Followers

Search Here...

Saturday 13 June 2020

பாசுரம் (அர்த்தம்) - சூழ்ந்தகன்று ஆழ்ந்துயர்ந்த... நம்மாழ்வார் வைகுண்டம்) பரமபத நாதனான நாராயணனை நினைத்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

சூழ்ந்து அகன்று ஆழ்ந்துயர்ந்த
முடிவில் பெரும் பாழேயோ !
சூழ்ந்து அதனில் பெரிய பர
நன் மலர் சோதீயோ !
சூழ்ந்து அதனில் பெரிய சுடர்
ஞான இன்பமேயோ !
சூழ்ந்து அதனில் பெரிய என்
அவா அறச் சூழ்ந்தாயே  !
- திருவாய்மொழி (நம்மாழ்வார்)

** பிரளய காலத்தில் உலகம் இருண்டு கிடக்க,
** மோக்ஷம் அடையாத ஆத்மாக்கள் உறங்கி கிடக்க,
** சில ஆத்மாக்கள் கைவல்யம் என்ற மோக்ஷத்தை அனுபவித்து கிடக்க,
** பரமபதம் என்ற மோக்ஷத்தை அடையும் (அடையபோகும்) தன்னை போன்ற விஷ்ணு பக்தர்களை பரவாசுதேவன் நாராயணன் அரவணைத்து கொள்கிறார்"
என்று பரமபதத்தின் பெருமையை பாடுகிறார் நம்மாழ்வார்.
திருவாய்மொழியில் உள்ள அருமையான பாசுரம்.




சூழ்ந்து அகன்று ஆழ்ந்துயர்ந்த
முடிவில் பெரும் பாழேயோ !
என்று சொல்லும் போது,
"ப்ரம்மாவின் ஆயுசு முடிந்த பின், பிரளய ஜலத்தால், 14 உலகங்களும் சூழப்பட்டு, அழிந்து போய், பேரிருள் சூழ்ந்திருக்கும் நிலையை" சொல்கிறார் ஆழ்வார்.
"தமஸ்" என்ற சமஸ்க்ரித சொல்லையே இங்கு தமிழில் "பாழ்" என்று சொல்கிறார் நம்மாழ்வார்.
"பாழ்" என்றால் "இருள்" என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
ஆத்மாவுக்கு அழிவே இல்லை.
ஆதலால்,
உலகங்கள் அழிந்தாலும், பரமாத்மா நாராயணன் அழிவதில்லை, கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களும் (நாமும்) அழிவதில்லை.

"மோக்ஷம் அடைந்த ஜீவ-ஆத்மாக்கள், பரமாத்மாவை அடைந்து இருப்பது போல,
பிரம்மாவின் ஆயுசு முடிந்தும், இன்னமும் மோக்ஷம் அடையாத ஜீவாத்மாக்களும் அழியாமல் பரமாத்மா நாராயணனிடம் 'பாழ்' என்ற இருள் நிலையில், 'தான் எங்கு இருக்கிறோம்?' என்றே அறியாமல் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள்"
என்கிறார்.

இப்படி மகா பிரளய காலத்தில், பரமாத்மாவோடு இருந்த போதிலும், தான் எங்கு இருக்கிறோம்? என்றே அறியாமல்" மோக்ஷம் அடையாத ஜீவாத்மாக்கள் உறங்கி கொண்டு இருக்கிறார்கள்.

"மீண்டும் உலக ஸ்ருஷ்டி செய்ய பரவாசுதேவன் சங்கல்பிக்கும் வரை, 'தமஸ் என்ற பாழ் இருளில்' இந்த ஜீவாத்மாக்கள் இருக்கிறார்கள்"
என்கிறார்.
அடுத்ததாக,
சூழ்ந்து அதனில் பெரிய பர
நன் மலர் சோதீயோ !
என்று சொல்லும் போது,
"14 உலகங்களும் அழிந்த நிலையிலும், மோக்ஷம் அடையாத ஜீவ ஆத்மாக்கள் அழியாமல் 'நன் மலர் ஜோதியாக' பிராகாசித்து கொண்டே நாராயனிடம் ஒடுங்கி கிடக்கிறது.
ஆனால், ஒரே ஒரு குறை.
அந்த மோக்ஷம் அடையாத ஜீவன்கள் இருளில் (பாழேயோ) கிடக்கிறார்கள்"
என்கிறார் நம்மாழ்வார்.

அதாவது,
"'நாராயணிடம் தான், நாம் இருக்கிறோம்' என்று அறியாமலேயே, மோக்ஷம் அடையாத ஜீவாத்மாக்கள் 'தமஸ்' என்ற நிலையிலேயே கிடக்கிறார்கள்"
என்கிறார்.



"குழந்தை தன் தாய்மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் போது, தாயின் அரவணைப்பை, சுகமான தூக்கத்தை அனுபவித்தாலும், தான் தாயின் மடியில் தான் தூங்குகிறோம் என்று தெரியாமலேயே (தமஸ்) இருப்பது போல,
மோக்ஷம் அடையாமல் இருக்கும் ஜீவாத்மாக்கள், பிரளய காலத்தில் நாராயணின் இதயத்திலேயே உறங்கி கொண்டு இருந்தாலும், அவரிடம் தான் நாம் இருக்கிறோம் என்று அறிந்து கொள்ளாமல் தூங்கி கொண்டு இருக்கிறார்கள்"
என்கிறார் ஆழ்வார்.

பிரளய காலத்தில் மட்டுமல்ல, நாம் தினசரி தூங்கும் போது கூட, இந்த சேர்க்கை அனைவருக்கும் நடக்கிறது.

"தூங்கினால் சுகமாக உள்ளது" என்று மட்டுமே அறிகிறோம்.
ஆனால், "யார் மடியில் உறங்கினோம்?..யார் சுகமான தூக்கத்தை கொடுத்தார்கள்?"
என்று அறியாமலேயே தூங்குகிறோம்
என்று சாஸ்திரம் சொல்கிறது.

அதனால் தான் தூக்கத்தை "தாமஸ" குணம் என்று சொல்கிறோம்.
புத்தி விழிப்பு இல்லாத நிலை அது.

"தாமஸ்" விரட்டி அடிக்கப்பட வேண்டிய விஷம்.
மூளையை மழுங்க செய்வது தாமஸ். 'இருள் போன்றது' தாமஸ்.
ஹிந்துக்கள் இந்த தாமஸிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அடுத்ததாக,
சூழ்ந்து அதனில் பெரிய சுடர்
ஞான இன்பமேயோ !
என்று சொல்லும் போது,
"உடல் நானல்ல..ஆத்மாவே நான்" என்ற ஞானத்தை (அறிவை) மட்டும் பெற்றவர்கள், பிரளய காலத்தில், சம்சாரத்தில் இருந்து முழு விடுதலை அடைந்து, கைவல்யம் என்ற மோக்ஷத்தை அடைந்து 'சுதந்திர காற்றை' (ஞான இன்பம் என்று சொல்கிறார்) அனுபவிக்கிறார்கள்"
என்று சொல்கிறார்.

இரண்டு விதமான மோக்ஷம் சொல்லப்படுகிறது.
ஒன்று : கைவல்யம் (விடுதலை)
மற்றொன்று : பரமபதம் என்ற வைகுண்டம் (வீடு)

"உடல் நானல்ல..ஆத்மாவே நான்" என்ற அத்வைத ஞானத்தை (அறிவை) மட்டும் பெற்றவர்கள் "நானே பரமாத்மா" என்ற அனுபவத்திலேயே இருப்பதால், கைவல்யம் (விடுதலை) என்ற மோக்ஷத்தை அடைகிறார்கள்.

உடல் நானல்ல..ஆத்மாவே நான் என்ற ஞானம் அனுபவத்தில் உள்ளதால், 
சம்சாரத்தில் மீண்டும் இவர்கள் பிறப்பதில்லை.

ஜெயில் பல வருடம் சிறை கைதியாக இருந்த ஒருவன், ஒருநாள் விடுதலை பெற்றது போன்ற நிலையே "கைவல்யம்".

சிறையில் இருந்து விடுதலை அடைந்தோமே!!
என்ற சந்தோஷத்தில் இன்பமாக ஊர் முழுக்க அலைபவன் போல,
கைவல்யம் பெற்றவனும் இருக்கிறான்.
இதையே "ஞான இன்பமேயோ" என்று சொல்கிறார்.

"கைவல்யம்" என்ற மோக்ஷத்தை விட, "பரமபதமே" நமக்கு சிறந்தது என்பதால்,
கடைசியாக,
சூழ்ந்து அதனில் பெரிய என்
அவா அறச் சூழ்ந்தாயே  !
என்று சொல்லி பரமபதத்தை நமக்கு காட்டுகிறார் ஆழ்வார்.

அத்வைத ஞானம் பெற்றவன், நானே பரமாத்மா என்று நினைப்பதால், கைலவல்யம் மட்டுமே அடைகிறான்.
அதாவது "விடுதலை" மட்டுமே அடைகிறான்.
ஆனால் "வீடு" போய் சேர்வதில்லை.

ஜெயிலில் பல வருடம் அடைபட்டு, விடுதலை அடைந்தவன், "விடுதலை அடைந்தேன்" என்பதிலேயே திருப்தி அடைவது போல "கைவலயம்".

"உடல் நானல்ல, ஆத்மாவே நான்" என்ற ஞானத்தோடு,
"என் வீடு எது? என் தகப்பன் யார்? என்னை படைத்தவன் யார்?" என்று அறிந்தவன், மோக்ஷம் அடையும் போது, பரமபதம் என்ற வீடு போய் சேருகிறான்
என்கிறார் ஆழ்வார்.

"பரமபதம் என்ற மோக்ஷத்தை அடையும் (அடையபோகும்) தன்னை போன்ற விஷ்ணு பக்தர்களை பரவாசுதேவன் நாராயணன் அரவணைத்து கொள்கிறார்"
என்று பரமபதத்தின் பெருமையை பாடுகிறார் நம்மாழ்வார்.
இதையே
"என் அவா அறச் சூழ்ந்தாயே"
என்கிறார் நம்மாழ்வார்.

பரமபத நாதனான நாராயணனை தொழுவோம்.

குருநாதர் துணை.

No comments: