Followers

Search Here...

Showing posts with label அத்திவரதர். Show all posts
Showing posts with label அத்திவரதர். Show all posts

Friday 14 February 2020

பாசுரம் (அர்த்தம்) - அத்தியூரான் புள்ளையூர்வான் - பூதத்தாழ்வார் காஞ்சி அத்திவரதரை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அத்தியூரான்! 
புள்ளையூர்வான்!
அணிமணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான்!
முத்தீ மறையாவான்!
மாகடல் நஞ்சுண்டான்றனக்கும் இறையாவான்!
எங்கள் பிரான்!
-- இரண்டாம் திருவந்தாதி (பூதத்தாழ்வார்)
காஞ்சி அத்திவரதரை, 'பூதத்தாழ்வார் மங்களாசாசனம்' செய்து பாடுகிறார்.




கஜேந்திரன் (ஹஸ்தி) என்ற யானையின் சரீரமே மலையாகி, அந்த சிறு மலையில் (கிரி) வீற்று இருக்கும், அத்திவரத பெருமாளே!  - (அத்தியூரான்)

கருட வாகனத்தில் வருபவரே! - (புள்ளையூர்வான்)

தொடுத்து வைத்தது போல மாணிக்கங்கள் ஆயிரம் தலைகளிலும் ஜொலிக்க, படமெடுக்கும் ஆதிசேஷன் மேல், துயில் கொண்டிருக்கும் பெருமாளே! - (அணிமணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான்)
என்று பெருமாளை கூப்பிடுகிறார் பூதத்தாழ்வார்.

அடுத்து "முத்தீ மறை ஆவான்" என்று கூப்பிடுகிறார் ஆழ்வார்.
'முத்தீ' என்ற பதத்துக்கு, 2 அர்த்தங்களை சொல்கிறார், சேங்கனூரில் அவதரித்த  ஆச்சாரியார் பெரியவாச்சான் பிள்ளை.
முதல் அர்த்தம் : மூன்று தீ (முத்தீ)
இரண்டாவது அர்த்தம் : முக்தி/மோக்ஷம் (முத்தீ)
வேதத்தை, தமிழில் 'மறை' என்று சொல்கிறார்கள்.
காரணம்,
வாக்குக்கு எட்டாத பரப்ரம்மத்தை பற்றி நேரிடையாக பேச, வேதமே தயங்குவதால், பரப்ரம்மமான நாராயணனை மறைத்து மறைத்து பேசுகிறது.
இப்படி மறைத்து பேசுவதாலேயே, தமிழர்கள், வேதத்தை அழகாக "மறை நூல்" என்று சொல்கிறார்கள்.




வேதத்தை பற்றிய ஆழ்ந்த அறிவு உடையவர்களாக தமிழர்கள் இருந்ததால் தானே, வேதத்துக்கு ஈடான தமிழ் சொல்லை பயன்படுத்தினர் என்று பார்க்கிறோம்.

வேதம் வெளியோட்டமாக 'இந்திரன், வருணன், அக்னி' என்று சொல்லி ஸ்துதி செய்கிறது.
அஞானி, வேதம் பல தெய்வங்களை சொல்கிறது என்று நினைக்கிறான்.
இந்திரன் என்ற தேவனை நினைக்கிறான்.
அக்னி என்ற தேவனை நினைக்கிறான்.

வெளிப்படையாக வேறு அர்த்தத்தை காட்டும் வேதம்,
வாக்கும் எட்டாத பரப்ரம்மமான நாராயணனை நேரிடையாக ஸ்துதி செய்ய பயப்படுகிறது.
அதே சமயம்,
ஒரே பரமாத்மாவை தான் இப்படி பல வித பெயர்களை கொண்டு அழைக்கிறேன் என்றும் வேதமே சொல்கிறது.

'இந்திராய ஸ்வாஹா' என்று சொல்லும் போது, உண்மையில் வேதம், இந்திர பதவியில் உள்ள தேவனை குறிப்பிடவில்லை.
மாறாக,
அந்த விராட் புருஷனான பரமாத்மாவின் கைகளே 'இந்திரன்' என்று பூஜிக்கிறது.
'சோமாய ஸ்வாஹா' என்று சொல்லும் போது, பெருமாளின் இதயத்தை பூஜிக்கிறது.

இப்படி வேத மந்திரங்கள் அனைத்துமே, நாராயணனுக்கு ஒரு அங்க பூஜையாக தான் இருக்கிறது என்ற ரகசியத்தை ஞானிகளே அறிந்து கொள்கிறார்கள்.

ஆதலால் தான்,
வேதம், அஞானிக்கு கர்ம காண்டமாகவும், 
வேதம், ஞானிக்கு ஞான காண்டமாகவும் தெரிகிறது.

வெளியோட்டமாக பார்த்தால்,
வேதம் 'யாகம் செய்! யோகம் செய்!' என்று கர்ம காண்டம் போல தெரியும்.
அதே வேதம்,
ஞானிகளுக்கு பிரம்மமாகிய பரமாத்மாவை அடைய வழிகாட்டுவதாக தோன்றுகிறது.
"மூத்தீ மறையாவான்" என்ற சொல்லுக்கு முதல் அர்த்தம்:

  • மூன்று அக்னி (முத்தீ) (லௌகீகாக்னி, ஒளபாசனாக்னி, ஸ்ரௌதாக்னி) வளர்த்து, கர்ம காண்டமாக யாகம் செய்து, வேதங்களால் யஞ்ய நாராயணனனாக புகழப்படும் பெருமாளே! என்பது சாமானிய அர்த்தம்.





"மூத்தீ மறையாவான்" என்ற சொல்லுக்கு இன்னொரு அர்த்தம்:

  • வேதமே (மறை), உண்மையில் நாராயணனுக்கு செய்யும் அங்க பூஜை தான். சகல தேவதைகளும் அவர் அங்கங்களே! இந்த ஞானத்தோடு வேதத்தை உச்சரித்தாலேயே, வேதத்தை கேட்டாலேயே, அதன் பலனாக நமக்கு மோக்ஷத்தை (முக்தி) கொடுக்கும் பெருமாளே!! என்பது மற்றொரு அர்த்தம்.


ப்ரம்ம தேவன் போன்ற ஞானிகளும், வேத மந்திரங்களை நாராயணின் அங்க பூஜையாக செய்து, மோக்ஷம் அடைகின்றனர் - (மூத்தீ மறையாவான்).
உலக ஆசைகள் உள்ள சாமானிய ஜனங்களும், வேத மந்திரங்கள் சொல்லி மூன்று காலங்களில் யாக தீ வளர்த்து உம்மையே பூஜிக்கின்றனர் - (மூத்தீ மறையாவான்)
என்று பூதத்தாழ்வார், அத்தி வரதரை மங்களாசாஸனம் செய்கிறார்.  
விஷ்ணுவின் பரத்துவத்தை அறிந்தவரும், 
எப்பொழுதும் தாரக மந்திரம் (ராம) ஜபிப்பவரும், 
ஞான ஸ்வரூபனும்,
பாற்கடலிலிருந்து கிடைத்த நஞ்சினை உண்ட சிவபெருமானுக்கு, அந்தர்யாமியாக இருக்கும் எம்பெருமான், 
அத்திகிரியில் எழந்தருளியிருக்கிறாரே!! 
(மாகடல் நஞ்சுண்டான்றனக்கும் இறையாவான் எங்கள் பிரான்)
என்று, காஞ்சி வரதராஜ பெருமாளை, மங்களாசாசனம் செய்கிறார் பூதத்தாழ்வார்.