Followers

Search Here...

Saturday 5 September 2020

பெற்றோர் மீது பாசமுள்ள யாவருக்கும்' சாப்பிட்ட பின் வரும் இந்த மந்திரத்தை சொல்ல ஆசை வரும். தெரிந்து கொள்வோமே.

 ஒரு தகப்பன், தன் 2 வயது பிள்ளை தட்டு நிறைய உணவை வைத்து ஆசையாக சாப்பிடுவதை பார்க்கிறான்.




ஆனால், அந்த பிள்ளை 'தகப்பன் சாப்பிட்டானா?' என்று கூட நினைக்காமல் முழு உணவையையும் சாப்பிட்டு விட்டது. 


"தன் பிள்ளை தனக்கு கொடுப்பானா?" என்று தகப்பன் உண்மையில் எதிர்பார்க்கவும் இல்லை. 


உண்மையில், தகப்பனுக்கு பிள்ளை சாப்பிட்டதை பார்த்தே திருப்தி ஏற்பட்டு விட்டது.


ஆனால், 

கடைசி சாதத்தை வாயில போட்டு கொண்ட பாசமுள்ள அந்த 2 வயது பிள்ளைக்கு, 'தன் தகப்பனுக்கு கொடுக்கவில்லையே!!' என்று திடீரென்று நினைவு வர, 

உடனே ஆசையோடு தன் வாயில் இருந்த எச்சில் உணவையே, 

தன் இடது கையால் எடுத்து, தகப்பனை பார்த்து, 

"அப்பா... நீயும் சாப்பிடு" என்று பாசத்தால் கொடுக்க, 

திருப்தி மட்டுமே கொண்டிருந்த இந்த தகப்பன், ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று, எச்சில் என்று கூட பார்க்காமல், தன் குழந்தையின் பாசத்தில் உருகி, அதை ஏற்கிறான்.


அந்த பாசத்தை நாம் ஈஸ்வரனிடம் காட்டுவதே இந்த மந்திரம்.


'அம்ருதாபிதானம் அஸி' என்று கொஞ்சம் ஜலத்தை பருகி விட்டு, 




பிறகு, கையில் மிச்சமிருக்கும் கொஞ்சம் ஜலத்தை நம் எச்சில் கையால், கட்டை விரல் வழியாக விட்டு கொண்டே இந்த மந்திரத்தை சொல்வது வழக்கம்.


இதன் அர்த்தம் இதோ:

அங்குஷ்டமாத்ர:  புருஷ அங்குஷ்டஞ்ச ஸமாச்ரித: !

ஈச: ஸர்வஸ்ய ஜகத: ப்ரபு: ப்ரீணாதி விச்வபுக் !!


உலகையே படைத்து, அதையே தனக்கு உணவாக உண்ணும் அளவுக்கு சக்தி கொண்ட அந்த பரமாத்மாவான புருஷன் (புருஷ:), கட்டைவிரல் அளவுக்கு (அங்குஷ்டமாத்ர:) எனக்காக ரூபம் எடுத்து, கட்டைவிரல் அளவுக்கு வியாபித்து கொண்டு (அங்குஷ்டஞ்ச ஸமாச்ரித:) நான் கொடுக்கும் இந்த துளி ஜலத்தை, பாசத்தோடு ஏற்க வேண்டும். 


அனைத்து உலகங்களுக்கும் அதிபதியாக (ஸர்வஸ்ய ஜகத: ப்ரபு:) இருக்கும் பரமாத்மா (ஈச:), எங்கும் வியாபித்து இருப்பவர், (விச்வபுக்) ஒரு தகப்பனை போல, அறியாபிள்ளையாகவும், பாசத்தோடும் இருக்கும் என்னை கண்டு ப்ரீதி அடையட்டும் (ப்ரீணாதி).


ஒரு இலை நிறைய சோற்றை தெய்வ சிந்தனை இல்லாமல், நம் வயிற்றுக்கே போட்டு கொண்டாலும், 

கொஞ்சம் பாசத்தோடு நம்மை படைத்த பரமாத்மாவுக்கு நம் எச்சில் கையால் கொடுத்தாலும், ஒரு தகப்பனை போல ஆனந்தம் அடைகிறார் என்பதை நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும்.


'பெற்றோர் மீது பாசமுள்ள யாவருக்கும்' சாப்பிட்ட பின் வரும் இந்த மந்திரத்தை சொல்ல ஆசை வரும்.

சீதை மருமகளாக எப்படி இருக்கிறாள்? என்று பாருங்கள்... மாமியார் மருமகள் உறவு. சீதா தேவி காட்டுகிறாள்.

கீழ்த்தரமான ராவணன் "ராமர் இறந்து விட்டதாக" சீதையிடம் இரண்டு இடத்தில் சொல்கிறான்.
'அனாதையாகி போன சீதை தன்னை மணக்க வேண்டும்" என்று அழைத்தும் பார்த்தான்.

தாளாத சீதை பலவாறு புலம்புகிறாள். 



'ஐயோ! நான் விதவையாகி விட்டேனே!
என்று கூட புலம்புகிறாள். 

தான் படும் இந்த வேதனை நிலையிலும், ராமபிரானை பெற்ற மாதா கோசலையின் துக்கத்தை நினைத்து சீதை அழுகிறாள்.

'மாமியார் துக்கப்படுவாளே! அவள் மனம் வாடுமே
என்று அந்த துக்கத்திலும் நினைக்கிறாள் உத்தமியான சீதை.

1.
ராமபிரான் கடலை கடந்து, சுவேல மலை அருகில், வானர படைகளுடன் வந்து விட்டார் என்றதும், 'எப்படியாவது சீதையை சம்மதிக்க வைக்க வேண்டும்' என்று நினைத்தான். 

'வித்யுஜிஹ்வா' என்ற மாயாவியை அழைத்து, மாயாரூபமான வெட்டப்பட்ட  ராமபிரான் தலையையும், அவர் வைத்து இருந்த வில்லையும் உருவாக்க சொன்னான்.
வெட்டப்பட்ட மாயா ராமபிரான் தலையை காட்டி, 
"கலங்கி இருக்கும் சீதா, இனி நீ என்னுடைய மனைவியாக ஆக போகிறாய்.
(வ்யசனே ஆத்மன: சீதே மம பார்யா பவிஷ்யசி - வால்மீகி ராமாயணம்)

சொல்கிறேன் கேள்! உன் கணவன் ராமன் கொடூரமாக கொல்லப்பட்டு விட்டான்.
(ஸ்ருணு பர்த்ரு வதம் சீதே கோரம் வ்ருத்ர வதம் யதா! - வால்மீகி ராமாயணம்)" 
என்று பேசி அவளை சம்மதிக்க முயற்சித்தான்...

அப்போது புலம்பி அழும் சீதா தேவி, அந்த நிலையிலும் கூட, தன் மாமியாரை நினைத்து அழுகிறாள்,
"என்னுடைய சோகத்திலிருந்து இனி என்னை மரணம் மட்டுமே மீட்க முடியும்..



ஐயோ! கன்றை இழந்த தாய் பசு போல, என் மாமியார் கௌசல்யா தவிப்பாளே!
(சா ஸ்வஸ்ரூர் மம கௌசல்யா த்வயா புத்ரேன ராகவ! வத்ஸேன் ஏவ யதா தேனுர் விவத்ஸா வத்சலா க்ருதா!! - வால்மீகி ராமாயணம்)
என்று அழுகிறாள்.

சீதையின் மென்மையான குணம் இங்கு நமக்கு தெரிகிறது.

2.
வானர சேனைக்கும், ராக்ஷஸர்களுக்கும் கடுமையான யுத்தம் இரவு பகலாக ஓய்வில்லாமல் நடந்து கொண்டிருந்தது.
இந்திரஜித் போர் புரிய வந்தான்.

இவனை அம்பு மழைகளால் சிதறடித்தார் ராமபிரான்.

மாய போர் புரியும் இந்திரஜித் தன்னை மறைத்து கொண்டு, நாக அஸ்திரத்தை ஏவி, ராமபிரானையும், லக்ஷ்மணரையும் கீழே சாய்த்தான்.

விழுந்த இவர்கள் மீது பல அம்புகளை ஏவினான். 
ரத்த வெள்ளத்தில் கிடந்த ராம லக்ஷ்மணரை பார்த்து, ஹனுமான், சுக்ரீவன், நீலன், மைந்தன், த்விவிதன், சுசேனன், குமுதன், அங்கதன் சூழ்ந்தனர்.
வானர சேனைகள் கண் கலங்கி அழ ஆரம்பித்தனர்.

இப்படி அழுது கொண்டிருந்த வானரர்களை மறைந்து இருந்து பார்த்து கொண்டிருந்த இந்திரஜித், 
இந்த வானரர்களையும் கொன்று விடும் எண்ணத்தில், 
ஒன்பது முறை அம்புகளை 'நீலன்' மீது ஏவினான்.
ஆறு முறை 'மைந்தன், த்விவிதன்' மீது ஏவினான்.
பத்து முறை 'ஹனுமான்' மீது ஏவினான்.
இரண்டு இரண்டு முறை, 'ஜாம்பவான், கவாக்சன், சரபன்' மீது ஏவினான்.
'அங்கதன்' மீது கணக்கில்லா அம்புகளை ஏவினான்.
'எங்கிருந்து அம்புகள் வருகிறது?' 
என்று தெரியாமல் வானரர்கள் நிலை குலைய, 
அட்டகாச சிரிப்புடன், வெகு நேரமாக மூச்சு பேச்சு இல்லாமல் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் 'ராம லக்ஷ்மணர்கள் இறந்து விட்டார்கள்' என்று தீர்மானித்து, இலங்கை நகரத்துக்குள் சென்று, வெற்றி செய்தியை ராவணனிடம் சொன்னான்.

பெரும் மகிழ்ச்சி அடைந்த ராவணன் தன் மகனை உச்சி முகர்ந்து பாராட்டினான்.

பிறகு, மகனை அனுப்பி விட்டு, அசோக வனத்தில் இருக்கும் ராக்ஷஸிகளை அழைத்தான்.



த்ரிஜடை தலைமையில் அனைவரும் வர, ராவணன் அவர்களை பார்த்து,
"இந்திரஜித்தால் ராம லக்ஷ்மண இருவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று சீதையிடம் சொல். 

அவளை புஷ்பக விமானத்தில் ஏற்றி கொண்டு, ராமனும், லக்ஷ்மணனும் விழுந்து கிடக்கும் இடத்தை காட்டு.

என்னை லட்சியம் செய்யாமல் இருக்கும் சீதை, போர் களத்தில் விழுந்து கிடக்கும் இவர்கள் சடலத்தை பார்க்கட்டும்.
இதை பார்த்த பிறகாவது, சந்தேகமில்லாமல், பயமில்லாமல் நகைகளை அணிந்து அலங்காரம் செய்து கொண்டு என்னை மணக்க தயாராகட்டும்.

மரண காலத்தில் கட்டப்பட்டு கிடக்கும் ராமனையும், லக்ஷ்மணனையும், அகன்ற கண்கள் உடைய சீதை (விசாலக்ஷி) பார்த்து, தன் நம்பிக்கையை இழக்கட்டும். 

இனி யாரும் இவளுக்கு துணை இல்லை என்கிற நிலையில், இவள் என்னிடம் சரண் அடைவாள்"
என்றான்.

ராவணன் சொன்னதை ஏற்று, ராக்ஷஸிகள் சீதையை புஷ்பக விமானத்தில் ஏற்றி கொண்டு, ராமர், லக்ஷ்மணர் விழுந்து கிடக்கும் இடத்தை அடைந்தனர்.

அசைவில்லாமல் கிடக்கும் இவர்களை சூழ்ந்து கொண்டு, வானரர்கள், விபீஷணன் சோகத்தில் இருப்பதை பார்த்து விட்டு, சீதை மயங்கி விழுந்தாள்.

சிறிது நேரத்தில் விழித்த சீதை, பலவாறு புலம்புகிறாள்.

அந்த சமயத்தில் கூட, தன் மாமியாரை நினைத்து அழுகிறாள்,
"காலத்தை யாராலும் வெல்ல முடியாது என்று ஆகிவிட்டதே! வீழ்த்தவே முடியாத என் ராகவனும், அவர் தம்பி லக்ஷ்மணன் கூட போர்க்களத்தில் வீழ்ந்து விட்டார்களே!

ஐயோ! ராகவனும், அவர் தம்பி லக்ஷ்மணனும் வீழ்ந்த சோகத்தை காட்டிலும், 
எப்பொழுதும் தெய்வ சிந்தனையுடன் விரதம் இருக்கும் என் மாமியாரை (கௌசல்யா) நினைத்து என் மனம் வருந்துகிறதே!!"
(ந ஸோசாமி ததா ராமம் லக்ஷ்மணம் ச மஹாபலம்! ந ஆத்மானம் ஜனனீம் வாபி யதா ஸ்வஸ்ரூம் தபஸ்வினீம்!! - வால்மீகி ராமாயணம்)
இந்த வனவாசம் என்ற விரதம் எப்பொழுது முடியுமோ என்று அனுதினமும் நினைத்து கொண்டு இருப்பாளே!

எப்பொழுது நான் ராமனை, லக்ஷ்மணனை, சீதையை பார்ப்பேன்? என்று எங்கள் வருகைக்காக காத்து கிடப்பாளே"
(சா அனுசிந்தயேத் நித்யம் சமாப்த வ்ரதம் ஆகதம்! கதா த்ரஷ்யாமி சீதாம் ச லக்ஷ்மணம் ச ச ராகவம்!! - வால்மீகி ராமாயணம்)
என்று அழ ஆரம்பிக்கிறாள்.

த்ரிஜடை "கவலைப்படாதே! வானர்களை முகத்தில் இன்னும் உற்சாகமும், கோபமும் அடங்கவில்லை. 
உன் கணவன் உயிர் பிரிந்த பின், இப்படி இவர்கள் இருக்க வாய்ப்பில்லை. 
மேலும் திவ்யமான இந்த புஷ்பக விமானம் கணவனை இழந்த பெண்களை சுமந்து பறக்காது..." என்று பல காரணங்களை காட்டி, சீதையை சமாதானம் செய்கிறாள். 

வால்மீகி ராமாயணம் அறிவோம்.

மாமியார் துக்கப்படுவாளே! என்று நினைக்கும் மென்மையான சீதையை போன்ற மருமகளாக இருக்க, அனைத்து பெண்களும் ஆசைப்பட வேண்டும்.

வால்மீகி "வேடுவனாக" இருந்தவர்.
அவர் அவதரித்த ஊர் "அன்பில்".
ராம அவதார காலம் முழுவதும் உத்திர பிரதேசம் சென்று வசித்தார்.

ராம அவதாரம் முடிந்த பிறகும், 'விபீஷணன், வால்மீகி, ஹனுமான்' பூலோகத்தில் இருந்தனர்.

ராம அவதாரம் முடிந்த பின், மீண்டும் தமிழகம் வந்து, "திருநீர்மலை" என்ற இடத்தில் ராம தியானத்தில் இருந்து, முக்தி பெற்றார்.

தமிழன் எழுதிய ராமாயணம் உலகமே படிக்கிறது. 
இது தமிழனுக்கு பெருமை.