Followers

Search Here...

Friday 27 March 2020

மதுரை திருமாலிருஞ்சோலை (அழகர்மலை) - கள்ளலழகர் சரித்திரம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

உத்தர மதுரையில் (வடமதுரை) இருக்கும், "திருமாலிருஞ்சோலை" (அழகர்மலைசரித்திரம்.

"திருமாலிருஞ்சோலை" என்றும் அழைக்கப்படும் அழகர் மலை, புராணத்தில் "வ்ருஷபாசலம்" என்று அழைக்கப்பட்டது.
"பலராமர் 'தீர்த்த யாத்திரையாக' வரும் போது, 'வ்ருஷபாசலம்' வந்து பெருமாளை சேவித்து விட்டு, மேலும் தீர்த்த யாத்திரை தொடர்ந்தார்"
என்று பாகவதமும் சொல்கிறது.




பெருமாளுக்கு "கள்ளலழகர்" என்று பெயர்.
கள்ளர்களுக்கு இஷ்ட தெய்வமாக இங்கு பெருமாள் இருக்கிறார்.

இங்கு வாழ்ந்த கள்ளர்கள், பெருமாளை பார்த்து, "ஒரு பாதி உனக்கு தருகிறேன்.. மறு பாதியை நான் எடுத்துக்கொள்கிறேன்" என்று சொன்னால், திருட்டு தொழிலும் பலிக்குமாம்.
"அனுகூல தெய்வமாக" பெருமாள் இங்கு கள்ளர்களுக்கு குலதெய்வமாக இருக்கிறார்.

கள்ளர்கள் வழிபட்ட தெய்வம். 
கள்ளர்களுக்காகவே நிற்கின்ற தெய்வம் இவர்.
பெருமாளுக்கு "ஜெகதீஸ்வரன்" என்றும் பெயர் உண்டு.

ஜகத்தில் (உலகத்தில்) நல்லவர்கள் மட்டும் தான் உண்டா?

உலகத்தில் உள்ள அனைவருக்கும் 'தானே தெய்வம்' என்றும்  காட்டும் பெருமாள், இங்கு "கள்ளர்களுக்கும் நானே தெய்வம்" என்று காட்டுகிறார்.

ஒரு சமயம் மண்டூகர் என்ற ரிஷி "க்ருதமாலா" என்று அழைக்கப்பட்ட வைகை நதியில்  கடுமையான தவம் செய்துகொண்டிருந்தார்.
"விஷ்ணுவை சாஷாத்கரிக்கவேண்டும்"
என்ற சங்கல்பத்துடன் தவம் செய்து கொண்டிருந்தார்.

மண்டூக ரிஷி கொடுத்த உபநிஷத்தின் பெயர் தான் "மாண்டூக்ய உபநிஷத்.

உபநிஷத்துக்களிலேயே மிகவும் உயர்ந்தது  "மாண்டூக்ய உபநிஷத்" என்று போற்றப்படுகிறது..

ஒருவன் "'மாண்டூக உபநிஷத்' அர்த்த ஆழத்துடன் தெரிந்து கொண்டு விட்டால், மோக்ஷத்துக்கு  (முமுக்ஷு) தேவையான விஷயங்கள் எல்லாம் தெரிந்தாயிற்று"
என்று சொல்வார்கள்.

த்ரேதா யுகத்தில் பெருமாள் 'ராமபிரானாக அவதாரம்' செய்தார்.
த்ரேதா யுகம் 12 லட்சம் வருடம் முன்பு நடந்தது.
ராமபிரான் மண்டூக ரிஷியின் உபநிஷத்தை பற்றி அனுமனிடம் பேசுகிறார்.
"உபநிஷத்துகளில் சிறந்தது மாண்டோக்ய உபநிஷத்"
என்று ஹனுமனை பார்த்து சொல்கிறார்.
மண்டூக ரிஷியின் பெருமை என்ன? என்று ஒரு புறம் நமக்கு இதிலேயே புரிகிறது.

அதே சமயத்தில், 12 லட்சம் வருடம் முன்பே நம் கள்ளழகர் இருந்தார் என்று கவனிக்கும் போது தான் கள்ளழகர் பெருமை நமக்கு புரியும்.




ராமபிரானால் உயர்த்தி பேசப்பட்ட மண்டூகர் கள்ளழகரை தரிசிக்க ஆசைப்பட்டார் என்றால், கள்ளழகர் பெருமை அளவிடமுடியாதது என்று தெரிகிறது.

வெகு காலம் ஆகி விட்டது. ஆகாரம் உட்கொள்ளவில்லை.
தவம் செய்து கொண்டிருந்தார் மண்டூகர்.
அந்த சமயங்களில் வடமதுரை காட்டு பிரதேசமாகவே இருந்தது.


ஒரு சமயம், அந்த காட்டின் வழியாக, அவர் எதிரே மிகவும் அழகு பொருந்திய ஒரு வேடுவ சிறுவன் குதிரை மேல் ஏறி வந்து இறங்கினான்.

பார்ப்பதற்கு 20-22 வயது வாலிபன் போலவும் இருந்தான்.
தங்க ஆபரணங்கள் அணிந்து இருந்தான். தலையில் தொப்பி வைத்து இருந்தான். பார்ப்பதற்கு அதிசுந்தரமாக இருந்தான்.
குதிரையில் இருந்து இறங்கி, வைகை என்ற க்ருதமாலா ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்தான்.

அதி சுந்தரமாக இருந்த இந்த சிறுவனை பார்த்து, மண்டூக மகரிஷி, "நீ யாரப்பா?" என்று விஜாரித்தார்.

அந்த சிறுவன்,
"நான் வ்ருஷபாசலம் என்ற சோலைமலையில் இருக்கிறேன். கள்ளர்களுக்கெல்லாம் தலைவன்"
என்று சொல்ல,
"சரி.. உன் பெயர் என்ன?" என்று இவர் கேட்க,
"என் பெயர் சுந்தர தோளினான் (சுந்தரபாகு)."
என்று பதில் சொன்னான்.

"அது சரி, தவளை தான் தண்ணீரிலும் நிலத்திலும் இருக்கும்.  நீங்கள் ஏன் தவளை போல தண்ணீரில் நின்று கொண்டு இருக்கிறீர்கள்?"
என்று ரிஷியை பார்த்து கேட்டான்.
"உண்மை தான். எனக்கும் மண்டூகன் (தவளை) என்று தான் பெயர்.
உங்களை பார்த்ததிலேயே, நீங்கள் யார் என்பதை நான் புரிந்து கொண்டு விட்டேன்.
குதிரையில் நீங்கள் வந்த அழகும், அதிலிருந்து நீங்கள் இறங்கிய  விதத்தையும் பார்த்ததுமே நீங்கள் யார் என்று புரிந்து கொண்டு விட்டேன் !"
என்று மண்டூகரிஷி சொன்னார்.

மண்டூகர் அழகரை பார்த்து சொக்கிப்போனதில் ஆச்சர்யமா?
இன்று சித்திரை மாதம் மதுரைக்கு சென்று பார்த்தால், அழகர் ஆற்றில் இறங்கும் போது 5 லட்சம் மக்கள் கூடுவதை நம் கண்ணால் காணலாம்..

அழகர் குதிரையில் வரும் வீதியெல்லாம் மக்கள் கூடி விடும் ஆச்சர்யத்தை இன்றும் காணலாம்.
சித்ரா பௌர்ணமி அன்று, வைகையில் ஒரு க்ஷணம் இறங்கி விட்டு, மண்டூக ரிஷிக்கு தரிசனம் தந்த வைபவம் இன்றும் நடக்கிறது.

