Followers

Search Here...

Sunday 13 September 2020

பாசுரம் (அர்த்தம்) - "மலைமுகடு மேல்வைத்து". ஸ்ரீகூர்மத்தில் உள்ள ஆதி கூர்ம பெருமாளுக்கு பேயாழ்வார் இங்கு மங்களாசாசனம் செய்கிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோமே !

மலைமுகடு மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,
தலைமுகடு தான் ஒருகை பற்றி, 
அலைமுகட்டு அண்டம் போய் நீர் தெறிப்ப 
அன்று கடல்கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான்
- பேயாழ்வார் (மூன்றாம் திருவந்தாதி)



ஆந்திர பிரதேசத்தில், ஸ்ரீகூர்மத்தில் உள்ள பெருமாளுக்கு  பேயாழ்வார் இங்கு மங்களாசாசனம் செய்கிறார்.

தேவர்களுக்கு அம்ருதம் கிடைக்க "வாசுகி" என்ற பாம்பை அழைத்து, மந்திர மலையை தான் இருக்கும் பாற்கடலில் போட்டு, கடைய சொன்னார்.

தேவர்கள், அசுரர்களுக்கும் ஏதாவது கொடுக்கிறோம் என்று சொல்லி, அவர்களோடு சேர்ந்து கொண்டு, கடைய ஆரம்பித்தனர்

மலை அப்படியே இறங்கி அமர்ந்துவிட்டது. 
மேலும் கடைய முடியாமல், மலையை தூக்க முடியாமல் தேவ-அசுரர்கள் தவிக்க, 
அம்ருதம் கிடைக்க வழியையும் சொல்லி, அதற்கு தன் இடத்தையே கொடுத்த பெருமாள், தானே ஒரு கூர்ம வடிவம் எடுத்து, 
மலையை தாங்கிக்கொண்டு, அதுவும் போதாதென்று, இவர்களுக்காக தானே மலையின் உச்சியையும் பிடித்துக்கொண்டு, தானே வாசுகியின் இருபக்கமும் பிடித்துக்கொண்டு, கடைய ஆரம்பித்தாராம்.

இவர் ஒருவரே தனி ஒருவனாக பாற்கடலை வேகமாக கடைய
அப்பொழுது அந்த பாற்கடலில் இருந்து தெறித்த நீர், அண்டத்தின் எல்லையில் உள்ள ப்ரம்ம லோகம் வரை தெறித்ததாம்
ப்ரம்ம லோகத்தில் உள்ள ப்ரம்ம தேவன் பாற்கடலில் கூர்ம அவதாரம் செய்த பெருமாளை பார்த்து, "அன்று ஆதி கூர்மமாக வந்த பெருமாள் ஆயிற்றே இவர்!" என்று துதித்தாராம்.

பிறகு, தைரியம் பெற்ற தேவர்களும் அசுரர்களும், மேலும் கடைய ஆரம்பித்தனர்.
அன்று, ப்ரம்ம தேவனுக்கு காட்சி கொடுத்த ஆதி கூர்ம பெருமாள் தான், இன்றும் 'ஸ்ரீகூர்மத்தில்' நின்று கொண்டு (நின்ற பிரான்) இருக்கிறார்" 
என்று பேயாழ்வார் நினைவுக்கு வர, உடனே..

மலைமுகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றி,
தலைமுகடு தான் ஒரு கை பற்றி, 
அலைமுகட்டு அண்டம் போய் நீர் தெறிப்ப 
அன்று கடல்கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான்
என்று பாடுகிறார்.

தேவர்களுக்கு அம்ருதம் கிடைக்க. பாற்கடலில் கூர்ம அவதாரம் செய்தார் பெருமாள். இது அனைவரும் அறிந்த சரித்திரம்.
ஆனால், 
பெருமாள், இதற்கு முன்பேயே "ப்ரம்ம தேவனுக்கு கூர்மமாக காட்சி தந்தார்" என்று வேதம் உலக சிருஷ்டியை சொல்லும் போது காட்டுகிறது.

அன்று ப்ரம்ம தேவன், தான் கண்ட (அன்று பிண்டமாய்) ஆதி கூர்ம அவதாரத்தை மீண்டும்  பாற்கடலை கடையும் போது கண்டார். 

அதே "ஆதி கூர்ம பெருமாளே இங்கு ஸ்ரீகூர்மத்தில் நின்று கொண்டு இருக்கிறார்" 
என்று பேயாழ்வார் மங்களாசாசனம் செய்கிறார்.

ப்ரம்ம தேவன் எப்பொழுது கூர்ம அவதாரம் பார்த்தார்? 
உலக சிருஷ்டியை பற்றி சொல்லும் போது, வேதம் சொல்கிறது.

உலகம் ஸ்ருஷ்டி ஆரம்பிக்கும் முன்னர், பிரளய ஜலத்தில், தாமரையில் ப்ரம்ம தேவன் முதன்முதலில் தோன்றினார்.



தோன்றிய ப்ரம்ம தேவன், "தனக்கு மூலகாரணம் யார்? தன்னை படைத்தவர் யார்?" என்று தனக்குள் சிந்தனை செய்ய ஆரம்பித்தார். 

(ஆபோ வா இதமக்ர ஆஸன் சலில மேவ தஸ்மின் நேஹ புஷ்கர பர்ண சம்பவத் --- வேத வாக்கியம்)   

உடனே பதில் கிடைக்கவில்லை என்றதும், "தன்னை யாரும் படைக்கவில்லை போலும். நானே தான் மூலகாரணம் போல. நான் தான் சர்வேஸ்வரன் போல" என்று நினைத்தார்.

இப்படி நினைத்து கொண்டிருக்க, அந்த பிரளய ஜலத்தில், சிறிய ஆமைக்குஞ்சு நீந்திக்கொண்டே இவர் அருகில் வந்து நின்றது.
(அந்தரத கூர்மகம் பூதகம் சர்ப்பம் தம் --- வேத வாக்கியம்
ப்ரம்ம தேவன் "நீ யார்?" என்று கேட்டார்.
உடனே அந்த ஆமைக்குஞ்சு ப்ரம்மதேவனை பார்த்து "உன்னை படைத்தவன் நான்" என்றது.

பிரம்மதேவன் ஆச்சர்யப்பட்டு 
"என்னிடம் விளையாடாதே! எனக்கு நான்கு தலை, எட்டு கைகள் இருக்கிறது. நீ பார்க்க இத்தனை சிறியதாக இருக்கிறாய்..  என் எதிரில் வந்து பயப்படாமல், 'நான் உன்னை படைத்தேன்' என்று சொல்கிறாயே!" என்று ப்ரம்ம தேவன் கேட்க,

"நான் என் சுய ரூபத்தை காட்டினால் பயப்படுவாயோ! என்று தான் இந்த ரூபத்தை எடுத்துக்கொண்டேன். !
இதோ பார் என் ரூபத்தை" 
என்று சொல்லி ஆயிரக்கணக்கான தலைகளுடன், ஆயிரக்கணக்கான ரூபத்துடன் விஸ்வரூபம் கொடுக்க, 
" சஹஸ்ர சீர்ஷா புருஷ:" என்று புருஷ சூக்தம் வெளிப்பட்டது.
ப்ரம்ம தேவன் கை குவித்து "நமோ நம: ! நமோ நம:! நீங்களே உலகை படைக்கும் சர்வேஸ்வரன்." என்று ஸ்தோத்திரம் செய்கிறார்.

"மந்திர மலையை மட்டும் தாங்கும் கூர்மம் அல்ல, உலகத்தையே தாங்கும் ஆதி கூர்மம் இவரல்லவா" 
என்று பேயாழ்வார் பாடுகிறார்.
பாஞ்சராத்ர பூஜை வீதியில், ஆசன பூஜை செய்யும் போது, "ஆதி கூர்மாய நம:" என்று ப்ரம்ம தேவனுக்கு காட்சி கொடுத்த ஆதி கூர்ம அவதாரத்தை நமஸ்கரிக்கிறோம்.

இவரை ஆதாரமாக கொண்டு தான், உலக சிருஷ்டியை ஆரம்பித்தார் ப்ரம்ம தேவன்.






No comments: