Followers

Search Here...

Saturday 27 March 2021

நமோ என்றால் என்ன? தெரிந்து கொள்வோமே!

"நமோ" என்றால் என்ன? 

'நம:' என்பதே நமோ என்று சொல்கிறோம். 

நம: என்ற சொல், "நான்(ம) எனக்கு இல்லை (ந)" என்று அர்த்தத்தை கொடுக்கிறது.

நம: என்ற சொல், "நான் எனக்கு சொந்தம் இல்லை. நான் பரமாத்மாவுக்கே சொந்தமானவன்" என்ற சரணாகதி புத்தியை கொடுக்கும்.

நம: என்ற சொல் "நான் வாகனம் மட்டுமே. என்னை சாரதியாக இருந்து ஓட்டுபவன் அந்த பார்த்தசாரதியே" என்ற சரணாகதி புத்தியை கொடுக்கும். 




நம: என்ற அக்ஷரத்தின் அர்த்தம் புரிந்து, உணர்ந்து கொள்ளும் போது தான், 

'இனி நாமாக எந்த முயற்சியும் செய்யாமல்.. என்னை சேர்த்து கொள்ள வேண்டிய முயற்சியை பரமாத்மாவே செய்யட்டும். 

என்னை ரக்ஷிக்கும் பொறுப்பு அவர் கையில் இருக்கும் போது, நானும் தனியாக அவரை அடைவதற்கு எதற்காக முயற்சி செய்ய வேண்டும்? 

அவர் எப்போது வருவார் என்று எதிர்பார்த்து காத்து கொண்டே இருப்பதே என் வேலை

என்று சரணாகதியின் உண்மையான நிலை ஏற்பட்டு விடும்.


சரணாகதி லக்ஷணத்தை காட்டும் "நம:" என்ற சொல்லுக்கு நிரூபணம் காட்டினாள் சீதாதேவி. 

ராவணன், ராமபிரான் இல்லாத சமயம் பார்த்து, சீதாதேவியை கடத்தி, இலங்கைக்கு தூக்கி சென்று  விட்டான். அசோக வனத்தில் கடுங்காவல் வைத்து, நரமாமிசம் உண்ணும் ராக்ஷஸிகள் மத்தியில் சிறைப்படுத்தி விட்டான்

தினமும் சீதாதேவியிடம், ஆசைவார்த்தை சொல்லி, ராமபிரானை அவமானப்படுத்தி தன் பெருமையை மெச்சி பேசி, மிரட்டி, கெஞ்சி எப்படியாவது சம்மதிக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

தன் "கற்பு என்ற அக்னியாலேயே" ராவணனை பொசுக்கி விடும் சக்தி இருந்தும், சீதாதேவி பொறுமை காத்தாள்.

தானே தப்பிக்க, சிறு முயற்சியும் செய்யாமல், சீதா தேவி "ராமபிரான் வருவார்" என்று காத்து இருந்தாள்.


ஹனுமான் இலங்கை வந்து போது, சீதாதேவியிடம் "இப்பொழுதே தூக்கி சென்று ராமபிரான் முன் நிறுத்தி விடுகிறேன்" என்று சொல்லியும், பிறர் உதவி வேண்டாம் என்று மறுத்தாள். 

இதுவே சரணாகதி தத்துவம். 





"பகவான் காப்பாற்றுவார்" என்று நிச்சய புத்தி உள்ளவனுக்கு, 'பகவான் காப்பாற்றுவாரோ?' என்ற சந்தேகம் ஏற்படாது. 

'எதற்கும் நாமும் ஒரு சில முயற்சி செய்து வைப்போமே!', "எதற்கும் இன்னொரு கோவிலுக்கும் சென்று பிரார்த்தனை செய்து வைப்போமே!" என்ற சபல புத்தி ஏற்படாது.  


சீதாதேவியை ராவணன் தூக்கி சென்ற போது, ராமபிரானுக்கு சீதாதேவி எங்கு சென்றாள்? என்று கூட தெரியாது.


சரணாகதி செய்த சீதாதேவி, "ராமபிரான் எப்படியும் தான் எங்கு இருக்கிறோம் என்று கண்டுபிடித்து விடுவார், நம்மை காப்பாற்றி விடுவார்" என்று திடநம்பிக்கையுடன் இருந்தாள். 


நம: என்ற சொல்லுக்கு நிரூபணமாக இருந்தாள் சீதாதேவி.


சீதாதேவி சரணாகதி என்றால் என்ன? என்று நமக்கு காட்டினாள்.

குருநாதர் துணை

No comments: