Followers

Search Here...

Sunday 25 February 2018

'தவறு' என்று தெரிந்தும் செய்பவன் அழிந்தே தீருவான். பகவத் கீதை முதல் ஸ்லோகம், நமக்கு சொல்லும் அறிவுரை.. தெரிந்து கொள்வோமே...

பகவத் கீதை முதல் ஸ்லோகம்



மனிதர்களாகிய நாம், பல நேரம்,
'நாம் செய்யும் ஒழுக்க கேடான செயல்கள், தனக்கும், மற்றவர்களுக்கும் தீங்கு உண்டாக்கும் என்று தெரிந்தும்' செய்கிறோம்.

'இது கெட்ட பழக்கம் என்று தெரிந்தும்' செய்கிறோம்.

'பலர் இது தவறு என்று சொன்னாலும் கேட்டு விட்டு, மீண்டும் மீண்டும்' செய்கிறோம்.

'நம் உள்ளே இருக்கும் பரமாத்மா, உள்ளிருந்து நாம் செய்வது தவறு என்று சொன்னாலும் தெரிந்தே' செய்கிறோம்.

'நாம் செய்யும் இந்த தவறான செயலுக்கு சரியான அடி கிடைக்கும் என்று தெரிந்தாலும், ஒன்றும் ஆகாது என்ற குருட்டு நம்பிக்கையில்' செய்கிறோம்.

'செய்யும் தவறுக்கு, அடி வாங்கி கொண்டு இருக்கும் போது, இனியாவது விட்டு விடு என்று யாராவது சொன்னாலும், கேட்டு விட்டு, தொடர்ந்து' செய்கிறோம்.

'செய்த தீய செயலுக்கு பலர் எச்சரிக்கை செய்தும், தெய்வமே மனசாட்சியாக சொல்லியும் கூட, சிறிது அடி வாங்கும் பொழுதாவது செய்யும் தவறை திருத்தி கொள்ளாமல், மேலும் மேலும் செய்து,' தண்டனை பெறுகிறோம்.

இப்படிப்பட்ட ஒருவன் செய்த தவறு தான், 
மஹாபாரத போருக்கு வித்திட்டது. 40 லட்ச க்ஷத்ரிய வீரர்கள், 18 நாட்களில் அழிய காரணமானது.
த்ருதராஷ்டிரன் இத்தனை பேர் எச்சரித்தும், தனக்கே தவறு செய்கிறோம் என்று தெரிந்தும், தன் தவறை தொடர்ந்து செய்தான். 
தன் அழிவுக்கும், தன் குலம் அழியவும் வித்திட்டான்.

நாமும் த்ருதராஷ்டிரன் போல வாழாமல்,
'தவறு' என்று தெரிந்தவுடன் விபீஷணன் போல, எது தர்மமோ அந்த வழியில் சென்று நிற்க வேண்டும். 



'தவறு' என்று தெரிந்தும் செய்பவன் அழிந்தே தீருவான்.
இதுவே இந்த முதல் ஸ்லோகம் நமக்கு சொல்லும் அறிவுரை. மனதில் பதிய வைக்க வேண்டிய அறிவுரை.

மஹாபாரத போர் சுமார் 3150BC சமயத்தில், துவாபர யுக முடிவில் நடந்தது.

பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்ட வீரர்கள் மொத்தம் - 15 லட்சத்து, 30 ஆயிரத்து 900.

இதில் உயிர் பிழைத்தவர்கள்
பாண்டவர்கள் ஐவர்,
ஸ்ரீ கிருஷ்ணர்,
ஸ்ரீ கிருஷ்ணரின் படை தளபதி சாத்யகி,
த்ருதராஷ்டிரனுக்கு பிறந்த தாசி புத்ரன் 'யுயுத்சு' மட்டுமே.

கௌரவர்கள் பக்கம் நின்று போரிட்ட வீரர்கள் மொத்தம் - 24 லட்சத்து, 5 ஆயிரத்து 700.

இதில் உயிர் பிழைத்தவர்கள்,
அஸ்வத்தாமா, க்ருபர், க்ருதவர்மன்.

'அஸ்வத்தாமா' போர் முடிந்த பின்,
தூங்கி கொண்டிருந்த பாஞ்சாலியின் 5 புதல்வர்கள், த்ருஷ்டத்யும்னன், சிகண்டி ஆகியோரை இரவோடு இரவாக  கொன்று விட்டான்.
பாரத போரால் அனைத்து வீரர்களும் மடிந்தனர்.
18 நாட்களில் 40 லட்சம் மஹாவீரர்கள் மடிந்தனர்.

ஒவ்வொரு ஆணுக்கும் தாய், மனைவி, பெண்கள் என்று உறவு இருக்கும் என்று பார்க்கும் பொழுது, 40 லட்சம் ஆண்கள் இறந்ததால், குறைந்தது 1 கோடி பெண்கள், தங்கள் குடும்பத்தில் ஆண் வாரிசுகளை, ஆண் பாதுகாப்பை இழந்தனர்.

கிரேக்க நாட்டில் இருந்து ரஷ்யா வரை இருந்த, க்ஷத்ரிய அரசர்கள் அழிந்தனர். 

உலகத்தை ஒரு குடையின் கீழ் தர்மபுத்ரர் ஆண்டார். 
பின்னர் பரிக்ஷித், எதிரிகள் இல்லாத இந்த பெரும் அரசாட்சியை பெற்றான்.

போர் ஏற்பட்டால், பெண்கள் தனித்து விடப்பட்டு, ஆண் ஆதரவு இன்றி, தங்களையும், குழந்தைகளையும் பார்த்து கொள்ள முடியாமல் தற்கொலையோ, தவறான வழியையோ தேர்ந்தெடுக்க நேரிடுமே!! 
என்று அர்ஜுனன் போர் ஆரம்பத்தில் புலம்பினான்.
பகவத் கீதை உபதேசம் செய்து, ஞானத்தை கொடுத்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.

போர் முடிந்து துவாரகை திரும்பும் பொழுது, மகரிஷி உத்தங்கரை வழியில் சந்தித்தார் ஸ்ரீ கிருஷ்ணன்.

மகரிஷி உத்தங்கர், கோபமாக ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து,
"நீங்கள் நினைத்து இருந்தால், இப்படி ஒரு பேரழிவு நடந்து இருக்காது. லட்சகணக்கான க்ஷத்ரியர்களின் உயிர் காப்பாற்ற பட்டு இருக்கும்.
ஒரு குடும்ப சண்டைக்காக, உலக க்ஷத்ரியர்கள் இப்படி சேர்ந்து கொண்டு உயிர் விட்டு விட்டார்களே!! "
என்றார்.

ஸ்ரீ கிருஷ்ணர், இவருக்கு ஞான உபதேசம் செய்து, தர்மத்தை விளக்கினார்.
வியாசர், விதுரர், சஞ்சயன் உபதேசம் செய்தும், 
இதற்கு மேல் தானே எச்சரிக்கை விடுத்தும், 
த்ருதராஷ்டிரன் போரை தன் மகன் துரியோதனனுக்காக நடக்க செய்தான். 
பேரழிவு நடக்க காரணமாக இருந்தான், என்பதையும் விளக்கினார்.



உதங்கர் உண்மை அறிந்து, ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கினார்.

போர் நடக்காமல் இருக்க, சமாதான தூதுவனாக சென்றும், ஸ்ரீ கிருஷ்ணரை சிறை பிடிக்க முயன்றான் துரியோதனன். 
போர் வேண்டாம் என்ற எண்ணம் துளியும் இல்லை கௌரவர்களுக்கு.

கௌரவர்கள் தந்தை 'த்ருதராஷ்டிரன்' தடுக்கவும் இல்லை.

போர் நடக்கும் முன்பே, த்ருதராஷ்டிரனுக்கு போர் வேண்டாம் என்று வியாசர் உபதேசம் செய்தார்.
பின்னர் விதுரர் த்ருதராஷ்டிரனுக்கு உபதேசம் செய்தார்.

பீஷ்மர் த்ருதராஷ்டிரனுக்கு உபதேசம் செய்தார்.

தூது வந்த ஸ்ரீ கிருஷ்ணர், த்ருதராஷ்டிரனுக்கு தானே உபதேசம் செய்தார்.
'தான் பகவான்' என்று விஸ்வரூபம் காட்டி, 'போர் வேண்டாம்' என்று முடிவு செய்வானா என்று பார்த்தார்.
'மாயாஜாலம்' என்றான் துரியோதனன்.

மேலும்,
"த்ருதராஷ்டிரா! 
ஒரு குடும்பம் தர்மத்தில் இருக்க, தர்மத்தை கெடுக்கும் அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவனை, அந்த  குடும்பத்தை விட்டு விலக்க வேண்டும்.
ஒரு ஊர், ஒரு குடும்பத்தால் அதர்மத்தில் வீழும் என்றால், அந்த குடும்பத்தை அந்த ஊரை விட்டு விலக்கலாம்.
ஒரு நாட்டுக்கு நன்மை அமைய, ஒரு ஊரை அழிக்க வேண்டும் என்றாலும், நாட்டின் நன்மைக்காக செய்ய வேண்டும்.
இப்படி பலர் நன்மை அடைய, ஒரு சில தியாகம் செய்யலாம்.

உன் குடும்ப சண்டையால் ஏற்பட போகும் இந்த போரில், பல லட்சம் க்ஷத்ரியர்கள் அழிந்து விடுவார்கள்.
போரினால் அழிவு நிச்சயம். 
இந்த பேரழிவுக்கு நீ காரணமாகி விடாதே !.

இந்த போர் நடக்காமல் இருக்க ஒரு வழி சொல்கிறேன் கேள்.
உனக்கு ஒன்று இரண்டு புதல்வர்கள் இல்லை. 100 புதல்வர்கள்.
இந்த போரால், உன்னுடைய 100 புதல்வர்களையும் இழக்க நேரிடலாம். உன்னால் பல க்ஷத்ரிய அரசர்களும் உயிர் துறக்க நேரும்.

இந்த பேரழிவை தடுக்க, நீ 99 பிள்ளைகளை வைத்துக்கொள், ஒரே ஒரு மகனை மட்டும் தியாகம் செய்து விடு. துரியோதனன் ஒருவனை நாடு கடத்து. போர் நேராது"
என்றார்.
த்ருதராஷ்டிரன், "கிருஷ்ணா ! நீ மற்ற எந்த பிள்ளையையும் தியாகம் செய்ய சொல், செய்கிறேன். ஆனால், துரியோதனனை மட்டும் என்னால் தியாகம் செய்ய முடியாது"
என்றான்.



இப்படி ஸ்ரீ கிருஷ்ணர், தானே சமாதான தூது சென்று,
'தானமாக 5 கிராமங்கள் கேட்டும்' முடியாது என்று சொல்லி,
'தான் பகவான்' என்று விஸ்வரூபம் காட்டியும் 'மாயாஜாலம்' என்று நினைத்து,
'துரியோதனனை விலக்கு' என்று சொல்லியும் மறுத்து,
தன்னையே சிறை பிடிக்க முயற்சி செய்தான் துரியோதனன்.
இப்படி பல முயற்சி செய்தும், பாரத போர் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
போர் நடக்க போகும் சமயத்தில்,
த்ருதராஷ்டிரன் வ்யாசரிடம் தான் 'இந்த போரை பார்க்க அணுகிரஹம் செய்ய வேண்டும்' என்றான்.

போர் அழிவை தரும், வேண்டாம் என்று சொல்லியும் திருந்தாத த்ருதராஷ்டிரன், போரை பார்க்க ஆசைபட்ட பொழுது, 'இவன் இதை பார்த்தாலாவது ஏதாவது ஒரு சமயத்தில் போரை நிறுத்துவானோ' என்று நினைத்து,
"நீ குருக்ஷேத்ர இடத்துக்கு செல். 
அங்கு ஒரு இடத்தில் அமர்ந்தபடியே, 
ஒவ்வொரு வீரனும் என்ன செய்கிறார்கள்? 
யாருடன் சண்டை செய்கிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? 
என்று அனைத்தும் என் அணுகிரஹத்தால், ஞான த்ருஷ்டியில் அப்படியே தெரியும்" என்றார்.

இதற்கு த்ருதராஷ்டிரன் சொல்லும் பதிலை கவனித்தால் நமக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும்.
த்ருதராஷ்டிரன் சொல்கிறான்,
"எனக்கு ஞான திருஷ்டி வேண்டாம். 
இந்த போரில் என் 100 பிள்ளைகள் மடிவதை என்னால் பார்க்க முடியாது. நான் பார்க்க ஆசை படவில்லை. 
இருந்தாலும் என்ன நடக்கிறது? என்று தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன். வேறு உபாயம் சொல்லுங்கள்"
என்றான்.

அப்படியென்றால், தனக்கு சிஷ்யனாக உள்ள "சஞ்சயனுக்கு" இந்த ஞான திருஷ்டியை அளிக்கிறேன்.
"சஞ்சயன் தன் ஞான தருஷ்டியில் பார்த்து உனக்கு நடந்ததை சொல்வான்" என்றார் வியாசர்.
இதற்கு சம்மதித்தான் த்ருதராஷ்டிரன்.

போர் ஆரம்பம் ஆகியது.
சஞ்சயன் தானே குருக்ஷேத்ரம் சென்று பார்த்து வர சென்றான்.

அங்கு இருந்து கொண்டே, தன் ஞான தருஷ்டியில் என்ன நடக்கிறது என்று பார்த்தான்.
10 நாட்கள் போரை குருக்ஷேத்ரத்தில் இருந்து கொண்டே பார்த்தான்.
பத்தாவது நாள் (10th Day), 
யாராலும் தோற்கடிக்க முடியாத பீஷ்மர் வீழ்ந்தார். 
இந்த 10 நாள் யுத்தத்தில் பாதி படைகள் அழிந்து விட்டன.



பீஷ்மர் வீழ்ந்த பின், 'கௌரவர்கள் இனி ஜெயிக்க முடியாது' என்பது நிச்சயமானது.

இனியாவது, த்ருதராஷ்டிரன் தன் தவறை உணர்வானோ!! என்று எண்ணி, குருக்ஷேத்ரம் விட்டு, 11வது நாள், சஞ்சயன் த்ருதராஷ்டிரனை பார்க்க சென்றான்.

'பீஷ்மர் வீழ்ந்து விட்டார். இனி பாண்டவர்கள் ஜெயிப்பது நிச்சயம். இனியாவது போரை நிறுத்த சொல்வானா?'
என்ற நப்பாசையில் சஞ்சயனும் முயன்றான்.

இப்படி வியாசர், விதுரர், ஸ்ரீ கிருஷ்ணர், சஞ்சயன் சொல்லியும், 
'போர் நடந்தே ஆக வேண்டும்' என்று முடிவு கட்டி விட்ட கௌரவர்கள் மீதும், த்ருதராஷ்டிரன் மீதும் குறை இருக்க, தன் மீது கோபப்படுவது வீண்"
என்றார் ஸ்ரீ கிருஷ்ணர்.
உதங்கர் உண்மை அறிந்து சமாதானம் அடைந்தார்.
10 நாள் போருக்கு பின்னர் வந்திருக்கும் சஞ்சயன்,
என்ன சொல்ல போகிறானோ? 
நாம் ஜெயித்தோமா? இல்லை பாண்டவர்கள் ஜெயித்து விட்டார்களா? 
என்ற பதட்டத்தில்,
சஞ்சயனை பார்த்து த்ருதராஷ்டிரன் கேட்கும் முதல் கேள்வியே, "பகவத் கீதை"யின் முதல் ஸ்லோகமாக அமைத்தார் வியாசர்.

திருதராஷ்டிரன் கேட்கிறான்:
சஞ்ஜயா, அற நிலமாகிய குரு நிலத்தில் போர்செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும், பாண்டவரும் என்ன செய்தனர்?

धृतराष्ट्र उवाच
धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः।
मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय ॥१॥

த்⁴ருதராஷ்ட்ர உவாச
த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ​:|
மாமகா​: பாண்ட³வாஸ்²சைவ கிமகுர்வத ஸஞ்ஜய ||1-1||



த்⁴ருதராஷ்ட்ர உவாச = திருதராஷ்டிரன் சொல்லுகிறான்;
த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே = அற நிலமாகிய குரு நிலத்தில்,
ஸமவேதா: = ஒன்று கூடி;
யுயுத்ஸவ: = போர்செய்ய விரும்பித் திரண்ட;
மாமகா: = நம்மவர்களும்;
பாண்ட³வா: = பாண்டவரும்;
கிம் அகுர்வத = என்ன செய்தனர்?

Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam - Morning with meaning

Sandhya Vandanam - Afternoon with meaning




Sandhya Vandanam - Evening with meaning

Saturday 17 February 2018

உத்தமன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன?

உத்தமன் என்ற சொல் பகவான் ஒருவருக்கே பொருத்தம்.
சில நேரம், மனிதர்களிலும், சிலரை "உத்தமர்" என்று சொல்வதுண்டு.
உத்தமன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன?
இதை புரிந்து கொள்ள, சாஸ்திரம் கை கொடுக்கிறது.
பொதுவாக மனிதர்கள் 4 வகைப்படுவர்.
அதமாதமன்,
அதமன்
மத்யமன்
உத்தமன்.






அதமாதமன் -
எந்த காரியம் செய்தாலும், அதில் தனக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லையோ, மற்றவர்கள் நாசமாக போனாலும் பரவாயில்லை என்று செய்பவன்  "அதமாதமன்".

அதமன் -
எந்த காரியம் செய்தாலும், அதில் தனக்கு நன்மை கிடைக்கும் என்றால் மட்டுமே முயற்சி செய்பவன், "அதமன்".

மத்யமன் -
எந்த காரியம் செய்தாலும், அதில் தனக்கும், மற்றவனுக்கும் சேர்த்து நன்மை கிடைக்கும் என்றால் முயற்சி செய்பவன் "மத்யமன்".

உத்தமன் -
தனக்கு என்று எதையும் எதிர்பார்க்காமல், தன் உடலாலும், மனதாலும், வாக்காலும் பிறருக்கு நன்மை கிடைக்கும் என்றால் முயற்சி செய்பவன், "உத்தமன்".

பகவான் நாராயணனுக்கு நம்மால் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை.
அவர் நமக்கு தரும் இந்த வாழ்வும், உடம்பும், செல்வமும், புத்தியும் அனைத்தும், நம் நன்மைக்காகவே.





உத்தமன்
என்ற சொல்லுக்கு பகவான் ஒருவரே தகுதியானவர்.

சுயநலமில்லாத நம் பாரதத்தில் உதித்த மகான்களும், ரிஷிகளும் கூட உத்தமர்களே.

Hare Rama, Hare Krishna Bhajan 

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 





sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 

ப்ரம்மாவின் வயது என்ன ?

ப்ரம்மாவின் வயது என்ன ?

பரம் என்ற பரமாத்மா (நாராயணன்) ப்ரம்மாவை படைத்தார்.
ப்ரம்மாவின் இன்றைய வயது என்ன ?
50 வயதை கடந்து, 51வது வருடத்தின் முதல் நாள் கடந்து கொண்டு இருக்கிறது.

ப்ரம்மாவின் ஒரு பகலில், 14 மனு அரசர்கள் ஆள்கின்றனர்.
ஒவ்வொரு மனுவின் காலம் முடிந்த பின், 17 லட்சத்தி 28 ஆயிரம் வருடங்கள் உலகம் கடலில் மூழ்கும்.

ஒவ்வொரு மனு அரசனும் 71 சதுர் யூகங்களை ஆள்கின்றனர்.

ஒரு சதுர் யுகம் என்பது 43 லட்சத்தி 20 ஆயிரம் வருடங்கள்.

ஆக, ஒரு மனு அரசர் 30 கோடியே 67 லட்சத்தி 20 ஆயிரம் வருடங்கள் ஆள்கிறார்.

ப்ரம்மாவின் இந்த ஒரு நாளில், 14 மனு அரசர்களில், இதுவரை 6 மனு அரசர்கள் காலம் முடிந்துள்ளது.

இப்பொழுது 7வது மனு அரசர் ஆண்டு கொண்டு இருக்கிறார்.
இவர் பெயர் : வைவஸ்வதன்.

இவருடைய 71 சதுர் யூகங்களில் இதுவரை 27 சதுர் யூகங்கள் முடிந்து விட்டது.
இப்பொழுது இவர் 28வது சதுர் யூகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறார். இந்த சதுர் யூகத்தில் 3 யுகங்கள் (சத்ய, த்ரேதா, த்வாபர) முடிந்து விட்டது. 4வது யுகம் "கலி யுகம்" நடந்து கொண்டு இருக்கிறது.

கலி யுகத்தின் மொத்த வருடம் 4 லட்சத்தி 32 ஆயிரம் வருடங்கள்.
ஆங்கிலேய calendar படி கலி யுகம் 3102 BCல் ஆரம்பிக்கிறது.

சுமார் 3300 BCல் ஸ்ரீ கிருஷ்ணராக, ப்ரம்மாவை படைத்த அந்த பரமாத்மாவே அவதரித்து மகாபாரத போர் செய்தார்.
3300 BC முதல் 1700 BC வரை indus valley civilization என்று கண்டுபிடித்து உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

2017ல், கலியுகம் 5118 வருடங்கள் கடந்து உள்ளது. இன்னும் 432000 - 5118 வருடங்கள் உள்ளது. நியாயமாக, கலி யுகம் இப்பொழுது தான்  ஆரம்பித்துள்ளது. 😊

நம் ஒரு வருடம், சொர்க்க லோகத்தில் இருக்கும் தேவர்களுக்கு, ஒரு நாள்.

தேவர்கள் அவர்கள் காலப்படி 100 வருடம் இருந்து, அங்கு அவர்கள் செய்த புண்ணியத்துக்கு ஏற்ப, சொர்க்க லோகத்திலிருந்து மேல் இருக்கும் மகர் லோகத்துக்கோ, ஜன லோகத்துக்கோ, தப லோகத்துக்கோ செல்வர்.
இந்த மகர, ஜன, தப லோகத்தில் உள்ளவர்களிடம் ஏதாவது பாவம் செய்திருந்தால், கீழ் லோகமான பூமியில் பிறப்பர்.
தேவர்களை பொறுத்தவரை மனிதர்கள் கீழ் தரமானவர்கள் 😊.

தப லோகத்துக்கும் மேல், சத்ய லோகம் உள்ளது. அங்கு தான் ப்ரம்மா இருக்கிறார்.

14 மனு அரசர்கள் ஆட்சி செய்து முடிக்கும் பொழுது, ப்ரம்மாவுக்கு ஒரு பகல் முடியும்.

ப்ரம்மாவின் இரவு, பகலை போன்று நீளமானது.
இந்த சமயத்தில், ப்ரம்மா தன் இருப்பிடமான சத்ய லோகத்தையும், மக, ஜன, தப லோகத்தை தவிர்த்து, பூலோகம், புவர் லோகம், சொர்க்க லோகம் மற்றும் கீழ் 7 லோகங்கள் அனைத்தையும் அழித்து விடுகிறார்.
இத்தனை காலங்கள் பிறந்தும், இறந்தும் இன்னும் நாராயணனை அடையாமல் உலக வாழ்க்கையே மீண்டும் மீண்டும் செய்து வாழ்ந்த அனைத்து ஆத்மாக்களும் ப்ரம்மாவின் இரவு காலம் முழுவதும், தான் இருக்கிறோம் என்று தெரியாமல் தூங்குவது போல அந்த பரமாத்மாவில் ஒடுங்கும்.

மீண்டும் ப்ரம்மாவின் பகல் ஆரம்பித்தவுடன், பிரம்மா மீண்டும் பூலோகம், புவர் லோகம், சொர்க்க லோகம் மற்றும் கீழ் 7 லோகங்கள் அனைத்தையும் படைத்து, முக்தி அடையாமல், அறியாமல் தூங்கும் நிலையில் உள்ள ஜீவாத்மாக்களை உலகில் மரமாகவோ, பறவையாகவோ, விலங்காகவோ, மனிதனாகவோ அவரவர் செய்த பாவ, புண்ணியத்தை பொறுத்து மீண்டும் பிறக்க வைக்கிறார்.

நிம்மதி கெடுவதற்கு காரணம்

நிம்மதி

மனதில் நிம்மதி உடையவன், எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கிறான்.

நிம்மதி எப்படி கெடு்கிறது?
பொதுவாக, இந்த உலகத்தில் நாம் பலருடன் பழகுவதினாலேயே நமக்கு நிம்மதி கெடு்கிறது.

நிம்மதி கெடுவதற்கு காரணம், நாம் பழகும் மனிதனோ, மிருகமோ ஏதுவாக இருந்தாலும் அதில் உள்ள குறைகளே காரணம்.
அந்த குறைகளை, நாம் அறியும் போது, நமக்கு நிம்மதி கெடுகிறது. மற்றவர் குறையால், இழப்பது நம் நிம்மதியை தான்.

சிறிது நாள் பழகினாலேயே, நமக்கு மற்றவர்களின் குறைகள் தெரிய ஆரம்பிக்கிறது. இதுவே கடைசியில் நம் நிம்மதியை கெடுக்கிறது.

கணவன், மனைவி இடையே கூட இந்த குறைகளே, இருவருக்கும் இருந்த நிம்மதியை கெடுக்கிறது.

மாமியார் தன் மருமகளின் குறைகளை கண்டுபிடித்தே, இருந்த நிம்மதியை தானும் கெடுத்துக் கொள்கிறாள், வீட்டிலும் நிம்மதியை கெடுக்கிறாள்.

இதேபோல மருமகள், மாமியார் குறைகளை கண்டு பிடித்து, இருந்த நிம்மதியை கெடுத்துக் கொள்கிறாள், வீட்டிலும் நிம்மதியை கெடுக்கிறாள்.

வீட்டிலே உள்ளவர்களின் குறையே, நம் நிம்மதியை கெடுக்கும் என்றால், வெளி மனிதர்களை பற்றி சொல்லவே வேண்டாம்.
இந்த உலகில் பல மனிதர்கள். அவரவர்களுக்கு பல ஸ்வபாவம், பல நம்பிக்கை உள்ளது.
இப்படி பலருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற சூழ்நிலையில், இவர்களிடம் உள்ள குறைகள், நம் நிம்மதியை அழித்தே விடும் என்பதில் சந்தேகமேயில்லை.

நிம்மதியை பாதுகாத்துக்கொள்ள 2 வழிகள் :
1. தனிமையில் எப்போதும் இருக்க முயற்சி செய்தால், பிறர் குறை தெரிய வாய்ப்பு இல்லை. இதுவே நிம்மதியை பாதுகாத்துக்கொள்ள ஒரு வழி. இதில் ஒரு குறைபாடு உள்ளது. தனிமையில் இருக்கும் போதும், மனம் அடங்காமல் இருப்பதால், மனம் தன்னிடம் உள்ள குறையை எடுத்துக் காட்டும். மற்றவர் மீது பார்த்த குறையை விட, தன்னிடம் பார்க்கும் குறைகள் இன்னும் நிம்மதியை கெடுக்கும் வாய்ப்பு உள்ளது.

2. மகான்கள் மற்றும் குருவின் வழி : குருவுக்கு பல சிஷ்யர்கள் உண்டு. குரு உலகப் பற்று இல்லாமல் இருந்தாலும், நம்மை போன்றவர்களை வாழ்வில் உயர்த்த நம் வரை வந்து சகஜமாக பேசுகின்றனர். நாம் பேசும் கீழ் தரமான பேச்சுக்கள், செய்யும் செயல்கள் அனைத்துமே அவருக்கு குறைகளாக இருந்தும், 1000 குறைகள் இருந்தாலும், அதில் எங்காவது ஒளிந்திருக்கும் 1 நல்ல குணத்தை கண்டுபிடித்து, அதை மட்டுமே பெரிதுப்படுத்தி குறை உள்ளவனிடமும், புன்முறுவலோடு பேசுகிறார். இந்த முறையினால், மகான்கள் லட்சம் பேரிடம் பழகும் போதும், தன் நிம்மதியை கெடுத்துக் கொள்வதில்லை.

கலி புருஷன் "இந்த கலி யுகத்தில், நான் அதர்மத்தை நிலை நிறுத்தி, கலியின் கொடுமையை மக்களுக்கு காட்டுவேன்." என்று சொல்லி, மேலும், "எங்கே "ஹரி"யின் நாமம் கேட்கிறதோ அங்கு இந்த கலியின் கொடுமை இருக்காது, தர்மம் நிலைக்கும், மக்கள் அவதிப்பட மாட்டார்கள்" என்று சொன்னான்.
இதனை கேட்ட அர்ஜுனனின் பேரன், அபிமன்யுவின் மகன், பரீட்சித்து மன்னன், பல இன்னல்களை மக்கள் இந்த கலியுகத்தில் அனுபவிக்க நேரிடுமே என்று ஒரு கவலையினால், தன் நிம்மதி கெட வாய்ப்பு இருந்தும், கலி புருஷன் "ஹரி" நாமம் சொன்னால் பாதிப்பில்லை என்று சொன்னது மட்டும் பெரிதாகப் பட்டது.
கலி புருஷனிடமும் ஒரு நல்ல குணத்தை பார்த்தார் பரீட்சித்து.

நிம்மதி கெடாமல் இருப்பதற்கு, ஓடி ஒளிவதை விட, மற்றவர்களிடம் உள்ள நல்ல குணத்தை மட்டும் பார்ப்பதே சரியான வழி.

தீய குணத்தை பார்ப்பதால், நம் நிம்மதியும் கெடும், பகையும் வளரும்.

இருக்கும் ஒரு நல்ல குணத்தை பார்ப்பதால் கூட, நம் நிம்மதி நம்மிடமே இருக்கும். மேலும் குறை உள்ளவனும், இதனால் மேலும் பல நல்ல குணங்களை காலம் செல்ல செல்ல வளர்த்துக் கொள்வான்.

கோவிலில் சடாரி தலையில் படும்போது ,- ஆத்ம சமர்ப்பணம்

அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே, புகழ் ஒன்று இல்லா அடியேன், உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.
நம்மாழ்வார் - திருவாய் மொழி

பரமாத்மாவாகிய நாராயணரின் திருவடி, தன் தலை மேல் படவேண்டும் என்றால் கோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.

அத்தனை புண்ணியத்தையும் செலவு செய்தாலும், அவர் பாத ஸ்பரிசம் கிடைக்காது.
பலிச்சக்கரவர்த்தி தான் சம்பாதித்த உலகங்களை அந்த நாராயணரின் பாதத்தில் அர்ப்பணம் செய்தும், அதுவும் போதாது என்று தெரிந்தவுடன், தன்னையே ஆத்ம சமர்ப்பணம் செய்ததும், பகவான் ஸ்ரீமந் நாராயணர் பாதம் தன் சிரசில் படும் பாக்கியம் பெற்றார்.

தன் திருவடியை பக்தன் தலை மேல் வைத்து "நீ என்னை சேர்ந்தவன்" என்று உரிமையுடன் ஆட்கொண்டார்.


அத்தனை மதிப்புள்ள பெருமாளின் சடாரி (பெருமாள் திருவடி) தன் தலை மீது பட்டும், தான் ஒன்றுமே சமர்ப்பிக்க வில்லையே !!
பலிச்சக்கரவர்த்தி தன்னையே சமர்ப்பித்த பின்னரே, "நீ என்னை சேர்ந்தவன்" என்று தலை மீது தன் திருவடி வைத்த வெங்கடேச பெருமாள், தான் ஒன்றுமே சமர்ப்பிக்காமலே, தன்னை ஆட்கொண்டு விட்டாரே என்று கருணையை நினைத்து, இனியாவது ஆத்ம சமர்ப்பணம் செய்வது என்று "உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே" என்று தன்னை ஆத்ம சமர்ப்பணம் செய்கிறார்.

நாமும் கோவிலில் சடாரி (பெருமாள் பாதரக்ஷை) நம் தலையில் படும்போது,  பலிச்சக்கரவர்த்தியின் ஆத்ம சமர்ப்பணத்தை நினைத்து, ஆழ்வாரின் இந்த பாசுரத்தை ஸ்மரிப்போம்.