Followers

Search Here...

Wednesday 11 October 2017

கைகேயி கேட்ட வரம்... ராம ராஜ்ஜியம் என்றால் என்ன ?

கைகேயி கேட்ட வரம்:

  1. ராமர் 14 வருடம் காடு செல்ல வேண்டும்.
  2. பரதன் நாட்டை ஆள வேண்டும்.




பரதன் ஒரு நாளா ? 14 வருடமா? காலம் முழுவதுமா?
என்று அவள் குறிப்பாக கேட்கவில்லை.

ராமர் இதற்கு கட்டுப்பட்டு 14 வருடம் காடு சென்றார்.
அவரை பொறுத்தவரை, "மீண்டும் அயோத்தி வர வேண்டும், ஆள வேண்டும்" என்கிற எண்ணம் கூட இல்லை.
கைகேயி "இத்தனை வருடம் பரதன் நாட்டை ஆள வேண்டும்!!" என்று கேட்கவில்லை என்றாலும் கூட, ராமரை பொறுத்தவரை "பரதனே ஆளட்டும்" என்று தான் இருந்தார்.
மீண்டும் அயோத்தி வரும் எண்ணம் இருந்ததா!! என்று கூட தெரியவில்லை.

பரதன் "காட்டை விட்டு மீண்டும் ஆள வாருங்கள்" என்று சொன்ன போது, ராமருக்கு, பரதன் தந்து ஏற்றுக் கொள்வதில் அவருக்கு தடை இல்லை. ஆனால், ராமரை தடுத்தது கைகேயியின் முதல் வரம் தான்.
ஆனாலும் "பரதனே அயோத்தியை இனி ஆளட்டுமே" என்று தான் இருந்தார்.

ராமர் இப்படி மனதில் நினைத்து 14 வருடம் கழித்து திரும்பிய பின், ஒருவேளை தன்னையே எப்போதும் ஆள சொல்வாரோ!! என்ற பயத்தில் தான் பரதன், ராமர் முன் "நீங்கள் 14 வருடம் முடிந்து அயோத்தி திரும்பி, பட்டாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் நான் அக்னி பிரவேசம் செய்து விடுவேன்" என்று பரதன் சபதம் செய்தார்.

14 வருடம் முடிந்த நிலையில், ராமர் புஷ்பக விமானத்தில் வந்து கொண்டிருக்க, பரதன் இதற்குள்ளாக, அக்னியை மூட்டிவிட்டார்.
அந்த சமயத்தில் "ஜெய் சீதாராம்" என்று வந்து இறங்கிய ஹனுமான், தன் கையாலேயே எரிந்து கொண்டிருந்த அக்னியை அணைத்து "ராமர் வருகிறார். அயோத்தி வந்து ஆட்சி புரிய வருகிறார்" என்றார்.

சாஸ்திரம் "கையால் அக்னியை அணைக்க கூடாது" என்கிறது.
சாஸ்திரம் அறிந்த ஹனுமான் இப்படி செய்யலாமா ?
சாஸ்திரம் சில சமயங்களில் இது போன்று அனுமதிக்கிறது.
உதாரணமாக
சபதம் செய்யும் போது இப்படி கையால் அணைக்க அனுமதிக்கிறது.

ஹனுமான் உண்மையில் பரதன் முன், அந்த அக்னியை கையால் அணைத்து "ராமர் அயோத்தி வந்து ஆட்சி புரிய வருகிறார்" என்று சபதம் செய்தார்.

இப்படி இரு பக்தர்கள் "பரதனும், ஹனுமனும்" செய்த சபதம் பொய் போக கூடாதே என்று கட்டுப்பட்டு, அயோத்தி வந்து மகிழ்ச்சியுடன் ஆட்சியை ஏற்றார்.



ராமர், ராவணனை கொன்ற பின், விபீஷணனுக்கு இலங்கையின் எல்லையில் இருந்து கொண்டே அவருக்கு பட்டாபிஷேகம் செய்தார்.

அன்பினால் விபீஷணன் நாட்டுக்குள் வந்து ஸ்நானம் செய்து, கொஞ்சம் சாப்பிட்டு விட்டு செல்லலாமே என்று விண்ணப்பிக்கிறார்.
ராவணனை கொன்றதினால், ராமரே இலங்கைக்கு அரசன்.
இருந்தாலும், அந்த அரச பதவியை அப்படியே விபீஷணனுக்கு கொடுத்து விட்டார்.
அங்கிருந்து ஒரு சிறு செல்வத்தை கூட எடுத்து செல்லவும் அவர் விரும்பவில்லை.
நாட்டை கைப்பற்றிய கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் நம் நாட்டு செல்வத்தை எப்படி சூறையாடினார்கள் என்று இந்திய சரித்திரத்தை பார்க்கும் போது தான், ராமரின் உயர்ந்த குணம் இதில் நமக்கு தெரியும்.

"ஒரு முறை இலங்கைக்குள் வந்து விட்டு செல்லுங்கள்" என்று விபீஷணன் கேட்க, ராமர் அதற்கு "நான் எடுத்துக்கொண்ட ஒரு காரியம் முடிந்து விட்டால், அதற்கு பின் ஒரு க்ஷணம் கூட அங்கே காரணம் இல்லாமல் இருப்பதில்லை. நான் வந்த காரியம் முடிந்து விட்டது. இனி இப்பொழுதே அயோத்தி செல்ல வேண்டும், பரதன் காத்துக்கொண்டிருப்பான்" என்றார். இதில் கூட ராமரின் தலைமை பண்பு தெரிகிறது.

ராம ராஜ்ஜியம் என்றால் என்ன ?
ராமாயணத்தை படிக்கும் போது,
"ராமர் ஆட்சியில் அமர்ந்தது கடைசியில் தானே" என்று நமக்கு தோன்றும்.
ராமர் ஆட்சியில் அமர்ந்த பின் எப்படி ஆட்சி செய்தார்?
என்பதை வைத்து மட்டும் ராம ராஜ்ஜியம் ஒவ்வொரு நாட்டுக்கும் தேவை என்று பேசப்படுகிறதா? என்ற கேள்வியும் நமக்கு எழும்.

ராமர் இளவரசனாக, மேலும் காட்டில் 14 வருடம் இருந்த காலத்தில் கூட ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தார்.



அரசன் ஆவதற்கு முன்பே அவரிடம் அத்தனை சிறந்த குணங்களும் இருந்தது.
நான் நல்லவனாக இருப்பேன், 
சத்தியத்தில் இருப்பேன்,
தாய் தந்தை சொல்படி நடப்பேன், 
யாரிடமும் அன்பாக இருப்பேன், 
என் தர்ம விதிப்படி எப்பொழுதும் இருப்பேன். 
மற்றவர்களும் அவர்கள் தர்மபடி இருக்க செய்வேன். 
தர்மத்தை மீறுபவர்களை என் க்ஷத்ரிய தர்ம படி தண்டிப்பேன். 
கொடுத்த வாக்கை காப்பேன்.
இப்படி பல குணங்கள் ராமருக்கு இருந்தது.

தன் தந்தை சபதத்தை காக்க, பிள்ளையான ராமர் 14 வருடம் காட்டுக்கு சென்றார்.
இதை கண்கூடாக பார்த்தனர் மக்கள்.
சத்தியத்துக்கு இப்படி மரியாதை செய்தவர், 14 வருடம் கழித்து வந்து ஆட்சியை நடத்தினால், மக்கள் அனைவரும் சத்தியத்துக்கு கட்டுப்படாமலா இருப்பார்கள்?

ராம ராஜ்ஜியம் ஒரு அரசனை மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனையும் தர்ம வழியில் வாழ தூண்டும்.

ஸ்ரீ ராமரை பற்றி ஆஞ்சநேயர்


ஆஞ்சநேயர் ஸ்ரீ ராமரை பற்றி:
ஒருவர் சிறந்த
1. புத்திசாலியாகவும்,
2. மிகுந்த பலசாலியாகவும்,
3. சுறுசுறுப்பாகவும்,
4. மிகவும் புகழ் பெற்றவராகவும்,
5. புலன்களை அடக்கியவராகவும்,
6. மகா தைரியசாலியாகவும்,
7. பயம் அறியாத சுத்த வீரனாகவும்,
8. ஆரோக்யம் உடையவராகவும்,
9. சிறந்த கல்வி தேர்ச்சி பெற்றவராகவும்,
10. சிறந்த பேச்சுத்திறமை உள்ளவராகவும்
ஒரு சேர காண முடியாது.



இதில் நமக்கு, ஏதாவது ஒன்று இரண்டு இருந்தாலே, கர்வம் தலைக்கு மேல் ஏறி விடும்.

இவை அனைத்தையும் ஒரு சேர கொண்டவர் ஸ்ரீ ஆஞ்சநேயர்,

ஆனால் இவரோ, "ராமருக்கு நான் தாசன்" என்று கர்வமே இல்லாமல், கை குவித்து நிற்கிறார்.
ஸ்ரீ ராமரை அந்த பரவாசுதேவன் "நாராயணன்" என்று உணர்ந்து இருந்தார்.

இத்தனைக்கும் ஸ்ரீ ராமர், தான் ஒரு ராஜ குடும்பத்தை சேர்ந்தவன். அயோத்தி அரசர், தசரதனின் மகன். ஒரு மனிதன் என்று சொல்லிக்கொண்டார்.
இது போதாது என்று, ஸ்ரீ ஆஞ்சநேயரை துணைக்கு வேறு அழைத்துக்கொண்டார்.


வயதிலும் மூத்தவரான, ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்ரீ ராமரை பகவான் என்று எப்படி உணர்ந்தார்?

மாயாஜாலம், மருத்துவம், பலம்  இவற்றையெல்லாம் வைத்து, யாரையும் பகவான் என்று சொல்ல கூடாது. சாஸ்திரம் பகவானின் குணங்கள் என்ன என்று சொல்கிறது.

நோய் தீர்ப்பவர் கடவுள் என்று நினைத்தால், எல்லா மருத்துவரும் கடவுள் என்று சொல்ல வேண்டியது தான்.

கடவுளை பலத்தாலோ, மாயாஜாலத்தாலோ, கண்டு பிடிக்கமுடியாது. கண்டு பிடிக்கவும் கூடாது.
போலி மதங்கள் இப்படி ஏமாற்றியே தான் மக்களை ஏமாற்றி வளர்ந்தன. ஏமாற்றுகின்றன.

சாதாரணமாக, ஒரு மனிதன் தன்னை தாழ்த்தி கொள்ள, "நான் நாய் போன்று நன்றியுடன் இருப்பேன்" என்று சொல்லுவான்.
கொஞ்சம் உயர்வாக தன்னை எண்ணும் போது "நான் கடவுள்" என்பான்.

மனிதர்களை விட உயர்ந்தவர்கள் தேவர்கள். தேவர்களை பொறுத்தவரை, மனித பிறவியே தாழ்ந்த பிறவி.
தேவர்களையும் விட உயர்ந்த லோகத்தில் இருப்பவர்கள், ரிஷிகள்.
அவர்களுக்கும் மேல் லோகத்தில் இருப்பவர் ப்ரம்மா.
இவை அனைத்தையும் படைத்தவர் பரவாசுதேவன்.

மனிதர்களில் சிலர் "நான் கடவுள்" என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுவது போல, பரவாசுதேவன், ஸ்ரீ ராமனாக அவதாரம் செய்து, "நான் மனிதன்" என்று சொல்லிக்கொள்ள ஆசைப்பட்டார். மனிதனாக தர்ம வழியில் வாழ்ந்து காட்ட, அவதாரம் செய்ததால், யார் கேட்டாலும், "நான் மனிதன்" என்று சொல்லிக்கொண்டார்.

முடிந்தவரை, தான் மனிதனாகவே இருக்க முயற்சி செய்தார். ஆனாலும், இவரின் வேடம் யாரிடமும் பலிக்கவில்லை.

ஸ்ரீ ஆஞ்சநேயரிடமோ, சீதையிடமோ, சகோதரர்களிடமோ, சபரியிடமோ, பெற்றோர்களிடமோ, விஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகத்தியர், போன்ற ரிஷிகளிடமோ, மாரீசன், கும்பகர்ணன் விபீஷணன் போன்ற அரக்கர்களிடமோ கூட  பலிக்கவில்லை. இன்று வரை இவர் சரித்திரம் நமக்கு தேவைப்படுகிறது.

இவர் "நான் மனிதன்" என்று சொன்னாலும் இவர்கள் யாவரும் இவரை அந்த பரவாசுதேவன் என்று அனைவரும் உணர்ந்து இருந்தனர்.

பகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்களை விஷ்ணு புராணம் சொல்கிறது.
1. பூர்ணமான ஐச்வர்யம்
2. பூர்ணமான தர்மம்
3. பூர்ணமான புகழ்
4. பூர்ணமான ஸ்ரீ
5. பூர்ணமான வைராக்யம்
6. பூர்ணமான மோக்ஷம்
ஸ்ரீ ஆஞ்சநேயர் இந்த லக்ஷணங்களை ஸ்ரீ ராமரிடத்தில் கண்டார்.

ஸ்ரீ ஆஞ்சநேயரிடம், "ஸ்ரீ ராமர் பகவான் என்று தெரிந்தும், நீங்கள் மட்டும், அவரிடம் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீ ராமர் எப்படி இருப்பார்? எப்படி பழகுவார்?" என்று கேட்டால்,

ஸ்ரீ ஆஞ்சநேயர் சொல்கிறார்,
"ஸ்ரீ ராமரை பார்க்கும்போதே பகவான் என்று நமது ஆத்மா உணரும். அவரின் கண்கள் கருணை என்ற குளிர்ச்சியை வர்ஷிக்கும். நமக்கு பார்க்கும் போதே குளிர்ச்சியாக இருக்கும்.
பார்க்கும் போதே நம் மனம் சாந்தி அடையும்.
பேதம் பார்க்காமல் அனைவரிடமும் சமமாக  பழகுவார்.
நம் குறையே அவர் கண்ணுக்கு தெரியாது.
நம்மில் இருக்கும் ஒரு சிறு நிறையையும் பெரிதாக நினைத்து அன்போடு பழகுவார். கருணையே வடிவமாக கொண்டிருப்பார்.
நீல வர்ணமாக இருக்கும் ஸ்ரீ ராமரை பார்த்தாலே, அனைவருக்கும் அவரிடம் போய் பேசலாமா? பழகலாமா? என்று ஆசை வரும்.
அவரும் நம்மிடம் ஆசையாக பழக முன் வருவார். ஆனால், நான் அவரிடம் நெருங்கி பேசலாம் என்று முயற்சி செய்யும் போது, அவரின் எண்ணிலடங்கா பகவத் குணங்கள் என்னை ஒரு ஜீவன் என்று உணர்த்தி விடுகிறது.
பரமாத்மாவிடம் நெருங்கும் ஜீவன், தன்னை தாசன் என்று உணர்வது போல, ஸ்ரீ ராமரை நெருங்கும் போதெல்லாம் நான் தாசன், அவர் பரவாசுதேவன் என்ற நினைவு வந்து விடுகிறது. நான் ராம தாசன் ஆகி விடுகிறேன்.

ஒருவேளை நமக்கு தெரிந்த 1000 நற்குணங்கள் யாவும் ஸ்ரீ ராமரிடம் உள்ளதா என்று பார்க்க முயற்சித்தால், அதைவிட அதிகமான நற்குணங்கள் கொண்டு இருப்பார். குணக்கடலாக இருக்கிறார்.



பொதுவாக கடலை காணும் போது, மனிதர்களுக்கு ஏதோ புரியாத சந்தோஷம் உருவாகிறது.
சிலருக்கு பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
சிலருக்கு கடலில் நீந்தலாம் என்றும் தோன்றுகிறது.
சிலருக்கு கடலில் பயணம் செய்யலாம் என்று தோன்றுகிறது.
சிலருக்கு கடலில் முங்கி குளிக்கலாம் என்று தோன்றுகிறது.
சிலருக்கு கடலில் உள்ளே சென்று முத்து எடுக்கலாம் என்று தோன்றுகிறது.
ஆனால் யாருமே, கடலை முழுவதும் அறிந்தவர்கள் இல்லை.

அதே போல, ஸ்ரீ ராமரின் குணம் என்ற கடலை கண்டு ஆனந்தப்பட்டு அருகில் வருபவன், கடல் அருகே வந்து அதன் கம்பீரத்தை, பலத்தை பார்த்து, அப்படியே கரையில் நின்று விடுவது போல, அவர் அருகில் சென்ற பிறகு  அமைதியாக நின்று விடுகிறேன்.
பார்ப்பதற்கு கடல் போல குளிர்ச்சியாக இருக்கிறார். அவரின் தரிசனம் மட்டுமே திருப்தி அளிக்கிறது" என்றார் ஹனுமான்.