Followers

Search Here...

Thursday 18 February 2021

வேதம் "இந்திரன், ருத்ரன், நாராயணன்" என்று பலரையும் தெய்வமாக துதிக்கிறது. அப்படி இருக்க, "வேதம் முழுவதுமே நாராயணனாகிய என்னை தான் துதி செய்கிறது.." என்று தெளிவாக, தீர்மானமாக கிருஷ்ண பரமாத்மா ஏன் சொன்னார்? தெரிந்து கொள்வோமே!

ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் பற்றி சொல்லி, அர்ஜுனன் கேட்டான் என்றதும் விஸ்வரூபமும் காட்டிய கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனை பார்த்து சொல்கிறார்.. 

"அர்ஜுனா! வேதங்கள் அனைத்தும் என் ஒருவனை பற்றி மட்டுமே சொல்கிறது. வேதத்தால் அறிய பட வேண்டியவனும் நானே

என்று அர்ஜுனனை பார்த்து  ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஆச்சர்யமாக சொல்கிறார்.

வேதை: ச ஸர்வை: 

அஹம் ஏவ வேத்ய: |

வேதாந்தக்ருத் 

வேத விதேவ சாஹம் ||

- பகவத்கீதை: 

அத்யாயம் 15: ஸ்லோகம் 15


வேதம், "நாராயணனை" பற்றி மட்டுமா சொல்கிறது?

வேதம், 'இந்திரனை' பற்றியும் சொல்கிறதே?! 

வேதம் 'ருத்ரனை' பற்றியும் சொல்கிறதே?!  

வேதம், 'சகல தேவதைகளை' பற்றியும் சொல்கிறதே?

இப்படி இருக்க, 

'வேதம் முழுவதும் என்னை பற்றி தான் சொல்கிறது' என்று கிருஷ்ண பரமாத்மா எப்படி சொன்னார்?


வேதத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு, பொதுவாக இப்படி ஒரு கேள்வி மனதில் எழுவது சகஜம். 





"வேதத்தை அறிந்து இருந்த அர்ஜுனனுக்கு

சிவபெருமானையே தரிசித்து இருந்த அர்ஜுனனுக்கு

சொர்க்கலோகம் சென்று தேவேந்திரனை பார்த்து இருந்த அர்ஜுனனுக்கு, 

இது போன்ற கேள்வி மனதில் எழவில்லை

என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.


இப்படி ஒரு கேள்வியை, அர்ஜுனன் 'கேட்கவே இல்லை' என்று நாம் பார்க்கிறோம்.


வேதத்தின் வாக்கியங்களை கவனிக்கும் போது, கிருஷ்ண பரமாத்மா சொன்ன ரகசியம் நமக்கு புரியும்.


நாராயணனே 'பரமாத்மா' (பரம்பொருள்) 

என்று பல இடங்களில் வேதம் தெளிவாக சொல்கிறது... 

பரமாத்மாவாகிய ப்ரம்மத்தை, "புருஷன்" என்ற பெயரை கொண்டு " ஏக புருஷ: (அந்த ஆதிபுருஷன் ஒருவரே முதலில் இருந்தார்)" என்கிறது வேதம்.

வேதத்தில் வரும் புருஷ சூக்தத்தில், 'நாராயணனே அந்த புருஷன்' என்று விளக்கி, அந்த 'புருஷனின் பத்னியாக மஹாலட்சுமி (ஹ்ரீஸ்ச தே லட்சுமீஸ்ச பத்னி) இருக்கிறாள்' என்று பரமாத்மாவின் அடையாளத்தை இங்கு தீர்மானிக்கிறது, வேதம்..


நாராயணனே 'பரமாத்மா' (பர), என்று நிரூபிக்கும் வேத வாக்கியங்களாக "நாராயண பரோ ஜ்யோதி: | ஆத்மா நாராயண பர: || நாராயணம் பரம் ப்ரஹ்ம | தத்வம் நாராயண பர: || நாராயண பரோ த்யாதா | த்யானம் நாராயண பர: ||

என்று பல முறை சொல்கிறது வேதம்.


இப்படி 'பர' என்ற சொல்லாலும், 'பரப்ரஹ்ம' என்ற சொல்லாலும், 'புருஷ' என்ற சொல்லாலும் நாராயணனை அழைக்கும் வேதம்,

அந்த ஆதி புருஷனே! ஆயிரக்கணக்கான தலைகளுடன் (அதாவது ரூபங்களுடன்) காட்சி தருகிறார் (ஸஹஸ்ர சீர்ஷா புருஷ:) என்கிறது வேதம். 


அதாவது, 'அவரே பல ரூபங்களாக (இந்திர, ருத்ர, யம..) இருக்கிறார்' என்ற ரகசியத்தை சொல்கிறது.





ஒரு இடத்தில் வேதம், "பிரம்மாவும் நாராயணனே! சிவனும் நாராயணனே! காலமும் நாராயணனே!" (பிரம்மா நாராயண: | சிவ: ச நாராயண: | கால: ச நாராயண: |) என்று தெளிவாக சொல்கிறது..

இன்னொரு இடத்தில் “ஏகோ நாராயணோ ஆஸீத் ந ப்ரம்மா ந ஈசான:” என்று சொல்லும் போது, "பிரளய காலத்தில் பிரம்மாவும் இல்லை சிவனும் இல்லை நாராயணன் ஒருவரே இருந்தார்" என்று வெளிப்படையாக நாராயணனின் பெயரை கூறுகிறது வேதம்.


"அந்த ஆதி புருஷனையே, பல வித பெயர்களில் சொல்கிறேன் (ஏகம் ஸத் விப்ரா: பஹூதா வதந்தி)

என்று வேதமே தெளிவாக சொல்கிறது.

மேற்சொன்ன, இந்த வேத வாக்கியத்தை (ஏகம் ஸத் விப்ரா: பஹூதா வதந்தி! ) நாம் கவனிக்கும் போது, 

கிருஷ்ண பரமாத்மா "அர்ஜுனா! வேதங்கள் அனைத்தும் என் ஒருவனை பற்றியே சொல்கிறது. வேதத்தால் அறிய பட வேண்டியவனும் நானே" என்று சொன்னதன் ரகசியம் புரியும்.


ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!

குருநாதர் துணை...

No comments: