Followers

Search Here...

Showing posts with label சூரியன். Show all posts
Showing posts with label சூரியன். Show all posts

Friday 1 February 2019

பொங்கல் அன்று, சந்தியாவந்தனம் செய்யாத பிராம்மணர்களை கண்டு சூரிய தேவனுககு ஏற்பட்ட கோபம். கும்பகோண சக்கரபாணி சமாதானம் செய்தார். தெரிந்து கொள்வோமே...

சூரிய தேவனுக்கு ஒரு சந்தர்ப்பத்தில், உலக ஜனங்களை பார்த்து, அடக்க முடியாத மஹா கோபம் வந்து விட்டது.
அதற்கு காரணம் இருந்தது.


உலக மக்களின் நடத்தையை, சாட்சியாக பார்த்து கோண்டே இருக்கும், சூரிய தேவன், ஜனங்களின் அட்டூழியங்களை கண்டு கோபத்தில்,
"நான் (சூரியன்) ஒருவன் உதிக்காது போனால், இந்த உலகில் இருப்பவர்களுக்கு பகல் தெரியுமா? மதியம் தெரியுமா? இரவு தெரியுமா?

நான் (சூரியன்) என் ஜோதி ஸ்வரூபமான கிரணங்களால் உலகை  பிரகாசப்படுத்தவில்லையென்றால் உலகமே இருண்டு கிடக்கும்.

நாள்,
ஏழு நாட்கள் சேர்ந்தால் ஒரு வாரம்,
15 நாட்கள் சேர்ந்தால் ஒரு பட்சம்.
30 நாட்கள் சேர்ந்தால் ஒரு மாசம்.
என்று காலத்தை இவர்கள் கணிப்பதே, நான் ஒருவன் இருப்பதால் தானே?

காலத்தை கணிக்கவே, நான் தானே காரணம்.
உலகத்தில் உள்ள அனைவரும்  காலத்திற்கு கட்டுப்பட்டவர்கள்.
நானோ காலத்தையே நிர்ணயிப்பவன்.
மற்ற க்ரஹங்கள் எல்லாம், என்னை தான் சுற்றி சுற்றி வருகிறது.
சுக்கிரன் சனீஸ்வரன் என்று அனைவரும் என்னை ஆச்ரயித்தவர்கள்.
ஞானியான ரிஷிகள், தினமும் விடியற் காலையில் எழுந்து ஸ்னானம், தியானம், அர்க்கியம் செய்வது, என் தரிசனத்திற்காக தானே!!.
என் கிரணங்களை ஒடுக்கி கொண்டு, நான் ஒருநாள் உதிக்காமல் இருந்து விடுகிறேன். பின்பு இந்த உலகம் எப்படி இருக்கிறது? என்று பார்க்கிறேன்.
நான் உதிக்காது போனால், எங்கும் இருள் சூழ்ந்து விடும்.

தினமும், அவரவர் கர்மாக்கள் (வேலை) நடப்பதற்காக அனைவரையும் எழுப்பி, அவரவர் காரியங்களை செய்வதற்கு உணர்ச்சி கொடுப்பதும் நான் தான்.
நான் அஸ்தமிக்கும் (மறையும்) போது, உலகத்தில் உள்ள அனைவரும் உணர்ச்சி அற்று போய், சோம்பேறிகள் ஆகி இருட்டில் செயலற்று படுத்து கிடக்கிறார்கள்.



நான் ஒருவன் உதித்தால், உலகமே உணர்ச்சி பெறுகிறது. காரியங்கள் நடக்கிறது.

நான் ஒருவன் அந்த இடத்தை விட்டு மறைந்தால், உலகமே ஸ்தம்பித்து போய் இருட்டில் மூழ்குகிறது.

உலக காரியங்கள் நடப்பதே என்னால் தான்.

அனைவரையும், அவரவர்கள் செய்யும் பாவத்தையும், புண்ணியத்தையும் சாட்சியாக நான் பார்த்து கொண்டே இருக்கிறேன்.

என்னால் தான் இந்த ஜீவனுக்கு (செடி, விலங்கு,மனிதன் etc.,) ஆரோக்கியம் கிடைக்கிறது.

நான் என் கிரணங்களின் சக்தியை கொஞ்சம் குறைத்து கொண்டால் கூட, ஆரோக்கியம் இவர்களுக்கு கிடைக்காது.

இந்த உலகில் உள்ள அனைவருக்கும் ஈஸ்வரன் நான் தான்.
நான் ஒருவன் இல்லையென்றால், உலகத்தில் உள்ளவனுக்கு கண் இருந்தாலும் தெரியாது.
கண் இருந்தும் குருடர்கள் போல வாழ வேண்டியது தான்.

இவர்களை பொறுத்தவரை நானே விஷ்ணு, நானே ப்ரம்மா, நானே ருத்ரன்.

நானே சர்வ தேவதையாகவும் இந்த உலகில் உள்ளவர்களுக்கு இருந்து காக்கிறேன்.

இப்படி இருந்தும், அஞானத்தினால் (மெய் அறிவு இல்லாத) இந்த உலக ஜனங்கள் என்னிடம் நன்றி இல்லாமல், என்னை அலட்சியம் செய்கின்றனர்.

என்னை, இந்த நன்றி கெட்ட ஜனங்கள் அலட்சியம் செய்வதை கூட, பொறுத்து கொண்டு போகிறேன் என்றாலும்,
இந்த கோரமான கலி யுகத்தில், இந்த ஜனங்கள் வேதத்தில் உள்ள எந்த தெய்வத்தை தான் மதிக்கிறார்கள்?
அனைத்து தெய்வங்களையும், இந்த நன்றி கெட்ட ஜனங்கள் அலட்சியம் செய்கிறார்களே?
இந்த கலியுகத்தில்,
ஒரு பிராம்மணனாவது, விடி காலையில் நான் உதிப்பதற்கே முன்பே எழுந்து, சந்தியா வந்தனம் செய்து, அர்க்கியம் கொடுக்கிறானா?

'இவன் அர்க்கியம் கொடுப்பான், பின்பு உதிப்போம்' என்று நான் காத்திருந்தால், எனக்கு விதிக்கப்பட்ட கால சக்கரம் படி, நேரத்துக்கு உதிக்க முடியுமா?

காலத்தில் சந்தியா வந்தனம் செய்து, அர்க்கியம் கொடுக்கும் ப்ராம்மணர்கள் குறைந்து விட்டனர்.

அர்க்கியம் கொடுக்கும் ப்ராம்மணனை விட, கொடுக்காதவர்கள் ஜாஸ்தி ஆகி விட்டனர்.
சந்தியா வந்தனமே செய்யாத பிராம்மணர் கூட்டம் ஜாஸ்தியாகி விட்டது.



 இந்த பிராம்மணன், காலை எழுந்தவுடன் தன் வயிற்றுக்கு ஏதாவது (காபி) சாப்பிடலாமா? என்று நினைக்கிறானே தவிர, ஒரு ஸ்நானம் செய்ய வேண்டும் என்று நினைப்பதே இல்லை.



முதல் தீர்த்தமாக 'சூர்யஸ்ய மாமன்யுஸ்ச... ஸ்வாஹா' என்று சொல்லி, காலையில் முதலில் குடித்து விட்டு,
பிறகு வேறு எதையாவது குடிப்போம் என்று நினைப்பதில்லையே இந்த ப்ராம்மணர்கள்.

ப்ராம்மணர்கள், ப்ராம்மணர்களாக இல்லையே !!

கடமை தவறிய ப்ராம்மணர்களாக போய் விட்டார்கள் இவர்கள்.

ஒருத்தனும் சந்தியா வந்தனம் செய்வது இல்லை.
எனக்கு முன்பே எழுந்து அர்க்கியம் விட்டு, உதய காலத்தில் என்னை தரிசக்க இவர்கள் இருப்பதில்லை.

நான் உதித்தும் தூங்கி கொண்டு இருக்கின்றனர் இந்த ப்ராம்மணர்கள்.

க்ஷத்ரியனும் க்ஷத்ரியனாக இல்லை.
தான் தோன்றியாக எவன் எவனோ தன்னை ராஜா என்று சொல்லிக்கொள்கிறான்.
தர்மத்துக்காக உயிரே போனாலும் பரவாயில்லை என்று இருந்த க்ஷத்ரியர்கள் காணவில்லை.
அதர்மத்தை சமூகத்தில் கிளப்பி, புரளி புரட்சி செய்பவர்கள் இன்று க்ஷத்ரிய பொறுப்பை ஆக்கிரமிக்க போராடுகின்றனர்.

வைஸ்யனும் வைஸ்யனாக (business) இல்லை.
எந்த வியாபாரத்திலும் நேர்மை என்பதே துளியும் கிடையாது.

எங்கு பார்த்தாலும் தெய்வ நிந்தனை செய்யும் நாத்தீகர்களும், வேத ப்ராம்மணர்களை கிண்டல் செய்யும் ஜனங்களாகவே இருக்கின்றனர்.
எங்கு பார்த்தாலும் திருட்டு இருக்கிறது.
மது பானம் அருந்துவது, பொய் பேசுவது எங்கும் காணப்படுகிறது.

கொலை செய்வதும், பிறர் மனைவியை அபகரித்து அனுபவிப்பதும் மலிந்து விட்டது.
பெண்கள் தன் சுதந்திரமே லட்சியம் என்று இருக்கிறார்கள்.
'கணவனுக்கு நான் ஏன் கட்டுப்பட்டு இருக்க வேண்டும்?'
என்று கேட்கும் பெண்களே இருக்கிறார்கள்.

பெண்கள் கணவனுக்கு பணி செய்வது காணப்படவில்லை, ஆனால் வெளியில் சென்று தனத்திற்காக (பணம்) எவன் எவனுக்கோ பணி செய்கிறார்கள்.
பதி, பத்தினிக்கு சேவை செய்கிறான்.



போன யுகம் வரை, அனைவருக்கும் "ஹரி" ஒருவரே லட்சியமாக இருந்தார். அனைவரின் வாயிலும் "ஹரி ஹரி" என்று நாமமே வந்தது.

இப்பொழுது உள்ள இந்த ஜனங்களுக்கோ, எப்பொழுதும் "தனம் தனம் தனம்..." என்று எப்பொழுதும் தியானம்.
"பணம் போதவில்லையே!!... போதவில்லையே!!...
எப்படி தனம் (பணம்) சம்பாதிக்கலாம்?,
எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம்?"
என்பது தான் இவர்கள் லட்சியமாக இருக்கிறது.

தனத்திற்காக பிசாசு போல அலையும் இவர்களுக்கு, அலங்காரமும் பிசாசு போல ஆகி விட்டது.
எங்கு பார்த்தாலும் தலை விரி கோலத்தில் பெண்கள் நடமாடுகிறார்கள்.
தலை முடியை வளர்த்து விரித்து வைத்தும்,
ராக்ஷஸர்கள் போல, நகத்தை வளர்த்து அதை கூர்மையாக சீவி கொண்டும், தன்னை அழகு படுத்தி கொள்வதிலேயே ஆர்வமாக அலைகிறார்கள்.
எல்லோருக்கும் 'தாடகை' போலவும், 'சூர்ப்பனகை' போலவும் வேஷம் போடுவதில் தான் ஆர்வமாக இருக்கிறார்கள்.
தாடகை வேஷம் போட்டு கொண்டு, தன் அலங்காரத்தை தானே ரசித்து கொள்கிறார்கள்.





சத்தியம் (உண்மை),

அஹிம்சை,
ஜீவ காருண்யம்,
ஏழைகளுக்கு கொடுத்து உதவுவது,
ஆசாரத்தில் (ஒழுக்கம்) திடமாக இருப்பது,
நேர்மையாக பேசுவது,
புண்ணிய கர்மங்களை செய்வது,
யாகங்கள் செய்து தெய்வங்களுக்கு நன்றி தெரிவிப்பது,
என்று எந்த நல்ல செயலும் இவர்களிடத்தில்  காணப்படவில்லையே, இந்த நன்றி கெட்ட ஜனங்களிடம் !! 

எங்கு பார்த்தாலும் சுய நலமே உருவான ஒழுக்கம் கெட்ட, தன் கடமையை மறந்த ஜனங்களாக போய் விட்டனர்.
இப்படி ஒழுக்கம் கெட்டு வாழும் இவர்கள், எப்படியாவது தர்ம வழியில் திரும்புவார்கள் என்று காத்து இருக்கும் போது,
கூரை பிய்ந்து போன குடிசையை, ஒரு யானை பிடுங்கி எறிவது போல,
வெளி மதங்கள், துர் மதங்கள் பிரச்சாரம் செய்து, வைதீக தர்மத்தை தாக்குகிறது.



எல்லோரும் வைதீக ஆசாரங்களை விட்டு விலகுகிறார்கள்.
விசேஷமாக யாராவது சிகை வைத்து கொண்டு, கச்சம் கட்டிக்கொண்டு போனால், "ஓ ஹாய்..." என்று சிரித்து கேலி செய்கிறார்கள்.

அதிலும் யாராவது, நெற்றியில் திருமண் காப்பு இட்டுக்கொண்டு போனால் கேட்க முடியாத கிண்டல் கேலி செய்கிறார்கள் இந்த ஜனங்கள்.
இந்த அதர்மத்தை இனியும் என்னால் சகிக்க முடியாது...
அதனால், நான் இந்த ஜகத்தை முழுவதையும் அழிக்க போகிறேன்."
என்று கோபம் அடைந்தார் சூரிய தேவன்.

அக்ஷ ரேகையை அமைத்து,
'இந்த எல்லையை தாண்டவே கூடாது' என்று பகவான் வாசுதேவன் அனைத்து தேவர்களுக்கும் அவரவர்களுக்கு ஒரு எல்லையை விதித்து உள்ளார்.

வாயு பகவானுக்கு ஒரு எல்லையை பரமாத்மாவான வாசுதேவன் வகுத்து கொடுத்துள்ளார்.
"அதை தாண்டி வர கூடாது" என்று கட்டளை இட்டுள்ளார்.
எவ்வளவு தேவையோ, அந்த அளவு தான் காற்று வீச வேண்டும் என்று விதித்து உள்ளார்.
அதே போல,
சூரிய தேவனுக்கும் ஒரு எல்லை வகுத்து உள்ளார் பகவான்.
"பீஷோதேதி சூர்ய:" என்று வேதம் சொல்கிறது.
"சூரிய தேவன் ஜகத்காரணமான (உலகை படைத்த) பரமாத்மாவுக்கு பயந்து, தன் அக்ஷ ரேகையை தாண்டி வராமல் எப்பொழுதும் இருக்கிறார்" 
என்கிறது வேதம்.

வேதம்:
பீஷாஸ்மாத் வாதப்பவதே, பீஷோ தேதி  சூர்யா:
பீஷாத் தே அக்நி சேந்த்ரிஸ்ச மிருத்யுத் தாவதி பஞ்சம:

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பகவான் இட்ட கட்டளையை மீறியதே இல்லை சூரிய தேவன்.

நன்றி கெட்ட ஜனங்களின் நடத்தையை சாட்சியாக பார்த்து, பொறுத்து கொள்ள முடியாமல், பகவான் இட்ட கட்டளையையும் இன்று மீறி விட்டார் சூரிய தேவன்.

ஈஸ்வரன் ஆணையை மீறி விட்டார்.

இப்படி கோபம் கொண்ட சூரிய தேவன், ஒரு சங்கராந்தி அன்று, தன் அக்ஷ ரேகையை (எல்லையை) மீறி கொஞ்சம் நகர்ந்து பூமி அருகில் வந்து விட்டார்.

பூ மண்டலம் முழுவதும் ஒரே வெப்பக்காற்று வீசியது.
உதய சூரியன், அன்று எதிர்பார்க்காத வெப்பதுடன் தக தகவென்று உதித்தார்.

வெப்பம் தாங்கவில்லை. 
எங்கு பார்த்தாலும் வெயில் சுட்டெரித்தது.
ஜனங்கள் வெப்பம் தாளாமல் 'ஆஆ..: என்று பரிதவித்தார்கள்.

ஏரி குளங்கள், கிணறுகள் எல்லாம் வற்றி போனது.
காவிரி நதியே வற்றி போனது.

பசுக்கள், பக்ஷிகள், தாவரங்கள் எல்லாம் தண்ணீர் இல்லாமல் சாக ஆரம்பித்தது.

ஜனங்களின் வாழ்க்கை ஒரே நாளில் அஸ்தமிக்கும் நிலை வந்தது.
ஜனங்கள் பரிதவிப்பை ரிஷிகள் பார்த்தனர்.

ரிஷிகள் எப்பொழுதும் மத்யஸ்தர்கள்.

ஸ்ரீவத்ச கோத்திரத்தில் வந்த ஹேம ரிஷிக்கு,
பெண்ணாக மஹாலக்ஷ்மியே "கோமளவள்ளியாக" அவதாரம் செய்தாள் கும்பகோணத்தில்.
மஹாவிஷ்ணுவே ஸ்வயமாக பூலோகம் வந்து கோமளவள்ளியை திருக்கல்யாணம் செய்து கொண்டார்.
ஹேம ரிஷி 'மாப்பிள்ளையாக இங்கேயே தங்குங்கள்' என்று பிரார்த்திக்க,
சாரங்கபாணியாக கையில் வில்லுடன் ராஜாவாக வைகுண்டம் கிளம்பலாம் என்று கிளம்பியவர், கும்பகோணத்திலேயே தங்கி இருந்தார்.

சூரிய தேவனின் கோபத்தால், உலகம் அழிந்து விடும் என்று பார்த்த ரிஷிகள், கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணியை சரண் அடைந்தனர்.

ரிஷிகள், சாரங்கபாணி பெருமாளை பார்த்து,
"ஹே சாரங்கபாணி !
உலகை காப்பதற்காக தானே நீங்கள் கல்யாண மூர்த்தியாக கோமளவள்ளி தாயாருடன் இங்கு வீற்று இருக்கிறீர்கள்.

சூரிய தேவன் ஜகத்தை கொளுத்தி விடுவார் போல இருக்கிறதே !!

சூரிய தேவனை எப்படியாவது நீங்கள் தான் சமாதானம் செய்ய வேண்டும்"
என்று பிரார்த்திக்க,
பகவான், சூரியனை அடக்க, உடனே தன் சக்கரத்தோடு, சக்கரராஜனாக கிளம்பினார்.

சூரியன் எதிரில் சக்கரபாணியாக  வந்ததும், தாங்க முடியாத கோபத்தில் இருந்த சூரியன் உடனே சமாதானம் அடைந்தார்.

'பகவான் ஆணையை மீறி அக்ஷ ரேகையை தான் தாண்டியது, பகவானுக்கு சம்மதம் ஆகாது'
என்று உணர்ந்த சூரிய தேவன், தன் அபராதத்தை உணர்ந்து,
கையில் சக்கரம் ஏந்திய விஷ்ணு பகவானை சரண் அடைந்தார்.

சூரிய தேவன், சக்கரபாணியான விஷ்ணுவை நமஸ்கரித்து,
"ஹே சக்கரபாணி,
உங்கள் தேஜஸுக்கு முன், என் தேஜஸ் எந்த மூலை?
சூரியனான எனக்கு முன் கற்பூரம் ஏற்றினால் ஒரு சிறு புகை போல இருக்கும்.
அது போல,
உங்கள் தேஜஸுக்கு முன்னால் நான் ஒரு சிறு கற்பூரம் போல உள்ளேன்.
உங்களை மிஞ்ச என்னால் முடியாது.

லோகத்தில் உள்ளவர்கள் அதர்ம மயமாகி விட்டார்களே!!
ஒழுக்கம் கெட்ட பாஷண்டிகள் ஆகி விட்டார்களே!!
என்று எனக்கு ஒரு கோபம் வந்து விட்டதே தவிர, உங்களுக்கு இல்லாத பொறுப்பு எனக்கு என்ன வந்து விட போகிறது? 


நீங்கள் இப்படி தான் உலகம் இருக்க வேண்டும் என்று சம்மதித்தால் நான் என்ன செய்ய முடியும்?"
என்று சூரியன் சொல்ல,
சக்கரபாணியாக உள்ள பகவான் சூரிய தேவனை பார்த்து,
"அப்படி இல்லை சூரிய தேவா!!
யார் என்ன அநியாயம் செய்தாலும், நாம் பொறுமையாக தான் போக வேண்டும்.

உலக ஜனங்கள் என்ன அதர்மம் செய்தாலும் அது நம்மை தாக்காது.
ஆனால்,
தேவர்களான நாம் சிறிது கோபம் அடைந்தாலும், உலகமே நாசமாகும்.

வாயு பகவான் சிறிது கோபம் அடைந்தால் கூட, கடுமையான புயல் கிளம்பி விடும்.

100 வருடங்கள் மேல் இருக்கும் மஹா வ்ருக்ஷங்களையும் (மரங்கள்) வேரோடு தூக்கி எறிந்து விடுவார் வாயு பகவான்.

வாழை தோட்டம், தென்னை மரங்கள் எல்லாம் வாயு பகவான் கொஞ்சம் கோபப்பட்டால் கூட ஒரு சில மணி நேரத்தில் அழித்து விடுவார்.
தேவர்கள் சீற்றம் அடைந்தால், ஜனங்கள் என்ன செய்ய முடியும்?

தெய்வங்கள் தன் எல்லையை மீறாமல் இருந்தால் தானே மக்கள் வாழ முடியும்.

காவிரி அணை உடையும் அபாயம் இருந்தால் கூட, ஆயிரம் பேர் சேர்ந்து முயற்சி செய்து அணை உடையாமல் காப்பாற்றலாம்.
கடல் பொங்கினால்? அணை போட்டா கடலை தடுக்க முடியும்?

கடல் (நீர்), காற்று, அக்னி, பூமி, ஆகாயம் என்று அனைத்தும் அதன் அதன் எல்லையில் மௌனமாக இருக்கிறது.

பஞ்ச பூதங்களுக்கு தேவதைகளான நீங்கள் அனைவரும் சர்வேஸ்வரனான என் ஆணைக்கு கட்டுப்பட்டு இருக்கிறீர்கள்.

நாம் பொறுமையாக தான் இருக்க வேண்டும்.
கோபம் நமக்கு வரத்தான் செய்யும்.
ஜனங்கள் செய்யும் அட்டூழியங்களை கண்டால், கோபம் வரத்தான் செய்யும்.
இவர்களின் அட்டூழியம் நம்மை ஒன்றும் செய்து விடாது.
ஆனால்,
நம்முடைய கோபம் அனைவரையும் நொடி பொழுதில் அழித்து விடும்.
அதனால் நாம் பொறுமையாக தான் போக வேண்டும்.

பொதுவாக இரண்டு பேர் பொறுமையாக தான் இருக்க வேண்டும்.
ஒன்று தேவர்கள்.
மற்றொருவர் பூதேவர்கள் (பூலோகத்தில் உள்ள வேத ப்ராம்மணர்கள்)

தேவர்களும் கோபம் கொள்ள கூடாது.
வேதப்ராம்மணனும் கோபம் கொள்ள கூடாது.
வேதப்ராம்மணனை கண்டால், பொறாமை கொண்ட ஜனங்கள் 'கல்லையே எரிந்தாலும், திட்டினாலும், கேலி செய்தாலும்' செய்யட்டுமே என்று இருக்க வேண்டும்.
காரணம்,
வேத ப்ராம்மணனை கேலி செய்து, "ஹே குடுமி" என்று கேலி செய்து கிண்டல் செய்தாலும், அவர்கள் கொடுக்கும் சாபம் எதுவுமே வேத ப்ராம்மணனை ஒன்றும் செய்யாது. பலிக்கவும் செய்யாது.
ஆனால்,
பூரணமாக வேதம் அத்யயணம் செய்து,
சந்தியாவந்தனம் தினம் மூன்று வேளையும் செய்து,
விஷ்ணு பூஜை தினமும் செய்து கொண்டு,
பிராம்மண லக்ஷணத்துடன் குடுமி, கச்சம் அணிந்து,
உள்ளும், புறமும் ஒழுக்கத்துடன் இருக்கும் ஒரு பிராம்மணன், கிண்டல் செய்பவனையோ, அதர்மம் செய்பவனையோ கண்டு,
மனம் குமுறி, ஏதாவது சொல்லி விட்டான் என்றால் அது நிச்சயமாக பலித்து விடும்.

பூதேவர்களான வேத பிராமணர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்பது போல, தேவர்களும் பொறுமையாக தான் போக வேண்டும்.

இருவருக்கும் பொறுமையே அழகு. பொறுமையே பூஷணம்.

ஏன் இப்படி அதர்மமாக இருக்கிறார்கள்? என்று கேட்டால், அவர்கள் மூர்க்க புத்தியே இதற்கு காரணம்.

மூடர்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று தேவர்களும், பூதேவர்களும் பொறுமையாக போக வேண்டும். கருணையே செய்ய வேண்டும்.

அதர்மம் 'புத்தியில்' இருப்பதாலேயே இப்படி அதர்மம் ,
செய்கிறார்கள், கிண்டல் செய்கிறார்கள்.



பூதேவர்களும், தேவர்களான நீங்களும் தர்மம் உணர்ந்தவர்கள்.

நீங்கள் தர்மத்தில் இருந்து கொண்டே, அதர்ம புத்தியை பொறுமையாலும், கருணையாலும், நல்ல உபதேசத்தாலும் திருத்தி தார்மீக வழியில் மாற்ற வேண்டும்.

கருணை செய்வதே நம் ஸ்வபாவம் என்று நீங்கள் இருக்க வேண்டும்."
என்றார் பகவான்.

சூரிய தேவன், பெருமாளை பார்த்து,
"அப்படியென்றால், நாம் பொறுமையாகவே போவோம், அவர்கள் பாபங்கள் செய்து கொண்டே இருக்கட்டும் என்று சொல்கிறீர்களா?
நாம் பொறுமையாகவே இருக்கிறோம். ஆனால் அவர்கள் பாபம் குறைய, நல்வழியில் திரும்ப வழி இல்லையா?

கலியில் உள்ள இந்த ஜனங்கள் மஹாபாபத்தை செய்கிறார்களே!!

செய்யக்கூடிய தர்ம காரியங்களை விட்டு விட்டு,
செய்ய கூடாத அதர்ம காரியங்களை தான் தோன்றி தனமாக செய்து கொண்டு, இருக்கிறார்களே!!
இதற்கு என்ன தான் பரிகாரம்?"
என்று சூரியதேவன் கேட்க,

உடனே பகவான்,
"நான் சாரங்கபாணியாக இங்கே இருப்பது போல, சூரிய தேவனான உன் நிமித்தமாக சக்கரபாணியாகவும் அர்ச்ச அவதாரமாக இங்கேயே இருக்க போகிறேன்."
என்றார் பெருமாள்.

கும்பகோணத்தில், நாராயணனே சாரங்கபாணியாகவும், சக்கரபாணியாகவும் உள்ளார்.
சூரியனுடைய கர்வத்தை அடக்குவதற்காக சக்கரபாணியாக வந்த பெருமாள்,
"சங்கராந்தி புண்ய காலத்தில், காவேரி ஸ்நானம் செய்து,
கும்பகோண க்ஷேத்ரம் வந்து, சக்கரபாணியான என்னை யார் தரிசிப்பார்களோ,
அவர்களுக்கு ப்ரம்மஹத்தி முதல் சர்வ பாபங்களும் போய் விடும்.

எல்லாவற்றிற்கும் மேலாக,
என் நாமத்தை சங்கீர்த்தனம் செய்பவர்களுக்கும் சர்வ பாபமும் போய் விடும்.
யார் "சாரங்கபாணே ஜகன்னாதா சங்கு சக்ர கதாதரா" என்று என் நாமத்தை சங்கீர்த்தனம் செய்வார்களோ!
அவர்களுக்கு சர்வ பாபமும் போய் விடும்.

என்னுடைய அணுகிரஹத்தால்,
அதர்மத்தில் இருந்து தானே விலகுவார்கள்"
என்று எம்பெருமான் சொல்ல, சூரிய தேவன் சமாதானம் அடைந்தார்.

இந்த எம்பெருமானிடம் ஆழ்வார்கள் மிகவும் அதிகமாக ஈடுபட்டுள்ளார்கள்.

பெரியாழ்வார் திருமொழியில், சக்கரபாணியை "பால கோபாலனாக" நினைத்து வழி படுகிறார்.
பாசுரம்:
தூநிலா முற்றத்தே போந்து விளையாட
வானிலா அம்புலீ
சந்திரா வாவென்று
நீநிலாநின்புகழாநின்ற ஆயர்தம்
கோநிலாவக்கொட்டாய் சப்பாணி
குடந்தைக்கிடந்தானே. சப்பாணி

சிறு குழந்தைகளுக்கு, பெற்ற தாயார்,
"கிருஷ்ணா ராமா கோவிந்தா, ராமா கிருஷ்ணா கோவிந்தா" என்றும்,
"ஏழு மலையானுக்கு கோவிந்தா கோவிந்தா" என்றும்
சொல்லி கொடுத்து, கை தூக்கி, கை கொட்டி ஆனந்தமாக பஜனை செய்ய பழக்குவாள்.
ஒரு பாரத பெண்மணி இப்படி தானே தன் குழந்தையை வளர்ப்பாள்.

ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார், சக்கரபாணியை குழந்தை கண்ணனாக பாவித்து பாடுகிறார்.
சக்கரபாணி கோவிலில் ஆண்டாள் சன்னதி அருகே விசாலமான முற்றம் இருப்பதை பார்த்து, யசோதை கண்ணனை தாலாட்டியது எண்ணத்தில் உதிக்க, அதையே பாசுரமாக பாடுகிறார்.


யசோதை தன் குழந்தை,  கண்ணனை மடியில் உட்கார வைத்து கொண்டு,
கை கொட்டு சொல்லி தருகிறாளாம்.

கண்ணனோ துறு துறுவென்று இருப்பானாம். அங்கும் இங்கும் தவழ்ந்து முற்றம் முழுவதும் தூணை சுற்றி சுற்றி விளையாட போவானாம். (தூநிலா முற்றத்தே போந்து விளையாட)

உலகத்திற்கே மூலப்பொருளான பரமாத்மா, அறியா குழந்தை போல, முற்றத்தில் தெரியும் நிலாவை பார்த்து, தளிர் நடை (சப்பாணி) நடந்து, வானில் தெரியும் அம்புலியை,
சந்திரனை "வா"வென்று என்று அழைக்கிறானாம்.

அனைத்தும் அறிந்தவன், ஒன்றும் அறியாதவன் போல, தளிர் நடை நடந்து நிலாவை பார்த்து கை கொட்டி ஆனந்த படும் ஆச்சர்யத்தை, சர்வேஸ்வரன் சக்கரபாணி (சப்பாணி) பெருமாளிடம் மட்டுமே பார்க்கலாம்.
குடந்தையில் பால கோபாலனாக தளிர் நடை நடக்கும் சக்கரபாணியை காண வாருங்கள் என்று நம்மையும் அழைக்கிறார் பெரியாழ்வார். (குடந்தைக்கிடந்தானே)

கும்பகோணம் என்ற குடந்தைக்கு சென்று அனைவரும் "சாரங்கபாணியையும், சக்கரபாணியையும்" தரிசிப்போம்.

குருநாதர் துணை..  


Purchase and download the audio of Sri Sri Anna for divine experience

HARE RAMA HARE KRISHNA - BHAJAN


sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka