பகவத்கீதை சொன்னவர், சாக்ஷாத் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
மஹாபாரதத்தில் வரும் பகவத்கீதையை நமக்கு அப்படியே கொடுத்தவர் பகவான் வியாசர்.
வியாசர் "நான்கு வேதமும் ஒருவரே கலியில் படிக்க முடியாது" என்று தெரிந்து, நான்கு சிஷ்யர்களை கொண்டு வேதத்தை பிரித்து கொடுத்தார்.
அவரே சந்தியாவந்தனத்தையும் கலிக்கு தகுந்தாற்போல முறை செய்து கொடுத்தார்.
பகவத்கீதை கேட்டு மஹாபாரதம் எழுதி விட்டு, வியாசர் நமக்காக முறை செய்து கொடுத்த சந்தியாவந்தனத்தில், பகவத்கீதை இல்லாமல் இருக்க முடியுமா?
அவர் வகுத்து கொடுத்து, நாம் செய்யும் சந்தியாவந்தனத்தில் பகவத்கீதை இருப்பதை நாம் காணலாம், அனுபவிக்கவும் செய்யலாம்.
1. கர்ம யோகம்
ஆசமனம், அங்க ரக்ஷை, பிராணாயாமம், பிறகு 2 குளியல் இதையெல்லாம் பார்ப்பவர்களுக்கு, ஏதோ ஒரு வேலை (கர்மா) செய்வது போல தெரியும்.
ரக்ஷை இட்டு கொண்டாலும், குளித்தாலும், குடித்தாலும் நாம் அனைத்து கர்மாவையும் தெய்வத்தின் பெயரால் செய்வதால், செய்பவனுக்கு "கர்மயோகம்" என்பது புரியும்.
2. ஞான யோகம்
இப்படி தண்ணீரை வைத்து கொண்டு ஏதோ வேலை (கர்மா) செய்து கொண்டிருந்தவன், திடீரென்று அமைதியாக நின்று கொண்டு இருப்பான். பார்த்தால் "ஞானி" போன்று இருக்கும்.
செய்பவனோ, உண்மையில் காயத்ரீ ஜபம் செய்து கொண்டு பகவானை தியானம் செய்கிறான். அப்பொழுது நாம் "ஞானயோகம்" செய்கிறோம் என்பது புரியும்.
3. பக்தி யோகம்
தெளிந்த ஞானம் ஏற்பட்ட பிறகு, பகவானிடம் பக்தி ஏற்படும்.
இது வரை அமைதியாக நின்று கொண்டு இருந்தவன், திடீரென்று நான்கு திசையையும் வணங்கி, அபிவாதயே என்று நமஸ்காரம் செய்வதை பார்த்தால், பக்தி போல தோன்றும்.
செய்பவனும் 'பகவான் அனைத்து திசையிலும் இருக்கிறார்' என்று அனைத்து திசையையும், உள்ளும் புறமும் பொய் இல்லாமல் இருந்தால் நமக்கு காட்சி கொடுப்பார் (ரிதகும் சத்யம்) என்று சொல்லிக்கொண்டும், அவர் எப்படி இருக்கிறார் என்று வர்ணித்து கொண்டும் சொல்வதை கவனித்தால், "பக்தியோகம்" இது தானே என்று புரியும்.
4. சரணாகதி
பக்தியின் முடிவு சரணாகதி (surrender to god). பகவத்கீதையில் "ஸர்வ தர்மான்.." என்று சொல்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
பக்தனை பார்த்து, "அனைத்தையும் எனக்கு சமர்ப்பணம் செய்து விடு" என்கிறார்.
அது போல, "காயேன வாசா.." சொல்லி அனைத்தையும் "நரர்களுக்கு ஆதியாக இருக்கும் அந்த நாராயணனிடம் அனைத்தையும் ஸமர்ப்பிக்கிறேன்" என்று சொல்வதை பார்த்தால், சரணாகதி செய்கிறோம் என்பது அனுபவத்தில் நமக்கு புரியும்.
பகவத்கீதையில் உள்ள கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், சரணாகதி போன்றவற்றை நம் அனுபவத்தில் கொடுக்கும் இந்த சந்தியாவந்தனத்தை, அதன் அருமையை தெரிந்தும், யார் செய்யாமல் இருப்பார்கள்?
சந்தியாவந்தனத்தில், சூரியனுக்கும் ஆத்மாவாக (நமக்கும்) இருக்கும் பரமாத்மாவை பார்த்து, மாலையில் "இமம் மே வருண" என்று சொல்வோம்.
திருமங்கையாழ்வார்,
"அனலுருவாய் பெருமாள் இருக்கிறார்" என்று சொல்லி, பிறகு,
"வருண" என்ற வடசொல்லுக்கு ஈடாக "புனலுருவாய் பெருமாள் இருக்கிறார்" என்கிறார்.
அனல் உருவாய் - என்றால் "அக்னி போன்று பரமாத்மா இருக்கிறார்" என்று அர்த்தம்.
"தீ" எப்பொழுதுமே மேல் நோக்கியே செல்லும். மற்றவர்கள் தொட முடியாதபடி இருக்கும். தீக்கு அருகில் சென்றால் விழுங்கி விடும்.
அது போல,
பெருமாளும் தேவர்களுக்கெல்லாம் தேவனாக, அவரை எவரும் தொட முடியாதபடி உயர இருக்கிறார். பெருமாள் பக்கத்தில் சென்றால், அப்படியே விழுங்கி விடுவார்.
இப்படி யாருக்கும் எட்டாதபடி அனலுருவாய் இருக்கும் பெருமாள், புனலுருவாயும் இருக்கிறார்.
புனல் உருவாய் - என்றால் "தண்ணீர் போன்று பரமாத்மா இருக்கிறார்" என்று அர்த்தம்.
தண்ணீர் எப்பொழுதுமே கீழ் நோக்கியே செல்லும். மற்றவர்களுக்கு கிடைக்கும்படி நிலத்திற்கு தானே வரும்.
அது போல,
பெருமாள் நிஜத்தில் அனலுருவாய் எங்கோ உயரத்தில் இருந்தாலும், "தானே இறங்கி ராமனாக, கண்ணனாக மனிதனை போன்று அவதாரம் செய்து, கோவிலில் அரச்ச அவதாரம் செய்து, நம்முடன் சமமாக பழகி, தானே வலிய வந்து கிடைக்கிறார்" என்கிறார்.
மாலையில் "இமம் மே வருண..." என்று சொல்லுமிடத்தில், "புனலுருவாய்" என்ற சொல்லின் அர்த்தத்தை நினைத்து சொல்லும் போது, பெருமாள் எத்தனை கருணையோடு நாம் காணும்படியாக கோவிலில், நம் வீட்டில் விக்ரக ரூபமாக அவதரித்து நிற்கிறார் என்பது புரியும்.
"அனலுருவாய்" என்று சொல்லும் போது, பெருமாளின் பர-தத்துவம், கம்பீரம் வெளிப்படுகிறது.
"புனலுருவாய்" என்று சொல்லும் போது, பெருமாளின் கருணை வெளிப்படுகிறது.
ஐந்து வயது குழந்தை 'கிணறு...' என்று எழுத ஆசைபட்டது..
எப்படியாவது எழுதி , தன் அப்பாவிடம் காட்டி, மகிழ வேண்டும் என்று ஆசைபட்டது.
கொஞ்சம் முயற்சி செய்து, 'கிணறு'க்கு பதில்,"கனாரு.." என்று கஷ்டப்பட்டு தப்பாக எழுதி, தன் அப்பாவிடம் ஆசையோடு கொடுத்தது.
"தன் குழந்தை கஷ்டப்பட்டு எழுதி, அதை தன்னிடம் ஆசையோடு காட்டுகிறதே!!" என்று ஆனந்தம் அடைந்த தகப்பன், "தானே அதை சரி செய்து 'அம்மா.. அப்பா..' என்று எழுதி விட்டு... அது போதாதென்று, தன் குழந்தைக்கு 100க்கு 100 மதிப்பெண் போட்டு, தன் குழந்தையை கொஞ்சி மகிழ்ச்சிப்படுத்தினான்.
அது போல நாம்,
எந்த உலக காரியம் செய்தாலும், தவறாகவே செய்து இருந்தாலும்,
நமக்கு தாயாகவும் தகப்பனாகவும் இருக்கும், ப்ரம்ம தேவனையும் படைத்த நாராயணனிடம் காட்ட வேண்டும் என்ற ஆசையுடன்,
அப்பாவிடம் தான் செய்ததை ஆசையோடு காட்டிய குழந்தை போல, நாம் செய்ததை சமர்ப்பணம் செய்தால்,
தன்னிடம் ஆசையோடு சமர்ப்பணம் செய்யும் நம்மை கண்டு மகிழ்ந்து,
நாம் செய்த காரியத்தில் குறை இருந்தாலும்,
தானே அதை சரி செய்து,
நன்றாக செய்தது போல ஆக்கி,
முழு பலனையும் தந்து விடுகிறார் பரமாத்மா நாராயணன்.
சந்தியாவந்தனம், சஹஸ்ரநாமம் என்று ஏதுவாக இருந்தாலும், முடிவாக, இந்த மந்திரம் சொல்வதற்கு காரணமும் இதுவே...
ஸ்லோகம், சந்தியாவந்தனம் செய்ததில் குறை இருந்தாலும், அப்பாவிடம் காண்பித்து, அவரே குறையை சரி செய்து, முழு பலனை கொடுக்கட்டும் என்ற 'புத்தியுடன்' இந்த மந்திரத்தை நாம் சொல்ல வேண்டும் .
எந்த காரியத்தை செய்தாலும், செய்த காரியத்தை, நம் அனைவருக்கும் அப்பாவாக உள்ள நாராயணனிடம், ஒரு குழந்தை தன் தகப்பனிடம் காட்டுவது போல காட்ட வேண்டும்.
உணவு செய்தாலும், பெருமாளுக்கு காட்டி விட்டு, பிறகு சாப்பிட வேண்டும்.
அப்படி செய்தால், உணவில் உள்ள தோஷங்கள் (தெய்வ சிந்தனை இல்லாமல் சமையல் செய்தது) நீங்கி விடும்.
நான் உடலாலும், மனதாலும், இந்த்ரியங்களாலும், புத்தியாலும் செய்த தவறுகள் அத்துனையையும் நாராயணனுக்கே அர்பணிக்கிறேன்.
மந்திரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்வதை விட, நாராயணனிடம் அர்பணித்தற்கு காரணத்தை உணர்ந்து சொல்லும் போது, நமக்கும், பெருமாளுக்கும் உள்ள உறவு புரியும்.
நாம் செய்த காரியத்தில் இருந்த குறையை அவர் அப்பாவாக இருந்து சரி செய்து கொடுக்கிறார் என்ற அனுபவம் ஏற்படும் போது, இந்த மந்திரத்தின் பெருமை நமக்கு புரியும்..
நாராயணன் என்ற சொல்லுக்கு "மனிதர்களுக்கு (நர) ஆதாரமாக (அயணம்) இருக்கும் பரமாத்மா" என்று அர்த்தம்.
நமக்கு ஆதாரமாக இருக்கும் தகப்பனிடம், நாம் செய்த காரியத்தை காட்டும் போது, தகப்பன் என்ற உறவு இருப்பதால், நாம் செய்த காரியத்தில் குறை இருந்தாலும், சரி செய்து முழு பலனை கொடுத்து விடுகிறார்.
சந்தியா வந்தனம் எப்படி அமைந்துள்ளது?
என்று பாருங்கள்.. எத்தனை அழகான அமைப்பு!! என்று பாருங்கள்.
1.
பகவானின் நாமத்தை சொல்லி சொல்லி ஆனந்தமாக கொஞ்சம் தீர்த்தம் எடுத்து குடி - ஆசமனம்
அச்சுதா (நிலையானவனே)
அனந்தா (எல்லையற்றவனே)
கோவிந்தா (ஜீவனுக்கெல்லாம்தலைவனே)
என்று பொதுவான பரத்துவத்தை சொல்ல கசக்குமா?
2.
பகவானின் நாமத்தை சொல்லி சொல்லி உன் அங்கங்களை தொடு. - அங்க ந்யாஸம்
3.
மந்திரம் சொல்லி சொல்லி, கொஞ்சம் தீர்த்தம் எடுத்து உன் மீதே தெளித்து கொள். மந்திர ஸ்நானம் செய்து கொள் (குளி)
4.
நீ செய்த பாபங்களுக்கு மருந்தாக பகவானை நினைத்து கொண்டே, பகவத் பிரசாதமாக கொஞ்சம் தீர்த்தம் குடி.
5.
மீண்டும் மந்திரம் சொல்லி சொல்லி, கொஞ்சம் தீர்த்தம் எடுத்து உன் மீதே தெளித்து கொள். மந்திர ஸ்நானம் செய்து கொள் (இரண்டாவது குளியல்)
6. "எங்கும் இருக்கும் பரப்ரம்மமே எனக்குள்ளும் இருக்கிறார்" என்று சத்தியத்தை அறிந்து கொள். இதுவே "ஞான யோகம்"
7.
சுத்தமாக இருக்கும் நீ, ப்ரம்மமாகவே ஆகிவிட்ட நீ, இப்போது நவ கிரகத்துக்கும், அதிபதியான பரப்ரம்மாவான நாராயணனின் 11 வ்யூஹ அவதாரத்தை நினைத்து, உன் கையில் இருக்கும் தீர்த்தத்தாலேயே பூஜை செய்.
பத்ரம் (இலையோ), புஷ்பமோ (பூவோ) கூட தேவையில்லை. கொஞ்சம் தீர்த்தை (தோயம்) எடுத்து உன் கையால் பகவானுக்கு பூஜை செய். நீ இன்றுவரை உயிருடன் இருக்கிறாயே. உன் நன்றியை காட்டு.
8.
தூக்கத்தில் கிடக்கும் உன்னை எழுப்பி காரியங்களில் ஈடுபட வைத்த பகவானை நன்றியுடன் உன் மனதால் தியானம் (காயத்ரி ஜபம்) செய்.
9.
பகவானை கையை உயர்த்தி பாடு (பஜனை செய்)
10. 100 வயது காலம் ஆரோக்கியம் குறையாமல், அனைவரோடும் சேர்ந்து வாழ, பகவானை நினைத்து கொண்டிருக்க, பகவானிடமே பிரார்த்தனை செய்.
11.
பகவானுக்கு நீ செய்த அனைத்து பாவ புண்ணியங்களை சமர்ப்பணம் செய். (கர்ம யோகம்)
பாவ புண்ணியம் இல்லாமல் மோக்ஷத்துக்கு தகுதி ஆக்கி கொள்.
சந்தியா வந்தனம் முடிந்தது.
இந்த அற்புதமான பிரார்த்தனை செய்ய ஒருவனுக்கு கசக்குமா?...
இன்று வரை உயிர் இந்த உடம்பில் தங்க வைத்திருக்கும் பகவானுக்கு இந்த நன்றியை கூடவா ஒருவன் செய்ய கூடாது?
ப்ராம்மணனுக்கு விதிக்கப்பட்ட கடமை அல்லவா இது.. நன்றி உள்ளவர்கள், சிந்திக்க வேண்டும்.
காயத்ரி மந்திர அர்த்தம் :
1.
காயத்ரி மந்திரத்தின் வெளி அர்த்தத்தை மட்டும் புரிந்து கொண்டு,,
ஜோதி ஸ்வரூபமாக இருக்கும் சூரிய தேவனுக்கு நம்முடைய நன்றியை சொல்லும் போது, சூரிய தேவன் நமக்கு ஆரோக்கியம் கொடுக்கிறார்.
வெளி அர்த்தம்:
இருட்டில் இருந்த என்னை எழுப்பி, தன் ஜோதியால் இருட்டை விலக்கி, என்னை உலக காரியங்களில் ஈடுபட வைக்கும்,
சவிதா என்ற கதிரவனுக்கு என் நன்றி. அந்த சூரிய பகவானை நான் நன்றியோடு தியானம் செய்கிறேன்.
2.
காயத்ரி மந்திரத்தின் உள் அர்த்தத்தை புரிந்து கொண்டு,
பரமாத்மா நாராயணனுக்கு தன்னுடைய நன்றியை சொல்லும் போது, ஆரோக்கியம் மட்டுமல்லாது, உலக சௌக்கியங்கள் அனைத்தும் கிடைக்க செய்து, கடைசியில் மோக்ஷமும் கொடுத்து விடுகிறார் பரவாசுதேவன்.
உள் அர்த்தம்:
சூரியன் தன் ஜோதி ப்ரகாசத்தால் உலகின் இருட்டை விரட்டுகிறார் என்பது ஒரு புறம் உண்மையென்றாலும்,
அந்த சூரிய ஜோதியை பார்க்க ஆதாரமாக இருப்பது நம்முடைய கண்.
ஆத்மா வெளியேறிய பின், இறந்த உடலில் உள்ள கண் பார்ப்பதில்லை.
ஆத்மா உள்ளே இருக்கும் போது, அந்த ஆத்ம ஜோதி, ஜடமான கண்ணை பார்க்க செய்கிறது.
அந்த கண்ணுக்கு பார்க்கும் சக்தியை கொடுத்தது, நம் உள்ளிருக்கும் ஆத்ம ஜோதியே.
சூரிய ஜோதியை அறிந்து கொள்வதும், நம் உள்ளேயே இருக்கும் ஆத்ம ஜோதியே என்று தெரிகிறது.
சூரியனுக்கு ஜோதியாக இருக்கும் பரவாசுதேவன நாராயணனே,
ஆத்மாவாகிய நமக்கு ஜோதியாக இருக்கிறார்.
அந்த நாராயணனே, நம்மை தமஸ் என்ற இருட்டில் இருந்து எழுப்பி, மோக்ஷத்துக்கான காரியங்களில் ஈடுபட செய்து பரம உபகாரம் செய்கிறார்.
என் உள்ளிருக்கும், பரஞ்ஜோதியான நாராயணனை நான் நன்றியோடு தியானம் செய்கிறேன்.
இதன் படி காயத்ரீ ஜபம் செய்யும் போது, மோக்ஷமும் ஸித்தியாகி விடுகிறது.
காயத்ரி ஜபம் குறைந்தது 108வது இந்த நன்றி உணர்ச்சியோடு சொல்ல வேண்டும்.
பிராம்மணன் இந்த குட்டி சந்தியா வந்தனத்தை குறைந்தபட்சம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்..
மெதுவாக அர்த்தங்களை தெரிந்து கொண்டு, முழுமையாக ஒரு முறையாவது உணர்ந்து, நாம் சாவதற்குள் செய்து விட வேண்டும்.
"பிராம்மண பிறவி துர்லபம்!!" என்பது நமக்கு தெரிகிறதோ! இல்லையோ! பிற ஜாதியில் பிறந்தவனுக்கு நன்றாக தெரியும்.
பிற ஜாதியில் பிறந்தவனும் கோவிலுக்கு போகிறான், பூஜை செய்கிறான்.
பிற ஜாதியில் பிறந்தவனும் ஜோசியம் பார்க்கிறான், பிரசங்கம் செய்கிறான்.
பிற ஜாதியில் பிறந்தவனும் வேலைக்கு போகிறான் வேலை கொடுக்கிறான். நமக்கும், மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
'சந்தியா வந்தனமும், வேதமும்' தானே நம்மை 'ஐயர்' (ஐயா) என்ற மரியாதையை பெற்று தந்தது!!
இந்த மரியாதைக்கு ஏன் பிராம்மணன் தன்னை தகுதி ஆக்கி கொள்ள கூடாது?...
கிடைத்த ஜன்மாவை பிராம்மணன் வீண் செய்து விட கூடாதல்லவா?....
நாம் (90%) இன்று வேதம் கற்கவில்லை.
நாம் சந்தியா வந்தனமும் செய்ய வில்லையென்றால், தெய்வம் எதற்காக நம்மை பிராம்மணனாக பிறக்க வைத்தோம்? என்று நினைக்குமல்லவா!!...
ஏதோ பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் தானே, நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பிராம்மண குடும்பத்தில் பிறந்து இருக்கிறோம். யோசிக்க வேண்டாமா?
இந்த சிறிய சந்தியாவந்தனம் செய்வோமே!!
1. ஆசமனம்:
(இதை செய்யும் போது நம்மை பரமாத்மாவின் நாமத்தை சொல்லி சுத்தம் செய்து கொள்கிறோம். "அச்சுதா, அனந்தா, கோவிந்தா" என்று கொஞ்சம் வாயில் தீர்த்தம் விட்டு கொள்ள முடியாதா நமக்கு?)
2. தேவ தர்ப்பணம்:
(இங்கு நவ கிரகங்களுக்கு தர்ப்பணம் செய்கிறோம்.
மேலும் 12 ரூபமாக உள்ள பரமாத்மாவுக்கு தர்ப்பணம் செய்கிறோம். ஒன்றுமே செய்யாததை விட குறைந்த பட்சம், தேவ தர்ப்பணம் மட்டுமாவது செய்ய வேண்டும். பத்மஸ்ரீ சேஷாத்திரிநாத சாஸ்திரிகள் சொல்வதை கேளுங்கள். (@ 16:04 Minute Speech)
தர்ப்பணம் என்றால் "திருப்தி" என்று அர்த்தம்.
"ராகும் தர்பயாமி" என்றால் "ராகு க்ரஹத்தின் தேவதையை திருப்தி செய்கிறேன்" என்று அர்த்தம்.
ராகு, கேது, சனீஸ்வரனை ஆராதித்து, அவர்கள் நம்மை பாதிக்காமல் இருக்க செய்ய, நமக்கு கசக்கிறதா?
ஒரு சொட்டு தண்ணீர், நம் கையால் நவ க்ரஹங்களை ஆளும் தேவதைகளுக்கு கொடுக்க முடியாதா நம்மால்?
ஒரு சொட்டு தண்ணீர், 12 ரூபங்களாக இருந்து நம்மை காக்கும் பரமாத்மாவுக்கு நம்மால் கொடுக்க முடியாதா?
நம்மிடம் ஒரு சொட்டு தண்ணீருக்காக நவ க்ரஹ தேவதைகளோ, பரமாத்மாவோ ஏங்கவில்லை.. இதை மறந்து விட கூடாது...
ஆனால் 'பிராம்மண ஜாதியில் பிறந்த நமக்கு துளியாவது நன்றி இருக்கிறதா?' என்று தெய்வங்கள் பார்க்கிறார்கள்.
இந்த நன்றியை கூட பிராம்மணன் காட்ட கூடாதா?...
தெய்வங்களை நாம் தானே திருப்தி செய்ய வேண்டும்!!
நம்மை படைத்த தெய்வங்கள் அல்லவா! நம்மை காக்கும் தெய்வங்கள் அல்லவா..?
தொடர்ந்து 10 காயத்ரி மந்திரம் சொல்லி விட்டு,
கடைசியாக,
3. சமர்ப்பணம்: காயே ந வாச...நாராயணா யேதி சமர்ப்பாயாமி"
என்ற மந்திரத்தை சொல்லி "இப்படி அரைகுறையாக செய்த சந்தியா வந்தனத்தையும் அழகாக முழுமையாக செய்ததாக ஏற்று கொண்டு, பரமாத்மா நமக்கும், நம் குடும்பத்துக்கும் அருள் செய்ய வேண்டும்"
என்று பிரார்த்தித்து முடித்து விடலாமே..
இந்த மூன்றையும் செய்ய, ஒரு நிமிடம் கூட ஆகாதே நமக்கு!!...
100 வயது காலம் நாம், நம் குடும்பம் வாழ, மதிய வேளையில் பிரார்த்தனை செய்யும் மந்திரம் இருக்கிறது.
அதை தெரிந்து கொள்ளாமல் போனாலும், இந்த குட்டி பிரார்த்தனையை பிராம்மணன் அனைவரும் செய்யலாமே!..
இந்த பிறவியில் அதிர்ஷ்டமாக நமக்கு கிடைத்த பரிசை, நாம் ஏன் அலட்சியம் செய்ய வேண்டும்?
"மற்றவர்கள் பொறாமைப்படும் பிராம்மண குலத்தில் இவனை பிறக்க வைத்தும், நமக்காக சில நிமிடங்கள் சந்தியா வேளைகளில் (காலை, மதியம், மாலை) கூட நினைக்காமல், நன்றி இல்லாமல் இருக்கிறானே?"
என்று தெய்வம் நினைக்கும் படியாக வாழ்ந்து நாம் இறந்து விட்டால்,
நமக்கு பெரிய நஷ்டமல்லவா!!..
இந்த ஜென்மத்தில் சந்தியா வந்தனம் செய்யாமல் இருந்த நமக்கு, தெய்வம் அடுத்த பிறவியிலும் பிராம்மண குடும்பத்தில் பிறக்க வாய்ப்பு தருமா?...
ப்ராம்மணர்கள் அனைவருக்கும் உரிமையுள்ள சந்தியா வந்தனத்தை, குறைந்தது இந்த மூன்றை மட்டுமாவது காலை, மதியம், மாலை, வெறும் ஒரு நிமிடம் ஒதுக்கி, நமக்கு பிடித்த தெய்வத்தையே பரமாத்மாவாக நினைத்து நன்றி செய்யலாமே!!.
வியாச பகவான் நமக்காக கொடுத்த இந்த சந்தியா வந்தனத்தை, நமக்கு என்று உரிமையுடன் கொடுத்த இந்த பாக்கியத்தை, நாம் யாருக்காக விட வேண்டும்?
நாம் தெய்வத்துக்கு நன்றி சொல்ல, யாரும் தடை இல்லையே!! இது நம் சொத்து ஆயிற்றே..
தெய்வ அருளை பெற்று தரும் சந்தியா வந்தனம் என்ற தங்க குவியலை, நாமே குப்பை தொட்டியில் வீசி விட்டு, தெய்வ அருள் எங்கே?, செல்வம் எங்கே?
என்று எங்கேயோ தேடுகிறோமே!!..
மேல் சொன்ன இந்த மூன்றை மட்டுமாவது, ஆசையோடு தினமும் நாம் செய்ய ஆரம்பிப்போம்.
புரிந்து கொண்டு ஒரு நிமிடம் செய்தாலும், நமக்கு மனத்திருப்தி நிச்சயம்.
100 வயது நாம் நம்மை சுற்றி உள்ளவர்கள் வாழ ஆசை இருந்தால், மேலும் சில மந்திரங்கள் அதன் அர்த்தங்களை தெரிந்து கொண்டு இன்னும் நன்றாக அனுபவித்து தெய்வத்துக்கு நன்றி செய்வோம்.
மேலும் சந்தியா வந்தனம் பற்றிய காரணங்கள் தெரிந்து கொள்ள... இங்கே படியுங்கள்..
சந்தியா வந்தன மந்திரங்களின் அர்த்தங்கள் தெரிந்து கொள்ள....
ஸூர்ய அஸ்தமனத்திலிருந்து (6PM) மறுநாள் உதயம் (6AM) வரையுள்ள முப்பது நாழிகையில் (30*24 = 720 minutes = 12hr), இருபத்தைந்து நாழிகையான பின், கடைசி 5 நாழிகையை (5*24 = 120 minutes = 2hr) "உஷத் காலம்" என்று சொல்கிறோம். 4AM முதல் 6AM வரை 'உஷத் காலம்'.
இதை "ப்ரம்ம முகூர்த்தம்" என்று சொல்கிறோம்.
இந்த உஷத் கால சமயத்தில் விழித்துக் கொண்டு, பல் துலக்கி, பச்சை ஜலத்தில் ஸ்நானம் பண்ணிவிட்டு ஸந்தியாவந்தனம் செய்ய வேண்டும்.
ஸந்தியாவந்தனமே தேவ யக்ஞம்.
ஸந்தியாவந்தனம் செய்வதால் தேவர்கள் நம்மை பார்த்து திருப்தி அடைகிறார்கள்.
"சந்தியா வந்தனம் செய்யவில்லையே"
என்ற தாபம் ப்ராம்மணனுக்கு இருக்கவேண்டும்.
"சந்தியா வந்தனம் செய்யவேண்டும்"
என்ற ஆர்வம் ப்ராம்மணனுக்கு இருக்க வேண்டும்.
கருணாமூர்த்தியான பகவான் நம் ஆர்வத்தை, தாபத்தை கவனிக்காமல் போகமாட்டார்.
உலகில் எந்த மதத்தையும் விட, தொன்றுதொட்டு வந்திருக்கிற இந்த அநுஷ்டானங்கள் நம் காலத்தோடு அழித்து விடாமல், நம் குழந்தைகள் எடுத்து செல்லும் அளவிற்கு, இவற்றால் நாம் பெறுகிற நன்மையையும், லோகம் பெறுகிற நன்மையையும் உண்டாக்குவதற்கே ஸகலப் பிரயத்தனமும் பண்ணவேண்டும்.
6:00 AM மணிக்கு ஸூர்யோதயம் என்றால் 8:24 AM வரை "ப்ராத: காலம்".
உஷத் காலத்தில் சந்தியா வந்தனம் செய்ய முடியாது போனால், ப்ராத: காலத்தில் ப்ராத சந்தியா செய்ய வேண்டும்.
8:24 AM லிருந்து 10:48 AM வரை "ஸங்கவ காலம்".
10:48-1:12 சமயத்தில் செய்ய இயலாது இருந்தால், இந்த காலத்திலேயே, மாத்யான்னிக சந்தியா வந்தனம் செய்து விடலாம்.
10:48 AM லிருந்து பகல் 1.12 PM வரை "மாத்யான்னிக காலம்".
இந்த சமயத்தில் மாத்யான்னிக சந்தியா வந்தனம் செய்ய வேண்டும்.
1:12 PM லிருந்து 3:36 PM வரை "அபரான்ன காலம்".
அபரான்னத்தில் மட்டுமே பிராம்மணன் சாப்பிடவேண்டும்.
ஒரு வேளை தான் உண்ண வேண்டும் என்று சாஸ்திரம் ப்ராம்மணனை எதிர்பார்க்கிறது.
3:36 PMலிருந்து 6 PM மணி வரை (அதாவது அஸ்தமனம் வரை) "ஸாயங்காலம்".
‘தோஷம்’ என்றால் இரவு.
‘ப்ர’ என்றால் முன்னால்.
சூரிய அஸ்தமனத்தை ஒட்டினது "ப்ரதோஷகாலம்" (5:15 PM- 6 PM).
யோகி, போகி, ரோகி... தெரிந்து கொள்ள வேண்டிய ரகசிய உண்மைகள்.. (முக்கியமாக ப்ராம்மணர்கள்)
மூன்று வேளை சாப்பிடுபவன் "ரோகி",
இரண்டு வேளை சாப்பிடுபவன் "போகி",
ஒரு வேளை சாப்பிடுபவன் "யோகி".
கலியில் வேதம் முழுவதும் கற்க ஒருவனால் முடியாது என்று உணர்ந்து, ஒன்றாக இருந்த 'வேதத்தை நான்காக பிரித்து கொடுத்தார்' வேத வியாசர்.
அன்றைய காலங்களில் மூன்று வேளைக்கு மேல் சாப்பிடுபவர்கள் மனிதர்கள் என்றே கருதுவது இல்லையோ என்னவோ தெரியவில்லை. மூன்று வேளைக்கு மேல் சாப்பிடுபவர்களை பற்றி நம் ரிஷிகள் சொல்லவில்லை அல்லது சொல்ல பிரியப்படவில்லை என்றே தெரிகிறது.
ப்ராம்மணர்கள் எத்தனை வேளை சாப்பிட வேண்டும்? என்ற குறிப்பு சந்தியா வந்தனத்தில் இருக்கிறது.
என்ன சொல்கிறது இந்த மந்திரம்?
இதன் அர்த்தம் என்ன?
"தண்ணீர் (ஜலதேவதை), தனக்கு உறைவிடமாகிய 'பூமியை' புனிதமாக்கட்டும். தண்ணீரால் புனிதமாக்கப்பட்ட பூமி, 'என்னை' புனிதமாக்கட்டும். தண்ணீரால் புனிதமாக்கப்பட்ட பூமி, வேதத்தை கற்ற 'வேதியனை' புனிதமாக்கட்டும். என்றும் புனிதமாயுள்ள வேதம், 'என்னை' புனிதமாக்கட்டும். பிறர் உண்ட பிறகு பெறப்பட்ட உணவோ, புசிக்கத் தகாததுமான உணவோ, துர்நடத்தை உள்ளவர்களிடம் இருந்து ஏற்றுக் கொண்ட உணவோ, அவை எல்லாவற்றினின்றும் 'என்னை' ஜலதேவதை புனிதமாக்கட்டும் என்று பிரார்த்தித்து, புனிதமான என்னைப் பரமாத்ம ஜோதியில் ஹோமம் செய்கின்றேன்."
இப்படி சாப்பாட்டை பற்றி ஒரு இடத்தில் மட்டும் தான் வருகிறது.
இப்படி ஒரு மந்திரம் மதிய வேளையில் சந்தியாவந்தனம் செய்யும் போது வருகிறது..
"மாத்யானிக சந்தியா வந்தனம் செய்து விட்டு, சாப்பிட உட்கார்" என்று சொல்லும் பழக்கம் சந்தியா வந்தனம் செய்யும் பிராம்மண குடும்பத்தில் இன்றும் இருப்பதை காணலாம்.
சாப்பாட்டை பற்றி இது போன்ற மந்திரம், காலையில், மாலையில் செய்யும் சந்தியா வந்தனத்தில் இல்லை.
"பிராம்மணன் ஒரு வேளை சாப்பிட்டு யோகியாக வாழ்வான்"
என்று தான் ரிஷிகள் ஆசைப்பட்டு, இப்படி ஒரு முறையை அமைத்து இருப்பார்கள் என்று தோன்றுகிறது.
அர்த்தங்கள் புரிந்து கொள்ளும் போது, சந்தியா வந்தனம் "நம்மை ரோகியாக வாழாதே!" என்று எச்சரிப்பது புரியும்.
ஒரு வேளை சாப்பாட்டை குறைத்து கொண்டால், நம் உடலுக்கு ஆரோக்யம் கூடுவது மட்டுமல்ல, 130 கோடி மக்கள் கொண்ட பாரத நாட்டுக்கே நாம் பெரும் உபகாரம் செய்கிறோம் என்று தோன்றும்.
பூணூல் இடது தோளில் அணிவதை "உபவீதம்" என்று அழைக்கிறோம்.
தேவர்களுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் இடது தோளில் (உபவீதமாக) இருக்க வேண்டும்.
நம் முன்னோர்களுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் வலது தோளில் இருக்க வேண்டும்.
நம் ரிஷிகளுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் மாலையாக இரு தோளில் இருக்க வேண்டும்.
முன்னோர்கள் பித்ரு லோகம் தென் திசையில் உள்ளது.
அதுபோல, தேவ லோகம் வட திசையில் உள்ளது.
பொதுவாகவே, எந்த வேத சம்பந்தமான பூஜையோ, யாகமோ கிழக்கு திசை பார்த்து தான் செய்ய வேண்டும்.
ஒருவருக்கு நமஸ்காரம் செய்தால் கூட, பொதுவாக கிழக்கு திசைபார்த்து தான் செய்கிறோம்.
கிழக்கு திசை பார்த்தே பெரும்பாலும் வேத காரியங்கள், நல்ல காரியங்கள் செய்வதால், நமக்கு இடப்பக்கம்வடக்காக இருப்பதால், பூணூல் இடமாகவே போட்டு கொள்கிறோம்.
நமக்கு வலப்பக்கம் தெற்கு திசை இருப்பதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம், திவச காரியங்கள் செய்யும் போது, பூணூல் வலமாக போட்டு கொள்கிறோம்.
ரிஷிகள் எங்கும் இருப்பதால், இரண்டு தோளும் படுமாறு மாலையாக போட்டு ரிஷி கடனை அடைகிறோம்.
பூணூல் நாம் அனைவரும் ஆவணி அவிட்டம் அன்று வேதமறிந்த வேதியரிடம் பக்தியுடன் வாங்கி போட்டு கொள்ள வேண்டும்.
இது ஒரு கவசம்.
மதம் மாற்ற வருபவர்கள், நெற்றியில் திலகம், பூணூல் அணிந்தவனை நெருங்கி அவன் போலி தெய்வங்களை பற்றி பேசுவதில்லை...
ஜாதி பேதம் இல்லாமல் அணியலாம்.
வேதமறிந்த வேதியரிடம் பக்தியுடன் வாங்கி போட்டு கொள்ள வேண்டும்.
ப்ராம்மணர்கள் மட்டுமின்றி, பாரத தேசத்தில் அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்..
"க்ஷத்ரிய அரசர்கள், வியாபாரிகள், சுய தொழில் செய்பவர்கள்" என்று அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்.
நம் தெய்வங்களும் பூணூல் அணிந்து இருப்பதை பார்க்கிறோம்.
இன்று ப்ராம்மணர்களில் கூட, சிலர் பூணூல் அணியாமல் திரிகின்றனர். மாமிசம் கூட சாப்பிடுகின்றனர்.
1200 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்ரமிப்பால், கோவில்கள், பாரத பெண்கள், செல்வங்களை மட்டும் இழக்கவில்லை நாம், இது போன்ற பழக்கத்தின் "ரகசியங்களையும்" தொலைத்தோம்..
'பூணூல் எதற்காக அணிந்தோம்?' என்ற காரணம் இன்று மறைந்து போனதால், 'எதற்கு பூணூல் அணிய வேண்டும்?' என்று பாரத மண்ணில் பிறந்த நாமே நம்மை கேட்டு கொள்கிறோம்..
பூணூல் அணிந்து இருப்பவர்களை பார்த்து, காரணமே இல்லாமல் பொறாமையும் படுகிறோம்..
பூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன?...புரிந்து கொள்வோமே..
பூணூல் 'மூன்று நூல்களை' கொண்டதாக இருக்கிறது..
பூணூலில் ஒரு 'முடிச்சும்' காணப்படுகிறது.
அதை "ப்ரம்ம முடிச்சு" என்று சொல்லி கேள்வி பட்டு இருப்போம்..
மூன்று நூல்கள் எதை உணர்த்துகிறது? "மனிதனாக பிறந்த நாம் அனைவருமே, "மூன்று பேருக்கு கடன் பட்டு" இருக்கிறோம்"
என்பதை பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள் உணர்த்துகிறது..
ஒன்று பித்ரு கடன்,
இரண்டு, ரிஷி கடன்,
மூன்றாவது, தேவ கடன்.
1. பித்ரு கடன்
இன்று வரை மோக்ஷம் அடையாத கோடிக்கணக்கான ஜீவாத்மாவில், நாமும் இருக்கிறோம்.
இன்று வரை மோக்ஷம் அடையாததாலேயே நாம் உலகத்தில் இன்று வரை பிறந்து இருக்கிறோம்.
ஜீவனான நமக்கு, "மனித உடல் கொடுத்து" இந்த உலகில் வாழ வழி செய்தவர்கள் "நம் பெற்றோர்கள்".
நமக்கு கொடுக்கப்பட்ட இந்த உடலை வைத்து கொண்டு, நாராயணனிடம் பக்தி செய்து மோக்ஷம் அடைந்து விட முடியும்...
இந்த உடலை வைத்து கொண்டு, உலக விஷயங்களில் ஈடுபடவும் முடியும்..
"உடலை கொடுத்த நம் பெற்றோர்களுக்கு, நாம் நன்றி செய்ய கடன் பட்டுள்ளோம்". இதை நமக்கு எப்பொழுதும் "நினைவுபடுத்தவே",பூணூல் அணிகிறோம்.
பூணூலில் உள்ள ஒரு நூல்"பித்ரு கடன் உனக்கு உள்ளது"
என்று நம்மை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.
தாய், தந்தை, பாட்டி, தாத்தா, பாட்டனார்கள் அனைவருக்கும் இந்த உடல் கடன் பட்டுள்ளது.
அவர்கள் உயிருடன் இருக்கும் வரை, அவர்களை அனாதையாக விட்டு விடாமல், அவர்களுக்கு சேவை செய்து இந்த கடனுக்கு பதில் செய்ய வேண்டும்.
அவர்கள் உயிர் பிரிந்து "பித்ரு லோகம்" சென்றாலும்,
அவர்கள் வேறு பிறவியே எடுத்தாலும், அவர்கள் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று பித்ரு தேவதைகளிடம் வேண்டி, அவர்கள் உயிர் பிரிந்த நாட்களில் திதி (திவசம்/சிரார்த்தம்) செய்து பித்ரு கடனை அடைக்க வேண்டும்.
"திவசம்" போன்ற காரியங்கள் செய்யும் போது, ஹிந்துக்கள் அனைவருமே பூணூல் அணிந்து கொள்கிறார்கள்..
காரணம் புரியாததால்!! பெற்றோருக்கு திதி கொடுத்த பிறகு, பூணூலை கழட்டி எறிந்து விடுகிறார்கள்... பூணூலை அணிந்து கொண்டே இருக்கலாமே.
ஒரு நூலை உடம்பில் போட்டுக்கொள்வது என்ன சிரமமான காரியமா? ஹிந்துக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும்..
அமாவாசை தர்ப்பணம், திதி கொடுப்பதும்,
பெற்றோருக்கு நாம் செய்யும் நன்றி கடனே, நன்றி உணர்ச்சியே.. இது நம்முடைய ஒரு கடமையே.
"உனக்கு மனித உடல் கொடுத்த பெற்றோருக்கு நன்றி செய்ய என்றுமே மறந்து விடாதே"
என்று நம்மை நினைவு படுத்துவதற்கே நமக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது.
தாய் தந்தையை தெய்வமாக மதிப்பவன், அவர்கள் மனம் கோணாமல் வாழ ஆசைப்படுபவன், அவர்களுக்கு நன்றியுடன் வாழ ஆசைப்படுபவன், இந்த உயர்ந்த நோக்கத்தை நமக்கு நினைவுபடுத்தும் பூணூலை அவமதிப்பானா?..
"பூணூல் அறுப்பேன்" என்று சொல்பவன், "தாய் தந்தைக்கு நன்றி காட்டாதே.. அவர்களுக்கு நீ கடன் படவில்லை.." என்று தானே சொல்கிறான்.. பெற்றோரை மதிக்காத அப்படிப்பட்ட கீழ்த்தரமான மனிதர்கள் மனித குணம் உள்ளவர்களா?..
சிந்திக்க வேண்டும்...
2. தேவ கடன்
சூரிய தேவன், "கண்" என்ற உறுப்பிற்கு "பார்க்கும்" சக்தியை கொடுக்கிறார்..
அக்னி தேவன், மனித உடலுக்கு ஏற்ற சூட்டை கொடுத்து, உறுப்புகளை வேலை செய்ய உதவுகிறார்.
வாயு தேவன், 5 வாயுவாக உடல் முழுவதும் இருந்து, உடல் உறுப்புகள் அசைந்து வேலை செய்ய உதவுகிறார்.
இப்படி முப்பத்து முக்கோடி தேவர்களும், நம் உடலை இயங்க செய்ய உதவுவதால், உடலை அழுகி விடாமல் காக்கும் தேவர்களுக்கும் நாம் "கடன்" பட்டு இருக்கிறோம்.
ஸந்தியா வந்தனத்தில், "பிரணவ ஜபம், காயத்ரி ஜபம்" தவிர, மற்றவவைகள் மந்திரங்கள் அல்ல, ஸ்தோத்திரங்களாகவே இருக்கின்றன.
ஆரம்பம் முதல் கடைசி வரை, பல தேவதைகளின் பெயரை சொல்லி துதிப்பதாகவே சந்தியா வந்தனம் உள்ளது.. தேவதைகளின் ஸ்தோத்திரங்களாகவே இருக்கின்றன.
தினமும் மூன்று வேளை சந்தியா வந்தனம் செய்வதன் மூலமாகவே "தேவ கடனுக்கு" நாம் நன்றி செய்ய முடிகிறது..
சந்தியா வந்தனத்தில், நவ க்ரஹங்களை திருப்தி செய்கிறோம்.. எமனுக்கு கூட வந்தனம் செய்கிறோம்.. "யோவ: சிவதமோ ரஸ:" என்று சிவபெருமானை தியானித்து கொண்டே நம்மை சுத்தி செய்து கொள்கிறோம்.. "சர்வாப்யோ தேவதாப்யோ நமோ நம:" என்று அனைத்து தேவதைகளுக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்கிறோம்..
சந்தியா வந்தனம் ஒழுங்காக செய்தாலே, நாம் "தேவ கடனை" அடைத்து விடலாம்.
"சிவாய நம:, நமோ நாராயணா, முருகா போற்றி" என்று சொல்வதும்,
ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்கள், நாயன்மார் பதிகங்கள் போன்றவை பாடுவதும் கூட, நாம் செய்யும் ஸ்தோத்திரங்களே (துதிகள்).
"வேத மந்திரங்கள் வேறு, ஸ்தோத்திரங்கள் வேறு" என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டுமே பக்தியை கொடுக்கும், தெய்வத்திடம் அழைத்து செல்லும் என்றாலும், இரண்டும் ஒன்றல்ல..
வேதத்துக்கு நிகராக 4000 திவ்ய பிரபந்தங்கள் இருக்கிறது என்று சொல்கிறார்கள்..
4000 திவ்ய பிரபந்தங்களை "தமிழ் மறை" என்றே சொல்கிறார்கள்..
"வேதத்துக்கு நிகரான திவ்ய பிரபந்தத்தை, கோவிலில் பெருமாளுக்கு முன் பாட செய்தார்" ஸ்ரீ ராமானுஜர் (1017AD)..
'திவ்ய பிரபந்தம் படிக்கும் போது, தெளியாத வேத மந்திரங்களின் அர்த்தங்கள் கூட புரிந்து விடுகிறது' என்கிறார் ஸ்வாமி தேசிகர்.
திவ்ய பிரபந்தம் "வேதத்துக்கு நிகரானது" என்று மதிக்கப்பட்டாலும்,
கோவில்களில் திவ்ய ப்ரபந்தத்தை பெருமாள் முன் பாட வேண்டும் என்று சீர்த்திருத்தமே செய்தாலும்,
ஸ்ரீ ராமானுஜர், "திவ்ய பிரபந்தம் போதுமே என்று வேத மந்திரங்களை ஒதுக்கி விட வில்லை" என்று பார்க்கிறோம்..
"ஸ்தோத்திரம் வேறு, வேத மந்திரங்கள் வேறு" என்பதை அறிந்தவர் ராமானுஜர்.
பெருமாள் முன் பாடப்படும் திவ்ய பிரபந்தங்கள், பகவானை பற்றி பாடுகிறது.. இது ஸ்துதி.
ஆனால் "புருஷ சூக்தம்" போன்ற வேத மந்திரங்களை ஓதும் போது, அது பகவானை பற்றிய ஸ்துதி அல்ல, அது பகவானையே குறிக்கிறது..
"ஓம் நம சிவாய" என்று சொல்வதும், "பதிகங்கள்" பாடுவதும், சிவபெருமானை பற்றிய ஸ்துதிகளே..
ஆனால், "ருத்ரம்" போன்ற வேத மந்திரங்களை ஓதும் போது, அதுசிவபெருமானின் 11 ருத்ர ரூபத்தையே குறிக்கிறது..
மந்திரங்கள் ஸித்தி ஆகும் போது, தெய்வங்கள் நேரிடையாக பேச ஆரம்பித்து விடுகிறார்கள்..
நம் உடல் உறுப்புகளை பாதுகாக்கும் தேவர்களுக்கு, காலத்தில் மழை கொடுக்கும் தேவர்களுக்கு, நாம் அனைவருமே "தேவ கடன்" பட்டு இருக்கிறோம்.
மூன்று வேளையும் சந்தியா வந்தனம் செய்து "தேவ கடனை" அடைக்கிறோம்.
அது தவிர, தினமும் பூஜை அறையில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் நன்றியுடன் பூஜை செய்வது மூலமாகவும், குல தெய்வத்தை மறந்து விடாமல் வழிபடுவதின் மூலமாகவும், கோவில் திருப்பணிகளில் உடல் ரீதியாகவும், பொருள் ரீதியாகவும் முடிந்த உதவி செய்வதாலும், கோவிலில் உள்ள தெய்வங்களின் சொத்தை கொள்ளை அடிக்காமல் இருப்பது போன்றவை மூலமாகவும், "தேவ கடனை"அடைக்கிறோம்..
பூணூலில் உள்ள இரண்டாவது நூல் "தேவ கடன் உனக்கு உள்ளது" என்று நம்மை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.
3. ரிஷி கடன் "ஓம்" என்ற மந்திரத்தை முதலில் க்ரஹித்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் ப்ரம்ம தேவன். "ப்ரணவஸ்ய ரிஷி ப்ரம்மா"
என்று சந்தியா வந்தனம் காட்டுகிறது. ப்ரம்மாவே ரிஷி தான்.
"ஓம் என்ற பிரணவம்" ஸித்தி ஆகும் போது, நம்மை படைத்த ஈஸ்வரன் நம்மை காப்பாற்றுகிறார் என்ற தெளிவான அறிவு ஏற்பட்டு விடும். உலகமே எதிர்த்தாலும், கலங்காத உள்ளம் ஏற்பட்டு விடும்.
"காயத்ரி மந்திரத்துக்கு" ரிஷி விஸ்வாமித்திரர்.
இப்படி வேத மந்திரங்களுக்கு ரிஷிகள் பலர்..
சக்தி வாய்ந்த வேத மந்திரங்களை நமக்கு கொடுத்த ரிஷிகள், நமக்கு "ஆயுர்வேதம், யோகா, சித்த மருத்துவம்" என்று பல சாஸ்திரங்களையும் அள்ளி கொடுத்தனர்..
அவர்கள் எங்கெல்லாம் "சிவ பெருமானையும், பெருமாளையும், முருகனையும், விநாயகரையும், அம்பாளையும், தேவதைகளையும்" பூலோகத்தில் தன் பக்தியால் தரிசித்தார்களோ,
அங்கெல்லாம் அந்த தெய்வங்கள் சாநித்யத்துடன் என்றுமே இருக்க செய்து, நமக்கு தெய்வங்கள் அருள் செய்ய, கோவில் அமைய காரணமாக அமைந்தனர்.
வாழ்க்கைக்கு வழிகாட்ட, ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிஹாசங்களை நமக்கு கொடுத்தனர்..
நாம் அனைவருமே ப்ரம்ம தேவன் என்ற ரிஷியால் படைக்கப்பட்டவர்கள் தான்.. ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள் நாம் அனைவருமே..
ரிஷிகள் விஞ்ஞானிகளுக்கும் மேலானவர்கள்.. இதே சமயம் அடுத்த வருடம் எத்தனை மணிக்கு சூரியன் உதயமாகும்? சந்திர க்ரஹனம் எப்போது ஏற்படும்? என்று இவர்கள் சொல்லி கொடுத்த முறையை கொண்டு, இன்று கூட ஒரு வருட கால நிலையை பஞ்சாங்கம் என்று எழுதி விடுகின்றனர்..
பூணூலில் உள்ள மூன்றாவது நூல் "ரிஷி கடன் உனக்கு உள்ளது" என்று நம்மை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.
சந்தியா வந்தனத்தில் பிராணாயாம ஜபம் செய்து,
ஓங்காரத்திற்கு ரிஷியான ப்ரம்ம தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.
வால்மீகி, வியாசர் போன்ற ரிஷிகள் நமக்கு அளித்த "புராணங்கள், ராமாயணம், பாகவதம், பாரதம்" போன்றவைகளை கொஞ்சம் படித்தாலும், நம்மை பார்த்து ரிஷிகள் சந்தோஷப்படுகின்றனர்.
மூன்று வேளையும் ,
ஸந்தியா வந்தனம் செய்து வந்தாலே "தேவ கடனும் தீருகிறது, ரிஷி கடனும் தீருகிறது".
ரிஷிகளுக்கு நிகரான ஞானிகள், மகாத்மாக்கள், சந்நியாசிகளை கண்டால், அவர்களுக்கு முடிந்த சேவைகள் செய்து ரிஷி கடனை அடைக்கலாம்.
குருவிடம் உபதேசமாக மந்திர உபதேசங்கள் பெற்றுக்கொண்டு ஜெபிக்கும் போது, ரிஷி கடன் தீருகிறது.
அவர்கள் மடங்களில் சுத்தம் செய்வது, அன்னதானம் செய்வது, போன்ற சேவைகள் செய்யலாம்.
மகான்களின் அறிவுரை படி வாழ முயற்சிப்பது..
ரிஷிகள் நமக்கு கொடுத்த புராணங்களை படித்து உணர்வது,
ரிஷிகள் வழிபட்ட தெய்வங்களுக்கு சேவை செய்வது
போன்றவை மூலம் "ரிஷிகளின் கடனை" நாம் அடைக்கிறோம்..
இந்த "மூன்று கடனையும்" எந்த காரணம் கொண்டும் நாம் மறந்து விட கூடாது, என்பதற்காக, பூணூல் அனைவருக்குமே அணிவிக்கப்பட்டது..
இன்று ப்ராம்மணன் மட்டும் அணிவது வேதனைக்குரியது.. அனைவருமே அணிய வேண்டும்.
"ஓம் நம சிவாய" என்று நாம் செய்யும் ஸ்துதி சீக்கிரம் பலித்து, சிவபெருமான் பிரசன்னமாக, வேதம் கற்ற ப்ராம்மணர்கள்கையால் "ஆவணி அவிட்டம்" என்ற நாளில் பூணூல் வாங்கி போட்டு கொள்ள வேண்டும். அனைவரும் பூணூல் வாங்கி அணிய வேண்டும்.. நம் பிரார்த்தனைகள் பலிக்க, நாம் செய்யும் மந்திர ஜபங்கள் சீக்கிரம் பலிக்க, நினைத்த காரியங்கள் நிறைவேற, வேதம் கற்ற ப்ராம்மணர்கள் கையால் "ஆவணி அவிட்டம்" என்ற நாளில், பூணூல் வாங்கி போட்டு கொள்ள வேண்டும்.
யாதவ குலத்தில் அவதரித்த கிருஷ்ணரும் சந்தியா வந்தனம் செய்தார். பூணூல் அணிந்து இருந்தாரே!!
ஆசாரியும், பொற்கொல்லனும், வியாபாரியும் பூணூல் அணிந்து இருந்தனரே!!..
நாம் அனைவருமே நம் "பெற்றோருக்கு" கடன் பட்டு இருக்கிறோம்..
ப்ரம்ம தேவன் வழி வந்த நாம் அனைவரும், "ரிஷிகளுக்கு' கடன் பட்டு இருக்கிறோம்.
நம் உடல் ஒழுங்காக வேலை செய்வதும், உலகில் மழை பெய்வதும், காற்று மெல்ல வீசுவதும் தேவர்களால் என்பதால், நாம் அனைவரும் "தேவர்களுக்கு" கடன் பட்டு இருக்கிறோம்..
ஆதலால் பூணூல் அனைவரும் அணிந்து இருக்க வேண்டும்..
நாம் செய்யும் தெய்வ பிரார்த்தனைகள் பலிக்கவாவது, அனைவரும் பூணூல் அணிந்து இருக்க வேண்டும்..
மனிதனாக பிறந்த யாருமே "இந்த மூன்று கடனை அடைக்காமல் வாழ்ந்தால்" பாவத்தை சேர்த்து கொள்கிறான்..
இந்த "மூன்று கடன் நம் தலையில் இருப்பதை உணர்த்தவே" பூணூல் அணிகிறோம்..
பூணூல் அணிந்து கொண்டே இருக்கும் போது,
தவறான காரியங்கள்,
ஒழுக்ககேடான செயல்கள்,
கோவில் சொத்தை திருட வாய்ப்பு கிடைத்தாலும்,
நம்மை செய்ய விடாமல், நம் மனசாட்சியே தடுத்து விடும்..
ஒரு CCTV கேமராவை வைக்கும் போது, அந்த இடத்தில் யாரும் இல்லாமல் போனாலும், தவறான செயல்கள் செய்ய அது தடுப்பது போல, பூணூல் என்ற CCTV கேமரா, ஆண்களுக்கு அணிவிக்கப்பட்டது..
சில சமயங்களில் தெரிந்தே சில தவறுகள் செய்தாலும், பெரும்பாலும், "பூணூல் அணிந்தவர்கள் தவறு செய்ய அஞ்சுவதை காணலாம்".
சிறையில் பெரும் குற்றத்தை செய்து விட்டு இருப்பவர்களில், 99% மக்கள் மாமிசம் உண்பவர்களாகவும், பூணூல் அணியாதவர்களாகவும் தான் உள்ளனர்..
குற்றத்தை குறைக்க வல்லது பூணூல்..
இதன் அர்த்தங்கள் புரிந்து,
பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் பூணூல் அணிய ஆரம்பித்தால், தானாகவே தனி மனித ஒழுக்கங்கள் சீர்பட்டு விடும்.
பூணூல் எதற்கு? அது என்ன உணர்த்துகிறது? என்று புரியாதவரை, இது வெறும் நூலாக தான் தோன்றும்..
பாரத மக்கள் விழிப்படைய வேண்டும்.. எதையும் ஆராய்ச்சி இல்லாமல் நம் முன்னோர்கள் செய்யவில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்..
பெரும்பாலான ஹிந்துக்கள் மகான்களிடம் பக்தி, தெய்வ பக்தி, பித்ரு பக்தி
கொண்டவர்களாக இருப்பதால், அனைவருக்கும் பூணூல் அணிவிக்கப்பட்டது.
ரிஷி கடனும் இல்லாத, தேவ கடனும் இல்லாத, பித்ரு கடனும் இல்லாத பரவாசுதேவன் நாராயணன், "நாம் அணிந்தால் அவர்களும் அணிவார்கள்" என்று தானும் பூணூல் போட்டு கொள்கிறார்.
"நாம் நெற்றியில் திலகம் இட்டு கொள்ள வேண்டும்" என்று காண்பிக்க, தானும் இட்டு கொள்கிறார்.
கருணையே வடிவான தெய்வங்கள் அல்லவா! நம் தெய்வங்கள்.
பெற்றோரை மதிக்காதவன், நமக்கு மேல் தேவதைகள் உண்டு என்று உணராதவன், ரிஷிகளின் யோக சாஸ்திரம், வான சாஸ்திரம், ஆயுர்வேதம் என்று எதையும் மதிக்காதவன்
மட்டுமே, "பூணூல் அணிவதை தவிர்க்க நினைப்பான்".. அப்படிப்பட்டவனை மனிதன் என்று மதிப்பதே வீண்.
பெற்றவனுக்கு நன்றி காட்ட நினைக்கும் அனைவரும்,
தேவதைகளுக்கு நன்றி காட்ட நினைக்கும் அனைவரும்,
ரிஷிகளுக்கு நன்றி காட்ட நினைக்கும் அனைவரும்,
கட்டாயம் பூணூல் அணிந்து கொள்ள வேண்டும்..
இது "ஒரு ரக்ஷை" என்று நாம் அனைவரும் உணர வேண்டும்.
ஒரு CCTV கேமராவை போல, நம் உடம்பில் இந்த பூணூல் இருக்கும் போது,
பெற்றோர் விரும்பாத செயல்களை செய்ய, நாம் தயங்குவோம்.
தேவர்கள் வெறுக்கும் உடல் ரீதியான காரியங்களை செய்ய தயங்குவோம்.
ரிஷிகள் வெறுக்கும் வாழ்க்கை முறையை வாழ தயங்குவோம்.
இனி,
பூணூலில் போடப்பட்டு இருக்கும் "ப்ரம்ம முடிச்சை" பற்றி அறிந்து கொள்ள முயற்சிப்போம்..
ஓம் என்ற பிரணவத்தின் ரிஷி "ப்ரம்ம தேவன்" என்று அறிகிறோம்.
(ப்ரணவஸ்ய ரிஷி: ப்ரம்மா)
"பிராணாயாமம்" என்ற இந்த மூச்சு பயிற்சிக்கும், இந்த "ப்ரம்ம முடிச்சுக்கும்" சம்பந்தம் உள்ளது...
பிராணாயாமம் செய்யும் போது, 8 மாத்திரைகள், "ராம ராம.." என்று நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு, இடது மூக்கு வழியாக பூரகம் செய்து (மூச்சை இழுத்து), 16 மாத்திரைகள், "ராம ராம.." என்று நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு, வலது மூக்கு வழியாக ரேசகம் (மூச்சை விட்டு) செய்ய வேண்டும்.
பின்னர், 8 மாத்திரைகள், ராம ராம என்று நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு, வலது மூக்கு வழியாக பூரகம் செய்து (மூச்சை இழுத்து), 16 மாத்திரைகள், "ராம ராம.." என்று நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு, இடது மூக்கு வழியாக ரேசகம் (மூச்சை விட்டு) செய்ய வேண்டும்.
இது "ஒரு எண்ணிக்கை".
இந்த எண்ணிக்கையை, 64 வரை எண்ணிக்கையை ஏற்றிக் கொண்டு போகலாம்.
இவ்வாறு 6 மாதம் செய்தால், இடது மூக்கில் ஆரம்பித்து, முதுகு தண்டை பாம்பு போல சுற்றி வந்து, "மூலாதார சக்கரம்" வரை செல்லும், 'இடா என்ற பெண் குணங்களை கொண்ட நாடி' சுத்தி ஆகி விடும்..
அதே போல, வலது மூக்கில் ஆரம்பித்து, முதுகு தண்டை பாம்பு போல சுற்றி வந்து, "மூலாதார சக்கரம்" வரை செல்லும், 'பிங்களா என்ற ஆண் குணங்களை கொண்ட நாடியும்' சுத்தி ஆகி விடும்..
நாடி சுத்தி பிராணாயாமத்தை,
6 மாதம் செய்து வந்தால் - இரண்டு நாடியும் (இடா, பிங்களா) சுத்தி ஆகி, "மூலாதார சக்கரம்" தூண்டப்பட்ட நிலையில், உடலில் ஆரோக்கியம், மனதில் அமைதி, புத்தியில் விவேகம் இவைகள் உண்டாகும். ஒருக்கால் "ஓங்கார நாதம்" கேட்கவும் கூடும்.
6 மாதத்தில் இரு நாடிகளும் சுத்தி ஏற்பட்டதும், இந்த இரு நாடிகளுக்கும் நடுவே, முதுகு தண்டின் நடுவில், மூலாதார சக்கரம் ஆரம்பித்து, மேல் நோக்கி சக்தியை செலுத்தும் குணமுடைய "சுஷும்னா" என்ற நாடி விழித்து விடும்.
இடா என்ற நாடியும், பிங்களா என்ற நாடியும் கீழ் நோக்கி சக்தியை செலுத்தும் குணம் கொண்டவை..
இந்த இரு நாடிகள் மட்டுமே, நமக்கு வேலை செய்கிறது..
நம் பிராண சக்திகள் காமத்துக்கும், கோபத்துக்கும் விரயம் ஆகிறது..
இந்த இரண்டு நாடிகள் தடையில்லாமல் சஞ்சரிக்கும் போது,
இந்த இரண்டு நாடிகள் சுத்தி ஆகும் போது,
மேல் நோக்கி செல்லும் சுஷும்னா என்ற நாடி விழித்து, இடா, மற்றும் பிங்களா என்ற நாடிகளிலிருந்து கீழ் நோக்கி வரும் சக்தியை, அப்படியே திசை மாற்றி முதுகு தண்டின் நடுவே மேல் நோக்கி பாய்ச்சுகிறது..
இந்த அனுபவம் பேரானந்தத்தை பயிற்சி செய்பவருக்கு கொடுத்து விடும்.
'இடா பிங்களா' நாடிகள் கீழ் நோக்கி சக்தியை எடுத்து செல்கிறது.
இது உலக விஷயங்களில் நம்மை இழுத்து செல்கிறது.
'சுஷும்னா' என்ற நாடி விழித்தெழும் போது, நம் ப்ராண சக்தி, மேல் எழும்பி செல்லும் போது, இது வரை அனுபவிக்காத நிலை ஏற்படும்.
சுஷும்னா நாடி தெய்வீக விஷயங்களில் நம்மை இழுத்து செல்லும். ஒரு சாரை பாம்பு எப்படி நெளிந்து நெளிந்து வேகமாக செல்லுமோ, அது போல, குண்டலினி சக்தி சுஷும்னா நாடியில் உயரே செல்லும்.
தெய்வ தரிசங்கள் ஏற்படுவதற்கு முன், ஸித்திகள் கை கூடும்.
இந்த ஸித்திகளில் மயங்கி விழுந்தால், பெற்ற சக்திகள் அந்த ஸித்திகளை அனுபவிப்பதில் செலவாகி, தெய்வ தரிசனம் கிடைக்காமல் போக செய்யும்.
எந்த ஞானி, இந்த ஸித்திகளை புறந்தள்ளி மேலும் முயற்சிக்கிறானோ, அவனுடைய பிராண சக்தி, சஹஸ்ரார சக்கரம் வரை சென்று, மோக்ஷத்தை நேரிடையாக பெற்று விடுகிறான். அந்த ஜென்மத்தோடு பிறப்பு இறப்பு என்ற சூழலில் இருந்து மீண்டு, வைகுண்டம் சென்று விடுகிறான்.
7 சக்கரங்களில், 'மூலாதார சக்கரத்தில்' உள்ள இந்த சுஷும்னா நாடி, மேல் எழும்பி 'சுவாதிஸ்டான சக்கரத்தை' தொட்டு விட்டால், உடல் ஆரோக்கியம் தானாகவே ஏற்பட்டு விடும்.. களைப்பே இல்லாத தேகத்தை பெற்று விடுவான்.. 'சுவாதிஸ்டான சக்கரம்' நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன், தனக்கும் இந்த உடலுக்கும் இடைவெளியை உணர்வான்..
இந்த இரு சக்கரத்தின் நடுவே ஒரு முடிச்சு உள்ளது.
இந்த முடிச்சுக்கே "ப்ரம்ம முடிச்சு" என்று பெயர்.
இதே ப்ரம்ம முடிச்சை தான் பூணூலில் வைத்து, "இந்த ப்ரம்ம முடிச்சை அவிழ்க்க முயற்சி செய்" என்று நமக்கு நினைவுபடுத்துகிறது..
பிராணாயாமம் செய்து, மூலாதார சக்கரத்தில் இருக்கும் சுஷும்னா நாடியை மேலே எழும்பி விட முடியும்..
ஆனால் வெறும் ப்ராணாயாமத்தால் மட்டுமே இந்த ப்ரம்ம முடிச்சை தாண்டி, அடுத்த சக்கரமான சுவாதிஸ்டான சக்கரத்தை அடைய முடியாது..
நம் மீது உள்ள பித்ரு கடனை, தேவ கடனை, ரிஷி கடனை உணர்ந்து, அதற்கான நன்றியை விடாமல் செய்து கொண்டிருந்தால்,
ரிஷிகளில் முதன்மையான ப்ரம்ம தேவன் கருணையால்,
அவர் படைத்த உலகை கண்டு, எதிர்கால பயம் ஏற்படாத நிலையை கொடுக்கிறார். தெய்வ பலம் தனக்கு இருப்பதை உணர்வதால், தானாகவே உலக பயம் விலக, ப்ரம்ம முடிச்சு தானாக அவிழ்கிறது..
ஸந்யாஸத்தை ஏற்றவர்கள், பூணூலை அவிழ்த்து விடுகிறார்கள்.
அவர்கள் குடும்பத்தை, சுகத்தை விட்டு சன்யாசம் ஏற்கிறார்கள்.
தெய்வ பலத்தை கையில் எடுக்கும் இவர்கள், எதிர்கால பயத்தை விட்டு விடுகிறார்கள். ப்ரம்ம முடிச்சு தானாக அவிழ்கிறது.
ஆதலால் பூணூல் இவர்கள் அணிவதில்லை.
மறுபிறவி எடுத்த சந்யாசமானாலும், தேவ கடனை, ரிஷி கடனை இவர்கள் விடுவதில்லை. தாயை விட்டுவிடுவதில்லை. ஆதி சங்கரர், சன்யாசம் ஏற்ற பின், தன் தாய் கடைசி காலத்தில் இருப்பதை அறிந்து, தாயை பார்க்க வந்து விட்டார்.
அவருடைய தாய், பரவாசுதேவனை எப்படியெல்லாம் பார்க்க ஆசைப்படுகிறாளோ, அப்படி எல்லாம் பார்க்க பரவாசுதேவன் நாராயணனை பிரார்த்திக்க, கிருஷ்ணராகவும், ராமராகவும், விஷ்ணுவாகவும், சிவபெருமானாகவும் தரிசனம் பெற்று, நற்கதி அடைந்தாள். ப்ரம்ம முடிச்சு அவிழ, தடைபட்ட ஓட்டம் விலகுகிறது...
நாடி சுத்தியால், எழுப்பப்பட்ட சுஷும்னா நாடி, மூலாதார சக்கரத்தை தாண்டி, மேலே உள்ள சுவாதிஸ்டான சக்கரத்தை அடைகிறது...
மேலும் பிராணாயாமம் கும்பத்தோடு (மூச்சை அடக்கி) செய்ய, செய்ய, சுஷும்னா நாடி மேலும் எழும்பி மணிப்பூரக சக்கரத்தை தூண்டுகிறது .
தொப்புளுக்கு நேரான முதுகு தண்டில் மணிப்பூரகம் சக்கரம் உள்ளது. மணிப்பூரகம் சக்கரம் தூண்டப்பட்ட மனிதன், கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான்.
இந்த இடத்தில் தான் நினைப்பது எல்லாம் தானாக நடக்க ஆரம்பிக்கும்.. மனிதர்கள் தானாக வந்து விழுவார்கள்...
மேலும் பிராணாயாமம் செய்ய, செய்ய, சுஷும்னா நாடி மேலும் எழும்பி இதயத்துக்கு நேராக உள்ள அனாகதம் சக்கரத்தை அடைய முயல்கிறது.
இந்த சக்கரத்தை அடைய விடாமல், ப்ரம்ம முடிச்சு இருந்ததை போன்று, இங்கு விஷ்ணு முடிச்சு தடுக்கும்...
இதையும் ப்ராணாயாமத்தால் மட்டும் அவிழ்க்க முடியாது...
விஷ்ணு பகவானை தியானித்து பக்தி செய்ய செய்ய, நம் புத்தியில் உள்ள சுயநலம் கரைந்து விடும்.. அவர் அணுகிரஹத்தால் தான் தன் முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது என்று தெளிவு ஏற்படுகிறது..
சுயநல எண்ணம் கரைய, விஷ்ணு முடிச்சு அவிழ, சுஷும்னா நாடி மேலும் எழும்பி இதயத்துக்கு நேராக உள்ள 'அனாகதம் சக்கரத்தை' அடைகிறது.
இந்த சக்கரம் தூண்ட படும்போது, உலகத்தில் யாரை பார்த்தாலும் ப்ரம்ம ஸ்வரூபமாகவே தோன்றும்...
பிரகலாதன் எதை பார்த்தாலும் அதில் நாராயணன் இருப்பதை பார்த்தது போல, யாரை பார்த்தாலும் தோன்றும்.. எதை பார்த்தாலும் தோன்றும்.. மனதில் அன்பு பெருகும்.. அன்பே உருவாக ஆகி விடுவார்கள்..
சில சமயங்களில் படைக்கும் சக்தியும் பெற்று விடுவார்கள்..
மேலும் முயற்சி செய்ய, சுஷும்னா நாடி மேலும் எழும்பி, கழுத்துக்கு நேராக உள்ள விசுக்தி என்ற சக்கரத்தை அடையும். இந்த சக்கரம் தூண்டப்படும் போது, வரும் தீமைகளை தடுத்து நிறுத்தும் சக்தி ஏற்படும்.
மேலும் பிராணாயாமம் செய்ய, செய்ய, சுஷும்னா நாடி மேலும் எழும்பி நெற்றியின் நடுவில் உள்ள ஆக்கினை சக்கரத்தை அடைய முயல்கிறது.
இந்த சக்கரத்தை அடைய விடாமல், ப்ரம்ம முடிச்சு, விஷ்ணு முடுச்சு இருந்ததை போன்று, இங்கு ருத்ர முடிச்சு தடுக்கும்...
தான் எப்படி ஒரு ஆன்மீக முன்னேற்றத்தை பெற்று விட்டோம் என்ற கர்வம் இருக்கும் வரை, ஆக்கினை சக்கரத்தை அடைய முடியாது.
கர்வத்தை ஈஸ்வரனிடம் தொலைத்து, சரணாகதி செய்தால், ருத்ர முடிச்சு தானாக அவிழ்ந்து, ஆக்கினை சக்கரத்தை தூண்டுகிறது...
மூன்றாவது நெற்றி கண் போல, ஞானம், பேரறிவு போன்றவை உண்டாகும்.
கடைசியாக குண்டலினியாகிய மின்னல் கொடி (பிராண சக்தி), ஆறு விதமான ஜோதிகளை (சக்கரம்) தாண்டி, பரஞ்ஜோதியை (சஹஸ்ரார சக்ரம்) அடைந்து, இரண்டற கலந்து விடும்.
இதுவே முக்தி நிலை.
ப்ராணயாமத்தில் ஸித்தி பெற்றவனுக்கு, சமாதி தானே கை கூடும்.
ப்ராணயாமத்தில் ஸித்தி பெறாதவன், ப்ரத்யாஹாரம், தாரணை, தியானம் போன்ற வழியில் சென்றும் "சமாதி" நிலையை அடையலாம்.
நம் ஹிந்து தர்மத்தில் எதற்கும் காரணம் உண்டு.
"ஓம் நம சிவாய", "நமோ நாராயண" என்று நாம் சொல்லும் ஸ்தோத்திரங்கள் பலிக்க, தெய்வ அனுக்கிரஹம் நமக்கு பலிக்க, நம் மீது உள்ள தேவ கடனை, ரிஷி கடனை, பித்ரு கடனை கழிக்க, பூணூல் தேவை.நாம் அனைவருமே பூணூல் அணிந்து கொள்ள வேண்டும்.
இதை வேதம் கற்ற வேதியர்களிடம், "ஆவணி அவிட்டம்" அன்று அனைவரும் மிகுந்த மதிப்புடன், மரியாதையுடன் வாங்கி பெற்று போட்டு கொள்ள வேண்டும்.
ஆவணி அவிடத்தில் வேதியர்கள் வேத மந்திரங்கள் சொல்லி புது பூணூலை கொடுப்பதால், நாம் சொல்லும் பிரார்த்தனைகள் உடனே பலிக்கும்.
திருமணம் ஆன பின், மேலும் ஒரு பூணலை போட்டுக்கொள்கிறான். இங்கு, தன் மனைவிக்கு இருக்கும் இந்த மூன்று கடனையும் தான் ஏற்று கொண்டு, மேலும் பொறுப்பை ஏற்கிறான். அவளின் தெய்வீக பாதைக்கும், தான் உழைக்கிறான். பத்னி இதனால், கணவனுக்கு நன்றியுடன், தர்மத்தில் இருந்து, அவனை தாயாக, துணைவியாக பார்த்து கொள்கிறாள். மூன்றாவது பூணூல் கிடையாது. ஆனால் பிராம்மணர்கள் அங்க வஸ்திரம் இன்று அணியாமல் இருப்பதால், மூன்றாவது பூணூலை அங்கவஸ்திரமாக போட்டு விடுகிறார்கள். சட்டை அணியாத, அங்க வஸ்திரம் அணிந்தே இருக்கும் வேதியர்கள், இந்த மூன்றாவது பூணூலை அணிவதில்லை.