அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம், பல்லாண்டு!
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும், பல்லாண்டு!
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு!
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
-- பெரியாழ்வார் (மதுரை) கூடலழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம் (திருமொழி)
தெய்வத்திடம் "சாமானியன் பழகும் முறை" வேறுபடுகிறது.
தெய்வத்திடம் "பக்தன் பழகும் முறையும்" வேறுபடுகிறது.
"தன்னை பெருமாள் பார்த்து கொள்ள வேண்டுமே!" என்று சாமானியன் நினைக்கிறான்.
"தான் பல்லாண்டு பாட, பெருமாள் தனக்கு வேண்டுமே ! அவர் நன்றாக இருக்க வேண்டுமே" என்று பக்தன் நினைக்கிறான்.
ரூபம் கடந்த, குணங்கள் கடந்த, நாமங்கள் கடந்த பரமாத்மா,
"பக்தன் செய்யும் பஜனைக்காக, நாம, ரூப, குணங்களை எடுத்துக்கொண்டு" பாரத தேசம் முழுவதும் விபவ அவதாரமும், அரச்ச அவதாரமும் செய்து தோன்றி விட்டார்.
பக்தனான பெரியாழ்வாருக்கு "பெருமாள் பல்லாண்டு சுகமாக இருக்க வேண்டும்" என்று தோன்ற,
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் ஆண்டு"
என்று மங்களாசாசனம் செய்கிறார்.
"பெருமாள் மட்டும் பல்லாண்டு இருந்தால் போதுமா?
பெருமாளுக்கு பல்லாண்டு பாடும் பக்தனும் பல்லாண்டு இருக்க வேண்டுமே"
என்று நினைவு வர, பெருமாளும் (நின்னோடும்), பக்தனும் (அடியோமோடும்) பிரியாமல் பல்லாண்டு இருக்க வேண்டும் என்று மங்களாசாஸனம் செய்கிறார்.
அதையே
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
என்கிறார்.
அடுத்ததாக பெருமாளின் ஸ்ரீவத்சம் உடைய திருமார்பில் பிராட்டி இருக்க, மஹாலக்ஷ்மி தாயாருக்கும் பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.
அதையே
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
என்கிறார்.
பெருமாள் மட்டுமே அழகு, அவர் கையில் வைத்து இருக்கும் சக்கரமும் (சுடராழி), சங்கும் (பாஞ்சசன்யமும்) கூட அழகாய் இருக்க,
அந்த சங்கு சக்கரத்துக்கு பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.
அதையே
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு!
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
என்கிறார்.
பாஞ்சசன்யம் (சங்கும்) பெருமாள் கையில் தான் உள்ளது.
பெருமாள் பெரியாழ்வாருக்கு எதிரில் தான் காட்சி கொடுக்கிறார்.
பெருமாள் பெரியாழ்வாருக்கு எதிரில் தான் காட்சி கொடுக்கிறார்.
கண் எதிரே தெரியும் பாஞ்சசன்யத்தை பார்த்து, "இந்த பாஞ்சசன்யம்" என்று சொல்லாமல்,
"அந்த பாஞ்சசன்யம்" (அப் பாஞ்சசன்யமும்)
என்று குறிப்பிட்டு சொல்கிறார் பெரியாழ்வார்.ஏன் அப் பாஞ்சசன்யமும் என்று குறிப்பிட்டு சொன்னார்?
அவர் மனதை அறிந்த மகான்கள் அதன் ரகசியத்தை நமக்கு சொல்கிறார்கள்.
பெருமாள் வைத்திருக்கும் சங்கு வெண்மையானது.
அன்ன பக்ஷியும் வெண்மையானது.
அன்ன பக்ஷிக்கு ஒரு பக்கம் கொண்டையும், கூரான மூக்கும் இருப்பது போல, சங்கிற்கும் உண்டு.
அன்ன பக்ஷி ஒரு தாமரை பூவில் இருந்து மற்றொரு தாமரை பூவில் அமரும் போது, "கீச்" என்று கூவுவது போல,
பெருமாளின் கையில் இருக்கும் இந்த வெண் சங்கு, அவர் கையிலிருந்து அவர் உதரத்துக்கு (உதட்டுக்கு) அருகில் சென்றது, சங்க நாதம் முழங்குமாம்.
"பாஞ்சசன்யமும் பல்லாண்டே"
"பாஞ்சசன்யமும் பல்லாண்டே"
என்று பாட வந்த பெரியாழ்வாருக்கு இந்த நினைவு வர, அந்த நிமிஷத்தில் கண்ணை மூடி பெருமாளை தியானிக்க,
வெண் சங்காக இருந்த அந்த பாஞ்சசன்யம், பெருமாளின் கொவ்வை சிவப்புடன் உள்ள உதரத்திற்கு அருகில் சென்றதும்,
வெண் சங்கு, சிவப்பாக தெரிய, பெருமாளின் அழகில் மயங்கி நின்ற பெரியாழ்வார், 'சிவப்பு ஏறிய அந்த பாஞ்சசன்யத்துக்கு பல்லாண்டே' என்று மங்களாசாசனம் செய்கிறார்.
வெண் சங்காக இருந்த அந்த பாஞ்சசன்யம், பெருமாளின் கொவ்வை சிவப்புடன் உள்ள உதரத்திற்கு அருகில் சென்றதும்,
வெண் சங்கு, சிவப்பாக தெரிய, பெருமாளின் அழகில் மயங்கி நின்ற பெரியாழ்வார், 'சிவப்பு ஏறிய அந்த பாஞ்சசன்யத்துக்கு பல்லாண்டே' என்று மங்களாசாசனம் செய்கிறார்.
அதையே
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
என்கிறார்.
அனைவரும் கூடலழகரை தரிசிப்போம். பல்லாண்டு பாடுவோம்.