Followers

Search Here...

Sunday 1 September 2019

ஞானியையும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஞானியை ஆஸ்ரயித்த பக்தனையும் புரிந்து கொள்ள முடியவில்லையே... ஏன்? தெரிந்து கொள்வோமே.

ஞானியின் செயலை, ஞானியின் அனுபவத்தை, புலன்கள் வழியாகவே பார்க்கும் அஞானிகளான சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ளவே முடியாது.



"ஞானியை புரிந்து கொண்டேன்" என்று அஞானிகளான ஜனங்கள் நினைப்பதே தவறு..

"ஞானியை புரிந்து கொண்டேன்" என்று அஞானிகளான ஜனங்கள் சொல்வதே பொய்.
கோடியில் ஒருவன் ஞானியாக பிறக்கிறான்.

சாதாரண மக்களும் வி(பி)ருந்தாவனம் போய் பார்க்கிறார்கள்.
புலன்களின் தூண்டுதலால் மனதில் ஏற்படும் எண்ணங்களேயே ஆதாரமாக கொண்டு பார்க்கும் சாதாரண மக்களுக்கு, உத்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீபிருந்தாவனமும், டில்லியை போன்று இன்னொரு ஊராக தான் தெரிகிறது.
ஞானியோ ஸ்ரீபிருந்தாவனம் என்றதுமே, கிருஷ்ணர் கால் பட்ட பிரதேசமாகவே அனுபவிக்கிறார்கள்.

உலகத்தில் எது எதையெல்லாம் பார்க்கிறோமோ, அனுபவிக்கிறோமோ அது எல்லாம் இயற்கையினால் வந்த ஸ்வபாவமே..

எதை பார்த்தாலும் சரி, எதை கேட்டாலும் சரி, எதை பற்றி மனதால்  சிந்தனை செய்தாலும் சரி அது எல்லாம் இயற்கையினால் வந்த ஸ்வபாவமே.

மனம் அழிந்து போன பிறகு, ஜென்ம ஜென்ம புண்ணியங்களால் ஏற்படக்கூடிய அனுபவமே இயற்க்கைக்கு அப்பாற்பட்டது. இந்த அனுபவத்தை ஞானிகள் மட்டுமே அனுபவிக்கிறார்கள். 

கண் காது மூக்கு, தோல், நாக்கு, மனம் போன்ற இந்திரியங்களால் நாம் அனுபவிக்கும் அனைத்து விஷயங்களும் 'காமமே'.
எந்த அனுபவத்தை மனமும் அழிந்த பிறகு அனுபவிக்கிறாயோ அதுவே 'பிரேமை'
என்று ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் சொல்கிறார்..

அந்த பிரேமை சுயநலமில்லாதது. எதிர்பார்ப்பு இல்லாதது.
இந்த பிரேமை பகவானிடத்திலும், சத்குருவிடம் மட்டுமே ஏற்படும்.
மற்ற யாரிடத்திலும் நாம் கொள்ளும் அனுபவங்கள் எல்லாம் காமமே.

புலன்களால் தூண்டப்படாத, மனதுக்கு அப்பாற்பட்ட அனுபவங்கள் ஞானிக்கு ஏற்படுகிறது.

விஷய சுகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நிலையை அனுபவிக்கிறார்கள் ஞானிகள்.

சாதாரண மக்களுக்கு "உறக்கம்", "விழிப்பு" என்ற நிலை ஏற்படுகிறது.

மகான்களுக்கு விழிப்பு நிலையில் "சமாதி" என்ற நிலையும் ஏற்படுவதுண்டு..
"சமாதி" நிலையில் "மூச்சும்" நின்று விடுகிறது..
கிருஷ்ண சைதன்யர் பிருந்தாவனம் வந்த போது, சமாதி நிலைக்கு சென்று விட்டார்.



சாதாரண மக்களால் இவர் நிலையை புரிந்து கொள்ள முடியுமா?

'கிருஷ்ண சைதன்யர் சமாதி நிலையில் உயிரை பிரித்து கொண்டு விட்டாரா, இல்லை சமாதி நிலையில் தான் இருக்கிறாரா?'
என்று புரிந்து கொள்ள முடியாத பக்தர்கள், செய்வதறியாது,
அவரை சுற்றிக்கொண்டு அவருக்கு உயிரான "ஹரே ராம ஹரே கிருஷ்ண" மந்திரத்தை உரக்க சொல்ல ஆரம்பித்தனர்.
சமாதி நிலையில் உள்ள சைதன்யர் மூச்சு நின்று விட்டாலும், உடல் ஜில்லிட்டு போகவில்லை. உடல் கட்டை போல கிடக்கிறது.

ஒரு வாரம் ஆகியும், சைதன்யர் சமாதி நிலையை விட்டு வரவில்லை.

ஒரு ஞானியின் நிலையை, ஞானி மட்டுமே தெரிந்து கொள்ள முடியுமல்லவா...

அப்பொழுது ஸ்ரீ பிருந்தாவன யாத்திரையாக ராமச்சந்திர கவிராயர் என்பவர் வந்து இருந்தார்.

"கிருஷ்ண சைதன்யர் இப்படி கிடக்கிறார்... ஒரு வாரம் ஆகியும் நினைவு திரும்பவில்லை"
என்று பக்தர்கள் கவலைப்பட்டு சொல்ல,
கிருஷ்ண சைதன்யர் சமாதி நிலையில் கிடப்பதை பார்த்த கவிராயர், அவர் அருகிலேயே தானும் மூர்ச்சை ஆகி விழுந்து விட்டார்..
சிறிது நேரத்தில் இருவரின் சமாதியும் கலைந்து எழுந்து விட்டனர்.

கிருஷ்ண சைதன்யர் என்ற கௌரங்கர், சகஜ நிலைக்கு திரும்பினார்.
பக்தர்கள் ஆச்சர்யப்பட்டனர்.

என்ன நடந்தது?
ஏன் சைதன்யர் இப்படி ஆனார்?
என்று சாதாரண ஜனங்களுக்கு ஞானிகளின் எண்ண ஓட்டம், நிலை புரியுமா !!
ஒரு ஞானியை ஞானியே அறிய முடியும் அல்லவா.
ஸ்ரீ பிருந்தாவனம் வந்த சைதன்யர் (கௌரங்கர்), "பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணர் இங்கு தானே லீலைகள் செய்தார்" என்ற அனுபவத்திலேயே, தியானத்தில் இருந்தார்.

அப்பொழுது, ராதையின் மோதிரம் யமுனையில் விழுவது போல ஒரு காட்சி.
அப்பொழுது ஸ்ரீ கிருஷ்ணர் வந்து கொண்டிருப்பது தெரிந்து, ஸ்ரீராதையின் தோழிகள்,
"நாங்கள் யமுனையில் இறங்கி, மோதிரத்தை தேடி எடுத்து கொண்டு வருகிறோம்"
என்று சொல்லி ராதையை அனுப்பி, யமுனையில் இறங்கி தேட ஆரம்பித்தனர்.






இந்த காட்சியை கண்ட கிருஷ்ண சைதன்யர், தானும் கௌரங்கி என்ற ஒரு கோபிகையாக ஆகி விட்டார்.
"மோதிரத்தை நான் தேடி எடுத்து வருகிறேன். ஸ்ரீ கிருஷ்ணரும் ராதையும் உங்களுக்காக காத்து இருப்பார்கள். நீங்கள் எல்லோரும்  செல்லுங்கள்" 
என்று அவர்களையும் ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் செய்ய அனுப்பி விட்டு, தானே யமுனையில் குதித்து மோதிரத்தை தேட ஆரம்பித்தார் கோபியான கௌரங்கி.

தானே ஒரு கோபியாக ஆகி, சமாதியில் லயித்து இருந்தார் சைதன்யர்.
ஒரு வாரம் ஆகி விட்டது... மோதிரம் கிடைக்கவில்லை..

கிருஷ்ண சைதன்யரின் இந்த அனுபவத்தை புரிந்து கொண்ட ஞானியான ராமச்சந்திர கவிராயர், தானும் அதே சமாதி நிலைக்கு சென்று, யமுனையில் தானும் குதித்து, விழுந்த ராதையின் மோதிரம் கிடைத்து விட்டதாக காட்ட, பரம ஆனந்தத்தை அடைந்து சகஜ நிலைக்கு திரும்பினார் கிருஷ்ண சைதன்யர்.

ஞானியின் நிலையை மற்றொரு ஞானி தானே அறிந்து கொள்கிறார். அறிந்து கொள்ள முடியும்.

நம்முடன் ஞானிகள் பழகினாலும், மனித ரூபம் எடுத்து விட்டதால்,
நம்மை போலவே ஞானிகள் கஷ்டப்படுகிறார்கள், சாப்பிடுகிறார்கள், உறங்குகிறார்கள் என்று தோன்றினாலும், "ஞானிகள் வேறு, நாம் வேறு" என்று அறிந்து பழக வேண்டும்.

"நம்மை போன்றவர் தான்" என்று நினைத்து ஏமாற கூடாது.

ஞானிகள் நிலையை, அனுபவத்தை, புலன்களை கொண்டு பார்க்கும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதை இந்த சம்பவத்திலேயே நாம் புரிந்து கொள்ளலாம்.

ஞானியை புரிந்து கொள்ள முடியாது என்பது ஒரு புறம் இருக்க,
இதை விட இன்னொரு ஆச்சர்யம்..
ஞானியை ஆச்ரயித்த ஜனங்களையும் உலகத்தார்களால் புரிந்து கொள்ள முடியாது.
பல கோடி புண்ணியங்களின் பலனாக, வைதீக லக்ஷணம் கொண்ட மகாத்மாவை, கோடியில் சிலர் ஸத்குருவாக அடைகிறார்கள்.

இப்படி வைதீக பூரணமான ஞானியான ஸத்குருவை அடைபவர்களையும், இந்த உலகில் உள்ள ஜனங்களால் புரிந்து கொள்ளவே முடியாது.

உலகத்தில் இருக்கும் மற்றவர்களை போல, இவர்கள் இருப்பதில்லை.
அன்பே (ப்ரேமை) உருவான, தெளிந்த ஞானம் உடைய, பகவானை நாம் நெருங்கி சென்று பார்த்தாலேயே,
அவருக்காக நாம் வாழ வேண்டும், அவருக்காக நாம் இருக்க வேண்டும் என்று மனம் மாறி விடும்.



இந்த அன்பு 'பகவானிடத்தில்' மட்டும் தான் ஏற்படும் என்று நினைத்து விட கூடாது...
நமக்கு பகவானை காட்டும் 'உத்தம குருவை' பார்த்தாலும் இதே போன்ற மனநிலை நமக்கு ஏற்பட்டு விடும்.
அன்பு எல்லையில்லாமல் ஊற்றெடுக்கும்.

ஆழ்வார்கள், பகவானிடம் ஏற்பட்ட இந்த ஈர்ப்பால், "எனக்கு உள்ள ஆசைக்கு இறுக கட்டி கொள்வேன்... கடித்து விழுங்கியே விடுவேன்" என்ற அளவுக்கு அன்பு மிகுதியால் பாடுகிறார்கள்...
இதே போன்ற எல்லையில்லா அன்பு, ஸத்குருவை பார்த்தாலும் தோன்றும்.

ஸத்குருவை அடைந்த இவர்களும், மற்றவர்கள் போல குடும்பம் நடத்துகிறார்கள்.. படிக்கிறார்கள்..  கஷ்டப்படுகிறார்கள்.. சிரிக்கிறார்கள்.. வேலைக்கு செல்கிறார்கள்.
என்னதான் இவர்கள் உலகத்தில் பழகினாலும், 'இவர்கள் வேறு மாதிரி தான் இருக்கிறார்கள்' என்று சாதாரண ஜனங்களுக்கு தோன்றுகிறது.
குருவையே தியானத்து கொண்டு,
குரு கொடுத்த பாகவதத்தையே எப்பொழுதும் படித்து கொண்டு இருக்கும் இவர்களுக்கும், வாழ்க்கையில் 'துக்கம் ஏற்படுகிறது, சுகம் ஏற்படுகிறது'

எத்தனை பெரிய துக்கம் வந்தாலும், சுகம் வந்தாலும், ஏதோ ஒரு சக்தி இவர்களுக்கு உள்ளேயே ரகசியமாக இருந்து கொண்டு, ஏதோ ஒரு 'ஆனந்தத்தை, தைரியத்தை' கொடுத்து கொண்டே இருக்கிறது.

அதுவே அவர்களை எந்த நிலையிலும், விடாமல் பக்தி செய்ய வைக்கிறது..
"பாகவதம் பாகவதம் என்று இதை கட்டி கொண்டு அழுகிறாயே!! என்ன கிழித்து விட்டாய்?.. " என்று கூட கோபத்தில் கேட்டு விடுவார்கள்.

"ஏன் இப்படி இருக்கிறோம்?" என்ற கேள்விக்கு ஸத்குருவின் கிருபைக்கு பாத்திரமான அவர்களால் கூட பதில் சொல்ல முடியாது...

"பாகவதம் படித்து என்ன பலன்? என்று என்னிடம் கேட்டு ப்ரயோஜனமில்லை.
நான் ஏன் படிக்கிறேன்? என்று என்னிடம் கேட்காதே..
உலகத்தில் என்ன தான் சகஜமாக பழகினாலும், ஏதோ ஒன்று எனக்குள்ளே உட்கார்ந்து கொண்டு இப்படி செய்ய வைக்கிறது... 
உனக்கு பதில் வேண்டுமென்றால், நேராக என் குருவிடம் சென்று கேள்"
என்று சொல்லி விட வேண்டுமாம்.
அதுவே உண்மையும் கூட.



சாதாரண ஜனங்களுக்கு, ஞானியான குருவை ஆச்ரயித்த பக்தனையே எளிதில் புரிந்து கொள்ள முடியாத போது,
ஒரு உண்மையான ஞானியை, நம் புலன்களை கொண்டு பார்த்து, புரிந்து கொண்டு விட்டேன் என்று நினைத்து விட முடியுமா!!

ஞானியின் செயலைஞானியின் அனுபவத்தை,
புலன்கள் வழியாகவே பார்க்கும் அஞானிகளான சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ளவே முடியாது.

சாதாரண ஜனங்கள் கஷ்டம் வர கூடாது என்பதற்காக பல முயற்சிகள் செய்வார்கள்.
கஷ்டம் வந்தால் கவலைப்படுவார்கள். தைரியத்தை இழப்பார்கள். 

கஷ்ட காலத்திலும் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாமல் தவிப்பார்கள்.

உத்தம ஞானியை குருவாக ஆச்ரயித்த பக்தன், அஞானியாக இருந்தாலும், கஷ்டம் வந்தாலும் கலங்காமல், ஏதோ ஒரு சக்தி உள்ளிருந்து காக்கிறது என்று மட்டும் உணர்ந்து வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்கிறான்.

உத்தம ஞானியோ, புலன்களால் உந்தப்பட்டு, மனதால் ஏற்படும் எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல், தெய்வ சிந்தனையுடனேயே எப்பொழுதும் இருக்கின்றனர்.

உலகில் கோடீஸ்வரனுக்கும் வியாதி உண்டு, மரணம் உண்டு, துக்கம் உண்டு.

வாழ்க்கை (சம்சாரம்) என்றாலே அதில் துக்கமும் உண்டு, சுகமும் உண்டு.

சாதாரண ஜனங்கள், துக்கத்தை கண்டு அஞ்சுகின்றனர்.
துக்கம் வரக்கூடாதே என்று அஞ்சுகின்றனர்

வரும் துக்கத்திலும் நிதானமாக, ஆனந்தமாக மனதை ஆக்கி கொள்ள, ஸத் சங்கமே வழி.

ஆனந்தத்தையே எப்பொழுதும் அனுபவிக்கிறார்கள் 'ஞானிகள்'.

உத்தம குருவின் கருணைக்கு பாத்திரமான பக்தன்,
 அஞானியாக இருந்தாலும்,
குடும்ப கடமைகளை செய்து கொண்டிருந்தாலும்,
அவன் உள்ளிருந்து அனுபவிக்கும் ஆனந்தமும், குருநாதரின் நினைவும், அவனை வேறுபடுத்தி காட்டி விடுகிறது..
ஞானியை போன்று இவர்களும் சுகம் துக்கம் இரண்டையும் குருவின் அணுகிரஹ பலத்தால், சமமாக பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

சுகம் வந்தாலும் அதிகமாக குதூகலிக்காமல்,
துக்கம் வந்தாலும் எல்லை மீறி கோபமோ துக்கமோ ஏற்படாமல்,
அஞானியாக இருந்தும், இவர்கள் சம நிலையில் இருக்கிறார்கள்.



சுகத்தையும், துக்கத்தையும் சமமாக பார்க்கும் இந்த அனுபவத்தை ஏப்படி அஞானியாக இருந்தும், இவர்கள் அடைகிறார்கள்? என்று கண்டுபிடித்து, அதற்கு காரணமான அந்த ஆத்ம ஞானியை நாமும் சரண் அடைவோமே என்று சாதாரண ஜனங்கள் அனைவரும் நினைக்க வேண்டும்..

ஸத் சங்கத்தை, நாம் அனைவரும் நாட வேண்டும்.

ஸத் சங்கத்தில் அஞானியாக இருக்கும் ஜனங்கள் கூட, வைதீகமான ஞான பூர்ணனான ஸத்குருவை ஆச்ரயித்தவர்கள் என்பதை மறக்க கூடாது.

ஸத் சங்கத்தை நாம் நாடு செல்லும் போது, நமக்காக அந்த ஞான குரு நன்மை தேடி வருவார்.
நமக்கும் ஞான அனுபவங்கள் ஏற்படும்.

உலக வாழ்க்கையில் ஏற்படும் துக்கங்களை எதிர்கொள்ள,
துக்க காலங்களிலும் ஆனந்தம் பாதிக்க படாமல் வாழ,
ஸத் சங்கத்தை, வைதீகமான ஞானியான ஸத்குருவை நாம் அனைவரும் ஆச்ரயிக்க வேண்டும்.

வாழ்க ஹிந்துக்கள்.

வாழ்க ஞானிகள்.  வாழ்க ஞானிகளை தொடரும் பக்தர்கள்.


Monday 26 August 2019

யாருக்கு தெய்வம் தரிசனம் கொடுக்கிறார்? ரிதகும் சத்யம்... என்ற பிரார்த்தனை இதற்கு பதில் சொல்கிறது. உள்அர்த்தம் தெரிந்து கொள்வோமே...

யாருக்கு தெய்வம் தரிசனம் கொடுக்கிறது?

'சத்தியம்' என்றால் "உண்மை" என்று பொருள்.

"சத்தியம்" ஒரு இடத்தில் மட்டும் இருந்தால் போதாது. இரண்டு இடத்தில் இருக்க வேண்டும். 
1. சத்தியம் உள்ளுக்குள்ளும் இருக்க வேண்டும். (அதாவது மனத்திலும் இருக்க வேண்டும்).
2. சத்தியம் வெளியிலும் இருக்க வேண்டும். (அதாவது பேச்சிலும் இருக்க வேண்டும்.)

பகவான் "சத்தியத்துக்கு மட்டும் தான்" கட்டுப்படுகிறார். 

* யாரிடம் உள்ளும் புறமும் சத்தியம் இருக்கிறதோ! அவருக்கு மட்டுமே, தெய்வம் கட்டுப்படுகிறார்.
* யாரிடம் உள்ளும் புறமும் சத்தியம் இருக்கிறதோ! அவருக்கு மட்டுமே, தெய்வம் இருப்பது புரிகிறது. 
* யாரிடம் உள்ளும் புறமும் சத்தியம் இருக்கிறதோ! அவருக்கு மட்டுமே, தெய்வ தரிசனம் கிடைக்கிறது.

உள்ளுக்குள் என்ன நினைக்கிறாமோ, அதையே பேச வேண்டும்.




நாம் "சத்தியத்தில்" இருக்க வேண்டும். இதுவே, தெய்வத்தை பார்க்க முதல் தகுதி

உள்ளும் புறமும் சத்யம் இருந்தால், அதற்கு பெயர் "ஆர்ஜவம்" என்று சமஸ்க்ரிதத்தில் சொல்கிறோம்.

உள்ளுக்குள் "தெய்வநம்பிக்கையுடன்" இருந்து கொண்டு,
வெளி உலகில் "நாத்தீகன் போல பேசுபவனுக்கு"
தெய்வ தரிசனம் கிடைக்கவே கிடைக்காது.

அதேபோல,
உள்ளுக்குள் "நம்பிக்கை இல்லாமல்",
வெளியில் நம்பிக்கை உள்ளவனை போல நடிப்பவனுக்கும்,
தெய்வ தரிசனம் கிடைக்கவே கிடைக்காது.

மனிதன் மனிதனை ஏமாற்றி விடலாம். தெய்வத்தை ஏமாற்ற முடியுமா?

நம் உள்ளுக்குள் இருக்கும் சத்தியத்தை தான், சமஸ்க்ரிதத்தில், "ரிதகும்" என்று சொல்கிறோம்.

இந்த சத்தியம் மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதால் "கிருஷ்ண" என்று சொல்கிறோம்.

நாம் வெளிப்படையாக பேசும் சத்தியத்தை தான், சமஸ்க்ரிதத்தில், "சத்யம்" என்று சொல்கிறோம்.

இந்த சத்தியம் பேசும் போது மற்றவர்களுக்கு தெரிவதால், "பிங்களம்" என்று சொல்கிறோம்.

"உள்ளும் புறமும் நாராயணனே இருக்கிறார்" என்று பார்த்த பிரகலாதனை, ஹிரண்யகசிபு மிரட்டினான்.
வெளியில் இருக்கும் தூணை காட்டி "இதில் நாராயணன் இருக்கிறானா?" என்று கேட்க, 

"என் உள்ளில் இருக்கும் நாராயணன் வெளியிலும் இருக்கிறார்" என்று தன் பிஞ்சு விரலை காட்டி சொல்ல, யாரிடம் சத்தியம் உள்ளும் வெளியும் இருக்கிறதோ, அவனுக்கு கட்டுப்படும் பகவான், பிரகலாதன் காட்டிய தூணிலிருந்து வெளிப்பட்டு விட்டார்.

இதையே இந்த மந்திரம் நமக்கு சொல்கிறது. 
"நீயும் சத்தியமாக இரு. உள்ளும் புறமும் சத்யமாகவே இரு. அப்படி இருந்தால், உனக்கும் தெய்வ அனுக்கிரஹம், தரிசனம் கிடைக்கும்" 
என்று சொல்கிறது இந்த அருமையான மந்திரம்...




சந்தியா வந்தனத்தில் உள்ள அற்புதமான பிரார்த்தனை இதோ:



Rithagum sathyam
para brahma purusham
Krishna pingalam,
Oordhwareytham
viroopaksham
Viswa roopaaya vai nama

பரப்ரம்மத்தையே 
மனதில் நினைத்து (ரிதகும்) கொண்டு,   
வாக்கினாலும் அவரை பற்றியே பேசி (சத்யம்) கொண்டு  நீ வாழ ஆரம்பித்தால்,
தன்னை மறைத்து (கிருஷ்ண) கொண்டு இருக்கும் பரப்ரம்மம், தன்னை வெளிக்காட்டி (பிங்களம்) தரிசனம் தந்து விடுகிறார்.
உள்ளும் புறமும் உண்மையுடன் பரப்ரம்மத்தையே தியானிக்கும் அப்படிப்பட்ட யோகிகள், உலகையே தாங்கும் (விரூபாக்ஷ) பரவாசுதேவனை,
தங்கள் யோக பலத்தால், நெற்றியில் (ஊர்த்வரேதம்) தரிசித்து நமஸ்கரிக்கிறார்கள்.
இங்கு புருஷம் என்ற சொல்லை கொண்டு பரப்ரம்மத்தை குறிக்கும் போது, யார் அந்த புருஷன்? என்ற கேள்விக்கு வேதமே பதில் சொல்கிறது..
தெரிந்து கொள்ள இங்கு படிக்கவும்.

"ரிதகும் சத்யம் பரப்ரம்ம புருஷம்..." என்ற பிரார்த்தனையை நாம் தினமும் செய்யும் போது,
"உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல், எண்ணமும், பேச்சும் ஒன்றாக, சத்யத்தில் இருந்தால், நமக்கும் தெய்வம் தரிசனம் தருவார்"
என்று ஞாபகப்படுத்தும் பிரார்த்தனை இது.

பகவான் அனைவருக்கும் தன் தரிசனத்தை காட்டி கொள்ள பிரியப்படுவதில்லை.


நாராயணன் மட்டுமல்ல, பொதுவாக தேவர்கள் கூட, மனிதர்கள் கண்களுக்கு தெரியாமல், மறைந்து இருப்பதில் தான் பிரியப்படுகின்றனர்.

சில மதங்களில் "இறைவன் அரூபமாகவே இருக்கிறார். ஒரு பொழுதும் உருவம் ஏற்க மாட்டார்" என்று இறைவனை பற்றி நினைக்கிறார்கள்.

"எல்லாம் வல்ல இறைவனுக்கு, உருவம் ஏற்க முடியாது" என்று தெய்வத்தின் பெருமையை குறைத்து சொல்வதை ஹிந்து தர்மம் ஏற்பதில்லை.
"எல்லாம் வல்லவனுக்கு, ஏதுவும் முடியும்" என்று சொல்வதே ஹிந்து தர்மம்.

உலகில் உள்ள 'நம்மை போன்றவர்களுக்கு மட்டும் தான் பெருமாளின் தரிசனம் எளிதில் கிடைப்பதில்லை' என்று நாம் நினைத்து விட கூடாது...

மேல் லோகமான சொர்க்கத்தில் உள்ள தேவர்களுக்கு கூட அவ்வளவு எளிதில் பகவான் தரிசனம் தருவதில்லை.

"ஹிரண்யாகஷன், ராவணன், கம்சன்" போன்ற அசுரர்கள், ராக்ஷசர்கள் தேவர்களை துன்புறுத்திய போது,
பாற்கடல் சென்று பார்த்தும், மஹா விஷ்ணு தேவர்களுக்கு தரிசனம் தரவில்லை.
ப்ரம்ம தேவனிடம் சென்று தன் கஷ்டங்களை சொல்ல,
பிரம்மாவிடம் மட்டும்,
'தான் அவதாரம் செய்து தேவர்களுக்கு அபயம் தருவேன்'
என்று சொல்லி விட்டார் பரவாசுதேவன் நாராயணன்.
'நாம் செய்யும் அனைத்து  பிரார்த்தனைகளுக்கும் கட்டாயம் பலன் தந்து விடுவார்' நாராயணன்.


புத்ர பாக்கியம் வேண்டும்,
எதிரி அழிய வேண்டும், 
கல்யாணம் நடக்க வேண்டும்,
வேலை கிடைக்க வேண்டும்,
என்று நாம் செய்யும் எந்த  பிரார்த்தனைக்கும்
மறைந்து (கிருஷ்ணனாக) இருந்தே பலன் கொடுத்து விடுகிறார் நாராயணன்.

அர்ச்சா அவதாரத்தில் தரிசனம் தரும் பகவான், நேரிடையாக தன்  வ்யூஹ தரிசனம் தருவதில்லை.
வ்யூஹ "தரிசனம்" மட்டும் அத்தனை எளிதில் தருவதில்லை.
தன் தரிசனத்தை 'வெளிப்படையாக' (பிங்களம்) காட்டுவதற்கு, 
பகவான் நம்மிடம் முக்கியமான ஒன்றை எதிர்பார்க்கிறார்.

"நம் எண்ணமும் (ரிதகும்), செயலும் (சத்யம்) 
ஒன்றாக இருக்கிறதா? என்னை பார்க்க வேண்டும் என்று உண்மையில் நினைக்கிறானா? விரோதமாக இருக்கிறதா?"
என்று பார்க்கிறார் பகவான்.
"சார், உங்களை தான் நம்பி இருக்கேன்" என்று பெரிய வேலையில் இருக்கும் மனிதனை பார்த்து ஒருவன் சொல்கிறான்.

"இவன் உண்மையிலேயே மனதில் இப்படி தான் நினைக்கிறானா?" என்று அறிந்து கொள்ள முடியாத அவர், அவன் தேன் ஒழுக பேசும் பேச்சை நம்பி விடுகிறார்.

உலகில் பெரும்பாலான மக்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களாக தான் உள்ளனர்.


"உண்மையில் மனதுக்குள் என்ன நினைக்கிறான்?" என்று கண்டுபிடிக்க முடியாததால், ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அழகான பேச்சினால் ஏமாற்றி விடுகிறான்.
ஆனால்,
இதயத்தின் எண்ணங்களையும் கவனிக்கும், பரமாத்மாவை ஏமாற்ற முடியுமா?

"நாராயணனே கதி",
"நமோ நாராயணா" என்று சொன்னாலும்,
"எனக்கு கடவுளை காட்டு" என்று பிடிவாதம் செய்தாலும்,
பகவான் கேட்பவனின் வாக்கை (சத்யம்) மட்டும் கவனிப்பதில்லை, அவன் நெஞ்சில் உள்ள எண்ணத்தையும் (ரிதகும்) கவனிக்கிறார்.

திருப்பதி ஏழுமலையானை பார்த்து "நாராயணா... என்னை காப்பாற்று" என்று சொல்லி விட்டு,
இன்னொரு கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் தெய்வத்தையும் பார்த்து "நீயே கதி... என்னை காப்பாற்று" என்று சொல்லும்,
திட விசுவாசம் இல்லாதவர்கள் தான்உலகில் அதிகம் காணப்படுகின்றனர்.

"ஒரே தெய்வம்", அவரிடம் மட்டுமே "சரணாகதி" என்று செய்பவனே உண்மையான பக்தன்.
ஹனுமான் "ஸ்ரீ ராமரே கதி" என்று இருந்தார், இருக்கிறார்..
அவருக்கு சிவபெருமான், இந்திரன் போன்றவர்கள் மீது வெறுப்பு கிடையாது.. அவர்களுக்கான மரியாதை செய்வார்...
ஆனால்,
"சரணாகதி" என்று வரும் போது,
"என் தெய்வம்" என்று வரும் போது,
ஸ்ரீ ராமரை தவிர, வேறு யாருக்கும் அவர் மனதில் இடம் கிடையாது..


சிவபெருமானுக்கு மரியாதை தருவார், ஆனால் மனதில் இடம் கிடையாது என்பதில் ஆச்சரியமில்லை...
நாராயணனே ஸ்ரீ ராமராக வந்தார். 
நாராயணனே பிறகு ஸ்ரீ கிருஷ்ணராகவும் வந்தார்.
கிருஷ்ணருக்கும் பெருமாள் என்ற மரியாதை உண்டே தவிர, அவரிடம் கூட சரணாகதி செய்ய மாட்டேன் என்று இருந்தார் ஹனுமான்.
அத்தகைய சரணாகதியே உண்மையானது, சுத்தமானது...

"உள்ளும் (ரிதகும்), புறமும் (சத்யம்), ராமரே கதி" என்று இருக்கும் ஹனுமான் போன்ற பக்தர்களுக்கு, ஸ்ரீ ராமர் ப்ரத்யக்ஷம் ஆகி காட்சி தருகிறார்.
  • விதண்டாவாதிக்கும்,
  • 'இந்த தெய்வத்தையும் கும்பிடுவோம்' எதற்கும் 'அந்த தெய்வத்தையும் கும்பிடுவோம்' என்று அலைபவர்களுக்கும்,
  • வேறு பலன்களுக்கு ஆசைப்பட்டு பிரார்த்திப்பவனுக்கும்,

     பலன்களை தரும் பகவான், தன் தரிசனத்தை தருவதில்லை.
எந்த மகாத்மாவுக்கு, எண்ணத்திலும், வாக்கிலும் நாராயணனே நிரம்பி உள்ளாரோ, அத்தகைய மகாத்மாவுக்கு மறைந்து (கிருஷ்ண) இருக்கும் பரமாத்மா, தன் தரிசனத்தை வெளிக்காட்டுகிறார் (பிங்களம்).

நாராயணனிடம் பக்தி இல்லாமல் போனாலும், நாம் செய்யும் செயல்கள் உள்ளும் புறமும் ஒன்றாக இருந்தால், நம்மை கண்டு பரமாத்மா நாராயணன் சந்தோஷப்பட்டு, தன் மீது பக்தி ஏற்பட செய்து, தன் தரிசனத்தையும் கொடுத்து விடுவார்.

"சத்யமே" வடிவான பெருமாள், நம்மிடம் எதிர்பார்ப்பதும் "சத்யமே"..

உள்ளும் புறமும் சத்யமாக இருப்பவர்கள், இறை தரிசனம் பெறுகிறார்கள்.

"தசரதர்" அத்தகைய ஒரு மகாத்மா என்று பார்க்கிறோம்.
எந்த நிலையிலும், சத்தியம் மீறாதவர் தசரதர்.
தேவர்களுக்கு சார்பாக போர் செய்த போது, தசரதரின் தேரோட்டி அடிபட்டு விட, தக்க சமயத்தில் கைகேயி தேர் ஒட்டி உதவினாள்.
இவளுக்கு 2 வரங்களை கொடுப்போம் என்று எண்ணினார்.
"என்ன கேட்டாலும் தருகிறேன்" என்று சத்தியம் செய்தும் கொடுத்து விட்டார்.

எண்ணமும், செயலும் மாறுபடாத தசரதரிடம், மகன் ராமனை 14 வருடம் காட்டுக்கு செல்லுமாறு வரமாக கேட்டு விட்டாள் கைகேயி..
"ராமரை விட்டு பிரிந்தால், உயிரே பிரிந்து விடும்" என்று தெரிந்தாலும், உள்ளும் (ரிதகும்), புறமும் (சத்யம்) சத்தியத்துக்காக வாழும் தசரதர், கைகேயி கேட்ட வரத்தை கொடுத்தார்.
சத்தியத்துக்காக உயிரையே கொடுத்தார் தசரதர்.

தாய் தந்தை அற்ற பரமாத்மா, தனக்கு ஒரு தந்தை வேண்டுமே!! என்று தேடி கண்டுபிடித்த உத்தமர் அல்லவா தசரதர்.

எண்ணத்திலும், செயலிலும் சத்தியத்துக்காக வாழும் தசரதரை தன் தந்தையாக ஏற்றார் பரமாத்மா.
தசரதர் பெருமை மகத்தானது!!


அதே போல, மற்றொரு உத்தமர் "வசுதேவர்".
தன் தங்கை தேவகியின் 8வது குழந்தை, தன் மரணத்துக்கு காரணம் ஆகும் என்ற அசரீரி கேட்டதும்,
வெளியில் தன் தங்கைக்காக தானே ரதம் ஓட்டி வருவது போல நடித்த கம்சன், தன் உயிருக்கு இவள் மூலம் ஆபத்து என்று தெரிந்தவுடன் வாளை தூக்கி வெட்ட வந்தான்.
அன்று தான் தாலி கட்டி மனைவியாக ஏற்று கொண்டிருந்தார் வசுதேவர்.
தன் மனைவி என்ற உறவு இருப்பதால், கம்சன் காலில் விழுந்து, மன்றாடினார்.

"அசரீரி சொன்னது நடக்குமோ, நடக்காதோ என்று கூட தெரியாத பட்சத்தில் தங்கையை வெட்ட வேண்டாம்" என்று கெஞ்சினார்.

"தன் சுகமே முக்கியம்" என்ற அசுர குணம் கொண்ட கம்சனுக்கு, வசுதேவர் சொன்ன எதுவும் காதில் விழவில்லை.

தேவகியை எப்படியாவது அந்த சமயத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த வசுதேவர், தனக்கு பிறக்கும் குழந்தைகளை கொடுத்து விடுகிறேன் என்று சொல்ல, சமாதானம் அடைந்தான் கம்சன்.

இருந்தாலும் நம்பிக்கை இல்லாததால், கல்யாணம் ஆன அன்றே இருவரையும் ஜெயிலில் தள்ளி சிறைப்படுத்தி விட்டான்.
"பிறக்கும் குழந்தைகளை கொடுத்து விடுகிறேன்" என்று எண்ணத்தில் தோன்றி, வாக்கு கொடுத்து விட்ட வசுதேவர், தனக்கு பிறந்த முதல் குழந்தையை நேராக கம்சனிடம் கொடுக்க,
சிறிதும் யோசிக்காமல், தன் மருமகன் என்ற பாசம் கூட இல்லாமல், அங்கு இருந்த கருங்கல்லில் குழந்தையை அடித்து கொன்று விட்டான்.


இது போன்று 6 குழந்தைகள் தேவகி பெற, கம்சன் கொன்று விடுவான் என்று தெரிந்தும், வசுதேவர் தன் குழந்தைகளை சத்தியத்துக்காக கம்சனிடம் கொடுத்தார்.
மனதால் கொடுத்த வாக்குக்காக, தன் குழந்தையை தியாகம் செய்ய துணிந்த வசுதேவருக்கு, மகனாக பரமாத்மா வர ஆசைப்பட்டதில் ஆச்சரியமில்லையே...

எண்ணமும், வாக்கும் ஒன்றாக இருக்கும் போது, பரமாத்மாவின் தரிசனம் நிச்சயமாகிறது.

தெய்வ தரிசனம் பெற்ற மகான்கள் இன்றும் இந்த பாரத நாட்டில் உள்ளனர்.
கோடியில் ஒருவர் மட்டுமே, மனதில் நினைப்பதையே செயலிலும் காட்டுகின்றனர்.
அத்தகைய மகான்களுக்கு தெய்வ தரிசனம் கிட்டுகிறது.

வாழ்க ஹிந்துக்கள்.

ஹிந்து தர்மத்தில் இல்லாத விஷயங்கள் பிற போலி மதங்களில் இல்லை.

பிற மதங்களை "மனிதர்கள்" முயற்சி செய்து காக்கின்றனர்.
1000 வருடங்கள் வெளி மதங்கள் உள்ளே புகுந்து ஆள நினைத்தாலும், ஹிந்து தர்மத்தை "தெய்வங்களே அவதாரம்" செய்து காக்கின்றனர்.

ஹிந்துவாக வாழ்வதே நமக்கு பெருமை.




Afternoon Sandhya Vandanam: 

Morning Sandhya Vandanam: 



Evening Sandhya Vandanam