Followers

Search Here...

Showing posts with label கடவுளை. Show all posts
Showing posts with label கடவுளை. Show all posts

Sunday 10 March 2019

கடவுளை பார்க்க முடியுமா? பார்த்தவர்கள் என்ன செய்தார்கள்? கடவுள் என்ன சொல்கிறார்?

"பகவானை பார்க்க வேண்டும்" என்ற ஆசை நமக்கு உண்மையாக இருக்குமானால்,
வேத சாஸ்திரங்கள் சொன்ன வழியில் சென்று முயற்சி செய்ய வேண்டும்.


வெறும் வாய் வார்த்தையில், விதண்டாவாத பேச்சுக்களால், பகவானை தரிசிக்க முடியாது.

நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு, அதற்கான பலன்களை தந்து விடுகிறார் பகவான்.
பலன்களை தருவதற்கு பகவான் வரவேண்டிய அவசியமில்லை.
பகவான் நமக்கு தரிசனம் தர, சில தகுதிகளை எதிர்பார்க்கிறார்.
க்ருத யுகத்தில், "பிரகலாதன்" தன்னுடன் படிக்கும் அசுர குழந்தைகளை பார்த்து சொல்கிறார்,
"புலன்கள் (கண், காது, மூக்கு, தொடுதல், சுவை) வழியாகவே இன்பங்களை அனுபவித்து,
இந்த புலன்களை சந்தோஷப்படுத்துவதற்காகவே தன் வாழ்நாள் முழுவதும் உபயோகப்படுத்துகிறீர்களே !!

இத்தனை முயற்சி கூட நீங்கள் செய்ய தேவையில்லையே பகவானை சந்தோஷப்படுத்துவதற்கு !!

பகவான் சொல்லியுள்ள வழியில், நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்தால் கூட, பகவான் உங்களுக்கும் அருள் பாலித்து விடுவாரே !!

பகவானை ப்ரத்யக்ஷமாக அனைவரும் பார்க்க முடியும்.
பகவானை பார்க்க முடியாது என்பதே இல்லை.

அசுரனாக இருந்தாலும் பகவானை பார்க்கலாம்.
இவர் தான் பகவானை பார்க்க முடியும், இவர் பார்க்க முடியாது என்பதே இல்லை.

யார் வேண்டுமானாலும் பகவானை பார்க்க முடியும்.
ஆனால்,
அந்த பகவானை பார்க்க வேண்டும் என்றால் 'திடமான நம்பிக்கையும், பேரன்பும்' அவனிடத்தில் நமக்கு வேண்டும். அவ்வளவுதான்."
என்றார் பிரகலாதன். க்ருத யுகம் 16 லட்ச வருடம் முன் இருந்த காலம்.
5000 வருடம் முன் துவாபர யுகம் முடியும் சமயம்.
துவாபர யுக முடிவு சமயத்தில், பகவான் நாராயணன் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் செய்தார்.
"என்னை எப்படி ஒருவன் பார்க்க முடியும்?"
என்று பகவானே, உத்தவனுக்கு, தன் திருவாயால் சொல்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ணர்,
"ந ஸாதயதி மாம் யோக: |
ந சாங்க்யம் தர்ம உத்தவா ||"
என்று சொல்லும்போது,
"என்னை சாங்க்ய முறையிலோ (துறவு பெற்றதனால் மட்டும்),
அல்லது
இல்லற தர்மத்தை நியாயமாக நடத்திக் கொண்டிருந்தோ,
அல்லது
யாகம், யோகம் போன்ற கர்மாக்களை செய்தோ,
எந்த சாதனை செய்தாலும் அதற்கான பலன் உண்டே தவிர, 
என் தரிசனம் கிடையாது" என்கிறார்.
மேலும்,
"பக்த்யாஹாம் ஏகயா க்ராஹ்யா
ஸ்ரத்தயாத்மா"
என்று சொல்லும்போது,
"என்னை பார்க்கவேண்டுமென்று, என் மீது
உண்மையான பக்தியும் (அன்பும்),
ஸ்ரத்தையும் (திட நம்பிக்கையும்)
ஒருவன் கொண்டிருந்தால், அவர்களுக்கு நான் என் தரிசனத்தை அளிப்பேன்" என்றார்.

இந்த சம்பாஷணை (உரையாடல்) ஸ்ரீமத்பாகவதத்தில் (11.14.20-21) உள்ளது.


இப்படி,
"யார் ஒருவனுக்கு பகவானிடத்தில்
உண்மையான "ப்ரேமையும்" (அன்பு/பக்தி),
உண்மையான "திட நம்பிக்கையும்"
இருக்குமோ, அவர்களுக்கு பகவத் தரிசனம் நிச்சயமாக கிடைக்கும்"
என்று வேத சாஸ்திரமும் சொல்கிறது.

பகவத் தரிசனம் பெற்ற பிரகலாதனும் "ப்ரேமையும்" (அன்பு/பக்தி), திட நம்பிக்கையும்" நமக்கு வேண்டும் என்று சொல்கிறார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் தன்னை தரிசனம் செய்ய, இதுவே தகுதி என்று நிச்சயப்படுத்துகிறார்.

பகவானை தரிசனம் செய்ய அனைவருக்கும் "ஆசை" உள்ளது. 
பகவான் தான் நம்மை அனைவரையும் படைத்தவர் என்றும் புரிகிறது.
ஆனால், பகவான் நாராயணனிடம் நமக்கு "பிரியம்" (அன்பு) எப்படி ஏற்பட செய்வது?
நமக்கு "அவர் மீது நம்பிக்கையை" எப்படி உண்டாக செய்வது?
பொதுவாக,
நமக்கு ஒருவரிடம் பிரியம் ஏற்பட வேண்டுமென்றால், அவரிடம் நமக்கு உள்ள "சம்பந்தம்" (உறவு) புரியும் போது, "பிரியம்" (அன்பு) ஏற்படுகிறது.

இந்த "சம்பந்தம்" (உறவு) எத்தனை நெருக்கமாக உள்ளதோ, அந்த அளவுக்கு நமக்கு அவர்கள் மீது பிரியம் ஏற்படுகிறது.
ஒரு தாய்க்கு, "தன் பிள்ளை" மேல் அலாதியான பிரியம் ஏற்படுகிறது.
ஆனால், தன் பிள்ளையின் வயதிலேயே உள்ள பக்கத்து வீட்டு பையனிடம் அத்தனை பிரியம் ஏற்படுவதில்லை. ஏன்?

இவன் "என் பிள்ளை" என்ற "சம்பந்தம்" (உறவு) அந்த தாய்க்கு தெரிவதால், தன் பிள்ளையிடம் பேரன்பு கொள்கிறாள் ஒரு தாய்.
அந்த "சம்பந்தம்" (உறவு) நெருக்கமாக இல்லாத, பக்கத்து வீட்டு பையன் "எங்கோ வெளிநாடு போகிறேன்" என்றாலும் கவலை அடைவதில்லை.
அதே சமயம், தன் பிள்ளை, வெளி நாடு சென்று விட்டால், "தன் பிள்ளை என்ன செய்கிறானோ? சாப்பிட்டானோ?" என்று கவலை பட ஆரம்பிக்கிறாள் தாய்.

ஆக,
"பிரியம்" (அன்பு, பிரேமை) என்பது, நமக்கும், பிறருக்கும் உள்ள சம்பந்தத்தை (உறவை) புரிந்து கொள்வதால் ஏற்படுகிறது
என்று அறிகிறோம்.
"நாராயணன்" என்ற நாமத்தின் அர்த்தத்தை புரிந்து கொண்டாலேயே, நமக்கும், பகவானுக்கும் உள்ள "சம்பந்தம்" (உறவு) புரிந்து விடும்.


"நர" (மனித) சமூகத்திற்கு யார் இருப்பிடமாக (அயனம்), அபயம் அளிப்பவராக, அடைக்கலம் தருபவராக இருக்கிறாரோ? 
அவரே "நாராயணன்".

அந்த நாராயணன் சங்கம் சக்ரம் ஏந்தி, ஆதிசேஷன் மேல் பாற்கடலில் உள்ளார்.
மகாலட்சுமி அவருடைய பத்னி என்று அடையாளப்படுத்துகிறது.

நமக்கு அடைக்கலம் தருபவர் "நாராயணனே",
நமக்கு 'அபயம்' (பயத்தை போக்குபவர்) தருபவரும் "நாராயணனே",
நாம் பிறவி கடல் தாண்டி, மோக்ஷம் என்ற வைகுண்டம் என்ற இருப்பிடத்தை அடைய காரணமாக இருப்பவரும் "நாராயணனே",
நம்முடனேயே எப்பொழுதும் இருப்பவரும் "நாராயணனே"
என்று நாம் உணரும் போது, நமக்கும், பகவானுக்கும் உள்ள "சம்பந்தம்" (உறவு) இயற்கையாகவே புரிந்து விடுகிறது.

நமக்கும், பகவானுக்கும் உள்ள "சம்பந்தம்" (உறவு) புரிந்தாலேயே, நமக்கு பகவான் மீது "ப்ரேமை என்ற அன்பு என்ற பக்தி" இயற்கையாகவே உண்டாகி விடும்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் "பக்தியும், ஸ்ரத்தையும் (திடநம்பிக்கையும்) தன்னிடம் யாருக்கு இருக்குமோ, அவர்களுக்கு தன்னுடைய தரிசனம் கிடைக்கும்" என்கிறார்.

நமக்கும், பகவானுக்கும் உள்ள சம்பந்தத்தை நாம் புரிந்தாலேயே,  நாளடைவில் நமக்கு ஸ்ரத்தை (திடநம்பிக்கை) ஏற்படும்.

ஆக பகவானை காண வேண்டும் என்றால், முதலில் நமக்கும் பகவானுக்கும் உள்ள சம்பந்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாராயணனுக்கும் நமக்கும் உள்ள "சம்பந்தம்" (உறவு) புரியாதவரை, கோவிலுக்கே சென்று பெருமாளை பார்த்தாலும் "ப்ரேமபக்தி" வரவே வராது.

நாராயணன் யாரோ!! நாம் யாரோ!! என்று "சம்பந்தம்" (உறவு) புரியாத வரை, நாம் பிறவி எடுத்துக்கொண்டே இருக்க வேண்டியது தான்.

"நாராயணனே பரமாத்மா. 
மனிதனாக பிறந்த நாம் அனைவரும், அவரிடம் நமக்கு உள்ள உறவை (சம்பந்தத்தை) புரிந்து கொண்டு, பக்தி செய்ய வேண்டும்" 
என்று காட்டுவதற்காக தானே, ஆழ்வார்களும், ஆசாரியர்களும், "நாராயணன்" என்று சொல்லாமல் "நம் பெருமாள்" என்று உறவை காட்டுகிறார்கள்.
சற்று யோசித்து பார்க்க வேண்டும்.
நமக்கும், நாராயணனுக்கும் உள்ள சம்பந்தத்தை காட்டுவதற்காக தானே, நாராயணனை "நம் பெருமாள்" என்றும், "எம் பெருமான்" என்றும், சொல்கிறோம்.
சற்று யோசித்து பார்க்க வேண்டும்.
ஆழ்வார்கள் "எம் பெருமானே" என்று பல இடங்களில் சொல்லி அழைப்பதை பார்க்கும் போது, தனக்கும் நாராயணனுக்கும் உள்ள உறவை (சம்பந்தம்) காட்டி பக்தி செய்தார்கள் என்று பார்க்கிறோம்.





நாராயணனை "நம் பெருமாள்" என்று சொல்லிக்கொள்ள ஆசை வராதவரை நமக்கு பக்தி ஏற்படாது.

நமக்கும் நாராயணனுக்கு உள்ள "சம்பந்தம்" (உறவு) புரிந்தாலேயே, "நம் பெருமாள்" என்று பகவானிடம் நமக்கு உறவு கொள்ள தோன்றும்.
இதுவே பக்திக்கு வித்திடும்.
ஒரு தாய்க்கு "தன் மகன்" என்ற உறவு கொள்ள தோன்றுவதால் தானே அவளுக்கு அளவு கடந்த ஆசை வருகிறது. பிறருடைய மகன் என்றால் அத்தனை ஆசை வராதே..

பகவானை பார்க்க, முதல் படியாக நமக்கு பகவானிடம் ஒரு உறவு வேண்டும்.
உறவை புரிந்து கொண்டால் மட்டும் போதாது,
பகவானிடத்தில் "எம்பெருமான்" என்று ஆசையோடு சொல்லிக்கொள்ளும் கலையாத பேரன்பு (இஷ்ட நிஷ்டை) நமக்கு வேண்டும்.

"அவர் தான் வைகுண்டம் நமக்கு அளிப்பார். அவர் தான் பரமாத்மா" என்று சம்பந்தம் மட்டும் புரிந்து, ஆர்வம் (அவர் மீது ஆசை) இல்லாது போனால், நமக்கு பக்தியே வராது.

"சம்பந்தம்" (உறவு) புரிந்தும், ஆசை இல்லாமல் இருந்தால், 'அவர் யாரோ, நாம் யாரோ' என்று தான் இருப்போம். பக்தி ஏற்படாது.
இந்த ஆசையை நமக்கு ஊட்டுவதற்காகவே ஆழ்வார்கள் நம்மை கூப்பிட்டு "இவர் நம் பெருமாள்" என்று ஆர்வத்தை ஊட்டி, பெருமாளிடம் நாமும் பக்தி செய்ய உற்சாகப்படுத்துகின்றனர்.

நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தை பாடி, "நம் பெருமானின் மகத்துவத்தை நமக்கு காட்டி" ப்ரேமையை வளர்த்து, பக்தியை வளர்க்கின்றனர்.

ஒரு தாய்க்கு தன் பிள்ளையிடம் தனக்கு உள்ள "சம்பந்தம்" (உறவு) புரிகிறது.
"என் பிள்ளை" என்று சொல்லிக்கொள்வதால், தாய்க்கு தன்  பிள்ளையிடம் பேரன்பு ஏற்படுகிறது.
"என் பிள்ளை" என்று சொல்லிக்கொள்வதால் ஏற்படும் இந்த பேரன்பு, அந்த தாய்க்கு எப்பொழுதும் அவன் பிள்ளையின் நினைவையே தருகிறது.
தன் கூடவே இருந்து வளர்ந்த பிள்ளை, திடீரென்று ஒரு சமயம் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டான்.
பிள்ளையை பிரிந்த சோகத்தில், தாய் அழுகிறாள். "எப்பொழுது மீண்டும் என் பிள்ளையை காண்பேனோ" என்று காண துடிக்கிறாள்.
அவனிடம் பேச முயற்சிக்கிறாள்.
சென்று பார்க்கலாமா? என்று யோசிக்கிறாள்.


தன் தாய் தனக்காக அழுவதை பார்க்க முடியாத பிள்ளை, "ஒரு நாள் வருவதாக" செய்தி அனுப்புகிறான்.

"தன் பிள்ளையை காண போகிறோம். இத்தனை மணிக்கு கிளம்பி இருப்பான். இத்தனை மணிக்கு வந்து விடுவான்"
என்ற "ஆர்வம்" அந்த தாயை தொற்றிக்கொள்கிறது.
"இத்தனை தேதிக்கு வருகிறேன்" என்று சொன்ன பிள்ளை, ஏதோ வேலை காரணத்தால் "வர முடியவில்லை" என்று சொல்ல, காண முடியாத துக்கத்தில்,
"ஓ"வென்று அழ ஆரம்பிக்கிறாள்.
இதுவே விரகம் என்று சொல்லப்படுகிறது.

சாதாரண பிள்ளையாக இருப்பதால், தன் தாய்க்கு  ஏற்பட்ட இந்த சோகத்தை உடனே போக்க முடியாது போகிறது.
எல்லாம் வல்ல பகவான்,
எந்த பக்தன் தன் "சம்பந்தத்தை" (உறவை) உணர்ந்து,
"எம் பெருமான்" என்று ஆசையோடு உறவு (ப்ரேமபக்தி) பாராட்டிக்கொண்டு,
எம் பெருமான் மகத்துவத்தை, கருணையை தினமும் ஸ்மரித்து, கோவிலில் அர்ச்ச அவதாரத்தை தரிசித்து கொண்டே,
தன் பக்தியை (அன்பை) மேலும் மேலும் வளர்த்துக்கொண்டு இருக்கிறானோ,
அப்படிப்பட்ட பக்தனுடன் உறவாட ஆரம்பிக்கிறார்.

ப்ரேமை என்ற அன்பு (பக்தி) தன்னிடம் ஏற்பட்ட தன் பக்தனுக்கு, ஸ்ரத்தை (திடநம்பிக்கை) ஏற்பட, வருவது போல வந்து, பின் மறைந்து, காண வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி, விரக அனுபவத்தை கொடுத்து, கடைசியில் தன் தரிசனத்தை தந்து விடுகிறார்.

ப்ரேமை (அன்பு/பக்தி) தன்னிடம் ஏற்பட்ட தன் பக்தனிடம், ஆரம்ப நிலையில், நேரிடையாக தரிசனம் தந்து விடாமல், யார் மூலமாகவோ உறவு கொள்ள ஆரம்பிக்கிறார்.

ஒரு பக்தன், தன் கஷ்டத்தை சொல்ல கோவிலுக்கு வந்து எம்பெருமானை சொல்லிக்கொள்கிறான். தெய்வம் பார்த்து தான் தன் கஷ்டத்தை தீர்க்க வேண்டும் என்று நினைக்கிறான்.
அப்பொழுது, கோவில் அர்ச்சகர் யாரை பார்த்தோ "கவலையே படாதீர்கள்.  பெருமாள் பார்த்துக்கொள்வார்" என்று சொல்லி பிரசாதம் கொடுத்து கொண்டு இருக்கிறார்.
இதை கேட்டவுடன் பக்தனுக்கு "இந்த சமாதானம் எனக்கு சொன்னது போல இருக்கிறதே" என்று தோன்ற, பெருமாள் தன் கஷ்டம் போக வழி செய்வார் என்ற நம்பிக்கையுடன் செல்கிறான்.

இப்படி முதல் படியில் பகவான் நாராயணன், தன் பக்தனிடம் பேச ஆரம்பிக்கிறார்.

அவன் நினைத்த கஷ்டம் வராமல் போக, அவனுடைய ஸ்ரத்தை (நம்பிக்கை) எம்பெருமானிடம் அதிகமாகிறது.

எப்பொழுதும் எம்பெருமான் நினைவாகவே இருக்க, அவனிடம் பேச ஆரம்பிக்கிறார்.
கோவிலில் அர்ச்ச அவதாரமாக எம்பெருமான் பேசாதது போல இருந்தாலும் பக்தனிடம் பேசுகிறார்.

பகவான் பக்தனின் தகுதிக்கு தக்கபடி பேசுகிறார்.
பக்தியை உயர்த்த உயர்த்த, பகவான் நேரிடையாகவே பேச ஆரம்பிக்கிறார்.

"இந்த காரியம் எப்படி நடக்குமோ!!" என்று நினைத்துக்கொண்டே படுத்து உறங்கும் போது, கனவில் "திருப்பதி செல்" என்று யாரோ ஒரு பெரியவர் சொல்வது போல தோன்ற, "இது ஏதோ தெய்வ வாக்கு" என்று நினைத்து திருப்பதி செல்கிறான்.
அங்கு போய் தன் பிரார்த்தனையை செய்ய, அவன் நினைத்த காரியம் நடக்க ஆரம்பிக்கிறது.

இதனால் இன்னும் இவன் ஸ்ரத்தை (நம்பிக்கை) எம்பெருமானிடம் அதிகமாகிறது, "எம்பெருமானே கதி" என்று வாழ ஆரம்பிக்கிறான்.
"கோவிலே கதி" என்று வாழ ஆரம்பிக்கிறான்.
உலக விஷயங்களில் ஆசையை குறைத்து கொண்டு, ஸத் சங்கங்களில் நேரத்தை செலவிட ஆரம்பிக்கிறான்.

பக்தியை உயர்த்தி கொண்டே போக, தன் பக்தனின் கனவிலேயே யாரோ போல வராமல், சங்கு சக்ர கதையுடன், திவ்ய தரிசனமே கொடுத்து பேச ஆரம்பிக்கிறார்.
கனவில் தான் கண்ட காட்சியை நினைத்து "நாம் இப்படி ஒரு காட்சி கண்டோமே" என்று ஆச்சர்யப்படுகிறான் பக்தன்.

ஆண்டாளுக்கே "தானே கல்யாணம் செய்து கொள்வதாக" முதலில் கனவில் தானே வந்து சொன்னார் ஸ்ரீ ரங்கநாதர்.
அதனால் தானே, "கனா கண்டேன், தோழி நான்" என்று ஆண்டாளே சொல்கிறாள் என்று பார்க்கிறோம்.

தெய்வ கனவு எதுவுமே வீணான கனவே இல்லை. தெய்வ கனவு இயற்கைக்கு மாறானது.
அருவெறுக்கத்தக்க கனவுகள் தான் அனைவருக்கும் எப்பொழுதும் வரும்.

தெய்வ கனவுகள் மிகவும் அபூர்வமாக வரும்.
தெய்வ கனவுகள் அடிக்கடி வருவதில்லை.
அடிக்கடி கன்னாபின்னா கனவுகள் வருகிறது இயற்கை.

தெய்வ கனவுகள் நமக்கு வந்தால், அது "தெய்வ அருள்" என்று புரிந்து கொள்ள வேண்டும்.

பகவான் நமக்கு ஏதாவது சொல்ல நினைத்தால் பக்தியின் நிலை பொறுத்து, கனவில் பேசுகிறார். திவ்ய காட்சி கொடுக்கிறார்.

பக்குவம் இல்லாத பக்தனிடம், நேர் எதிரில் வந்து தரிசனம் தந்து விட்டால், பக்தன் தாங்க மாட்டான் என்பதால், படிப்படியாக பக்தனிடம் நெருங்குகிறார் பகவான்.
பக்தியில் உன்னத நிலையில் இருந்த ராமகிருஷ்ண பரமஹம்சர், கிருஷ்ண சைதன்யர் போன்றவர்கள் கூட, பகவத் தரிசனம் பெற்ற பின் உன்மத்தர்கள் ஆகிவிட்டனர் என்று பார்க்கிறோம்.

பகவத் தரிசனம் பெற்றும், உலகத்தில் இருக்கும் காலம் வரை வாழ பகவத் தரிசனம் பெற்றதை ஜீரணிக்கும் சக்தி வேண்டுமே..

பக்தி குறைவாக உள்ள நமக்கு, கனவில் பேச ஆரம்பிக்கிறார்.

அதைவிட பக்தியை நாம் உயர்த்தினோம் என்றால், நம் வாழ்விலேயே யாரோ ஒருவன் போல வந்து பழகி விட்டு, மறைந்து லீலை செய்ய ஆரம்பிப்பார்.

பக்தர்களின் கதைகளில் பெரும்பாலும் நாம் இதை கவனிக்கலாம்.
பாண்டுரங்கனே, சக்குபாய், ஜனாபாய், நாம தேவர் போன்ற பக்தர்களிடம், மனிதன் போல விளையாடினான் என்று பார்க்கிறோம்.

அதைவிட பக்தியை நாம் உயர்த்தினோம் என்றால், அர்ச்ச அவதாரமாக உள்ள எம்பெருமான் பேச ஆரம்பித்து விடுவார்.

திருமழிசை ஆழ்வாருக்காக, அரச்சா திருமேனியுடன் உள்ள சொன்ன வண்ணம்செய்த பெருமாள் எழுந்து கொண்டு விட்டார்.
ராமானுஜரிடம் அர்ச்ச அவதாரமாக இருக்கும் ஸ்ரீ ரங்க பெருமாளும், மேல்கோட்டையில் உள்ள செல்ல பிள்ளை பெருமானும் பேசினார்கள் என்று பார்க்கிறோம்.
துளசி தாசர் சொன்னார் என்பதற்காக, காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கல்லாக உள்ள நந்திகேஸ்வரர், அவர் கொடுத்த உணவை, ஊர் பார்க்க உண்டு விட்டார் என்று அவர் சரித்திரத்தில் பார்க்கிறோம்.

இது வெளி ஜனங்களுக்கு ஆச்சர்யமாக தோன்றினாலும், பக்தனுக்கு மேலும் பக்தியை வளர்த்து கொள்ள உற்சாகம் அளிக்கிறது.

கோவிலில் உள்ள பெருமாளுக்கு நம்மிடம் பேச வேண்டும் என்ற ஆசையும் உண்டு. ஆர்வமும் உண்டு.
கோவிலில் அர்ச்சனையை சமஸ்கரிதத்தில் பண்ணலாமா?
தமிழில் பண்ணலாமா? என்று சண்டை போட்டுக்கொண்டிருந்தால், பகவான் நம்மிடம் பேசவே மாட்டார்.

பெருமாளுக்கு நம்மிடம் பேச வேண்டும் என்ற ஆசையும் உண்டு. ஆர்வமும் உண்டு.
ஆனால் நம்மிடம் அவர் எதிர்பார்ப்பது சமஸ்கரித பாஷையோ, தமிழ் பாஷையோ இல்லை. அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது ப்ரேம பாஷை என்ற அன்பு பாஷை.
தனக்கும் எம்பெருமானுக்கும் சம்பந்தம்(உறவு) புரிந்து அன்பு ஏற்படும் போது,
இந்த அன்பே, பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் போது,
அன்பும் ஆர்வமும் சேர்ந்த தன் பக்தனுக்கு திவ்ய தரிசனம் தந்து விடுகிறார் எம்பெருமான் நாராயணன்.

திருக்கோவிலூரில் "பூதத்தாழ்வார், பொய்கை ஆழ்வார், பேயாழ்வார்" மூவரும்,
ஒரே சமயத்தில் உலகளந்த பெருமாளை சேவிக்க வந்த போது,
பொய்கை ஆழ்வாரும், பூதத்தாழ்வாரும் ஞான தீபத்தை ஏற்ற, 
பேயாழ்வார் "ஞான தீபத்தின் பலனாக, எம்பெருமானை கண்டேன்" என்று ஆரம்பிக்கிறார்.

"அன்பு" என்ற விளக்கில்,
"ஆர்வம்" என்ற நெய் ஊற்றி,
"உருக்கம்" (இன்புருகு சிந்தை) என்ற திரி இட்டு,
ஞான தீபம் ஏற்ற, 
இனி இன்னொரு விளக்கில்  தீபம் ஏற்ற தேவையில்லாமல் போக, 
அந்த ஞான தீபத்தில், எம்பெருமானை கண்டேன் 
என்று பேயாழ்வார் ஆரம்பிக்கிறார்.
எம்பெருமானிடத்தில் நமக்கு
அன்பும் (ப்ரேமை/பக்தி),
அவரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும்,
இன்னும் காணமுடியவில்லையே என்ற "உருக்கமும்" இருக்குமானால், பகவானே மெய் ஞானத்தை கொடுத்து,
தான் இருப்பதை காட்டிவிடுகிறார்.

வையம் தகளியா
வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்று.
- பொய்கை ஆழ்வார்

அன்பே தகளியாய்
ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா, - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.
- பூதத்தாழ்வார்

திருக்கண்டேன்
பொன்மேனி கண்டேன்,
திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்,
செருக்கிளரும் பொன்னாழி கண்டேன்
புரி சங்கம் கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று.
- பேயாழ்வார்

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 



Hare Rama Hare Krishna  - Bhajan

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka  




Tuesday 7 November 2017

கடவுளை உருவம் செய்து வணங்குவதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? - ரமணரிடம் ஒரு வெளிநாட்டவர் கேட்ட கேள்வி


"ஹிந்துக்கள் கடவுளை உருவம் செய்து வணங்குவதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?"
இது ரமணரிடம் ஒரு வெளிநாட்டவர் கேட்ட கேள்வி.

"இந்த தேகமே நான் என்று இருக்காமல், நாம் இந்த தேகத்தில் குடி இருக்கும் 'ஆத்மா' என்று ஹிந்துக்கள் உணர்ந்து இருப்பதால், இந்த ஜீவ ஆத்மாக்கள் பல விதமான உடம்பில் பிரவேசித்து செயல்பட முடியுமென்றால், ஜீவ ஆத்மாவுக்கு காரணமான, பரமாத்மா, பக்தனுக்காக, ஒரு சிலையில் தன்னை பிரவேசித்து அணுகிரஹம் செய்ய முடியும். பக்தி உள்ளவனுக்கு பரமாத்மா சிலையில் தன்னை பிரவேசித்து அணுகிரஹம் செய்கிறார்.


தான் இந்த உடம்பில் இருந்து விடு பட்ட பின், தான் ஆத்மா மட்டுமே என்று உணர்பவனுக்கு, உருவ வழிபாடு தேவை இல்லை. இதனால், ஹிந்துக்கள் உருவ வழிபாடு், அரூப வழிபாடு இரண்டையும்  ஒப்புக்கொள்கின்றனர்.

எல்லாம் படைத்த கடவுளுக்கு இதை செய்ய முடியாது, இவருக்கு சக்தி கிடையாது, இப்படி வர மாட்டார் என்று மனித புத்தி கொண்டு சொல்வது, இறைவனின் மகத்துவத்தை குறைப்பதாகும்.
மனிதர்களால் எழுதப்பட்ட மதங்கள் இப்படி தான் இறைவனின் தரத்தை தாழ்த்தும்.

ஹிந்துக்கள் பரந்த மனம் கொண்டவர்கள். இறைவனின் மகத்துவத்தை குறைத்து அவமானப்படுத்துபவர்கள் அல்ல. உண்மையை உணர்ந்தவர்கள்.
இந்த காரணத்தினாலேயே, ஹிந்துக்கள் மட்டுமே பிறர் நம்பிக்கையை மடத்தனமாக இருந்தாலும் கேலி செய்ய பொதுவாக விரும்புவதில்லை.