Followers

Search Here...

Showing posts with label நாரணனே. Show all posts
Showing posts with label நாரணனே. Show all posts

Tuesday 10 September 2019

உடுப்பி கிருஷ்ணர் எப்படி வந்தார்? அணையா விளக்கு கோவிலில் ஏற்றுகிறார்களே!! அணையா விளக்கு என்று எதை சொல்கிறார் திருமங்கையாழ்வார்? தெரிந்து கொள்வோமே...

பத்ரிநாத்தில் "நர-நாராயணன்" இருக்கிறார்.
வட இந்திய யாத்திரை சென்றவர்கள் பதரி நாராயணனை கட்டாயம் தரிசித்து இருப்பார்கள்.



நாகப்பட்டினம் திருநாங்கூரில் உள்ள "மணிமாட கோவிலில்" பெருமாள், "நாராயணன்" என்ற பெயரில் அருள் செய்கிறார்.

வட இந்தியாவில் உள்ள பதரிநாத் வரை சென்று, நர-நாராயணனை நம்மால் பார்க்க இயலாது போனால், அதே பெருமாளை மணிமாட கோவிலில் நாம் தரிசிக்கலாம்.

பெருமாள் கருணை கொண்டு, தானே இங்கு மணிமாட கோவிலுக்கு வந்து விட்டார்.
திராவிட தேசத்தில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைவரும் பார்க்க வேண்டிய திவ்ய தேசம்.

"பதரியில் உள்ள நர நாரணனே இங்கு மணி மாட கோவிலில் நமக்காக இருக்கிறார். அவரை வணங்கு மனமே"
என்று பாடுகிறார் திருமங்கையாழ்வார்.
மணிமாட கோவிலில் உள்ள  பெருமாளை பார்த்து
"நந்தா விளக்கே, அளத்தற்கரியாய்
நரநாரணனே
கரு மாமுகில் போல் என் தாய்"
என்று, வேதத்தின் ரகசியத்தை, எளிதான பதங்கள் போட்டு,
பெருமாளை மங்களாசாசனம் செய்து பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

"நந்தா விளக்கு" என்றால் என்ன?
"அளத்தற்கரியாய்" என்றால் என்ன?
"என் தாய்" என்று எதற்கு சொன்னார்?

"நந்தா விளக்கு" என்று கோவில்களில் வைத்து இருப்பதை நாம் பார்த்து இருப்போம்.
அந்த விளக்கு அணையாமல் இருக்க,
பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு, அந்த விளக்கு அணைந்து விடாமல், அதற்கு எண்ணெய் ஊற்றி கொண்டே இருப்பார்கள்.

அணையாமல் விளக்கு எரிவதால், அந்த விளக்கை "அணையா விளக்கு" என்று கூட போர்டு போட்டு வைத்து இருப்பார்கள்.


"நந்தா" என்றால் "அணையாத" என்று அர்த்தம்.

"நந்தா விளக்கு" என்றால் "அணையா விளக்கு" என்று அர்த்தம்.

கோவிலில் வைக்கப்பட்டு இருக்கும், இந்த "நந்தா விளக்கையா"?திருமங்கையாழ்வார் இங்கு சொல்கிறார்? இல்லை.

உண்மையில் உலகில் நாம் காணும் அனைத்து விளக்குகளும் நந்தி (அணையும்) போகும் விளக்குகள் தான்.

யாரும் தூண்டாமல் தானாகவே பிரகாசமாக எந்த விளக்கும் கிடையாது.
யாரோ ஒருவர் தூண்டியோ,
யாரோ ஒருவர் துணை கொண்டோ தான்,
நாம் காணும் விளக்குகள் அனைத்தும் உள்ளன.
இவை எல்லாம் "நந்தி போகும் விளக்குகள்" தான்.

"நந்தா விளக்கு" என்பதோ,
யாருமே தூண்டாமல்,
யார் துணையும் இல்லாமல்,  'சுயமாகவே பிரகாசமாக' இருக்கும் விளக்கு.

அப்படி ஒரு "நந்தா விளக்கு" உள்ளதா?

எந்த 'நந்தா விளக்கை' திருமங்கையாழ்வார் இங்கு சொல்கிறார்? 
என்ற கேள்வி நமக்கு எழலாம்.
இந்த இருண்ட உலகம், எந்த விளக்கு மூலம் பிரகாசம் அடைகிறது?
சூரியன், சந்திரன், அகல், மின்சாரம் போன்ற  'விளக்குகள்' மூலம் பிரகாசம் அடைகிறது.

இந்த வெளி விளக்குகள் மூலம், உலகம் பிரகாசமாகிறது.
'உலகம் பிரகாசமாக இருக்கிறது' என்று, 'எந்த விளக்கு'? மூலம் நமக்கு தெரிகிறது?
"கண்" என்ற விளக்கு மூலம் உலகம் தெரிகிறது...
மின்சார விளக்கு அணைந்து இருக்கும் போது, இருட்டில் மாட்டியவனுக்கு கண் இருந்தும் ப்ரயோஜனமில்லையே!! 

கண் இல்லாத குருடனுக்கு எந்த விளக்கை கொண்டு வெளி உலகம் தெரியும்?
ஆயிரம் 'சூரியன்' இருந்தாலும்,
ஆயிரம் 'மின்சார விளக்குகள்' போட்டாலும்,
வெளி உலகம் இருப்பது 'குருடனுக்கு தெரியாதே'..


ஆதலால்,
'கண்' என்ற விளக்கும், 
'வெளியில் உள்ள' அனைத்து விளக்குகளும் 
நந்தி போகும் விளக்குகளே...

ஆனால், குருடனாக இருப்பவனுக்கும், வெளி விளக்குகள் அணைந்து இருட்டில் இருப்பவனுக்கும் கூட,
அவனுள்ளேயே, எப்பொழுதும் ஒரு விளக்கு "சுயமே பிரகாசமாக எரிந்து கொண்டே" இருக்கிறதே!!...
அந்த விளக்கு என்றுமே அணைவதில்லையே..

அது யார் தூண்டுதலும் இல்லாமல், 
யார் துணையும் இல்லாமல் 
தானே சுயம் பிரகாசமாக உள்ளதே!!  

அந்த நந்தா விளக்கு ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து கொண்டே இருக்கிறதே!! அதை தெரிந்து கொள்ள வேண்டாமா நாம்?.
அணையாத சுயம் பிரகாச இருக்கும் அந்த நந்தா விளக்கு "பரவாசுதேவன் நாராயணன்" அல்லவா..!!
அவர் நமக்குள் தான் இருக்கிறார் என்று தெரியாமல் இருக்கலாமா?

நந்தா விளக்காக உள்ள அந்த 'பரவாசுதேவன்' நம் உடம்பில் இருக்கும் வரை தானே, நாம் இந்த உடலில் ஜீவிக்க முடிகிறது!!.

அந்த ஜோதி ஸ்வரூபமான பரமாத்மா உடலை விட்டு விலகும் போது, பரமாத்மாவோடு "ஜீவனாகிய நாமும்" கிளம்ப வேண்டியது தான்.

குருடனிடம் "உலகம் பிரகாசமாக இருக்கிறதே... உனக்கு தெரிகிறதா?" என்று கேட்டால்,
வெளியில் உறுப்பாக உள்ள "கண் என்ற விளக்கு" அவனுக்கு எரியாததால்,
குருடன் "தனக்கு உலகம் தெரியவில்லை" என்கிறான்.

ஆனால்,
நந்தா விளக்காக (சுயமே பிரகாசம்) பரமாத்மா அவன் உள்ளும்  இருப்பதால்,
குருடனிடம் "உலகம் தெரியவில்லை சரி. நீ இருக்கிறாய் என்று தெரிகிறதா?" என்று கேட்டால்,
அவன் உள்ளே சுயம் பிரகாசமான நாராயணன் என்ற விளக்கு அவனுக்குள் எரிவதால்,
"கண் இல்லாததால், உலகம் எனக்கு தெரியவில்லை. 
ஆனால் நான் இருக்கிறேன் என்று தெரிகிறது" என்கிறான்.
குருடன் கூட, "நான் இருக்கிறேனா என்று தெரியவில்லை!!. " என்று சொல்வதில்லை.

"நான் இருக்கிறேன்" என்பதை, பரமாத்மா என்ற "நந்தா விளக்கு" இருக்கும் வரை, நாம் தெரிந்து கொள்கிறோம்.





'நான் இருக்கிறேன்' என்று தெரிய காரணம் எது?
எந்த அணையா விளக்கை கொண்டு, குருடன் கூட, தான் இருப்பதை தெரிந்து கொள்கிறான்?

"பரமாத்மா நாராயணன்" என்ற நந்தா விளக்கு இருப்பதால் தான், 'நான் இருக்கிறேன் என்பது எனக்கு தெரிகிறது' என்ற உண்மையை ஞானிகள் புரிந்து கொள்கின்றனர்.

இந்த அர்த்தத்தை "நந்தா விளக்கு" என்ற பதம் மூலம் நமக்கு காட்டுகிறார் திருமங்கை ஆழ்வார்.

"பரமாத்மா எப்பொழுதும் அணையாமல் உள்ளே இருந்து கொண்டு, நமக்கு பிரகாசத்தை கொடுக்கிறார்" என்பதாலேயே பரமாத்மா நாராயணனை  "நந்தா விளக்கே" என்று கூப்பிடுகிறார்.

'சுயம் பிரகாசமாக ஜோதி ஸ்வரூபமாக இருக்கும் நாராயணன், நமக்குள்ளும் இருக்கிறார்' 
என்பதை குறிக்கவே "நந்தா விளக்கே" என்ற பதத்தை வைத்து பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

நந்தா விளக்கே என்று பரமாத்மாவை குறிக்கும் திருமங்கையாழ்வார், பரமாத்மா ஜோதி ஸ்வரூபமானவர் என்று காட்டுகிறார்.
அவர் அரூபமானவர்,
அவரே வேதம் உரைக்கும் ப்ரம்மம் என்று காட்டுகிறார்.

ஜோதி ஸ்வரூபமானவர் (அரூபமானவர்), சுயமே பிரகாசமாக நந்தா விளக்காக இருக்கிறார் என்கிறார்.

அவர் நம் அனைவருக்குள்ளும் இருக்கிறார். எங்கும் இருக்கிறார்.

"அவர் நம் உடலின் உள்ளே இருப்பதால் தான், நாம் இருக்கிறோம்"
என்பதை சுட்டி காட்டவே, "நந்தா விளக்கே" என்ற பதத்தை வைத்து பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

நம் உடம்பை விட்டு அந்த நந்தா விளக்கு (பரமாத்மா) விலகி விட்டால்? "சவம்" என்ற பெயரை பெற்று விடுகிறது இந்த உடல்.

பரமாத்மா உள்ளே இருந்தவரை, இந்த உடல் இயங்கி வந்தது...
அந்த நந்தா விளக்கு உடலை விட்டு விலகிய அடுத்த நொடி, மரம் போல உடல் சாய்ந்து விடுகிறது...

நம் உடலுக்கு ஆதாரமாக இருந்த அந்த நந்தா விளக்கை, சுயம் பிரகாசமான ஜோதியை, பரமாத்மாவை, ஜீவனாகிய நாம் மதிக்காமல், உணராமல் போனால், நமக்கு தானே நஷ்டம்...
நாத்தீகம் பேசுவதால் யாருக்கு லாபம்?..

"உடலை விட்டு நந்தா விளக்கான பரமாத்மா விலகி விட்டால், அவரும் அழிந்து விடுவாரோ?"
என்ற சந்தேகம் நமக்கு வரக்கூடாது என்பதற்காக, உடனேயே "அளத்தற்கரியாய்" என்ற பதத்தை  திருமங்கையாழ்வார் பயன்படுத்துகிறார்.

நம் உடலை விட்டு போனாலும், பரமாத்மா (நந்தா விளக்கு) அழிவதில்லை என்று காட்டுகிறார்.
அவர் உலகம் எங்கும் பிரகாசமாக பரவி இருக்கிறார் என்கிறார்.

'அளத்தற்கரியாய்' என்றால் என்ன?
அளத்தற்கரியாய் என்றால் "அளவிட முடியாதவர்" என்று அர்த்தம்.


தமிழ் வளர, திவ்ய பிரபந்தங்களை படித்தாலே போதும்.
பல தமிழ் சொற்கள் தெரிந்து கொள்ளலாமே...

"நந்தா விளக்கே அளத்தற்கரியாய் நர நாரணனே"
என்று சொல்லும் போது,
"பரஞ் ஜோதியாக, யார் துணையும் இல்லாமல், தானே சுயம் பிரகாசமாக (நந்தா விளக்காக) உள்ள நாராயணன் நம் உடம்புக்குள் மட்டும் இல்லை, அவர் அளவிட முடியாதவராக எங்கும் இருக்கிறார்"
என்று பர தத்துவத்தை 'அளத்தற்கரியாய்' என்ற சொல்லை வைத்து பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.
ஜீவனாகிய நாம் அனைவரும்,
'தேசத்தால், காலத்தால், வஸ்துவால்' கட்டுப்பட்டவர்கள்.

ஒரு மனிதன் ஒரு தேசத்தில் இருக்கும் போது, அதே சமயத்தில் இன்னொரு தேசத்தில் இருக்க முடியாது..
பரவாசுதேவன் நாராயணனோ தேசத்துக்கு கட்டுப்படாதவராக இருக்கிறார்.
எந்த தேசத்திலும், எப்பொழுதும் இருக்கிறார்.
அளவிட முடியாதவராக எங்கும் இருக்கிறார்.

பரவாசுதேவன், ஸ்ரீ கிருஷ்ணனாக அவதாரம் செய்த போது, நாரதர்
"ஸ்ரீ கிருஷ்ணர் தேசத்துக்கு கட்டுப்பட்டவரா?" என்று பார்க்கலாம் என்று துவாரகை வந்தார்.
16108 ராணிகள் ஸ்ரீ கிருஷ்ணரின் தர்ம பத்னிகள்.

நாரதர் ஒவ்வொரு ராணியின் அரண்மனைக்கும் சென்று சென்று பார்க்கிறார்.
நாரதரின் மனோபாவம் புரிந்து கொண்ட ஸ்ரீ கிருஷ்ணர்,
"ஒவ்வொரு அரண்மனையிலும் ஒவ்வொரு கிருஷ்ணனாக இருந்து, தான் தேசத்துக்கு கட்டுப்பட்டவன் இல்லை" என்று காண்பித்தார்.
நாரதர் பரமானந்தம் அடைந்தார்.
பரவாசுதேவன்  தேசத்துக்கு கட்டுப்படாதவர் என்று நிரூபித்தார்.

ஜீவனாகிய நாம் அனைவரும்,
"காலத்தால் கட்டுப்பட்டவர்கள்".

மனிதன் காலத்துக்கு கட்டுப்பட்டு வாழ்கிறான்.
மனிதன் தன் பிறப்பை இறப்பை கூட தீர்மானிக்க முடியாதவன்.

பரவாசுதேவன் நாராயணனோ, எந்த காலத்துக்கும் கட்டுப்படாதவர். "நடந்தது, நடப்பது, நடக்க போவது" என்று எந்த காலத்திலும் இருப்பவர்.
"காலம் தன் கையில் அடங்கி உள்ளது" என்பதை காட்டுவதற்கே "கால சக்கரத்தை" நாராயணன் வைத்துள்ளார்.

பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, உஜ்ஜயினியில் (மத்திய பிரதேசம்) சாந்தீபினியின் ஆசிரமத்தில் படித்தார்.
ஸ்ரீ கிருஷ்ணர் "பரமாத்மா" என்று அறிந்த சாந்தீபினி, 12 வருடம் முன் கடலில் விழுந்து இறந்து விட்ட தன் மகனை மீட்டு தர கேட்டார்.

குருவின் ஆசையை நிறைவேற்ற, காலத்துக்கும் கட்டுப்படாத ஸ்ரீ கிருஷ்ணர், 
எம லோகம் சென்று, யமதர்மனிடம் அந்த ஜீவனை அனுப்ப சொல்லி,
12 வருடம் கழித்து அவன் எப்படி வளர்ந்து இருப்பானோ அதே போன்ற உடலையும் கொடுத்து, எம லோகத்தில் இருந்து உஜ்ஜயினி வருவதற்குள் சகல வேதங்களையும் தானே சொல்லி கொடுத்து தன் குருவிடம் ஒப்படைத்து விட்டார்.

மகாபாரத போர் முடிந்த பிறகு, துவாரகையில் ஒரு சமயம், தேவகி ஸ்ரீ கிருஷ்ணரிடம் "தன்னால் கிருஷ்ணனின் பால லீலையை பார்க்க முடியாமல் போய் விட்டதே... குழந்தை கிருஷ்ணனை கொஞ்சும் பாக்கியம் அந்த யசோதை தானே பெற்றாள்" என்றாள்.
தன் தாய் ஆசைப்படுகிறாள் என்றதும், தன் மாய சக்தியால், அங்கேயே யசோதை அனுபவித்த குழந்தையாக ஆகி, பால லீலைகள் அனைத்தையும் தேவகிக்கு காட்டினார்.

காலத்துக்கு கட்டுப்படாதவர் என்று காட்டினார் ஸ்ரீ கிருஷ்ணர்.

'அளவிட முடியாதவராக' எங்கும் இருக்கிறார்.

இந்த ஆச்சர்யத்தை ருக்மிணி பார்த்து விட, தான் கண்ட 2 வயது கிருஷ்ணனை சிலை செய்தாள்.
அந்த பால கிருஷ்ணனை தானே பூஜை செய்ய ஆசைப்பட்டு, ஸ்ரீ கிருஷ்ணரிடம் காண்பித்தாள்.

ஸ்ரீ கிருஷ்ணரும் தன் கையால் தொட்டு, தன் சாநித்யம் இந்த சிலையில் இருக்கும் என்று அணுகிரஹித்தார்.
கலியுகம் ஆரம்பித்து, துவாரகை கடலில் மூழ்கிய பின், மத்வாச்சாரியார் காலத்தில் ருக்மிணி வழிபட்ட அந்த மூர்த்தி இவருக்கு கிடைத்தார்.

உடுப்பியில் இந்த கிருஷ்ண விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று வரை லக்ஷகணக்கான பக்தர்களை ஆகர்ஷிக்கிறார்.
ஜீவனாகிய நாம் அனைவரும்,
"தேசத்தால், காலத்தால், வஸ்துவால்" கட்டுப்பட்டவர்கள்.

மனிதன் மனிதனாக தான் இருக்க முடியும். 
மனிதனே பல வஸ்துவாக ஆக முடியாது..

பரவாசுதேவன் நாராயணனோ எந்த வஸ்துவுக்கும் கட்டுப்படாதவர்.
எந்த வஸ்துவாகவும் இருப்பவர்.
ராமராக, கிருஷ்ணராக அவதாரம் செய்த பரவாசுதேவன், தேவைப்படும் போது, மீனாக, பன்றியாக, ஆமையாக, நரசிம்மராக கூட அவதரித்து விட்டார்..
தான் எந்த வஸ்துவாகவும் வர இயலும் என்று காட்டினார்..
ப்ரம்ம தேவன் படைப்பில் இல்லாத நரசிம்மமாக கூட வந்து விட்டார்..

பரவாசுதேவன், ஸ்ரீ கிருஷ்ணனாக அவதாரம் செய்த போது,
"உயிருள்ள, உயிரற்ற பொருள் யாவும் தானாக ஆகி, தான் வஸ்துவுக்கு கட்டுப்பட்டவன் இல்லை" என்று காட்டினார்.

ப்ரம்ம தேவன், இடையர் சிறுவர்களை ஸ்ரீபிருந்தாவனத்தில் இருந்து மறைத்து சத்ய லோகம் எடுத்து சென்று விட்டார்.
ஸ்ரீ கிருஷ்ணர் இதை பற்றி துளியும் கவலைப்படவில்லை.
தானே அனைத்து இடையர் சிறுவர்களாகவும் ஆகி,
அவர்கள் கட்டி இருந்த ஆடைகளாகவும் ஆகி,
சாப்பிட கொண்டு வந்திருந்த மண் சட்டியாகவும் தானே ஆகி விட்டார்.

வஸ்துவுக்கு கட்டுப்படாதவர் என்று காட்டினார்.
அளவிட முடியாதவராக எங்கும் இருக்கிறார்.

ஒரு வருட காலம் ஆகி விட்டது. பிருந்தாவனம் வந்து பார்த்த ப்ரம்ம தேவன், ஸ்ரீ கிருஷ்ணரே உயிருள்ள பொருளாகவும், உயிரற்ற  பொருளாகவும் இருந்த ஆச்சர்யத்தை கண்டு பிரமித்தார்.
வஸ்துவுக்கு கட்டுப்படாத பரமாத்மாவே ஸ்ரீகிருஷ்ணராக இருக்கிறார் என்று உணர்ந்தார்..ப்ரம்ம தேவன்

நாம் இருப்பதற்கு ஆதாரமாக, அணையாமல் இருக்கும் அந்த பரஞ்ஜோதியை "நந்தா விளக்கு" என்ற பதத்தை கொண்டும்,
"அளத்தற்கரியாய்" என்ற பதத்தை பயன்படுத்தி, பரவாசுதேவன் எங்கும் இருக்கிறார் என்ற பரத்துவத்தை காட்டியும் இந்த பாசுரத்தை ஆரம்பித்து,
அப்படிப்பட்ட "அரூபமானவர், பரஞ்சோதி, அளவிட முடியாதவர்"
நம் மீது உள்ள கருணையின் காரணத்தால், "நாங்கூரில் மணிமாட கோவிலில் உருவம் தரித்து நாராயணனாக இருக்கிறாரே!!"
என்பதை பார்த்ததும், திருமங்கை ஆழ்வாருக்கு தன்னை பிள்ளையாகவும், கருணா மூர்த்தியான நாராயணனை "தாயாகவும்" தோன்ற,
"கரு மா முகில் போல் என் தாய்" 
என்று "தன் தாய்" என்று கொஞ்சுகிறார்..


ஆழ்வார்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும், ஆழ்ந்த வேத அர்த்தங்கள் கொண்டது... என்று அறிகிறோம்.
ஆழ்வார் பாசுரங்ககளை, நாயன்மார் பதிகங்களை,
ஆழ்ந்து படித்தாலேயே தமிழ்நாட்டில் தமிழும் வளரும், இறை பக்தியும் வளரும்.

ஆழ்வார் பாசுரங்ககளை, நாயன்மார் பதிகங்களை படித்தாலேயே, தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு இறை பக்தி வளர்ந்து விடுமே!! என்று, நாதீகர்கள், ஹிந்து தெய்வங்களை மறுப்பவர்கள்,
தமிழ் வளராமல் போனாலும் சரி,  'ஆழ்வார் பாசுரங்கள், நாயன்மார் பதிகங்கள் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள விடாமல் செய்வோம்'
என்று கடந்த 70 ஆண்டுகளில் முயற்சி செய்து,
தமிழ் கல்வியில் இந்த பாசுரங்கள் இடம்பெற செய்யாமல் அழிக்க முயன்றனர்.
போலிகளை எதிர்போம்.

பெரிய திருமொழியில்"மணிமாட கோவிலில்" பெருமாளை தன் தாய் என்று கொஞ்சி மகிழும் "திருமங்கையாழ்வார்" அருளிய பாசுரம் இதோ:

நந்தா விளக்கே அளத்தற்கரியாய், நர நாரணனே
கரு மா முகில் போல் எந்தாய்,
எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம்,
எத் திசைக்கும் அந்தாரம் அந்தேன் இசைபாட
மாடே களிவண்டு மிழற்ற
நிழல் துதைந்து, மந்தாரநின்று மணமல்கு 
நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கு என் மனமே

வாழ்க தமிழ்.
வாழ்க ஹிந்துக்கள்
வாழ்க ஹிந்து தர்மம்.