Followers

Search Here...

Showing posts with label முசுகுந்த சக்கரவர்த்தி. Show all posts
Showing posts with label முசுகுந்த சக்கரவர்த்தி. Show all posts

Friday 14 September 2018

நாராயணனே பரம்பொருள். பின்பு ஏன் பல தெய்வ வழிபாடு வேதத்தில் ஒப்புக்கொள்ளப்படுகிறது?

முசுகுந்த சக்கரவர்த்தி, ப்ருகு முனிவரிடம் காஞ்சிபுரம் வந்த  போது கேட்டார்,
"நாராயணனே பரப்ரம்மம். அவரே அனைத்துமாக இருக்கிறார். அபேதமாக இருக்கிறார் என்ற உண்மை புரிந்து கொண்டேன்.
தான் ஒருவனே தெய்வம் என்று இருக்காமல், தன் அங்கங்களாக இருக்கும் மற்ற தெய்வங்களையும் உலகிற்கு வேதத்தில் வெளிக்காட்டி, பேதமாக காட்டி கொள்வது ஏன்? பல தெய்வங்களாக காட்டிக்கொள்வது ஏன்?"
என்று கேட்டார்.
ப்ருகு சொன்னார்,
"ஜனங்களுக்கு பல வித பலன்களில் ஆர்வம் இருப்பதால், நாராயணன் தன்னை பேதமாக காட்டிக்கொள்கிறார்.

மகா கருணை உடையவர் நாராயணன்.




தான் ஒருவனே தெய்வம் என்றாலும்,
'தன்னை நேரிடையாக வணங்கினால் தான், அல்ப பலன்களாக இருந்தாலும் கொடுப்பேன்' என்று பிடிவாதம் செய்வதில்லை.
எப்படி ஒரு மருத்துவன் (டாக்டர்) வரும் நோயாளிக்கு ஒரே ஒரு  மருந்தை மட்டும் கொடுக்காமல், அந்தந்த வியாதிக்கு அதற்கு தகுந்த மருந்து அளிப்பானோ,
அது போல,
சர்வேஸ்வரனான நாராயணன்,
அக்னி தேவனை வழிபட்டால் இந்த பலன்,
ருத்திரனை வழிபட்டால் இந்த பலன்,
பிரம்மாவை வழிபட்டால் இந்த பலன்,
சாக்ஷாத் பரவாசுதேவனான தன்னையே வழிபட்டால் மோக்ஷம் என்று, பிரித்து,
அததற்கு ஆசைப்படும் ஜனங்களுக்கு, அந்தந்த தெய்வங்களிடம் பிரியம் வளர செய்கிறான்.

நாராயணன், பல வித ஆசைகள் கொண்ட ஜனங்களுக்காக பல வித தெய்வங்களை நியமித்தார்.
"படைத்தல், காத்தல், அழித்தல்" என்ற மூன்று காரியங்களுக்கு,
- ப்ரம்மாவை படைக்கும்” தொழிலை செய்யுமாறு படைத்தார்.
- சிவபெருமானை பிரளய காலத்தில் “சம்ஹாரம்” என்ற அழிக்கும் பொறுப்பை செய்யுமாறு படைத்தார்.
இவர்களுக்குள்ளே அந்தர்யாமியாக தானே இருக்கிறார். பார்க்க பேதமாக தெரிகிறார்.
- தானே காக்கும்” தொழிலை ஏற்று, விஷ்ணுவாக வ்யூக அவதாரம் செய்கிறார்.

'தான் படைத்த எந்த பிறப்பும் கீழானது இல்லை' என்று காட்ட, மகா கருணை கொண்டு, தானும் கூடவே அவதாரம் செய்கிறார்.




முப்பத்து முக்கோடி தேவர்களை நியமித்து, தானும் ஒரு தேவன் என்று அவதாரம் செய்து கொள்கிறார்.
இந்திரனின் தம்பி "உபேந்திரன்" என்று அவதாரம் செய்கிறார்.

மற்ற தேவர்கள், இவரும் ஒரு தேவன் தானே என்று நினைக்கும் அளவுக்கு தன்னை சுலபமாக்கி கொண்டு தேவர்களுடன் பழகுகிறார்.

தேவர்களிடம் மட்டுமா, திடீரென்று, மீனாகவும், பன்றியாகவும் தன்னை அவதாரம் செய்து கொண்டு விடுகிறார்.
ரிஷிகளுக்கு நடுவே ஒரு ரிஷியாகவும் அவதாரம் செய்து விடுகிறார்.

மனிதர்களுக்கு நடுவே தானும் ஒரு மனிதனாகவும் அவதாரம் செய்து விடுகிறார்.

“தான் ஒருவனே தேவன்” என்ற கர்வமே இல்லாமல், மகா கருணை கொண்டு அவதாரம் செய்து விடுகிறார்.




உபேந்திரனும் தன்னை போன்ற ஒரு தேவன் தானே! என்று தேவர்கள் நினைப்பது போல,
வராக அவதாரம் செய்த போது, பன்றிகளாக உள்ள ஜீவன்கள் இவரும் தன் ஜாதி தானே என்று நினைத்தனவாம்.

மனிதனாக அவதாரம் செய்தாலும், சாமானிய மனிதர்கள், இவரும் மனிதன் தானே என்று பேசுவர்.

இப்படி தேவர்களுக்குள் தேவனாக, மனிதர்களுக்குள் மனிதனாக, மீன்களில் ஒரு மீனாகவும் கருணையின் காரணமாக அவதாரம் செய்து விடும் இவரை, பரவாசுதேவன் என்ற உண்மையை, இவரின் "குணத்தாலும், சரித்திரத்தாலும்" மட்டுமே கண்டு கொள்ள இயலும்.

ப்ரம்மா, சிவனுக்கு நடுவில் தானும் ஒரு தொழிலை செய்யும் தெய்வம் என்று சொல்லிக்கொண்டு விஷ்ணுவாக வ்யூஹ அவதாரம் செய்து கொண்டு விடுகிறார்.

மஹாவிஷ்ணு சாஷாத் அந்த பரம்பொருளே என்று பிரம்மாவும், சிவனும் உணர்ந்து இருந்தனர்.

ஒரு முறை நாரதர், தன் பிதா ப்ரம்மாவிடம்,
"வேதமே உங்களால் தான் கொடுக்கப்பட்டது என்ற பொழுது, தாங்களே பரப்ரம்மம் என்று சொல்லி கொள்ளலாமே?"
என்று கேட்டார்.

அதற்கு ப்ரம்மா,
"யார் வேண்டுமானாலும் தன்னை 'பரம்பொருள்' என்று சொல்லிக்கொள்ளலாம்.
ஆனால், வேதத்தின் அபிப்ராயம் அப்படி இல்லையே.

வேத வாக்கியம், 'நாராயணன் மட்டுமே பரப்ரம்மம்' என்று சொல்கிறதே.
அப்படி இருக்க, நான் பரப்ரம்மம் என்று எப்படி சொல்லிக்கொள்ள முடியும்"
என்று பதில் சொன்னார்.




(பரப்ரம்மமான புருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? யார் ஒருவரே புருஷன்? Further read,
http://www.proudhindudharma.com/2017/12/blog-post_7.html )

இப்படி பல தெய்வங்களை படைத்து, அனைவருக்கும் தானே அந்தர்யாமியாகவும் இருந்து, அவர்களுக்குள்ளே தானும் அவதாரம் செய்து அனைவரிடமும் பழகிக்கொண்டு, அனைவரையும் தன் மீது பக்தி செய்ய செய்து மோக்ஷம் கொடுக்கும் வரை கூடவே இருக்கிறார் நாராயணன்.

பிரகலாதன் இந்த ஞானத்துடன் இருந்ததால் தான், நாராயணனே எங்கும் வியாபித்து உள்ளார் என்று அறிந்து இருந்தான். நாராயணனே எங்கும் உள்ளார் என்று பார்த்தான்.
தன்னை சூலத்தால் குத்த வரும் அசுரர்களை பார்த்து, பிரகலாதன் சொல்கிறான்,
"என்னை குத்த வரும் உங்களிடத்திலும் நாராயணனே இருக்கிறார்.
என்னிடத்திலும் நாராயணனே இருக்கிறார்.
நீங்கள் குத்த வைத்திருக்கும் சூலத்திலும் நாராயணனே இருக்கிறார்.
உங்களை இங்கு அனுப்பிய என் தந்தையிடத்திலும் நாராயணனே இருக்கிறார்." என்றான்.

பேதமாக உலகம் அஞானிக்கு தெரிந்தாலும், ஞானிக்கு அபேதமாகவே உலகம் தெரிகிறது.

ஞானிக்கு அனைத்தும் நாராயண ஸ்வரூபமாகவே தெரிகிறது. அஞானியாக இருந்தால் உலகம் பேதமாக தெரிகிறது.

அவரவர்  பக்குவத்தை பொறுத்து உலகம் பேதமாகவும், அபேதமாகவும் தெரிகிறது.

அவரவர்  பக்குவத்தை பொறுத்து வேதத்தில் சொன்ன தெய்வங்கள் அஞானிக்கு பேதமாகவும், ஞானிக்கு அபேதமாகவும் தெரிகிறது.

அவரவர்  பக்குவத்தை பொறுத்து,
சிலருக்கு த்வைதமாக தெய்வங்கள் தெரிவதும் உண்மை.
சிலருக்கு அத்வைதமாக தெரிவதும் உண்மை.

அவரவர்  பக்குவத்தை பொறுத்து, இரண்டுமே உண்மை என்பதால், வேதம் ஒரு இடத்தில் ஒரே தெய்வம் தான் என்கிறது. மற்றொரு இடத்தில் விஷ்ணு, சிவன், இந்திரன் என்று பிரித்து தெய்வங்கள் பல என்றும் காட்டுகிறது.

வேதத்தின் அபிப்ராயப்படி  இரண்டுமே உண்மை என்று  இருப்பதால், விஷிஷ்ட அத்வைதமே மார்க்கம் என்று காட்டுகிறது.

விஷிஷ்டஅத்வைதம், த்வைதம்-அத்வைதம் இரண்டையும் ஒப்புக்கொள்கிறது.

அத்வைதம் என்ற ஞான நிலையில் பிரகலாதன் நாராயணனையே எங்கும் கண்டான். நாராயணனையே பக்தி செய்தான்.
நாராயணனின் கருணைக்கு பாத்திரமானான்.
நரசிம்மமாக தரிசனம் பெற்றான். மோக்ஷத்திற்கு தகுதி பெற்றான்.

மோக்ஷத்திற்கு என்ன வழி என்று நீ கேட்டாயே? எனக்கு எது பாதை என்று கேட்டாயே?
நாராயண பக்தி செய்வதே, மோக்ஷத்திற்கு வழி.

நீயும் அந்த நாராயணனிடம் பிரகலாதனை போன்று திடமான பக்தியை செய். உனக்கும் தரிசனம் கிட்டும். மோக்ஷத்திற்கும் வழி கிடைக்கும்"
என்று ப்ருகு முனிவர், முசுகுந்த சக்கரவர்த்தியை பார்த்து அணுகிரஹம் செய்து, ஆசிர்வாதம் செய்தார்.

சந்தேகம் தெளிந்த முசுகுந்த சக்கரவர்த்தி, காஞ்சியில் உள்ள “ஹேம சரஸ்” என்ற அந்த பொற்றாமரை குளக்கரையிலேயே நரசிம்மமாக வந்த நாராயணனை தரிசனம் செய்ய, பக்தி யோகமாக, தவம் செய்தார்.

ப்ருகு முனிவரின் ஆசி பெற்ற, குரு கடாக்ஷம் பெற்ற முசுகுந்த சக்கரவர்த்திக்கு, காஞ்சியில் வரதராஜனாக இருக்கும் நாராயணன், இவருக்கு "யோக நரசிம்மமாக" (அழகிய சிங்க பெருமாள்) காட்சி கொடுத்தார்.