Followers

Search Here...

Monday 3 February 2020

பாசுரம் (அர்த்தம்) - எம்மனா! என் குல தெய்வமே! என்னுடைய நாயகனே! - பெரியாழ்வார் திருப்பதி பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பாசுரம் (அர்த்தம்) : திருப்பதி பெருமாள்

எம்மனா!!
என் குல தெய்வமே!!
என்னுடைய நாயகனே!!
நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை
இவ்வுலகினில் யார் பெறுவார்?
-- திருமொழி (பெரியாழ்வார்)




பெரியாழ்வார், திருமலையில் உள்ள ஸ்ரீனிவாசபெருமாளை 3 அழகான பெயர்கள் சொல்லி கூப்பிடுகிறார்...
முதலில்,
  • "எம்மனா!!" என்று கூப்பிடுகிறார்.
பிறகு,
  • "என் குலதெய்வமே!!" என்று கூப்பிடுகிறார்.
பிறகு
  • "என்னுடைய நாயகனே!!" என்று உரிமையுடன் கூப்பிடுகிறார்.

இந்த 3 நாமங்களின் உள் அர்த்தம் தெரியாமல் போனாலும், இந்த சொற்களே இனிக்கிறது...

அர்த்தம் தெரிந்து கொண்டால், தினமும் இந்த 3 நாமத்தை திரும்ப திரும்ப சொல்ல ஆசை வந்து விடும் நமக்கு.
'பெரியவாச்சான் பிள்ளை (உபேயம், உபாயம், பர தெய்வமாக),
ஆளவந்தார் (ஞான விரோதி, ஆஸ்ரய விரோதி, மோக்ஷ விரோதி), 
உடையவர் ஸ்ரீராமானுஜர் (தேக அபிமானம் கழிந்து, அன்ய ஷேசத்துவம் கழிந்து, ஸ்வஸ் ஸ்தாதந்திரியமும் கழிந்து)
போன்ற ஆச்சார்யர்கள் 'இந்த மூன்று சொற்களின் (எம்மனா, என் குலதெய்வமே, என்னுடைய நாயகனே) அர்த்தத்தை பலவாறு ரசிக்கிறார்கள்' என்றும் பார்க்கிறோம்.

மரணத்தை ஒருவன் பார்த்தாலேயே "உடல் வேறு ஆத்மா வேறு" என்ற ஞானம் (அறிவு) கொஞ்சம் பகுத்தறிவு உள்ளவனுக்கும் வந்து விடும்.
ஆதலால்,
"உடல் வேறு ஆத்மா வேறு" என்று நினைப்பது மட்டுமே உண்மையான ஞானம் என்று நினைக்கக்கூடாது.. அது மட்டுமே ஞானம் இல்லை.

"நான் ஜீவன் (ஆத்மா)! நான் பகவானுடைய தாஸன்!"
என்று நினைப்பதே 'உண்மையான ஞானம்' என்கிறார்கள் நம் ஆச்சார்யர்கள்.

"உடல் நானில்லை, ஜீவனே நான். ஜீவனாகிய நான் ஒரு தனித்த பொருள்" என்று பகவானை விலக்கி விட்டு,
"தான் ஆத்மா, தான் சுதந்திரமானவன்" என்று நினைத்து கொள்வதே உண்மையான ஞானத்துக்கு விரோதம் தான்.
இப்படி நினைப்பதே "ஞான விரோதம்" என்கிறார்கள் நம் ஆச்சாரியர்கள். (அத்வைதம்)

(அத்வைதம் என்ன சொல்கிறது? விஷிஸ்டாத்வைதம் என்ன சொல்கிறது?) மேலும் அறிய இங்கே படிக்கவும்.

"எம்மனா" (எம்பெருமான்) என்ற சொல்லுக்கு
"உடல் நானில்லை, ஜீவனே (ஆத்மா) நான். ஜீவனாகிய நான் ஒரு தனித்த பொருள் இல்லை. நான் சுதந்திரமானவன் இல்லை. நான் பகவானின் தாஸன்"
என்று அர்த்தம் காட்டுகிறார்கள், நம் ஆச்சாரியர்கள். (விசேஷ அத்வைதம்)

ஆதலால்,
"எம்மனா" (எம்பெருமான்) என்று சொல்லும் போதே,
நமக்கு "ஞான விரோதமான அத்வைத புத்தி ஒழிந்து விடும்" என்கிறார்.




அது போல,
"என் குலதெய்வமே" என்று சொல்லும்போதே,
நமக்கு "ஆஸ்ரய விரோதமான புத்தி ஒழிந்து விடும். பெருமாளை ஆஸ்ரயிக்க வேண்டும் என்ற புத்தி ஏற்படும்" என்கிறார்.
அது போல,
"என்னுடைய நாயகனே" என்று சொல்லும்போதே,
நமக்கு "மோக்ஷ விரோதமான புத்தி ஒழிந்து விடும். வெறும் சுதந்திரம் (விடுதலை) மட்டும் பெறாமல், வைகுண்டம் (வீடு) என்ற நம் சொந்த வீட்டுக்கு (மோக்ஷம்) போக வேண்டும் என்ற புத்தி ஏற்படும்" என்கிறார்.




மேலும்
நாம் இந்த பிறவியில் அடைய வேண்டியது (உபேயம்) எது?
(What should we achieve?)
என்ற கேள்விக்கு,

"எம்மனா" (எம்பெருமான்) என்று சொல் மூலம்,
"நாம் அடைய வேண்டியவர் (உபேயம்), நம்முடைய பகவான் நாராயணனே"
என்ற தெளிவு ஏற்படுத்துகிறார், பெரியாழ்வார்.
"எம்மனா" என்ற சொல்லுக்கு "நான் அவருடையவன். அவருடைய சொத்து" என்று பொருள்.

நாம் அடைய வேண்டியது ("உபேயம்") யார் என்று தெரிந்து விட்டது.சரி...
ஆனால்,
பெருமாளை அடைய வேண்டிய வழி (உபாயம்) என்ன?
என்ற அடுத்த கேள்விக்கு,

"என் குலதெய்வமே" என்ற சொல் மூலம்,
"நாம் பெருமாளை அடைய வேண்டிய வழி (உபாயம்), அவரையே நம் குல தெய்வமாக கொள்வது தான்"
என்ற தெளிவை நமக்கு ஏற்படுத்துகிறார் பெரியாழ்வார்.

"பெருமாளை குலதெய்வமாக நீ ஆக்கிக்கொண்டால், 
நீ மட்டுமல்ல, உன் பரம்பரையில் பிறந்த அனைவருமே, 
அவர்கள் பிறவியில் அடைய வேண்டியதான (உபேயம்) பெருமாளை அடைந்து விடுவார்கள்"
என்கிறார் பெரியாழ்வார்.
"குலதெய்வமாக வெங்கடேசபெருமாளே அமைந்தவர்களுக்கு, வைகுண்டம் போகும் வழியையும் காட்டி, அடையும் லட்சியமாகவும் பெருமாளே இருந்து, மோக்ஷம் வரை துணையாகவே இருக்கிறார்" என்கிறார் பெரியாழ்வார்.

"யாருக்கு குலதெய்வமாக வெங்கடேசபெருமாள் அமைந்தாரோ!, அவர்களே பாக்கியவான்" என்கிறார் பெரியாழ்வார்.
மஹாபாரதத்தில் திரௌபதி "கோவிந்தா..." என்று தன் குலதெய்வமாக பெருமாளை வரித்து கொண்டதற்காக, அவளுடைய பேரன் பரிக்ஷித் கர்ப்பத்திலேயே அழிய வேண்டும் என்று அஸ்வத்தாமன் நினைத்தும், திரௌபதி என்ற பக்தைக்காக அவள் குலத்தை அழிய விடாமல் ரக்ஷித்தார் பெருமாள்.

குலதெய்வமாக இருந்து, நாமும் நம் பரம்பரையும், மோக்ஷம் போகும் வரை, நம் கூட இருந்தே ரக்ஷிக்கிறார்.

"என்னுடைய நாயகனே" என்ற சொல் மூலம், "பரதெய்வம் நாராயணனே"
என்ற தெளிவு ஏற்படுத்துகிறார் பெரியாழ்வார்.

உலகத்தில்,
சிலருக்கு இஷ்ட தெய்வமாக (உபேயமாக) "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார்.
அவர்கள் பெருமாளை "எம்மனா" (எம்பெருமான்) என்கிறார்கள்.

இன்னும் சிலருக்கு குல தெய்வமாக (உபாயமாக) "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார். 
அவர்கள் பெருமாளை "என் குல தெய்வமே" என்கிறார்கள்.

சிலருக்கு பர தெய்வமாக "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார். அவர்கள் பெருமாளை  "என்னுடைய நாயகனே" என்கிறார்கள்.

"தனக்கோ உபேயமாகவும் (இஷ்டதெய்வம்), உபாயமாகவும் (குலதெய்வம்), பரதெய்வமாகவும், 
மூன்று சம்பந்தத்துடன் பெருமாள் இருக்கிறாரே!"
என்ற பெருமிதமடைந்து பாடுகிறார் பெரியாழ்வார்,




பரதெய்வமாக இருக்கும் நாராயணனே, தனக்கு குலதெய்வமாகவும் இருக்கிறார். தனக்கு இஷ்டதெய்வமாகவும் இருக்கிறார்.
பெருமாள், 
என்னையும், என் பரம்பரையையும் ரக்ஷிக்கிறார் என்கிற போது,
என்னை பற்றியும் எனக்கு கவலையில்லாமல்
என் குடும்பத்தை பற்றியும் கவலையில்லாமல்
என்னை உங்கள் திருவடியை ஆச்ரயித்து கொண்டு இருக்குமாறு செய்து கொண்டு, நீங்கள் என்னை சுகமாக வைத்துக்கொண்டு, ரக்ஷிக்கிறீர்களே !!
உம்மிடத்தில் எனக்கு பரிபூரணமான ப்ரேமை உண்டாகும் படி செய்து, எப்பொழுதும் உங்கள் தொண்டுக்காகவே என்னை ஆக்கி,
என்னை வெளி உலக காரியங்களில் இங்கும் அங்கும் போக விடாமல் தடுத்து,
நீங்கள் என்னை பரிபாலிக்கும் அழகும்,
உங்கள் கருணைக்கு பாத்திரமாக இருக்கும் என் நிலையும்,
எனக்கு கிடைத்த நன்மையை (பாக்கியத்தை) போல, இவ்வுலகினில் யார் பெறுவார்? 
என்று என்கிறார் பெரியாழ்வார்.
அதையே,
நின்னுள் உள்ளேனாய்ப் பெற்ற நன்மை
இவ்வுலகினில் யார் பெறுவார்?
என்று பெருமிதம் அடைகிறார்.

நாமும் வெங்கடேச பெருமாளை, பரதெய்வமாகவும், குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் கொள்வோம்.
சர்வ மங்களத்தையும் திருப்பதி பெருமாளே, நமக்கும் நம் பரம்பரைக்கும் அருள்வார். 


குருவே துணை !



1 comment:

Premkumar M said...

பாசுரம் (அர்த்தம்) - திருமொழி
எம்மனா!
என் குல தெய்வமே!
என்னுடைய நாயகனே!
- பெரியாழ்வார் திருப்பதி பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம்.

தமிழன் தெரிந்து கொள்ள வேண்டும்...

https://www.proudhindudharma.com/2020/02/srinivas-has-3-relationship-with-us.html