Followers

Search Here...

Friday 7 June 2019

இன்றைய கால மக்களின் குணங்கள் பொதுவாக எப்படி உள்ளது? யாரை போல உள்ளது? நமக்கு ஆன்மீக வளர்ச்சி ஏற்பட எதை பற்றிக் கொள்ள வேண்டும்?

மஹாபாரதம், துவாபர யுகத்தில் சுமார் 3102BCக்கு முன் நடந்தது.

3102BCக்கு பின், கலியுகம் ஆரம்பித்தது.


கலியுகத்தில் பெரும்பாலான மக்களின் குணம், பழக்கவழக்கம்,
"த்ருதராஷ்டிரன் போல" இருப்பதை கவனிக்கலாம்.
த்ருதராஷ்டிரனை, 
முழுமையாக 'நல்லவன்' என்றும் சொல்ல முடியாது,
முழுமையாக 'கெட்டவன்' என்றும் சொல்ல முடியாது.

த்ருதராஷ்டிரனுக்கு,
எது நியாயம்? என்று நன்றாக தெரியும், 
ஆனாலும் சுயநலத்தினால், ஏதேதோ காரணங்கள் சொல்லிக்கொண்டு,  அநியாயத்துக்கு துணை நிற்பான்.

தர்மத்துக்கு கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பான். 
ஆனால் பாசத்துக்கு கட்டுப்பட்டு, அதர்மத்தில் நின்று கொண்டு நல்லவர்களையே எதிர்பார்ப்பான்.
பீஷ்மர், வியாசர், விதுரர் போன்ற மகாத்மாக்களிடம் பேசும் போது, நல்லவனாக தான் இருப்பான்.
"இனி அதர்மத்துக்கு துணை போக மாட்டேன்" என்று உறுதி கூறுவான்.
அடுத்த நிமிடம்,
தன் மகன் துரியோதனன் ஆசைப்பட்டான் என்றால், அதர்ம செயல்கள் செய்யவும் உறுதுணை செய்வான்.
தன் சபையிலேயே, தான் அரசனாக இருந்தும்,
தன்  மருமகள் அவமானப்படுவதை, தன் மகன் மீது இருந்த பாசத்தால் அனுமதித்தான்.
திரௌபதி 'சாபம் கொடுக்க போகிறேன்' என்றதும், தன் மகன்களுக்காக மன்னிப்பு கேட்டு, தான் நல்லவன் போல காட்டி கொண்டான்.

"த்ருதராஷ்டிரனை போன்று தான்", கலியில் பொதுவாக ஜனங்கள் பிறக்கிறார்கள்.

"துரியோதனன், கர்ணன், சிசுபாலன், கம்சன்" போன்ற சுத்தமான கெட்டவன் கூட கலியுகத்தில் கிடையாது.

"தர்மத்துக்காக, சத்தியத்துக்காக எதையும் தியாகம் செய்வேன்" என்று வாழ்ந்த பீஷ்மர், தர்ம புத்ரர் போன்ற மகாத்மாக்களை காண்பதும் அரிது.

மகாபாரதத்தில் த்ருதராஷ்டிரனை தவிர, மற்ற அனைவரும் ஒரே குணம் கொண்டவர்கள்.
"துரியோதனன்" பீமனை சிறுவனாக இருக்கும் போதே விஷம் கலந்த உணவு கொடுத்து கடலில் எரிந்து விட்டான்.
கடைசி வரை பாண்டவர்களை எதிர்த்தான்.
கடைசி வரை பகைவனாகவே வாழ்ந்தான்.

கெட்டவன் கெட்டவனாகவே உள்ளும் புறமும் வாழ்ந்தான்.
நல்லவன் நல்லவனாகவே உள்ளும் புறமும் வாழ்ந்தான்.

'த்ருதராஷ்டிரனுக்கு' மட்டும், நல்ல குணம், கெட்ட குணம் மாறி மாறி வரும்.


பொதுவாக, இவனை "இரட்டை நாக்கு' உடையவன் என்று அடையாளமாக சொல்வார்கள் பெரியோர்கள்.
இரட்டை நாக்கு பொதுவாக பாம்புக்கு தான் உண்டு.
த்ருதராஷ்டிரனை "நல்ல பாம்பு"க்கு சமமாக சொல்வார்கள் பெரியோர்கள்.

நல்ல பாம்புக்கு உள்ளுக்குள் விஷம் அதிகம்.
ஆனால் பெயர் மட்டும் "நல்ல" பாம்பு.
நல்ல பாம்பு போல,
வெளியில் பார்த்தால், மிகவும் நல்லவன் போல இருப்பான் த்ருதராஷ்டிரன்.
ஆனால் உள்ளுக்குள். பாசம், சுயநலம் போன்ற விஷம் கொண்டவன்.

'வெளியில் பார்த்தால் மிகவும் நல்லவன் போல இருக்கிறானே, இவனுக்கு புத்தி மதி சொன்னால், இவன் புரிந்து கொள்வான்' 
என்று பல முறை பீஷ்மர், விதுரர், வியாசர் போன்றவர்கள் தர்ம உபதேசங்கள் செய்வார்கள்.
அவர்கள் சொல்வதை பொறுமையாக கேட்பான்.
கேட்கும் போது தன் தவறை உணர்ந்து சில சமயம், அழ கூட செய்வான்.
"இனி சரியாக இருப்பேன், துரியோதனன் தவறை கண்டிப்பேன். பாண்டவர்களும் என் பிள்ளைகள் தான்" என்று சொல்வான்.

இவர்கள் போனவுடனேயே, தன் மகனை பற்றி நினைவு வந்து விடும்.
'தன் மகன்கள் வாழ வேண்டும் என்றால், அதற்கு பாண்டவர்கள், தன் தம்பியின் மகன்கள் செத்தாலும் பரவாயில்லை' என்றளவுக்கு குருட்டு பாசம் இவனுக்கு.

பொதுவாக தாய் தந்தைக்கு குழந்தைகள் வளர்வதை "பார்க்க பார்க்க", பாசம் வளரும். 
பாசம் சுயநலத்தை வளர்க்கும்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால்,
பிறந்ததில் இருந்தே கண் தெரியாத த்ருதராஷ்டிரன்,
தன் 100 மகன்களையும் பார்த்தது கூட இல்லை.
தன் பிள்ளைகளின் பெயரை காதால் கேட்டதற்கே இப்படி ஒரு பாசம் வைத்து இருந்தான் என்றால்,
கண்ணால் பார்த்து இருந்தால், என்ன செய்து இருப்பான் இவன்? என்று நினைத்து பார்க்க வேண்டும்.

தன் மகன் வாழ வேண்டும் என்றால்,
தன் சகோதரன் மகன்கள் 12 வருடம் காட்டில் அலைந்தால் கூட பரவாயில்லை என்று நினைத்தான்.
பாண்டவர்களை விழாவுக்கு அழைப்பது போல அழைத்து,  மாளிகையில் தங்க வைத்து, மாளிகைக்கே தீ வைத்து கொளுத்தினான் என்று தெரிந்தும், தன் மகனை பாசத்தின் காரணமாக எதிர்க்காமல், நாடு கடத்தாமல் இருந்தான்.


தன் மருமகளை தன் சபையில் வைத்து அவமானப்படுத்துகிறான் துச்சாதனன் என்று தெரிந்தும்,
அவனை பார்த்து ஒரு சொல் சொல்லவில்லை.
மகனுக்காக எந்த அதர்மத்தையும் செய்ய தயாராக இருந்தான்.

"போர் வர போகிறது, உன் 100 மகன்களும் கூண்டோடு அழிய போகிறார்கள்" என்று பரவாசுதேவன் ஸ்ரீ கிருஷ்ணரே சொல்லியும், பாசத்தின் காரணமாக, தெய்வம் எச்சரித்தும் கேட்க மறுத்தான்.
பரவாசுதேவன் ஸ்ரீ கிருஷ்ணர், தன் விஸ்வரூபத்தை காட்டியும், இதை பிறவி குருடன் த்ருதராஷ்டிரனும் பார்க்கட்டும் என்று அணுகிரஹம் செய்தும்,
அதர்மத்தை பிடித்து கொண்டு, தர்மத்தின் பக்கம் தான் தெய்வம் துணை போகும் என்று தெரிந்தும்,
குருட்டு நம்பிக்கையில் தன் 100 பிள்ளைகள் ஜெயித்து விடுவார்கள் என்று நம்பினான்.

சுய நலத்துக்காக, தன் பாசத்துக்காக, 
தெய்வமே எதிர் அணியில் இருந்தாலும், தான் ஜெயித்து விடலாம் என்று குருட்டு நம்பிக்கை கொண்டிருந்தான்.

த்ருத்ராஷ்டிரனின் சுய நலத்தாலும், குருட்டு பாசத்தாலும் "குரு வம்சமே அழிய போகிறது" என்று அறிந்த வேத வியாசர்,
இத்தனை நாள் தன்னிடமும் தர்மங்களை கேட்டானே (ஸத் சங்கம்) என்ற கருணையால்,
இவனும் 'வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லை, தர்மத்துக்காக வாழ்ந்து இருக்கலாமே' என்ற ஞானத்தையாவது இவன் அடையட்டும் என்று நினைத்தார்.
சஞ்சயனை அழைத்து போரில் நடக்கவிருக்கும் அனைத்தையும் சபையில் இருந்து கொண்டே பார்க்க ஞான திருஷ்டி கொடுத்தார்.
சஞ்சயன் மூலமாக போரில் நடக்கவிருப்பதை த்ருத்ராஷ்டிரன் கேட்கட்டும் என்று சங்கல்பித்தார்.
வியாசரின் அருளால்,
அர்ஜுனன் மட்டுமே பார்த்த விஸ்வரூபத்தை சஞ்சயனும் கண்டு, பாசத்தாலும், சுய நலத்தாலும் மயங்கி கிடக்கும்
த்ருத்ராஷ்டிரனுக்கு அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள்? (பகவத்கீதை) என்பதை கூற,
தன் பிள்ளைகள் அழிய போவது நிச்சயம், தெய்வம் பாண்டவர்கள் பக்கம் என்று அமைதி ஆனான் த்ருத்ராஷ்டிரன் .




த்ருத்ராஷ்டிரனை போன்றே நாமும் இரட்டை நாக்கு உடையவர்களாக தான் வாழ்கிறோம்.

நல்லவனாக வாழ ஆசைப்பட்டாலும், பிள்ளைகள், சுற்றத்தார், சமுதாயம் என்று ஏதேதோ சால்ஜாப்புகள் சொல்லி கொண்டு, அதர்மம் என்று தெரிந்தும் பல காரியங்கள் செய்கிறோம்.
அதர்மம் செய்தவர்களுக்கு துணையும் செய்கிறோம்.

"நல்லவனுக்காக எந்த நிலையிலும் துணை நிற்பேன்,
எனக்கு விதிக்கப்பட்ட தர்மங்களை விடவே மாட்டேன்",
என்ற உறுதி பெரும்பாலான மக்களிடம் கலியுகத்தில் காணப்படவில்லை.

நீ ஏன் உன் கடமைகளை செய்யவில்லை? 
ப்ராம்மணன் ஏன் ப்ராம்மணனாக இல்லை? 
பெண்கள் தங்கள் எல்லைகளுக்குள் இல்லை? 
ஹிந்துக்கள் நெற்றியில் ஏன் ஒரு திலகம் கூட இல்லை?
ஏன் ஹிந்துக்கள் பாசுரங்கள், திவ்ய பிரபந்தங்கள், கீதையை படிக்க வில்லை?
என்று கேள்விகளை மகான்கள் கேட்டால்,
"சமுதாயம் கெட்டு விட்டது. 
சமுதாயத்தை ஒத்து தானே போக வேண்டும் சார்" 
என்று சொல்லும் கூட்டம் இந்த கலியில் அதிகம் காணப்படுகின்றனர்.


வெகு சில மகாத்மாக்கள், இன்றும் தங்கள் கடமைகளை செய்து கொண்டு, அதர்மத்தை எதிர்த்து, தர்மத்தில் நின்று, உறுதியான முதுகெலும்புடன் வாழ்கின்றனர்.

ஆனால் பெரும்பாலானவர்கள், த்ருத்ராஷ்டிரனை போல தான் வாழ்கிறோம்..

வெளியில் பார்க்க "நல்லவன் போலவும்",
உண்மையில்,
ஹிந்து தர்மத்துக்கே கூட எதிராக செயல்கள் செய்து கொண்டும், 
கொடுக்கப்பட்ட கடமைகளையும் செய்யாமல், 
கோவிலுக்கு செல்லாமல், 
பூஜை, ஒழுக்கம் என்ற எந்த கடமையும் செய்யாமல், 
பெயரளவில் "ஹிந்து" என்று இரட்டை வேடம் போடுகிறோம்.

இப்படி உள்ளொன்று வைத்து, புறம் ஒன்று பேசும் மக்களே, எங்கும் காணப்படுகின்றனர் கலியுகத்தில்.
'சிசுபாலனை போல, கம்சனை போல, ராவணனை போல', 
உள்ளும் புறமும் உண்மையான தீயவனாக இருந்து, நல்லவர்களை தாக்கினால்,
பெருமாள் பெருமாளாகவே அவதாரம் செய்வார்.

கலியுகத்தில் சுத்தமான கெட்டவன் கூட கிடையாது.
எதிலும் போலி தனம் காணப்படும் என்று சொல்லப்படுகிறது.

த்ருத்ராஷ்டிரனை போன்ற இரட்டை நாக்கு கொண்ட நல்ல பாம்பை அடிக்க பெருமாள், பெருமாளாக வருவதில்லை.

சிசுபாலனை, கம்சனை போல, அடித்து ஒழிக்க வேண்டிய அளவுக்கு தீயவர்கள் இல்லை என்பதால்,
அவர்கள் மனதில் உள்ள அழுக்கை அகற்றி, ஞானத்தை கொடுக்க,
சாதுக்களாக, மகாத்மாவாக பெருமாள் கலியுகத்தில் அவதரிக்கிறார்.

வெளியில் நல்லவன் போல நடித்து,
மனதில் ஹிந்து தர்மத்தின் படி வாழ தெரியாமல் இருக்கும் நம் மனதை திருத்தினாலே போதும் என்பதால் தான்,
சமயத்தில் பகவானே,
மகாத்மா கிருஷ்ண சைதன்யராகவும், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சாராகவும் அவதாரம் செய்து கோடிக்கணக்கான மக்களின் மனதை நல்வழிப்படுத்தினார்.
ஆதிஷேஷனே ஸ்ரீ ராமானுஜராக, பிரகலாதனே ஸ்ரீ ராகவேந்திரராக அவதாரம் செய்து,
சூர தாஸ், கபீர் தாஸ், மீரா, துளசி தாஸ், புரந்தர தாஸ், ராம தாஸ், தியாகராஜர், ஆழ்வார்கள், நாயன்மார்கள்,  வள்ளலார் என்று ஆயிரக்கணக்கான மகான்களை பாரத தேசம் முழுவதும் அவதரிக்க செய்து, ஹிந்துக்களின் இதயத்தில் ஹிந்து தர்மத்தை பதிக்க,
பெருமாள் அணுகிரஹம் செய்தார்.
இவர்கள் எழுதிய பக்தி பாடல்கள், இன்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு வழி காட்டுகிறது.


த்ருத்ராஷ்டிரனுக்கு, பெருமாள் வியாசர் என்ற ஒரு குருவை மட்டுமே காண்பித்தார்.

நமக்கோ, பாரத தேசத்தில் எங்கு கால் வைத்தாலும் அங்கு ஒரு மகானை ஸ்ருஷ்டி செய்து,
நம்முடைய இந்த இரட்டை வாழ்க்கையை நினைவு படுத்தி,
உள்ளும் புறமும் ஹிந்துவாக வாழ தானே உதவுகிறார்.
இது போதாது என்று,
ஊருக்கு ஊர் தனக்கு ஒரு கோவிலை அமைத்து கொண்டு,
தன் தரிசனத்தை அவ்வப்போது கொடுத்து கொண்டு,
நம் மனதில் உள்ள அழுக்கை நமக்கே புரிய வைக்கிறார். அகற்றுகிறார்
"இப்படி இரட்டை வாழ்க்கை வாழ்கிறோமே"
என்று உண்மையாக "வருத்தப்படும்" மனிதர்களுக்கு,
பெருமாளே, அவன் பக்திக்கு ஏற்ற ஒரு ஆதம் குருவை காண்பித்து,
அவர் மூலமாக மேலும் ஸத் சங்கம் கிடைக்க செய்கிறார்.

கலியில், உள்ளும் புறமும் கெட்டவன் பிறப்பதில்லை என்பதால்,
கொஞ்சம் நல்லவன் கொஞ்சம் கெட்டவன் என்று பிறப்பதால்,
பெருமாள், மகான்களாக, சாதுக்களை போன்று அவதாரம் செய்கிறார்.
பெருமாளே மகாத்மாவாக அவதாரம் செய்யும் போது,
அவரையே ஆத்ம குருவாக கலியில் கிடைக்கப்பட்டவர்கள் மகா பாக்கியசாலிகள்.
"ஸ்ரீ கிருஷ்ண சைதன்யராகவும், ராமகிருஷ்ணராகவும்" பரவாசுதேவனே அவதரித்தார்.

சிவபெருமானே "விவேகானந்தராகவும்", "காஞ்சி மஹா பெரியவராகவும்", "ஆதி சங்கரராகவும்" அவதரித்தார்.

ஸத் சங்கம் கிடைத்த ஜீவன், 
மெதுவாக த்ருத்ராஷ்டிரனை போல வாழும் இரட்டை வாழ்க்கையை வெறுக்க ஆரம்பிக்கிறான்.
ஸத் சங்கம் கிடைத்த ஜீவன், 
தர்மத்துக்காக வாழ தயாராகிறான். 
பக்தி செய்ய ஆரம்பிக்கிறான்.

ஆத்ம குருவை பூரணமாக சரண் அடைந்த பக்தன், 
மோக்ஷ வாசலை நெருங்கி விடுகிறான்.

ஆத்ம குருவின் கருணையால் உள் அழுக்குகள் அழிந்து, உள்ளும் புறமும் சுத்தமானவனாக ஆன பின்,
மீண்டும் பிறவாத மோக்ஷத்தை பெருமாள் அணுகிரஹித்து விடுகிறார்.

வெளியில் நல்லவன் போலவும், 
உண்மையில் ஆசாரம் இல்லாமல் தன் இஷ்டப்படி வாழ்ந்து கொண்டும், 
இரட்டை நாக்குடன் த்ருத்ராஷ்டிரனை போல வாழும் நாம், 
த்ருத்ராஷ்டிரனை போல, 
நல்லவர்கள் சொல்வதை கடைபிடிக்காமல் போனாலும், 
அவ்வப்போது ஸத் சங்கங்களில் கலந்து கொண்டு இருந்தாலே, 
மகான்களின் கருணைக்கு ஒரு நாள் பாத்திரமாகி, குரு கடாக்ஷத்தினால் நாமும் ஒரு நாள் சித்தசுத்தி பெற்று, 
உள்ளும் புறமும் தர்மத்தில் வாழ்ந்து, கிருஷ்ண சரணத்தை அடைவோம்.

ஹிந்துவாக பிறப்பதே புண்ணியம்.

நமக்கு ஆன்மீக வளர்ச்சி ஏற்பட எதை பற்றிக் கொள்ள வேண்டும்?
இரட்டை வாழ்க்கை வாழும் நமக்கு, "ஸத் சங்கமே கதி".

நல்லோர்கள், மகான்கள், தர்ம சிந்தனை உடையவர்கள் பேசுவதை, மகான்கள் சரித்திரத்தை கேட்டு கொண்டும், 
அவர்களுக்கு நம்மால் முடிந்த தொண்டு செய்து கொண்டும் இருப்பதே "ஸத் சங்கம்".

இப்படி வாழ முயற்சி செய்ய ஆரம்பித்தாலே, 
குருவின் கருணை ஒருநாள் நம் மீதும் பட்டு, நம் அழுக்குகள் நீங்கி, இறுதியில் பகவானை அடையலாம்.

வாழ்க ஹிந்துக்கள்..

Hare Rama Hare Krishna - (Listen to Bhajan)

Sandhya Vandanam - Morning (With Meaning)


Sandhya Vandanam - Evening (With Meaning)

Sandhya Vandanam - Afternoon (With Meaning)




1 comment:

  1. How People behave today...

    இன்றைய கால மக்களின் குணங்கள் பொதுவாக எப்படி உள்ளது?
    மக்களின் குணங்கள் யாரை போல உள்ளது?
    நமக்கு ஆன்மீக வளர்ச்சி ஏற்பட எதை பற்றிக் கொள்ள வேண்டும்?

    Share it to all.

    Be proud to be Hindu which guides everyone to Spiritual progress.

    https://www.proudhindudharma.com/2019/06/How-People-Behave-today.html

    ReplyDelete