Followers

Search Here...

Showing posts with label காரணம். Show all posts
Showing posts with label காரணம். Show all posts

Saturday 22 August 2020

சீதையை ராவணன் ஏன் நெருங்கவில்லை.. அத்தனை நல்லவனா ராவணன்? ராவணனே இதற்கு காரணம் சொல்கிறான்.. தெரிந்து கொள்வோமே....வால்மீகி ராமாயணம்

ராமர் இல்லாத சமயத்தில், சீதையை கடத்தி சென்றான் ராவணன்

தன்னை ஏற்பதற்காக, சீதைக்கு 1 வருடகால அவகாசம் கொடுத்தான்.

சீதையை ராவணன் ஏன் நெருங்கவில்லை.. அத்தனை நல்லவனா ராவணன்?

ராவணனே இதற்கு காரணம் சொல்கிறான்... தெரிந்து கொள்வோமே....

வால்மீகி ராமாயணம் - யுத்த காண்டம்:
ராமபிரான் வானர படைகளுடன், மகேந்திர மலை, சஹ்ய மலை, மலய மலையை தாண்டி, வேலாவனம் என்ற காட்டை தாண்டி, கடற்கரை அருகில் வந்து விட்டார் (இன்று ராமேஸ்வரம் என்று சொல்கிறோம்).


"கடலை கடந்து இலங்கை வந்து விட்டால் என்ன செய்வது? 

ஒரு வானரன் ஹனுமான் வந்தே இலங்கையை கலங்கடித்து விட்டான். கோடிக்கணக்கான வானரர்கள் உள்ளே நுழைந்தால்? இனி என்ன செய்ய வேண்டும்?"

என்று ராவணன் சபை கூட்டி, மந்திரிகளிடம் ஆலோசனை நடத்தினான்.


ராக்ஷஸர்கள் பலர், படைத்தளபதி ப்ரஹஸ்தா, வஜ்ரதம்ஸ்ட்ரா, நிகும்பன் (கும்பகர்ணன் பிள்ளை) ஆகியோர் ராவணனுக்கு ஆதரவாக பேசினார்கள். 

பிறகு விபீஷணன் பேசினார்.

விபீஷணன் மட்டும் "சீதையை தகுந்த மரியாதையுடன் திருப்பி அனுப்பி விடு" என்றார்.. 

உடனேயே சபையை கலைத்து விட்டு, வெளியே சென்று விட்டான் ராவணன்.


பிறகு ராவணன் அரண்மனைக்கு சென்று மீண்டும் விபீஷணன் சொல்லி பார்த்தார். 

"சீதையை அனுப்ப முடியாது" என்று மீண்டும் நகர்ந்தான்.


அடுத்த நாள், மீண்டும் சபை கூட்டினான் ராவணன்.


ஆறு மாத தூக்கத்துக்கு பின், சபைக்கு வந்து இருந்தான் கும்பகர்ணன்.

கும்பகர்ணன் ராவணன் செய்த இந்த பேடிதனமான காரியத்தை கடுமையாக கண்டித்தான்.. இருந்தாலும் 'ராமரை கொன்று யமலோகம் அனுப்புவேன். கவலைப்படாதே!' என்று சொல்லி அமர்ந்தான்.


ராவணன் ஆத்திரத்தில் இருந்தான்.

பிறகு மஹா பலசாலியான 'மஹாபார்ஷ்வன்' என்ற ஒருவன், ராவணனை பார்த்து கை குவித்து பேசினான்..

"ராமன் ஒரு சிறு பொடியன். அவனுக்கு மரத்தில் இருக்கும் தேன் கூட்டில் உள்ள தேனை கூட எடுக்க முடியாது.

நீங்கள் ஈஸ்வரன். 

ஈஸ்வரனுக்கே யார் ஈஸ்வரனாக முடியும்?

எதிரிகளை ஒடுக்க, சீதையை பலாத்காரம் செய்யுங்கள். 

அவளை அனுபவித்து விடுங்கள். பிறகு ஏற்படும் விளைவுகளை நாம் பார்த்து கொள்ளலாம்.

கும்பகர்ணன், உங்கள் மகன் இந்திரஜித் உங்களுடன் இருக்கும் போது, அந்த இந்திரன் தன் ஆயுதங்களை வீசினாலும் தடுத்து விடுவார்கள்.

சீதை திருப்பி கொடுப்பதோ (தானம்), சமாதானமோ, பேதமோ இங்கு தேவையே இல்லை. தேவைப்பட்டால் போர் செய்வோம்.

நம்மை எதிர்த்து எவன் வந்தாலும், அவன் மீது நம் ஆயுதங்கள் பாயும்"

என்று ராவணனுக்கு சாதகமாக பேசினான்.
மஹாபார்ஷ்வன் பேசிய வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து, ராவணன் அவனுக்கு பதில் அளித்தான்.

"மஹாபார்ஷ்வா! நான் சொல்வதை கவனி. இது எனக்கு மட்டுமே இருந்த ரகசியம்.

மஹாபார்ஷ்வ நிபோதம் த்வம் 

ரஹஸ்யம் கிஞ்சித் ஆத்மன: 

- வால்மீகி ராமாயணம்

இது பல காலங்கள் முன் நடந்த ஒரு சம்பவம். நானே அதை உனக்கு சொல்கிறேன்.

சிர வ்ருத்தம் ததாக்யாஸ்தே 

யத் அவாப்தம் மயா புரா

புஞ்சிகஸ்தலா என்று ஒரு தேவ கன்னிகை, சத்ய லோகத்தில் உள்ள ப்ரம்ம தேவனை பார்க்க ஆகாய மார்க்கமாக அக்னியை போன்று சென்று கொண்டிருந்தாள்.

பிதாமஹஸ்ய பவனம் 

கச்சந்திம் புஞ்சிகஸ்தலாம் | 

சஞ்சூர்யமானாம் அத்ராக்ஷம் 

ஆகாசோ அக்னி சிகாமிவ ||

அவளை பலாத்காரம் செய்து அனுபவித்தேன்.

கலங்கிய குட்டை போல ஆன அவள், ப்ரம்ம தேவன் இருக்கும் சத்ய லோகத்துக்கு ஓடினாள்.

சா பிரசஹ்ய மயா புக்தோ

க்ருதா விவசனா தத: | 

ஸ்வயம்பு பவனம் ப்ராப்தா

லோலிதா நளினி யதா ||

மஹாத்மாவான ப்ரம்ம தேவன் நடந்ததை அறிந்து கொண்டார்.

என் மீது கோபப்பட்டு என்னை சபித்தார்.

தஸ்ய தச்ச ததா மன்யே

ஞாதம் ஆஸீன் மஹாத்மனா |

அத சங்குபிதோ தேவோ மாம்

இதம் வாக்யம் அப்ரவீத் ||

'இனி எந்த ஒரு பெண்ணையாவது பலாத்காரம் செய்து கெடுக்க நீ முயன்றால், உன் தலை சுக்கு நூறாகி போகட்டும்' என்று சொல்லி விட்டார்.

அத்ய ப்ரப்ருதி யாம் அந்யாம்

பலான் நாரீம் கமிஸ்யாமி |

ததா தே சதகா மூர்கா

பலிஸ்யதி ந சம்சய: ||

இந்த சாபத்தின் பயத்தால் தான், சீதையை பலாத்காரம் செய்யாமல் இன்று வரை இருக்கிறேன்."

இத்யஹம் தஸ்ய சாபஸ்ய

பீத: ப்ரசபம் ஏவ தாம் |

நாரோபயே பலாத் சீதாம்

வைதேகீம் சயனே சுபே ||

என்று பதில் சொன்னான்.


எப்படிப்பட்ட கீழ்த்தரமான புத்தி கொண்ட ராவணன்!! என்று அறிந்து கொள்ளலாம்.

இப்படி, 

கீழ்த்தரமான புத்தி கொண்ட ராவணன், சாபத்துக்கு பயந்து, பிறர் மனைவியான சீதையை விடவும் மனம் இல்லாமல், 'ஒரு வருட காலம் தந்தாவது, சீதையின் மனதை மாற்றி விட வேண்டும்' என்று முயற்சி செய்து கொண்டிருந்தான்.
"பிறர் மனைவியை தொட நினைத்த ராவணனை ஆதரிப்பவன், எத்தனை கீழ்த்தரமானவனாக இருக்க வேண்டும்?" 

என்று நாம் தீர்மானிக்கலாம்.


தன் சொந்த சகோதரனனாலும், பலம் பொருந்தியவனனாலும், செல்வாக்கு மிகுந்தவனனாலும், அரசனே என்றாலும்

பிறர் மனைவியை அபகரித்து வைத்து இருந்த ராவணனை, மீண்டும் 3வது முறையாக சொல்லி பார்த்தார் விபீஷணன்


சபையில் அனைவருக்கு எதிராக எட்டி உதைத்து, 'நீ அந்த ராமனிடமே போ!' என்றான் ராவணன்.

'கீழ்தரமான இவனிடம் இனியும் இருக்க கூடாது' என்று 

விபீஷணன் ராமபிரானை சரண் அடைவோம் என்று முடிவு செய்து கிளம்பினார்.

சாபத்துக்கு பயந்த இந்த பேடி ராவணனை, உயர்த்தி புகழும் சிலரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?...

Monday 5 August 2019

ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? Non Veg சாப்பிட கூடாது என்று சொல்வதற்கு காரணம் என்ன?

"பிற உயிர்களை முடிந்தவரை 'ஹிம்சிக்காமல்' இருக்க மனிதன் முயற்சி செய்ய வேண்டும்" என்று வேத சாஸ்திரம் சொல்கிறது.


தன் வயிரே பெரிதென நினைக்கும் பொய் மதங்கள்,
"பிற மனிதர்களை ஹிம்சை செய்யாதே" என்ற அளவுக்கு மட்டும் சொல்லி, விலங்கு, செடிகளை உயிர்களாகவே சேர்த்து கொள்வதில்லை.

இன்று அறிவியல் (Science) "விலங்கும், செடிகளும் கூட உயிர்கள் (Living Being) தான்" என்று உலகம் தட்டை சொல்லி திரிந்த இந்த பொய் மதங்கள் கொள்கைகளை வீதிக்கு கொண்டு வந்து காட்டுகிறது.

"அஹிம்சா பரமோ தர்ம:" -
"பரமாத்மாவை நெருங்க அஹிம்சை மிக முக்கிய தர்மம் (அறம்/rule)" என்று சாஸ்திரம் சொல்கிறது.

மனித பிறவியில் தான் "பரமாத்மா என்று ஒருவர் இருக்கிறார்" என்று சிந்திக்க முடியும்.
மற்ற உயிர்களான விலங்குகள், மரங்களால் "நம்மை படைத்தவன் யார்?" என்று சிந்திக்க முடியாது..
மனித வாழ்வின் லட்சியம் "பரமாத்மா வாசுதேவனை அடைவதே".

நம்மை போலவே, பய உணர்ச்சி, வலி உணர்வுகள் கொண்ட விலங்குகளை தின்பது மகா பாவம்.
மனிதன் "பாவத்திற்கு" அஞ்ச வேண்டும்.
நாம் செய்யும் "பாவங்கள்" தான் உலகத்தில் நாம் அனுபவிக்கும் பலவகை "துன்பங்களாக" நமக்கு திருப்பி தரப்படுகிறது.
இந்த ஜென்மத்தில் செய்த பாவம் மட்டும் நம்மிடத்தில் இல்லை.
"பல கோடி ஜென்மங்களாக" நாம் செய்த பாவ மூட்டைகள், நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், மேலும் பாவ மூட்டையை அதிகரித்து கொள்ள மனிதன் அஞ்ச வேண்டும். 

"துன்பங்கள் ஏற்படும்" என்று தெரிந்தே, நாமாக பாவங்களை சேர்த்துக்கொள்ள கூடாது.
முடிந்தவரை "பாவ காரியங்கள்" செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

வாழ்வதற்கு உணவு தேவையே தவிர, மாமிசம் தேவை இல்லை.
ராணுவம் போன்ற க்ஷத்ரிய தொழில் செய்தால்,
கூடுதல் உடல் பலத்திற்கும், தன் உயிரே போக கூடிய வாய்ப்பு உள்ள வீரர்கள் வேண்டுமானால் மாமிசம் எடுத்துக்கொள்ளலாம் என்று இவர்களுக்கு மட்டும் அனுமதி தருகிறது சாஸ்திரம்.

பொதுவாக,
மனிதன் வாழ்வதற்கு, "மாமிசம் தான் தேவை" என்று இல்லை.

மனிதனால் காய் கனிகள் சாப்பிட்டும் வாழ முடியும்.
வலியை, மரண பயத்தை அனுபவிக்க செய்து, ஒரு விலங்கை தின்பதை காட்டிலும், காய் கனிகளை சாப்பிட்டு மனிதன் உயிர் வாழ முடியும்.

விலங்குகளை கொன்று ஜீவ ஹிம்சை செய்யாமல், காய், கனிகளை உண்டு மனிதன் வாழ வேண்டும்.

சில காய்கள், தானியங்கள் பெறுவதற்கு, அந்த செடியையே கொலை செய்ய வேண்டி இருக்கிறது.

கொலை செய்யபடும் விலங்குகள் மரண வேதனையை அனுபவிக்கிறது என்று மனிதன் தன் கண்களாலேயே புரிந்து கொள்ள முடியும்.
ஆனால்,
"அரிசி, கிழங்கு வகைகள்" பெறுவதற்கு செடிகள் வேரோடு பிடுங்கப்படும் போது, மனிதன் தன் கண்ணால் விலங்குகளின் வேதனையை புரிந்து கொள்வது போல, செடியின் வேதனை புரிந்து கொள்ள முடியாது.

விலங்குகளை போன்று செடிகளுக்கு வலியும், பயமும் இல்லை. ஆனால் உணர்வு உண்டு.
"தன்னை வெட்ட வருகிறான் என்பதை செடிகள் புரிந்து கொள்கின்றன" என்று அறிவியல் சொல்கிறது.

விலங்குகள் வேதனையை மனிதன் நேரில் பார்த்து புரிந்து கொள்வது போல, செடிகள் உணர்வை புரிந்து கொள்ள முடியாததாலும்,
விலங்குகளை போன்று செடிகளுக்கு வலியும், பயமும் இல்லை, ஆனால் உணர்வு மட்டும்  உண்டு என்பதாலும். ஜீவ ஹிம்சையில் விலங்குகளை விட செடிகள் படும் அவஸ்தை குறைவே..
இதன் காரணத்தால், மனிதர்களுக்கு காய், கனிகள், தானியங்கள் சாப்பிட அனுமதித்தனர்.
மனிதனாக பிறந்த அனைவரிடத்திலும் எதிர்பார்க்கும் அடிப்படை எதிர்பார்ப்பு "புலால் உண்ணாமை".

ஆன்மீக வளர்ச்சியில் மேலும் பக்குவப்பட ஆசைபடுபவர்கள், செடிகளை வேரோடு வெட்டி எடுக்கப்படும் காய் கனிகளை கூட முடிந்தவரை தவிர்க்கின்றனர்.
செடியை பிடுங்காமல், கிடைக்கும் வாழைக்காய், முருங்கைகாய், கத்திரிக்காய், பழங்கள் மட்டுமே சாப்பிட்டு,
முடிந்தவரை செடிகளிடத்திலும் ஜீவ ஹிம்சை செய்யாமல், விரதங்கள் அனுஷ்டித்து, தன் ஆன்மீக வளர்ச்சிக்கு முயல்கின்றனர்.

துருவன் பரவாசுதேவன் நாராயணனை காண தபசுக்கு சென்றான்.
முதல் மாதம் நாராயண நாமத்தை ஜபித்து, வெறும் காய் கனிகளை மட்டும் பறித்து தன் பசிக்கு உணவாக எடுத்து கொண்டான்.

அடுத்த மாதம், பறித்தாலும் ஜீவ ஹிம்சை தானே என்று, மரத்தில் இருந்து தானாக விழுந்த பழங்களை மட்டும் உணவாக எடுத்து கொண்டான்.
3வது மாதம், விழுந்த பழங்களை பறவைகள் சாப்பிடட்டுமே என்று, அதையும் விட்டு விட்டு, காய்ந்த இலைகளை கசக்கி அதையே உணவாக உட்கொண்டான்.


4வது மாதம், அதுவும் வேண்டாம் என்று, யமுனை நதியில் ஓடும் தண்ணீரை மட்டுமே பருகி கொண்டு, நாராயண தியானத்தில் இருந்தான்.

5வது மாதம், ஜலத்தையும் விட்டு, காற்றையே உணவாக உண்டு, நாராயண தியானத்தில் இருந்தான்.

கோடி கோடி ஜென்மங்கள் முயற்சி செய்தாலும் காட்சி தராத பெருமாள், ஜீவ ஹிம்சையை குறைத்து கொண்டு, நாராயணனை தரிசிக்கும் ஆசை கொண்டிருந்த 5 வயது துருவனுக்கு 5 மாதத்தில் காட்சி கொடுத்து விட்டார்.
துருவன் புகழ் உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்க, துருவனின் பூலோக காலம் முடிந்த பிறகு, தனியாக துருவ நக்ஷத்திரம் ஒன்றை படைத்து அங்கு நிரந்தரமாக இருக்க அணுகிரஹித்தார் பெருமாள்.

மேலும்,
இப்பொழுது உள்ள ப்ரம்ம தேவன் ஆயுசு வரை துருவ மண்டலத்தில் இருந்து, ப்ரம்ம தேவன் மோக்ஷம் என்ற வைகுண்டம் அடையும் போது, துருவனையும் வைகுண்டத்தில் சேர்த்து கொள்வதாக அணுகிரஹம் செய்தார் பெருமாள்.

அஹிம்சா பரமோ தர்ம: 
"பரமாத்மாவை நெருங்க அஹிம்சை மிக முக்கிய தர்மம் (அறம்/rule)" என்று சொல்கிறது.

வெறும் காற்றையே உணவாக, காய்ந்த இலைகளே உணவாக, பழங்களே உணவாக உண்டு, துருவனை போல அஹிம்சை என்ற ஜீவ காருண்யத்தை நம்மால் கடைபிடிக்க முடியாது.
ஆனால்,
மாமிசம் உண்ணாமல், காய் கனிகள் உண்ணும் அளவிளாவது நாம் இருக்க வேண்டும். 

நம்மை ஒரு கொசு கடித்தாலே எத்தனை வேதனையை அனுபவிக்கிறோம்?!..
ஒரு விலங்கு கொலை செய்யப்படும் போது, அது அனுபவிக்கும் வேதனையை நினைத்து பார்த்தாலேயே, ஜீவ காருண்யம் நம் இதயத்திலும் உருவாகும்.
ஜீவ காருண்யம் என்ற எண்ணம் நமக்கு உண்டாகும் போது, புலால் உண்ண வேண்டும் என்ற ஆசை அழியும்..
"பாவத்திற்கு" மனிதன் அஞ்ச வேண்டும்.

"விலங்குகளுக்குள்ளும், செடிகளுக்குள்ளும், மனிதர்களுக்குள்ளும், இருப்பது ஜீவனே (உயிரே)" என்று அறிந்து இருந்த ஹிந்துக்கள் வாழ்க.

ஜீவ காருண்யமே "புலால் உண்ணாமைக்கு முக்கிய காரணம்".

ஜீவ காருண்யம் அதிகப்பட, மனிதன் மிருக புத்தியில் இருந்து, மனிதனாகிறான்.
மேலும் ஜீவ காருண்யம் அதிகப்பட, மனிதன் யோகி, ரிஷி, முனி, ப்ரம்ம நிஷ்டன் என்று முன்னேறுகிறான்.
நாம் ரிஷியாக வேண்டாம்...
நாம் யோகியாக வேண்டாம்..


குறைந்த பட்சம், மனித குணங்களை கொண்ட மனிதனாக இருப்போம்.


Monday 11 June 2018

எல்லா துன்பங்களுக்கும் காரணம் பூர்வ கர்மமே

எல்லா துன்பங்களுக்கும் காரணம் பூர்வ கர்மமே:
* பிறர் மனைவியை காமத்துடன், பார்த்தவன் குருடனாகிறான்.
* பிறர் பொருளை திருடினவன், முடவனாகிறான்.
* பொய் சாட்சி சொல்பவன், ஊமை ஆகிறான்.
* அவதூறுகளை கேட்டவன், செவிடனாகிறான்.
* பிறர் ஜீவனத்தை கெடுத்தவன், தரித்ரனாகிறான்.
* பாப காரியத்துக்கு, துணை போனவன் நொண்டியாகிறான்.
* தம்பதிகளை பிரித்தவன்,, பால்ய விதவையாகிறான்.
* கர்ப்பத்தை கரைத்தவன், நபும்ஸனாகிறான்.
* சிசுவை கொன்றவன், பிள்ளை இல்லாதவனாகிறான்.
* அதிதிக்கு அன்னமிடாதவன், வயிற்று வலியடைகிறான்.

இவ்வாறு உலகில் உள்ள எல்லா துன்பங்களுக்கும் காரணம் பூர்வ கர்மமே ஆகும்.

கர்ம பலனைத் தருவதின்றி, கருணா ஸாகரமான பகவான், யாரையும் சுதந்திரமாக துன்பப்படுத்த மாட்டான்.


Sunday 10 June 2018

திருடுவது தவறு. கண்ணபிரான் ஏன் வெண்ணை திருடினார்? தெரிந்து கொள்வோம்...

ஸ்ரீ கிருஷ்ண பகவான். காரணமே இல்லாமல் ஒரு காரியமும் செய்ததில்லை.
குழந்தை கிருஷ்ணன்  வெண்ணெய் திருடுவது மட்டும் காரணம் இல்லாமல் இருக்குமா?
ராம அவதாரத்தில் ஏக பத்னி வ்ரதனாகவும், கம்பீர புருஷனாகவும் வாழ்ந்து காட்டினார்.
அரசனின் சந்ததி மிக முக்கியம் என்ற காரணத்தால் அரசனுக்கு மட்டும் பல திருமணம் அனுமதிக்கப்பட்டது.
இப்படி இருந்தும், ஏக பத்னி வ்ரதனாகவே இருந்தார் ஸ்ரீ ராமர்.

அவர் அனைவரிடமும் பேதம் இல்லாமல் அன்புடன் பழகுவார் என்றாலும், அவரை பார்த்தாலே அவர் கம்பீரம் அவரை நெருங்க விடாமல் தடுக்குமாம்.

ராமர், ஹனுமானின் பக்திக்கு ஈடு இல்லை என்று சொல்லி ஆலிங்கனம் செய்து கொள்கிறார்.


ஸ்ரீ ராமர் இத்தனை சுலபமாக இருந்தாலும், ஹனுமான் ஸ்ரீ ராமரின் கம்பீர தோற்றத்தை பார்த்து நெருங்க முடியாமல், அவர் அருகில் நெருங்கி கை கூப்பி நிற்கிறார். சகஜமாக பேச முடிவதில்லை.
ஹனுமனுக்கே இப்படி நிலை என்றால், எத்தனை ரிஷிகளுக்கு, ஸ்ரீ ராமர் 'பகவான்' என்று தெரிந்தும் பழக முடியாத படி, இவர் கம்பீரமாக உள்ளாரே என்று நினைத்து இருப்பார்கள்?
கம்பீரத்தை காட்டினால், பக்தன் தன்னை நெருங்க கூசுகிறான், என்பதால், விஷ்ணு தன் அடுத்த அவதாரமான கிருஷ்ண அவதாரத்தில் மிகவும் சுலபமாக தன்னை ஆக்கி கொண்டு, சிரித்து கொண்டு, அனைவரிடமும் சகஜமாக உறவு சொல்லிக்கொண்டு பழகினார்.

இவர் பகவத் கீதையை அர்ஜுனனுக்கு சொல்லும்போது குருவாக இவர் ஞானத்தை உபதேசிக்கும் போது கூட,
அர்ஜுனன் தேரின் மேல் அமர்ந்து கோண்டே, கிருஷ்ணர் சாரதியாக கீழே அமர்ந்து கொண்டே சொன்னார்.
அர்ஜுனன் "கிருஷ்ணர் தன் நண்பன் தானே" என்று நினைக்கும் அளவிற்கு தன்னை சுலபமாக்கி கொண்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.

இன்று வரை யாரும் சுலபமாக நினைக்கும் படியாக தன் ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தை செய்து கொண்டார்.

இதில் மிகவும் ரசிக்கும் படியாக இருப்பது, குழந்தை பருவம் (little krishna).
இவர் செய்த வெண்ணெய் லீலை மிக பிரசித்தம்.
கோகுலத்திலேயே பணக்காரர், ஊர் தலைவன் நந்தபாபா.
இவர் வீட்டில் இல்லாத வெண்ணெயா!! மற்றவர்கள் வீட்டில் இருக்க போகிறது?

திருடுபவன் வெண்ணையா திருடுவான்?
அதுவும் கோகுலத்தில் இருக்கும் வரை தான் இந்த லீலை! ஸ்ரீ கிருஷ்ணர் செய்தார் என்பதை கவனிக்க வேண்டும்.
ஸ்ரீ கிருஷ்ணர் குழந்தையாக இருக்கும் போது, யாராவது "கிருஷ்ணா.. இந்தா வெண்ணெய். சாப்பிடு" என்று கொடுத்தால், "வேண்டாம். எனக்கு வெண்ணெய் பிடிக்காது."
என்று சொல்லி சிரித்துக்கொண்டே மறுப்பான்.

கோகுலத்தில் இன்று சென்றாலும் கூட, தயிர், மோர், வெண்ணெய் பிரசித்தம்.

கோபியர்கள் வெண்ணெய் தயாரித்து தினமும் அருகில் உள்ள மதுராவில் கொண்டு போய் வியாபாரம் செய்வார்கள்.
இவர்கள் தயாரிக்கும் வெண்ணெய்
  • வெண்மையாக இருக்கும். 
  • அதே சமயம், மிருதுவாக இருக்கும். 
  • கொஞ்சம் வெயில் பட்டாலும் இளகி விடும்.
இப்படி அருமையாக செய்த வெண்ணெயை, அவர்கள் வீட்டில் மிக உயரத்தில் யாருக்கும் தெரியாதபடி ஒளித்து வைத்து விடுவர்.
கண்ணன், யாருமில்லாத சமயம் பார்த்து, மெதுவாக சென்று, ஏறி கண்டுபிடித்து, வெண்ணையை எடுத்து சாப்பிட்டு, காலியான பானையையும் உடைத்து விட்டு சிரிப்பான்.

இந்த லீலை குழந்தை விளையாட்டு போல இருந்தாலும், பகவான் செய்யும் லீலைகளில் காரணம் இருக்குமே !

கிருஷ்ண பக்தன், தன் பக்தியை மற்றவர்களுக்கு வெளி காட்டாமல் உலகத்திற்கு பயந்து தன்னை ஒளித்துக்கொள்வான்.
உலக விஷயங்களில் நாட்டமில்லாமல், உயர்ந்த லட்சியமான "கிருஷ்ண பக்தியே லட்சியம்" என்று இருப்பான்.
அவன் மனதும் மிகவும் ம்ருதுவானதாக இருக்கும்.
'கிருஷ்ணா' என்ற சொல்லை கேட்டாலே மனம் இளகி விடும்.
மனதை எப்பொழுதும் தூய்மையாக வைத்து இருப்பான்.

இப்படி தன் பக்தியை மறைத்து கொண்டு உலகத்திற்கு தன்னை வெளிப்படுத்தி கொள்ள பயந்து கொண்டு இருக்கும் மகாத்மாக்களை, யார் கவனிக்கிறார்களோ இல்லையோ, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கவனிக்கிறார்.
இப்படிப்பட்ட ஞானிகளுக்கு தானே, வலிய சென்று தன்னை வெளிக்காட்டுகிறான். 

"ஒளிந்து இருக்கவே ஆசைப்படும் தன் பக்தனை" உலகிற்கு காட்டி மகிழ்கிறார்.
"சூரதாஸ், மீரா, ஆழ்வார்கள், ராமகிருஷ்ணர், கிருஷ்ண  சைதன்யர், துளசி தாசர்..." என்று தன்னை பற்றி வெளிக்காட்டி கொள்ளாத எத்தனை மகாத்மாக்கள், இந்த பாரத பூமியில் இருந்தார்கள், இருக்கிறார்கள்.

உண்மையான பக்தனை, கிருஷ்ண பரமாத்மாவே உலகிற்கு காட்டி விடுகிறார் என்று பார்க்கிறோம்.

குழந்தையாக இருந்த போது "வெண்ணெய் திருடும் லீலையாக" இந்த ரகசியத்தையே காட்டினார் ஸ்ரீ கிருஷ்ணர்.
  1. உயரத்தில் வைத்த வெண்ணையை போல, நம் பக்தியை உயர்வான கிருஷ்ணரிடம் வைத்தோம் என்றால், 
  2. ஒளித்து வைத்த வெண்ணையை போல, நமக்கும் கிருஷ்ணருக்கும் உள்ள பக்தியை ரகசியமாக வைத்துக்கொண்டோம் என்றால்,
  3. வெண்மையாக இருக்கும் வெண்ணெய் போல, நாமும் மன தூய்மை உள்ளவராக இருந்தோம் என்றால்,
  4. துளி வெயில் பட்டாலே உறுகிவிடும் வெண்ணெய் போல, நம் இதயமும் 'கிருஷ்ணா' என்ற சொல் கேட்டவுடனேயே மனம் உருகும் என்றால்,
  5. மிருதுவாக இருக்கும் வெண்ணெய் போல, நம் குணமும் மிருதுவாக இருக்கும் என்றால்,
ஸ்ரீ கிருஷ்ணனே வந்து, அந்த வெண்ணெய்  போன்ற மனதை தான் உண்டு, பானையை உடைப்பது போல, இந்த பிறவி கடலை உடைத்து, வைகுண்ட வாசலை திறந்து விடுகிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

நம் வீட்டிலோ, கோவிலிலோ, நாமும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு வெண்ணெய் கொடுக்கும் போது, "அழுக்கான இந்த மனதையும்,  இந்த வெண்ணெய் போன்று தூயமையாகவும், ம்ருதுவாகவும், இளகும் படியாகவும் ஆக்கு" என்று பிரார்த்திக்க வேண்டும்.

மகான்களின் குணத்தை போன்று, நாமும் நமக்கு இருக்கும் சிறு பக்தியை மற்றவர்களுக்காக ஆடம்பரத்துக்காக வெளிக்காட்டி கொள்ளாமல், ஒளித்து வைத்து கொண்டு, உயர்ந்த கிருஷ்ண பக்தியே லட்சியமாக வைத்து இருக்க முயற்சிக்க வேண்டும்.

இப்படி இருந்தால், குருவின் அருளால், ஸ்ரீ கிருஷ்ணரின் அருளால், இந்த ஜென்மத்தோடு நம் சம்சார கடல் சுழற்சி முடிந்து, கிருஷ்ணனின் திருவருளால் மோக்ஷம் என்ற வைகுண்டத்தை அடைந்து விடலாம்.

கிருஷ்ண பக்தி சுலபம். கிருஷ்ணனும் சுலபம்.
கிருஷ்ண கதையும் சுலபம். வாருங்கள் ஸ்ரீ கிருஷ்ண பக்தி செய்வோம்.

Friday 13 April 2018

மன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் இவை ஏற்பட காரணம் என்ன?

மன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் இவை ஏற்பட காரணம் என்ன?

Spiritual Answer:

பொதுவாக நாத்தீகன் தனக்கும் மேல் ஒரு பரமாத்மா இருக்கிறார் என்று அறியாமல், எல்லாம் தன் முயற்சியால் நடக்கும் என்று நினைப்பான்.
அவனுக்கு மீறி இருக்கும் பல விஷயங்கள், மன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் போன்றவற்றை கொடுக்கும்.

இந்த பயம், கவலை இவர்களில் சிலருக்கு நோய் உண்டாக்கும், சிலருக்கு சோம்பறித்தனத்தை கொடுக்கும். சிலருக்கு தீவிரவாதம், கோபம் போன்ற குணத்தை கொடுக்கும்.
இது போன்ற கவலைகள் நாம் அடைவதே ஒரு நாத்தீக லட்சணம்.

மகா சக்தி வாய்ந்த பகவான் உங்களை மட்டுமின்றி உலகையே காக்க வல்லவன் என்று தெரிந்தும், கவலை பட கூடாது.

நம்மையும் வழி நடத்த கடவுள் இருக்கிறார் என்ற அறியும் நிலையில் நீங்கள் இருந்தால், எந்த நிலையிலும் முயற்சியும் கை விடமாட்டீர்கள், கவலையும் பட மாட்டீர்கள்.

கவலைகள் பல இருந்தாலும், தியானம் உடனே சிலருக்கு கை கூடுவதற்கு காரணம் இந்த தைரியம் தான்.

கவலைகள் பல இருந்தாலும், சோர்ந்து போகாமல் தன் கடமையை உற்சாகத்துடன் தொடர்ந்து செய்பவர்கள் இந்த தைரியத்தில் தான்.
யோகிகள், சாதுக்கள் சோம்பேறிகளாய் இல்லாமல் இருப்பதற்கு காரணம் இந்த தைரியத்தில் தான்.

எந்த வறுமையிலும் தன் முயற்சியை விடாமல் இருப்பவர்களும் இந்த தைரியத்தில் தான்.

நாத்தீக குணத்தை விட்டு விடுவதாலேயே, மன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் போய் விடும். 
 
இந்த தைரிய மன நிலையில் அமர்நது கொண்டு, கட்டை விரலின் நுனியும், மோதிர விரலின் நுனியும் சேர்த்து, பிராணாயாமம் மெதுவாக, நிதானமாக 30 நிமிடம் தினமும் செய்தாலே உயர் ரத்த அழுத்தம் என்ற நோயே அண்டாமல் போகும்.