மரத்தில் ஒளிந்து இருக்கும் ஹனுமானை குளிர்விக்க, சந்திரன் (நிலவு ) தன் மிதமான குளிர்ச்சியை அந்த இரவில் கொடுத்து கொண்டு இருந்தார்.
அப்பொழுது, ஹனுமான், அளவுக்கு மீறிய சுமையை சுமந்து கொண்டு, கடலில் தத்தளிக்கும் படகு போல, தாளமுடியாத சோகத்தை சுமந்து கொண்டு இருக்கும், சீதையை தரிசித்தார்.
(ச ததர்ச தத: சீதாம் பூர்ண சந்திர நிபணனாம் | சோக பாரைர் இவ ந்யஸ்தாம் பாரைர் நாவம் இவாம்பஸி || - வால்மீகி ராமாயணம்)
அந்த வாயு புத்ரன் ஹனுமான், சீதா தேவியோடு, பயங்கர ரூபத்துடன் சூழ்ந்து இருக்கும் ராக்ஷஸிகளை பார்த்தார்.
அந்த ராக்ஷஸிகளில் சிலர்
- ஒரு கண்ணுடன் இருந்தார்கள்.
- சிலர் ஒரு காதுடன் இருந்தார்கள்,
- சிலர் துருத்திக்கொண்டு இருக்கும் காதுகளோடு இருந்தார்கள்,
- சிலருடைய காது மாட்டின் காதுகள் போல இருந்தது.
- சிலருடைய காது யானை காதுகள் போல இருந்தது,
- சிலருக்கு காதுகளே இல்லை.
- சிலருக்கு பெரிய காது இருந்தது.
- சிலருடைய கால்கள் யானை காலாக இருந்தது,
- சிலருக்கு குதிரை போன்ற காலாக இருந்தது.
- சிலருக்கு மாட்டு கால் போன்று இருந்தது.
- சிலருடைய கால்கள் நெளிந்து பல முடிச்சுக்களோடு இருந்தது.
- சிலருக்கு ஒரே ஒரு கண் இருந்தது.
- சிலருக்கு ஒரே கால் இருந்தது.
- சிலருக்கு கால் மிக நீளமாக இருந்தது.
- சிலருக்கு கால்களே இல்லை.
- சிலருக்கு தலை பெரிதாக இருந்தது.
- சிலருக்கு கழுத்து நீண்டு இருந்தது.
- சிலருக்கு மார்பகம் பெரிதாக இருந்தது.
- சிலருக்கு வயிறு பெறுத்து இருந்தது
- சிலருக்கு முகம் மட்டும் அகண்டு இருந்தது.
- சிலருக்கு மூக்கு நீண்டு இருந்தது.
- சிலருக்கு நாக்கு நீண்டு வெளியில் தொங்கி கொண்டு இருந்தது.
- சிலருக்கு நாக்கே இல்லை.
- சிலருக்கு மூக்கே இல்லை.
- சிலருக்கு சிங்கம் போன்ற முகம் இருந்தது.
- சிலருக்கு மாடு போன்ற முகம் இருந்தது.
- சிலருக்கு பன்றி போன்ற முகம் இருந்தது.
(ஹஸ்தி-பாதா மஹா-பாதா கோ-பாதா பாதசூடிகா | அதிமாத்ர சிரோ-க்ரீவா அதிமாத்ர குசோதரீ || - வால்மீகி ராமாயணம்)
மயிர் கூச்சரியும் படி, இப்படி பயங்கரமான ரூபத்தில் இருக்கும் ராக்ஷஸிகளை, மரத்தின் மேல் அமர்ந்து இருக்கும் ஹனுமான் பார்க்கிறார்.
பயங்கரமான ராக்ஷஸிகள் சூழ்ந்து இருக்க, மரத்துக்கு அடியில், தேவியும், ராஜகுமாரியுமான அப்பழுக்கற்ற சீதை அமர்ந்து இருப்பதை ஹனுமான் தரிசித்தார்.
பெரும் சோகத்தில் இருந்த சீதையின் நீண்ட கேசம் புழுதி மண்ணால் படர்ந்து இருந்தது.
வானில் ஜொலிக்கும் நக்ஷத்திரம் தன் புண்ணியங்கள் முடிந்ததால், ஒருவேளை பூமியில் வந்து விழுந்து விட்டதோ?
இந்த தேவி அலங்கார ஆபரணங்கள் இல்லாமல் இருக்கிறாளே !
அவளுக்கு இப்பொழுது ஆபரணமாக இருப்பது அவள் கணவனின் மீது உள்ள அன்பும், அக்கரையும் தான் என்று தெரிகிறதே!!
ஒரு தாமரை தனியாக இருந்தாலும், மண்ணில் விழுந்தாலும் அதன் பொலிவு குறையாதது போல, இந்த தேவியின் மேல் புழுதி படர்ந்து இருந்தாலும் பொலிவு குறையாமல் இருக்கிறாளே!
ராக்ஷஸ தலைவன் இவளை சிறைபிடித்து, இவளை தன் சொந்தங்களுடன் இருக்க விடாமல் செய்து விட்டானே!
இந்த தேவியை பார்த்தால், யானை கூட்டத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, சிங்கத்தின் கூட்டத்தில் அகப்பட்ட யானை போல இருக்கிறாளே!
(வியூதாம் சிம்ஹ சம்ருத்தாம் பத்தாம் கஜ வதூம் இவ | - வால்மீகி ராமாயணம்)
நிலவின் கிரணங்களை மேகங்கள் மறைத்து விடுவது போல தேவி இருந்தாள்.
வெகு நாட்கள் வாசிக்கப்படாத வீணை, போல இருந்தாள் தேவி.
இவள் தன் பதிக்கு சேவை செய்ய வேண்டியவள், ராக்ஷஸிகளால் சிறைபிடிக்கப்பட வேண்டியவள் இல்லை.
இந்த அசோக வனத்தின் மத்தியில், சோகம் என்ற பெரும் கடலில் மூழ்கி இருக்கிறாள்.
ரோஹிணி நக்ஷத்திரத்தை க்ரஹங்கள் பிடித்து இருப்பது போல துன்பப்படுகிறாள்.
ஹனுமான் இந்த தேவியை பூக்கள் இல்லாத கொடி போல பார்த்தார்.
புழுதி படர்ந்து இருந்தாலும், நிலவு போன்ற இந்த தேவி, புழுதியை மீறி கொண்டு பேரழகுடன் ஜொலித்தாள்.
அந்த தேவியின் ஆடைகளும் புழுதி படர்ந்து இருந்தது.
மான் போன்ற விழி கொண்ட அந்த தேவி கம்பீரமாகவும், அதே சமயம் மிகவும் மெலிந்து காணப்பட்டாள்.
அதே சமயம், தன் கற்பை திடமாக காத்து கொண்டு இருப்பவளாக காணப்பட்டாள்.
பெரும் பயத்துடன் அந்த மான் விழியாள் அங்கும் இங்கும் பார்த்து கொண்டிருந்தாள்.
(தினமும் ராவணன் வருவான். வந்து விடுவானோ? என்ற பயத்தில் சீதை சிங்கத்திடம் சிறைப்பட்ட மான் போல தவித்து கொண்டிருந்தாள்)
அவள் விடும் பெரு மூச்சில் வெளிப்பட்ட அக்னி காற்று, சுற்றி இருக்கும் இலைகளை எரித்து சாம்பலாக்கி விடுமோ?
இவள் சோகத்தின் மறு உருவமோ?
இந்த தேவியின் சோகம், திடீரென்று பல மடங்காக அதிகரித்து காணப்படுகிறதே!
ஆஹா! இந்த நிலையிலும், பொறுமையை இழக்காமல் இருக்கிறாளே !
அலங்காரம் ஆபாரணம் இல்லாமல் போனாலும், இந்த தேவி பொலிவுடன் இருக்கிறாளே!
(தாம் க்ஷமாம் சுவி பக்தாங்கி வின ஆபரண ஷோபிணீம் | - வால்மீகி ராமாயணம்)
ஹனுமான், தான் கண்டு கொண்டு இருப்பது, தான் தேடி வந்த சீதா தேவி தான் என்று உணர்ந்து கொண்டு, எல்லையில்லா ஆனந்தம் அடைந்தார்.
கண்களில் கண்ணீர் பெருக, தன் இதயத்தால் ராம, லக்ஷ்மணர்களை தியானத்தார்.
தான் பார்ப்பது சீதை தான் என்றாலும், அவசரப்பட்டு விடாமல், மரத்திலேயே ஒளிந்து தகுந்த சமயம் எதிர்பார்த்து இருந்தார் ஹனுமான்.
இரவு முடிய இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது.
இரவு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்க,
வேதமும், வேத அங்கங்களும் அறிந்த ஹனுமான் காதில், 'வேத மந்திரங்கள்' கேட்டது.
(சடங்க வேத விதுஷாம் க்ரது ப்ரவர யாஜினாம் | சுஸ்ராவ ப்ரஹ்ம கோஷாம் ச வி-ராத்ரே ப்ரஹ்ம ராக்ஷஸாம் || - வால்மீகி ராமாயணம்)
அதை தொடர்ந்து, மங்கள இசை வாசிக்கப்பட,
நீண்ட கைகள் கொண்ட வலிமைமிக்க ராவணன் தன் படுக்கையில் இருந்து எழுந்து கொண்டான்.
கலைந்து இருந்த மாலைகள், கேசங்களுடன் இருந்த ராவணனுக்கு, எழுந்தவுடனேயே சீதையின் நினைவு வந்தது.
சீதையை அடையும் ஆசையை அடக்க முடியாமல் இருந்தான் ராவணன்.
உடனே,
தன்னை அலங்காரம் செய்து, ஆபரணங்களை அணிந்து கொண்டு, பூக்களும், பழங்களும் பூத்து குலுங்கும், தாமரை தடாகங்கள், பல விட பறவைகள் சூழ்ந்து இருக்கும் அசோக வனம் நோக்கி புறப்பட்டான்.
அவன் வந்து கொண்டிருந்த சாலைகளில், நவரத்தினங்கள் பதித்து இருந்த தோரணங்களை பார்த்து கொண்டே, அசோக வனத்திற்குள் நுழைந்தான்.
நூற்றுக்கணக்கான தேவதை போன்ற பெண்கள் ராவணனை தொடர்ந்து வந்தனர்.
இப்படி வரும் ராவணனை கண்டால், 'இவன் தான் இந்திரனோ!' என்று தோன்றியது.
சிலர் தங்கத்தால் ஆன விளக்கை ஏந்தி கொண்டு இருந்தனர்.
சிலர் ராவணனுக்கு விசிறி கொண்டே வந்தனர்.
சிலர் தங்க பாத்திரத்தில் குளிர்ந்த நீரை கொண்டு வந்தனர்.
இன்னும் சிலர், ராவணன் அமர இருக்கைகளை தூக்கி கொண்டு வந்தனர்.
சிலர் ரத்தினங்கள் பதித்த குவளையில் மதுபானம் சுமந்து கொண்டு வந்தனர்.
இன்னும் சிலர், ராவணனுக்கு தங்கத்தால் ஆன நிலவு போன்ற குடையை எடுத்து கொண்டு வந்தனர்.
இன்னும் தூக்கம் களையாத பெண்களின் மத்தியில் ராவணன், மேக கூட்டத்தில் மிளிரும் மின்னல் போல அசோக வனத்திற்குள் நுழைந்தான்.
ராவணனோடு கூடவே நடந்து வந்த இந்த பெண்கள் வியர்த்து இருந்தனர்.
ஆனாலும் ராவணன் மீது இருந்த காதலாலும், மரியாதையாலும் கூடவே வந்தனர்.
சீதையின் நினைவை சுமந்து கொண்டே, தீய எண்ணத்துடன், காமத்துடன் வரும் ராவணன், சீதை இருக்குமிடம் அருகில் வந்ததும், மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.
மரத்தில் சமயம் எதிர்பார்த்து காத்து இருந்த ஹனுமான் காதில், இந்த பெண்கள் அணிந்து இருந்த ஒட்டியானங்கள், வளையல்கள் எழுப்பும் சத்தம் கேட்டது.
இந்த சத்தம் வரும் திசையை பார்த்த ஹனுமான், அளக்க முடியாத வீரமும், ஆண்மையும் கொண்ட ராவணன் வந்து கொண்டிருப்பதை பார்த்தார்.
எண்ணெய் விளக்கை பல பெண்கள் ஏந்தி கொண்டு இருக்க, அதன் நடுவில் ராவணன் ஜொலித்துக்கொண்டு இருந்தான்.
காமத்துடன், சுய பெருமையுடனும், அகம்பாவத்துடன் காணப்பட்டான் ராவணன்.
அவன் கண்கள் சிவப்பாக இருந்தது. அதே சமயம் ஆண் அழகன் போல காணப்பட்டான்.
ஹனுமான் அப்பொழுதும் மரத்திலேயே ஒளிந்து கொண்டு இருந்தார்.
அருகில் வர வர, ஹனுமான் ராவணனை நன்றாக பார்த்தார்.
கூடவே வந்து கொண்டிருந்த இளமையையும் அழகும் குடி கொண்டிருந்த பெண்களையும் பார்த்தார்.
இவர்களோடு, ராவணன் பறவைகளும் மான்களும் துள்ளி விளையாடும் சீதை சிறைபிடித்து வைத்து இருக்கும் இடத்திற்குள் நுழைந்தான்.
ஜொலிக்கும் நக்ஷத்திரங்களுக்கு நடுவே சந்திரன் ஜொலிப்பது போல, ராவணன் காணப்பட்டான்.
"அரண்மனையில் தூங்கி கொண்டிருந்த அதே ராவணன் தான், இங்கு வந்து இருக்கிறான்" என்று புரிந்ததும், 'வந்து இருப்பது நிச்சயம் ராவணன் தான்' என்று புரிந்து கொண்டார் ஹனுமான்.
மேலும் என்ன நடக்கிறது? என்று பார்க்க ஏதுவான திசையில் இருக்கும் கிளைக்கு தாவினார்.
ராவணனுடைய தேஜஸை பார்க்கும் போது, வீரத்தில்-பலத்தில்-அறிவில் மேன்மையுடைய ஹனுமானுடைய தேஜஸ் (பொலிவு) அன்று குறைவாக தெரிந்தது.
(ச ததாப்ய உக்ர தேஜா: சந்நி: தூத: தஸ்ய தேஜஸா | பத்ர குஹ்யாந்தரே சக்தோ ஹனுமான் சம்வ்ருதோ பவத் || - வால்மீகி ராமாயணம்)
மரத்தின் இலைகளுக்கு நடுவே அமர்ந்து கொண்டு ஹனுமான் நடப்பதை கவனித்து கொண்டு இருந்தார்.
கருமையான கூந்தலும், அழகான உடல் அமைப்பும் கொண்ட சீதா தேவியின் அருகில் வந்து நின்றான் ராவணன்.
(இப்படி தினமும் வந்து வந்து நிற்பான் ராவணன்.. கண்டபடி பேசுவான்…)
இளமையும், அழகும், ஆபரணங்கள் அணிந்து ஜொலிக்கும் ராவணனை, அப்பழுக்கற்ற சீதை தலை நிமிர்ந்து பார்த்தாள்.
வாழை மரம் புயல் காற்றால் அசைந்து பரிதவிப்பது போல, சீதை பரிதவித்தாள்.
உடனே சீதா தேவி, தன் கால்களை குறுக்கி தன் வயிற்று பகுதியை மறைத்து கொண்டு, இரு கைகளால் தன் மார்பை மறைத்து கொண்டு, அழ ஆரம்பித்தாள்.
சூறாவளி காற்று நடு கடலில் உள்ள கப்பலை நிலை குலைய செய்வது போல, ராவணன் சீதையை நிலைகுலைய செய்தான்.
சீதாதேவி வெறும் தரையில் அமர்ந்து இருந்தாள்.
தன் சபதத்திலிருந்த நுழுவாத பெண் போல காணப்பட்டாள் சீதை.
உயர்ந்து வளர்ந்த மரத்தில், முறிந்து விழுந்த கிளையோ? என்பது போல காணப்பட்டாள்.
மண்ணில் வீழ்ந்த தாமரை தன் பொலிவை மறைத்து கொண்டாலும் அழகை மறைக்க முடியாதது போல காணப்பட்டாள்!
சீதையின் மனம் என்ற குதிரை, வேகமாக ராமபிரானை நோக்கி சென்றது.
சீதாதேவி காய்ந்து போன இலை போல ஆகி விட்டாள்.
ராமபிரானோடு மனதில் ஐக்கியமாகிவிட்ட சீதை, கண்ணீரில் நனைந்தாள்.
தனக்கு ஏற்பட்ட சோகத்தை அமைதியுடன் எதிர் கொண்டாள்.
சீதையின் சோகத்திற்கு முடிவும் தெரியவில்லை.
ஆனாலும், சீதையின் மனது அந்த ராமபிரானை தொடர்ந்து கொண்டு இருந்தது.
சீதா தேவி தன்னை கவ்வி உள்ள இந்த சோகத்தால், பல நாட்கள் பட்டினியால், ராம தியானத்தால், ராவணன் மேல் உள்ள பயத்தால் ஒடுங்கி இருந்தாள்.
உயிரை தரிக்க மட்டும் சிறிது உண்டாள்.
தன் கற்பே தன் சொத்து என்று கட்டி காத்து கொண்டிருந்தாள்.
'ராவணன் ஒழிய வேண்டும், ராமபிரானோடு சேர வேண்டும்'
என்று கை குவித்து கொண்டு எப்பொழுதும் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தாள் சீதா தேவி.
(ஆயாசமானாம் துக்கார்தாம் ப்ராஞ்லிம் தேவதாம் இவ | பாவேந ரகு முக்யஸ்ய தச க்ரீவ பராபவம் || - வால்மீகி ராமாயணம்)
தன் மரணத்தை தானே வரவழைத்து கொள்ள, ராவணன் சீதையிடம் ஆசை வார்த்தை பேசி மயக்க நினைத்தான்.
தன் எதிரே நிற்கும் ராவணனை பார்க்க சகிக்காமல், அப்பழுக்கற்ற சீதாதேவி அங்கும் இங்கும் ராமபிரானை எதிர்பார்த்து கொண்டு, தனியாக அழுது கொண்டே இருந்தாள்.
சீதாதேவியே கற்புக்கரசி.
அவளுடைய ஒழுக்கமே இன்று அவளை பரிதவிக்க செய்கிறது.
ராவணன் சீதாதேவியிடம் பேசலானான்…
"என்னை பார். எதற்காக உன்னை மறைத்து கொண்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறாய்?
நான் உன்னை விரும்புகிறேன், நீண்ட கண்கள் உடையவளே!
என்னை மதித்து கொஞ்சம் பார், என் அன்பே !
உன் அங்கங்கள் ஒவ்வொன்றும் எத்தனை அழகாக இருக்கிறது.
அனைவரது இதயத்தையும் இந்த அழகு பேதலிக்க செய்து விடும்.
மனிதர்களோ, தேவைக்கு ஏற்றபடி உருவத்தை மாற்றும் சக்தியுள்ள ராக்ஷஸர்களோ! இங்கு இல்லை.
என்னை கண்டு பயம் கொள்ளாதே!
பயந்த பெண்ணே! கடத்தி செல்வதும், மணமான பெண்ணை அணுகுவதும் ராக்ஷஸ தர்மம்.
நீ என்னை விரும்பி ஏற்றுக்கொள்ளாத வரை நான் உன்னை தொட மாட்டேன்.
நான் உனக்காக காத்து கொண்டு இருப்பேன்.
அது வரை, என் காமம் என்னுடனேயே கட்டுப்பாட்டில் இருக்கும்.
ஆதலால் பயப்படாதே!
என்னிடம் பரஸ்பர நம்பிக்கை கொள். என்னை விரும்பு.
சோகப்படாதே!
(ராவணன் ஏன் சீதையை நெருங்க பயந்தான்? என்று அவனே பிறகு சொல்கிறான். இதை தெரிந்து கொள்ள இங்கே படியுங்கள்.)
முடிந்து கொள்ளாத கூந்தலுடன், தரையில் அமர்ந்து கொண்டு, ராமனையே நினைத்துக்கொண்டு, அழுக்கு ஆடையுடன், தேவையே இல்லாமல் பட்டினி இருந்து கொண்டு இருப்பது உனக்கு பொருத்தமே இல்லை.
என்னை ஆனந்தப்படுத்து.
அற்புதமான ஆடைகள், சந்தனம் கலந்த நறுமண திரவியங்கள், பல வித தேவலோக ஆபரணங்கள், உயர்ந்த ரக பானங்கள், கட்டில்கள், இருக்கைகள், நீ கேட்க அருமையான இசைகள் நாட்டியங்கள், வாத்தியங்கள் இருக்கிறது. அனைத்தும் எடுத்துக்கொள்.
நீ பெண் வர்க்கத்திலேயே ரத்தினம் போன்றவள். இப்படி இருக்காதே!
உன் அங்கங்களில் அழகான ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்து கொள்.
என்னை விரும்பிய பிறகு, உனக்கு எந்த குறையும் ஏற்பட வாய்ப்பில்லை.
ஓடும் நதி எப்படி திரும்பாதோ, அது போல, உன்னுடைய உள்ள இளமை போனால் திரும்பாது.
அழகானவளே!
மூன்று உலகத்திலும் ஈடில்லாத உன் அழகை அந்த ப்ரம்ம தேவன் படைத்து விட்டு சோர்ந்து போய் இருப்பான் என்று நினைக்கிறேன்.
உன் அழகை பார்த்து, ஒரு வேளை 'ஆண் மகனாக இருந்தால்', ப்ரம்ம தேவனும் மதி மயங்கி இருப்பான் என்று நினைக்கிறேன்.
நான் உன் அங்கத்தில் உள்ள எந்த இடத்தை பார்த்தாலும், என்னால் அந்த இடத்தை விட்டு, என் கண்ணை எடுக்கவே முடியவில்லை.
(யத்யத் பஸ்யாமி தே காத்ரம் சீதாம்சு ஸத்ருஸானனே | தஸ்மிம் தஸ்மிந் ப்ருது ஸ்ரோனி சக்ஷு: மம நிபத்யதே || - வால்மீகி ராமாயணம்)
உன் அறியாமையை விட்டு விட்டு, எனக்கு மனைவியாக ஆகி விடு.
உன்னையே இந்த அனைத்து பெண்களுக்கும் மேல் அமர்த்தி பட்டத்து மகிஷி ஆக்குகிறேன்.
உனக்கே முதன்மை கிடைக்க செய்கிறேன்.
இந்த உலகங்களில் போர் செய்து, என்னென்ன செல்வங்கள் நான் கைப்பற்றினோ அனைத்தும் உனக்குத் தான்.
இந்த ராஜ்யமே உனக்கு தான்.
அது மட்டுமல்ல, நானே உனக்கு உரியவன் தான்.
வேண்டுமென்றால் சொல்..
உனக்காக இந்த உலகத்தை அடிமை படுத்தி, அனைத்தையும் உன் தந்தை ஜனகருக்கு உனக்காக தருகிறேன்.
குழந்தை போல விளையாடி பிடிவாதம் செய்பவளே!
எந்த உலகத்திலும் என்னை எதிர்க்க ஆள் இல்லை.
என் வலிமை போர்க்களத்தில் அளவிடமுடியாதது.
சொர்க்கத்தில் உள்ள தேவர்களும், அசுரர்களும் கூட என்னால் விழ்த்தப்பட்டு, அவர்கள் வெற்றி கொடிகள் ஒழிக்கப்பட்டு விட்டது. அவர்களாலும் என் எதிரில் நிற்க முடியாது.
இந்த உயர்ந்த ஆபரணஙகள் உன்னை அலங்கரிக்கட்டும்.
உன் அனுமதியோடு, இந்த வேலையாட்கள் உனக்கு புது ஆடைகளும், ஆபரணங்களும் அணிவிப்பார்கள்.
அழகிய முகம் கொண்டவளே! நான் உன்னை சர்வ ஆபரணங்களோடு, புது ஆடைகள் அணிந்து பார்க்க ஆசைப்படுகிறேன்.
சந்தோஷத்தை அனுபவி.
என்ன வேண்டுமோ பருகி கொள். நீ விருப்பப்பட்ட படி விளையாடு.
உன் உறவினர்கள் அனைவருக்கும் என்ன கொடுக்க ஆசைப்பட்டாலும் கொடு.
எனக்கு நீ ஆணை இடு.
என்னிடம் கூச்சமில்லாமல் விளையாடு.
என்னால் உன் உறவினர்கள் அனைவருமே இனி ஆனந்தமாக வாழ போகிறார்கள்.
என்னுடைய புகழையும், செல்வத்தையும் பார்.
மரத்தின் பட்டையை ஆடையாக அணிந்து கொண்டு அலையும் அந்த ராமனை வைத்து கொண்டு என்ன செய்ய போகிறாய்?
அவன் வெற்றியையும் தொலைத்தவன். செல்வத்தையும் தொலைத்தவன்.
அவன் கேவலம் ஒரு வனவாசி.
தரையில் படுத்து உறங்குபவன்.
செல்வமில்லாத ஏழை.
அவன் உயிரோடு இன்னும் இருக்கிறானோ என்பதே எனக்கு சந்தேகம் தான்.
ராமன் இனி உன்னை பார்க்கவே இயலாது
மின்னல் போன்ற நீ, மழை மேகங்கள் போன்ற என்னால் சூழப்பட்டு இருக்கிறாய்.
ராமன் உன்னை திருப்பி கொண்டு செல்லவே முடியாது.
உன் சிரிப்பு எத்தனை அழகானது.
உன் பல் வரிசையும் அழகு.
உன் கண்கள் அழகு.
உன் விளையாட்டு குணமும் அழகு.
எப்படி கருடனுக்கு நாகங்களை கண்டால் ஒரு ஈர்ப்பு வருமோ, அது போல, நீ என் இதயத்தை ஈர்க்கிறாய்.
(மனோ ஹரசி மே பீரு சுபர்ண: பன்னகம் யதா || - வால்மீகி ராமாயணம்)
நீ புழுதி படிந்து இருந்தாலும், உன்னை பார்த்தாலேயே, என் மனைவிகளின் மீது உள்ள ஆசை கூட மறைந்து போய் விடுகிறது.
(க்லிஷ்ட கௌசேய வசனாம் தன்வீமப்யன் அலங்கருதாம் | தாம் த்ருஷ்ட்வா ஸ்வேஷு தாரேஷு ரதிம் நோபலபாம்யஹம் || - வால்மீகி ராமாயணம்)
என்னுடைய அந்தப்புரத்தில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் நீயே தலைவியாக இரு. அனைத்து செல்வங்களையும் நீயே பெற்றுக்கொள், ஜானகீ !
(அந்தபுர நிவாசின்ய: ஸ்திரிய: சர்வ குணான்விதா: | யாவந்த்யோ மம சர்வாஸாம் ஐஸ்வர்யம் குரு ஜானகி || - வால்மீகி ராமாயணம்)
மூவுலகிலும் உள்ள அழகிய பெண்கள் அனைவரும், என் அரண்மனையில் உள்ளனர்.
இவர்கள் அனைவரும், லஷ்மிக்கு பணிவிடை செய்வது போல, உனக்கு பணிவிடை செய்வார்கள்.
குபேரனின் செல்வமும், தேவர்களின் செல்வமும் உனக்கு தான். எடுத்துக்கொள்.
அனைத்தையும் என்னோடு அனுபவி.
தவத்திலும், அழகிலும், வலிமையிலும், செல்வத்திலும், பொலிவிலும், புகழிலும், ராமன் எனக்கு நிகரில்லை.
(ந ராம தபஸா தேவி ந பலேன ந விக்ரமை: | ந தனேன மயா துல்ய தேஜஸா யக்ஷஸ்சாபி வா || - வால்மீகி ராமாயணம்)
விருப்பப்பட்டபடி எது வேண்டுமோ அருந்து, விளையாடு, ஆனந்தமாக இரு.
உனக்கு என் செல்வம் அனைத்தையும், ராஜ்யத்தையும் தருகிறேன்.
என்னை விரும்பு. என்னை குதூகலப்படுத்து.
ஏ அழகானவளே! உன் உறவினர்கள் அனைத்து ஆனந்தமும் அடையட்டும்.
உன்னை இந்த ஆபரணங்களால் அலங்கரித்து கொள்.
என்னோடு ஆனந்தமாக மரங்கள் நிறைந்த இந்த தோட்டத்தில் விளையாடு."
இப்படி வாய்க்கு வந்தபடி, பேசிய ராவணனை பார்த்து, துன்பம் நிறைந்த குரலோடு சீதா தேவி பேச தொடங்கினாள்..
மனதில் ராமபிரானையே நினைத்து கொண்டு, கற்புக்கரசியான சீதா தேவி, ஒரு புல்லை பிடுங்கி ராவணன் முன்பாக வைத்து விட்டு, சிரித்து கொண்டே பேசத் தொடங்கினாள்.
சீதா தேவி ராவணன் முன் வைத்த புல் பல அர்த்தங்களை தோற்றுவித்தது...
* ஒரு பெண் அமர்ந்து இருக்க, ஒரு ஆண் நின்று கொண்டு பேச வேண்டாமே! என்று நினைத்து, ராவணனுக்கு புல் ஆசனம் போட்டது போல இருந்ததாம்..
* மற்ற ஆண்களிடம் பேசும் போது கோஷா நியமத்துடன் பேசும் சீதாதேவி, ராவணனிடம் பேச வேண்டும் என்பதற்காக, இந்த புல்லையே தனக்கு திரையாக போட்டு கொண்டது போல இருந்ததாம்
* ராவணா! 'நீ என்னிடம் இப்போது பேசியது இந்த புல்லுக்கு சமமாக இருந்தது' என்பது போல இருந்ததாம்.
* ராவணா! 'விலங்குக்கு தான், தன் மனைவி, பிறர் மனைவி என்ற தர்மமே கிடையாது. நீயும் ஒரு விலங்காக இருப்பதால், இத்தனை நேரம் கத்தியதற்கு இதோ புல் போடுகிறேன்... சாப்பிடு' என்பது போல இருந்ததாம்.
* ராவணா! நீ உன்னை பராக்கிரமசாலி என்று சொல்லி கொள்கிறாயே! ராமரையும் லக்ஷ்மணனையும் அப்புறப்படுத்தி விட்டு என்னை கடத்திய போதே உன் பராக்கிரம் என்ன என்று தெரிந்து விட்டது.. உன் பராக்கிரம் இந்த புல்லுக்கு சமமாக இருந்தது' என்பது போல இருந்ததாம்.
* ராவணா! நீ வைத்திருக்கும் ஐஸ்வர்யம் அனைத்தும், என்னை பொறுத்தியவரை இந்த புல்லுக்கு சமம்' என்பது போல இருந்ததாம்.
* ராவணா! ராஜரிஷியாக இருக்கும் என் தகப்பனார் ஜனகருக்கும், நீ வைத்திருக்கும் ஐஸ்வர்யம் அனைத்தும், இந்த புல்லுக்கு சமம்' என்பது போல இருந்ததாம்.
* ராவணா! 'எனக்கு துணை யாருமில்லை என்று நினைக்காதே! என்னை தீண்ட நினைத்த காகாசுரனை தண்டிக்க, அருகில் இருந்த ஒரு புல்லை எடுத்து தான், ப்ரம்மாஸ்திரமாக ப்ரயோகம் செய்தார் ஸ்ரீ ராமர். அன்று ராமர் புல்லையே ஆயுதமாக தொடுத்தார். அந்த புல்லை உனக்கு ஞாபகபடுத்தி எச்சரிக்கிறேன்' என்பது போல இருந்ததாம்.
* ராவணா! 'ராமபிரான் மட்டும் தான் புல்லை அஸ்திரமாக விட முடியும் என்று நினைத்து விடாதே! என் கற்பு என்ற அக்னியால், இன்று நான் உன் முன் வைக்கும் புல்லே உன்னை பொசுக்கிவிடும்..ஜாக்கிரதை' என்பது போல இருந்ததாம்.
* ராவணா! 'எனக்கு இங்கு துணை யாருமில்லை என்று நினைக்காதே! அன்று தூணில் இருந்து வெளிப்பட்டு ஹிரண்யகசிபுவை கொன்றார். இன்று இந்த புல்லிலிருந்தே வெளிப்பட்டு உன்னை கிழித்து எறிந்து விடுவார்..ஜாக்கிரதை' என்பது போல இருந்ததாம்.
இப்படி பல அர்த்தங்கள் ராவணன் மனதில் தோற்றுவிப்பது போல ஒரு புல்லை எடுத்து வைத்து விட்டு, சிரித்து கொண்டே பேச தொடங்கினாள் சீதாதேவி...
"என் பற்றிய நினைவை நிறுத்து. உன் சொந்தங்கள் நன்றாக இருக்க அவர்களின் மீது உன் கவனத்தை திருப்பு.
பாவ காரியங்கள் செய்பவனுக்கு ஒரு போதும் தெய்வீக அனுபவங்கள் கிடைக்காது. அது போல நீ என்னை ஒருபோதும் நெருங்க முடியாது.
நல் ஒழுக்கமுள்ள நான், உயர்ந்த குடும்பத்தில் பிறந்து, உயர்ந்த குடும்பத்தில் உள்ளவரை மணம் செய்து கொண்டு, எந்த கீழ்த்தரமான காரியமும் செய்வேன் என்று எதிர்பார்க்காதே!"
என்று சொல்லிக்கொண்டே சீதாதேவி, ராவணனை பார்க்க விருப்பமில்லா சீதை அவனுக்கு எதிர் திசையில் திரும்பி கொண்டு, மேலும் பேச ஆரம்பித்தாள்.
"நான் வேறொருவரின் ஒழுக்கம் மீறாத மனைவி. உன்னுடையவள் அல்ல.
நீ தர்மத்தில் ஒழுக்கமாக வாழ்பவர்களை கொஞ்சம் பார்.
அவர்களை போல நாமும் வாழ்வோமே! என்று முயற்சி செய்.
உன் மனைவிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீ நினைப்பது போல தானே மற்றவர்கள் மனைவி பாதுகாக்கப்பட வேண்டும்?
மற்றவர்கள் எண்ணத்தை புரிந்து கொள்ள கற்று கொண்டு, நீ உன் மனைவிகளுடன் திருப்தி கொள்.
எவன் ஒருவன் தன் மனைவி போதாது என்று திருப்தி கொள்ளாமல், புலன்கள் அடங்காமல், காம புத்தியுடன் இருக்கிறானோ, அவன் மற்றவர்களின் மனைவிகளால் பெரும் அவமானத்திற்கு உள்ளாவான்.
இங்கு ஒரு நல்லவன் கிடையாதா?
அல்லது, நீ அப்படிப்பட்ட நல்லவர்கள் சொல்வதை கேட்கும் பழக்கமே கிடையாதா?
அல்லது, நல்லவர்கள் இருந்தும், உன்னுடைய புத்தி இப்படி கீழ்த்தரமானதாகவே உள்ளதா?
(இஹ சந்தோ ந வா சந்தி சதோ வா ந அனுவர்தசே | வசோ மித்யா ப்ரநீத ஆத்மா பத்யமுக்தம் விசேக்ஷனை: || - வால்மீகி ராமாயணம்)
நீ நல்லவர்கள் சொல்வதை கேட்காமல், முட்டாள்கள் பேச்சை கேட்டு கொண்டு, உன் ராக்ஷஸ இனத்தையே அழிக்க போகிறாய்.
ஒழுக்கமில்லாத அரசனால், செல்வ செழிப்பு உள்ள நகரமும், நாடும் கூட அழிந்து போகும்.
அது போல,
உன்னை போன்ற ஒரே ஒருவன் செய்யும் தவறால், இந்த செல்வ செழிப்பு மிக்க இலங்கை வேகமாக அழியப்போகிறது.
குறுகிய புத்தி கொண்ட நீ, இதுவரை செய்த கீழ்த்தரமான செயலால் அழிய போவதை கண்டு, நல்லவர்கள் ஆனந்தம் அடையப் போகிறார்கள்.
'பாவி' என்ற உன்னை உலகம் சொல்லப்போகிறது.
நீ கஷ்ட காலத்தை சந்திக்கும் போது 'நல்லவேளையாக ராவணன் ஒழியப்போகிறான்' என்று பேச போகிறார்கள்.
உன்னுடைய சக்தியாலோ, செல்வத்தாலோ என்னை மயக்க முடியாது.
சூரியனையும் அதன் கிரணங்களையும் பிரிக்க முடியாதது போல, நான் என் ராகவனை விட்டு பிரியாதவள்.
ஒரு ஒழுக்கமுள்ள பெண் தன் கணவனை விட்டு, வேறொருவன் கைகளை தலையணையாக வைத்து உறங்குவாளோ?
(உபதாய புஜம் தஸ்ய லோகநாதஸ்ய ஸத்க்ருதம் | கதம் நாமோ பதாஸ்யாமி புஜ மன்யஸ்ய கஸ்ய சித் || - வால்மீகி ராமாயணம்)
ஒழுக்கம் உள்ளவன் ஞானத்தை கொண்டு இருப்பது போல, நான் ராகவனுக்கு சொந்தமானவள்.
ஒரு பெண் யானையை, அதனுடைய ஆண் யானையிடம் சேர்ப்பது போல, என்னை ராமபிரானிடம் அனுப்பி விடு.
நீ வெகு நாள் அழிக்கப்படாமல் வாழ நினைத்தால், ராமபிரானோடு நட்பு கொள்.
ராமபிரான் தன்னை அண்டியவர்களை, ஒரு தந்தை போல பார்த்து கொள்வார்
உயிர் வாழ ஆசை இருந்தால், அவரோடு நட்பு கொள்.
அவருக்கு முன்னால் என்னை அனுப்பி, அவரை மகிழ்ச்சி படுத்து.
இதுவே உனக்கு நலன். இல்லையேல் நீ மரணித்து போவாய்.
இந்திரன் கூட தன் வஜ்ராயுதத்தை கீழே போடலாம்.
எமன் கூட நீ நீண்ட நாள் வாழ வழி விடலாம்.
ஆனால்,
உலகத்திற்கே தலைவனான ராகவனின் கோபத்தில் இருந்து நீ தப்பிக்க முடியாது.
(த்வத்விதம் ந து சங்க்ருத்தோ லோகநாத: ச ராகவா | - வால்மீகி ராமாயணம்)
சீக்கிரத்தில், நீ ராகவனின் வில்லிலிருந்து புறப்படும் இடி போன்ற சத்தத்தை கேட்க போகிறாய்.
அந்த கோதண்டத்தில் இருந்து அம்பு மழை பொழிய போகிறது.
ராம, லக்ஷ்மணர்களின் அம்பு மழையில் இந்த நகரத்தில் உள்ள ராக்ஷஸர்கள் வீழப்போகிறார்கள்.
உன்னுடைய கோட்டையை ஒரு அங்குலம் கூட விடாமல் அம்புகளால் நிரப்பி விடுவார்கள்.
ராகவன் என்ற கருடன் வந்து, இங்கு இருக்கும் பாம்பு போன்ற ராக்ஷஸர்களை கொத்தி பறக்கப் போகிறது.
விஷ்ணு ஒரே நொடியில் மூன்றடியில் ப்ரம்ம லோகம் வரை அளந்து அசுரர்களிடமிருந்து கைப்பற்றியது போல, ராகவன் என்னை உடனே எடுத்து சென்று விடுவார்.
14000 ராக்ஷஸர்களை ஜநஸ்த்தானத்தில் ஒரே ஆளாக ஒழித்த ராகவனிடம் நேரிடையாக போர் புரிய இயலாதவன் நீ. அதனால் தானே இந்த பெரிய குற்றத்தை செய்தாய்.
அற்பனே! சிங்கம் போன்ற சகோதரர்கள் ஆசிரமத்தில் இல்லாத சமயத்தில் தானே என்னை கடத்தினாய்.
ராம, லக்ஷ்மண சகோதரர்களை தீண்டிய காற்று உன் மீது பட்டால் கூட உன்னால் ஸ்திரமாக நிற்க முடியாது.
ராமபிரானோடு நீ பகை கொள்வது உனக்கு நல்லதல்ல.
(ந ஹி கந்தம் உபாக்ராய ராம லக்ஷ்மண யோஸ் த்வயா | சக்யம் சந்தர்சன ஸ்தாதும் சுனா சார்தூலயோ: இவ || - வால்மீகி ராமாயணம்)
இந்திரன் கையிலிருந்து புறப்பட்ட ஆயுதம், வ்ருத்ராசுரன் கையை அறுத்தது போல, ராமபிரானால் ஒழிக்கப்பட போகிறாய்.
சூரியன் தன் அக்னி கிரணங்களால் தண்ணீரை உறுஞ்சி விடுவது போல, ராம லக்ஷ்மணர்களிடமிருந்து புறப்படும் அம்புகள் உன் உயிரை உறிஞ்சி விடும்.
நீ குபேரனிடம் தஞ்சம் புகுந்தாலும் சரி, வருணனிடம் தஞ்சம் அடைந்தாலும் சரி, ராம பானத்திலிருந்து நீ எங்கு ஓடினாலும் தப்பிக்க முடியாது.
பெரிய இடியால் பெரிய மரம் கருகி சாய்வது போல, நீ அழிக்கப்பட்டு விடுவாய்." என்று கர்ஜித்தாள் சீதை.
(கிரிம் குபேரஸ்ய கதோ தவாலயம் சபாம் கதோ வா வருணஸ்ய ராஞ: | அஸம்சயம் தாசரதேர்ந மோக்ஷ்யசே மஹாத்ரும: கால ஹதோ சனேரிவ || - வால்மீகி ராமாயணம்)
சீதாதேவியின் கடுமையான சொற்களை கேட்டு, ஆண்மகனான ராவணன் கடும் கோபத்துடன் பேசலானான்…
"எத்தனைக்கு எத்தனை சாந்தமாக ஒரு ஆண்மகன் ஒரு பெண்ணிடம் பேசுகிறானோ! அத்தனைக்கு அத்தனை அவன் அவளுக்கு அடி பணிந்து போவான்.
எத்தனைக்கு எத்தனை கனிந்த வார்த்தை பேசுவானோ! அத்தனைக்கு அத்தனை அவளால் அவமானப்படுத்தப்படுவான்.
(யதா யதா சாந்த்வயிதா வஸ்ய" ஸ்த்ரீனாம் ததா ததா |
யதா யதா ப்ரியம் வக்தா பரிபூத: ததா ததா || - வால்மீகி ராமாயணம்)
அடங்காத குதிரையை தேரோட்டி அடக்குவது போல, எனக்குள் ஏற்படும் அடங்காத கோபத்தை, உன் மீது உள்ள ஆசையின் காரணத்தால் அடக்கி கொண்டு இருக்கிறேன்.
நாம் விரும்புபவர்கள் மீது பொதுவாக இரக்கம் ஏற்படும்.
அதன் காரணத்தாலேயே, காட்டில் வனவாசியாக வாழும் ஒருவனை நினைத்து கொண்டு, என்னை அவமதித்த உனக்கு, மரண தண்டனை கொடுக்காமல் இருக்கிறேன்.
நீ பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் உனக்கு மரண தண்டனை கொடுத்து இருக்க வேண்டும்."
இப்படி பேசிய ராவணன், மேலும் சீதாதேவியை பார்த்து பேசலானான்..
"இன்னும் 2 மாதங்கள் தான் உனக்கு அவகாசம்.
அதற்கு பிறகும் நீ என் படுக்கைக்கு வர மறுத்தால், என் சமயலறையில், உன்னை துண்டு போட்டு, காலை உணவாக சாப்பிட்டு விடுவேன்." என்று சொன்னான்.
(த்வெள மாசௌ ரக்ஷிதவ்யோ மே யோ வதிஸ்தே மயா க்ருத: |
தத: சயனம் ஆரோஹ மாமா த்வம் வர வர்ணினி || ஊர்த்வம் த்வாம்யாம் து மாசாப்யாம் பர்தாரம் மாம் அனிச்சதீம் |
மம த்வாம் ப்ராத ராசார்தம் ஆரபந்ததே மஹானஸே || - வால்மீகி ராமாயணம்)
சீதையிடம் ராவணன் இப்படி பேச, ராவணனின் மனைவிகளாக இருந்த கந்தர்வ பெண்கள், சீதையின் நிலை கண்டு வருந்தினர்.
அவர்களின் முக பாவனையால், சீதைக்கு சமாதானம் செய்தனர்.
இதை கவனித்த சீதை, தன்னை நிதானப்படுத்தி கொண்டு, ராவணனை பார்த்து பேசலானாள்…
"நீ நன்றாக வாழ வேண்டும் என்று இந்த நகரத்தில் நினைப்பவர்கள் யாரும் இல்லை என்று நிச்சயமாக தெரிகிறது.
யாரும் உன்னுடைய கீழ்த்தரமான வேலையை தடுக்க மாட்டார்கள்.
சசி தேவி இந்திரனுக்கு எப்படியோ, அது போல, நான் தர்மமே உருவானவரின் மனைவி.
கீழ் தரமான உன்னை தவிர, யார் என்னை மனதால் ஆசைப்படபோகிறார்கள்?.
கீழ்த்தர புத்தி கொண்ட ராக்ஷஸனே!
எல்லையில்லா பெருமை கொண்ட ராமபிரானின் பத்னியான என்னிடம் கடும் சொற்களை பேசி விட்டு, எப்படி உன் பாவத்தை கழிக்க போகிறாய்?
ராமபிரான் மதம் கொண்ட யானை போன்றவர். அவருக்கு முன்னால் நீ ஒரு முயல்.
மதம் கொண்ட யானைக்கு முன் போர் செய்ய முயல் ஆசைப்படுமா?
(யதா த்ருப்தஸ்ச மாதங்க: சசஸ் ச சஹிதொள வனே |
ததா த்விரதவத்ராம் ஹஸ்த்வம் நீச சசவத்ஸ்ம்ருத: || - வால்மீகி ராமாயணம்)
ஒரு முறை கூட நேரில் ராமபிரானை சந்திக்காமல், அவரை பற்றி கீழ் தரமாக பேசுகிறாயே! உனக்கு வெட்கமாக இல்லை?
(ச த்வம் இக்ஷ்வாகு நாதம் வை க்ஷிபன் இஹ ந லஜ்ஜசே |
சக்ஷுஷோ விஷயம் தஸ்ய ந தாவத் உப கச்சசி || - வால்மீகி ராமாயணம்)
என்னை பார்க்கும் உன்னுடைய இந்த குரூரமான அசிங்கமான கண்கள் ஏன் இன்னும் கீழே விழவில்லை?
தசரதரின் மருமகளான என்னை பற்றி தரம் தாழ்த்தி பேசிய உன்னுடைய நாக்கு இன்னும் துண்டு துண்டாகவில்லையே !
நான் பதிவ்ரதை என்ற தபசில் இருப்பதால், ராமபிரானின் அனுமதி இல்லாததால், உன்னை என்னுடைய பாதிவ்ரதத்தால் பொசுக்காமல் இருக்கிறேன்.
என்னை ராமபிரானை விட்டு கடத்தவே முடியாது.
இது நடந்து இருக்கிறது என்பதாலேயே, விதி உன் மரணத்தை தீர்மானித்து விட்டது என்று உணர்கிறேன்.
நீ உன்னையே பலவான் என்றும், சூரன் என்றும் சொல்லிக்கொள்கிறாய்.
அடுத்தவன் வீட்டில் புகுந்து, அந்த வீட்டில் உள்ள புருஷன் வெளியே இருக்கும் போது, அவனுடைய மனைவியை கடத்துவது தான் வலிமையா? உனக்கு வெட்கமாக இல்லை?"
என்று மீண்டும் கர்ஜித்தாள்.
சீதா தேவியின் பேச்சை கேட்ட ராவணனுக்கு, கோபம் பீறிட்டு கண்களில் தெரிந்தது.
கருமையான மேகம் போல, நீண்ட கைகளுடைய, உறுதியான கழுத்து கொண்ட ராவணன், சிங்கம் போல அங்கும் இங்கும் நடந்தான்.
அவன் கண்களும், நாக்கும் ஜொலிக்க, அவன் கிரீடம் அசைந்தது.
உயரமானவனாக இருந்தான்.
மிகவும் அழகான ஆபரணங்கள், கைக்கு காப்பு அணிந்து இருந்தான்.
அவனது இடுப்பில் அலங்காரமாக சுற்றிக்கொண்டு இருக்கும் ஆபரணத்தை பார்த்தால், மந்திர மலையை கட்டி இருக்கும் வாசுகியை போல இருந்தது.
இவன் இரு கைகள் தான் மந்திர மலையோ? என்று தோன்றியது.
இவன் காதுகளில் அணிந்து இருந்த குண்டலங்கள் உதய சூரியனோ? என்பது போல இருந்தது.
ராவணனை பார்த்தால், எதை கேட்டாலும் கொடுக்கும் கற்பக வ்ருக்ஷமோ? என்று தோன்றியது.
இத்தனை ஆபரணங்கள் அணிந்து அலங்கரித்து கொண்டு இருந்தாலும், ராவணன் 'சுடுகாட்டு நிலம் போல' பயங்கரமாக காணப்பட்டான்.
சீதையை பார்க்க பார்க்க அவன் கண்கள் சிவந்தது.
அவளை தன் வசம் திருப்ப முடியாததால் பெருமூச்சு விட்ட ராவணன், மேலும் பேசலானான்…
"நீ இன்னும் அந்த ப்ரயோஜனமில்லாத, செல்வத்தை தொலைத்து நிற்கும் ராமனையா நினைத்து கொண்டு இருக்கிறாய்?
எப்படி சூரியன் இருளை விரட்டுமோ, அது போல, இப்பொழுதே உன்னை கொன்று விடுகிறேன்"
என்று சொன்ன ராவணன், ஒரு கண், ஒரு காது, யானை கால், நீண்ட மூக்கு என்று இருக்கும் பலவிதமான பயங்கரமான ராக்ஷஸிகளை பார்த்து கட்டளை இட்டான்.
"இந்த சீதையை எந்த முயற்சி செய்தாவது வெகு சீக்கிரத்தில் என் ஆளுமைக்கு கொண்டு வர வேண்டும்.
பயமுறுத்தி பார். சமாதானம் செய்து பார்.
என்ன கேட்கிறாளோ கொடுத்துப் பார்.
கடும் சொற்களால் இவளை வேதனைப்படுத்து"
என்று ராக்ஷஸிகளுக்கு கட்டளை இட்டு கொண்டு இருக்க, தன்யமாலினி ராவணனின் அருகில் வந்து பேச தொடங்கினாள்..
"பேரரசே! என்னுடன் விளையாடுங்கள். சீதையை ஏன் கொடுமைப்படுத்துகிறீர்கள்?
அவளே சோகத்தினால் வெளுத்து போய் இருக்கிறாள்.
அவளை பார்க்கவும் பரிதாபமாக இருக்கிறது.
இவள் ஒரு சாதாரண மனித பிறவி. நீங்களோ ராக்ஷஸர்களின் அரசன். மனிதர்களை விட உயர்ந்தவர்கள் ராக்ஷஸர்கள்.
உங்கள் கைகளில் படுத்து உலக செல்வத்தை அடையும் பாக்கியம் அவளுக்கு இல்லை என்றே நினைக்கிறேன்.
விருப்பமில்லாத பெண்ணிடம், காமத்தோடு ஒரு ஆண்மகன் உறவாடினால், அவன் உடல் பாரமே அவளுக்கு வேதனை தரும்.
இருவரும் விருப்பப்பட்டு உறவாடினால், இருவருமே திருப்தி கொள்வார்கள்" என்று பேசினாள்.
(அ-காமம் காமயானஸ்ய சரீரம் உபதப்யதே |
இச்சந்தீம் காமயானஸ்ய ப்ரீதி: பவதி சோபனா || - வால்மீகி ராமாயணம்)
இதை கேட்ட ராவணன், இடி இடிப்பது போல சிரித்து விட்டு, தன் அரண்மனைக்கு திரும்பினான்.
கூடவே வந்த கந்தர்வ பெண்களும், நாக கன்னிகைகளும், ராவணனோடு அரண்மனைக்கு திரும்பினர்.