Followers

Search Here...

Tuesday 15 September 2020

உயிர்த்தெழுந்தார்கள் !! வானரர்கள் எத்தனை முறை உயிர்த்து எழுந்தார்கள்? தெரியுமா? தெரிந்து கொள்வோம் வால்மீகி ராமாயணம்..

வானரர்கள் எத்தனை முறை உயிர்த்து எழுந்தார்கள்?


1.

மாயையால் தன் ரூபத்தை மறைத்து கொண்ட இந்திரஜித், ப்ரம்மாஸ்திரம் (nuclear bombக்கு நிகர் என்று இன்று சொல்லலாம்) கணக்கில்லாமல் செலுத்தினான்.

ஹனுமான், விபீஷணன், ஜாம்பவான் மூவரை தவிர, அனைவரையும் சாய்த்து விட்டான்.




எங்கிருந்து அம்புகள் பாய்கிறது? என்றே தெரியாமல், அனைவரும் விழுந்தனர்.

ஜாம்பவான் ஹனுமானை சஞ்சீவினி மூலிகையை ஹிமாலயத்தில் இருந்து எடுத்து வர சொன்னார். 

இலங்கையில் இருந்து காற்றாக கிளம்பி, ஹிமாலயம் சென்று, சஞ்சீவினி இருக்கும் மலையையே பெயர்த்து தூக்கி வந்து விட்டார்

அந்த மூலிகையின் வாசம் பட்டவுடனேயே இறந்து கிடந்த வானரர்கள், தூங்கி எழுந்தது போல, எழுந்தனர். 

அவர்கள் உடம்பில் ஏற்பட்ட காயங்கள் உடனே சரியானது. 

ராம லக்ஷ்மணர் இருவரும் எழுந்து விட்டனர்.

(கந்தேன தாசாம் ப்ரவர ஒளஷதீனாம் சுப்தா நிஷான்தேஷ்வ சம்ப்ரபுத்தா ! - வால்மீகி ராமாயணம்)

இலங்கை போரில் பல வானரர்களும்,  பல ராக்ஷஸர்களும் மடிந்தனர். 

ராக்ஷஸர்கள் 'இறப்பை மறைக்க', உடனுக்குடன் ராக்ஷஸர்களை மட்டுமே அகற்றி, கடலில் எரிந்து விட்டனர் பிற ராக்ஷஸர்கள்.

(யதா ப்ரப்ருதி லங்காயம் யுத்யந்தே கபி ராக்ஷஸா! ததா ஹதாஸ்து ஷிப்யந்தே சர்வ ஏவ து சாகரே! - வால்மீகி ராமாயணம்)

சஞ்சீவினியால், ஒட்டு மொத்த வானரர்களும் மீண்டும் உயிர்த்து எழுந்தனர்.

2.

இந்திரஜித் கொல்லப்பட்டு, ராவணன் ராமபிரானால் சாய்க்கப்பட்டான்.




சீதா தேவியை பாரத்து, "உன் இஷ்டப்பட்ட இடத்தில் நீ வாழலாம்." என்று ராமர் சொல்லிவிட, சீதாதேவி தன் கற்பை நிரூபிக்க லக்ஷ்மணனை சிதை மூட்ட சொன்னாள். 

"என் இதயம் ராமபிரானை விட்டு ஒருபோதும் விலகியதில்லை என்ற உண்மையை, அனைவரும் இங்கு பார்க்கட்டும். இந்த அக்னி என்னை பாதுகாக்கட்டும்." என்று அக்னியில் இறங்கிவிட்டாள் சீதா தேவி. 

ராமபிரான் அமைதியாக இருக்க தேவர்கள், ப்ரம்ம தேவன், சிவபெருமான் அனைவரும் ப்ரத்யக்ஷம் ஆகி விட்டனர்.

தெய்வங்கள் தனக்கு முன்னே தானாக வந்து நிற்க, கை குவித்து நின்றார் ராமபிரான்.

"ஏன் இப்படி செய்தீர்கள்? மூன்று உலகங்களையும் படைத்தவர் நீங்கள். நீங்கள் யார் என்று உங்களுக்கு தெரியவில்லையா? எப்படி நீங்கள் சீதா தேவியை அக்னியில் செல்ல அனுமதித்தீர்கள்?" 

என்று ப்ரம்ம தேவன் பதறிப்போய் கேட்க, 

(த்ரயானாம் த்வம் ஹி லோகானாம் ஆதிகர்தா ஸ்வயம் ப்ரபு: - வால்மீகி ராமாயணம்)

இப்படி ப்ரம்ம தேவன் ப்ரத்யஷமாகி "நீங்களே ஆதிகர்தா! நீங்களே பரமாத்மா!" என்று பேச ஆரம்பிக்க, மனித அவதாரம் செய்து இதுநாள் வரை தன் சரித்திரத்தை மனிதனை போலவே நடத்தி கொண்டு வந்த ராமபிரானுக்கு நிலைமையை சமாளிக்கும் படியாக ஆகி விட்டது.

ப்ரம்ம தேவனை பார்த்து, ராமபிரான், 

"நான் இதுநாள் வரை, என்னை மனிதன் என்று தான் நினைக்கிறேன் (மன்யே). 

தசரத மஹாராஜனின் புத்திரன் என்று தான் நினைக்கிறேன். அது இல்லையென்றால், சொல்லுங்கள்.. நான் யார் என்று?" 

என்று கேட்க, 

(ஆத்மானாம் மானுஷம் மன்யே! ராமம் தசரத ஆத்மஜம்! யோயம் யஸ்ய யதஸ்சாஹம் பகவாம்ஸ்தத அப்ரவீத் மே!! - வால்மீகி ராமாயணம்)

ப்ரம்ம தேவன் "ராமபிரானே நாராயணன். வேதம் உங்களை தான் பேசுகிறது. அனைவருக்கும் அடைக்கலம் தருபவர் நீங்கள் தான்.." என்று பெரிய ஸ்தோத்திரம் செய்கிறார்.

ப்ரம்ம தேவனே தைரியமாக ராமபிரான் முன் வந்து பேசி விட, 

அக்னி தேவன் ப்ரத்யஷமாகி, அக்னியில் இருந்து சீதா தேவியோடு வெளி வந்து விட்டார்.

(ஏத ஸ்ருத்வா சுபம் வாக்யம் பிதாமஹ சமீரிதம்! அங்கேநாதாய வைதேஹீம் உத்பபாத விபாவசு!! - வால்மீகி ராமாயணம்)

"சீதை களங்கம் அற்றவள் என்பதற்கு நானே சாட்சி. இதோ சீதை. ஏற்றுக்கொள்ளுங்கள்

என்று கொடுத்து விட்டு அமைதியாக நின்றார் அக்னி தேவன்.

'சீதா தேவி அக்னியில் இறங்குகிறேன்' என்று சொல்லியும், ராமபிரான் ஏன் அமைதியாக இருந்தார்? 

அவர் என்ன எதிர்பார்த்தார்? 

என்பது ராமபிரான் இங்கு பேசும்போது தெரிகிறது.


"உத்தமியான சீதை, ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட பின், மூவுலகும் சேர்ந்து கொண்டு, தந்த துன்பத்தை இவள் அனுபவித்தது நியாயமே இல்லை.

(அவஸ்யம் த்ரிஷு லோகேஷு ந சீதா பாபம் அர்ஹதி! தீர்க காலோஷிதா ஹீயம் ராவணான்த: பூரே சுபா:! - வால்மீகி ராமாயணம்)

ராவணனிடம் இருந்து மீட்கப்பட்ட சீதையை நான் அமைதியாக ஏற்று இருந்தால், உலகம் என்னை சிறுபிள்ளை தனமாக ஏற்று கொண்டு விட்டான் என்றும், காமம் உடையவன் என்று தான் சொல்லி இருக்கும். 

(பாலிச: கலு காமாத்மா ராமோ தசரத ஆத்மஜ: - வால்மீகி ராமாயணம்)

சீதை கற்புக்கரசி என்பதை நான் அறிவேன். அவள் என் இதயத்தில் எப்பொழுதும் வாழ்பவள்."

என்றார்.


சீதையை தொலைத்த போது, தான் சர்வேஸ்வரனாக இருந்தும், தர்மத்தின் ரூபமாக மனித அவதாரம் எடுத்த பரமாத்மா "சீதை எங்கே? சீதை எங்கே?" என்று தேடுவது போல தேட, 'மனிதன் தானே!' என்று அமைதியாக இருந்தனர் தேவர்கள். 




ராமபிரான், உண்மையில் மரத்தையும் செடியையும் கேட்கவில்லை. அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கும் தேவர்களையும், ப்ரம்ம தேவனையும், சிவபெருமானையும் தான் கேட்டார்.

தனக்கு இவர்கள் யாரும் பதில் சொல்லாத நிலையில், ராமபிரான் அப்போது கோபப்பட்டார். 

"சத்யத்தில் இருக்கும் மனிதனுக்கு, இந்த தெய்வங்கள் உதவி செய்வதில்லையா?" என்று நினைத்தார். 

"சத்யத்தில் இருப்பவர்கள் கஷ்டப்படும் போது, தெய்வங்கள் உதவி செய்யாது போனால், இந்த மூவுலகும் இனி தேவையில்லை. மூவுலகையும் அழித்து விடுகிறேன்" என்று கோபப்பட்டார்.  

அப்போது லக்ஷ்மணன் சமாதானம் செய்தார்.


சீதை இன்று அக்னியில் இறங்கும் போதும், இந்த தெய்வ பரிவாரங்கள் வராவிட்டால், உலகை அழிப்பது என்று நினைத்து இருந்தாராம். 

'இப்போது அனைவரும் ப்ரத்யஷமானதால் என் கோபத்தில் இருந்து தப்பித்தீர்கள்' என்பது போல பேசுகிறார் ராமபிரான்,

ராமபிரான் சொன்னார், 

"இந்த மூவுலகும் சத்யத்தில் இருக்க நினைக்கிறதா? என்று பார்க்கவே, சீதை அக்னியில் பிரவேசம் செய்த போதும் நான் பாராமுகமாக இருப்பது போல இருந்தேன்.

(ப்ரத்யார்தம் து லோகானாம் த்ரயானாம் சத்ய சம்ஸ்ரய:! உபேக்ஷே சாபி வைதேஹீம் ப்ரவிசந்தீம் ஹதாசனம்! - வால்மீகி ராமாயணம்)

எப்படி கடல் தன் எல்லையை கடக்காமல் இருக்கிறதோ! அது போல, சீதை என்றுமே தன் எல்லையை கடக்காதவள். ராவணன் இவளை நெருங்கவே முடியாது என்று அறிவேன்.

ராவணன் அவள் மனதில் கூட சஞ்சலம் செய்ய முடியாது. கொழுந்து விட்டு எரியும் அக்னியை யார் தொட முடியும்?

ராவணனின் பெரும் செல்வத்தை கண்டு மயங்காதவள் சீதை.

ஒளி எப்படி சூரியனை விட்டு என்றுமே பிரியாததோ, அது போல, சீதை என்னை விட்டு என்றுமே பிரியாதவள். 

மூன்று உலகிலும் உத்தமியானவள் சீதை. 

என் புகழ் எப்படி என்னை விட்டு என்றுமே பிரியாததோ, அது போல, சீதை என்னை விட்டு என்றுமே பிரியாதவள். 

(விசுத்தா த்ரிஷு லோகேஷு மைதிலீ ஜனகாத்மஜா! ந ஹி ஹாதுமியம் சக்யா கீர்த்திர் ஆத்மவதா யதா! - வால்மீகி ராமாயணம்)

உலகில் மதிப்பு மிக்க ஸ்தானத்தில் இருக்கும் நீங்கள் அனைவரும் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் என் நலத்தில் அக்கறை உடையவர்கள் என்றும் அறிவேன்"

என்றார்.


"ராமபிரானின் புகழ்" இன்று வரை ஓங்கி இருக்கிறது. 

ராமபிரானின் புகழை யாருமே அழிக்க முடியாது...என்று ராமபிரானே சொல்கிறார்... 

கவனித்தீர்களா?

ராமபிரானின் புகழ் அழியாத தன்மையுடன் இருப்பதில் ஆச்சர்யமில்லையே...


இப்படி ராமபிரான் பேசி, சாதாரண மனிதன் போல, கை குவித்து நிற்க, உடனே சிவபெருமான் பேசலானார்..

"தாமரை கண்களுடைய, நீண்ட கைகள் உடைய, உறுதியான நெஞ்சம் கொண்ட, வில்வித்தையில் பராக்கிரமம் கொண்ட, புனிதனே! நீங்கள் வந்த காரியத்தை செய்து முடித்தீர்கள்.

உலகம் முழுவதும் இருளை பரப்பி இருந்த ராவணன் உங்களால் அகற்றப்பட்டு விட்டான்.

பரதனை, கௌசல்யா மாதாவை, கைகேயி மற்றும் லக்ஷ்மணன் தாயை கண்டு சமாதானம் செய்ய, உடனே செல்லுங்கள்.

அயோத்திக்கு அரசனாகுங்கள்.

உங்கள் இக்ஷ்வாகு குலத்தை மீண்டும் நிலைநாட்டுங்கள்.

அஸ்வமேத யாகம் செய்யுங்கள்.

உலகில் உங்களை யாராலும் வெற்றி கொள்ள முடியாது என்று பறைசாற்றுங்கள்.

வேத ப்ராம்மணர்களுக்கு தானம் கொடுங்கள்.

கடைசியாக விண்ணுலகம் வாருங்கள்.

அதோ அந்த திவ்ய ரதத்தில் இருக்கிறார் பாருங்கள்.. உங்கள் தந்தை தசரதர்.

உலகத்தில் நீங்கள் அவதாரம் செய்ய காரணமானவர்.  இப்பொழுது இந்திர லோகத்தில் இருக்கிறார்.

நீங்களும், லக்ஷ்மணரும் இவரை சேவியுங்கள்!" 

என்று சிவபெருமான் சொல்ல, 

ராமரும் லக்ஷ்மணரும் திவ்ய ரதத்தில் இருக்கும் தன் தந்தை தசரதரை நமஸ்கரித்தனர்.

பிறகு, தசரதர் இருவரையும் கட்டி கொண்டு மகிழ்கிறார்.

தன் சத்தியத்தை காக்க, வனவாசம் சென்ற ராமபிரானை கட்டி கொண்டு, அயோத்தியை அரசாள ஆசிர்வதித்தார்.

மேலும் கைகேயியை மன்னித்ததாகவும் ராமபிரானிடம் சொன்னார்.

சீதா தேவியிடம், "ராமபிரானை பற்றி தவறாக நினைக்க வேண்டாம். உன் பெருமையை உலகுக்கு காட்டவே இப்படி செய்தார்" என்று சமாதானம் செய்தார்.

லக்ஷ்மணனின் மகத்தான சேவையை சொல்லி மகிழ்ந்தார்.




இப்படி தசரதர் சொன்ன பிறகு, இந்திர தேவன் ராமபிரான் அருகில் வந்தார்..

"ராமா! உங்கள் தரிசனம் அமோகமானது. நாங்கள் பெரிதும் மகிழ்ந்தோம். உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்"

(அமோகம் தர்சனம் ராம தவ அஸ்மாகம் பரன்தப! ப்ரீதி யுக்தா ஸ்ம தேன த்வம் ப்ரூஹி யன்மனஸ் இச்சஸி! - வால்மீகி ராமாயணம்)

என்றார்.

அப்பொழுது ராமபிரான், இந்திர தேவனை பார்த்து, வானரர்களுக்காக வரம் கேட்கிறார்.

ராமபிரான் சொல்கிறார்,

"தேவர்களுக்கு தலைவனே! நீங்கள் என்னை கண்டு மகிழ்ந்து இருக்கிறீர்கள் என்றால், நான் உங்களிடம் என் ஆசையை சொல்கிறேன். அதை உண்மை ஆக்குங்கள்.

வாக்கு மீறாதவரே! இந்த போரில் எனக்காக சண்டையிட்டு உயிர் விட்ட வானரர்கள் பலர், யமலோகம் சென்று விட்டார்கள். 

அவர்கள் அனைவரையும் மீண்டும் உடல் கொடுத்து எழுப்பி விடுங்கள். 

(மம ஹதோ பராக்ராந்தா யே கதா எம சாதனம்! தே சர்வே ஜீவிதம் ப்ராப்ய சமுதிஷ்டந்து வானரா:! - வால்மீகி ராமாயணம்)

எனக்காக இத்தனை காலம் கடுமையாக உழைத்து, தன் மனைவி குழந்தைகளை விட்டு விட்டு, என் நலனுக்காக உயிரையே கொடுக்கவும் துணிந்தார்கள் இவர்கள்.

இவர்கள் அனைவரும் உங்கள் ஆசிர்வாதத்தால் மீண்டும் உயிர் பெறட்டும்.

இந்த வரத்தையே எனக்கு தாருங்கள்.

நான் அனைத்து வானரர்களையும், கோலாங்குலர்களையும், ருக்ஷர்களையும் ஒரு காயமும் இல்லாமல், அதே பலத்துடன், ஆரோக்கியத்துடன் காண ஆசைப்படுகிறேன்.

அவர்கள் வசிக்கும் இடங்களில், நதியும், தேவையான பூக்களும், கனிகளும், கிழங்குகளும் எப்பொழுதும் கிடைக்கட்டும்."

என்றார் ராமபிரான்.


அதை கேட்ட இந்திர தேவன், "நான் பொய் பேசுவதில்லை. கொடுத்த வரத்தின் படியே, அனைத்து வானரர்களையும், கோலாங்குலர்களையும், ருக்ஷர்களையும் ஒரு காயமும் இல்லாமல், அதே பலத்துடன், ஆரோக்கியத்துடன் தூக்கத்தில் எழுந்தவர்களை போல எழுப்பி விடுகிறேன்" என்று சொல்ல, 

அனைத்து வானர சேனையும் எழுந்து விட்டனர்.

ராமபிரான் நிற்பதை கண்டு, அனைத்து வானரர்களும் அவர் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தனர்.

"அயோத்தி செல்லுங்கள். ராம ராஜ்யம் செய்யுங்கள்" என்று வாழ்த்து கூறி, தேவர்கள், ப்ரம்ம தேவன், சிவபெருமான் அனைவரும் மறைந்தனர்.

இவ்வாறு, வானரர்கள் இரண்டு முறை, மீண்டும் உயிர்த்து எழுந்தார்கள்.

"யாரோ ஒருவர், இறந்த பிறகு சிலநாடகளுக்கு பின் உயிர்த்தெழுந்தார்!!" 

என்று பிற மதங்களில் ஆச்சர்யமாக சொல்லிக்கொள்கிறார்கள்.

இதுவா ஆச்சர்யம்?....

போரில் இறந்து போன "ஆயிரக்கணக்கான வானரர்கள், காயம் ஆறி, ஆரோக்கியத்துடன், அதே பலத்துடன், இரண்டு முறை மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்தார்கள்" என்று இங்கு பார்க்கிறோம்.

இதுவல்லவா ஆச்சர்யம்!

ராமரை வழிபடுபவர்கள், 'மரணத்தை கூட வென்று விடுவார்கள்' என்று தெரிகிறது.

ஜெய் ஸ்ரீ ராம்.






No comments: