Followers

Search Here...

Thursday 12 December 2019

மாயை என்றால் என்ன? ப்ரம்மம் என்றால் என்ன? புரிந்து கொள்வோமே...

ஞானிக்கு, 'ப்ரம்மம்' மட்டுமே தெரிகிறது. ஞானி நிற்குணமாகவே எப்பொழுதும் இருக்கிறார்.


அஞானிக்கு 'மாயை' மட்டுமே தெரிகிறது. ரஜோ குணமும், தமோ குணமும், சத்வ குணமும் கொண்டு இருக்கிறான்.

'ப்ரம்மம்' என்று ஒன்று இருப்பதை ஞானியும் அறிகிறான், அஞானியும் அறிகிறான்...
ஆனால், அஞானி, ப்ரம்மத்திடம் திட சித்தம் இல்லாததால், மாயையில் சிக்குகிறான். 
ஞானி, ப்ரம்மத்திடம் திட சித்தம் கொண்டு இருக்கிறான். அதனால், மாயையில் சிக்குவதில்லை. 

புரியவில்லையா?..  
இதோ எளிதான விளக்கம்...




ப்ரம்மத்தில் இருந்து தான், உலகம் வெளிப்பட்டது..
ப்ரம்மத்தில் இருந்து தான், ப்ரம்மா வெளிப்பட்டார்..
ப்ரம்மத்தில் இருந்து தான், ரிஷிகள், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் என்று வரிசையாக படைக்கப்பட்டார்கள்..





அந்த ப்ரம்மமே "பரவாசுதேவன்",
அந்த ப்ரம்மமே "நாராயணன்"
என்று வேதம் சொல்கிறது..

அந்த ப்ரம்மமே, மாயையை உருவாக்கி, தன்னை மறைத்து (வாசு) கொண்டு ஜீவனிடம் லீலை செய்கிறது.
'தன்னை மறைத்து கொள்வதால்', அந்த ப்ரம்மத்தை 'வாசுதேவன்' என்று பெயர் சொல்லி வேதம் அழைக்கிறது.

"ஞானிக்கு, மறைந்து இருக்கும் அந்த ப்ரம்மமே தெரிவதால், மாயை தெரிவதில்லை..."
என்று வேதம் சொல்கிறது..

"அஞானிக்கு, மாயை மட்டுமே தெரிவதால், மறைந்து இருக்கும் அந்த ப்ரம்மம் தெரியாததால்,
அந்த 'மாயை கொடுக்கும் அனுபவத்துக்கு' கட்டுப்பட்டு சுக-துக்கங்களை அனுபவிக்கிறான்..."
என்று வேதம் சொல்கிறது..

அந்த 'மாயையை அஞானிக்கு காட்டுவதும்' அந்த ப்ரம்மம் தான்.

அந்த மாயை தரும் அனுபவத்தில், சுகங்களை, துக்கங்களை அனுபவிக்கும் அஞானி, அந்த ப்ரம்மத்திடம் பக்தி செய்து மாயையை விலக்க பிரார்த்தனை செய்யாதவரை, அவர் மாயையை விலக்குவதும் இல்லை, தன்னை வெளிப்படுத்தி கொள்வதும் இல்லை.
"நாராயணனை பக்தி செய்யாமல், மாயை விலகவே விலகாது"
என்று வேதம் கூறுகிறது.

மேல் சொன்னதை, நம் அனுபவத்தில் புரிந்து கொள்ள, இதோ எளிதான உதாரணம்.. 
குருவே துணை...
ஒருவன் ஒரு சினிமா தியேட்டருக்கு சென்று, அமர்ந்தான்..
அங்கு இருக்கும் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன.
அடுத்த நொடி,
பெரிய பெரிய மலைகள், பெரிய பெரிய உருவங்கள், பல விதமான ஒலிகள், ஒளிகள் அவன் முன் வந்துபோயின..

அந்த காட்சியினால், பல விதமான அனுபவங்களை (சிரிப்பு, துக்கம், கோபம், பொறாமை) தானும் அனுபவித்தான்...
காட்சிகள் மாற, காட்சிகள் மாற, 
ஒரு சமயம் உண்மையாகவே அழுதான்..
ஒரு சமயம் உண்மையாகவே சிரித்தான்..
ஒரு சமயம் உண்மையாகவே பயந்தான்...
இப்படி பல அனுபவங்கள் அவனுக்குள் உண்டானது...





திடீரென்று, காட்சிகள் மறைந்தன..
விளக்குகள் எரிந்தது..
பல வித காட்சிகளை இது வரை காட்டி, தனக்கு பல வித அனுபவங்களை கொடுத்த அந்த திரை,
இப்பொழுது தூய்மையான வெள்ளை திரையாக இருந்தது..

அவன் இதுவரை அனுபவித்த அனுபவங்கள் அனைத்துமே "பொய்" என்று உடனே உணர்ந்தான்..

வெள்ளை திரை தான் நிஜம். 
அது தான் இப்படி வித விதமான காட்சிகளை தந்தது என்று அறிந்தான்..

வெள்ளை திரை தான் நிஜம்..அது தான் என்றுமே உள்ளது.. 
என்று அறிந்தான்.

அந்த வெள்ளை திரை தான், தன்னை மறைத்து கொண்டு, 
பல வித காட்சிகளை தனக்கு தந்து, 
தன்னை அழ வைத்தது, 
தன்னை சிரிக்க வைத்தது 
என்று அறிந்தான்..

ஆபரேட்டர், காட்சிகளை நிறுத்தியதும்,
அவன் கண்களுக்கு தெரிந்த காட்சிகள் மறைந்ததும்,
மீண்டும் வெள்ளை திரையே மீண்டும் வெளிப்பட்டதை உணர்கிறான்..

"வெள்ளை திரையை "ப்ரம்மம்" என்று ஒப்பிட்டு,
அந்த ஆபரேட்டரை "ஞானி" என்று ஒப்பிட்டு,
அதில் காணப்பட்டும் பல வித காட்சிகளை, நாம் உலகத்தில் காணும் காட்சிகளாக (மாயை) ஒப்பிட்டு பார்க்கும் போது"
வேதம் சொல்லும், மேல் சொன்ன ரகசிய தத்துவங்கள்,
நமக்கும் எளிதாக புரிந்து விடுகிறது..

ஞானியான மகாத்மாக்கள், "உலகத்தில் நடக்கும் விஷயங்களை 'மாயை' என்று ஒதுக்கி விடும் சக்தி கொண்டுள்ளதால், அந்த மாயை தரும் அனுபவங்களில் அவர்கள் சிக்குவதில்லை..."
அவர்கள் மறைந்து கொண்டிருக்கும் ப்ரம்மத்தையே கவனிப்பதால், எப்பொழுதும் சமநிலையிலேயே உள்ளனர்..
ஞானியான மகாத்மாக்கள் பரபரம்ம அநுபவத்திலேயே உள்ளனர்.

அஞானிகள், "உலகத்தில் நடக்கும் விஷயங்களை 'மாயை' என்று ஒதுக்க முடியாததால், அந்த மாயை தரும் அனுபவங்களில் சிக்கி விடுகின்றனர்..

'இது வெறும் காட்சி தான், நாம் இந்த உடலை விட்டு ஒரு நாள் நிச்சயம் சென்று விடுவோம்' என்று தெரிந்தாலும், உலக மாயையை 'பொய்' என்று உதற முடியாமல் தவிக்கின்றனர்..
காட்சிகளுக்கு கட்டுப்பட்டு, பல வித அனுபவங்களை மாயை என்று தெரிந்தாலும் அனுபவிக்கின்றனர்..

இப்படி, தானே மாயையை விலக்க முடியாத அஞானிகள், ஒரு ஆத்ம ஞானியை "குருவாக" சரண் அடைந்தால், திரைக்காட்சிகளை விலக்கும் ஒரு ஆபரேட்டர் போல, குருநாதர் வந்து மாயை என்ற திரையை விலக்கி விட்டு விடுகிறார்...

குருவை சரண் அடைந்த அஞானியும், ஞானி அனுபவிக்கும் ப்ரம்மத்தை அறிந்து கொள்கிறான்.. 

இந்த உதாரணத்துடன், இப்பொழுது மீண்டும் முதலில் இருந்து படித்து பாருங்கள்...
அப்பொழுதுதான், 
ஞானி, "பிரம்மத்தை எப்படி பார்க்கிறார்?".. 
ஞானி, "எப்படி உலகில் நிகழும் பலவித காரியங்களை பார்க்கிறார்?". 
ஞானி "எப்படி சுக-துக்கங்களை சமமாக பார்க்கிறார்?" 
என்று புரிந்து கொள்ள முடியும்.

அருமையான ஹிந்து தர்மத்தை விட்டு, போலி மதங்களுக்கு போக மனம் வருமா?.. 
அற்புதங்களை தேக்கி வைத்துள்ள ஹிந்து தர்மத்துக்கு, போலி மதங்களை விட்டு, வெளிநாடுகளில் பலர் வந்து குவிகின்றனர்...
பாரதத்தில் உள்ள ஹிந்துக்கள் தங்கள் பெருமையை உணர வேண்டாமா?... சிந்திக்க வேண்டும்..

ஹிந்து தர்மத்தின் பெருமையை உலகுக்கு சொல்வோம்...

ஹிந்துக்களை போற்றுவோம்..
ஞானிகள், சந்நியாசிகள், மகாத்மாக்களை போற்றுவோம்..
இடியும் நிலையில் உள்ள கோவில்களை புதிது செய்து காப்போம்..




வாழ்க ஹிந்துக்கள்.


3 comments:

  1. மாயை என்றால் என்ன?
    ப்ரம்மம் என்றால் என்ன?
    புரிந்து கொள்வோமே...

    ஞானி,
    "எப்படி உலகில் நிகழும் பலவித காரியங்களை பார்க்கிறார்?".
    "எப்படி சுக-துக்கங்களை சமமாக பார்க்கிறார்?"

    https://www.proudhindudharma.com/2019/12/what-is-maya-brahmam.html

    ReplyDelete
  2. மாயை, ப்ரம்மம். இதனை எளிதான உதாரணம் மூலம் நாமும்
    புரிந்து கொள்ள முடியுமா?.. முடியுமே...

    ஞானி,
    "எப்படி உலகில் நிகழும் பலவித காரியங்களை பார்க்கிறார்?".
    "எப்படி சுக-துக்கங்களை சமமாக பார்க்கிறார்?"

    தெரிந்து கொள்வோமே...

    https://www.proudhindudharma.com/2019/12/what-is-maya-brahmam.html

    ReplyDelete