"விஷ்ணுவை சாஷாத்கரிக்க வேண்டும்"
என்ற சங்கல்பத்துடன் தவம் செய்து கொண்டிருந்த மண்டூகரிஷி, 
மேலும் சொன்னார்,
"நீங்கள் ஒரு ராஜகுமாரனை போல குதிரையில் வந்து இறங்கினீர்கள்.
நீங்கள் யார் என்று அறிந்து கொண்டேன். 
நீங்கள் எனக்கு திவ்யமான ரூபத்துடன் காட்சி தரவேண்டும்.
நீங்கள் கோவிலில் எப்படி தரிசனம் தருகிறீர்களோ, அது போல தரிசனம் கொடுங்கள்."
என்று சொல்ல,

சங்கு சக்கர கதையுடன், நீல மேக ஸ்யாமள ரூபத்துடன், பீதாம்பரம் அணிந்தவராக, ஸ்ரீவத்சம் உடைய மார்புடன், எம்பெருமான் காட்சி கொடுக்க,
உடனே,
மண்டூக ரிஷி கைகளை குவித்துக்கொண்டு, ஸ்தோத்திரம் செய்கிறார்...
"'ஓம்' என்ற பிரணவம், வேத மந்திரங்கள் அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கிறது.

'ஓம்' என்ற பிரணவத்துக்குள், "அ", "உ", "ம" என்ற மூன்று ஒலிகள் (அக்ஷரங்கள்) அடக்கம்.

மூன்றும் சேர்ந்த நிலையே 'ஓம்' என்ற பிரணவம் 
'ஓம்' என்ற ப்ரணவத்துக்குள், "அ", "உ", "ம" என்ற மூன்றும் அடக்கம்.

"அ", "உ", "ம" என்று பிரித்து உபாசனை செய்பவர்களும் உண்டு.
"ஓம்" என்று சேர்த்து உபாசனை செய்பவர்களும் உண்டு.




பரமாத்மாவுக்கு 'மூன்று நிலைகள்' உண்டு.
அதுபோல
ஜீவனுக்கும் 'மூன்று நிலைகள்' உண்டு.

இதை நமக்கு ஓம் என்ற பிரணவம் "அ", "உ", "ம" என்ற மூன்று நிலைகளை காட்டி விளக்குகிறது.

அனைத்து ஜீவனுக்கும் மூன்று நிலைகள் இருக்கிறது.

  1. 'விழித்து (ஜாக்ரத்) இருக்கிறான்' என்பது முதல் நிலை.
  2. 'கனவு (ஸ்வப்னம்) காணுகிறான்' என்பது இரண்டாவது நிலை.
  3. 'தூங்குகிறான் (சுஷுப்தி)' என்பது மூன்றாவது நிலை.
இந்த மூன்று நிலையிலும் 'ஜீவன் ஒருவன் தான்' இருக்கிறான். ஆனால் மூன்றும் வேறு வேறு நிலை.

  1. விழித்து (ஜாக்ரத்) இருக்கும் நிலையில் ஜீவனுக்கு, 'விஸ்வன்' என்று பெயர்.
  2. கனவு (ஸ்வப்னம்) காணும் நிலையில் ஜீவனுக்கு, 'தைஜஸன்' என்று பெயர்.
  3. தூங்கும் (சுஷுப்தி) நிலையில் ஜீவனுக்கு, 'பிராக்ஞன்' என்று பெயர்.

ஜீவனாகிய நமக்கே மூன்று நிலைகளில், மூன்று பெயர் உண்டு.

ஜீவன் மூன்று நிலையில் இருப்பது போல,
பரமாத்மா வாசுதேவனும், "மூன்று நிலையில் இருக்கிறார்".


  1. படைத்தல் (ஸ்ருஷ்டி) என்ற காரியத்தை பரமாத்மா செய்யும் போது, ஒரு நிலை.
  2. காத்தல் (ஸ்திதி) என்ற காரியத்தை பரமாத்மா செய்யும் போது,  இரண்டாவது நிலை.
  3. அழித்தல் (சம்ஹாரம்) என்ற காரியத்தை பரமாத்மா செய்யும் போது,  மூன்றாவது நிலை.
இப்படி ஜீவனை போலவே, பரமாத்மாவும் மூன்று நிலைகளில் இருக்கிறார்.

  1. படைத்தல் (ஸ்ருஷ்டி) என்ற காரியத்தை செய்யும் போது, பரமாத்மாவுக்கு "ப்ரத்யும்னன்" என்று பெயர். ப்ரத்யும்னன் அம்சமாக 'ப்ரம்ம தேவன்' இருக்கிறார்.
  2. காத்தல் (ஸ்திதி) என்ற காரியத்தை செய்யும் போது, , பரமாத்மாவுக்கு "அனிருத்தன்" என்று பெயர். அனிருத்தன் அம்சமாக 'மஹா விஷ்ணு' இருக்கிறார்.
  3. அழித்தல் (சம்ஹாரம்) என்ற காரியத்தை செய்யும் போது, பரமாத்மாவுக்கு "சங்கர்ஷணன்" என்று பெயர். சங்கர்ஷணன் அம்சமாக 'ருத்ரன்' இருக்கிறார்.


  • படைத்தல் என்ற நிலையில் நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனே, ரஜோ குணத்துடன் ப்ரம்மாவாக இருக்கிறார்.
  • காத்தல் என்ற நிலையில் நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனே, ஸத்வ குணத்துடன் விஷ்ணுவாக இருக்கிறார்.
  • அழித்தல் என்ற நிலையில் நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனே, தமோ குணத்துடன் ருத்ரனாக இருக்கிறார்.
பரவாசுதேவனே, மும்மூர்த்திகளாக, மூன்று நிலைகளில் இருக்கிறார். 




விழித்து இருப்பதும், தூங்குவதும், கனவு காண்பதும் 'ஒருவனே' என்பது புரிந்து கொள்ளும் போது, 
பரவாசுதேவனே மூன்று நிலைகளில் ப்ரம்ம தேவனாகவும்,  ருத்ரனாகவும், மஹாவிஷ்ணுவாகவும் இருக்கிறார் என்ற சத்தியம் புரியும். 

இந்த ரகசியத்தை 'ஓம்' என்ற பிரணவம் தாங்கி பிடித்து இருக்கிறது. 
'அ உ ம' என்ற மூன்றும் பிரித்து பார்க்கும் போது, 
என்ற சப்தம்  "படைத்தல்" என்ற நிலையையும், 
என்ற சப்தம்  "காத்தல்" என்ற நிலையையும், 
என்ற சப்தம் "அழித்தல்" என்ற நிலையையும்,  
காட்டுகிறது.

இந்த மூன்றும் சேர்ந்த நிலையில் பரவாசுதேவன் மட்டுமே இருக்கிறார்.
ஓம் என்ற பிரணவம், "பரவாசுதேவனை குறித்து தியானிக்க செய்கிறது".

அ என்ற படைத்தல் நிலையிலும், 
உ என்ற காத்தல் நிலையிலும், 
ம என்ற அழித்தல் நிலையிலும் தன்னை காட்டிக்கொண்டு,
மூன்றுமாகவும் இருக்கும் பரமாத்மா தன்னை மறைத்து கொண்டு இருப்பதால், "வாசுதேவன்" என்று பெயர். 

ராஜஸ, ஸத்வ, தாமஸ போன்ற குணங்களை தாண்டி,  நிர்குணமான, சித்ஸ்வரூபமான நிலையை குறிக்கிறது பரவாசுதேவனின் ஸ்வரூபம்

நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவன் "சர்வஞன்" என்ற நிலையில் இருக்கிறார்.

குணங்களால் பேதங்கள் காட்டும் பரமாத்மா, குணங்களை தனக்குள் அடக்கி, தான் மட்டுமே மிச்சப்பட்டு இருக்கும் நிலையிலேயே பரமாத்மா வாசுதேவன் இருக்கிறார்.

தன் ப்ரம்ம ஸ்வரூபத்தை மறைத்து கொண்டு இருப்பவர் பரமாத்மா.

வைகுண்டத்தில் இருக்கும் இந்த பரவாசுதேவனையே "ஓம்" என்ற பிரணவம் குறிக்கிறது. 

"அ", "உ", "ம" என்று பிரித்து "ப்ரம்ம தேவனை" மட்டும்,  "விஷ்ணுவை" மட்டும், "ருத்ரனை" மட்டும் உபாசனை செய்பவர்களும் உண்டு.

"ஓம்" என்று சேர்த்து உபாசனை செய்பவர்களும் உண்டு. 

'ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன்' என்ற மூன்று நிலைகளையும் தன்னில் அடக்கி, நிர்குணமாக இருப்பவர் 'பரவாசுதேவனே' என்ற ஞானத்துடன்  உபாசனை செய்பவர்களும் உண்டு.

