையும் என்கிறது எச்சரிக்கிறது சாஸ்திரம்.

நம் ஸனாதன தர்மத்தில், முக்தி அடையும் வரை, பிறக்கும் ஒவ்வொருவனும் (ஆத்மாவும்) பல ஜென்மங்களாக ஒரு உடம்பில் பிறந்து, செத்து, இன்னொரு ஒரு உடம்பில் பிறந்து, செத்து வந்து கொண்டே இருக்கிறான். ஒவ்வொருவனும் தன் தன் பாவ புண்ணிய மூட்டையை எடுத்து கொண்டே வருகிறான்.

இப்படி "இது நியாயமா, தர்மமா?" என்று கேள்வி கேட்டு மனசை கெடுத்து கொண்டு புலம்பும் ஒருவனுக்கு, நம் சாஸ்திரம், இந்த உண்மையையே சொல்லி புரிய வைக்கிறது. காரணம் இல்லாமல் ஒருவனுக்கு கிடைக்கும் நன்மையும், துக்கமும் வருவதற்கு காரணம், அவனவன் சேர்த்து வைத்துள்ள பாவ, புண்ணிய முட்டையின் அளவை பொறுத்தது.
இந்த உண்மையை சொல்லும் நம் ஸனாதன தர்மம், நீ இப்போது நன்றாக செய்த வேலைக்கும் ஒரு புண்ணியத்தை தருகிறது. இது இப்போது தெரியாமல் போனாலும், இந்த புண்ணியம் உன் ஆயுசையும், உன் ஆரோக்கியத்தையும், உனக்கு பிரியமான ஒருவனின் ஆயுளை காக்கவும் கூட பயன் படலாம். உன் புண்ணியம் உனக்கே தக்க சமயத்தில் வந்து சேரும் என்கிறது. அதனாலேயே, நீ எப்போதும் மனசை இது போன்று கெடுத்துக் கொள்ளாமல், நீ உன் கடமையை நியாயமாக செய் என்று சொல்கிறது. புண்ணிய காரியத்தையே செய். இதையே ஸ்ரீ கிருஷ்ணரும் கீதையில் "கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே" என்று சொல்கிறார்.

நன்றாக வேலை செய்ததற்கு மதிப்பு இல்லையே என்று வருத்தப்படாதே.

இதை விட முக்கியமான ஆபத்து உனக்கு வர இருக்கும் போது, இந்த உன் புண்ணிய கர்மாவே உன்னை காப்பாற்றும் என்கிறது நம் சாஸ்திரம்.

இப்படி உண்மையை சொல்லி, மனதை எந்த விதத்திலும் கவலைக்கு ஆட்படுத்தாதே என்று சொல்கிறது. மனதில் கவலை அதிகரிக்க ஆயுள் குறையும்.

நம் ஆயுள் குறைய, நம் ஸனாதன தர்மம் ஒப்புக்கொள்ளவே கொள்ளாது. மனித சரீரம் கிடைப்பது அரிது. ஆயுள் அதிகம் இருந்தால், இந்த பிறவியிலேயே முக்திக்கு முயற்சி செய்யலாம்.

2. சரீரத்தை எப்படி ஆரோக்கியமாக வைத்து இருக்க முடியும்?

நாம் உண்பதில் தீவிரமான கவனம் வேண்டும்.

இந்த கவனமும், நாம் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசையினால் வர வேண்டும்.

நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தால், கோடி நன்மை நமக்கும், நம் குடும்பத்துக்கும்.

கண்டதை எல்லாம் தின்று, நோய் வந்து, அகால மரணம் அடைந்து, கிடைத்த மனித பிறவியை வீணடித்து விட கூடாது. அகால மரணத்தினால், நம்பி இருக்கும் குடும்பம் கஷ்டப்பட வேண்டி வரும்.

ஆகாரம் (உணவில்) நியமம் (கட்டுப்பாடு), நம் வாழ்வில் கட்டாயம் இருக்க வேண்டும். சுயநலமாகவாவது, இதில் நமக்கு ஆசை வர வேண்டும்.

முடிந்தவரை காலத்தில், பசி அடங்கும் வரை மட்டும், சாத்வீக உணவு மட்டும் உண்ண வேண்டும். மது மாமிசம் கூடவே கூடாது. உணர்ச்சிகளை உண்டு பண்ணும் உணவும் உண்ண கூடாது.

நாக்குக்கு அடிமைப்பட்டு பார்த்ததையெல்லாம் சாப்பிடக்கூடாது.

வெளி உடம்பில் மட்டும் கவனம் போதாது. உளளே இருக்கும் உடம்பும், உறுப்புகளும் நம் உடம்புதான் என்று மறந்து விட கூடாது.

மனிதனின் பூரண ஆயுசு 120 வருடம் என்கிறது சாஸ்திரம்.

நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசையும் வேண்டும். ஆரோக்கியமாகவும் கடைசி வரை தானே தன் வேலையை செய்து, முடிந்தால் கிழ வயதிலும் மற்றவர்க்கு உதவி செய்யும் நிலையிலும் இருந்து வாழ ஆசை வேண்டும்.

ஆசை மட்டும் போதுமா ? முதலில் நமக்கு நா அடக்கம் வேண்டும்.

நா அடக்கம் இருந்தால், உணவு கட்டுப்பாடு தானே வரும்.

உடல் உறுப்புகள் நீண்ட காலம் ஒத்துழைக்கும்.

உலகத்தில் சாப்பிட்டு சாப்பிட்டு நோய் வந்து இறந்தவனை விட, குறைந்த சாத்வீக சாப்பாடு மட்டுமே உண்டு, எந்த நோயும் இல்லாமல் போவதே மேல்.

பட்டினியால் இறந்தவனை விட, சாப்பிட்டதனால் நோய் வந்து இறந்தவர்களே உலகில் அதிகம்.

ஆகார நியமத்தில் நாம் அதிக ஆர்வம் கொண்டிருந்தால், தானாக நீண்ட நாள் இந்த ஆத்மா இந்த உடம்பில் தங்கும். உடம்பும் 100 வயது தாண்டினாலும் நோய் எதுவும் இல்லாமல் ஒத்துழைக்கும்.

நோய் வந்தவனுக்கு, மனம் துக்கம் அடைந்தவனுக்கு மட்டும் தான் போதுமே வாழ்க்கை என்று தோன்றும். மனதில் துக்கம் புத்தியின் துணை கொண்டு ஜெயித்து, கட்டுப்பாடான உணவு பழக்கத்துடன் இருப்பவன் வயதான காலத்திலும், நீண்ட நாள் வாழ ஆசை கொள்வான்.

நம் சனாதன தர்மம் நமக்கு சிறந்த வழிகாட்டி. நீண்ட நாள் வாழ்வோம். புண்ணியம் சேர்ப்போம்.

மஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே.. சீதை பிறந்த ஊர் அல்லவா

மஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal எப்படி இருந்தது?




"விராட தேசம், மல்ல தேசம், விதேஹ (மிதிலா) தேசம்" 
ஆகிய தேசங்கள், இன்று "நேபால்" என்று அழைக்கப்படுகிறது.

ராமாயண காலத்தில், 
மிதிலை நகரில், சீதை அவதரித்தாள். 
"ஜனக மன்னர்" ஆட்சி புரிந்தார்.
மஹாபாரத சமயத்தில்,
"விராட தேசம், மல்ல தேசம், விதேஹ (மிதிலா) தேசம்" 
பாண்டவர்கள் பக்கம் நின்று போர் புரிந்தனர்.
"துருபதனை" படைதலைவனாக தொடர்ந்து இவர்கள் படையை செலுத்தினர்.

"மல்ல தேசம்" கங்கை நதி ஓரம் அமையப்பட்ட ஒரு நகரம். 
இது விராட தேசத்துக்கு, விதேஹ தேசத்துக்கு நடுவே இருந்தது.

பாண்டவர்கள் 13 வருட வனவாசத்தில், கடைசி 1 வருடம் அஃயாத வாசம் விராட தேசத்தில் இருந்தனர்.



"யுதிஷ்டிரர்" விராட ராஜாவுக்கு உதவியாளனாக, 
"பீமன்" சமையல்காரனாக, 
"அர்ஜுனன்" நர்த்தனம் சொல்லிக்கொடுக்கும் பேடியாக, 
"திரௌபதி" விராட ராணிக்கு 'மாலினி' என்ற பெயரில் வேலைக்காரியாகவும், 
"நகுலன் மற்றும் சகாதேவன்" குதிரை லாயத்தை பார்க்கும் பணியிலும் 
மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.


விராட அரசனின் தளபதி "கீசகன்", திரௌபதியிடம் தவறாக நெருங்க எண்ணினான். 
இதனை திரௌபதி பீமனிடம் சொல்ல,
கீசகன் தலையை ஓங்கி அடித்து, அவன் தலையை வயிற்றுக்குள் தள்ளி, 
ஒரு பந்து போல ஆக்கி கொன்று விட்டான்.

விராட தேச படை தலைவன் கீசகன், த்ரிகர்த தேச (பஞ்சாப்) அரசன் "சுசர்மனை" பலமுறை தோற்கடித்து இருக்கிறான்.

கீசகன் கொடூரமாக இறந்ததை கேள்விப்பட்டு, சந்தேகம் கொண்டான் த்ரிகர்த தேச அரசன் "சுசர்மன்".

இப்படி ஒரு பலம், பீமன் போன்றவர்களுக்கு தான் உண்டு, என்று உணர்ந்த சுசர்மன், துரியோதனனை உடனே விராட தேசத்தை நோக்கி படை எடுக்குமாறு கூறினான்.




குரு தேச "இளவரசன் துரியோதனன்", "கர்ணன்", த்ரிகர்த தேச அரசன் "சுசர்மன்" அனைவரும் விராட தேசத்தை முற்றுகை இட்டனர்.

விராட அரசன், தன் மகன் "உத்தர" குமாரனை தலைமை ஏற்று, துரியோதனின் படையை எதிர்க்க சொன்னார். 

பயந்து போன உத்தர குமாரன், செய்வதறியாது திகைத்தான். 
'அர்ஜுனன்' சமாதானம் செய்து, தான் துணை வருவதாக தைரியம் சொல்லி, போருக்கு தயாரானான்.
விராட தேச படையுடன், அர்ஜுனன் ஒருவனாக சென்று அனைவரையும் தோற்கடித்தான்.

ஒரு வருடம் தங்கி இருந்தது பாண்டவர்கள் என்று அறிந்து பயந்தான் விராட அரசன்.
தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டான்.
யுதிஷ்டிரர் நட்பு கரம் நீட்டினார். 
விராட அரசன் தன் மகள் 'உத்தரா'வை அர்ஜுனன் மகன் அபிமன்யுவுக்கு மணம் செய்து வைத்தார்.

விராட தேச (Nepal) படைகள், பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.

மஹா பாரத போரில், முதல் நாள் போரில், 
விராட அரசன் புதல்வன் "உத்தர" குமாரன் வீரமாக போரிட்டான்.
மாத்ர தேச (Pakistan) அரசர் "சல்யனால்" அதே நாளில் கொல்லப்பட்டான்.



உயிரை பற்றி கவலைப்படாமல் "உத்தர" குமாரன் வீரமாக போரிட்ட வீரத்திற்கு தலை வணங்கினார்சல்லியன்.

உத்தர குமாரன் இறந்ததை கண்டு ஆத்திரத்துடன் சல்லியனை நோக்கி பாய்ந்தான், அவன் சகோதரன் "ஸ்வேத" குமாரன். 
இதனை கண்ட பீஷ்மர், "ஸ்வேத" குமாரனை போருக்கு அழைத்தார். பீஷ்மருடன் போர் செய்து வீர மரணம் எய்தான்..

முதல் நாள் போரிலேயே இத்தனை உயிர் இழப்பு, யுதிஷ்டிரரை கலங்க செய்தது.
"வெற்றி துரியோதனன் பக்கம் நிச்சயம்" என்று சொல்ல ஆரம்பித்தார்.

ஸ்ரீ கிருஷ்ணர் தைரியம் ஊட்டி, மனம் தளரவிடாமல் தைரியம் சொன்னார்.

விராட அரசனை, 15ஆம் நாள் போரில் "துரோணர்" கொன்றார்.

பாண்டவர்கள் பக்கம் நின்று போர் செய்த அரசர்கள், பாண்டவர்கள் வெற்றிக்கு துணை நினறனர்.  பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். தர்மத்தை நிலை நிறுத்தினர்.

உலக க்ஷத்ரியர்கள் அனைவரும் பாண்டவர் பக்கமும், துரியோதனன் பக்கமும் நின்று போரிட்டு உயிரை விட்டனர்.


யுதிஷ்டிரர் உலகத்துக்கே சக்ரவர்த்தியானார்.


மஹாபாரத போர் முடிந்து, 
3000 வருடங்களுக்கு பிறகு "சித்தார்த்தன்" என்ற பெயரில் நேபாள தேசத்தின் இளவரசனாக"கௌதம புத்தர்", லும்பினி (Lumbini) என்ற நகரில் நேபாள தேசத்தில் பிறந்தார்.
மகத தேசத்தில் (பீஹார் (bihar)) உள்ள "போத் கயா" என்ற ஊரில், புத்தர் ஞானம் அடைந்தார் என்று அவரின் சரித்திரம் சொல்கிறது.

மஹாபாரத சமயத்தில் குஜராத் : Gujarat எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே.

மஹாபாரத சமயத்தில் குஜராத் : Gujarat


ஸ்ரீ கிருஷ்ணரின் அரசாட்சி புரிந்த "துவாரகை" என்ற த்வாரவதி தேசம், குஜராத்தில் உள்ளது.
ஸ்ரீ கிருஷ்ணரின் ஆத்ம நண்பனான சுதாமா என்ற குசேலன், குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து, ஸ்ரீ கிருஷ்ணர் கடலில் அமைத்திருந்த துவாரகை நகருக்கு நடந்தே சென்றார்.
ஏழையாக இருந்த குசேலனை தன் அனுக்ரஹித்தினால் கோடீஸ்வரன் ஆக்கினார் ஸ்ரீ கிருஷ்ணர்.

கம்சன் கொல்லப்பட்டான் என்ற ஆத்திரத்தில், மகத அரசன் 'ஜராசந்தன்' (Jamshedpur, Jarkhand near Bihar), ஸ்ரீ கிருஷ்ணர் இருக்கும் மதுராவை (உத்திர பிரதேசம்) தாக்கினான்.
ஸ்ரீ கிருஷ்ணர் 'ஜராசந்தன்' மற்றும் அவன் படையை அடித்து துரத்தினார்.

இதே போல, ஜராசந்தன் 17 முறை தொடர்ந்து படை எடுத்துக்கொண்டே இருந்தான். 
ஜராசந்தனை கொலை செய்ய எண்ணமில்லாத ஸ்ரீ கிருஷ்ணர், மதுரா நகர 5 லட்சம் யாதவ மக்களை மாய ஸ்ருஷ்டி மூலம், துவாரகை என்ற நகரை கடலில் அமைத்து, அனைத்து மக்களையும் ஒரே ராத்திரியில் இடம் மாற்றினார்.

இந்த மாயை புரியாத ஜராசந்தன், மீண்டும் படை எடுக்க வந்த போது மதுரா நகரமே காலி ஆகி போயிருந்ததை கண்டு தேடி கொண்டே இருந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் ஆணைப்படி, தேவலோகத்தில் இருக்கும் விஸ்வகர்மா ஒரே நாளில், துவாரகை என்ற நகரை கடலில் அமைத்து கொடுத்தார்.




துவாரகை நகரம் சுற்றியும் பெரிய மதில் சுவருடன், நான்கு வாசல் கொண்டும் அமைக்கப்பட்டது.

நகரத்தின் வீடுகள் வரிசையாக அமைக்கப்பட்டு, நகரத்தின் வீடுகள் அனைத்தும் தங்கத்தால் இழைக்கப்பட்டு, வான் உயர இருந்தது.
ஒன்பது லட்சம் மாளிகைகள் அமைக்கப்பட்டன.

நகரின் தெருக்கள் வெயிலில் சூடாமல் இருக்க, தண்ணீர் தானாக தெளித்துக் கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டு இருந்தன.

பெரிய பெரிய பாய்கள் கொண்டு, வெயிலில் மக்கள் பாதிக்காதவாறு நகர வீதிகளில் நிழலுக்கு கட்டப்பட்டு இருந்தன.

ஸ்ரீ கிருஷ்ணரின் மாளிகை தனியாக, மிக பிரம்மாண்டமாக இருந்தது.

ஸ்ரீ கிருஷ்ணரின் பத்தினிகளுக்கு அதி ஆச்சர்யமாக 60,000 மாளிகைகள் கட்டப்பட்டு இருந்தன.

நகரம் முழுவதும் பொன்னால், ரத்தினங்களால் ஜொலித்தது.
நகரம் தோட்டம், ஓடை, பறவைகள் என்று இயற்கை வளத்துடன் நிறைந்து இருந்தது.

ஒரு சமயம், அசுரன் ஒருவன் தேவர்களையும் அடக்கி, இவர்கள் யாராலும் வெல்ல முடியாதபடி வரம்பெற்று, பூமியில் பிறந்து அட்டகாசம் செய்து வந்தான்.
இவன் ப்ரக்ஜ்யோதிஸம் என்ற தேசத்தில் இருந்து கொண்டு அசுரர் குலத்தை மனித அவதாரம் செய்து பெரும் அட்டகாசம் செய்து வந்தான்.

ப்ரக்ஜ்யோதிஸம் என்ற தேசம் இன்றைய 'அஸ்ஸாம்' தேசம்.

ஸ்ரீ கிருஷ்ணரின் உதவியை சொர்க்கத்தில் உள்ள தேவர்கள் வந்து நாட, நரகாசுரனை அழிக்க துவாரகையில் இருந்து ப்ரக்ஜ்யோதிஸம் சென்றார்.

இந்த சமயத்தில், சேடி தேச (மத்யபிரதேச) அரசன் சிசுபாலன், தன் படையுடன் துவாரகை சென்று, துவாரகை நகரை தீ வைத்து கொளுத்தினான்.

நரகாசுரனை கொன்று திரும்பிய ஸ்ரீ கிருஷ்ணர், சிசுபாலனின் இந்த குற்றத்தையும் பொறுத்தார்.


நரகாசுரனின் வேண்டுதல் ஏற்று, அவன் இறந்த நாள், அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்ட பட்டதால், தேவர்களும் மகிழ்ந்ததால், அந்த நாள், தீபாவளி என்று இன்றுவரை கொண்டாடப்படுகிறது.

விதர்ப தேசத்தில் (மகாராஷ்டிரா) ருக்மிணி வளர்ந்து வந்தாள். 
ருக்மிணி, குழந்தை முதல் இன்று துவாரகை வரை ஸ்ரீ கிருஷ்ணர் என்ன செய்தார், எப்படி இருப்பார் என்று, அவரைப்பற்றி அறிந்து இருந்தாள்.

'மணந்தால், இவரை தான் மணக்க வேண்டும்' என்று நினைத்தாள். ருக்மிணியின் தந்தை சம்மதித்தார்.

ருக்மிணியின் சகோதரன் பெயர் 'ருக்மி'.
இவன், தன் தங்கையை சேடி அரசன் சிசுபாலனுக்கு கொடுப்பது என்று முடிவு கட்டி, திருமணத்திற்கும் ஏற்பாடு செய்தான்.

மனம் வெதும்பிய ருக்மினி, ஸ்ரீ கிருஷ்ணருக்கு கடிதம் ஒன்றை ஒரு யோகியிடம் கொடுத்து, 'எப்படியாவது வந்து, தன்னை ஸ்ரீ கிருஷ்ணர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்று எழுதி அனுப்பினாள்.

ஸ்ரீ கிருஷ்ணர், விதர்ப தேசம் வந்து, ஜராசந்தன், ருக்மி போன்றோர் பார்க்க, ருக்மிணியை தூக்கி சென்றார்.

ருக்மி கோபத்துடன் ஸ்ரீ கிருஷ்ணரை துரத்த, சண்டையில் தோற்றான் ருக்மி.

இவனை கொல்வதா? என்று நினைத்த ஸ்ரீ கிருஷ்ணர், ருக்மிணியின் அண்ணன் என்பதால், உயிரோடு விட தீர்மானித்தார்.

ருக்மிணிக்கும், ஸ்ரீ கிருஷ்ணருக்கும் வெகு விமரிசையாக திருமணம் துவாரகையில் நடந்தது.

மஹா பாரத சமயத்தில், 13 வருடம் பாண்டவர்கள் நாட்டை விட்டு வனவாசம் இருந்த போது, இந்த தேசங்களில் சில காலம் இருந்தனர்.

'துர்வாசர்' இந்த குஜராத் தேசத்தில் பல வருடங்கள் இருந்தார்.
இந்த சமயத்தில், பாண்டவர்களை பார்க்க வந்தார்.
ஸ்ரீ கிருஷ்ணரின் அணுகிரஹத்தினால், இவரால் வர இருந்த இடையுறை சமாளித்தனர்.

வனவாச சமயத்தில், 13 வருடமும், பாண்டவர்களின் பணியாளர்கள் துவாரகையில் தங்கி இருந்தனர்.

ஸ்ரீ கிருஷ்ணர், பலராமர் தன் அவதாரத்தை முடித்த பின், துவாரகை தேசத்தை கடல் உள்வாங்கிக் கொண்டது.

அர்ஜுனன் தன் இறுதி யாத்திரையாக புறப்பட்ட போது, ஸ்ரீ கிருஷ்ணர் இருந்த துவாரகை கடலில் மூழ்கி இருக்கும் இடத்தை பார்த்து விட்டு, இமாலய பர்வதம் நோக்கி புறப்பட்டார்.


ஸ்யமந்தக மணி, ஸ்ரீ கிருஷ்ணர் சத்யபாமாவை மணம் செய்து கொண்ட சரித்திரம் தெரிந்து கொள்ள... Click  படிக்கவும்

மகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka

மகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka




"கர்நாடக தேசம்", "கிஷ்கிந்த தேசம்" (Hampi) , "மகிஷ தேசம்" (Mysuru) ஆகிய தேசங்கள், இன்று "கர்நாடகா" என்று அழைக்கப்படுகிறது.
ராமாயண காலத்தில், ஸ்ரீ ராமர் கால் பட்ட இடம் இந்த கர்நாடகா தேசம். சபரியையும், பின் கிஷ்கிந்தை என்ற ஹம்பி நகரில், ஹனுமனையும், சுக்ரீவனையும் இங்கு தான் கண்டார்.
நாகரீகம் அறியாத, காட்டுவாசி போல வாழும் "சபரி" என்பவள், ஒரு நாள் மதங்க முனிவரை "பம்பா நதி என்ற துங்கபத்ரா நதி" அருகே கண்டாள்.

அவரையே தன் குருவாக ஏற்று, பார்த்த நாளில் இருந்து அவருக்கு சேவை செய்ய ஆரம்பித்தாள். 
அவர் ஆசிரமத்தை கூட்டி பெருக்குவது முதல் பூ, பழம் கொண்டு வந்து பூஜைக்கு கொடுப்பது வரை விடாது செய்து வந்தாள்.

ஒரு நாள், மதங்க முனிவர், தான் இந்த உலகத்தை விட்டு செல்லப்போவதாக சொல்லி, தன் சிஷ்யர்களை கூப்பிட்டு, 
யார் யாருக்கு என்ன வரம் வேண்டுமோ அதை தன் தவ வலிமையால் அனுக்கிரகம் செய்து கொண்டிருந்தார்.





சபரியை பார்த்து, 'உனக்கு என்ன வேண்டும்?' என்றார்.
எதை கேட்பது? என்று அறியாதவள், தன்னை விட்டு குரு செல்ல போகிறாரே என்ற கவலையில் அழுதாள்.

இவளின் உண்மையான குரு பக்தியை கண்டு மனம் குளிர்ந்த மதங்கர், "உன்னை பார்க்க அந்த பரமாத்மா ஸ்ரீ ராமராக வருவார். அவரை தரிசித்த பின், நீயும் பரலோகம் வந்து, என்னை அங்கு தரிசிக்கலாம்" என்று அனுக்கிரகம் செய்தார்.

அன்று முதல், காலை எழுந்து ஆசிரமத்தை கூட்டி பெருக்கி, கோலம் போட்டு, காய் கனிகளை பறித்து ஸ்ரீ ராமருக்காக காத்து இருப்பாள்.

இப்படியே பல வருடங்கள் ஆகி, கிழவி ஆகி விட்டாள் சபரி. 
இருந்தும் நம்பிக்கை இழக்கவில்லை. 
குரு வாக்கியத்தை சத்தியம் என்று திடமாக நம்பினால். உண்மையான சிஷ்யன் இப்படி தானே இருப்பான். 
பூ பழம் பறிப்பதை ஒரு நாளும் நம்பிக்கை இழந்து நிறுத்தவில்லை.





ஒரு நாள், ஸ்ரீ ராமரும், லக்ஷ்மணரும் சேர்ந்து சபரியை பார்க்க, அவள் ஆசிரமம் தேடி வந்தனர்.
சபரி வரவேற்று, ஸ்ரீ ராமருக்கு கால் பிடித்து விட்டு, அன்று பறித்து வைத்திருந்த பழங்கள் சாப்பிட கொடுத்தாள். லக்ஷ்மணருக்கும் கொடுத்தாள்.
யாரிடமும் கை நீட்டி வாங்கி பழக்கமில்லாத ஸ்ரீ ராமர், சபரியின் அன்பில் தன்னை மறந்தார். 
அவள் கொடுக்கும் பழங்களை கை நீட்டி வாங்கி சுவைத்தார். 
ஸ்ரீ ராமர் கண் முன்னே, தன் தேகத்தை யோகத்தினால் பஸ்பமாக்கி, ஜ்யோதி ரூபமாக, தன் குருவை அடைந்தாள் சபரி
கர்நாடக தேசத்தில் நடந்த சரித்திரம்.

மஹாபாரத சமயத்தில், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்காக, "சகாதேவன்" திக்விஜயம் செய்தார்.

கர்நாடக தேச அரசர்கள், சகாதேவன் பெயர் சொல்லி வந்த அவர் படைத்தலைவனுக்கே பயந்து, தோல்வியை ஒப்புக்கொண்டனர். 



ராஜசுய யாகத்திற்கு பல சன்மானங்கள் வழங்கினர்.
சகாதேவன் கிஷ்கிந்தை தேசத்தில் 7 நாள் கடும் போர் புரிந்தார். 
இறுதியில், கிஷ்கிந்தை தேச அரசர்கள் (Hampi) சகாதேவனின் போர் திறனை கண்டு ஆச்சர்யப்பட்டனர். 
இறுதியில், மகிழ்ச்சியுடன் முத்தும், பொன்னும் யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்கு அளித்தனர்.
மகிஷ தேசம் (Mysuru) ப்ராம்மணர்கள் இல்லாத தேசமாக இருந்தது.

கர்ணன், இந்த தேசத்தில் உள்ளவர்களை "கலாச்சாரம் இல்லாதவர்கள், வாலிகர்கள்" என்றான்.

க்ஷத்ரியர்களாக இருந்த இவர்கள் சூத்ரனை போல வேலை செய்ய ஆரம்பித்ததால், கலாச்சாரத்தை இழந்தவர்கள் என்று இகழ்ந்தான்.

மகிஷ தேசம் என்பது, இன்று மைசூர் என்று அழைக்கப்படுகிறது.

மஹாபாரத சமயத்தில், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்காக, அர்ஜுனனும் திக்விஜயம் செய்தார்.





மகிஷ தேச அரசர்களை அர்ஜுனன் போரில் தோற்கடித்தான். 
இதை தொடர்ந்து, குஜராத்தில் உள்ள சௌராஷ்டிர தேசம் நோக்கி திக்விஜயம் செய்தார்.

மஹாபாரத போர் முடிந்த பின்னர், யுதிஷ்டிரர் அஸ்வமேத யாகம் செய்து பாரத தேச சக்கரவர்த்தி ஆவதற்கு, மீண்டும் அர்ஜுனன் இந்த கர்நாடக தேசம் திக்விஜயம் செய்து அனைத்தையும் கைப்பற்றினார்.

பாண்டவர்களின் சொத்தாக ஆனது இந்த தேசம்