Followers

Search Here...

Showing posts with label தொண்டே. Show all posts
Showing posts with label தொண்டே. Show all posts

Monday 18 December 2017

அர்ச்சா அவதாரம் செய்து விக்ரஹ (சிலை) ரூபமாக உள்ள இறைவன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்? கூரத்தாழ்வார் "கைங்கர்யம் கொடு" என்று பிரார்த்திக்கிறார்.. ஹிந்துக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரார்த்தனை.

பெருமாளின் சேவையே பக்தி. 
பெருமாளின் சேவையே மோக்ஷத்திற்கு வழி. 
கூரத்தாழ்வார், வரதராஜஸ்தவத்தில்  கைங்கர்யம் (சேவை) வேண்டி வரதராஜனிடம் கதறுகிறார். 




"வரதா, நீங்கள் பரம தயாளு அல்லவா! 
நான் ஆசையோடு உங்களுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று வந்தால், நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உன் கைங்கர்யம் எனக்கு வேண்டாம். சீ போ!! என்று சொல்லி விடாதீர்கள்.
உங்களுக்கு ஆயிரம் பேர் கைங்கர்யம் செய்ய வருவார்கள். 
அதனால் நீ செய்ய வேண்டாம் என்று என்னை பார்த்து சொல்லிவிடலாம்.
ஆனால், எனக்கோ, நீங்கள் ஒருவரே தெய்வம்.

என்னை போன்றவர்கள் உங்களுக்கு ஆயிரம் பேர் கிடைத்து விடுவார்கள், ஆனால் உம்மை போன்ற தெய்வம் வேறு இல்லையே!!
உங்களுக்கு கைங்கர்யம் செய்யாமல் நான் எப்படி இருக்க முடியும்?

நீங்கள் பரம தயாளு என்று ஏன் சொல்கிறேன் தெரியுமா? 
ஆசையினால் "கைங்கர்யம் கொடு" என்று கேட்கிறேன்.
இதை நம்பி, நீங்களும் கைங்கர்யம் கொடுத்து விடுவீர்கள்.
ஆனால், வரதா!! நீங்கள் நினைப்பதை போல நான் திறமையானவனும் இல்லை. 
ஆதலால், ஆசையினால் வாங்கிய கைங்கர்யத்தையும் குறை சொல்லும் படியாக செய்து விடுவேன் என்ற பயமும் எனக்கு உண்டு.
ஆகையால், வரதா! 
நீங்கள் தயாளுவாக நான் செய்யும் தவறை மன்னித்து விடுங்கள்.

ஆனால் கைங்கர்யம் செய்யாமல் இருக்க மட்டும் என்னை விட்டு விடாதீர்கள்.

'உங்களுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் என்ற புத்தி எனக்கு வராவிட்டால், அடித்து இழுத்தாவது எனக்கு கைங்கர்யத்தை கொடுங்கள்'.

‘அப்படியாவது உனக்கு கைங்கர்யம் கொடுக்க வேண்டும் என்று, எனக்கு என்ன அவசியம்?’ 
என்று ஒரு வேளை நீங்கள் கேட்க விரும்பினால்,
‘நீர் எனக்கு பிதா, நான் உங்கள் புத்திரன் என்ற உறவு உள்ளது என்ற உரிமையில் கேட்கிறேன்' என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சரி கைங்கர்யமே கதி என்று இருந்தால், உன் குடும்பம் என்னாவது?
உன் குடும்பத்தை யார் நடத்துவார்கள்?
என்று கேட்டால்,
அதற்கு, "இப்படி நீங்கள் கவலைப்பட்ட பின்பும் எனக்கு என்ன கவலை"
என்று இன்னும் தீவிரமாக கைங்கர்யம் செய்வேன்.

அஞானியாக உள்ள நானே என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றி கொள்ள முடியும் என்றால், பிதவான நீங்கள் என் குடும்பத்தை காப்பாற்றுவது ஒரு பெரிய காரியமோ?

எனக்கு நல்லது கெட்டது தெரியாது. உமக்கும் தெரியாமலா போய் விடும்.

பிதாவாகிய நீங்கள், கெட்ட விஷயங்களில் செல்லும் குழந்தையை தடுத்து, அடித்தாவது நல்ல விஷயங்களில் திருப்ப வேண்டாமோ?

உலக விஷயங்களுக்காக பிறர் காலில் விழுந்து, பிறரை நம்பிக்கொண்டு அலையும் என்னை பிடித்து இழுத்து என் காலில் விழு, எனக்கு தொண்டு செய் என்று சொல்ல வேண்டாமோ?
எனக்கு எது நல்லது?
உமக்கு கைங்கர்யம் செய்வது தானே எனக்கு நல்லது!!
எல்லாம் சரி, ஆனால் உன்னை திருத்த முடியாதே என்று மட்டும் சொல்லிவி டாதீர்கள்.
உங்களால் என்னை நல்லவனாக்க முடியாதா?

