Followers

Search Here...

Wednesday 1 March 2017

ஸ்ரீ கிருஷ்ணர் கலியுகத்தில் நாம் கடைபிடிக்க சொன்ன வழி என்ன?

ஸ்ரீ கிருஷ்ணர் கலியுகத்தில் நாம் கடைபிடிக்க சொன்ன வழி என்ன?
தேவையான காலத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் வழியை கடைபிடிக்காமல் நாம் இருந்ததால், இந்தியா முழுவதும் எந்த நிலைக்கு ஆனது?


இனியும் ஸ்ரீ கிருஷ்ணரின் வழியில் செல்லாமல் இருந்தால் என்ன ஆகும் ?

நம் வரலாற்றை நோக்கி ஒரு அலசல் :

பொதுவாக, நம் ஹிந்து தேசத்தில், அனைவரும் தர்மம் தெரிந்தவர்கள். மிகமிக நல்லவர்கள்.

இவர்களிடம் உள்ள பெரிய தவறு என்னவென்றால்,
ஒரு "அதர்மம் செய்பவனை நேரில் கண்டாலும் அவனை எதிர்க்காமல், பதில் அடி கொடுக்காமல், அதர்மம் செய்பவர்களை தர்ம வழியிலேயே திருத்த முயற்சி செய்தனர் அல்லது அமைதி காத்தனர்".

"ஒரு கன்னத்தை காட்டினால் மறு கன்னத்தையும் காட்டு"
என்பது இது போன்ற செயல் தான்.
இது நம் ஹிந்து மதத்தில் உள்ள சந்யாசிகளுக்கும், ப்ராம்மணர்களுக்கும் சொல்லப் பட்டு இருக்கிறது.
ஏகநாதர் என்பவர் ஓரு ப்ராம்மணர். இவர் பண்டரிநாதனின் பக்தர்.
இவர் காலத்தில் அக்பரின் இஸ்லாமிய சாம்ராஜ்யம் இந்தியா முழுவதும் பரவி இருந்தது.
ஹிந்து அரசர்கள் பலர் கப்பம் கட்டியும், சில வீர அரசர்கள் பாரதத்தை இவர்களிடம் காக்கவும் சண்டை இட்டனர்.

இப்படிப்பட்ட காலத்தில், இவர் ஒரு நாள், பாண்டுரங்கனின் திருநாமத்தை சொல்லியபடியே கோதாவரி நதியில் நீராடிவிட்டு, திரும்பி வந்து, ஜெபம் செய்யத் தொடங்கினார்.

இதை பார்த்த ஒரு மிலேச்சன் (ஹிந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாதவன்) பாண்டுரங்கனை தியானித்து ஜெபம் செய்து கொண்டிருந்த ஏகநாதரின் மேல், தாம்பூலம் கலந்த எச்சிலை அவன் வாயிலிருந்து முகத்தில் காரி உமிழ்ந்தான். ஹிந்துக்கள் தன்  நாட்டில் வாழ முடியாத நிலை.
ஆனால், ஏகநாதர் அவனை கோபிக்கவில்லை.

பாண்டுரங்கனின் திருநாமத்தை சொல்லியபடியே மீண்டும் கோதாவரி நதியில் நீராடிவிட்டு, திரும்பி வந்து ஜெபம் செய்யத் தொடங்கினார்.
மீண்டும் துப்பினான்.

இது போல 108 தடவைகள் முகத்தில் துப்பி கொண்டே இருந்தான் அந்த மிலேச்சன் .
கடைசியில் அந்த முரடன் ஓய்ந்து போய் , இவரின் பொறுமை என்ற தர்மத்தை பார்த்து, ஏகநாதரின் காலில் விழுந்து,
"சுவாமி என்னை மன்னித்துவிடுங்கள்" என்றான்.

ஏகநாதரோ,
"உன்னால் எனக்கு இன்று பாண்டு ரங்கனின் பெயரை 108 தடவை குளித்து விட்டு சொல்லும் பாக்கியம் ஏற்பட்டது" என்றார்.
இது பிராம்மண லட்சணம். ஸாது லட்சணம்.

இது கோவிலில் தொண்டு செய்யும் ஒரு ப்ராம்மணனுக்கு என்று உள்ள தர்மம்.

ஆனால் இதை ஒரு அரசனோ, நாட்டை காக்கும் வீரர்களோ எடுத்து கொண்டால் அந்த தேசம் அழிய வேண்டியது தான்.

இந்த காரணத்திற்காகவே ஸ்ரீ கிருஷ்ணர்
"அதர்மத்தை அதர்மத்தாலேயே வெற்றி கொள்" என்கிறார்.
பாரத போரில் அதை நமக்கு காட்டினார்.

1025AD, முகம்மது கஜினி 17 முறை குஜராத் வழியாக இந்தியாவில் நுழைய பார்த்தான். 17 முறையும் தோற்றான்.
17 முறையும் தோற்று, 18வது முறை ஹிந்து அரசனை வென்று, நாட்டை சூறையாடி,  சோம்நாத்தில் உள்ள சிவ ஆலயத்தை இடித்து, பல கோடி மதிப்புள்ள செல்வங்களை கொள்ளை அடித்து சென்றான்.
இப்படி நம் வீட்டில் கொள்ளை அடுத்தவனை புகழ்ந்து,
"17 தடவை தோற்றாலும் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்" என்று குழந்தைகள் படிக்கும் பாட புத்தகத்தில் புகுத்தி, ஒரு திருடனை புகழும் அவலம், இந்தியாவில் மட்டும் தான். கொள்ளை அடித்த தங்க வைடூரிய குவியலை எதுத்துக்கொண்டு தன்  நாட்டில் குவித்தான்.
17 முறையும், முகம்மது கஜினியை தோற்கடித்த ஹிந்து அரசனை பற்றி பாட புத்தகத்தில் இல்லை. 
17 முறை வெற்றி கொண்ட ஹிந்து அரசன் வீரனா? ஓடியவன் வீரனா?


17 முறையும் அட்டகாசம் செய்த ஒரு திருடனை, ஒவ்வொரு தடவையும் மன்னித்து அனுப்பிய ஹிந்து அரசன், ஏகநாதர் செய்த செயலுக்கு ஒப்பானது.

ஏகநாதர் ப்ராம்மணர். பரவாயில்லை.
அரசனாய் இருந்து தண்டிக்காமல்,  ஒரு முறை, இரு முறை அல்ல, 17 முறை மன்னித்தார்.

ஒரு விதத்தில் இந்த ஹிந்து அரசனின் நல்ல குணம் தெரிந்தாலும், நாட்டை இப்படி சாதுவாக இருந்து காக்க முடியாது என்பதே நாம் வரலாற்றை படிக்கும் போது கற்க வேண்டிய பாடம்.

ஒருமுறை, இந்த ஹிந்து அரசன் கிருஷ்ணரின் வழியை பின் பற்றி இருந்திருந்தால் !! முதல் படையெடுப்பிலேயே இந்த திருடன் கொல்லப்பட்டு இருப்பான்.
பாம்பு "விஷம் கக்கும்" என்று தெரிந்தும், மன்னித்து விட்டதன் விளைவே, 1947ல் இந்தியர்கள்  பிச்சைகாரர்களாக விடப்பட்டு, இன்று இந்தியா வளரும் நாடாக ஆனதற்கு காரணம்.
இப்பொழுது இருக்கும் பல கிழக்கு நாடுகள் இந்தியாவின் செல்வத்தை கொண்டே அவர்கள் நாட்டை வளர்த்துள்ளது, கோஹினூர் வைரம் வரை.

இப்படி நம் வரலாறு படித்து தெரிந்து கொள்வதால், நமக்கு என்ன பயன்?
நாம்
"இன்று செய்யும் சில தவறுகள்" 
"நம்மால் முடிந்தும், செய்யாமல் அமைதியாக விட்ட நல்ல காரியங்கள்", 
அடுத்த பல தலைமுறைகளை, நம் செயலால் கஷ்டப்பட வைத்து விடும்.

ஒரு வேளை, இந்த ஹிந்து அரசன் கிருஷ்ணரின் வழியில் சென்றிருந்தால், 1025 ADயில் ஆரம்பித்த கொள்ளை, 1947 AD வரை தொடர்ந்து இருக்காது. இதுவே நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

  • தீயவனுக்கு மன்னிப்பு கூடாது.
  • நல்லவர்களை பலர் சேர்ந்து காக்க வேண்டும். நல்லவர்களை இனம் கண்டு நட்பு கொள்ள வேண்டும்.
  • தீயவனை தீயவனாகவே எதிர்க்க வேண்டும்.
  • அதர்மம் செய்பவர்கள் எப்பொழுதும் அதர்மமே பேசுவார்கள்.
  • அதர்மம் செய்பவர்கள் தர்ம வழியில் இருப்பவர்களை கிண்டல் செய்வார்கள்.

அதர்மம் செய்பவர்களையும் தர்மம் பேச வைக்கலாம்.எப்படி?
அதர்மம் செய்பவர்களும் ஒரு சமயம் தர்மம் பேசுவார்கள். எப்போது ?

தனக்கு ஒரு அதர்மம் நடக்கும் போது, அதர்மம் செய்பவர்களும் தர்மம் பேசுவார்கள்.
இதனால் தான் ஸ்ரீ கிருஷ்ணர்
"அதர்மத்தை அதர்மம் கொண்டு பதில் கொடு.
அப்பொழுது தான் அதர்மம் செய்பவனும் 'தர்மம் பேசுவான்'" என்கிறார்..
ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வது "தரம் சூக்ஷ்மம்"


ஒரு திருடன் "ஏன் திருடுகிறாய்?" என்று கேட்டால், தான் செய்யும் அதர்மத்துக்கு பல வித நியாயம் கற்பிப்பான்.
தான் செய்தது அதர்மம் என்று ஒப்புக்கொள்ளவே மாட்டான்.

அதே திருடன் வீட்டில் 10 பவுன் நகை திருடு போனால்,
"ஐயோ ! இது நியாயமா? தர்மமா?"
என்று தர்மம் பேசுவான்.

இந்த சம்பவம் ராமாயணத்திலும், பாரத போரிலும் காண்கிறோம்.

ஹனுமான் கடலை தாண்டி இலங்கையில் இறங்கிய போது, ஒரு பெண் ராக்ஷஷி (லங்கினி) எல்லையை காவல் (lady defence force in srilanka 😊) காத்துக் கொண்டிருந்தாள்.
பெண்ணாக இருக்கிறாளே ! என்று, இவளை அடிக்க வேண்டாம், மெதுவாக உள்ளே சென்று விடுவோம் என்று ஹனுமான் தீர்மானித்து உள்ளே நடக்கலானார்.
இதை பார்த்த இவள், "என்னை மீறி உள்ளே செல்ல முடியாது, முடிந்தால் என்னிடம் போர் செய்" என்றாள்.

அடிக்க மனம் வராமல், லேசாக தன் இடது கையால் ஒரு தட்டு தட்டினார். அதுவே பெரிய அடியாக அவளுக்கு தெரிந்தது. தலை சுற்றியது.

அது வரை "என்னிடம் சண்டைக்கு வா" என்று அழைத்த லங்கினி திடீரென்று தர்மம் பேசலானாள்..
"இப்படி ஒரு பெண்ணை அடிக்கலாமா ? இது நியாயமா?" 
என்று புலம்பி, "உள்ளே தாராளமாக செல்லுங்கள்" என்று வழி விட்டாள்.

இதே போல வாலியும் தன் சொந்த தம்பி உயிருடன் இருக்கும் போது, தம்பியின் மனைவியை தன் மாளிகையில் வைத்துக்கொண்டு அட்டகாசம் செய்தான்.
பார்க்கும் இடமெல்லாம் துரத்தி துரத்தி தன்  தம்பி சுக்ரீவனை அடிப்பான். நாடு துரத்தினான்.


ராமர் மறைந்து நின்று அம்பு விட்டு கொல்ல, சாகும் தருவாயில் தர்மம் பேசலானான்.
"மறைந்து நின்று கொல்லலாமா? நியாயமா? தர்மமா ?" என்று புலம்பினான்.

பாரத போரில், ஒரு சமயம் அர்ஜுனனின் தேர் சக்கரம் குழியில் மாட்டிக் கொள்ள, ஸ்ரீ கிருஷ்ணரே தோள் கொடுத்து சக்கரத்தை தூக்க, இந்த சமயத்தில் கர்ணன் சர மாறியாக அம்புகளை ஸ்ரீ கிருஷ்ணர் மீது செலுத்தினான்.
ஸ்ரீ கிருஷ்ணர், கர்ணனின் செயலை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார்.
அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் தேர் உடைந்த போது, தேர்  சக்கரத்தை சரி செய்ய கீழே இறங்கும் அபிமன்யுவை, கர்ணன் அம்பு விட்டு பலருடன் சேர்ந்து கொன்றான்.

இன்னொரு சமயம், கர்ணன் தேர் மாட்டிக்கொள்ள, கர்ணனே சக்கரத்தை தூக்க வேண்டிய நிலை வந்த போது, அர்ஜுனன் தர்மப்படி சண்டை இடக்கூடாது என்று காத்து இருக்க, ஸ்ரீ கிருஷ்ணர், கர்ணனின் அதர்மத்தை காட்டி,
"அவனை அவன் வழியிலேயே அடித்து வீழ்த்து" என்றார்.
அடிபட்டு விழுந்த கர்ணன், சாகும் தருவாயில் கண்ணனை பார்த்து
"இப்படி தர்மம் மீறி செய்யலாமா ?" என்று கர்ணனின் வாயிலும் தர்மம் வந்தது.
கண்ணன் கர்ணனை பார்த்து
"உனக்கும் தர்மம் என்றால் என்ன என்று கடைசியாக ஞாபகம் வந்ததே!" என்றார்.


  • தர்ம வழியை பின்பற்றுபவனிடம், நீயும் தர்ம வழியை காட்டு.
  • அதர்ம வழியில் இருப்பவனை, அவன் செய்த அதர்ம வழியிலேயே சென்று ஒரு பாடம் புகட்டு.



"ஒரு கன்னத்தை காட்டு அடிக்கிறேன்", என்பவனுக்கு "மறு கண்ணத்தையும் காட்டு" என்பது சந்யாசிகளுக்கு அழகாக இருக்கலாம்.

நாட்டை காக்க, தன் கலாச்சாரத்தை காக்க, தன் வீட்டை காக்க இது ஒருபோதும் பயன்படாது என்பதே நம் வரலாறு காட்டுகிறது.

"ஒரு கன்னத்தை காட்டு" என்று கேட்பவனை, அவன் அடிப்பதற்கு முன்னரே, அவன் இரு கன்னத்திலும் சேர்த்து அறைந்து விடு.
இப்படி செய்வதாலேயே, இது போன்று அதர்மமாய் கேட்பவர்கள் உடனே தர்ம வழிக்கு வருவர்.

மேலும் தர்ம வழியில் நடப்பவர்கள் (ஏகநாதர் போன்றோர்) இது போன்ற தீயவர்களிடம் தப்புவார்கள்.

