Followers

Search Here...

Friday 8 May 2020

தெய்வபக்தி நமக்கு எப்படி இருக்க வேண்டும்? அங்கோல என்ற அதிசய மரம் நமக்கு விடை சொல்கிறது !

"அங்கோல மரம்" ஒரு அற்புதமான மரம்.

"அங்கோல மரம்" என்று சம்ஸ்க்ருதத்தில் சொல்கிறோம்.
('அழிஞ்சில் மரம்' என்று மலையாளத்தில்) ('அளிசல்மரம்' என்று தமிழில்)
மற்ற மரங்களில் இருந்து வித்யாசப்படுகிறது இந்த மரம்.




அழிஞ்சில் மரத்தின் பழங்கள் கீழே உதிர்ந்தால், ஆச்சரியமாக, மீண்டும் மரத்திலே பழையபடி நகர்ந்து ஓட்டிக் கொள்ளும்.
"தெய்வபக்தி நமக்கு எப்படி இருக்க வேண்டும்?"
என்று ஆதி சங்கரர் சொல்லும் போது, இந்த மரத்தை உதாரணம் காட்டுகிறார்.

சிவானந்த லஹரியில் பக்தியை பற்றி சொல்லும் போது, இந்த மரத்தை உதாரணமாக சொல்கிறார் ஆதி சங்கரர்.

"உலகம் மாயை, உடம்பு நானல்ல" என்ற ஞானத்தை (அறிவு) கூட நாம் அறிந்து கொண்டு விடலாம்,
ஆனால், இந்த ஞானம், அனுபவத்தில் பலருக்கு திடமாக வருவதில்லை.

ஒரு வேளை சாப்பிடாமல் இருந்தாலே, பலருக்கு "உடல் வேறு, ஆத்மாவாகிய நான் வேறு" என்று உண்மை மறந்து விடும்.

கோடியில் ஒருவனுக்கு தான் இந்த ஞானம் ஸித்தி ஆகிறது.
ஆதி சங்கரர், ராமகிருஷ்ணர், ஜடபரதர் போன்றவர்களுக்கு இந்த ஞான அநுபவம் சாத்தியமாகிறது.

இந்த ஞானம் அனுபவத்தில் வரும் வரை "தெய்வபக்தியை பிடி' என்கிறார்.

தெய்வபக்தி என்றால் என்ன?
"தெய்வத்திடம் அன்பு, தெய்வம் காப்பாற்றுவார் என்ற திட நம்பிக்கையே" - தெய்வபக்தி.

"நம் தெய்வ பக்தி எப்படி இருக்க வேண்டும்?"
என்று சிவானந்த லஹரியில் பாடுகிறார்.
‘அங்கோலம் நிஜபீஜ சந்ததி' என்று "அங்கோல மரத்தை உதாரணம் காட்டி நமக்கு தெய்வபக்தி எப்படி இருக்க வேண்டும்?" என்று வழி காட்டுகிறார்.

1.
அங்கோல மரம் போல 'ஈஸ்வரன்' இருக்கிறார், அதன் பழமாக நீ இருக்க வேண்டும்.
விலகி சென்றாலும், நீயாகவே நகர்ந்து நகர்ந்து அங்கோல மரத்தில் ஒட்டிக்கொள்ளும் பழம் போல, அவரை விட்டு விலக முடியாமல் இருந்தால், அதுவே "பக்தி" என்கிறார்.

எப்படி காந்தம் எந்த பக்கம் திருப்பினாலும் வடக்கு பக்கம் தானாக திரும்புமோ, அது  போல, குடும்பம், வேலை என்று எத்தனை விதமான பொறுப்புகள் வந்தாலும், உன் மனம் ஈஸ்வரனிடமே மீண்டும் மீண்டும் திரும்பினால் - அதுவே பக்தி.
2.
காந்தமும், இரும்பு ஊசியும் போல உனக்கு ஈஸ்வரனிடம் உறவு இருக்க வேண்டும். அதுவே "பக்தி" என்கிறார்.

"ஈஸ்வரன் "காந்தம்" என்பதில் சந்தேகமில்லை. 
ஆனால், நீ மரமாக இருந்து விட கூடாது, அவர் ஈர்க்கும் இரும்பாக மாறி, அவர் அருகில் செல்" என்கிறார்.

"பகவானை அடைய அவர் சம்பந்தமான தகுதியை வளர்த்துக்கொள்" என்கிறார்.
3.
கற்புக்கரசியும் அவளது கணவனும் போல இருக்க வேண்டும். அதுவே "பக்தி" என்கிறார்.

ராவணன் "உலக ஐஸ்வர்யங்கள் கொடுக்கிறேன், பட்டத்து ராணி ஆக்குகிறேன்" என்று சொன்னாலும், தன் கணவனையே நினைத்து இருந்த கற்புக்கரசி போல "நீயும் ஈஸ்வரனையே நினைத்து கொண்டு இரு" என்கிறார்.



4.
மரமும் அதைச் சுற்றிப் பற்றும் படரும் கொடியும் போல இருக்க வேண்டும். அதுவே "பக்தி" என்கிறார்.

"அவரை சார்ந்து இருந்தால் உன் வாழ்க்கை பயணத்தை பற்றி பயப்படவேண்டாம். அவரை சார்ந்தே நீ வாழ்ந்து விடலாம் என்று உணர்ந்து 'அவருக்காக வாழ்'" என்கிறார்.
5.
ஆறுகளும் கடலும் போல இருக்க வேண்டும். அதுவே "பக்தி" என்கிறார்.
"நீ எங்கு சுற்றினாலும், முடிவில் அவரிடம் கலக்க வேண்டியவன் என்பதை மறக்காதே!!" என்கிறார். அதுவே "பக்தி" என்கிறார்.

ஈஸ்வரனிடமே மனசு லயிக்க வேண்டும்.
அதுவே பக்தி..
அந்த பக்தி நமக்கு வர வேண்டும்.

குருநாதர் துணை.
வாழ்க ஹிந்து தர்மம்.

வாழ்க ஹிந்துக்கள்.


Monday 4 May 2020

கர்ம வினை பலம் வாய்ந்ததா? மிட்டாய் வியாபாரி கதை.. படிப்போமே !

ஒரு மிட்டாய் வியாபாரி இருந்தான்.
நாள் முழுக்க அலைந்து, மிட்டாய் விற்பான்.
நல்லவன்.
அன்றன்று நடக்கும் வியாபாரத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தான்..
கஷ்டமான வாழ்க்கை. ஆனாலும் தைரியமாக நடத்தி வந்தான்.




தினமும் ஒரு சிவன் கோவில் வழியாக தான் செல்வான். 
சிவபெருமானை ஒரு நாள் கூட பக்தியுடன் பார்த்ததில்லை.
"இப்படி கஷ்டப்படுகிறேனே!!" என்று சிவபெருமானை திட்டுவானே தவிர, "சக்தியுள்ள சிவபெருமான் தன் துக்கத்தை போக்குவார்"
என்று நம்ப மாட்டான்.
தெய்வத்திடம் வெறுப்பை காட்டுவான்.

ஒரு சமயம், பார்வதிக்கு இவன் மேல் கருணை ஏற்பட்டது..
சிவபெருமானிடம் "இவனுக்கு கருணை செய்யுங்களேன்" என்று கேட்டுக்கொண்டாள்.
"என்னிடம் அவனுக்கு பக்தி இல்லையே! என் மீது வெறுப்பை உமிழ்கிறான்.
அவன் பூர்வ ஜென்மத்தில் செய்த பாப புண்ணிய கர்மாவுக்கு ஏற்ப இப்போது வாழ்க்கை அமைந்து உள்ளது..
இருந்தாலும் நீ ஆசைப்படுகிறாய் என்பதால், இவனுக்கு கருணை செய்கிறேன்"
என்றார் கருணா மூர்த்தியான சிவபெருமான்.

அவன் செல்லும் பாதையில் விலையுயர்ந்த வைர கல் பதித்த மாலை கிடக்கும் படி செய்தார்.

"தெய்வமாவது கொடுப்பதாவது... எதேச்சையாக எனக்கு கிடைத்தது.. என் அதிர்ஷ்டம்"
என்றே நினைத்து எடுத்துக்கொள்ளட்டும் என்றார் சிவபெருமான்.
பார்வதி சந்தோஷப்பட்டாள்.

அன்று வழக்கம் போல வியாபாரத்துக்கு கிளம்பினான் அந்த மிட்டாய் வியாபாரி.
அந்த வைர மாலை இருக்கும் இடத்துக்கு அருகில் வரும் போது, திடீரென்று ஒரு எண்ணம் ஏற்பட்டது...
"இப்படியே அலைகிறோமே!! வயதாகி கண் தெரியாமல் போய் விட்டால், கண் தெரியாமல் நடக்க முடியுமா?... இப்பொழுதே பழக்கி கொண்டு பார்ப்போமே!!"
என்று நினைத்து கொண்டான்.

உடனே கண்ணை மூடிக்கொண்டு நடக்க ஆரம்பிக்க, அந்த வைர மாலை இருக்கும் இடத்தை கடந்து விட்டான்.
கண் விழித்து பார்த்த அந்த வியாபாரி, மிகவும் சந்தோஷப்பட்டான்.
"ஆஹா.. கண் மூடிக்கொண்டே நடந்து விட்டோமே!!" என்ற திருப்தியுடன் சென்று விட்டான்.

இவனுக்கு பின்னால் வந்த மற்றொருவன், அவன் செய்த புண்ணியத்துக்கு பலனாக இந்த வைர மாலையை பார்த்தான். எடுத்து சென்று விட்டான்..

பார்வதி, சிவபெருமானிடம் "இப்படி செய்து விட்டானே" என்று வருத்தப்பட்டாள்.

"கர்ம வினை பலம் வாய்ந்தது. தெய்வ பக்தி இல்லாமல் இருக்கும் இவனுக்கு வலுக்கட்டாயமாக கருணை செய்ய நினைத்தாலும் கர்ம வினை ஜெயித்து விட்டது.
இவன் என்னிடம் ஒரு துளி பக்தி கொண்டிருந்தாலும், அந்த கர்ம வினையை மீறி, என் கருணை ஜெயித்து இருக்கும்"
என்றார் சிவபெருமான்.

"கர்ம வினை நம்மை தாக்க கூடாது"
என்று தான் தெய்வங்கள் ஆசைப்படுகிறது..

தெய்வத்தின் கருணை நமக்கு பலிக்க, தெய்வத்திடம் பக்தி அவசியமாகிறது..

ஆனால், தெய்வத்தை நெருங்காத எவனுக்கும், அவனவன் செய்த கர்மாவுக்கு (புண்ணியமோ, பாவ செயலோ) பலனை கொடுத்து, தெய்வங்கள் நகர்ந்து விடுவார்கள்..




"வெறுப்பு இல்லாத, அன்பையே" தெய்வம் நம்மிடம் எதிர்பார்க்கிறது..

சக்தியுள்ள தெய்வத்திடம், வெறுப்பை உமிழ்பவன், தான் செய்யும் கர்மாவுக்கு பலனை தானே அனுபவிக்கிறான்.

"தெய்வ பக்தி இல்லாதவன் பாவம் செய்யும் போது" தெய்வம் திருத்த முடியாமல் போகிறது...
"தெய்வ பக்தி இல்லாதவன் புண்ணிய காரியங்கள் செய்ய மனதில் ஆசை உண்டாக்கவும் முடியாமல்" போகிறது.

தெய்வ பக்தி இருந்தால், தெய்வ அனுக்கிரஹம் நமக்கு பலித்து விடும்.

கர்ம வினையால் ஏற்படும் துன்பங்கள், தெய்வ பலத்தால் நம்மை விட்டு விலகும்.

வாழ்க ஹிந்து தர்மம்.
ஹிந்து தர்மம் சொல்லாத தர்மங்கள் இல்லை.
ஹிந்துவாக பிறப்பதே, ஹிந்துவாக வாழ்வதே பெருமை.