Followers

Search Here...

Friday 30 October 2020

பீச்சுக்கு செல்லும் போது, இந்த அனுபவம் உங்களுக்கு ஏற்படுமா? ஏற்பட்டால் நீங்கள் பாக்கியசாலிகள்.. தெரிந்து கொள்வோமே...

பரமாத்மாவின் தரிசனம் கிடைத்தால், எப்படி இருக்கும்? 

அந்த அனுபவத்தை கடல் நமக்கு உணர்த்துகிறது... 

தெரிந்து கொள்வோமே இந்த ரகசியத்தை..

பரவாசுதேவன் நாராயணன், த்ரேதா யுகத்தில் ராமபிரானாக அவதரித்தார்.


ஆண்கள், பெண்கள், ரிஷிகள், ராக்ஷஸர்கள், மிருகங்கள் என்று அனைவருமே, அவரை பார்க்க வேண்டும், பழக வேண்டும், பேச வேண்டும் என்று ஆசைப்படுவார்களாம்.




ராமபிரானும் தானே முன் வந்து பேசி பழகுவாராம். யாரையும் அவமரியாதை செய்ய மாட்டாராம், யாரிடமும் பாராமுகமாக இருக்க மாட்டாராம். எல்லோருடைய நலனிலும் அக்கறை காட்டுவாராம். 

 

தசரதர் "தன் பிள்ளை" என்று ஆசையாக இருந்தார்.

ராமபிரானும் தானே வலிய வந்து அன்போடு பழகும் குணம் கொண்டவர் தான்.

இருந்தாலும்,

ராமபிரானின் எண்ணிலடங்கா தெய்வ குணங்கள், அதே சமயம் தன்னிடம் அவர் காட்டும் பித்ரு பக்தியை கண்டு திகைத்து நிற்பாராம். 

எல்லையில்லா பாசம் இருந்தும், சகஜமாக நெருங்கவும் முடியாமல், விலகவும் மனமில்லாமல்,ராமபிரானை பெருமையுடன் பார்த்து கொண்டே இருக்க ஆசைப்படுவாராம்.

லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகியோர், 'ராமபிரான் தன் அண்ணா' என்று ஆசையாக வருவார்களாம். 

ராமபிரானும் தானே வலிய வந்து அன்போடு பழகும் குணம் கொண்டவர் தான்.

இருந்தாலும்,

ராமபிரானின் எண்ணிலடங்கா தெய்வ குணங்கள், அதே சமயம் தன்னிடம் அவர் காட்டும் சகோதர பாசத்தை கண்டு திகைத்து நிற்பார்களாம். 

எல்லையில்லா பாசம் இருந்தும், சகஜமாக நெருங்கவும் முடியாமல், விலகவும் மனமில்லாமல், ராமபிரானை பார்த்து கொண்டே இருக்க ஆசைப்படுவார்களாம்.


வசிஷ்டர் மற்றும் பல ரிஷிகள், 'பரமாத்மாவே ராமனாக வந்து இருக்கிறார்' என்று ஆசையாக வருவார்களாம். 

ராமபிரானும் தானே வலிய வந்து அன்போடு பழகும் குணம் கொண்டவர் தான்.

இருந்தாலும், 

ராமபிரானின் எண்ணிலடங்கா தெய்வ குணங்கள், அதே சமயம் தன்னிடம் அவர் காட்டும் மரியாதையை கண்டு திகைத்து நிற்பார்களாம்

எல்லையில்லா ஆனந்தம் இருந்தும், சகஜமாக நெருங்கவும் முடியாமல், விலகவும் மனமில்லாமல் தன் ஆசிரமத்தை விட்டு, தசரதர் அரண்மனையிலேயே தங்கி கொண்டு, தினமும் ராமபிரானை பார்த்து கொண்டே இருக்க ஆசைப்பட்டார்களாம்.

ஹனுமான், 'ராமபிரானுடைய தாஸன்' என்று ஆசையாக வருவாராம். ராமபிரானும் தானே வலிய வந்து, அன்போடு பழகும் குணம் கொண்டவர் தான்.

இருந்தாலும், 

ராமபிரானின் எண்ணிலடங்கா தெய்வ குணங்கள், அதே சமயம் தன்னிடம் அவர் காட்டும் அன்பை கண்டு திகைத்து நிற்பாராம். 

எல்லையில்லா பக்தி இருந்தும், சகஜமாக நெருங்கவும் முடியாமல், விலகவும் மனமில்லாமல், ராமபிரானை பார்த்து கொண்டே இருக்க ஆசைப்படுவாராம்.




பரமாத்மா ராமபிரானாக வந்ததை கண்டு, ஆண்களுக்கே இப்படி ஆசை, நிலை உண்டாகுமென்றால், தாயான கௌசல்யாவுக்கும், மஹாலட்சுமியான சீதா தேவிக்கும் ஏற்படும் ஆசையை சொல்லவும் வேண்டுமா?.


நரமாமிசம் சாப்பிடலாம் என்று வந்த ராக்ஷஸி சூர்பனகை, ராமபிரானின் தோற்றத்தை கண்டதுமே, மதி மயங்கி போனதில் ஆச்சரியமில்லை.


பாகுபாடு இல்லாமல், அனைவரையும் மயக்கியது ராமபிரானின் தெய்வ தரிசனம். 


ராமபிரான் தான் அனைவரிடமும் அன்போடு பழக கூடியவர் தான் என்றாலும், ராமபிரானை யாராலும் அத்தனை சகஜமாக நெருங்க முடியாத படி, எண்ணிலடங்கா கல்யான குணங்களுடன் இருந்தார். 

ஆசை இருந்தாலும், இவர் கம்பீரமும், குணங்களும், தோற்றமும் அனைவரையும் திகைப்படைய செய்தது... அவர் நிழல் கூட அனைவரையும் மோஹிக்க செய்தது.


த்ரேதா யுகம், துவாபர யுகத்துக்கும் (8 லட்சம் 64 ஆயிரம் வருடம்) முந்தியது. 


ராம அவதாரம் செய்த போது, 'பார்ப்பவர்கள் அனைவருக்குமே இந்த நிலை ஏற்பட்டது' என்று வால்மீகி நமக்கு காட்டுகிறார்.


ஆசையாக ஓடி வரும் அனைவரும், ராமபிரானின் கம்பீரத்தை, குணத்தை, தோற்றத்தை பார்த்து அப்படியே நின்று விடுவார்கள் என்று வால்மீகி நமக்கு காட்டுகிறார்.


இந்த நிலையை, இந்த அனுபவத்தை நாமும் உணர, நமக்காக கடலை படைத்தார், பரமாத்மா நாராயணன்.

'பீச்சுக்கு போக வேண்டும்' என்று ஆசை ஆசையாக பலர் கிளம்பி செல்வார்கள்.

கடல் அலை அருகே வந்தவுடன், கடலின் கம்பீரத்தை, தோற்றத்தை, கடல் நடுவே உள்ள ஆழ்ந்த அமைதியை கண்டு, பிரமித்து அங்கேயே நின்று விடுவார்கள். 

 

'பீச்சுக்கு இத்தனை தூரம் கிளம்பி வந்தோம், கடலுக்குள் என்ன இருக்கிறது என்று கூட பார்க்க முடியவில்லையே?

சீ கடலை பார்க்கவா வந்தோம்... வேண்டாம். கிளம்பலாம்

என்றும் நினைக்காமல், அப்படியே கடல் அலைகளின் அழகை, காற்றை ரசித்து பார்த்து கொண்டே இருப்பார்கள்.

கடலை தரிசனம் செய்ததிலேயே திருப்தி கொள்கிறார்கள், பலர்.


பரமாத்மா நாராயணன் தரிசனம் நமக்கு கிடைத்தால், எப்படி இருக்கும்? என்ற ஒரு அனுபவத்தை, கடல் நமக்கு காட்டுகிறது..


"ராமபிரான் கடல் போன்றவர்" என்று சொல்வதற்கு காரணமும் இதுவே.




குகன் போன்றவர்கள், கடலை தரிசனம் செய்ததிலேயே திருப்தி அடைந்தார்கள்.


பரதனை போன்றவர்கள், கடலில் கொஞ்சம் படகில் சவாரி செய்த திருப்தி அடைந்தார்கள்.


ஹனுமானை போன்றவர்கள், கடலில் மூழ்கி, சில முத்துக்களை எடுத்த திருப்தி அடைந்தார்கள்.


இன்னும் கடலை முழுமையாக உணர்ந்தவர்கள் இல்லை... 

அது போல, 

ராமபிரானின் கல்யாண குணங்களை முழுமையாக உணர்ந்தவர்கள் இல்லை... 


ராம பக்தர்களான மகாத்மாக்களுக்கு, கடலை பார்க்கும் போது, ராமபிரானின் குணங்களும், தரிசன ஆனந்தமும் ஏற்படுகிறது. 

இந்த அனுபவம் நமக்கும் ஏற்பட்டு, ராமபிரானின் அருள் நமக்கும் கிடைக்க ஆசைப்படுவோம்.


குருநாதர் துணை

No comments: