Followers

Search Here...

Saturday 4 January 2020

சோகம் என்றால் என்ன? அத்வைத உபதேசம் என்ன சொல்கிறது? விஷிஷ்டாத்வைத உபதேசம் என்ன சொல்கிறது ? தெரிந்து கொள்வோமே!!

வேதம் ஒரு இடத்தில் "பரமாத்மா வேறல்ல, ஜீவாத்மா வேறல்ல" என்று "அத்வைதமாக" சொல்கிறது.

இன்னொரு இடத்தில் "ஜீவாத்மாக்கள் மோக்ஷம் அடைய, பரமாத்மா நாராயணனை துதிக்க வேண்டும்" என்ற பிரித்து "அத்வைதமாக" சொல்கிறது..




வேதம் "அத்வைதம் மட்டுமே சொல்கிறது என்று த்வைதத்தை புறக்கணிப்பது, முழுமையான வேதத்தின் அபிப்பிராயமாக இருக்க முடியாது".

அதே போல,
வேதம் "த்வைதம் மட்டுமே சொல்கிறது என்று அத்வைதத்தை புறக்கணிப்பது, முழுமையான வேதத்தின் அபிப்பிராயமாக இருக்க முடியாது".


"அத்வைதத்தில் ஒளிந்து உள்ள விசேஷ அர்த்தமான த்வைதத்தை சேர்த்து" சொல்வதே "விஷிஷ்டாத்வைதம்".
வேதத்தின் முழுமையான நோக்கத்தை சொல்வதே "விஷிஷ்டாத்வைதம்" (தெரிந்து கொள்ள படிக்கவும்).

ஜீவனாக பிறந்த நாம்,
கிருஷ்ண பக்தி செய்து (த்வைதம்) ,
கிருஷ்ண க்ருபைக்கு பாத்திரமாகி,
அவர் நம்மை மீண்டும் ஜீவனாக பிறக்க செய்யாமல், தன்னோடு சேர்த்து கொண்டு விட்டால் அதுவே மோக்ஷம் (அத்வைத நிலை).
----- விஷிஷ்டாத்வைதம்.

ஒரு சிஷ்யன் "தனக்கு ஒரு ஆத்ம குரு வேண்டும்" என்று ஆசைப்பட்டான்.
ஒரு நாள், ஒரு அத்வைத சந்யாசியை தரிசிக்க நேர்ந்தது.

அவரிடம் "தனக்கு உபதேசம் செய்யுமாறு" வேண்டினான்.
அவர் "ஸோகம்" (சோகம்) என்று உபதேசித்து, "இதையே எப்பொழுதும் சொல்லி கொண்டே இரு" என்று உபதேசித்தார்.

ஸோகம் (ஸ: அந்த: ஆத்மா ஆஹம்) என்றால், "உள்ளிருக்கும் ஆத்மாவே நான்" என்று அர்த்தம்.
மோக்ஷம் அடைந்த அத்வைத நிலை அது.

இதை புரிந்து கொண்டு ஜபம் செய்ய செய்ய, "உடல் நானல்ல, பிராணன் நான் அல்ல, மனசு நான் அல்ல, புத்தி நான் அல்ல... தனித்த பொருளாக உள்ளிருக்கும் ஆத்மாவே நான்" என்ற அனுபவம் ஏற்படும்.
இது ஒரு அத்வைத நிலை.

இப்படியே "ஸோகம்.. ஸோகம்.." என்று சொல்லிக்கொண்டு இருந்தான் இந்த சிஷ்யன்.




குருவின் கருணையால் "ஆத்மா தான் நான்" என்ற புரிதல் ஏற்பட்டாலும், மனதில் ஏனோ திருப்தி ஏற்படவில்லை அவனுக்கு.
ஏதோ ஒரு குறையை உணர்ந்தான்.

ஒரு சமயம், விஷிஷ்டாத்வைத சந்யாசியை கண்டான்.
அவரை பார்த்ததும் அவரிடமும் உபதேசம் பெறலாம் என்று ஆசைப்பட்டான்.

அந்த வைஷ்ணவரிடம் சென்று, "தனக்கு 'ஸோகம்' என்று ஏற்கனவே ஒரு குரு உபதேசம் செய்து இருக்கிறார்.. அதை தான் இன்று வரை ஜபித்து கொண்டு இருக்கிறேன்..
உங்களிடமும் உபதேசம் பெற ஆசைப்படுகிறேன்' என்றான்.
வைஷ்ணவர்,
"உன்னுடைய முதல் குரு உபதேசித்த மந்திரம் சரியானது தான்.. ஆனால் ஒரு அக்ஷரம் விட்டு போய் விட்டது..
அதனால் தான் உனக்கு திருப்தி ஏற்படாமல் இருக்கிறது..
'ஸோகம்' என்ற மந்திரத்தில், "தா" என்ற அக்ஷரத்தை முதலில் சேர்த்து "தாஸோஹம்" என்று சொல்" என்று உபதேசித்தார்.

"தாஸோகம்" என்றால், "உள்ளிருக்கும் ஆத்மா தான் நான். ஆனால் ஜீவாதமாகிய எனக்கு ஈஸ்வரன் இருக்கிறார். அந்த பரமாத்மாவின் தாஸன் நான்" என்று அர்த்தம்.

"மோக்ஷம் என்ற அத்வைத நிலையை அடைவதற்கு,
ஜீவனாக த்வைத நிலையில் இருக்கும் நாம், அந்த பரந்தாமனின் கருணையை பெற, அவருக்கு தாசனாக தொண்டு செய்யவேண்டும்"
என்று அத்வைதத்தில் சொல்லாமல் விட்ட விஷேச அர்த்தத்தை சேர்த்து கொடுத்தார் அந்த வைஷ்ணவ சந்நியாசி.

"தாஸோகம்" என்ற மந்திரத்தின் அர்த்தம் புரிந்து கொண்டு ஜபம் செய்ய செய்ய, "உடல் நானல்ல, பிராணன் நான் அல்ல, மனசு நான் அல்ல, புத்தி நான் அல்ல... தனித்த பொருளாக உள்ளிருக்கும் ஆத்மாவே நான்.
நான் ஜீவாத்மா. என்னை படைத்தவர் அந்த பரமாத்மா. எனக்கு ஆதாரமாக இருப்பவர் அந்த பரமாத்மா. நான் அவருக்கு தாஸன். அவருக்கு தொண்டு செய்வதே, என் கடமை. அவர் கருணையால் ஜீவாத்மாவாக இருக்கும் என்னை (த்வைத) மீண்டும் பிறக்க செய்யாமல் தன்னுடன் சேர்த்து (அத்வைதம்) கொள்வார்"
என்ற தெளிந்த ஞானம் ஏற்படும்.
இது அத்வைதத்தில் விசேஷ அர்த்தத்தை சேர்த்து கொண்ட "விஷிஷ்டாத்வைத" அனுபவ நிலை.




மனக் குறை நீங்கிய அந்த சிஷ்யன், "தாஸோகம்… தாஸோகம்" என்று ஜபம் செய்து கொண்டு இருந்தான்.

ஒரு சமயம், மீண்டும் தன்னுடைய முதல் குருவை பார்க்க நேர்ந்தது.
அத்வைத சந்நியாசி இவனிடம் "சோஹம் என்ற உபதேச மந்திரத்தை ஜபம் செய்கிறாயா?" என்று கேட்டார்.

"ஆம்.. சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.. அதனோடு "தா" சேர்த்து "தாஸோகம்" என்று இன்னொரு சந்நியாசி சொல்ல சொன்னார்.. அப்படியே சொல்லி கொண்டு இருக்கிறேன்" என்றான்.

அத்வைத சந்நியாசி "பரவாயில்லை... அவரும் ஒரு அக்ஷரம் விட்டு விட்டார். இப்பொழுது சொல்லிக்கொண்டு இருப்பதோடு 'ஸ' என்ற அக்ஷரத்தை சேர்த்து 'ஸதா ஸோகம்' என்று சொல்" என்று உபதேசித்தார்.

"ஸதா" என்றால், "எப்பொழுதும், எந்த நிலையிலும்" என்று அர்த்தம்.

"ஸதா சோகம்" என்றால் "எப்பொழுதும், எந்த நிலையிலும், உடல் நானல்ல, பிராணன் நான் அல்ல, மனசு நான் அல்ல, புத்தி நான் அல்ல... தனித்த பொருளாக உள்ளிருக்கும் ஆத்மாவே நான்" என்று அர்த்தம்.
இது ஒரு அத்வைத நிலை.

"ஆத்மாவே நான். ஜீவானாக பிரிந்து கிடக்கும் என்னை, அந்த பரமாத்மா சேர்த்து கொண்டால் தான், அத்வைத நிலை ஏற்படும். அவரே எனக்கு ஆதாரம். அவரே எனக்கு ஈஸ்வரன். அவரின் தாஸன் நான்" என்ற தெளிவுடன் இருந்த அந்த சிஷ்யன், இப்படி தனக்கு "ஸதா சோகம்" என்று உபதேசித்து விட்டாரே என்று, மீண்டும் வைஷ்ணவ சந்யாசியை பார்க்க சென்றான்.
விஷிஷ்டாத்வைத சந்நியாசி "பரவாயில்லை... அவரும் ஒரு அக்ஷரம் விட்டு விட்டார். இப்பொழுது சொல்லிக்கொண்டு இருப்பதோடு 'தா' என்ற அக்ஷரத்தை சேர்த்து 'தாஸ தாஸோகம்' என்று சொல். இதுவே முடிவான நிலை." என்று உபதேசித்தார்.

"தாஸ தாஸோகம்" என்றால், "உள்ளிருக்கும் ஆத்மா தான் நான். ஆனால் ஜீவாதமாகிய எனக்கு ஈஸ்வரன் இருக்கிறார். அந்த பரமாத்மாவின் தாஸனாக யார் இருக்கிறாராரோ, அவருக்கு தாஸன் நான். அவரே என் குரு. அவர் அந்த ஈஸ்வரனுக்கு அடியார். நான் அந்த அடியார்க்கு அடியான்" என்று அர்த்தம்.

"குரு வழியே செல்" என்று தீர்க்கமான முடிவை வைஷ்ணவ சந்நியாசி உபதேசம் செய்ய, அத்வைத சந்யாசியும் பிறகு மறுக்க இயலவில்லை.

இப்படியே "தாஸ தாஸோகம்.. தாஸ தாஸோகம்.." என்று சொல்லிக்கொண்டு அந்த வைஷ்ணவ சந்யாசிக்கு அடியான் என்று குருவுக்கு கீழ் படிந்த, குரு காட்டும் வழியை பின்பற்றினான் அந்த சிஷ்யன்.

குருவே நமக்கு துணை. 


Friday 3 January 2020

பாசுரம் (அர்த்தம்) - முழுசி வண்டாடிய தண் துழாயின் - திருமங்கை ஆழ்வார். காஞ்சியில் அஷ்டபுஜ பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அனைத்து படைப்புக்கும், உயிர்களுக்கும் ஆதிமூலமாக (root) இருக்கும் ஸ்ரீமந் நாராயணன் கஜேந்திரனை காக்க, எட்டு கைகளுடன், எட்டு ஆயுதங்கள் ஏந்தி வந்தார் காஞ்சிபுரத்தில்.




கஜேந்திரனை முதலையிடமிருந்து காப்பாற்ற ஒரு சக்கரமே போதும்!!
இருந்தாலும் 8 கைகளுடன் வந்து தரிசனம் கொடுத்தாரே பெருமாள்?!
உண்மையில், பெருமாள், தன் அஷ்ட மஹிஷிகளுடன் கஜேந்திரனுக்கு  தரிசனம் தரவே 8 கைகளுடன் வந்தாராம்.
"அர்ச்ச அவதாரமே பெருமாள். அர்ச்ச அவதாரமே போதும்" என்று இருந்தவர் திருமங்கை ஆழ்வார்.

அவர் காஞ்சிபுரம் வந்து அஷ்ட புஜனாய் இருக்கும் பெருமாளை கண்டதும், தானே "பரகால நாயகி" என்ற பெண்ணாகி விட்டார்.

பெருமாள் தன் 8 மஹிஷிகளுடன்,   தன் எதிரே தரிசனம் கொடுக்க,
"அடடா.. யார் இவர்? இவர் போல நாம் யாரையுமே பார்த்ததில்லையே!! ஏற்கனவே 8 மஹிஷிகளுடன் இருக்கும் இந்த பெருமாள், மங்கையான தன்னையும் கரம் பிடிக்க பார்க்கிறாரே!!"
என்று தானும் ஒரு மங்கையாகவே ஆகி, பெருமாளை பார்த்து சொக்கி போய்விட்டார்.
"பெருமாள் எப்படி அவருக்கு காட்சி கொடுக்கிறார்?" என்ற தன் அனுபவத்தை அப்படியே நமக்கும் பாசுரமாக கொடுக்கிறார்.

பாசுரம் மிகவும் அழகானது..




முழுசி வண்டாடிய தண் துழாயின்
மொய்மலர் கண்ணியும்,
மேனி அஞ்சாந்து இழுசிய கோலம் இருந்தவாறும்
எங்ஙனஞ் சொல்லுகேன்!! ஓவிநல்லார் எழுதிய தாமரை என்ன கண்ணும்
ஏந்தி எழில் ஆகமும்
தோளும் வாயும்,
அழகிய தாம் இவர் யார் கொல் என்ன
அட்ட புயகரத் தேன் என்றாரே

பெருமாள் எப்படி அவருக்கு காட்சி கொடுக்கிறார்? என்ற தன் அனுபவத்தை அப்படியே நமக்கும் கொடுக்கிறார்.

பெருமாள் கழுத்தில் துளசி மாலை இருப்பதை, முதலில் கவனித்த பரகால நாயகியாக இருக்கும் திருமங்கை ஆழ்வார், "தண் துழாய்" என்று வர்ணிக்கிறார்.

பெருமாள் அணிந்திருந்த துளசி மாலையிலிருந்து, நறுமணம் எங்கும் பரவி இருந்ததாம்.
பெருமாள் கழுத்தில் இருந்ததாலேயே துளசி துளியும் வாடாமல், பச்சைபசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சியை தந்ததால், "துழாய்" என்று மட்டும் சொல்லாமல் "தண் துழாய்" என்ற பதத்தை சொல்லி, "நல்ல தன்மையுடன் கூடிய துளசி மாலையை பெருமாள் அணிந்து இருக்கிறார்" என்று கவனிக்கிறார் ஆழ்வார்.

துளசி மாலையுடன்,
5 விதமான பூக்களை கொண்டு, கண்டு கண்டாக கட்டிய (மொய் மலர் கண்ணி) ஒரு அழகான வைஜயந்தி மாலையும் அணிந்து இருந்தாராம் பெருமாள்.
பெருமாள் அணிந்து இருந்த துளசி மாலையின் நறுமணமும், 5 வித பூக்களால் கட்டப்பட்ட வைஜயந்தி மாலையையும் பார்த்து விட்டு, தேன் குடிக்கும் ஆவலில், அந்த பூக்களின் மகரந்தத்தில் வண்டுகள் ரீங்காரமிட்டு ஆடிக்கொண்டு (முழுசி வண்டாடிய) இருப்பதை பார்த்து விட்டாளாம் இந்த பரகால நாயகி.

இந்த மாலையே இந்த நாயகியின் மனதை மயக்க,
அடுத்ததாக பெருமாள் மேனி எப்படி இருக்கிறது? என்று பார்த்தாளாம்.

கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிக்கு செல்லும் போது, சந்தனம் கொடுப்பார்கள்.
பொதுவாக நாம், சந்தனத்தை தொடுவோம், அதிகபட்சம் கொஞ்சம் நெற்றியில், கொஞ்சம் கைகளில், மார்பில் பூசி கொள்வோம்.

அஷ்ட புஜமாக இருக்கும் இந்த பெருமாளும் சந்தனம் பூசி கொண்டு இருந்தாராம்.. ஆனால் நம்மை போன்று, கொஞ்சம் நெற்றியில், கைகளில் மட்டும் பூசிக்கொண்டு இருக்க வில்லையாம்.
அங்கே இங்கே என்று நாகரீகமாக கை, நெற்றி என்று மட்டும் பூசி கொள்ளாமல், அவர் இஷ்டத்துக்கு முதுகு, கழுத்து என்று வேண்டிய இடத்திலெல்லாம் சந்தனத்தை இழுசி கொண்டு, சந்தன குழம்பு போல நறுமணத்துடன் நின்று கொண்டு, காட்சி கொடுக்க,
"மேனி அஞ்சாந்து இழுசிய கோலம் இருந்தவாறும்"
என்று வர்ணிக்கிறார்.




வெளி பொருட்களான துளசி மாலையும், வைஜயந்தி மாலையும், சந்தனமும் எப்படி இருந்தது? என்று கவனித்து வர்ணித்துக்கொண்டு இருந்த பரகால நாயகி, அவர் மேனி எப்படி இருக்கிறது? என்று சற்று கவனிக்க,
"அந்த திவ்யமான பெருமாளின் திருமேனி அழகை எப்படி சொல்வேன்?" என்று வியந்து,
"எங்ஙனஞ் சொல்லுகேன்?" என்ற சொக்கி நிற்கிறார்.

ப்ரம்மாவின் ஸ்ருஷ்டியில் படைக்கப்பட்ட நம்மையே நன்றாக கவனித்தால் ஏதாவது ஒரு சிறு குறையாவது தென்படும்.
முதுகு லேசாக கூனி இருக்கும்,
புருவங்கள் அழகாக இருக்காது,
ஒரு கண் இன்னொரு கண் போலவே இருக்காது.. இப்படி ஏதாவது ஒரு குறை ப்ரம்ம படைப்பில் இருக்குமாம்.

ஆனால், இந்த பரகால மங்கையின் முன் நின்று காட்சி கொடுக்கும் இவரை பார்த்தால், சாமுத்ரிகா லக்ஷணம் தெரிந்த ஒரு நல்ல ஓவியன் (ஓவிநல்லார் எழுதிய) இவ்வளவு நீளம் கை, இவ்வளவு நீளம் கால், விரல் என்று குறையே இல்லாமல் எழுதிய ஓவியம் போல, அமைப்பாக இருந்தாராம்.

சாமுத்ரிகா லக்ஷணம் இவரை பார்த்து தான் எழுதப்பட்டதோ என்று வியக்கும் அளவுக்கு, அப்படி ஒரு அழகுள்ள இவரின் மேனியை பார்த்து,
தாமரை போன்ற கண்களை, ஓவியத்தில் எழுதியது போல,
ஓவியத்தில் எழுதியது போல மார்பும்,
(என்ன கண்ணும், ஏந்தி எழில் ஆகமும், தோளும் வாயும்)
ஓவியத்தில் எழுதியது போல தோளும்,
ஓவியத்தில் எழுதியது போல வாயும், கொண்ட பெருமாளை கண்டு,
"இப்படி அழகாக ஒருத்தர் இருக்க முடியுமா? யார் இவர்?" என்று, பரகால நாயகி சொக்கி நின்று கேட்க,
(அழகிய தாம் இவர் யார் கொல் என்ன)
பெருமாளே தன்னை "அஷ்டபுஜன்" என்று அறிமுகப்படுத்தி கொண்டு,
(அட்ட புயகரத் தேன் என்றாரே) தன்னை ஆட்கொண்டார்
என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

காஞ்சிபுரம் சென்று அஷ்டபுஜ பெருமாளை தரிசிக்கும் போது, திருமங்கை ஆழ்வார் பாடிய இந்த பாசுரத்தை அவசியம் சேவிக்க வேண்டும்.
மேலும் பாசுரம் அர்த்தத்துடன் அறிந்து கொள்ள "கதியேல் இல்லை நின் அருள் அல்லது"