Followers

Search Here...

Showing posts with label யாத்திரை. Show all posts
Showing posts with label யாத்திரை. Show all posts

Monday 13 June 2022

திவ்ய தேச யாத்திரை எப்படி செல்ல வேண்டும்? முதன் முதலில் திவ்ய தேச யாத்திரை செய்தவர் யார்? பெருமாள் ஒருவர் தானே! ஒவ்வொரு கோவிலிலும் பெருமாள் எப்படி வித்தியாசப்படுகிறார்? தெரிந்து கொள்வோம்

பக்தன் எப்படி இருக்க வேண்டும்

திவ்ய தேச யாத்திரை எப்படி செய்ய வேண்டும்? யாரை போல செய்ய வேண்டும்? 

ஒரே பெருமாள் தான். 

ஒரே தாயார் தான். 

திவ்ய தேசம், திவ்ய தேசமாக ஒவ்வொரு பெயருடன் பெருமாளும் தாயாரும் ஏன் இருக்கிறார்கள்?


'திவ்ய தேசம் திவ்ய தேசமாக பெருமாள் தாயாரோடு எங்கெல்லாம் இருக்கிறாரோ, அங்கெல்லாம் ஓடி ஓடி சென்று மண்டி கிடப்பான்', பக்தன்.


உறவினரை பார்க்க கிளம்பினாலும், அந்த வழியில் பெருமாள் கோவில் இருந்தால், "சற்று பார்த்து விட்டு போகலாமே" என்று நினைப்பான் பக்தன்.

சரீர பந்துவை பார்க்க ஊருக்கு சென்றாலும், நமது ஆத்ம பந்துவான் பெருமாள் போகும் வழியில் இருந்தால், பக்தனால் பார்க்காமல் எப்படி செல்லமுடியும்?


இப்படி 'பெருமாளையே மண்டி கிடப்பதில் ஏற்படும் சுகம் எதிலும் கிடையாது' என்று பக்தன் நினைப்பான். 

திவ்ய தேச பெருமாளை பார்த்தால் தானே, இந்த அனுபவம் புரியும்.


ஆசையோடு வரும் பக்தன், 'பெருமாள் தம்மிடம் பேசும் அழகையும், தம்மை உபசரிக்கும் அழகையும், தம்மை கொண்டாடுவதையும்' அனுபவிக்கிறான்.


வேறு என்ன வேண்டும் நமக்கு?

பெருமாள், "மோக்ஷம் வேண்டுமென்றால், அஷ்டாங்க யோகம் செய்தாயா?" என்றா கேட்கிறார்.

திருக்கண்டியூர், திருவரங்கம், திருவெள்ளியங்குடி என்று திவ்ய தேசம் திவ்ய தேசமாக அலைந்து கொண்டிருந்தால், பெருமாள் நமக்கு மோக்ஷம் கொடுக்காமல் போய் விடுவாரா என்ன?

கிருஷ்ண அவதார சமயத்தில் திவ்ய தேசங்கள் எல்லாம் துவாரகையிலேயே இருந்ததாம்.


16108 தேவிகள் கிருஷ்ணருக்கு.

துவாரகையில் 16108 தேவிக்கும் தனித்தனி அரண்மனை. ஒவ்வொரு வீட்டிலும் கிருஷ்ணரே 16108 கிருஷ்ணனாக இருந்து ஆச்சர்யமாக குடும்பம் நடத்தினார்.

முதன்முதலில் திவ்ய தேச யாத்திரையை தொடங்கியவர் நாரதர்.


நாரதருக்கு ஒவ்வொரு வீடாக சென்று ஸ்ரீ கிருஷ்ணர் எப்படி இருக்கிறார்? என்று பார்க்க ஆசை ஏற்பட்டது.


ருக்மிணி தேவியின் அரண்மனையில் நாரதர் நுழைந்தபோது, கிருஷ்ணர் ஊஞ்சலில் அமர்ந்திருக்க, அந்த தேவி வெற்றிலை மடித்து கொடுத்து கொண்டிருந்தாள்.

அங்கு நாரதர் வருவதை பார்த்ததும், ஓடி வந்து இருவரும் உபசாரம் செய்தார்கள்.

பிறகு நாரதர், "அடுத்த அரண்மனையில் தேவியும், கிருஷ்ணரும் எப்படி இருக்கிறார்கள்? என்று பார்ப்போம்" என்று அங்கு சென்றார். 

அந்த அரண்மனையில், கிருஷ்ணர் தன் தேவிக்கு வீட்டு காரியங்களில் உதவி செய்து கொண்டிருந்தார்.

அங்கு நாரதர் வருவதை பார்த்ததும், ஓடி வந்து இருவரும் உபசாரம் செய்தார்கள்.

பிறகு நாரதர், "அடுத்த அரண்மனையில் தேவியும், கிருஷ்ணரும் எப்படி இருக்கிறார்கள்? என்று பார்ப்போம்" என்று அங்கு சென்றார். 

அந்த அரண்மனையில், கிருஷ்ணர் தன் குழந்தையோடு விளையாடி கொண்டிருந்தார்.

நாரதர் வந்ததை பார்த்ததும், ஓடி வந்து ஆசையோடு கிருஷ்ணர் குடும்பதோடு உபசாரம் செய்தார்.

பிறகு நாரதர், "அடுத்த அரண்மனையில் தேவியும், கிருஷ்ணரும் எப்படி இருக்கிறார்கள்?" என்று பார்க்க சென்றார்.

அந்த அரண்மனையில், நாரதரை பார்த்ததும், "இன்று அதிதியாக நாரதர் வந்திருக்கிறாரே. அஹோ பாக்கியம்" என்று முகமலர்ச்சியோடு    கிருஷ்ணர் சொல்ல, உடனே அவருடைய தேவி தீர்த்தம் எடுத்து வர, பாத்யம் சமர்ப்பிக்க ஓடோடி வந்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.

அனைத்து உபசாரத்தையும் பெற்றுக்கொண்ட நாரதர், அந்த அரண்மனையை விட்டு வெளியே வந்தார்.

"சரி, அடுத்த அரண்மனையில் தேவியும், கிருஷ்ணரும் எப்படி இருக்கிறார்கள்? என்று பார்ப்போம்" என்று மேலும் சென்றார். 

அந்த அரண்மனையில் தேவியே ஓடிவந்து "ஸ்ரீகிருஷ்ணர் இப்போது தான் எண்ணெய் தேய்த்து குளிக்க சென்றிருக்கிறார். இப்போது வந்துவிடுவார்" என்று சொல்லி வரவேற்று, நாரதருக்கு ஆசனம் கொடுத்து அமர செய்தாள். வேகவேகமாக குளித்து விட்டு, நாரதரை வரவேற்க ஓடிவந்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.


நாரதரின் தந்தையான பிரம்மாவை முன்பு மோஹிக்க செய்ததாக கேள்விப்பட்டு இருக்கிறார் நாரதர்.


இப்படி 16108 தேவியின் வீட்டுக்கும் நாரதரே சென்று பார்க்க, ஸ்ரீ கிருஷ்ணரும், அவருடைய தேவியும் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமாக பழகி ஆனந்தப்படுத்தியதை பார்த்து பிரமித்து போய், "பிரம்மாவுக்கும் கிடைக்காத பாக்கியத்தை ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு கொடுத்தாரே!" என்று மோஹித்து விட்டார் 


"திவ்ய தேசங்களுக்கு நாம் எத்தனை ஆவலோடு செல்ல வேண்டும்" என்று காண்பித்தார் நாரதர்.

ஸ்வரூபத்தில் ஒரே பெருமாள் தான், ஒரே தாயார் தான். 

"திவ்ய தேசம், திவ்ய தேசமாக ஒவ்வொரு பெயருடன் பெருமாளும் தாயாரும் ஏன் இருக்கிறார்கள்?" என்ற ரகசியத்திற்கு காரணத்தை கிருஷ்ண அவதாரத்தில் காட்டினார்.


திவ்ய தேசங்கள் செல்லும் போது, "இங்கு தாயார் எப்படி இருக்கிறாள்? இங்கு பெருமாள் எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார்?" என்று நாரதர் ஆவலோடு சென்றது போல நாமும் செல்ல வேண்டும்.


இந்த ஆவலோடு, 

"பெருந்தேவி தாயாரோடு காஞ்சியில் பெருமாள் எப்படி இருக்கிறார்?

திருவரங்கத்தில் பெரிய பிராட்டியோடு எப்படி இருக்கிறார்? 

இப்படியே திருக்கண்டியூர் சென்று பார்ப்போமா?" என்று திவ்ய தேசம், திவ்ய தேசமாக அலைந்து கொண்டே இருந்தால், வைகுண்டமும் வேண்டுமோ?

நமக்கு அஷ்டாங்க யோகமும் வேண்டாம்,

யம நியம ஆசனங்களும் வேண்டாம்.

வேதாந்தம் நமக்கு வரட்டும், வராமல் கூட போகட்டும்.

பக்தியே கூட நமக்கு வரட்டும், வராமல் கூட போகட்டும்.

சுத்தமான அஞானியாகவே இருந்து விட்டு போவோம்.

கோவில் கோவிலாக சென்று, பிரசாதம் வாங்கி சாப்பிடும் கோஷ்டியாக கூட ஆகலாமே!

திவ்ய தேசம் எங்கே? திவ்ய தேசம் எங்கே?  என்று தேடி தேடி, அங்கேயே மண்டிக்கிடக்கும் பாகவதர்களின் திருவடிகளில் போய் விழுவோமே. அவர்கள் பாததுளி நம்மீது விழட்டுமே.


உலகத்தில் நடக்கும் நல்லதும் தெரியாது, கெட்டதும் தெரியாது. இவர்களிடம் வம்பு பேச்சும் கிடையாது.

'திவ்ய தேசம் திவ்ய தேசமாக சென்று பெருமாளையும், தாயாரையும் பார்ப்பதே லட்சியம்' என்று இருக்கும் இவர்களுக்கு கிடைக்காத மோக்ஷத்தையா, ஏதோ பெரிதாக படித்தவனுக்கு கொடுத்து விட போகிறார் பெருமாள்?

மோக்ஷம் கொடுப்பதற்காகவே திவ்ய தேசம் திவ்ய தேசமாக உட்கார்ந்து இருக்கும் பெருமாளை பார்ப்பதை விட்டுவிட்டு,  இவ்வளவு படித்தால், 'இவ்வளவு யோகம் செய்தால், மோக்ஷத்தை பிடித்து விடலாம்' என்று கணக்கு போடுபவன் போட்டு கொள்ளட்டும். அது அவரவர் தலையெழுத்து.


மோக்ஷத்திற்கு நாம் விலை போட முடியுமா?

மோக்ஷம் அவர் சொந்த சொத்து.

நீ என்ன வேண்டுமானாலும் படி, யோகம் செய். மோக்ஷம் கொடுப்பது அவர் இஷ்டம்.


ஞானம் அடையவில்லை, யோகமும் செய்யவில்லை ஜடாயு. ஒன்றுமே செய்யாத கழுகுக்கு மோக்ஷத்தை கொடுத்து  விட்டு சென்று விட்டார் பெருமாள்.

யார் கேட்க முடியும்?


"எதை எதையோ படித்து, மோக்ஷம் அடையலாம் என்று நினைக்காதே..  திவ்ய தேசம் திவ்ய தேசமாக ஓடு. மோக்ஷம் சுலபமாக கிடைத்து விடும்", என்கிறார் ஆழ்வார்.

கோவிலுக்கு போகும் போது, எதையாவது எதிர்பார்த்து செல்லாதே..

உன் ஆத்மாவுக்கு உறவுக்காரர் என்ற ஆசையோடு சென்று, பெருமாளை பார்.


உன்னுடைய சரீர பந்துவை பார்க்க செல்லும் போது எப்படி ஆசையோடு போகிறாய்?

அடுத்த ஊரில், அடுத்த நாட்டில் உன் பேரன் இருக்கிறான், உன் பிள்ளை இருக்கிறான் என்றால் கூட, எப்படி ஆசையோடு ஒடுகிறாய்...

அது போல, உன் பெருமாளை பார்க்க ஓடு.


நீ போகும் வழியில் ஒரு திவ்ய தேசம் இருந்தால், "அடடா.. நம் பெருமாள் உள்ளே இருப்பாரே! அவரை பார்க்க முடியாமல் போகிறோமே! இறங்கி ஒரு க்ஷணம் பார்த்து விட்டு வந்து விடலாமா?" என்று நினை.


எப்பொழுது உனக்கு பெருமாளிடம் இப்படி ஒரு பாசம் உண்டாகி, சேவிக்க ஆரம்பிப்பாயோ, அப்பொழுதே உனக்கு அங்கு (வைகுண்டத்தில்) அழைப்பு கிடைத்து விடும். இதே ஜென்மத்தோடு மோக்ஷம் கிடைத்து விடும்.


"திவ்ய தேசம் திவ்ய தேசமாக சென்று பெருமாளை பார்ப்பதே, மோக்ஷத்திற்கு வழி" என்று காண்பித்து கொடுத்தார் திருமங்கையாழ்வார்.