Followers

Search Here...

Showing posts with label ஸ்ரீ. Show all posts
Showing posts with label ஸ்ரீ. Show all posts

Thursday 5 March 2020

"ஸ்ரீ" என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? இதன் 6 அர்த்தங்களை அறிந்து கொள்வோம்.

"புத்தி" உள்ளவனை "புத்திமான்" என்று சொல்கிறோம்.
"கல்வி" உடையவனை "கல்விமான்" என்று சொல்கிறோம்.
அது போல,
"ஸ்ரீ"யை உடையவனை "ஸ்ரீமான்" (ஸ்ரீமந்) என்று சொல்கிறோம்.
'ஸ்ரீ'யை உடையவர் யார்?
என்ற கேள்விக்கு பதிலாக "ஸ்ரீமந் நாராயண" என்று சொல்லி,
"ஸ்ரீயை உடையவர் அந்த நாராயணனே!" என்று பரமாத்மாவை பஜிக்கிறோம்.




"ஸ்ரீ" என்ற சப்தம் 6 அர்த்தங்களை உடையது. 
இந்த 6 அர்த்தங்களையும் உடையவளாக மஹாலக்ஷ்மி ஒருவளே இருப்பதால்,
மகாலட்சுமிக்கு "ஸ்ரீ" என்றும் பெயர்.

அந்த மஹாலக்ஷ்மி (ஸ்ரீ), நாராயணனின் இதயத்திலே (வக்ஷஸ்தலம்) இருப்பதால், பெருமாளுக்கும் "ஸ்ரீ" என்ற பெயர் சேர்ந்து "ஸ்ரீவத்சன்" என்று இருக்கிறார்.

ஆதலால், "ஸ்ரீ" என்ற சொல் மஹாலக்ஷ்மியையும் குறிக்கிறது, பெருமாளையும் குறிக்கிறது.

"ஸ்ரீ மந் நாராயண" என்று நாமமே அபேதமாகவும், பேதமாகவும் உள்ளது.

மஹாவிஷ்ணு, ஸ்ரீ என்ற மஹாலக்ஷ்மியை உடையவர் (ஸ்ரீமான் /ஸ்ரீமந்) என்ற ரீதியில் பார்த்தால், மஹாலக்ஷ்மி வேறு, மஹாவிஷ்ணு வேறு என்பது போல பேதமாக தெரியும்.

மகாவிஷ்ணுவே ஸ்ரீயாக இருக்கிறார் (ஸ்ரீமான்) என்ற ரீதியில் பார்த்தால், மகாலட்சுமியும் அவர்தான், மஹாவிஷ்ணுவும் அவர்தான் என்று அபேதமாக தெரியும்.
பாற்கடலில், மகாவிஷ்ணுவுக்கு பத்தினியாக மஹாலக்ஷ்மி பேதமாக தெரிகிறாள்.

வைகுண்டத்தில், பெருமாள் மட்டுமே இருக்க அபேதமாக தெரிகிறார். அங்கு, இதயத்தில் மஹாலக்ஷ்மி என்ற ஸ்ரீ மறைந்து இருக்கிறாள்.
இப்படி "பேதமாகவும், அபேதமாகவும்" இருக்கும் "ஸ்ரீ மந் நாராயண" என்ற நாமத்தை மனதில் எப்பொழுதும் சொல்லிக்கொண்டு இருந்தாலே நமக்கு அனைத்து சௌக்கியங்களும் உண்டாகிவிடும்.

"ஸ்ரீ" என்ற சொல்லுக்கு பொதுவாக "திரு" என்று தமிழில் சொல்வார்கள்.

உண்மையில் "ஸ்ரீ" என்ற சொல்லுக்கு ஈடான தமிழ் சொல்லே கிடையாது.
"ஸ்ரீ" என்ற சப்தம் 6 அர்த்தங்களை உடையது என்று பார்த்தோம்.
6 அர்த்தங்கள் கொண்ட இந்த ஒரு சொல்லுக்கு, உண்மையாக "திரு" என்ற ஒரு சொல் ஈடாகாது.

"ஸ்ரீ மந்நாராயண" என்ற சொல்லும் போது, "ஸ்ரீ" என்ற சொல்லின் 6 அர்த்தங்களை கொஞ்சம் மனதில் அசைபோட்டு நாம் பார்த்தால் கூட,  நமக்கு ஏற்படும் பலவித அனுபவங்கள்,
"திரு நாராயண" என்று சொல்லும் போது ஏற்படாது.

6 அர்த்தங்களும் தெரிந்த எவருமே இதை  உணர்வார்கள்.
அந்த 6 அர்த்தங்களை இனி பார்ப்போம்.
"ஸ்ரீ" என்ற சப்தத்துக்கு 6 அர்த்தங்கள் என்ன?:

1. "ஸ்ரீ" என்ற சொல்லுக்கு சகல தோஷங்களையும் போக்கிவிடுபவள் (ஸ்ருனாதி)  என்று ஒரு அர்த்தம்:

மஹாலக்ஷ்மி நமக்கு தாய்.
பூமியாக இருப்பவளும் அவளே!
இயற்கையாக இருப்பவளும் அவளே!
நாம் என்ன குதித்தாலும், மிதித்தாலும், உடைத்தாலும் பூமி மாதா கோபம் கொள்ளாமல் இருப்பதிலேயே நமக்கு இது புரியும்.
நமக்கு தாயான மஹாலக்ஷ்மி, நாம் தவறு செய்து விட்டு அவள் முன் நின்றாலும், தாய் என்ற பாசத்தினாலேயே நம் குற்றங்களை கண்டு கொள்ள மாட்டாள். 
மேலும்,
நமக்காக நம் அப்பாவான பெருமாளிடம் சிபாரிசு செய்து நமக்கு வேண்டியதை அவரே செய்ய சொல்லி தந்து விடுவாள்.




பெருமாள், நாம் அனைவருக்குமே தந்தை.
இருந்தாலும் லோகத்தை நிர்வகிப்பவர். 

தன் பிள்ளையே ஆனாலும், லோகத்தை கெடுக்கும் காரியங்களை, மற்ற பிள்ளைகளை கெடுக்கும் காரியங்களை செய்து விட்டு தன் முன் வந்து நின்றால், தவறு செய்தால் தண்டித்து விடுவார்.

இத்தனை செய்தும் திருந்தவில்லையே இவன்! என்று நம் தோஷங்களை பார்த்து எரிச்சல் அடைவார்.

"என்ன தான் தவறு செய்தாலும், நம் குழந்தைகளின் தோஷங்களை பார்க்க கூடாது"
என்று பெருமாளிடம் சிபாரிசு செய்பவள் மஹாலக்ஷ்மி.
தாயார் சொன்னால், பெருமாள் தோஷங்களை பார்க்காமல் அனுக்கிரஹம் செய்கிறார்.
ஆதலால் தான்,
கோவிலுக்கு சென்றால் முதலில் தாயாரை பார்த்து விட்டு, பெருமாளை பார்க்கும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது.

மஹாலக்ஷ்மி சீதையாக அவதரித்த போது, 
"இவள் கண்ணை பிடுங்கு! மூக்கை திருகு! நாக்கை இழு! இதயத்தை பிள!"
என்று 8 மாதங்களாக ராக்ஷஸிகள் ஓயாது மிரட்டிக்கொண்டே இருக்க, சீதாதேவி தாங்கமுடியாத துக்கத்தை அனுபவித்தாள்.

சீதாதேவியை தேடி இலங்கை வந்த போது இவர்கள் இப்படி பேசுவதை ஹனுமானே பார்த்து கோபப்பட்டார்.
மரங்களையும், ராக்ஷஸர்களையும் ஒரே அடியில் வீழ்த்திவிடும் மஹாபலசாலியான ஹனுமான்,
"இந்த ராக்ஷஸிகளின் கண்ணை பிடுங்கி எறிந்து விடவா? இவர்கள் மூக்கை திருகி விடவா? இவர்கள் நாக்கை அறுத்து விடவா? இவர்கள் இதயத்தை பிளந்து விடவா?"
என்று ஆத்திரத்தோடு சீதா தேவியிடம் அனுமதி கேட்க, சீதா தேவி என்ன பதில் சொன்னாள்? என்று நாம் கவனிக்கும் போது தான், நமக்கு மஹாலக்ஷ்மி தாயாரின் குணம் என்ன என்று புரியும்...

சீதா தேவி ஹனுமனை பார்த்து சொல்கிறாள்,
"குழந்தைகள் தவறு செய்தால் தண்டிக்க முடியுமா? 
அவரவர்கள் ஸ்வபாவம் (குணம்) தானே தவறு செய்ய வைக்கிறது. இவர்களுக்கு இப்படி பேசுவது தான் ஸ்வபாவம் (குணம்) என்றால், என்னை திட்டிக்கொண்டே இருக்கட்டுமே ! 
கொலையே செய்து விடுவேன்! என்று சொல்பவர்களிடத்திலும், ஆரியர்கள் (உயர்ந்த பண்புள்ளவர்கள்) கருணையே செய்ய வேண்டும்.
ஆதலால், 
நான் மட்டுமல்ல, ஹனுமான்!! நீயும் இவர்களை மண்ணிக்க வேண்டும். 
ஸ்ரீ ராமர் இவர்கள் செய்யும் அபசாரங்களை கேட்டால், அபசாரங்களை மன்னித்தாலும், சிறிது கண் சிவக்கும். 
இவர்கள் செய்த அபச்சாரங்களை கண்டு கொள்ள கூடாது என்று ஸ்ரீ ராமரிடம் நான் சொன்னேன் என்று சொல். 
இதையே எதிர்பார்க்கிறேன் என்று சொல்."
என்று சொன்னாள்.

இதுவே மஹாலக்ஷ்மி தாயாரின் தாயுள்ளம்.  
தாயாரிடம், பாபங்கள் செய்து விட்டு நாம் நின்றாலும், தோஷங்களை பார்க்காமல், சகல தோஷங்களையும் போக்கிவிடுபவள் (ஸ்ருனாதி) என்பதால் மகாலட்சுமிக்கு 'ஸ்ருனாதி' என்று பெயர்.

2. ஸ்ரீ என்ற சொல்லுக்கு குணபரிபூரணியாக இருப்பவள் (ஸ்ரீநாதி ச குணை: ஜகத்) என்று ஒரு அர்த்தம்:

தாயாரின் குணங்களை ஒருவன் அறிந்து கொண்டாலே, பேரானந்தம் அடைவானாம்!



இவளிடம் உள்ள குணங்களே, நமக்கு பேரானந்தத்தை தந்து விடுமாம்.

மற்றவர்களுக்கு பேரானந்தத்தை தரக்கூடிய குணங்களை கொண்டிருக்கிறாளா? எப்படி?
அனசூயை போன்ற ரிஷி பத்தினிகள், சீதா தேவியின் குணத்தை கண்டு பேரானந்தம் அடைந்தாள் என்பது பெரிய ஆச்சர்யமில்லை.




அசோகவனத்தில்,
த்ரிஜடை என்ற ஒரு ராக்ஷஸியை "சீதையை அங்கும் இங்கும் போக விடாதே, கண்காணித்து கொள்" என்று காவலுக்கு வைத்தான் ராவணன்.

காவலுக்காக வந்த இந்த ராக்ஷஸி, சில நாட்கள் சீதாதேவியுடனேயே இருக்க இருக்க,
"இப்படி ஒரு பெண் உலகத்தில் இருப்பாளோ? 
இப்படி ஒரு தாயுள்ளம் ஒரு பெண்ணுக்கு இருக்குமா? 
இப்படி ஒரு குணமா?" 
என்று பார்த்து பார்த்து பிரமித்து போனாள்.
காவலுக்கு வந்த இவள், சீதாதேவியின் குணத்தாலேயே ஈர்க்கப்பட்டு, சீதாதேவியின் தாசி போல இருந்து,
மிரட்டும் மற்ற ராக்ஷஸிகளை அடக்கி கொண்டு,
சீதாதேவிக்கு அனுகூலமாக இருந்தாள்.
சீதாதேவிக்கு அந்தரங்க சகி ஆகிவிட்டாள். 
பக்தையாகி விட்டாள்.
தாயாரின் குணங்களை இவள் அறிந்து கொண்டதாலேயே, பேரானந்தம் அடைந்தாள்.
ஒரு சிறு குழந்தை நமக்கு முன்னால் தன் சிறு கைகளை குவித்து கொண்டு வணங்கி நின்றால், அது தனக்கு ஏதாவது வேண்டும் என்று கேட்காமல் போனாலும், அந்த குழந்தைக்கு ஏதாவது நம் கையால் கொடுக்க வேண்டும் என்று தோன்றுமல்லவா?
அது போல,
ஆயிரம் பாவங்கள் செய்து விட்டு வந்தாலும்,
எதிர்பார்த்து வந்தாலும், எதிர்பார்க்காமல் வந்தாலும்,
ஒரு முறை தாயார் சன்னதி முன் நாம் கை குவித்து நின்று விட்டால் கூட, தாயார் "என் குழந்தை கை குவித்து நிற்கிறதே!!" என்று மனம் பதைபதைத்து, தன் ஐஸ்வர்யத்தையே அள்ளி கொடுத்துவிடுவாளாம்.
சிறிது நேரத்தில், "ஐயோ இந்த ஐஸ்வர்யம் இந்த பிறவிக்கு தானே!! நிரந்தரமானது இல்லையே!" என்று நினைத்து, கைவல்யம் என்ற மோக்ஷமும் கிடைக்க அனுகிரஹித்து விடுவாளாம்.
சிறிது நேரத்திலேயே, தனக்கு முன்னால் தன் குழந்தை கை குவித்து நிற்கிறதே !! கைவல்யம் போதாதே ! இவன் தந்தை நாராயணன் இருக்கும் வைகுண்டம் என்ற வீடு கிடைக்க செய்து விடுவோம்"
என்று நினைத்து பெருமாளிடம் மோக்ஷம் வரை சிபாரிசு செய்து விடுவாளாம் மஹாலக்ஷ்மி தாயார்.

மோக்ஷமும் கிடைக்க சிபாரிசு செய்த போதும், தாயார் தலை குனிந்து வருத்தப்படுவாளாம். 

இத்தனை கொடுத்தும் "என் குழந்தை எனக்கு எதிராக கை குவித்து நின்றதே!" என்று தாபம்  நீங்காமல் தலை குனிந்து வருத்தப்படுவாளாம்.
ஒரு முறை விளையாட்டாக கை குவித்து நின்றதற்கே தாயார் இப்படி நமக்காக பரிதவிப்பாள் என்றால், மஹாலக்ஷ்மியின் தாயுள்ளத்தை என்னவென்று சொல்வது?

சீதாதேவியை மிரட்டி கொண்டே இருக்கும் பிற ராக்ஷஸிகளை பார்த்து, த்ரிஜடை இதே விஷயத்தை எச்சரித்து சொல்கிறாள் என்று பார்க்கிறோம்.




த்ரிஜடை மற்ற ராக்ஷஸிகளை பார்த்து,
"நீங்கள் ராவணன் சொன்னபடியே மிரட்டுங்கள், திட்டுங்கள். தடுக்கவில்லை!! 
ஆனால், சீதை உங்களிடம் கோபம் கொள்ளாமல் இருப்பதற்காகவாவது, நீங்கள் திட்டுவதற்கு முன், ஒரு முறை கை கூப்பி வணங்கி விட்டு, பிறகு திட்டிக்கொள்ளுங்கள்"
என்று சொல்கிறாள் என்று கவனிக்கும் போது தான், தாயாரின் உள்ளம் எத்தகையது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

தாயாரின் குணங்களை பார்த்து, கெட்டவன் கூட "குணபரிபூரணியாக இருக்கிறாளே!"  என்று நினைக்கும்படியாக, மகாலட்சுமி இருப்பதால், அவளுக்கு "ஸ்ரீநாதி" என்றும் பெயர்.

3 "ஸ்ரீ" என்ற சொல்லுக்கு அனைவராலும் ஆச்ரயிக்க படுகிறாள் (ஸ்ரீயதே) என்று ஒரு அர்த்தம்:




72 சதுர் யுகங்கள் ஹிரண்யகசிபு "தானே ஈஸ்வரன்" என்று 14 லோகங்களையும் சேர்த்து ஆண்டுகொண்டிருந்தான்.
பெருமாள் "உண்மையில் இவன் தன்னுடைய துவார பாலகன் தானே!" என்று அமைதியாக இருந்து விட்டார்.
கடைசியாக,
பிரகலாதன் "தூணில் இருக்கிறார்" என்று சொல்ல,
அவன் வாக்கை சத்தியம் செய்வதற்காக நரசிம்மராக வெளிப்பட்டு நிற்க, ஹிரண்யகசிபு வாளை எடுத்துக்கொண்டு வெட்ட வர, அவனுடன் சண்டையிட்டு, தன் மடியிலேயே போட்டு, கிழித்து எறிந்து விட்டார்.

இப்படி உலகையே மிரட்டிக்கொண்டிருந்த ஹிரண்யகசிபுவை சம்ஹாரம் செய்து விட்டு, சிங்க பெருமாளாக உட்கார்ந்து கொண்டு இருக்க,
இதை பார்த்த தேவர்கள், சித்தர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள், கருடர்கள், கந்தர்வர்கள் எல்லோரும் ஒரு பக்கம் மகிழ்ந்தாலும், 
அப்பா கடும்கோபம் கொண்டு இருக்கும் போது, பிள்ளை அம்மாவிடம் தான் ஓடுவது போல,
இவர்கள் அனைவரும், சிங்கப்பெருமாள் கோபத்தை பார்த்து விட்டு, தாயாரை ஆச்ரயிக்க ஓடினாரகள்.
ஆதலால், தாயாருக்கு "ஸ்ரீயதே" என்றும் பெயர்.

நமக்கு உள்ள கெட்ட குணங்களை பார்த்து, தந்தை கோபப்படுவாரோ!! என்று பயந்து, ஒரு குழந்தை தன் தாயிடம் ஓடி அடைக்கலம் கேட்பது போல,
கோவிலில், மஹாலக்ஷ்மி தாயார் நமக்கெல்லாம் ஆச்ரயமாக (ஸ்ரீயதே) இருந்து,
அப்பாவிடம் செல்ல சங்கோஜமாக இருந்தால் என்னிடம் வந்து சொல்! நான் உனக்காக பேசி, உனக்கு தேவையானதை எல்லாம் வாங்கி தருவேன்! 
என்று இருக்கிறாள்.

4. "ஸ்ரீ" என்ற சொல்லுக்கு மஹாலக்ஷ்மியே அந்த பரமாத்மாவை (நாராயணனை) ஆஸ்ரயித்து இருக்கிறாள் (ஸ்ரயதே ச பரம் பரம்) என்று ஒரு அர்த்தம்.

தேவர்கள், அசுரர்கள் அம்ருதம் கிடைக்க பாற்கடலை கடைந்த போது,
பல ஆச்சர்யமான பொருட்கள் வெளிப்பட்டன.
சிவபெருமான் தனக்கு குளிர்ச்சியாக இருக்கட்டுமே என்று பிறை சந்திரனை எடுத்து தன் தலையில் சூட்டிக்கொண்டு விட்டார்.




மேலும் ஐராவதம், உச்சைஸ்ரவஸ், பாரிஜாத, காமதேனு, அப்சரஸ், வாருணி போன்றவை வெளிப்பட்டன.
அசுரர்களும், தேவர்களும் பிரித்துக்கொண்டனர்.
ஒரு சமயம் மஹாலக்ஷ்மி வெளிப்பட, லட்சுமி கடாக்ஷம் யாருக்கு தான் வேண்டாம் என்பார்கள்?
யோகத்தில் இருக்கும் ரிஷிகள், தேவர்கள், அசுரர்கள் அனைவரும்,
"தனக்கு மஹாலக்ஷ்மி மாலை இடுவாளோ?" என்று வரிசையாக நிற்க, "தான் ஆச்ரயிக்க வேண்டியவர் ஸ்ரீ மந்நாராயணனே!" என்று மகாவிஷ்ணுவுக்கு மாலையிட்டாள்.
மஹாலக்ஷ்மியை நாம் ஆச்ரயிக்க, 
மஹாலக்ஷ்மியே ஆஸ்ரயிக்கும் பெருமை மிக்கவர் பெருமாள்.

விஷ்ணு உலகத்தை படைத்தவர். 
ஆதலால் இவரே "ஜகத் பிதா". 

விஷ்ணு பத்தினியாக இருக்கும் மஹாலக்ஷ்மி "ஜகன் மாதா" என்று பெயர் பெற்றாள்.

விஷ்ணு பத்தினியாக இருக்கும் மகாலட்சுமிக்கு, தான் படைத்த உலகையே எழுதி வைத்து, முழு சுதந்திரம் கொடுத்து விட்டார் பெருமாள்.

இப்படி ஜகன்மாதாவாக விஷ்ணுவை ஆஸ்ரயித்து, இருக்கும் மஹாலக்ஷ்மி, நாம் பெருமாளை ஆச்ரயித்தால், இந்த உலகத்தில் வாழும்வரை தன் ஐஸ்வர்யங்களை கொட்டி கொடுத்து, அதற்கு பிறகு வைகுண்டம் வரை செல்ல அனுமதித்து விடுகிறாள்.

5. "ஸ்ரீ" என்ற சொல்லுக்கு மஹாலக்ஷ்மி நாம் சொல்வதை கூட கேட்கிறாள் (ஸ்ருனோதி) என்று ஒரு அர்த்தம்.

பெருமாளுக்கு ஒரு ஸ்வபாவம் உண்டு.
தன்னிடம் பக்தி இல்லாத, ஒழுக்கம் இல்லாத, மோக்ஷத்தில் விருப்பம் இல்லாத நம்மை போன்றவர்கள் வந்து பேசினால் முகம் கொடுத்து பேசமாட்டார். 

சொன்னதை கேட்காத பிள்ளையாக இருக்கிறானே! என்று தகப்பன் என்ற ஸ்தானத்தினாலும்,
நியாயம் அநியாயம் பார்க்கும் உலக நிர்வாகி என்ற பொறுப்பினாலும், பெருமாள் நம்மிடம் அத்தனை எளிதாக முகம் கொடுத்து பேசமாட்டாராம்.

பக்தனே சொன்னாலும் கூட சில சமயம் கேட்க மாட்டார். சுதந்திரமானவர். யாரும் அவரை கட்டுப்படுத்த முடியாது.

நாம் பேசினாலும் கேட்டாரா? கேட்கவில்லையா? என்று கூட தெரியாதாம்.

ராம அவதாரத்தில், "தேசம் பார்க்காமல், காலம் பார்க்காமல் உங்களுக்கே சேவை செய்வேன்" என்று சொல்லி லக்ஷ்மணர் ராமபிரானுடன் அயோத்தியை விட்டு வனவாசத்திற்கு கிளம்பி விட்டார்.
கங்கை கரை கடந்ததும், ராமபிரான் லக்ஷ்மணரை பார்த்து 
"பரதனும் சத்ருக்கனனும் இப்போது அயோத்தியில் இல்லை. அப்பா துக்கப்படுவார். ஆதனால் லக்ஷ்மணா! நீ அயோத்திக்கு திரும்பி செல்" 
என்று சொல்லிவிட்டார்.
"தான் கால தேசம் பார்க்காமல் உங்களுக்கு சேவகனாக இருப்பேன்" என்று சொல்லும் போது ஒன்றுமே சொல்லாமல் இருந்த ராமபிரான், தன்னை திடீரென்று "அயோத்தி திரும்பி செல்" என்று சொல்லிவிட்டாரே! என்றதும்,
லக்ஷ்மணன் செய்வதறியாது திகைத்து விட்டார்.
ராமபிரானை மீறவும் முடியாது, அவர் இல்லாமல், ஒரு க்ஷணம் கூட லக்ஷ்மணர் உயிர் தரிக்க மாட்டார்.  





துக்கம் தாளாமல், ராமபிரான் காலில் விழுந்த லக்ஷ்மணன், தன்னை திருப்பி அனுப்பிவிடுவாரோ என்ற அச்சத்தில், ராமபிரானை பார்க்காமல், 
"அண்ணா ! குளத்தில் உள்ள மீனை எடுத்து வெளியில் போட்டு விட்டால், அந்த மீன் துடி துடித்து இறந்து விடும்..  அதுபோல, சீதா தேவியையோ, என்னையோ நீங்கள் உங்களிடத்திலிருந்து பிரித்தீர்களானால், நாங்கள் துடி துடித்து இறந்து விடுவோம்" 
என்று சொல்லிக்கொண்டே, "அண்ணாவிடத்தில், தனக்கு சிபாரிசு செய்யவேண்டும்!!"
என்று அருகில் நின்று கொண்டிருந்த சீதாதேவியை கண்களாலேயே பிரார்த்தித்தார்.

அயோத்தியில், அத்தனை நேரம் பேசியும், ராமபிரான் லக்ஷ்மணர் சொன்னதை கேட்டாரா? என்பதே தெரியவில்லை.
ஆனால்,
லக்ஷ்மணர் ராமபிரானை பிரிய முடியாமல், செய்வதறியாது தன் சிபாரிசுக்கு எதிர்பார்த்து பேச, தாயாரான சீதாதேவி, லக்ஷ்மணர் சொல்வதை கவனமாக கேட்டாள் (ஸ்ருனோதி).

பக்தன் படும் பாட்டை கேட்டு (ஸ்ருனோதி), எம்பெருமானிடம் சமயம் பார்த்து சொல்லி சாதித்து கொடுப்பவள் தாயார்.

"லக்ஷ்மணன் உங்களை விட்டு பிரிந்து இருக்க கூடாது. லக்ஷ்மணனும் கூடவே வரட்டும்" என்று சீதை ராமபிரானை பார்த்து சொல்ல,
உடனேயே சம்மதித்துவிட்டார் பெருமாள்.
சீதாதேவியின் இந்த ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு, தன் அவதார காலம் வரை லக்ஷ்மணரை பிரிந்து இருக்கவில்லை பெருமாள்
தாயார் பேச்சுக்கு அத்தனை கௌரவம் கொடுப்பாராம் பெருமாள்.  

அதனால், தாயார் சந்நிதியில் சென்று நாம் என்ன பிரார்த்தனை செய்தாலும், ஒவ்வொரு வார்த்தையையும் காது கொடுத்து கேட்கிறாள் என்பதால் தாயாருக்கு "ஸ்ருனோதி" என்றும் பெயர்.


6. "ஸ்ரீ" என்ற சொல்லுக்கு மஹாலக்ஷ்மி நாம் சொல்வதை கேட்டு, அதை பெருமாளிடம் சொல்கிறாள் (ஸ்ராவயதி) என்று ஒரு அர்த்தம்.

மஹாலக்ஷ்மி நாம் பேசுவதை கேட்டு, நாம் சொன்னதை நேரம் பார்த்து, நமக்காக பெருமாளிடத்தில் சொல்கிறாள் என்பதால் தாயாருக்கு "ஸ்ராவயதிஎன்றும் பெயர்.

நமக்கு அப்பாவான பெருமாளை பற்றியும், அவர் நம் மீது எத்தனை அன்பு கொண்டவர் என்பதையும் தாயான மஹாலக்ஷ்மி நமக்கும்  சொல்கிறாள்  என்பதாலும், அவளுக்கு "ஸ்ராவயதி" என்று பெயர்.

நம்மிடம் பேசும்போது
"நீ நன்றாக இருக்க வேண்டும்..  சுகமாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டால்! உன் அப்பாவான பெருமாள் சொல்வதை கேள். 
நீ உண்மையாக அவருக்கு ஆட்பட்டு விட்டால், உன்னை கைவிடவே மாட்டார் என்பது எனக்கு தெரியும்"
என்று மஹாலக்ஷ்மி நம்மிடம் சொல்கிறாள்.

சீதாதேவியை ஒரு அசுரன் காகம் போல வடிவம் எடுத்துக்கொண்டு சீதையை தொட, மஹாகோபாம் கொண்ட ராமபிரான் தன் கையிலிருந்த தர்ப்பை புல்லையே மந்திரம் ஜபித்து ஆயுதமாக ஏறிய, (வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று காட்டினார்)
உயிர் பயம் ஏற்பட்ட காகாசுரன், சீதாதேவியின் சரணத்தில் விழுந்து மன்னிப்பு கேட்க, தன் கோபத்தை விட்டு, மன்னித்து விட்டார் ராமபிரான்.

"கொஞ்சம் உன் கர்வத்தை விட்டுவிட்டு, கொஞ்சம்  தலைவணங்கினாலும்!! பெருமாள் உன்னை மன்னித்து, உன்னை கடைசி வரை ரக்ஷிப்பார்"
என்று தாயார் நமக்கு புத்திமதி சொல்கிறாள்.



நமக்கு மட்டும் புத்திமதி சொல்வதில்லை தாயார்.
பெருமாளுக்கு புத்திமதி சொல்வாளாம்.
அதனால் அவளுக்கு (ஸ்ராவயதி) என்று பெயர்.
பெருமாளுக்கு என்ன புத்திமதி தாயார் சொல்வாள்?

ராமபிரான் வனவாசமாக வந்த போது, ஆயிரக்கணக்கான எலும்புகளின் குவியல் கிடப்பதை பார்த்து, "இங்கு என்ன நடந்தது?" என்று அங்கு இருக்கும் முனிவர்களை கேட்க,
"இந்த எலும்புகள் எல்லாம் இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களின் எலும்பு தான். ராக்ஷஸர்கள் இங்கு நடமாடுகின்றனர். அவர்கள் இங்கு இருக்கும் சாதுக்களை அப்படியே நரமாமிசமாக விழுங்கி, எலும்பை துப்பி விட்டு சென்ற குவியல் இது!"
என்று சொல்ல, ராமபிரான்,
"ஜன நடமாட்டம் உள்ள இந்த பிரதேசத்தில் ஒன்றுமே செய்யாத சாதுக்களை கொலை செய்து அட்டகாசம் செய்யும் ராக்ஷஸர்களை கூண்டோடு ஒழித்து கட்டுவேன்" என்று சொல்ல, 
ராமபிரானை பார்த்து சீதாதேவி ஆச்சர்யமாக சொல்கிறாள் (ஸ்ராவயதி),
"நீங்கள் ஸத்யம் மீறாதவர், தர்மம் தெரிந்தவர், அனைத்து ஐஸ்வர்யங்களும் உடையவர், நற்குணங்கள் நிறைந்தவர். 
இத்தனை நல்ல விஷயங்களும் உங்களிடம் எதற்கு இருக்கிறது? நிரபராதியான ராக்ஷஸர்களை கூண்டோடு ஒழிப்பேன் என்று சொல்லிவிட்டீர்களே?!"
என்று கேட்கிறாள்.

கண் எதிரே மலை போல எலும்பு குவியலை பார்த்தும்!! தாயார் இப்படி சொல்கிறாள், என்றதும் ரிஷிகளுக்கே பிரமிப்பாக இருந்தது.

தாயாரின் குணம் என்ன? எத்தனை கருணை வாய்ந்தது!!
என்று அறிந்த ராமபிரான், சீதையை பார்த்து சிரித்துக்கொண்டே,
"சீதா ! உன்னுடைய கண்ணுக்கு ஒன்றே ஒன்று தான் தெரிகிறது. 
பச்சையான அபராதம் செய்து விட்டு ஒருவன் உன் முன்னால் வந்து நின்றாலும், உன் கண்ணை வாத்சல்யம் (தாயுள்ளம்) மறைக்கிறது. 
இந்த வாத்சல்யம் உனக்கு யாரிடத்திலும் இருப்பதால், யாரையுமே தண்டிக்காதீர்கள் என்று சிபாரிசு செய்கிறாயே?"
என்று சீதா தேவியின் குணத்தை கண்டு பெருமாளே ஆச்சரியப்படுகிறார்.
குற்றமே செய்தாலும், தாயுள்ளம் மறைப்பதால், ராக்ஷஸர்களுக்கே பரிந்து பேசக்கூடிய தாயார், நமக்காக பெருமாளிடம் பேசமாட்டாளா?
இப்படி நமக்கும், பெருமாளுக்கும் பாலம் போல இருந்து பேசுவதால், மகாலட்சுமிக்கு (ஸ்ராவயதி) என்று பெயர்.

இப்படி 6 அர்த்தங்கள் ஒரு சேர உடைய மஹாலக்ஷ்மி "ஸ்ரீ" என்ற பெயர் பெற்றாள்.