Followers

Search Here...

Friday 30 October 2020

சாக்கடையில் குதித்த தாய் போல.... மேலும் அறிய....

 சாக்கடையில் குதித்த தாய் போல...

விளையாடி கொண்டிருந்த தன் குழந்தை ஒரு நாள் திடீரென்று சாக்கடைக்குள் விழுந்து விட்டது.

இதை பார்த்த தாய், பதறி போனாள்.

மிகவும் நாகரீகமானவள் அவள். அழகானவள். சுத்தமானவள்.


தனக்கு அழுக்காகுமே? 

தான் போய் சாக்கடையில் இறங்குவதாவது? 

என்று துளியும் நினைக்காமல், குழந்தையை காக்க வேண்டுமே! என்ற ஒரே எண்ணத்தில், தானும் சாக்கடையில் குதித்து விட்டாள். 




குழந்தையை மேலும் மூழ்கி விடாமல் தானே கைப்பற்றி, சாக்கடையில் இருந்து தூக்கி விட்டு, தானும் வெளி வந்தாள்.


அது போல, 

வைகுண்டத்தில் இருக்கும் வாசுதேவன், ஆனந்தமயமான மோக்ஷத்தை விட்டு விட்டு, 'ஜீவாத்மாக்கள் சாக்கடை போன்ற உலக விஷயங்களில் விழுந்து விட்டதே!' என்று நினைத்து, 

'இவர்களை எப்படியாவது மோக்ஷத்துக்கு அழைத்து சென்று விட வேண்டும்' என்று முடிவு கட்டி, தானே உலகத்தில் குதித்து விட்டார். 

ராமபிரானாகவும், கிருஷ்ணராகவும் அவதாரம் செய்து அனைவரிடமும் பழகினார்.

இந்த விபவ அவதாரங்கள் 'குறிப்பிட்ட காலம் வரை தான்' என்பதால், விபவ அவதாரம் போதாதென்று,

'ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு' அனைவரும் அர்ச்சனை (பூஜை) செய்யும் படியாக, ஒவ்வொரு ஜீவனுக்கும் கிடைக்கும் படியாக அர்ச்ச அவதாரம் செய்து விட்டார்.

அவரவர் இஷ்டத்துக்கு பூஜை செய்யட்டும்.. 

பூஜை செய்யாமல் கூட போகட்டும்.. இவர்கள் வீட்டில் இவர்களை விடாமல் தங்கி விடுவோம். 

'தன்னை என்றாவது ஒரு நாள், இவன் கவனித்து விட்டால், தன்னிடம் பக்தி ஏற்பட செய்து, ஞானத்தை கொடுத்து, மோக்ஷம் கொடுத்து விடலாம்' என்று பிடிவாதம் செய்து கொண்டு அவதரித்து விட்டார்.


ராமபிரானாக, கிருஷ்ணராக வந்த நோக்கமும், 

கோவிலில் இருப்பதற்கு நோக்கமும், 

நம் வீட்டில் பூஜை அறையில் இருப்பதற்கு நோக்கமும், 

படங்களாக வருவதற்கு நோக்கமும் ஒன்றே. 




நம்மை எப்படியாவது கை பிடித்து தூக்கி, மோக்ஷம் கொடுப்பதற்கே, பெருமாள் ஒரு தாயை போல, சம்சாரம் என்னும் சாக்கடையில் தானே குதிக்கிறார்.


நம் வீட்டில் இருக்கும் ராம, கிருஷ்ண விக்கிரகத்தை, படத்தை இந்த அனுபவத்தில் பார்க்க நாம் ஆரம்பிக்கும் போது தான், பகவானின் கருணையை நாம் புரிந்து கொள்ள முடியும்.


குருநாதர் துணை.

No comments: