Followers

Search Here...

Showing posts with label திருவேங்கடம். Show all posts
Showing posts with label திருவேங்கடம். Show all posts

Monday 16 July 2018

வேறு தெய்வங்கள் மேல் த்வேஷம் உள்ளவனா வைஷ்ணவன்? வைஷ்ணவ தர்மம் என்ன? பெரியாழ்வார் பாசுரத்தை கொண்டு, புரிந்து கொள்வோம்.

வேறு அந்நிய தேவதைகள் மேல் த்வேஷம் உள்ளவன் வைஷ்ணவனா? வைஷ்ணவ தர்மம் என்ன? பெரியாழ்வார் பாசுரத்தை கொண்டு, புரிந்து கொள்வோம்.





பெரியாழ்வார், திருவேங்கடமுடையானை பார்த்து, 
"என்னுடையவன் நீ என்று, என்னை எடுத்து கொண்டு விட்டீர்கள்"
என்கிறார்.

பெரியாழ்வார், "திருவேங்கடமுடையானை" பார்த்து  பாடுகிறார்,

சென்னி ஓங்கும்
தண் திருவேங்கடம் உடையாய் !
உலகு தன்னை வாழ நின்ற நம்பீ ! தாமோதரா !
சதிரா !
என்னையும்,
என் உடைமையையும்
உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின் அருளே புரிந்திருந்தேன்
இனி என் திருக்குறிப்பே
--   பெரியாழ்வார் திருமொழி.

"உலகமெல்லாம் வாழும்படியாக, சாநித்யத்துடன் திருவேங்கடத்தில் நின்றுள்ள எம்பெருமானே !
ஒரு பெண்ணிற்கு, ஒருவன் தாலி கட்டி, அவள் 'என்னை சேர்ந்தவள்' என்று சேர்த்து கொள்வது போல,
உங்களுடைய சம்பந்தம் உள்ளவன் 'நான்', என்பதை, முத்திரை இட்டு, உன் சம்பந்தமான சங்கம், சக்கரம் சாற்றிக்கொண்டு, நெற்றியில் திருமண் காப்பு, 'எனக்கும், என் உடமைகளுக்கும்' இட்டுக் கொண்டு விட்டேன்.
முத்திரை இட்டு, நான் உங்களுக்கு அடிபணிந்தேன்.
என்னுடையவன் நீ, என்று சேர்த்து கொண்டீர்கள்.
எப்பொழுதும் உங்கள் கருணையை எதிர்பார்த்தே இருப்பேன்"
என்கிறார் பெரியாழ்வார்.

பெரியவாச்சான் பிள்ளை, இந்த பாசுரத்துக்கு விளக்கம் சொல்லும் போது,
"நம்மாழ்வார், 'என் உடைமையை' என்று சொல்லும் இடத்தில் சரீரத்தையும்,
 'என்னையும்' என்று சொல்லும் இடத்தில், ஆத்மாவையும் சொல்கிறார்" என்று ஆச்சர்யமாக, நம்மாழ்வார் பாடியதின் உண்மை பொருளை பிரதிபலிக்கிறார்.

"என் உடைமையையும்
உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு"
என்று சொல்லும்போது,
'உடைமை' என்று தன் சரீரத்தையும் சேர்த்து, சொல்கிறார் நம்மாழ்வார்.

அதனால் தான், 
'வைஷ்ணவர்கள்', தன் வீடு வாசல், தன் சரீரம், என்று அனைத்திலும் சங்கம் சக்கரம் முத்திரை இட்டு, 'இந்த உடைமை அனைத்தும், உன்னை சேர்ந்தது' என்று ப்ரபத்தி செய்கின்றனர்.

சரீரத்தில் வேண்டுமானால், 'சங்கம், சக்கரம்' போன்ற முத்திரை இட்டு கொள்ளலாம்.
நெற்றியில் 'திருமண் காப்பு' இட்டு கொண்டு,
'நான் எம்பெருமானை சேர்ந்தவன், எம்பெருமானுக்கு சம்பந்தப்பட்டவன்'
என்று வெளி உலகுக்கு காட்டி கொள்ளலாம்.

அது எப்படி ஆத்மாவுக்கு முத்திரை இட முடியும்?
'ஆத்மா' கண்ணுக்கு தெரியாதது ஆயிற்றே?




"என்னையும், உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு" 
என்று பெரியாழ்வார் சொல்லும் போது,
'ஆத்மாவுக்கும் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டேன்' என்கிறாரே?

இதன் பொருள் என்ன?


இதற்கும் பெரியவாச்சான் பிள்ளையே, நம்மாழ்வார் எண்ணத்தை அப்படியே நமக்கு விளக்கி தருகிறார்.

"அந்நிய தேவதைகள், 'சம்பந்தமே' ஆத்மாவில் இருக்க கூடாது" என்பதே, 'ஆத்மாவுக்கு செய்யும் பஞ்ச சம்ஸ்காரம்' என்கிறார்.

'ஸ்ரீனிவாசனை தவிர எனக்கு வேறு எந்த தெய்வமும் தெரியாது' 
என்று ஆத்மாவில் ஸ்ரீனிவாசனை மட்டும் முத்திரையாக இடுவதே - 'ஆத்மாவில் செய்யும் பஞ்ச சம்ஸ்காரம்' என்று அர்த்தத்தை விளக்குகிறார்.




ஒரு தர்மபத்னி, கணவனை 'மட்டுமே' தன் நெஞ்சில் சுமப்பது போல, ஆத்மாவில் ஸ்ரீனிவாசனுக்கு மட்டுமே இடம்,
என்று ஆத்மாவில் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டாமா?

உடம்பில் மட்டும் சங்கு சக்கர முத்திரை அணிந்து,
மனதில் வேறு தெய்வங்களுக்கும் இடம் உண்டு என்று சொன்னால், "வைஷ்ணவன்" என்று சொல்லி என்ன பயன்?

ஆதலால்,
ஆத்மாவிலும் 'நீ மட்டுமே',
உடம்பிலும் 'உன் சம்பந்தமான திரு சின்னமே' அணிந்து,
நான் உன்னை சேர்ந்தவன் என்று, உன் கருணையையே எதிர்பார்த்து இருக்கிறேன்"
என்று பெரியாழ்வாரின் வைஷ்ணவ தர்மத்தை, விளக்கி தருகிறார் பெரியவாச்சான் பிள்ளை.

வைஷ்ணவ தர்மமே, "பதிவ்ரதா தர்மம்" தான்.

'வேறு அந்நிய தேவதை, சம்பந்தமே இல்லாமல் இரு. ஸ்ரீனிவாசனையே நினை'
என்று ஆத்மாவுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்யும் வைஷ்ணவ தத்துவத்தை மேலோட்டமாக பார்த்து விட்டு,
'வேறு அந்நிய தேவதைகள் மேல் த்வேஷம் உள்ளவன் வைஷ்ணவன்',
 என்று நினைத்து விட கூடாது. அது அர்த்தம் இல்லை.

ஏற்கனவே சொன்ன மாதிரி, வைஷ்ணவ தர்மமே, பதிவ்ரதா தர்மம் தான்.

ஒரு தர்ம பத்னி, தன் கணவனை, தவிர வேறொரு அந்நிய புருஷனை ஏறெடுத்து கூட பார்க்க மாட்டாள் அல்லவா?
இதுவே பதிவ்ரதா தர்மம்.
மற்ற புருஷனையும் தன் கணவனாக நினைப்பாளா ஒரு தர்மபத்னி?

"ஏன் இப்படி பாகுபாடு செய்கிறாள்?
மற்ற புருஷர்கள் மேல் இவளுக்கு ஏன் இப்படி த்வேஷம்?
மற்ற புருஷர்கள் என்ன தாழ்ந்தவர்களா?
அடுத்த வீட்டு புருஷனை இவள் ஏறெடுத்து கூட பார்க்க மாட்டேன் என்கிறாளே?"
என்றா இன்னொரு பெண் சொல்லுவாள்?

ஒரு தர்மபத்னிக்கு, அவள் கணவன் மட்டுமே லட்சியம்.
அவளை பொருத்தியவரை, அந்நிய புருஷன் "குபேரனாகவே" இருந்தாலும், "மன்மதனாக" இருந்தாலும் திரும்பி பார்க்க வேண்டிய அவசியமில்லையே?

இப்படி அந்நிய புருஷனை திரும்பி பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று இருப்பது ஒரு பதிவ்ரதைக்கு "பூஷணமே" (அணிகலன்) அன்றி, அது "தூஷணம்" ஆகாது.

வெளியில் பார்க்க, வெறும் தாலி மட்டும் கட்டிக்கொண்டு, மனதில் தன் கணவனுடன் மற்றொருவனுக்கும் இடம் தந்தால், அது எப்படி பதிவிரதை தர்மமாகும்?
அந்த கற்பு "இதயத்தில்" இருந்தால் தானே, திருமாங்கல்யத்துக்கும் மதிப்பு.

திருமாங்கல்யம் போல, "திருமண் காப்பு".
திருமாங்கல்யம் போல, "துளசி மணி மாலை".
திருமாங்கல்யம் போல, "சங்கு சக்கர முத்திரைகள்".
இந்த உடைமைகள், உன்னை சேர்ந்தது என்று குறிக்கின்றதே தவிர, "ஆத்மாவையும் அர்ப்பணம்" செய்யாது போனால், அவன் எப்படி வைஷ்ணவன் ஆக முடியும்?

எம்பெருமானுக்கே ஆட்பட்டவன், என்று ஆத்மாவையும் அர்ப்பணம் செய்பவனல்லவா சுத்தமான வைஷ்ணவன்?

அதேபோல, நெற்றியில் "திருமண்" இட்டு, "சங்கம் சக்கர" முத்திரையும் இட்டு, பார்க்க வைஷ்ணவன் போல இருந்து, "மனதில் வேறு தெய்வத்துக்கும் இடம் உண்டு" என்று சொன்னால், அது பதிவிரதை தர்மம் ஆகாதே?

இந்த பதிவ்ரதா தர்மத்தை தானே, வைஷ்ணவமும் காட்டுகிறது.

ஆதலால்,
"எம்பெருமான் ஒருவனுக்கே நான் ஆட்பட்டு இருப்பேன்" 
என்று சொல்லும் ஒரு வைஷ்ணவன்,
"பிற தெய்வங்களை பார்ப்பது இல்லை" என்று சொல்வது, அந்த தெய்வங்களிடம் உள்ள த்வேஷத்தால் (வெறுப்பு) அல்ல.

"என் தெய்வம் எம்பெருமான் நாராயணன் மட்டுமே" 
என்ற பதிவ்ரதை தர்மத்தில் இருப்பதே காரணம்.
இதில் த்வேஷம் (வெறுப்பு) இல்லை.

இந்த ஆத்மாவுக்கு 'ஒரு தெய்வம்' தானே இருக்க முடியும்?
வேதமோ, அந்த பரமாத்மா 'நாராயணன்' என்று தெளிவாக கூறுகிறது.
இதை பற்றி படிக்க  www.proudhindudharma.com/2017/12/blog-post_7.html Click செய்யவும்,

நாம் அனைவருக்கும் நாராயணனே அனைத்துமாக (மாதா, பிதா, கணவன் எல்லாம்) உள்ளார்.

ஒரு பதிவ்ரதைக்கு, எப்படி தன் கணவன் மட்டுமே தெரியுமோ,
அதுபோல,
நாராயணனால் படைக்கப்பட்ட நாமும், ஒரு பதிவிரதை போல, அவரால் படைக்கப்பட்ட அந்நிய தெய்வங்களின் சம்பந்தம் கொள்ளாமல், நாராயணனே நம் தெய்வம் என்று இருக்க வேண்டும்"
என்று வழி காட்டுகிறது வைஷ்ணவம்.

இப்படி உயர்ந்த பதிவிரதை தத்துவத்தை கொண்டு,
"நாராயணனை தவிர, வைஷ்ணவனுக்கு வேறு தெய்வம் தெரியாது", 
என்று சொல்லும் போது,
"ஏன் இப்படி பாகுபாடு?
மற்ற தெய்வங்கள் என்ன தாழ்ந்தவர்களா?
ஏன் அந்நிய தேவதைகளை மட்டும் வைஷ்ணவர்கள் வணங்க கூடாது?"
என்று கேட்பதே முட்டாளத்தனம்.




இப்படி "சரீரத்தையும், ஆத்மாவையும் எம்பெருமானுக்கு ஆட்படுத்தி,
'நான் உன்னை சேர்ந்தவன்' என்று இருப்பதே" வைஷ்ணவ லக்ஷணம்.

சரீரத்தையும், ஆத்மாவையும் எம்பெருமானுக்கு ஆட்படுத்திய பின், எப்படி இருப்பான் ஒரு வைஷ்ணவன்?
"எம்பெருமான் இஷ்டம்" என்று இருப்பான்.
சுகம் கொடுத்தாலும் உன் இஷ்டம், துக்கம் கொடுத்தாலும் உன் இஷ்டம் என்று இருப்பான்.

புருஷன் கைவிட்டு விட்டான் என்பதற்காக, ஒரு தர்மபத்னி வேறொரு புருஷனை நினைப்பாளா? (கண்ணகி போன்று தானே நம் பாரத தேசம் முழுவதும் பெண்கள் கற்பை உயிராக நினைத்து, தர்மத்தை மீறாமல் இருந்தனர், இருக்கின்றனர்)

அதுபோல,
"எம்பெருமான் துக்கமே கொடுத்தாலும்,  உன்னுடைய கருணை ஒன்றையே ஆச்ரயித்து இருக்கிறேன்"
என்கிற அர்த்தத்தில், நம்மாழ்வார்,
"நின் அருளே புரிந்திருந்தேன், இனி என் திருக்குறிப்பே" என்று சொல்கிறார்.

ஒரே பாசுரத்தில் திருவேங்கடமுடையானிடம்
சரீரம் மற்றும் ஆத்மாவை, ஒரு பதிவிரதை தன் கணவனிடம் தன்னை சமர்பித்து, அவன் 'கருணையை', அவன் 'அன்பை' எதிர்பார்ப்பது போல, சரண் அடைகிறார்.

திருவேங்கடமுடையானை தரிசிக்கும் போது, பெரியாழ்வார் பாசுரத்தை நாமும் அர்த்தத்துடன் ஸ்மரிக்கலாம்.

வாழ்க ஹிந்துக்கள்.  வாழ்க ஹிந்து தர்மம்.