நான் தீய வழியில் சென்றாலும்!! 
கைங்கர்யமே வேண்டாம் என்று சொன்னாலும்!! 
பெருமாளே வேண்டாம் என்று நான் சென்றாலும்!! 
ஒரு தாய் வீம்பு செய்யும் குழந்தையை அடித்தாவது திருத்துவது போல, என்னை போகும் போக்கில் போக விடாமல், பலவந்தமாகவாவது அடித்து இழுத்தாவது உங்கள் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.

நான் பிறந்திருக்கிறேன் என்பதாலேயே, இத்தனை நாள் வரை நான் மோக்ஷம் அடையவில்லை என்பது தெரிகிறது.
இதற்கு காரணம், நீங்கள் என்னை போகற போக்குக்கு விட்டதால் தானே?

எனக்கு ஏன் இப்படி சுதந்திரம் தருகிறீர்கள்?

இப்படியே இருக்க விட்டால், நாங்கள் உலக விஷயத்திலேயே உழன்று கொண்டே தான் இருப்போம்.
உமக்கு வைகுண்டதுக்கு வர ஒரு ஆள் கிடைக்காது.

வைகுண்டத்தை கூட விடுங்கள். வரதா!! அரச்சா திருமேனியுடன் நிற்கும் உனக்கு கைங்கர்யம் செய்ய கூட ஆள் கிடைக்காமல் போய் விடும்.




ஆதலால், எந்த காரணத்தை காட்டியும், கைங்கர்யம் கொடுக்க முடியாது என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.
அடித்து இழுத்தாவது உங்கள் பக்கம் இழுத்து எங்களுக்கு கைங்கர்யம் கொடுங்கள்"
என்று வரதனை கண்டு கைங்கர்யம் வேண்டும் என்று கதறுகிறார் கூரத்தாழ்வார்.
.

ஹனுமானை முதலில் கண்ட பொழுது, லக்ஷ்மணன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது, ராமரின் தம்பி என்று சொல்லிக்கொள்ளாமல், 
"இவருக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் ஒரு தாஸன், ஒரு அடிமை" 
என்றார்.



"எதற்காக ஸ்ரீ ராமரிடம் அடிமை ஆனீர்கள்?" என்று கேட்க,
லக்ஷ்மணன், 
"அவர் குணத்திற்கு அடிமையானேன்" 
என்றார்.

"அப்படி என்ன குணத்தை கண்டீர்கள்?" என்று கேட்க,
லக்ஷ்மணன், 
"என் தீய குணத்தையும் பொறுத்துக்கொண்டு, என்னை இன்னும் கூடவே வைத்துக் கொண்டு இருக்கிறாரே என்ற அவரின் உயர்ந்த குணத்தை கண்டு அடிமை ஆனேன்" 
என்று பதில் சொன்னார் லக்ஷ்மணன்.

பின்னர், ஒரு சமயம், ஹனுமானின் கைங்கர்யத்தை கண்டு 
"உமக்கு பதில் செய்ய முடியாதபடி கடனாளி ஆகிவிட்டேனே !!" 
என்று ஸ்ரீராமர் ஹனுமானை கட்டித் தழுவ, 

ஸ்ரீ ராமரை கண்ணீருடன் அஞ்சலி செய்து, 
"உங்களுக்கு என்னை போல ஆயிரம் ஹனுமான் கிடைத்து விடுவார். 
ஆனால், உம்மை போன்ற தெய்வம் கிடைக்குமா? 
நான் செய்த கைங்கர்யம் உங்கள் குணத்திற்கு முன்னால் எம்மாத்திரம்? 
எனக்கு உங்கள் கைங்கர்யமே எப்பொழுதும் கிடைக்க அருள் செய்யுங்கள்" 
என்று கைங்கர்யமே தன் குறிக்கோளாக இருந்த ஹனுமான் சொன்னார். 

அர்ச்ச அவதாரத்துடன் பாரத தேசம் முழுதும் 'கோவிலிலும், வீட்டிலும்' வீற்றிருக்கும் பகவான், 
நம்மிடம் எதிர்பார்ப்பது, நம்மால் முடிந்த கைங்கர்யமே. 




கைங்கர்யத்தின் பலனாக மோக்ஷத்தை தர காத்து கொண்டு இருக்கிறார் நம் பெருமாள். 

நாம் சாப்பிடும் உணவில், தினமும் ஒரு கைப்பிடி அரிசியாவது அருகில் தீபம் கூட ஏற்றாமல் இருக்கும் கோவிலில் சென்று கொடுக்கலாமே!!

தன் வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது, அருகில் உள்ள கோவிலுக்கு சென்று ஒரு தீபம் ஏற்றலாமே!!.

"சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பு இது"
என்று உணர்ந்தால், "நமக்காக தான் அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார்" என்பது புரியும். 

'நாம் செய்யும் மிக சாதாரணமான சேவையையும் ஏற்பதற்கே' பெருமாள் அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார்.
இதை உணர்ந்தால்,
ஒரு உண்மையான பக்தனுக்கு, நன்றி உடையவனுக்கு, 'சேவை செய்யாமல் எப்படி இருக்க முடியும்'? 

இந்த "சேவை" உணர்வு, ஹிந்துக்களுக்கு வந்தாலே,
அரசாங்கமும் தேவை இல்லை, கோவில் நிர்வாகமும் தேவை இல்லை. அனைத்து கோவில்களிலும் தீபம் எரியும். 

வரதனிடம் நாம் கேட்க வேண்டிய வரமே, "நான் உனக்கு சேவை செய்யும் உணர்வை தா" என்பது தான். 
நமக்காக அல்லவோ அர்ச்ச அவதாராமாக நிற்கிறார் என்ற உணர்வு வந்தாலே போதும்.
நமக்கு சேவை செய்ய வேண்டும் என்ற புத்தி வந்து விடும். 
சக்கரவர்த்தியாக இருந்த 'அம்பரீஷன்',
தன் மனைவி கோவிலில் கூட்டி பெருக்க, தான் பெருமாளுக்கு தீவெட்டி பிடிப்பாரராம். 

அவர் மாளிகையில், அவருக்கு பணிவிடை செய்ய 100 வேலைக்காரர்கள் உண்டு. 
பின்பு ஏன் இப்படி தானே செய்கிறார்?

கோவிலை பெருக்க ஆள் போடலாமே? 
தீவெட்டி பிடிக்க ஆள் போடலாமே? என்றால், அம்பரீஷன் சொல்கிறார், "நான் இந்த தேசத்துக்கு சக்கரவர்த்தி, ஆனால் எம்பெருமானோ அகிலத்துக்கும் சக்கரவர்த்தி ஆயிற்றே! 
அவர் அர்ச்ச அவதாரம் எடுத்து இருக்கும் போது, இந்த சந்தர்ப்பத்த்தில்  நானே சேவை செய்யாமல் எப்படி இருக்க முடியும்?. 

மேலும் நான் இந்த சேவையை என் வேலைகாரனிடம் கொடுத்து செய்ய சொன்னால், அது 'புண்ணியமாகிவிடும்'. 
நானே செய்தால்,பெருமாளுக்கு நான் செய்யும் 'சேவையாகி விடும்'. மோக்ஷத்திற்கு வழி செய்யும். நான் அதையே விரும்புகிறேன்." 
என்கிறார். 

சேவை யாருக்கு செய்கிறோம்? என்று உணரும் போது தான், "ஆஹா!! நமக்கு கிடைத்தது வாய்ப்பு இது" என்று சேவை நாமே செய்ய தோன்றும். 

நம்மால் முடிந்த அளவு சிறிது அரிசி, பூ, தீபம் ஏற்றினால் கூட, அர்ச்ச அவதாரமாக இருக்கும் பகவான் நம் சேவையை பரிபூரணமாக ஏற்று, அணுகிரஹிக்கிறான். 
வீட்டில் இருக்கும் குட்டி கிருஷ்ண விக்ரஹமும், நாம் எந்த அளவு சேவை செய்ய ஆசையோடு இருக்கிறோம்? என்று தான் காத்துக் கொண்டு இருக்கிறார்.




நாம் பூஜை செய்யாமல், அழுக்காக விக்ரஹ ரூபத்தில் உள்ள தெய்வங்களை அவமதித்தாலும், என்றாவது ஒரு நாள் இவன் நமக்கு சேவை செய்வானா? 
இவனுக்கு அதன் பலனாக மோக்ஷமும் கொடுத்து விடலாமா? என்று நமக்காகவே நம் வீட்டிலும், கோவிலிலும் அர்ச்சா திருமேனியுடன் நாம் செய்யும் அபச்சாரங்களை சகித்துக்கொண்டு, என்று காத்துக்கொண்டு இருக்கிறார். 

பெருமாளின் சேவையே பக்தி. பெருமாளின் சேவையே மோக்ஷத்திற்கு வழி. 

வாழ்க ஹிந்துக்கள்... வாழ்க நம் தெய்வ தொண்டு.