இதுவே ஸ்ரீ கிருஷ்ணர் காட்டும் வழி - "தர்ம சூக்ஷ்மம்".
இந்தியாவிற்கு இப்போது மிக தேவையான தர்மம் இது.

கலியுகம் பிறக்க போகிறது என்பதை அறிந்த பகவான் "நாராயணன்" ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்து, நமக்கு சொன்ன முக்கிய பாடம் இதுவே.

கலியில்,

  • அதர்மம் பேசுபவர்கள், 
  • நம் கலாச்சாரத்தை கேலி செய்பவர்கள், 
  • தெய்வ நிந்தை செய்பவர்கள், 
  • தர்ம வழியில் இருக்கும் சாதுக்களை கிண்டல் செய்பவர்கள் 

அதிகம் இந்தியாவில் படை எடுப்பார்கள்.

  • இந்தியாவில் உள்ள மக்களை பணம், பயம் கொண்டு மாற்றுவார்கள் 

என்பதை குறிப்பாக உணர்த்தி, தர்மம் மட்டும் தெரிந்த இந்த ஹிந்துக்களுக்கு "தர்ம சூக்ஷ்மம்" என்ற ஒரு விஷயத்தை அருளினார் ஸ்ரீ கிருஷ்ணர்.

கஜினி காலத்தில் ஏதோ காரணத்திற்காக, தர்ம சூக்ஷ்மம் சமயத்தில் பயன் படுத்தபடவில்லை.
வரலாற்றில் எங்கும் காண முடியாதபடி 17 முறையும் ஒரு திருடனை மன்னித்தனர்.

இனி இந்த தவறை ஹிந்துக்கள் செய்தால்,
மிலேச்ச மதத்தில் சேர்ந்தோ, அல்லது
யூதர்கள் போல சிதறி நாடோடிகள் போல வாழ வேண்டியது தான்.

ஹிந்துக்கள் ஒன்று படுவோம்.
நம் தர்மத்தை எதிர்க்கும் அதர்மவாதிகளை அவர்கள் வழியில் சென்று அடக்கி, தர்மம் பேச வைப்போம்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka


Wednesday 22 February 2017

திருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன்? திருமலையில் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்த அனந்தாழ்வார்


அனந்தாழ்வார்
பகவானை ஆராதிப்பதற்காக தான், உலகத்தில் உள்ள அனைத்துமே படைக்கப்பட்டது.
பரவாசுதேவன், முதலில் ப்ரம்மாவை படைத்தார்.
வேதத்தை உபதேசித்தார்.
பரவாசுதேவன், ப்ரம்மாவை பார்த்து,

  • பழத்தை ஸ்ருஷ்டி செய் !
  • புஷ்பங்களை ஸ்ருஷ்டி செய் !
  • பசு மாட்டை ஸ்ருஷ்டி செய்து, பால் ஸ்ருஷ்டி செய் !
  • இப்படி இப்படி ஸ்ருஷ்டி செய் !

என்று சொல்ல, ப்ரம்மா இவை அனைத்தையும் படைத்து இருக்கிறார்.


இவையெல்லாம் எதற்கு படைக்க சொன்னார் பகவான்?

  • உடனே பால் காய்ச்சி, காபி போட்டு நாம் சாப்பிடுவதற்காகவா? இல்லை.
  • பூவை பறித்து மனைவி தலையில் வைப்பதற்காகவா? இல்லை.

பின் எதற்காக பிரம்மாவை படைக்க சொன்னார்?

வாங்கிய பாலில், ஒரு துளியாவது எடுத்து, சாளகிராமத்தில் விடுகிறானா? என்று நம்மை பார்க்கிறார்.
சம்சார கடலில் இருந்து மீட்டு, மோக்ஷம் கொடுப்பதற்காக பகவான் நம்மிடம் சிறு பக்தியையாவது, நன்றியை எதிர்பார்க்கிறார்.
தான் குடிக்கும் பசும்பாலை, ஸ்ருஷ்டி செய்த பகவானுக்கு, நன்றி உணர்வுடன் தன் வீட்டில் உள்ள பெருமாளுக்கு காட்டி விட்டாவது குடிக்கிறானா?
அருகில் உள்ள கோவிலில் உள்ள பெருமாளுக்கு கொடுக்கிறானா?
என்று பார்க்கிறார் பகவான்.
பூக்கும் பூவில் கொஞ்சம் தொடுத்து, பகவானுக்கு போட்டு, தன் நன்றியை காட்டுகிறானா?
என்று பார்க்கிறார் பகவான்.
எம்பெருமானுக்கு பூவும், பழமும் அர்ப்பணம் செய்வதை விடுத்து, வேறு யாருக்கு செய்யத்தகும்?
என்று நம்மாழ்வார் திருவாய்மொழியில் சொல்கிறார்.
"தேவும் எப்பொருளும் படைக்க,
பூவில் நான்முகனைப்படைத்த,
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்,
பூவும் பூசனையும் தகுமே?" 
என்கிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆண்டாளை மகளாக பெற்ற பெரியாழ்வார், தன் நிலத்தில் எல்லாம் பூந்தோட்டம் அமைத்து, பூக்கள் அனைத்தையும் பெருமாளுக்கு கொடுப்பதற்கே என்று வாழ்ந்து காட்டினாரே.
ஒரு சமயம் ஸ்ரீ ராமானுஜர் (1017 AD -1137 AD) ஸ்ரீரங்கத்தில் ப்ரவசனம் செய்து கொண்டு இருந்தார்.
சிஷ்யர்கள் எல்லோரும் பக்தி ஸ்ரத்தையுடன் கேட்டு கொண்டு இருந்தனர்.
அப்பொழுது, நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில்,

"எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை, வானவர் வானவர் கோனொடும்,
சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து,
அந்தமில் புகழ்க் கார் எழில் அண்ணலே"
என்ற இந்த பாசுரத்தை சொல்லும் கட்டம் வந்தது.

இதை சொல்லும் போது, தொண்டை தழுதழுத்து கண்களில் கண்ணீர் வழிந்தது உடையவர் ராமானுஜருக்கு.

பக்தி ஸ்ரத்தை உடைய சிஷ்யர்கள், ஆச்சார்யான் முகத்தை ஒவ்வொரு அசைவையும் அப்படி கவனிப்பார்களாம்.

எந்த கட்டத்தில் ராமானுஜருக்கு கண்ணீர் வந்தது? என்று கண்டுபிடித்து விட்டார்களாம்.

"எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்"
என்ற இடத்தில் ராமானுஜருக்கு கண்ணீர் வந்திருந்தது என்றால்,
"நம் குல தெய்வம் என்று நினைத்து, ராமானுஜர் சித்தம் உருகி கண்ணீர் விட்டு இருக்கலாம் என்று நினைக்கலாம்."

"முந்தை, வானவர் வானவர் கோனொடும்"
என்ற இடத்தில் ராமானுஜருக்கு கண்ணீர் வந்திருந்தது என்றால்,
"தேவர்களுக்கும் தேவன், தேவாதிதேவன் என்று எம்பெருமானின் பரத்துவத்தை, பெருமையை நினைத்து, ராமானுஜர் சித்தம் உருகி கண்ணீர் விட்டு இருக்கலாம் என்று நினைக்கலாம்.
"திருவேங்கடத்து"
என்ற இடத்தில் ராமானுஜருக்கு கண்ணீர் வந்திருந்தது என்றால்,
"திருமலை திவ்ய தேசமாயிற்றே !  என்று நினைத்து, ராமானுஜர் சித்தம் உருகி கண்ணீர் விட்டு இருக்கலாம் என்று நினைக்கலாம்.

"அந்தமில் புகழ்"
என்ற இடத்தில் ராமானுஜருக்கு கண்ணீர் வந்திருந்தது என்றால்,
"எம்பெருமான் புகழை நினைத்து நினைத்து, ராமானுஜர் சித்தம் உருகி கண்ணீர் விட்டு இருக்கலாம் என்று நினைக்கலாம்.


"கார் எழில் அண்ணலே"
என்ற இடத்தில் ராமானுஜருக்கு கண்ணீர் வந்திருந்தது என்றால்,
"எம்பெருமானின் அழகை, சௌந்தர்யத்தை நினைத்து, ராமானுஜர் சித்தம் உருகி கண்ணீர் விட்டு இருக்கலாம் என்று நினைக்கலாம்.

இப்படி இருக்க, இந்த சின்ன பாசுரத்தில் எந்த இடத்தில் உடையவருக்கு கண்ணீர் வந்தது என்று கண்டுபிடித்து விட்டார்களாம் அவரது சிஷ்யர்கள்.

"சிந்து பூ மகிழும்" என்று சொல்லுமிடத்தில் ராமானுஜருக்கு கண்ணீர் வந்ததாம்.

"பூக்கள் அதிகமாக சிந்தி வீணாகி கிடக்கிறது திருமலையில்" என்று சொல்லும் போது கண்ணீர் விட்டார் ராமானுஜர்.

ப்ரவசனம் முடிந்த பிறகு, தனித்து ராமானுஜர் அருகில் வந்து,
"தேவரீர், திருவுள்ளத்தில் என்ன கலக்கம்?"
என்று கேட்டார்கள் சிஷ்யர்கள்.

ஸ்ரீ ராமானுஜர்,
"வண்டுகள், மான்கள் விளையாடும் சோலையாக உள்ளது ஸ்ரீரங்கம்.
இங்கு இடமும் செழிப்பாக உள்ளது.
சீதோசன நிலையும் அளவாக உள்ளது.
இப்படி ஒரு சூழ்நிலையில், ஸ்ரீ ரங்கநாதருக்கு சேவை செய்ய எளிதாக ஆள் கிடைப்பார்கள்.
திருமலையில் பூக்கும் பூக்களை தொடுத்து, வெங்கடேச பெருமாளுக்கு ஒரு பூமாலை கட்டி தினமும் கைங்கர்யம் செய்ய ஒருவர் கூட இல்லையே !! என்று நினைத்த பொழுது கண் கலங்கியது" என்றார்.

ஆச்சார்யன் சிறு தாபம் கூட அடைய விட மாட்டார்களாம் உத்தம சிஷ்யர்கள்.

குருநாதரின் மனதில் இருந்த இந்த துக்கத்தை நீக்க, திரு அநந்தான் என்ற சிஷ்யர் உடனே எழுந்து ராமானுஜரை சேவித்தார்.
"அடியேன், அந்த கைங்கர்யத்தை செய்கிறேன்"
என்று புறப்பட தயாரானார்.

இன்றைய காலத்திலேயே திருமலை செல்வது கொஞ்சம் கடினம்.
சுமார் 1050CEல் திருப்பதி செல்வது என்பது மகா கடினம்.

"ராமானுஜர் மனதில் தாபப்பட்டார் என்பதற்காக, ஸ்ரீரங்கத்தில் உள்ள தங்கள் வீடு, மனைவி, மக்கள் என்று எல்லோரையும் விட்டு விட்டு, திருப்பதி செல்ல முடியுமா?
அவ்வளவு எளிதில் செல்ல முடியுமா?"
என்றெல்லாம் நினைத்து, அவரது மற்ற சிஷ்யர்கள் கைங்கர்யம் செய்ய தயாராக இல்லையோ? என்று நாம் நினைத்து விட கூடாது.

ராமானுஜர் அடியார்களில் ஒருவர் கூட இப்படி நினைக்க மாட்டார்கள்.
பின்பு ஏன், "நானும் செல்கிறேன்" என்று மற்ற சிஷ்யர்கள் புறப்படவில்லை?

மற்ற சிஷ்யர்களுக்கு
"திருவேங்கடமுடையான் முக்கியமா?
ராமானுஜர் முக்கியமா? என்ற கேள்வி எழ,
திருப்பதி சென்றால், ராமானுஜரை விட்டு பிரிய வேண்டுமே !!"
என்று தாபபட்டு நின்று கொண்டிருந்தனர்.

அப்படியென்றால், அனந்தாழ்வார், ராமானுஜரை விட  திருவேங்கடமுடையான் தான் முக்கியம், என்று நினைத்து விட்டாரோ?

அனந்தாழ்வார் ராமானுஜர் மேல் அளவு கடந்த பக்தி உள்ளவர்.

தன் குருநாதனுக்கு அப்படி ஒரு கலக்கம் இருந்தால், அதை நிறைவேற்றாத ஒரு சிஷ்யன் இருந்து என்ன பயன்? என்று நினைப்பவர் அநந்தாழ்வார்.
ஸ்ரீ ராமரை விட்டு பிரிய முடியாமல், கூடவே இருந்து கைங்கரியம் செய்தார் லக்ஷ்மணன்.
மற்ற சிஷ்யர்கள், ராமானுஜரை விட்டு பிரிய முடியாமல், லக்ஷ்மணனை போல இருந்தனர்.
அனந்தாழ்வாரோ, பரதனை போல, இருந்தார்.
ராமானுஜருக்கு எது மகிழ்ச்சி தருமோ? அதை செய்து முடிப்பது முக்கியம் என்று இருந்தார்.

"ராமானுஜருக்கு பூ கைங்கர்யம் திருமலையில் செய்து மாலை கட்டி பெருமாளுக்கு போட ஆள் இல்லையே என்ற தாபம் ராமானுஜருக்கு இருக்குமானால், அந்த தாபம் நீங்கி அவரது மனது சந்தோஷப்பட வைப்பதே நம் லட்சியம்"
என்று புறப்பட்ட தயாரானார்.

சந்தோஷமாக ஸ்ரீராமானுஜரின் அனுமதி பெற்று, வாகன வசதிகள் இல்லாத அந்த காலத்தில், அப்பொழுது கர்பவதியாக இருந்த தன் மனைவியையும் அழைத்து கொண்டு, ஸ்ரீரங்கத்தில் இருந்து, நடந்து நடந்து நடந்து  திருமலை வந்து சேர்ந்தார் அனந்தாழ்வார்.

அந்த சமயத்தில் திருமலை அடர்ந்த காடாகவும், புலி, சிங்கம் போன்ற மிருகங்கள் நிறைந்ததாகவும் இருந்தது.

ராமானுஜர் (1017CE) அவதரித்த பின் தான், வெங்கடேச பெருமாளின் அருள், ஞானிகளுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைவருக்கும் கிடைத்தது.
இன்று தினமும் லட்சம் பேர் வந்து பார்க்க காரணமாய் இருந்தவர் நம் ராமானுஜர், நம் தமிழர்.

அநந்தாழ்வார் தன் மனைவியுடன் திருமலையிலேயே வாசம் செய்தார்.

தினமும் திருமலையில் உள்ள பூக்களை தொடுத்து பெருமாளுக்கு அலங்காரம் செய்து வந்தார்.
தான் வசிக்கும் இடத்திலேயே ஒரு நந்தவன பூந்தோட்டமும் அமைத்தார்.

அநந்தாழ்வாருக்கு
"இப்பொழுது நல்ல மழைக்காலமாக இருக்கிறது. தண்ணீர் நிறைய கிடைக்கிறது. பூக்கள் பூத்து குலுங்குகிறது. நல்ல வெயில் காலத்தில் தண்ணீர் இல்லாமல் போய் விட்டால், பூஞ்செடிகள் வாடி விடுமே!!
அதற்கு முன்னேற்பாடாக, இப்பொழுதே நாம் ஒரு பெரிய குளம் வெட்டி ஏற்பாடு செய்து விட்டோம் என்றால், இதன் மூலம் நம் புஷ்ப கைங்கர்யம் எப்பொழுதும் தடைப்படாமல் நடக்கும்"
என்று அவருக்கு திடீரென்று மனதில் தோன்றியது,

அருகிலேயே ஒரு குளம் அமைத்தால், நீர் பாய்ச்சி தினமும் பல வித பூக்கள் வளர்த்து தொண்டு செய்யலாமே என்று நினைத்தார்.

தினமும் பூக்கள் பறித்து, மாலை கட்டி, பெருமாளுக்கு பூங்கைங்கர்யமும் செய்கிறார், மீதி நேரத்தில், பெரிய குளம் வெட்டவும் ஆரம்பித்தார்.

ஒரு வைஷ்ணவன் 'உதவிக்காக அடுத்தவரிடம் கை நீட்ட கூடாது'.
கூலிக்கு ஆள் போட்டு குளம் வெட்ட, இவரிடமோ கையில் பணம் இல்லை.

கையில் பணம் இல்லை, ஆனால் பக்தி இருக்கிறது இவரிடம்.
பெருமாளுக்காக குளம் வெட்ட, ஆர்வம் மட்டுமே இவரிடம் உள்ள செல்வம்.


அநந்தாழ்வார் தன் மனைவியுடன்,சேர்ந்து இந்த குளம் வெட்ட ஆர்வமாக செயல் பட்டார்.
நிறைமாதமான மனைவியும் இவருக்கு அனுகூலமானவள், தெய்வ பக்தி உள்ளவள்.

அநந்தாழ்வார் மம்மட்டியால் மண்ணை தோண்டி தோண்டி குழி அமைக்க, அவர் மனைவி அந்த மண்ணை கொண்டு போய் குளம் அமைக்கும் இடத்தை தாண்டி போய் கொட்டி விட்டு வருவாள்.

கையில் ஒரு சுமை, வயிற்றில் ஒரு சுமை என்று இருந்தும், நிறை மாத கர்ப்பிணியான இவள் பக்தியுடன் இந்த சேவையை பெருமாளுக்கு செய்தாள்.

கரடு முரடான பாதையில் நடந்து மூச்சு வாங்க இளைப்பாறி, நடந்து கொண்டிருக்கும் அந்த அம்மாளை மலையில் இருந்த ஒரு வேடுவன், கவனித்தான்.

அவள் கர்ப்பவதியாக இருப்பதை கண்டு, மனம் கலங்கி,
மெல்ல அவளிடம் சென்று,
"அம்மா, நீங்கள் செய்யக்கூடிய காரியமா இது?
நான் இந்த காட்டில் எதற்கு இருக்கிறேன்?. கொடுங்கள். நான் இந்த மண்ணை கொட்டி, குளம் கட்டும் வரை உதவி செய்கிறேன்"
என்று சொன்னான்.

அநந்தாழ்வார் மனைவியோ,
"இது தன் கணவனும், தானும் மட்டுமே செய்ய வேண்டிய கைங்கர்யம். பெருமாளுக்காக செய்கிறோம்"
என்றாள்.

வேடுவன்
"அம்மா, பெருமாளுக்காக செய்யும் கைங்கர்யம் என்று சொல்லி, நீங்கள் மட்டும் செய்யலாமா?
நானும் சேர்ந்து செய்தால் எனக்கும் புண்ணியமாகி போகுமே"
என்றான்.

அந்த அம்மாளோ,
"கணவர் மற்றவர் இந்த கைங்கர்யம் செய்ய பிரியப்படமாட்டார்" என்றாள்.
இனி பேசி ஒன்றும் ஆகாது என்று, அந்த வேடுவன் அந்த அம்மாளின் கையில் இருந்த மண் சட்டியை பிடுங்கி, அவள் கேட்காமலே எடுத்து சென்று கொட்டி விட்டு அவள் கையில் கொடுத்தான்.

வேடுவன்
"அம்மா, இந்த நிலையில் நீங்கள் வேலை செய்வது எனக்கு கவலை தருகிறது.
நீங்கள் பேசாமல் அவரிடம் இருந்து மண்ணை கொண்டு வந்து என்னிடம் தாருங்கள். நான் கொட்டி வருகிறேன்"
என்றான்.

மறுப்பு சொல்ல முடியாமல், அந்த அம்மாள், திரும்ப சென்று, மண் அள்ளிக்கொண்டு வர,
அவளிடம் அந்த மண்ணை வாங்கி, கிடு கிடு வென்று ஓடி போய் மண்ணை கொட்டி விட்டு வந்தான் வேடுவன்.

மீண்டும் மண்ணை அள்ள வந்த தன் மனைவியை பார்த்து,
"எப்படி இவ்வளவு சீக்கிரமாக வருகிறாய்?
நான் சொன்ன இடத்தில் கொட்டாமல் அருகிலேயே மண்ணை கொட்டி விட்டு வருகிறாயா?"
என்றார் அநந்தாழ்வார்.

"இல்லை, வேறொருவர் தான் இந்த கைங்கர்யத்தை செய்கிறார்.
வேண்டாம் என்றாலும், வற்புறுத்தி செய்கிறார்"
என்று உண்மையை அப்படியே சொன்னாள்.

"வேறொருவருக்கு எதற்காக நம் கைங்கர்யத்தை கொடுக்கிறாய்?"
என்று  கேட்க,
"நான் வேண்டாம் என்றாலும், கேட்காமல் அவரே நான் எடுத்து செல்லும் மண் சட்டியை பிடுங்கி கொட்டிவிட்டு தருகிறார்."
என்று இவள் சொல்ல
அநந்தாழ்வார் கோபத்துடன்
"யார் அந்த வேடுவன் தன் கைங்கர்யத்தில் இடைஞ்சல் செய்வது?"
என்று சென்று பார்த்தார்.

இவர் வருவதை பார்த்த அந்த வேடுவன், மெதுவாக அவர் முன்வந்து நின்றான்.

அநந்தாழ்வார் கோபத்துடன்
"யாரப்பா நீ? எதற்காக நாங்கள் செய்யும் காரியத்தில் வந்து இடைஞ்சல் செய்கிறாய்?
நீ எதற்காக இப்படி அடுத்தவர் செய்யும் வேலையில் குறுக்கீடு செய்கிறாய்?
உன் உதவி ஒன்றும் தேவை இல்லை.
நாங்களே இதை செய்து கொள்கிறோம்"
என்றார்.

"ஸ்வாமி, நல்ல காரியம் தானே செய்கிறீர்கள். உங்களுடன் சேர்ந்து நானும் செய்கிறேனே?"
என்றான் வேடுவன்.


"நீ கைங்கரியம் செய்ய ஆசைப்பட்டால், தனியாக நீயே ஒரு தோட்டம் போடு.
நான் செய்யும் கைங்கர்யத்துக்கு போட்டிக்கு ஏன் வருகிறாய்?
புண்ணியம் வேண்டுமானால் தனியாக செய்யேன்.. யார் தடுத்தது?"
என்றார் கோபமாக.

"எனக்கு புண்ணியமெல்லாம் வேண்டாம் சாமி.
இந்த கர்பவதியாக இருக்கும் அம்மாள் இப்படி கஷ்டப்பட்டு மண்ணை தூக்கி வருவது எனக்கு தாங்கவில்லை."
என்றான்.

"அயோக்கிய பயலே, நான் தாலி கட்டியவன். எனக்கு இல்லாத அக்கறை, பரிவு உனக்கு வந்து விட்டதோ?"
என்றார் கோபமாக.

"இல்ல சாமி,  எப்பொழுதும் கணவனை காட்டிலும் அம்மாவுக்கு தன் பிள்ளை மேல் அதிக கருணை இருக்கும்.
இந்த அம்மா படும் கஷ்டத்தை என்னால் சகிக்க முடியவில்லை.
என்னை உங்கள் பிள்ளையாக நினைத்து, இந்த கைங்கர்யம் செய்ய அனுமதி அளியுங்கள்"
என்று வேடுவன் கேட்க,

"போடா பயலே... "
என்று அதட்டி அடிக்க வருவதற்குள், அந்த வேடுவன் ஓடி விட்டான்.

இதற்கு பின், திரும்பி மீண்டும் குளம் வெட்டும் இடத்திற்கு வந்தார்.
தன் மனைவியை பார்த்து,
"அந்த பயல் வந்தால் இனி கொடுக்காதே !
நாம் இரண்டு பேர் மட்டுமே சேர்ந்து, இந்த கைங்கர்யத்தை செய்து முடித்திட வேண்டும்.
திருமலையப்பன் பார்க்க வருவார் என்பதற்காக நாம் இதை செய்யவில்லை.
நம் ராமானுஜர் வரும்போது, இந்த கைங்கர்யத்தை நாம் இருவரே செய்தோம் என்று காட்ட வேண்டும்."
என்று சொல்லி, மீண்டும் அவர் குளம் வெட்ட ஆரம்பிக்க, அந்த அம்மாளும் மீண்டும் மண்ணை அள்ளிக் கொண்டு நடக்கலானாள்.

போய் விட்டான் என்று நினைத்த அந்த வேடுவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

மீண்டும் அந்த அம்மாளை பார்த்து
"அம்மா, அவர் கிடக்கிறார் விடுங்கள். ரொம்ப  கோபக்காரர் போல.
அவர் சொல்கிறார் என்பதற்காக நான் போக நினைத்தாலும், உங்களை இப்படிவேலை செய்ய விட்டுவிட்டு என்னால் செல்ல முடியவில்லை"
என்றான்.

அந்த அம்மாள்,
"வேண்டாமப்பா..  அவர் யார் உதவியும் வேண்டாம் என்கிறார்" என்று சொல்லிகொண்டிருக்கும் போதே மீண்டும் அவளிடம் இருந்து மண் சட்டியைபிடுங்கி கொண்டு ஓடி போய் கொட்டிவிட்டு வந்து, சட்டியை கொடுத்தான்.

எதிர்க்கவும் முடியாமல், என்ன செய்வது என்று தெரியாமல், அந்த அம்மாள்அநந்தாழ்வார் இருக்கும் இடம் சென்றாள்.

மகா உத்தமியான அவள் தன் கணவனிடம், அந்த வேடுவன் மீண்டும் வந்து என் கையிலிருந்து பிடுங்கி கொட்டுகிறான் என்று உண்மையை சொன்னாள்.

அநந்தாழ்வார் வந்ததே கோபம். 'தான் இருவர் மட்டுமே செய்ய நினைத்த கைங்கர்யத்தை' இவன் வந்து கெடுக்கிறானே என்று ஆத்திரத்துடன் அவன்  இருக்கும் இடம் நோக்கி வந்தார்.
"ஏண்டா... உன்னை இங்கிருந்து கிளம்பு என்று சொல்லியும் எங்கள் கைங்கர்யத்தை கெடுக்க வந்தாயா?"
என்று கையில் இருந்த மம்மட்டியுடன் அருகில் வர,
கோபத்துடன் வருகிறார் என்று அறிந்த அந்த வேடுவன், ஓட ஆரம்பிக்க, இவர் துரத்திக்கொண்டே, தன் கையிலிருந்த மம்மட்டியை அவன் மேல் வீச, அந்த வேடுவன்  உதட்டில் பட்டு, ரத்தம் வர ஆரம்பித்து.
தாடையை பிடித்துக்கொண்டே காட்டில் ஓடி மறைந்து விட்டான்.

திரும்பி வந்த அநந்தாழ்வார் அன்றைய நாள் குளம் வெட்டும் வேலையை முடித்து,
அன்றைய பொழுது பெருமாளுக்கு கட்ட வேண்டிய பூ மாலையை கட்ட ஆரம்பித்தார்.

இன்று நடந்த சண்டையால், பெருமாளுக்கு பூ மாலை கட்டி முடிக்க, கொஞ்சம் நேரம் ஆகி விட்டது.

திருவாராதனைக்கு நேரம் ஆக, வெங்கடேச பெருமாள், கோவில் அர்ச்சகர் மூலமாக ஆவேசித்து,
"அநந்தாழ்வாரை உடனே சன்னதிக்கு அழைத்து வா"
என்றார்.

அங்கிருந்த அர்ச்சகர்கள், அநந்தாழ்வாரிடம் ஓடி சென்று தெரிவிக்க,
"இப்பொழுது தான் மாலை கட்ட ஆரம்பித்துள்ளேன். பாதியில் வந்தால் என் கைங்கர்யம் விட்டு போனதாகும். கட்டி முடித்ததும் நானே வருகிறேன்.
பூ மாலை கட்ட சொல்லி, ஸ்ரீராமானுஜர் எனக்கு அளித்த கைங்கர்யம் இது.
பூ மாலை கட்டி முடித்த பின் வருகிறேன்"
என்று சொல்லி அனுப்பினார்.

உடனே பெருமாள்
"கூப்பிட்ட போது வரவில்லையென்றால், உமது மாலை எமக்கு தேவையில்லை."
என்று சொல்லி அனுப்ப,

பதிலுக்கு அநந்தாழ்வார்,
"மாலையை போட்டுக்கொள்ளட்டும், போட்டுக்கொள்ளாமல் இருக்கட்டும்.
பூ மாலை கட்டி கோவிலில் கொடுக்க வேண்டியது என் தொண்டு.
அந்த பூ மாலையை போட வேண்டியது அர்ச்சகர், போட்டுக்கொள்ள வேண்டியது நீர்."
என்று சொல்லி திருப்பி அனுப்பினார்.

உடனே பெருமாள்,
"என் உகப்புக்காக பூ மாலை கட்டாமல், பின் யார் உகப்புக்காக மாலை கட்டுகிறீர் நீர்?"
என்று கேட்க,

பதிலுக்கு அநந்தாழ்வார்,
"உம்முடைய உகப்புக்காக நான் மாலை கட்டவே இல்லையே.
நான் பூ மாலை கட்டுவது என் ராமானுஜன் உகப்புக்காக. என் ஆச்சார்யான் ஸ்ரீராமானுஜர் ஆசை பட்டார் என்றல்லவோ மாலை கட்டிக்கொண்டு இருக்கிறேன்."
என்று பதில் கூறினார்.

உடனே பெருமாள்
"கூப்பிட்ட பொழுது நீர் இங்கு வரவில்லையென்றால், இனி நீர் இங்கு இருக்க கூடாது.
திருமலையை விட்டு இறங்கும். இனி இங்கு இருக்க கூடாது. நீ உன் சொந்த ஊருக்கே போ. என்னை மதிக்காமல் நீ இங்கு இருக்க கூடாது"
என்றார்.


அநந்தாழ்வார் பதிலுக்கு,
"நான் இருக்கக்கூடாது என்று சொல்வதற்கு நீர் யார்? நீரா என்னை அழைத்தீர்?
என்னை இங்கு போக சொல்லி யார் அனுப்பினாரோ, அவர் சொல்லாமல் நான் போக மாட்டேன்.
மேலும், உமக்கே இது சொந்த இடம் இல்லை.
உம்முடைய சொந்த ஊர் 'வைகுண்டம்'.
அதை விட்டு நீரும் இங்கு வந்துள்ளீர். நான் ஸ்ரீ ரங்கத்தில் இருந்து வந்துள்ளேன்.
இருவருக்குமே இது பொது இடம் தான்.
என்னை போ என்று சொல்ல உமக்கு உரிமை இல்லை"
என்று சொல்லிவிட்டார் அநந்தாழ்வார்.

அதற்கு மேல் வாக்குவாதம் செய்யாமல் பெருமாள் அமைதியாகி விட்டார்.

அநந்தாழ்வார் தான் கட்டிக்கொண்டிருந்த பூ மாலை கைங்கர்யத்தை முடித்து விட்டு, கோவிலுக்குள் பூக்கூடையுடன் வந்தார்.
பொதுவாக,

  • தொடுத்த பூமாலையை அர்ச்சகர் வாங்கி, பெருமாளுக்கு போட்டு,
  • தான் கட்டிய பூமாலையுடன் பெருமாள் இருக்கும் அழகை வெகு நேரம் ரசித்து,
  • துளசி, தீர்த்தம், சடாரி வாங்கிய பின்பு தான் 

திரும்பி செல்வார் அநந்தாழ்வார்.

இன்றோ,
அநந்தாழ்வார் "இப்படி பெருமாளிடம் எதிர்த்து கோபமாக பேசி விட்டோமே !!
பெருமாள் நம்மிடம் கோபமாக இருப்பாரே !!" 
என்று தனக்குள்ளேயே வெட்கப்பட்டு, பூமாலையை வைத்து விட்டு, பெருமாளை கூட பார்க்காமல் கிளம்ப முற்பட்டார்.

"ராமானுஜன்" என்ற பெயரை கேட்ட பின்னும், பெருமாளுக்கு கோபம் வருமா?
வெங்கடேச பெருமாளுக்கு துளி கூட கோபம் இல்லை.
ஆனால் பெருமாள் கோபமாக இருப்பாரோ? என்று அநந்தாழ்வாராகவே நினைத்து கொண்டார்.

தலை குனிந்தே வந்து, பூக்கூடையை சன்னதியில் வைத்து விட்டு, தலை குனிந்த படியே திரும்பி செல்ல முயல,
ராமானுஜ அடியானான அனந்தாழ்வார் தன்னை பார்க்க மாட்டாரா? என்று பெருமாள் எதிர்பார்க்க,
உடனே,
பெருமாள் அர்ச்ச அவதார ரூபத்திலேயே "அநந்தாழ்வான்" என்று குரல் கொடுக்க,
அநந்தாழ்வார் திரும்பி பெருமாளை பார்க்க, அவர் கண்ணில் பெருமாளின் தாடையிலிருந்து ரத்தம் வழிவது தெரிந்தது.
"ஆ..." என்று அலறினார். மூர்ச்சை ஆகிவிட்டார் அநந்தாழ்வார்.
சிறிது நேரம் கழித்து, மூர்ச்சை தெளிந்த அநந்தாழ்வார்,
"இன்று ஒரு வேடுவனை மண் வெட்டியால் அடித்தோமே" என்பது ஞாபகம் வர, "தான் செய்யும் கைங்கர்யத்தில் சேர்ந்து கொள்ள வந்தது பெருமாள் தான்" என்று புரிந்ததும் கதறினார்.

மேலும்,
'திருமலையில் பூக்கள் சிந்தி உள்ளதே'
என்று நினைத்ததற்கே என் ஆச்சார்யான் கண்ணீர் விட்டார் என்றால்,
'எம்பெருமான் திருமேனியில் இப்படி ஒரு காயம் வந்து விட்டது'
என்று என் ஆச்சார்யனுக்கு தெரிந்தால், எத்தனை துக்கப்படுவார்?
இனி என் ஆச்சார்யனுக்கு எதிரில் நிற்க முடியுமா?
'நான் அவர் உகப்புக்காக கைங்கர்யம் செய்கிறேன்' என்று சொல்லி வந்து விட்டு, அவர் மனது தவிக்கும் படியாக இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டேனே, எம்பெருமானே !!

ப்ராக்ருத சரீரம் என்றால், ஒரு வைத்தியனை அழைத்தாவது காயத்திற்கு மருந்து கொடுப்பேன்.
இந்த சரீரமோ திவ்ய மங்கள விக்ரஹம் ஆயிற்றே!!  நான் எங்கு போய் இதற்கு மருந்து தருவேன்?"
என்று கதற ஆரம்பித்தார் அநந்தாழ்வார்.

உடனே பெருமாள்
"அநந்தாழ்வார், எனக்கு தொண்டர் அடி பொடி வேண்டும். பாகவதனின் பாத துளியே எனக்கு மருந்து. கொடுப்பீரா?"
என்று சொல்லி அநந்தாழ்வார் நடந்து வந்த பாத தூளியே தனக்கு மருந்தாக ஏற்று கொண்டார் திருமலையப்பன்.
அதையே "ஸ்ரீ பாதரேணு" என்கிறோம்.

இன்று வரை பெருமாளுக்கு தாடையில் பச்சை கற்பூரத்தை பாதரேணுவாக வைத்து, அதை நமக்கு பிரசாதமாகவும் தருகிறார்கள்.

அந்த பிரசாதம் சர்வ வியாதிக்கும் நிவ்ருத்தி ஆகிறது.

கருணா மூர்த்தியான எம்பெருமான்,
"தன் அடியார்கள் ஆர்வத்துடன் செய்யும் சிறு கைங்கர்யத்தையும் ஆசையுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஒரு துளசி இலையானாலும், ஒரு பூவானாலும், ஒரு பழமானாலும் அதை ஆர்வத்துடன் கொடுத்தால், ஆசையுடன் ஏற்றுக்கொள்கிறேன்."
என்கிறார்.
அநந்தாழ்வார் செய்த சிறு பூ கைங்கர்யத்துக்கு அத்தனை ஆசைப்பட்டு, அவருடன் சேர்ந்து தானும் செய்ய ஆசைப்பட்டார். அது போதாது என்று, தனக்கு செய்யும் தொண்டனின் பாத தூளியே தனக்கு பிடித்தமானது என்றும் ஏற்றுக்கொண்டார் திருமலையப்பன்.
இன்றும் வெங்கடேசபெருமாள் பச்சை கற்பூரமாக ஸ்ரீ பாத ரேணுவாக ஏற்று, இதை சாத்திக்கொள்கிறார்.

பரம வைஷணவரான அநந்தாழ்வார், திருமலையிலேயே இருந்து பெருமாளுக்கு கைங்கர்யம் செய்தார்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka  


Monday 9 January 2017

எளிதான ஆஞ்சனேயர் ஸ்லோகம்

எளிதான ஆஞ்சனேயர் ஸ்லோகம்.

ஆஞ்சனேய மதி பாடலாலனம்
காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம் !
பாரிஜாத தருமூல வாஸினம்
பாவயாமி பவமான நந்தனம் !!

சிவந்த முகம் உடையவரும்,
தங்கம் போன்ற காந்தி உடையவரும்,
பாரிஜாத மரத்தின் அடியில் வஸிப்பவரும்,
வாயு குமாரனுமான ஆஞ்சனேயரை தியானிக்கின்றேன்.


யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம் !
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷ ஸாந்தகம் !!

எங்கெங்கு ராம நாம கீர்த்தனம் நடக்கிறதோ,
அங்கங்கு சிரமேற் கை குவித்து,
ஆனந்தக் கண்ணீருடன் நிற்பவரான,
மாருதியை வணங்குங்கள்.
மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் !
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராம தூதம் சிரஸா நமாமி !!

மனதை விட வேகமானவரும்,
புலன்களை அடக்கியவரும்,
புத்திமான்களில் சிறந்தவரும்,
வானரர்களில் முக்கியமானவரும்,
வாயு குமாரனுமான ஸ்ரீ ராம தூதனை வணங்குகிறேன்.

புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா !
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச
ஹனுமத் ஸ்மரணாத் பவேத் !!

ஹனுமானை நினைப்பதால் புத்தியும், பலமும், புகழும், தைரியமும், அபயமும், ஆரோக்யமும், கல்வியும், பேச்சுத் திறமையும் உண்டாகும்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka

தெய்வத்திலும் "தாமஸம், ராஜசம், சாத்வீகம்" உண்டு. இதற்கான விளக்கத்தை அறிந்து கொள்வோமே

குணத்தில் "தாமஸம், ராஜசம், சாத்வீகம்" இருப்பது போல,
உண்ணும் உணவிலும் "தாமஸம், ராஜசம், சாத்வீகம்" இருக்கிறது
என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.




அது மட்டுமல்ல, தெய்வத்திலும் "தாமஸம், ராஜசம், சாத்வீகம்" உண்டு என்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ணர் "சாத்வீக தெய்வம்".
நாராயணனின் 10 விபவ அவதாரத்தில் ஒரு அவதாரமே "ஸ்ரீ கிருஷ்ணர்".

ராஜச, தாமச தெய்வங்களையும், பரம்பொருளான இவரே படைத்தார்.

சாத்வீக தெய்வமான நாராயணனை நோக்கி வருபவர்களும் சாத்வீக குணத்தையே அடைகிறார்கள்.
உணவும் சாத்வீகமாகவே உள்ளது.
தன்னை அன்புடன் பக்தி செய்ய விரும்புபவர்கள், முடிந்தால் ஒரு துளிசி இலை, ஒரு துளி நீரும் கொடுத்தாலே மகிழச்சியாக ஏற்று கருணை செய்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

மனிதர்கள் அவர்கள் உணவு பழக்கத்தினாலும், தன்னை சுற்றி இருப்பவர்களின் குணத்தினாலும், அனைவரும் சாத்வீகர்களாக இருக்க மாட்டார்கள் என்பதால், அவரே ராஜச தெய்வங்களையும், தாமச தெய்வங்களையும் படைத்தார் கருணையின் காரணமாக.

சாத்வீக தெய்வமான நாராயணனின் அனுகிரஹம் கிடைத்த எவரும் இன்று வரை நாசம் போனது இல்லை.
பிரகலாதன், ஹனுமான் முதல் ராமகிருஷ்ண பரமஹம்சர், கிருஷ்ண சைதன்யர், காந்தி, வீர சிவாஜி என்று எவரும் இன்றும் ப்ரகாசிக்கிறார்கள்.

ராஜச, தாமச தெய்வங்கள் கொடுக்கும் வரங்கள் துன்பத்தையும், பல சமயம் வாங்கிய வரங்களே சாபமாக கூட முடியும்.

சாத்வீக தெய்வங்களை விட தாழ்ந்தது, இந்த ராஜச, தாமச தெய்வங்கள்.

ராவணன் போன்றவர்களுக்கு சாத்வீக பூஜை செய்ய தெரிந்தாலும், அவனை பொறுத்தவரை யாகம் செய்ய வேண்டும் என்றால், தன் 10 தலைகளையே வெட்டி பலி போடுவான்.
அவனுக்கு அப்படி செய்தால் தான், அவனுக்கு பூஜையில் ஒரு திருப்தி உண்டாகும்.

இப்பொழுது கூட சில வழிபாடுகளில் ஹிந்து மதத்திலும், சில மற்ற மதத்திலும் ஆடு மாடு என்று இறைவனின் பெயரால் பலி இடுகின்றனர் என்று பார்க்கிறோம்.
காபாலிகள் என்ற இனம், அசாம் என்ற மாநிலத்தில் ஆதி சங்கரர் காலத்தில் இருந்ததை பார்க்கிறோம்.
அவரையே கடவுளின் பெயரால் பலியிடவும் முயன்றனர் என்றும் பார்க்கிறோம்.
ராஜசமான பூஜை செய்யும் ராவணனுக்கு (இராவணன் போன்றோருக்கும்) சாத்வீக தெய்வமான நாராயணன் மீது ஒரு த்வேஷம் இயற்கையாக வருகிறது.

சிவன் சாத்வீக தெய்வமானாலும் சம்ஹார தெய்வமும் கூட.
அதனாலேயே,
இவர் ராஜச பூஜை செய்பவனை ஏற்றுக்கொள்வது போல ஏற்று, பின் சம்ஹாரத்திற்கு வழி செய்கிறார்.
சிவனிடம் தன் பக்தியை சிவனடியார்கள் சாத்வீக முறையில் காட்டினர் என்று பார்க்கிறோம். அவர்களுக்கு சிவ பதம் கிடைத்தது.
ஆனால் ராவணனுக்கோ, சிவனிடம் தன் பக்தியை காட்ட இமைய மலையையே தன் 20 கைகளால் தூக்க நினைத்தான் என்று பார்க்கிறோம். இப்படி தூக்கினால் தான் "பக்தி" என்பது அவன் நினைப்பு.




அது போல இன்றும் பலர், ஹிந்து மதத்திலும், மற்ற மதத்திலும் இது போன்ற ராஜச பூஜை செய்கின்றனர் என்பதை பார்க்கிறோம்.
சில தெய்வங்களுக்கு மது, பிஸ்கட் போன்ற தாமச உணவுகள் படைக்கப் படுவதை பார்க்கிறோம்.
இன்றும் பலர் ஹிந்து மதத்திலும், மற்ற மதத்திலும் இது போன்ற தாமச பூஜை செய்கின்றனர் என்பதை பார்க்கிறோம்.

தாமச தெய்வங்களையும் விட தாழ்ந்தது பிசாசுகள், ஆவிகள்.
இவை தெய்வங்கள் அல்ல.
தற்கொலை செய்து கொண்ட மனிதர்கள்.
இறந்த பின் தகனம் மற்றும் 10 நாள் காரியம் செய்யப்படாமல் புதைக்கப்பட்ட பிணங்களின் ஆத்மாவே இவைகள்.

இவைகளிடமும் சிலர் ஒரு வித பூஜை செய்து ஆவிகளுடன் பேசுகின்றனர். இதுவும் தாமச குணம் உள்ளவையே.

சாத்வீக உணவு மட்டுமே உண்டு வந்தால், படிப்படியாக சாத்வீக குணங்கள் அதிகரிக்கும்.
சாத்வீக குணம் உள்ளவனுக்கு, குட்டி பிசாசு, ராஜச, தாமச தெய்வங்களை பூஜை செய்து வசியம் செய்வதை விட, சாத்வீக தெய்வமான முழு முதற்கடவுள் நாராயணனை வழிபட எண்ணம் தோன்றும்.

வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாக ஆகும்.
ஸ்ரீ கிருஷ்ணரை தன் இஷ்ட தெய்வமாக கொண்டவன், மோக்ஷத்திற்கு வழி செய்து கொள்கிறான்.
கிருஷ்ண பக்தன் நாசமாவதே இல்லை.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 
sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 



sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka