Followers

Search Here...

Showing posts with label பக்தி. Show all posts
Showing posts with label பக்தி. Show all posts

Saturday 28 October 2023

திருப்பதி மலை ஏறும் போது எப்படி பெருமாளை தியானிக்க வேண்டும்? ஜாம்பவதி இதற்கு வழி காட்டினாள்... கருட புராணம் அறிவோம்

திருப்பதி மலை ஏறும் போது என்ன சொல்ல வேண்டும்?

மலை ஏறும் போது... ,"14 லோகங்களில் உள்ளவர்களும் வணங்கும் ஶ்ரீநிவாச பெருமாளின் தரிசனம் எனக்கு எப்பொழுது  கிடைக்கும், எப்பொழுது கிடைக்கும்" என்று சொல்லிக்கொண்டே, ஜாம்பவதி செய்த பிரார்த்தனை.

ஜாம்பவதியை ஶ்ரீகிருஷ்ணர் மணம் செய்து கொள்கிறார்.

ஜாம்பவதியே தன் பட்டத்து மிஹிஷிகளில் மிகவும் விரும்பத்தக்கவள் என்றார்.

ஶ்ரீ கிருஷ்ணர், "தான் ருக்மிணியை நினைக்கும் போது ருக்மிணியே மனதில் நிற்பாள். ருக்மிணியை நினைக்காத நேரங்களில் எல்லாம் எனக்கு ஜாம்பவதி நினைவாகவே இருக்கும்" என்றார். 

இதை கேட்ட கருடன், ஜாம்பவதியின் பெருமையை கேட்க, ஜாம்பவதியின் உண்மையான விஷ்ணு பக்தியை, அவள் செய்த தீர்த்த யாத்திரையை, திருமலை என்று அழைக்கப்படும் சேஷாத்ரி மலையை நோக்கி இவள் பக்தியோடு வந்த அழகையும் விரிவாக சொல்கிறார். இந்த உரையாடலை கருட புராணத்தில், ப்ரம்ம காண்டத்தில் சொல்கிறார்.

விஷ்ணு பக்தையான ஜாம்பவதி, "எப்பொழுது விராட் ஸ்வரூபமாக இருக்கும் விஷ்ணுவின் தரிசனம் கிடைக்கும்" என்று கதறியபடி திருமலை ஏறுகிறாள்.


कदा द्रक्ष्ये श्रीनिवासस्य वक्षः

श्रीवत्स रत्नैर्भूषितं विस्तृतं च ॥

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य

तुंदंवलि त्रयेणांकितं सुंदरं च ॥

கதா த்ரக்ஷ்யே ஶ்ரீநிவாசஸ்ய வக்ஷ:

ஶ்ரீவத்ஸ ரத்ன பூஷிதம் விஸ்த்ருதம் ச

கதா த்ரக்ஷ்யே ஶ்ரீநிவாசஸ்ய

துந்தம்வளி த்ரயேனாம்கிதம் சுந்தரம் ச

- ப்ரம்ம காண்டம் (அத்யாயம் 23)

ஶ்ரீனிவாச பெருமாளின் ஶ்ரீவத்ஸம் பொருந்திய வக்ஷ ஸ்தலத்தை எப்பொழுது தரிசிப்பேன்?அந்த அழகான 3 மடிப்புகள் கொண்ட திருவயிற்றை எப்பொழுது தரிசிப்பேன்?


कदा द्रक्ष्ये श्रीनिवासस्य कंठं

महलोंकय आश्रयं कंबुतुल्यम् ॥

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य नाभि

सदांतरिक्षसि आश्रयं वै सूपूर्णम् ॥

கதா த்ரக்ஷ்யே ஶ்ரீநிவாசஸ்ய கண்டம்

மஹர் லோகய ஆஸ்ரயம் கம்புதுல்யம்

கதா த்ரக்ஷ்யே ஶ்ரீநிவாசஸ்ய நாபி

ஸத அந்தரிக்ஷ்யஸி ஆஸ்ரயம் வை சம்பூர்ணம்

பூ புவ, ஸுவ, மக:, ஜன, தப, சத்ய என்ற 7 மேல் லோகங்களில், மகர லோகமே விராட்புருஷனின் கழுத்து. அந்த ஶ்ரீனிவாசனின் சங்கு போன்ற அழகான சங்கு போன்ற உருண்டையான கழுத்தை எப்பொழுது தரிசிப்பேன்? உயிர்கள் அனைத்தையும் அடக்கி வைத்திருக்கும் அந்த திருவயிற்றை எப்பொழுது தரிசிப்பேன்?


कदा द्रक्ष्ये वदनं वै मुरारे: 

जन लोकस्य आश्रयं सर्वदैव ॥

கதா த்ரக்ஷ்யே வதனம் வை முராரே

ஜன லோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வதைவ

ஜன லோகமே விராட் ஸ்வரூபனின் திருமுகம். ஜன லோகத்தில் உள்ள அனைத்து தேவதைகளும், ரிஷிகளும் ஆஸ்ரயிக்கும் ஶ்ரீனிவாச பெருமாளை எப்பொழுது தரிசிப்பேன்?


शिरः कदा श्रीनिवासस्य द्रक्ष्ये

सत्यस्य लोकस्य आश्रयं सर्वदैव ॥

कटिं कदा श्रीनिवासस्य द्रक्ष्ये

भूर्लोकस्य आश्रयं सर्वदैव ॥

சிர: கதா ஶ்ரீனிவாசஸ்ய த்ரக்ஷ்யே

சத்யஸ்ய லோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வதைவ

கடிம் கதா ஶ்ரீனிவாசஸ்ய த்ரக்ஷ்யே

பூலோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வதைவ

சத்ய லோகமே விராட் ஸ்வரூபனின் தலை. சத்ய லோகத்தில் உள்ள பிரம்மாதி தேவர்களும் ஆஸ்ரயிக்கும் ஶ்ரீனிவாச பெருமாளை எப்பொழுது தரிசிப்பேன்?

பூ லோகமே விராட் ஸ்வரூபனின் இடை. பூலோகவாசிகள் அனைவரும் ஆஸ்ரயிக்கும் ஶ்ரீனிவாச பெருமாளை எப்பொழுது தரிசிப்பேன்?


कदा द्रक्ष्ये श्रीनिवासस्य

च ऊरु तलातलस्य आश्रयं सर्वदैव ॥

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य जानु

सुकोमलं सुतलस्य आश्रयं च ॥

கதா த்ரக்ஷ்யே ஶ்ரீனிவாசஸ்ய 

ச ஊரு தலாதலஸ்ய ஆஸ்ரயம் ஸர்வதைவ

கதா த்ரக்ஷ்யே ஶ்ரீனிவாசஸ்ய ஜானு

சுகோமலம் சுதலஸ்ய ஆஸ்ரயம் ச

தலாதல லோகமே விராட் ஸ்வரூபனின் தொடை. தலாதலவாசிகள் அனைவரும் ஆஸ்ரயிக்கும் ஶ்ரீனிவாச பெருமாளை எப்பொழுது தரிசிப்பேன்?

சுதல லோகமே விராட் ஸ்வரூபனின் மூட்டு. சுதலவாசிகள் அனைவரும் ஆஸ்ரயிக்கும் ஶ்ரீனிவாச பெருமாளை எப்பொழுது தரிசிப்பேன்?

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य जंघे

रसातलस्य आश्रयेः सर्वदैव ॥

कदा द्रक्ष्ये पादतलं हरेश्च

पातललोकस्य आश्रयं सर्वदैव ॥

கதா த்ரக்ஷ்யே ஶ்ரீனிவாசஸ்ய ஜங்கே

ரசாதலஸ்ய ஆஸ்ரயே ஸர்வதைவ

கதா த்ரக்ஷ்யே பாததலம் ஹரே: ச

பாதாள லோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வதைவ

ரசாதல லோகமே விராட் ஸ்வரூபனின் கணுக்கால். ரசாதலவாசிகள் அனைவரும் ஆஸ்ரயிக்கும் ஶ்ரீனிவாச பெருமாளை எப்பொழுது தரிசிப்பேன்?

சுதல லோகமே விராட் ஸ்வரூபனின் திருவடி. சுதலவாசிகள் அனைவரும் ஆஸ்ரயிக்கும் அந்த ஶ்ரீனிவாச பெருமாளின் திருவடியை எப்பொழுது தரிசிப்பேன்?


இவ்வாறு, ஜாம்பாவதி பக்தியோடும், தாபத்தோடும் சேஷாசலம் என்ற திருமலையில் ஏறினாள்.

இப்படிப்பட்ட 'பக்தையான ஜாம்பவதி தனக்கு மிகவும் பிரியமானவள்' என்றார் ஶ்ரீ கிருஷ்ணர். 

Monday 12 December 2022

பய-பக்தி என்றால் என்ன?

 பய-பக்தி என்றால்?

பகவான் அனைவருக்கும் சொந்தம். 

அவர், நம் ஒவ்வொருவர் இதயத்திலும் இருந்து கொண்டு, நம்மை பார்த்து கொண்டே இருக்கிறார். 


நாம் ஒருவரிடம் பேசினால் கூட, அடுத்தவர் இதயத்தில் இருந்து கொண்டு, நம்மை பார்த்து கொண்டே இருக்கிறார்.


நாம் நாலு பேரிடம் பேசினால் கூட, இப்படி நம்மை அவர் பார்த்து கொண்டே இருக்கிறார் என்றால், நமக்கு பகவானிடத்தில் பயம் வருமா? பக்தி வருமா?


நம்மை கவனித்து கொண்டே இருக்கிறார் என்று புரிந்து கொண்டாலேயே, பகவானிடத்தில் நமக்கு முதலில் பயம் தான் வரும்.


பயத்துக்கு பிறகு வருவது தான் ப்ரியம். அதனால் தான், "பய-பக்தி" என்று சொல்வது வழக்கம்.


பகவான் நம்மை பார்க்கிறார் என்றால் பயம் உண்டாக தான் செய்யும். 


பகவானிடத்தில் உறவு, பயத்திலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுது தான், அந்த பகவானின் மதிப்பு தெரியும். பயத்துக்கு பிறகு பகவானிடத்தில் ப்ரியம் உண்டாகும்.


இந்த பய-பக்திக்கு ராமகிருஷ்ணர் நெல்லை உதாரணமாக சொல்கிறார்.


பதருக்குள் அரிசி இருப்பதால், அதற்கு "நெல்" என்று பெயர்.


அரிசி உள்ளே இருப்பதால், நெல்லுக்கு பெருமை உண்டாகிறது.

நெல் அதை மூடி ரக்ஷிப்பதால், அரிசிக்கு பெருமை உண்டாகிறது.


உள்ளே அரிசி இல்லாமல் இருந்தால், நெல்லுக்கு "பதர்" என்று பெயர்.

ஆனால், இந்த மேல் உறையாக இருக்கும் பதர் இல்லாமல், அரிசி வளராது.


நமக்கு அரிசி தான் வேண்டும், என்பதற்காக நெல்லையே (பதரோடு) சாப்பிடுவோமா?

நமக்கு அரிசி தானே வேண்டும், என்பதற்காக, பதர் வேண்டாம் என்று, வெறும் அரிசியை மட்டும் நிலத்தில் போட்டாலும், அது முளைக்காது.


நிறைய அரிசி பயிர் செய்ய வேண்டுமென்றால், பதரோடு சேர்ந்த அரிசியை (நெல்லை) தான் பூமியில் தூவ வேண்டும்.


இதை பார்க்கும் போது, அரிசி முக்கியமா? நெல் முக்கியமா? என்ற கேள்வியை விட, 

எந்த இடத்தில் எது முக்கியம்? 

என்றே பார்க்க வேண்டும்.


சாப்பிடும் போது, நமக்கு அரிசி மட்டும் தேவைப்படுகிறது.


பயிர் செய்ய, நமக்கு பதரோடு சேர்ந்த அரிசி (நெல்) தேவைப்படுகிறது.


ஆக, நாம் புரிந்து கொள்ள வேண்டியது....என்ன?

நமக்கு பகவானிடத்தில் இருக்கும் பக்தி என்ற அரிசியை காத்து கொள்ள, பகவானிடத்தில் நமக்கு இருக்கும் பயம் என்ற கவசத்தை கொண்டு, பாதுகாத்து வைத்து கொள்ள வேண்டும்.


UPANYASAM BY CUDDALORE BRAHMASHRI MURALIDHARA SHARMA - SriSri Anna's Disciple

Sunday 9 August 2020

உணவை படைத்த கடவுளுக்கு, பசிக்குமா? கடவுளுக்கு கோவிலா? அவருக்கே பாதுகாப்பா?. ஞானிகள் உள்ள இந்த பாரத தேசத்தில், எதற்காக கோவில்? நெய்வேத்யம்?பாதுகாப்பு?. ஒரு அலசல்..

பரமாத்மாவை அறிந்தும், பரமாத்மா தத்துவத்தை அறிந்தும்,

வேதத்தை 4காக வகுத்து கொடுத்தும்,




'கர்ம யோகி'யாக இருந்து, மஹாபாரதம் மற்றும் 18 புராணங்களை உலகத்திற்காக கொடுத்தும், 

ஸ்வயமே 'ஞானி'யான வியாச பகவான், மனதிருப்தி ஏற்படாமல் குறைப்பட்டு கொண்டார்.

"கர்ம யோகி'யாக இருந்தும், 'ஞானி'யாக இருந்தும், பரமாத்மாவை உணர்ந்தும், திருப்தி இல்லையே! மன உருக்கம் ஏற்படவில்லையே! கண்ணீர் வரவில்லையே!" என்று குறைப்பட்டு கொண்டார் வியாசர்.

"பக்தியே 'கர்ம யோகத்தை விடவும், ஞான யோகத்தை விடவும்' ஆனந்தம் தரவல்லது.

ஆதலால் பக்தியை ஊட்டும் கிருஷ்ண சரித்திரத்தை எழுதுங்கள்" 

என்று சொன்னார் நாரதர்.


'கிருஷ்ணனே பரமாத்மா' என்பதால், பிரம்மாவின் ஸ்ருஷ்டியில் ஆரம்பித்து, உலக ஸ்ருஷ்டிகளை வர்ணித்து, பரமாத்மாவின் அவதாரங்களை வர்ணித்து, கடைசியில் கிருஷ்ண அவதாரத்தை விவரித்து சொல்கிறார்

குறிப்பாக பால லீலையை சொல்கிறார்.

அதன் பலனாக,

'பாகவதம்' என்ற பக்தி க்ரந்தம் நமக்கு கிடைத்தது.

பலனை எதிர்பார்க்காமல், பகவான் இஷ்டம் என்று கர்வமில்லாமல் காரியங்களை செய்வது - 'கர்மயோகம்'.

பகவானை பற்றி அறிந்து கொள்வது - "ஞானம்".


'பக்தி' என்றால் என்ன? 

வியாசர் கொடுத்த பக்தி கிரந்தமான பாகவதத்தில், இந்த பக்தி எப்படி உள்ளது?...


'கோகுலவாசிகள் தனக்கு பூஜை செய்யாமல், கோவர்த்தன மலைக்கு பூஜை செய்கிறார்கள்' என்றதும், தேவர்களுக்கு அதிபதியான இந்திர தேவனுக்கு மஹாகோபம் வந்தது. 

கோகுலத்தை அழிக்க பிரளய கால மழையை ஏவினான். 

7 வயதே ஆன ஸ்ரீ கிருஷ்ணன், கிடு கிடுவென்று ஓடி, தன் பிஞ்சு விரலால் கோவர்த்தன மலையையே தூக்கி விட்டான்.

"எல்லோரும் மலைக்கு கீழே வாருங்கள்" என்று அழைத்தான்.


சிறுவன் செய்ய கூடிய காரியமா?

சிறுவனை விடுங்கள். எந்த மனிதனால் மலையை தூக்க முடியும்?

வெளிப்படையாக, குட்டி கிருஷ்ணன் 'பகவானாக' செய்த காரியம் இது.

"இவன் பகவான் தான்" என்ற நம்பிக்கை இருந்ததால் தானே, யசோதை நந்தகோபர் உட்பட அனைத்து கோகுலவாசிகளும், மலைக்கு அடியில் நிற்க சம்மதித்தனர். 


இந்த காட்சியை பார்த்த ஞானிகள், ரிஷிகள் "தெய்வ லீலை... கிருஷ்ண லீலை" என்று கண்டு ஆனந்தப்பட்டனர்.


இந்திர தேவனோ, கிருஷ்ணன் 'பகவான் என்று புரிந்து கொள்ள முடியாமல்', கர்வத்தால் இடைவிடாது 7 நாட்கள் மழையை கொட்டினான்.




கவலையே இல்லாமல், 7 நாட்களும் மலையை தூக்கி கொண்டு இருந்தான் குட்டி கிருஷ்ணன்.


ஞானிகள் "பரமாத்மா தான் 7 வயது பாலகனாக இருக்கிறார். உலகத்தையே தாங்குபவர் இவர். கோவர்த்தனத்தை தூக்குவது ஒரு பெரிய காரியமா?" 

என்று பரதத்துவத்தை நினைத்து கைக்குவித்து நின்றனர்.


ஞானிகள் இப்படி நினைக்க, 

தானே கரம் யோகியாக இருந்து கோவர்த்தன மலையை தூக்கி, கோகுலத்தில் உள்ள அனைவரையும் தன் பாதுகாப்பில் வைத்து சத்சங்கம் கொடுத்து கொண்டு, 7 நாட்களும் மலையை தூக்கி கொண்டு நின்றார்.


இந்திரன் இனி மழை பொழிய ஜலம் இல்லை என்கிற அளவுக்கு போய், 7 வயது குழந்தையாக வந்திருப்பது "பகவான்" என்று உணர்ந்தான்.

"பதவி கர்வத்தால் பெரும் தவறு செய்து விட்டோம்" என்று பயந்தான்.

மழை நின்றவுடன், மலைக்கு அடியில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியே அனுப்பி, பிறகு இருந்த இடத்திலேயே மலையை வைத்து விட்டு, குட்டி கிருஷ்ணன் கோவிந்தனாக நிற்க, 

இந்திர தேவன் ப்ரத்யஷமாகி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு, குடம் குடமாக பால் அபிஷேகம் செய்தான்.

மலையை தூக்கி, 7 நாட்கள் தாங்கி பிடித்து, இந்திரனையே ப்ரத்யஷமாக பார்த்தும், கிருஷ்ணனை "என் குழந்தை" என்றே பார்த்தாளாம் யசோதை.


இந்திரனை பார்த்து, "7 நாட்கள் தண்ணீர் கொட்டினது போதாது என்று, பாலை எடுத்து வந்து என் குழந்தை மேல் கொட்டுகிறானே. ஜலதோஷம் பிடிக்குமே!!" 

என்று கவலைப்பட்டு, ஓடி வந்து தன் குழந்தைக்கு தலையை துவட்டி விட, யசோதையின் இந்த அன்புக்கு அடிமையானார் பரமாத்மா.

"7 வயது குழந்தையாக இருந்து கொண்டு மலையையே தூக்கி காட்டி இருக்கேன். 

இந்திரனையே காலில் விழ செய்து விட்டேன். 

பகவான் என்று கண் எதிரே காட்டி விட்டேன்.. 

இப்பொழுதும்,

எனக்கு ஜலதோஷம் பிடிக்குமே!! என்றும்,

என் குழந்தை!! 

என்றும் நினைக்கிறாளே..

பகவானுக்கு எதுவும் சாத்தியம் என்று எனது காரியங்கள் அனைத்தையும், ஞானிகள் 'லீலை லீலை' 

என்றே ரசிக்கும் போது, 

எனக்காக அழும் இவள் பக்தி, ஞானத்தை விட சிறந்தது" 

என்று நினைத்தாராம் பரமாத்மா.


"பகவான் தான் உலகை படைத்தார். அந்த உலகில் அவருக்கு ஒரு கோவில் தேவையா?

பகவான் தான் உணவை படைத்தார். அவருக்கு போய் பசிக்குமா?

பகவான் தான் நம்மை காக்கிறார். அவருக்கு நாம் காவலா?.."

இப்படி நாத்தீகன் அல்ல, பரதத்துவத்தை உணர்ந்த ஞானிகள் கூட சொல்ல முடியும்.


அப்படிப்பட்ட ஞானிகள் கோவர்த்தன மலையை 7 வயது குழந்தையாக கிருஷ்ணர் தூக்கியதை பார்த்தும், "பகவானுக்கு இது ஒரு பெரிய காரியமா?" 

என்று நினைத்தார்கள்.





"பகவான் தான் நம்மை படைத்தார், நம்மை காக்கிறார்" 

என்ற ஞானம் இருந்தாலும், அந்த பரமாத்மா நம்மிடம் பழக ஆரம்பித்து விட்டால், அளவிட முடியாத அன்பு (பக்தி), ஆனந்தம் ஏற்பட்டு விடுமாம்.


"என்னை பகவான் காப்பாரா?' என்ற ஆரம்பநிலையில் கேட்கும் பக்தன், 

தெய்வம் பழக ஆரம்பிக்க ஆரம்பிக்க, யசோதையின் நிலை ஏற்பட்டு, 

"பகவான் சாப்பிட்டாரா? 

பகவான் அலங்காரம் செய்து கொண்டாரா? 

பகவானை யாராவது கஷ்டப்படுத்தி விடுவார்களா? 

அவருக்கு நாம் பாதுகாப்பாக இருக்கலாமா?" 

என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்து விடுமாம்.

இதுவே பக்தி.


இந்த பக்தியை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஞானத்தை விட உயர்ந்தது என்று பார்க்கிறார்.


இந்திரன் 'பகவானுக்கு பால் அபிஷேகம் செய்தோம்' என்ற திருப்தியில் விடைபெற்றார்.


யசோதை, "கண்ணனுக்கு ஜலதோஷம் பிடிக்குமே!" 

என்று வருத்தப்பட, அவளுக்கு குழந்தையாகவே இருந்தான்.

மலையிலிருந்து இறங்கி, யசோதையிடம் ஓடி சென்று 'அம்மா..' என்று கட்டி கொள்ள, நன்றாக தலையை துவட்டி, கண்ணனை பார்த்து 

"கண்ணா.. மூக்கை சிந்து.. மூக்கை சிந்துடா..." 

என்று யசோதை கண்ணனின் ஒரு மூக்கை மூடி கொண்டு கேட்க, 

மூச்சை வெளியே விட தெரியாமல், மூச்சை இழுத்து கொண்டு, அறியா குழந்தையாக நின்றானாம் கண்ணன்.

'அனைத்தும் அறிந்தவன், ஒன்றும் தெரியாத குழந்தை போல செய்த கிருஷ்ண லீலை', ஞானிகளையும் மோஹிக்க செய்து, பக்தியின் பெருமையை காட்டியதாம். பெரும் ஆனந்தம் ஏற்பட்டு விடுமாம்.


ஞானியான வ்யாஸ்சருக்கு, ஸ்ரீ கிருஷ்ணர் தன்னை பகவான் என்று காட்டிய இடங்களை விட, யசோதையின் பக்திக்கு வசப்பட்டு, ஒன்றும் தெரியாத பாலகனாக செய்யும் லீலைகள் கண்ணீரையும், மன உருக்கத்தையும் தந்ததாம்.


பக்தியினால் ஏற்பட்ட இந்த மன உருக்கம், வ்யாஸருக்கு மன திருப்தியை, ஆனந்தத்தை அளித்ததாம்.


ஞானத்தை விட பக்தி ஆனந்தம் தரும். இந்த பக்தியை, நமக்கும் கிடைக்க செய்து, "பாகவதம்" என்ற மோக்ஷ கிரந்தத்தை நமக்கு அருளினார் வியாசர்.


அந்த வ்யாஸருக்கு நாம் அனைவருமே கடமைப்பட்டு இருக்கிறோம்.


இந்த பாகவதத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து குந்தி தேவி துதிக்கிறாள்.. 

அதன் அர்த்தத்தை அறிந்து கொள்ள இங்கே பார்க்கவும்.


இதே பாகவதத்தில் நோய்கள் விலக, எதிரிகள் தோற்க "நாராயண கவசம்" உள்ளது. 

அதன் அர்த்தத்தை அறிந்து கொள்ள இங்கே பார்க்கவும்.




Thursday 25 June 2020

பாசுரம் (அர்த்தம்) - இடங்கொள் சமயத்தை. "பாற்கடலில், ஹரிபக்தி செய்பவர்களின் பக்தி எப்படி உள்ளது?" என்று நம்மாழ்வார் வர்ணிக்கிறார். தெரிந்து கொள்வோமே !

ஒரு சமயம் நாரதர், நர நாராயணனாக வீற்று இருக்கும் பதரிநாத்க்கு வந்தார்.



எப்பொழுதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் நாரதர், முகம் வாடி இருந்தார்..

இதை கவனித்த பதரி நாராயணன், "என்ன காரணம்?" என்று விஜாரித்தார்.

நாரதர் பல உலகங்கள் சஞ்சாரம் செய்பவர்.
எங்கு போனாலும் இவருக்கு மரியாதை, வரவேற்பு தான் கிடைக்கும்.

கம்சன் அரண்மனைக்கு சென்றாலும் வரவேற்பு கிடைக்கும், சிவபெருமானை பார்க்க சென்றாலும் வரவேற்பு கிடைக்கும்.

இவரை மதிக்காதவர் உலகில் இல்லை.

இருந்தாலும், ஒரு சமயம் ஒரு இடத்துக்கு இப்பொழுது தான் முதல் முறையாக சென்றாராம்.

அங்கு இருந்தவர்கள் அனைவரும் ஹரி நாம கீர்த்தனை தான் செய்து கொண்டு இருந்தார்கள்.

நாரதரும் ஹரி நாம கீர்த்தனை செய்பவர் தான்.
ஆசையாக இவர்கள் அருகில் சென்றும், நாரதர் வந்து இருக்கிறார் என்று கூட கவனிக்காமல், 
மெய்மறந்து நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு இருந்தார்களாம். ஆடினார்களாம்.. துள்ளினார்களாம்.. பாடினார்களாம்...குனிந்து நிமிர்ந்து நமஸ்காரம் செய்து ஆடி பாடினார்களாம்...
ஆனால் கடைசி வரை நாரதர் இருப்பதையே கவனிக்க வில்லையாம்...

இப்படி ஒரு ஹரி நாம கீர்த்தனையை நாரதர் கேட்டதே இல்லையாம்.. மேலும், தன்னை கவனிக்காததும் ஆச்சரியம் தர,
பதரி நாராயணனிடம் "இப்படி ஹரிநாம பஜனை செய்யும் இவர்கள் யார்?"
என்று கேட்க,
பதரி நாராயணன் நாரதரை பார்த்து,
"நீங்கள் பார்த்தது க்ஷீராப்தியில் அருகில் உள்ள இடம்.
அதற்கு ஸ்வேத த்வீபம் என்று பெயர்.
விஷ்ணு பக்தி செய்த புண்ணிய ஆத்மாக்கள், இங்கே தடையில்லாமல், தன்னையே மறந்து என்னை பஜித்து கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நானே லட்சியமாக இருக்கிறேன்.
இதனாலேயே, வந்திருப்பது யார் என்று கூட அவர்கள் கவனிக்கவில்லை.
அவர்கள் பக்தி அலாதியானது"
என்றார்.
விஷ்ணு லோகமான 'க்ஷீராப்தியில் உள்ள உன்னதமான பக்தர்கள் எப்படி பஜனை செய்கிறார்கள்?'
என்று தன் பாசுரத்தில் "நம்மாழ்வார்" நமக்கு காட்டுகிறார்.

இடங்கொள் சமயத்தை யெல்லாம்
எடுத்துக் களைவன போல !
தடங்கடல் பள்ளிப் பெருமான்
தன்னுடைப் பூதங்களேயாய் !
கிடந்தும் ! இருந்தும் ! எழுந்தும் !
கீதம் பலபல பாடி !
நடந்தும் ! பறந்தும் ! குனித்தும் !
நாடகம் செய்கின்றனவே !!




'பரமபதத்தில்' நாராயணன் நான்கு கைகளுடன், சங்கு சக்கரம் ஏந்தி அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.
அதே நாராயணன்,
'க்ஷீராப்தியில்' விஷ்ணுவாக இருக்கும் போது, இரண்டு கைகளுடன், ஆதிசேஷன் மேல், யோக நித்திரையில் பாற்கடலில் பள்ளி கொண்டு இருக்கிறார்.

'க்ஷீராப்தியில்' ப்ரம்ம தேவன், ருத்ரன், தேவர்கள், ரிஷிகள் பேசி பழகும் படியாக பிரசன்னமாக பாற்கடலில் இருக்கிறார்.

பாற்கடலில் வீற்று இருக்கும் விஷ்ணுவை, ஸ்வேத த்வீபத்தில் இருக்கும் இவர்கள் எப்படி பஜிக்கிறார்கள்? என்று சொல்கிறார் நம்மாழ்வார்.

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளை (தடங்கடல் பள்ளிப் பெருமான்)
நினைத்து நினைத்து, ஸ்வேத தீவபத்தில் இருக்கும் இவர்கள் ஆனந்தத்தில் திளைக்கிறார்களாம்,
விஷ்ணுவின் நாமத்தை, கைகளில் தாளத்தை வைத்து கொண்டு "நாராயண..நாராயண..நாராயண.." என்று சொல்ல சொல்ல, கோஷ்டியாக 1000 பேர் சேர்ந்து கொண்டு குனிந்து, நிமிர்ந்து ஆடியும் பாடியும் அபிநயமும் செய்து கொண்டு இருக்கின்றனராம்.

பாற்கடலில் இருக்கும் இவர்களுக்கு "நாராயணனை' பஜிப்பதே லட்சியம்.

பெருமாளே இவர்களுக்குள் புகுந்தது போல இருந்தார்களாம் இவர்கள்.
அதையே "பெருமாள் தன்னுடைப் பூதங்களேயாய் !" என்கிறார்.

இப்படி பெருமாள் இவர்களிடம் ஆவேசித்து இருக்க,
க்ஷீராப்தியில் ஆதிசேஷன் மேல் படுத்து கொண்டிருக்கிறார் என்று பாடும் போது,
தானும் அது போல அபிநயம் செய்து கிடப்பார்களாம் (கிடந்தும்)
மற்றொரு சமயம்,
பரமபத்தில் அமர்ந்த கோலத்தில் பரவாசுதேவனாக இருக்க, இவர்களும் பரவாசுதேவன போலவே அமர்ந்த படி (இருந்தும்) அபிநயம் செய்வார்களாம்.
மற்றொரு சமயம்,
திருமலையில் ஸ்ரீனிவாசனாக எழுந்து நின்று இருப்பது போலவே நின்று (எழுந்ததும்) அபிநயம் செய்வார்களாம்.

வெறும் அபிநயம் மட்டும் செய்தால் நன்றாக இருக்குமா?... அபிநயத்தோடு பல பல கீதங்கள் பாடுவார்களாம்.

தண்டகாரண்யத்தில் ராமபிரானாக நடந்ததையும், ஸ்ரீ பிருந்தாவனத்தில் கண்ணனாக நடந்ததையும் பாடும் போது,
கண்ணனாகவே நடந்து (நடந்தும்) அபிநயம் செய்வார்களாம், ராமபிரானாகவே நடந்து (நடந்தும்) அபிநயம் செய்வார்களாம்.

கருடனில் பறந்து வரும் பெருமாளாக பாடும் போது, தன் கைகளே இறக்கையாக நினைத்து, தானும் பறப்பது போல அபிநயம் (நாடகம்) செய்து ஆடுகிறார்களாம் (குனித்தும்) இவர்கள்.

இதையே,
கிடந்தும் ! இருந்தும் ! எழுந்தும் !
கீதம் பலபல பாடி !
நடந்தும் ! பறந்தும் ! குனித்தும் !
நாடகம் செய்கின்றனவே !!
என்கிறார்.

நெல் விதைக்கப்பட்ட நிலத்தில், தேவையில்லாத கோரை புல் இடையிடையே வளர்ந்து இருக்கும்.
நெல் வளர்ச்சியை தடுக்கும், இந்த கோரை புற்களை முழுமூச்சுடன் உடனே களையெடுக்க, அந்த விவசாயி குனிந்து, நிமிர்ந்து அதை தேடி கண்டுபிடித்து, அறுத்து எரிவார்களாம்,
குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதால், களைப்பு ஏற்படாமல் இருக்க கிராமத்து பாடல் பாடிக்கொண்டே, அறுத்து எரிவார்களாம்,
கோரை புல்லை பிடுங்கி எரிந்து, நெல்லை காப்பாற்றும் விவசாயி போல, இங்கு இவர்கள் குனிந்தும், நிமிர்ந்தும் ஆடுவதையும், 
களைப்பு தெரியாமல் இருக்க இவர்கள்  "நாராயண.. நாராயண.." என்று சொல்லிக்கொண்டே பாடுவதையும் பார்த்தால், 
எதையோ தூக்கி எரிவது போல தோன்றியதாம்!  நம்மாழ்வாருக்கு.




அப்படி என்ன எறிந்தார்களாம் இவர்கள்?
விஷ்ணு பக்தியை வளர்க்காத போலி மதங்களை எல்லாம், க்ஷீராப்தியில் இருக்கும் இவர்கள் கோரை புல்லை பிடுங்கி எரிவது போல தூக்கி எறிந்தார்களாம்.

மற்ற விஷயங்கள் புகாமல், நாராயணனின் நினைவே க்ஷீராப்தியில் நிரம்பி இருந்தது  என்ற ரீதியில் ரசித்து, 'க்ஷீராப்தியில் உள்ள விஷ்ணு பக்தர்கள் செய்யும் பஜனையை' ரசிக்கிறார் நம்மாழ்வார்.

இதையே,
இடங்கொள் சமயத்தை யெல்லாம்
எடுத்துக் களைவன போல !
என்று சொல்கிறார்.

குருநாதர் துணை.

Thursday 30 January 2020

தெய்வ பக்தியின் மூன்று நிலைகள் என்ன?... தெய்வத்திடம் காதல் கொண்டு ஆழ்வார்கள் பாடுகிறார்கள் என்று பார்க்கிறோம்... ஆழ்வார்கள் நிலை என்ன? தெரிந்து கொள்ள வேண்டாமா... ஹிந்துக்கள்.

தெய்வ பக்தியின் மூன்று நிலைகள் என்ன? 
தெரிந்து கொள்வோமே !!

1. காம்யார்த்தமான பக்தி:

  • உலக ஆசை உடையவர்கள். 
  • தெய்வம் தனக்கு அணுகிரஹம் செய்யும் என்று உணர்நதவர்கள். 
  • தெய்வத்திடம் பக்தி செய்து, விரதம் இருந்து, தெய்வ அணுகிரஹத்தால் தன் உலக ஆசைகளை பூர்த்தி செய்து கொள்பவர்கள்.




கோவிலுக்கு செல்வது, 
தெய்வ விக்ரஹங்களை சிலையாக பார்க்காமல் பெருமாளாக பார்ப்பது, 
விரதம் இருப்பது, 
மந்திரங்கள் ஜபிப்பது போன்றவை செய்கிறார்கள்

2. சாதனா பக்தி:

  • உலக ஆசை குறைந்து இருப்பவர்கள்.
  • தெய்வத்தின் அருளை அனுபவத்தில் உணர்நதவர்கள்.
  • உலக ஆசைகளை தெய்வத்திடம் பிரார்த்திப்பதை விட, அந்த தெய்வத்தை பற்றி, நன்கு புரிந்து கொள்ளவே ஆர்வம் மிக்கவர்கள். 
  • அதற்கு தேவையான சாதனைகளை செய்பவர்கள்.




கோவிலின் தத்துவத்தை அறிய முயல்பவர்கள்,
மந்திரங்களின் ஆழ்ந்த அர்த்தத்தை அறிந்து கொள்ள முயல்பபவர்கள்,
தெய்வத்தின் புராண சரித்திரங்கள், குணங்கள் போன்றவற்றில் ஆழ்ந்து உணருபவர்கள்,
தெய்வத்தை பற்றி அறிய தனி மனித ஒழுக்கம் என்று உணர்நதவர்கள்,
தியானம் யோகம் செய்து புலன்களை கட்டுப்படுத்தி வைத்து இருப்பவர்கள்.

ராமானுஜர் "திருவஷ்டாக்ஷர மந்திரத்தின் பொருள் அறிய", தான் யதிராஜராக இருந்த போதும்,
'ஸ்ரீரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூர் வரை' நடந்து சென்றும், 'திருக்கோஷ்டியூர் நம்பி' அதன் அர்த்தத்தை தகுதி இல்லாதவர்க்கு சொல்லி விட கூடாதே என்று தயங்கி மறுத்தார்.




ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் சற்றும் மனம் தளரவில்லை.
17 முறை தொடர்ந்து ஸ்ரீரங்கத்திற்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடையாய் நடந்தார்.
இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி அர்த்தத்தை சொல்ல தயங்கி மறுத்தார்.

அந்த பாதயாத்திரையின் பலன் 18வது சந்திப்பில் கிடைத்தது. 
உண்மையான ஆர்வமும்,
அலுப்பு அடையாமல்,
தன் மீது கோபமும் இல்லாமல் இருக்கும் ராமனுஜரே, மந்திரத்தின் பொருளை அறிய தகுதி ஆனவர்,
என்று அறிந்து, அர்த்த விஷேஷத்தை போதித்தார்.

சாதனா பக்தியில், எப்படி ஒரு பக்தன் இருப்பான்? என்று தன் சரித்திரத்திலேயே காண்பித்தார் ஸ்ரீ ராமானுஜர்.
ஞானத்தில் பூர்ணரான ராமானுஜர், 'நாதீகனும், காம்யார்த்த பக்தி செய்பவனும் கூட, பரமபதம் இதே ஜென்மத்தில் அடைந்து விட வேண்டும்' என்ற பரந்த நோக்கில், தான் கஷ்டப்பட்டு பெற்ற உபதேசத்தை இலவசமாக அனைவருக்கும் கிடைக்கும் படியாக கொடுத்து விட்டார்.

3. ஞான பக்தி :

  • உலக வாழ்க்கையை மதிக்காதவர்கள். 
  • செல்வம் சேர்ந்தாலும், ஏழையானாலும் குறைபட்டு கொள்ளாதவர்கள்.
  • இந்த ஆத்மா எப்பொழுது இந்த உடலை விட்டு, பரந்தாமனை அடையுமோ என்று தவிப்பவர்கள்.




ஜீவனாகிய தன்னை பெண்ணாகவும்,
பரமாத்மா நாராயணனே தன் புருஷனாகவும்,
"தன் கணவனிடம் சேரும் காலம் எப்பொழுதோ!!"
என்று பரமபதத்தையே எதிர்பார்த்து, தெய்வத்திடம் விரக தாபத்தில் இருப்பவர்கள்.
(ஆழ்வார்கள் இந்த நிலையிலேயே இருந்தனர்) 
ஆழ்வார்கள் தன்னை காதலியாகவும், பெருமாளை காதலானாகவும் கதறி அழுது பாடும் பாசுரங்கள், இவர்களின் ஞான பக்தி நிலையை நமக்கு காட்டுகிறது.

இந்த அனுபவத்தில் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை, நாத்தீகன் மட்டுமல்ல, காம்யார்த்தமான பக்தி செய்பவனும், சாதனா பக்தி செய்பவன் கூட படித்தாலும், "ஆழ்வார்கள் எந்த நிலையில் இப்படி பாடினார்கள்!!" என்று புரிந்து கொள்ள முடியாமல், "இது ஏதோ உலகத்தில் காணும் காதல் பாடல்" என்றே நினைப்பார்கள்.


இதன் காரணமாகவோ என்னவோ!! வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில், ஆழ்வார்கள் பாசுரங்களை, அதன் அர்த்தத்தை விஷ்ணு சஹஸ்ரநாமம் போல, அனைவருக்கும் தராமல், ஞானத்தின் தகுதி பார்த்தே பகிர்ந்துள்ளனர் என்று தெரிகிறது..

நமக்கு ஞான பக்தி இல்லாமல் போனாலும், ஆழ்வார்கள் நிலை வராது போனாலும்,
குறைந்தபட்சம் நாதீகர்களாகவாவது வாழாமல், காம்யார்த்த பக்தியாவது செய்து கொண்டு, தெய்வ அணுகிரஹத்தால், குருவின் துணையால், மேலும் மேலும் ஆன்மீக வளர்ச்சி நோக்கி செல்வோம்.

வாழ்க ஹிந்துக்கள்..
வாழ்க ஹிந்து தர்மம்.






Monday 11 June 2018

உலகில் இவ்வளவு சுக துக்கங்கள் இருக்க காரணமென்ன ?

பகவான் உலகை ஏன் படைக்கிறான்?




அனாதி காலமாய் மாயையில் மோஹித்து கிடக்கும் ஜீவக்கோடிகளை உத்தாரானம் செய்யவே பகவான் உலகை படைக்கிறான்.

பகவானின் விருப்பம் எது? 
உலகில் தோன்றிய ஜீவன்கள் தனது கர்த்தாவான நாராயணனையே காரணமான பரம் பொருள் என்றும், அவனை அடைவதே நமது லக்ஷ்யம் என்றும் தெரிந்து கொண்டு பகவத் பக்தி செய்து, முக்தி பெறுவார்கள் என்று பகவானின் விருப்பம்.

உலகில் இவ்வளவு சுக துக்கங்கள் இருக்க காரணமென்ன ?
* ஜீவனுக்கு கண்ணனை பார்ப்பதை விட காமினிகளைப் பார்ப்பதில் விருப்பம்.

* ஜீவனுக்கு கிருஷ்ண குணங்களை சிந்திப்பதை விட காமினி, காஞ்சனம் (பணம்), கீர்த்தி (புகழ்) இவைகளை சிந்திப்பதில் விருப்பம்.

* ஜீவனுக்கு கிருஷ்ண கதைகளை கேட்பதை விட காதல் கதைகளில் விருப்பம்.

* ஜீவனுக்கு கிருஷ்ண நாமத்தை சொல்வதை விட வம்பு பேசுவதில் விருப்பம்.

* ஜீவனுக்கு கிருஷ்ண பிரசாதத்தை சாப்பிடுவதை விட மது, மாமிசம், காபி, டீ இவைகளில் விருப்பம்.

* ஜீவனுக்கு கிருஷ்ண சரண துளசியை முகருவதை விட சென்ட், முக பவுடர் இவைகளின் நறுமனத்தில் விருப்பம்.

* ஜீவனுக்கு ஸத் சங்கத்திற்கு போவதை விட சினிமாவிற்கு போவதில் விருப்பம்.

* ஜீவனுக்கு பகவானுக்கும், பாகவதர்களுக்கும் தொண்டு செய்வதை விட சீட்டாடுவதிலும், திருடுவதிலும் விருப்பம்.





இவ்வாறு புலன்களை கொடுத்தவனிடம் கூட நன்றி இல்லாமல், விரயமாக்கும் ஜீவனுக்கு பாபமே ஏற்படுவதால், பல துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது.

பல துன்பங்களை அனுபவித்தும், விரக்தி ஏற்படுவதில்லை.


Monday 18 December 2017

அர்ச்சா அவதாரம் செய்து விக்ரஹ (சிலை) ரூபமாக உள்ள இறைவன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்? கூரத்தாழ்வார் "கைங்கர்யம் கொடு" என்று பிரார்த்திக்கிறார்.. ஹிந்துக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரார்த்தனை.

பெருமாளின் சேவையே பக்தி. 
பெருமாளின் சேவையே மோக்ஷத்திற்கு வழி. 
கூரத்தாழ்வார், வரதராஜஸ்தவத்தில்  கைங்கர்யம் (சேவை) வேண்டி வரதராஜனிடம் கதறுகிறார். 




"வரதா, நீங்கள் பரம தயாளு அல்லவா! 
நான் ஆசையோடு உங்களுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று வந்தால், நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உன் கைங்கர்யம் எனக்கு வேண்டாம். சீ போ!! என்று சொல்லி விடாதீர்கள்.
உங்களுக்கு ஆயிரம் பேர் கைங்கர்யம் செய்ய வருவார்கள். 
அதனால் நீ செய்ய வேண்டாம் என்று என்னை பார்த்து சொல்லிவிடலாம்.
ஆனால், எனக்கோ, நீங்கள் ஒருவரே தெய்வம்.

என்னை போன்றவர்கள் உங்களுக்கு ஆயிரம் பேர் கிடைத்து விடுவார்கள், ஆனால் உம்மை போன்ற தெய்வம் வேறு இல்லையே!!
உங்களுக்கு கைங்கர்யம் செய்யாமல் நான் எப்படி இருக்க முடியும்?

நீங்கள் பரம தயாளு என்று ஏன் சொல்கிறேன் தெரியுமா? 
ஆசையினால் "கைங்கர்யம் கொடு" என்று கேட்கிறேன்.
இதை நம்பி, நீங்களும் கைங்கர்யம் கொடுத்து விடுவீர்கள்.
ஆனால், வரதா!! நீங்கள் நினைப்பதை போல நான் திறமையானவனும் இல்லை. 
ஆதலால், ஆசையினால் வாங்கிய கைங்கர்யத்தையும் குறை சொல்லும் படியாக செய்து விடுவேன் என்ற பயமும் எனக்கு உண்டு.
ஆகையால், வரதா! 
நீங்கள் தயாளுவாக நான் செய்யும் தவறை மன்னித்து விடுங்கள்.

ஆனால் கைங்கர்யம் செய்யாமல் இருக்க மட்டும் என்னை விட்டு விடாதீர்கள்.

'உங்களுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் என்ற புத்தி எனக்கு வராவிட்டால், அடித்து இழுத்தாவது எனக்கு கைங்கர்யத்தை கொடுங்கள்'.

‘அப்படியாவது உனக்கு கைங்கர்யம் கொடுக்க வேண்டும் என்று, எனக்கு என்ன அவசியம்?’ 
என்று ஒரு வேளை நீங்கள் கேட்க விரும்பினால்,
‘நீர் எனக்கு பிதா, நான் உங்கள் புத்திரன் என்ற உறவு உள்ளது என்ற உரிமையில் கேட்கிறேன்' என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சரி கைங்கர்யமே கதி என்று இருந்தால், உன் குடும்பம் என்னாவது?
உன் குடும்பத்தை யார் நடத்துவார்கள்?
என்று கேட்டால்,
அதற்கு, "இப்படி நீங்கள் கவலைப்பட்ட பின்பும் எனக்கு என்ன கவலை"
என்று இன்னும் தீவிரமாக கைங்கர்யம் செய்வேன்.

அஞானியாக உள்ள நானே என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றி கொள்ள முடியும் என்றால், பிதவான நீங்கள் என் குடும்பத்தை காப்பாற்றுவது ஒரு பெரிய காரியமோ?

எனக்கு நல்லது கெட்டது தெரியாது. உமக்கும் தெரியாமலா போய் விடும்.

பிதாவாகிய நீங்கள், கெட்ட விஷயங்களில் செல்லும் குழந்தையை தடுத்து, அடித்தாவது நல்ல விஷயங்களில் திருப்ப வேண்டாமோ?

உலக விஷயங்களுக்காக பிறர் காலில் விழுந்து, பிறரை நம்பிக்கொண்டு அலையும் என்னை பிடித்து இழுத்து என் காலில் விழு, எனக்கு தொண்டு செய் என்று சொல்ல வேண்டாமோ?
எனக்கு எது நல்லது?
உமக்கு கைங்கர்யம் செய்வது தானே எனக்கு நல்லது!!
எல்லாம் சரி, ஆனால் உன்னை திருத்த முடியாதே என்று மட்டும் சொல்லிவி டாதீர்கள்.
உங்களால் என்னை நல்லவனாக்க முடியாதா?

நான் தீய வழியில் சென்றாலும்!! 
கைங்கர்யமே வேண்டாம் என்று சொன்னாலும்!! 
பெருமாளே வேண்டாம் என்று நான் சென்றாலும்!! 
ஒரு தாய் வீம்பு செய்யும் குழந்தையை அடித்தாவது திருத்துவது போல, என்னை போகும் போக்கில் போக விடாமல், பலவந்தமாகவாவது அடித்து இழுத்தாவது உங்கள் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.

நான் பிறந்திருக்கிறேன் என்பதாலேயே, இத்தனை நாள் வரை நான் மோக்ஷம் அடையவில்லை என்பது தெரிகிறது.
இதற்கு காரணம், நீங்கள் என்னை போகற போக்குக்கு விட்டதால் தானே?

எனக்கு ஏன் இப்படி சுதந்திரம் தருகிறீர்கள்?

இப்படியே இருக்க விட்டால், நாங்கள் உலக விஷயத்திலேயே உழன்று கொண்டே தான் இருப்போம்.
உமக்கு வைகுண்டதுக்கு வர ஒரு ஆள் கிடைக்காது.

வைகுண்டத்தை கூட விடுங்கள். வரதா!! அரச்சா திருமேனியுடன் நிற்கும் உனக்கு கைங்கர்யம் செய்ய கூட ஆள் கிடைக்காமல் போய் விடும்.




ஆதலால், எந்த காரணத்தை காட்டியும், கைங்கர்யம் கொடுக்க முடியாது என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.
அடித்து இழுத்தாவது உங்கள் பக்கம் இழுத்து எங்களுக்கு கைங்கர்யம் கொடுங்கள்"
என்று வரதனை கண்டு கைங்கர்யம் வேண்டும் என்று கதறுகிறார் கூரத்தாழ்வார்.
.

ஹனுமானை முதலில் கண்ட பொழுது, லக்ஷ்மணன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது, ராமரின் தம்பி என்று சொல்லிக்கொள்ளாமல், 
"இவருக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் ஒரு தாஸன், ஒரு அடிமை" 
என்றார்.



"எதற்காக ஸ்ரீ ராமரிடம் அடிமை ஆனீர்கள்?" என்று கேட்க,
லக்ஷ்மணன், 
"அவர் குணத்திற்கு அடிமையானேன்" 
என்றார்.

"அப்படி என்ன குணத்தை கண்டீர்கள்?" என்று கேட்க,
லக்ஷ்மணன், 
"என் தீய குணத்தையும் பொறுத்துக்கொண்டு, என்னை இன்னும் கூடவே வைத்துக் கொண்டு இருக்கிறாரே என்ற அவரின் உயர்ந்த குணத்தை கண்டு அடிமை ஆனேன்" 
என்று பதில் சொன்னார் லக்ஷ்மணன்.

பின்னர், ஒரு சமயம், ஹனுமானின் கைங்கர்யத்தை கண்டு 
"உமக்கு பதில் செய்ய முடியாதபடி கடனாளி ஆகிவிட்டேனே !!" 
என்று ஸ்ரீராமர் ஹனுமானை கட்டித் தழுவ, 

ஸ்ரீ ராமரை கண்ணீருடன் அஞ்சலி செய்து, 
"உங்களுக்கு என்னை போல ஆயிரம் ஹனுமான் கிடைத்து விடுவார். 
ஆனால், உம்மை போன்ற தெய்வம் கிடைக்குமா? 
நான் செய்த கைங்கர்யம் உங்கள் குணத்திற்கு முன்னால் எம்மாத்திரம்? 
எனக்கு உங்கள் கைங்கர்யமே எப்பொழுதும் கிடைக்க அருள் செய்யுங்கள்" 
என்று கைங்கர்யமே தன் குறிக்கோளாக இருந்த ஹனுமான் சொன்னார். 

அர்ச்ச அவதாரத்துடன் பாரத தேசம் முழுதும் 'கோவிலிலும், வீட்டிலும்' வீற்றிருக்கும் பகவான், 
நம்மிடம் எதிர்பார்ப்பது, நம்மால் முடிந்த கைங்கர்யமே. 




கைங்கர்யத்தின் பலனாக மோக்ஷத்தை தர காத்து கொண்டு இருக்கிறார் நம் பெருமாள். 

நாம் சாப்பிடும் உணவில், தினமும் ஒரு கைப்பிடி அரிசியாவது அருகில் தீபம் கூட ஏற்றாமல் இருக்கும் கோவிலில் சென்று கொடுக்கலாமே!!

தன் வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது, அருகில் உள்ள கோவிலுக்கு சென்று ஒரு தீபம் ஏற்றலாமே!!.

"சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பு இது"
என்று உணர்ந்தால், "நமக்காக தான் அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார்" என்பது புரியும். 

'நாம் செய்யும் மிக சாதாரணமான சேவையையும் ஏற்பதற்கே' பெருமாள் அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார்.
இதை உணர்ந்தால்,
ஒரு உண்மையான பக்தனுக்கு, நன்றி உடையவனுக்கு, 'சேவை செய்யாமல் எப்படி இருக்க முடியும்'? 

இந்த "சேவை" உணர்வு, ஹிந்துக்களுக்கு வந்தாலே,
அரசாங்கமும் தேவை இல்லை, கோவில் நிர்வாகமும் தேவை இல்லை. அனைத்து கோவில்களிலும் தீபம் எரியும். 

வரதனிடம் நாம் கேட்க வேண்டிய வரமே, "நான் உனக்கு சேவை செய்யும் உணர்வை தா" என்பது தான். 
நமக்காக அல்லவோ அர்ச்ச அவதாராமாக நிற்கிறார் என்ற உணர்வு வந்தாலே போதும்.
நமக்கு சேவை செய்ய வேண்டும் என்ற புத்தி வந்து விடும். 
சக்கரவர்த்தியாக இருந்த 'அம்பரீஷன்',
தன் மனைவி கோவிலில் கூட்டி பெருக்க, தான் பெருமாளுக்கு தீவெட்டி பிடிப்பாரராம். 

அவர் மாளிகையில், அவருக்கு பணிவிடை செய்ய 100 வேலைக்காரர்கள் உண்டு. 
பின்பு ஏன் இப்படி தானே செய்கிறார்?

கோவிலை பெருக்க ஆள் போடலாமே? 
தீவெட்டி பிடிக்க ஆள் போடலாமே? என்றால், அம்பரீஷன் சொல்கிறார், "நான் இந்த தேசத்துக்கு சக்கரவர்த்தி, ஆனால் எம்பெருமானோ அகிலத்துக்கும் சக்கரவர்த்தி ஆயிற்றே! 
அவர் அர்ச்ச அவதாரம் எடுத்து இருக்கும் போது, இந்த சந்தர்ப்பத்த்தில்  நானே சேவை செய்யாமல் எப்படி இருக்க முடியும்?. 

மேலும் நான் இந்த சேவையை என் வேலைகாரனிடம் கொடுத்து செய்ய சொன்னால், அது 'புண்ணியமாகிவிடும்'. 
நானே செய்தால்,பெருமாளுக்கு நான் செய்யும் 'சேவையாகி விடும்'. மோக்ஷத்திற்கு வழி செய்யும். நான் அதையே விரும்புகிறேன்." 
என்கிறார். 

சேவை யாருக்கு செய்கிறோம்? என்று உணரும் போது தான், "ஆஹா!! நமக்கு கிடைத்தது வாய்ப்பு இது" என்று சேவை நாமே செய்ய தோன்றும். 

நம்மால் முடிந்த அளவு சிறிது அரிசி, பூ, தீபம் ஏற்றினால் கூட, அர்ச்ச அவதாரமாக இருக்கும் பகவான் நம் சேவையை பரிபூரணமாக ஏற்று, அணுகிரஹிக்கிறான். 
வீட்டில் இருக்கும் குட்டி கிருஷ்ண விக்ரஹமும், நாம் எந்த அளவு சேவை செய்ய ஆசையோடு இருக்கிறோம்? என்று தான் காத்துக் கொண்டு இருக்கிறார்.




நாம் பூஜை செய்யாமல், அழுக்காக விக்ரஹ ரூபத்தில் உள்ள தெய்வங்களை அவமதித்தாலும், என்றாவது ஒரு நாள் இவன் நமக்கு சேவை செய்வானா? 
இவனுக்கு அதன் பலனாக மோக்ஷமும் கொடுத்து விடலாமா? என்று நமக்காகவே நம் வீட்டிலும், கோவிலிலும் அர்ச்சா திருமேனியுடன் நாம் செய்யும் அபச்சாரங்களை சகித்துக்கொண்டு, என்று காத்துக்கொண்டு இருக்கிறார். 

பெருமாளின் சேவையே பக்தி. பெருமாளின் சேவையே மோக்ஷத்திற்கு வழி. 

வாழ்க ஹிந்துக்கள்... வாழ்க நம் தெய்வ தொண்டு.