Followers

Search Here...

Tuesday 11 January 2022

ஸ்ரீரங்கம் வா, உனக்கு இடம் தருகிறேன்' என்று பெருமாள் பரகால நாயகியிடம் சொல்கிறார். இருகையில்சங் கிவைநில்லா.. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்

 பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.


இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம்
இலங்கொலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட,பெருவயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்
பெரும் தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங்கு 
ஒரு கை மற்று ஆழி ஏந்தி
உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து
என் பொரு கயல் கண்ணீர் அரும்ப புலவி தந்து
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!
- திருநெடுந்தாண்டகம் (திருமங்கையாழ்வார்)

பெருமாளுடைய மகத்துவம் தெரிந்ததால், அவருடைய பிரிவினால் விரகம் ஏற்பட்டு, உடல் மெலிந்து, நான் அணிந்திருந்த வளையல்கள் கூட என் கையில் நிற்காமல், தானே கழண்டு விழுந்து விடுகிறதே ! (இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம்),

அவர் எப்பேர்பட்டவர் தெரியுமா?

பேரொலி எழுப்பும் அலைகளை உடைய பெருங்கடலில் உள்ள நீரை தன்னுடைய பெரிய வயிற்றில் நிரப்பி கொள்ளும் காளமேகத்தின் நிறத்தை ஒத்து இருப்பார். கருமுகில் போல வண்ணம் உடையவர். (இலங்கொலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட, பெருவயிற்ற கருமுகிலே ஒப்பர் வண்ணம்)

உலகத்தையே உண்டவர். பூமி பிராட்டி மீது அத்தனை அன்பு அவருக்கு, (உலகுண்ட பெருவாயர்) அது போல, பரகால நாயகியான என்னிடத்திலும் பேரன்பு உடையவர். என்னையும் அப்படியே விழுங்கிவிடுவார்.

பெருமாள் ஆசையோடு என்னிடத்தில் பேசுவதற்காக அருகில் வந்தார் (இங்கே வந்து). நானும் குழைந்து குழைந்து அவர் முன் நின்றேன். 

என்னிடம் பேசிக்கொண்டிருந்த பெருமாள், திடீரென்று "சற்று இரு" என்று சொல்லிவிட்டு திரும்பி சென்றார்.

இப்படி எங்கே அவசரமாக செல்கிறார்? என்று கொஞ்சம் எட்டி பார்த்தேன்..

அங்கு பெருமாளை பார்க்க, கூட்டமாக ரிஷிகள் வந்திருந்தனர். 
பல ஆயிரம் வருடங்கள் தவம் செய்து, தவம் செய்து இப்போது பெருமாளை பார்க்க வந்து இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ரிஷிகளுக்கு தன் தரிசனத்தை கொடுக்க பெருமாள் கிளம்பி இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன் !

பெருமாளும் அந்த ரிஷிகளுடன் பேசிக்கொண்டிருந்தார் 

இப்படி என்னை விட்டு விட்டு சென்றுவிட்டாரே! என்ற அசூயை எனக்கு இல்லை. 
அவர்கள் தவத்துக்கு பலனாக பெருமாள் தரிசனம் தருகிறார்  என்று அறிகிறேன்! (பெரும் தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ)

அவர்களிடம் பேசி விட்டு, ரிஷிகளுக்கு, 'ஒரு கையில் சங்கும், ஒரு கையில் கதை ஏந்தி தரிசனமும் கொடுத்தார்.'

(ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி)


இப்படி எப்பொழுதுமே இவரை சுற்றி ரிஷிகள் கூட்டமும், தேவர்கள் கூட்டமும் சூழ்ந்து கொண்டே இருக்க, எனக்கு நேரம் ஒதுக்க பெருமாளால் முடியவில்லையே! என்றதும் என் கண்களில் நீர் வழிய (என் பொரு கயல் கண்ணீர் அரும்ப புலவி தந்து), என்னிடம் பேரன்பு கொண்ட பெருமாள், இத்தனை காரியங்கள் இடையிலும் என்னை திரும்பி பார்த்து விட்டார்.

உடனே என்னை சமாதானம் செய்து, "நம்முடைய ஊர் ஸ்ரீரங்கம் உள்ளது. அங்கு உன்னையும் அழைத்து வைத்து கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றாரே ! (புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!) என்று பரகால நாயகி தன்னிடம் பிரியம் கொண்டுள்ள பெருமாளை நினைத்து உருகி நிற்கிறாள்.

No comments: