Followers

Search Here...

Showing posts with label திருமங்கை ஆழ்வார். Show all posts
Showing posts with label திருமங்கை ஆழ்வார். Show all posts

Saturday 1 February 2020

பாசுரம் (அர்த்தம்) - திருவுக்கும் திருவாகிய செல்வா - திருமங்கை ஆழ்வார் தேவாதிராஜ பெருமாளை (தேரழுந்தூர்) பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருமங்கையாழ்வார் தேர்அழுந்தூரில் உள்ள தேவாதிராஜ பெருமாளை மங்களாசாசனம் செய்து, தன்னை காப்பாற்றுமாறு சரணடைகிறார்.

திருமங்கை ஆழ்வார் "அர்ச்சா திருமேனியையே" பெருமாளின் அவதாரமாக அனுபவிப்பவர்.





அற்புதமான பாசுரம்..
அனைவரும் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டிய பாசுரம். .

திருவுக்கும் திருவாகிய செல்வா!!
தெய்வத்துக்கு அரசே!!
செய்ய கண்ணா!!
உருவச் செஞ்சுடராழி வல்லானே!!
உலகுண்டவொரு வா!!
திருமார்பா!!
ஒருவற்காற்றி உய்யும் வகையென்றால்
உடன் நின்று ஐவர் 
என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட!!
அஞ்சி!! நின்னடைந்தேன்!!
அழுந்தூர் மேல்திசை நின்ற
அம்மானே!!
-- பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார்)

பாசுரத்தின் அர்த்தம் :

மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் யாருக்கு கிடைக்கிறதோ!! அவர்களுக்கு குறைவில்லாத செல்வம் கிடைக்கிறது.
எல்லோருக்கும் மங்களம் கொடுப்பவள் மஹாலக்ஷ்மி.

செல்வம் மட்டுமல்ல,
உலகில் நாம் காணும் அழகும், பொலிவும், அனைத்து மங்களமும் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷமே..

நமக்கு சர்வ மங்களத்தை தரும், திருவாகிய மஹாலக்ஷ்மி தனக்கு மங்களம் கிடைக்க, திருவாகிய நாராயணனை சரணடைந்து அவருக்கு பாத சேவை செய்து கொண்டிருக்கிறாள்.
திருவாகிய மஹாலக்ஷ்மியே தனக்கு வேண்டிய செல்வத்தை, அழகை, தன் பதியான திருவாகிய திருமாலிடம் பெறுகிறாளே !! பெருமாளே "செல்வமாக" இருக்கிறாரே!!
என்று பெருமாளின் பெருமையை நினைத்து திருமங்கையாழ்வார்
'திருவுக்கும் திருவாகிய செல்வா' என்கிறார்.
அழகுக்கெல்லாம் அழகர்,
பொலிவுக்கெல்லாம் பொலிவு உடையவர்,
செல்வதுக்கெல்லாம் செல்வமாக இருப்பவர்,
சர்வ மங்களத்துக்கும் மங்களத்தை தருபவர்,
மகாலட்சுமிக்கு பதியாக இருப்பவர்,
தானே பெரும் நிதியாக (செல்வமாக) இருப்பவர், 
எம்பெருமான் நாராயணன்.

அப்படிப்பட்ட பெருமைமிகுந்த பெருமாள் தன் எதிரே நின்று, திரு அழுந்தூர் என்ற திவ்ய தேசத்தில் தேவாதிதேவனாக காட்சி கொடுக்க, 'எனக்கு நிதியே' என்று கொஞ்சுவதை போல, "திருவுக்கும் திருவாகிய செல்வா' என்கிறார் திருமங்கையாழ்வார்.

மேலும்,
"தெய்வத்துக்கு அரசே" என்ற பதத்தை கொண்டு, தெய்வத்துக்கும் தெய்வமாக (தேவாதிராஜன்) பெருமாள் இருக்கிறார் என்று பூரிக்கிறார்.

தேவர்களுக்கு இந்திரன் (தலைவன்) யார்?
இந்திரன் (தலைவன்/அரசன்) என்ற சொல் யாரை குறிக்கிறது?
என்ற கேள்வியை 'இந்திர ப்ராணாதி கரணம்' என்ற வேதாந்தத்தில் ஒரு கேள்வியாக கேட்டு, அதற்கு பதில் சொல்கிறது.







"இந்திரன் யார்?" என்று இப்படி கேள்வி கேட்டு, இந்திரன் என்ற பெயரில் பலர் உள்ளார்களே!!.. என்று கேள்வி கேட்டு, முடிவும் சொல்கிறது...

மனிதர்களுக்கு (நரன்) தலைவனை "நரேந்திரன்" என்று சொல்வார்கள்.
தேவர்களுக்கு தலைவனை "தேவேந்திரன்" என்று சொல்வார்கள்.
சுரர்களுக்கு தலைவனை "சுரேந்திரன்' என்று சொல்வார்கள்.
மிருகங்களுக்கு தலைவனை "ம்ருகேந்திரன்" என்று சொல்வார்கள்.
யார் அனைவருக்கும் தலைவனோ அவரையே "இந்திரன்" என்று சொல்வார்கள்.

'இவர் இவருக்கு தலைவன், இவருக்கு இவர் தலைவனில்லை' என்று இல்லாமல்,
'நரன், தேவன்...' என்று விசேஷம் இல்லாமல், அனைவருக்கும் தலைவனாக இருக்கும் நாராயணனே 'இந்திரன்' என்று முடிக்கிறது வேதாந்தம்.
உப தெய்வங்களான இந்திரன், ப்ரம்மா, ருத்ரன், மனு போன்றவர்களுக்கெல்லாம் "அரசர்" என்ற பெருமையுடைய பரம்பொருள் அல்லவா, என் கண் முன்னே இருக்கிறார்!!
என்றதும்,
திரு அழுந்தூர் தேவாதிராஜ பெருமாளை பார்த்து
"தெய்வத்துக்கு அரசே"
என்று பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.

தேவேந்திரனுக்கு மட்டும் அரசனல்ல (தேவராஜன் மட்டுமல்ல),
உலகில் தெய்வங்கள் என்று இருக்கும் அனைவருக்கும் அரசனாக இருக்கிறார் என்பதால்,
இந்த பெருமாளுக்கு "தேவாதிராஜன்" என்று பெயர் கொடுத்தார்.

மேலும்,
செய்ய கண்ணா!
உருவச் செஞ்சுடராழி வல்லானே!
உலகுண்ட ஒருவா!
திருமார்பா!
என்றெல்லாம் உங்களை எப்பொழுதும் பாடி மகிழ ஆசைப்படுகிறேன்!!
ஆனாலும், 
'என்னை பக்தி செய்ய விடாமல், என் கூடவே பிறந்த 5 சத்ருக்கள் உங்களிடம் நேரம் செலவழிக்கவே விடாமல் தடுக்கிறார்களே!!'
என்று புகார் சொல்கிறார்.

ருக்மிணி ஸ்ரீ கிருஷ்ணரை மணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாள்.
ஆனால்,
இவளுடன் கூட பிறந்த 5 சகோதரர்களான 'ருக்மி, ருக்மரதன், ருக்மபாஹு, ருக்மகேசன், ருக்மமாலி' ஆகிய ஐவருமே ருக்மிணியை, ஸ்ரீ கிருஷ்ணரிடம் சேர விடாமல் தடுத்தார்கள்.

5 பேரையும் அடக்கி, ருக்மிணி ஆசைப்பட்டது போலவே, வந்து மணந்து கொண்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.
இந்த
அது போல,
'தன்னுடன் பிறந்த 'கண், காது, மூக்கு, நாக்கு, தோல்' என்ற இந்த 5 சத்ருக்கள், பெருமாளிடம் நேரம் செலவிடவே அனுமதிப்பதில்லை' 
என்று தன் குறையை பெருமாளிடம் சொல்லி, 
'இந்த சத்ருக்களிடமிருந்து மீட்டு, தன்னிடம் சேர்த்து கொள்ள வேண்டும்' என்று ப்ரார்திக்கிறார்.

பெருமாளை கொஞ்சம் பார்ப்போம் என்று கோவில் சந்நிதி முன் நின்றால் கூட, 'கண்' பெருமாளை பார்க்காமல் அங்குமிங்கும் பார்க்கிறது...
சரி, ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி உபன்யாசம் கேட்கலாம் என்று உட்கார்ந்தால், 'காது' உபன்யாசத்தை கேட்க மறுத்து, ஏதேதோ கேட்க ஆசைப்படுகிறது...

"இப்படி என்னுடன் பிறந்த இந்த ஐவருமே, ருக்மிணி பிராட்டிக்கு அமைந்த சகோதரர்களை போல, கிருஷ்ண பக்தி செய்ய தடுக்கிறார்களே!!
இவர்கள் கொஞ்சம் கூட ஓயாமல் (no rest/ஒழியாது) என்னை பக்தி செய்ய விடாமல் தடுக்கிறார்களே!!"
என்று தன் உடன் பிறந்த இந்த ஐவரை பற்றி புகார் சொல்வது போல,
"உடன் நின்று ஐவர்
என்னுள் புகுந்து ஒழியாது" என்கிறார்.

"இப்படி என்னை பெருமாளிடம் பக்தி செய்ய விடாமல், இந்த கண்ணும், காதும், நாக்கும், மூக்கும், தோலும் என்னை
அருவித் தின்றிட, இவர்களிடமிருந்து என்னை நான் விடுவிக்க சக்தி இல்லாமல், உன்னிடம் பக்தி செய்ய முடியாமலேயே இருந்து விடுவேனா!! என்று அஞ்சி,
திருஅழுந்தூர் மேல்திசை நின்ற
அம்மானே (எம்பெருமானே), உன்னிடம் ருக்மிணி பிராட்டி சரண் அடைந்தது போல நின்னடைந்தேன்"
என்று பாடுகிறார் ஆழ்வார்.




உபரிஜரவசு என்ற அரசன் தன் ஆகாய விமானத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது, அவன் ஆகாய தேர், இந்த ஊரில் நின்று போக, அவருடைய தேர் இங்கு அழுந்தியதால், இந்த ஊருக்கு தேர் அழுந்தூர் என்ற பெயர் ஏற்பட்டது..

உபரிஜரவசுவுக்கு, பெருமாள் கண்ணனாக நின்று கொண்டு, ஒரு கையால் பசுவை (ஆ) கட்டிக்கொண்டு (மருவி) காட்சி கொடுத்ததால், இந்த பெருமாளுக்கு ஆமருவியப்பன் என்று பெயர்.
மயிலாடுதுறை அடுத்து உள்ளது தேரழுந்தூர் என்ற இந்த திவ்யதேசம்.
மூலவர் பெயர் : தேவாதிராஜன்
உத்சவர் : ஆமருவியப்பன்


Thursday 9 January 2020

பாசுரம் (அர்த்தம்) - கதியேல் இல்லை நின் அருள் அல்லது - திருமங்கை ஆழ்வார் திருநீர்மலையில் உள்ள பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருமங்கை ஆழ்வார் "அர்ச்சா திருமேனியையே" பெருமாளின் அவதாரமாக அனுபவிப்பதால், பெருமாளின் திவ்ய காட்சியை பார்க்க கூட இவர் ஆசைப்படவில்லை..
அர்ச்ச அவதாரமே இவருக்கு பகவானாக தெரிவதால், பல இடங்களில் "கண்டு கொண்டேன்" என்று பாடுவதை பாசுரங்களில் கவனிக்கிறோம்..




கதியேல் இல்லை
நின் அருள் அல்லது
எனக்கு நிதியே
திருநீர்மலை நித்திலத் தொத்தே,
பதியே பரவித் தொழும்
தொண்டர் தமக்குக் கதியே 
உனை "கண்டு கொண்டு" 
உய்ந் தொழிந்தேனே
என்று "பெரிய திருமொழி"யில் திருமங்கை ஆழ்வார் பாடும் போது,
வால்மீகி முனிவருக்கு ஏற்பட்ட தாபத்தை போக்க, அர்ச்ச திருமேனியுடன் திருநீர்மலையில் காட்சி கொடுத்த எம்பெருமானை பார்த்த உகப்பில் "கண்டு கொண்டேன்" என்று பாடுகிறார்.

புருவத்தின் மத்தியில் எம்பெருமான் திவ்ய காட்சி கண்டதை சொல்கிறாரா? இல்லை..
எம்பெருமான் ராமராக தன் விபவ அவதாரத்தை காட்டி தரிசனம் தந்ததை சொல்கிறாரா? இல்லை.
திருமங்கை ஆழ்வார், திருநீர்மலையில், அர்ச்சா திருமேனியுடன் இருக்கும் எம்பெருமானையே தனக்காக அவதரித்த பெருமாளாகவே பார்த்தார்.
சிலையாக தோன்றிய எம்பெருமானை பார்த்ததினால் வந்த உகப்பில் "கண்டு கொண்டேன்" என்று ஆனந்தப்படுகிறார்..



இந்த பாசுரத்தை ஆரம்பிக்கும் போது "கதியேல்" என்ற சொல்லை கொண்டு ஆரம்பிக்கிறார்.

திருநீர்மலை பெருமாளை நேரில் கண்ட திருமங்கை ஆழ்வார், "தனக்கு ஒரு கதி உண்டா? மோக்ஷத்துக்கு கதி (வழி) உண்டா?" என்று தன் மனசாட்சியையே கேட்க.. மனசாட்சியே பதிலாக
"என் திறமையால் எனக்கு மோக்ஷத்துக்கு கதி இல்லை." என்று  சொல்ல,
"எனக்கும் என்று ஒரு கதி (வழி) உண்டாகில், அது உம்முடைய அருளை கொண்டு தான்" என்று எம்பெருமான் அருளை எதிர்பார்த்து,
கதியேல் இல்லை...
நின் அருள் அல்லது
என்று ஆரம்பிக்கிறார் திருமங்கை ஆழ்வார்.
மேலும்,
உலகத்தில் உள்ளவர்கள் பொதுவாக, வயதான காலத்துக்காக தன் பாதுகாப்புக்காக, நிதியை சேர்த்து வைத்து கொள்வார்கள்..
அதே போல,
பரலோக வாழ்க்கைக்காக, புண்ணிய காரியங்களை செய்து புண்ணியம் என்ற நிதியையும் சேர்த்து வைத்து கொள்வார்கள்..

இந்த இரண்டு நிதியுமே அல்பமானவை, நிரந்தரமற்றவை..
சேர்த்த பணம் எல்லாம் ஒருநாள் செல்வழிந்து போய் விடும்..
இல்லை, செல்வம் இருக்கும் இவன் போய் விடுவான்..



புண்ணியம் காக்குமே என்றாலும், கொஞ்ச காலம் சொர்க்க லோகத்தில் இருக்க செய்து விட்டு, "பூலோகத்தில் நீ செய்த புண்ணியங்கள் இன்றுடன் தீர்ந்தது போ" என்று இந்திரனும் கீழே தள்ளி விட்டு விடுவான்..
மீண்டும் பிறக்க வேண்டியது தான்...

இதனை கருத்தில் கொண்டு,
செல்வம் என்ற நிதியையும் தள்ளி,
புண்ணியம் என்ற நிதியையும் தள்ளி விட்டு,
திருமங்கை ஆழ்வார், "எனக்கு இகத்திலும் பரத்திலும் என்றும் அழியாத வைப்பு மா நிதியாக எம்பெருமானே திருநீர்மலையில் இருக்கிறார்" என்று பாடுகிறார்.
எனக்கு நிதியே
திருநீர் மலை நித்திலத்தொத்தே

இங்கு நித்தில தொத்தே என்றால் "பவள கொத்து" என்று அர்த்தம்..

பவளத்திற்கு இயற்கையாகவே ஒரு குளிர்ச்சி உண்டு.
பவள மணி மாலையாக கழுத்தில் போட்டு கொண்டால், உடல் குளிர்ச்சியாகும்..
இங்கு, பவள கொத்து என்று திருநீர்மலை எம்பெருமானையே சொல்லி கொஞ்சுகிறார் திருமங்கை ஆழ்வார்.

குளிர்ச்சி தரும் கருணை கொண்ட திருநீர்மலை பெருமாளை பார்த்ததுமே, 'பெருமாளையே ஒரு பவள மாலை என்ற தன் நிதியாக ஆக்கிக்கொண்டு, தன் கழுத்தில் போட்டு கொண்டு விட வேண்டும்' என்று ஆசை உண்டாகி விட்டது ஆழ்வாருக்கு.




"எனக்கும் கதி உண்டா?" என்று மோக்ஷத்துக்கு வழி தெரியாமல் வந்த தனக்கும், "கதி உண்டு" என்று காட்டி விட்டார் திருநீர்மலை பெருமாள் என்றதும், அடுத்த பதத்தில் "பதியே" என்று சொல்லி, "உன்னை கண்டு கொண்டேன்" என்று சரண் அடைகிறார்..

பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக்
கதியே உனை "கண்டு கொண்டு" 
உய்ந் தொழிந்தேனே


ஆழ்வார்கள் பாசுரங்கள் தமிழே தமிழ்...

மேலும் பாசுரம் அர்த்தத்துடன் அறிந்து கொள்ள "முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை"



Friday 3 January 2020

பாசுரம் (அர்த்தம்) - முழுசி வண்டாடிய தண் துழாயின் - திருமங்கை ஆழ்வார். காஞ்சியில் அஷ்டபுஜ பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அனைத்து படைப்புக்கும், உயிர்களுக்கும் ஆதிமூலமாக (root) இருக்கும் ஸ்ரீமந் நாராயணன் கஜேந்திரனை காக்க, எட்டு கைகளுடன், எட்டு ஆயுதங்கள் ஏந்தி வந்தார் காஞ்சிபுரத்தில்.




கஜேந்திரனை முதலையிடமிருந்து காப்பாற்ற ஒரு சக்கரமே போதும்!!
இருந்தாலும் 8 கைகளுடன் வந்து தரிசனம் கொடுத்தாரே பெருமாள்?!
உண்மையில், பெருமாள், தன் அஷ்ட மஹிஷிகளுடன் கஜேந்திரனுக்கு  தரிசனம் தரவே 8 கைகளுடன் வந்தாராம்.
"அர்ச்ச அவதாரமே பெருமாள். அர்ச்ச அவதாரமே போதும்" என்று இருந்தவர் திருமங்கை ஆழ்வார்.

அவர் காஞ்சிபுரம் வந்து அஷ்ட புஜனாய் இருக்கும் பெருமாளை கண்டதும், தானே "பரகால நாயகி" என்ற பெண்ணாகி விட்டார்.

பெருமாள் தன் 8 மஹிஷிகளுடன்,   தன் எதிரே தரிசனம் கொடுக்க,
"அடடா.. யார் இவர்? இவர் போல நாம் யாரையுமே பார்த்ததில்லையே!! ஏற்கனவே 8 மஹிஷிகளுடன் இருக்கும் இந்த பெருமாள், மங்கையான தன்னையும் கரம் பிடிக்க பார்க்கிறாரே!!"
என்று தானும் ஒரு மங்கையாகவே ஆகி, பெருமாளை பார்த்து சொக்கி போய்விட்டார்.
"பெருமாள் எப்படி அவருக்கு காட்சி கொடுக்கிறார்?" என்ற தன் அனுபவத்தை அப்படியே நமக்கும் பாசுரமாக கொடுக்கிறார்.

பாசுரம் மிகவும் அழகானது..




முழுசி வண்டாடிய தண் துழாயின்
மொய்மலர் கண்ணியும்,
மேனி அஞ்சாந்து இழுசிய கோலம் இருந்தவாறும்
எங்ஙனஞ் சொல்லுகேன்!! ஓவிநல்லார் எழுதிய தாமரை என்ன கண்ணும்
ஏந்தி எழில் ஆகமும்
தோளும் வாயும்,
அழகிய தாம் இவர் யார் கொல் என்ன
அட்ட புயகரத் தேன் என்றாரே

பெருமாள் எப்படி அவருக்கு காட்சி கொடுக்கிறார்? என்ற தன் அனுபவத்தை அப்படியே நமக்கும் கொடுக்கிறார்.

பெருமாள் கழுத்தில் துளசி மாலை இருப்பதை, முதலில் கவனித்த பரகால நாயகியாக இருக்கும் திருமங்கை ஆழ்வார், "தண் துழாய்" என்று வர்ணிக்கிறார்.

பெருமாள் அணிந்திருந்த துளசி மாலையிலிருந்து, நறுமணம் எங்கும் பரவி இருந்ததாம்.
பெருமாள் கழுத்தில் இருந்ததாலேயே துளசி துளியும் வாடாமல், பச்சைபசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சியை தந்ததால், "துழாய்" என்று மட்டும் சொல்லாமல் "தண் துழாய்" என்ற பதத்தை சொல்லி, "நல்ல தன்மையுடன் கூடிய துளசி மாலையை பெருமாள் அணிந்து இருக்கிறார்" என்று கவனிக்கிறார் ஆழ்வார்.

துளசி மாலையுடன்,
5 விதமான பூக்களை கொண்டு, கண்டு கண்டாக கட்டிய (மொய் மலர் கண்ணி) ஒரு அழகான வைஜயந்தி மாலையும் அணிந்து இருந்தாராம் பெருமாள்.
பெருமாள் அணிந்து இருந்த துளசி மாலையின் நறுமணமும், 5 வித பூக்களால் கட்டப்பட்ட வைஜயந்தி மாலையையும் பார்த்து விட்டு, தேன் குடிக்கும் ஆவலில், அந்த பூக்களின் மகரந்தத்தில் வண்டுகள் ரீங்காரமிட்டு ஆடிக்கொண்டு (முழுசி வண்டாடிய) இருப்பதை பார்த்து விட்டாளாம் இந்த பரகால நாயகி.

இந்த மாலையே இந்த நாயகியின் மனதை மயக்க,
அடுத்ததாக பெருமாள் மேனி எப்படி இருக்கிறது? என்று பார்த்தாளாம்.

கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிக்கு செல்லும் போது, சந்தனம் கொடுப்பார்கள்.
பொதுவாக நாம், சந்தனத்தை தொடுவோம், அதிகபட்சம் கொஞ்சம் நெற்றியில், கொஞ்சம் கைகளில், மார்பில் பூசி கொள்வோம்.

அஷ்ட புஜமாக இருக்கும் இந்த பெருமாளும் சந்தனம் பூசி கொண்டு இருந்தாராம்.. ஆனால் நம்மை போன்று, கொஞ்சம் நெற்றியில், கைகளில் மட்டும் பூசிக்கொண்டு இருக்க வில்லையாம்.
அங்கே இங்கே என்று நாகரீகமாக கை, நெற்றி என்று மட்டும் பூசி கொள்ளாமல், அவர் இஷ்டத்துக்கு முதுகு, கழுத்து என்று வேண்டிய இடத்திலெல்லாம் சந்தனத்தை இழுசி கொண்டு, சந்தன குழம்பு போல நறுமணத்துடன் நின்று கொண்டு, காட்சி கொடுக்க,
"மேனி அஞ்சாந்து இழுசிய கோலம் இருந்தவாறும்"
என்று வர்ணிக்கிறார்.




வெளி பொருட்களான துளசி மாலையும், வைஜயந்தி மாலையும், சந்தனமும் எப்படி இருந்தது? என்று கவனித்து வர்ணித்துக்கொண்டு இருந்த பரகால நாயகி, அவர் மேனி எப்படி இருக்கிறது? என்று சற்று கவனிக்க,
"அந்த திவ்யமான பெருமாளின் திருமேனி அழகை எப்படி சொல்வேன்?" என்று வியந்து,
"எங்ஙனஞ் சொல்லுகேன்?" என்ற சொக்கி நிற்கிறார்.

ப்ரம்மாவின் ஸ்ருஷ்டியில் படைக்கப்பட்ட நம்மையே நன்றாக கவனித்தால் ஏதாவது ஒரு சிறு குறையாவது தென்படும்.
முதுகு லேசாக கூனி இருக்கும்,
புருவங்கள் அழகாக இருக்காது,
ஒரு கண் இன்னொரு கண் போலவே இருக்காது.. இப்படி ஏதாவது ஒரு குறை ப்ரம்ம படைப்பில் இருக்குமாம்.

ஆனால், இந்த பரகால மங்கையின் முன் நின்று காட்சி கொடுக்கும் இவரை பார்த்தால், சாமுத்ரிகா லக்ஷணம் தெரிந்த ஒரு நல்ல ஓவியன் (ஓவிநல்லார் எழுதிய) இவ்வளவு நீளம் கை, இவ்வளவு நீளம் கால், விரல் என்று குறையே இல்லாமல் எழுதிய ஓவியம் போல, அமைப்பாக இருந்தாராம்.

சாமுத்ரிகா லக்ஷணம் இவரை பார்த்து தான் எழுதப்பட்டதோ என்று வியக்கும் அளவுக்கு, அப்படி ஒரு அழகுள்ள இவரின் மேனியை பார்த்து,
தாமரை போன்ற கண்களை, ஓவியத்தில் எழுதியது போல,
ஓவியத்தில் எழுதியது போல மார்பும்,
(என்ன கண்ணும், ஏந்தி எழில் ஆகமும், தோளும் வாயும்)
ஓவியத்தில் எழுதியது போல தோளும்,
ஓவியத்தில் எழுதியது போல வாயும், கொண்ட பெருமாளை கண்டு,
"இப்படி அழகாக ஒருத்தர் இருக்க முடியுமா? யார் இவர்?" என்று, பரகால நாயகி சொக்கி நின்று கேட்க,
(அழகிய தாம் இவர் யார் கொல் என்ன)
பெருமாளே தன்னை "அஷ்டபுஜன்" என்று அறிமுகப்படுத்தி கொண்டு,
(அட்ட புயகரத் தேன் என்றாரே) தன்னை ஆட்கொண்டார்
என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

காஞ்சிபுரம் சென்று அஷ்டபுஜ பெருமாளை தரிசிக்கும் போது, திருமங்கை ஆழ்வார் பாடிய இந்த பாசுரத்தை அவசியம் சேவிக்க வேண்டும்.
மேலும் பாசுரம் அர்த்தத்துடன் அறிந்து கொள்ள "கதியேல் இல்லை நின் அருள் அல்லது"