இந்த இரண்டு உபாஸனையையும் நம் உபநிஷத் அனுமதிக்கிறது.

விழிப்பு, சொப்பனம், தூக்கம் என்ற மூன்று நிலையை அனைத்து ஜீவனும் அனுபவிக்கிறார்கள். 
நான்காவது நிலையையும் சில உத்தம ஜீவன்கள் அனுபவிக்கிறார்கள். 
அந்த நிலைக்கு "சமாதி" என்று பெயர்.
அந்த நிலையில் இருப்பவனை "துரீயன்" என்று சொல்கிறோம்.

விழிப்பு நிலையில், ரஜோ குணமும்,
ஸ்வப்ன நிலையில், சத்வ குணமும்,
தூக்க நிலையில், தமோ குணமும் வெளிப்படுகிறது.

எப்படி ஓம் என்ற நிலையில், இந்த மூன்று குணங்களும் அடங்கி, நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவன் "சர்வஞன்" என்ற நிலையில் மட்டுமே இருக்கிறாரோ,
அதுபோல,
சமாதி என்ற நிலை ஒரு ஜீவனுக்கு ஏற்படும் போது, குணங்களை கடந்த நிலையை ஜீவன் பெறுகிறான்.




ஓம் என்ற பிரணவத்தின் மூல பொருளான பரவாசுதேவனை, சமாதி நிலையில் ஜீவன் சேருகிறான்.
இந்த நிலையில், ஜீவனும் குணங்களை கடந்து, நிர்குண நிலையை அடைந்து ப்ரம்மத்தோடு லயிக்கிறான்.
இப்படி சமாதி நிலையில், ஓம் என்ற பிரணவத்தின் அர்த்தமான நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனை புரிந்து கொள்ள வேண்டும்
என்று சாஸ்திரம் சொல்லி இருக்க,
அதே நிர்குண பரவாசுதேவன் இந்த திருமாலிருஞ்சோலையில் அர்ச்சா விக்ரக ரூபத்துடன் நமக்கு காட்சி கொடுக்கிறாரே !!"
என்று ஸ்தோத்திரம் செய்தார்.

"சமாதி நிலையில் அறியக்கூடிய நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனே, யாரும் பார்க்கும்படியாக தன்னை சுலபமாக்கிக்கொண்டு, கள்ளலழகராக இருக்கிறார்" 
என்று மண்டூக ரிஷி, பெருமாளை பார்த்து ஸ்தோத்திரம் செய்தார்.

இந்த மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் கள்ளழகர் சோலைமலையை விட்டு, 20 கிலோமீட்டர் குதிரையில் வந்தார்.
அந்த காட்சியை இன்று சித்திரை மாதம் போனாலும், கள்ளழகர் 20 கிலோமீட்டர் குதிரையில் வந்து, வைகையில் ஒரு நொடி இறங்கிவிட்டு, நேராக மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுக்கும் உற்சவத்தை நம் கண்ணால் ரசிக்கலாம்.

நம்மாழ்வார் (திருவாய்மொழி) நம் கள்ளழகரை மங்களாசாசனம் செய்து பாடுகிறார்.

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? 
திருமாலே கட்டுரையே
நம்மாழ்வார் (திருவாய்மொழி)
அர்ச்சா திருமேனியுடன் தான் கள்ளழகர் இருக்கிறார்.
இருந்தாலும்,
பரமபதத்தில் அப்ராக்ருத (Beyond Nature) திவ்ய மங்கள வடிவை கொண்ட பரவாசுதேவன் எப்படி இருப்பாரோ, அது போலவே இருக்கிறார் கள்ளழகர்.

கள்ளழகரை பார்க்கும் போது, இவர் அர்ச்சா திருமேனி  என்று தோன்றவே தோன்றாது.

இவர் எந்த உலோகத்தால் செய்யப்பட்டு இருக்கிறார்?
என்றே சொல்ல முடியாத படி, தனித்து இருக்கிறார்.
இன்றைக்கு சென்று, நம் ஊன கண்ணால் பார்த்தாலும் இந்த அதிசயத்தை நாம் உணரலாம்.

எந்த கோவிலுக்கு சென்று போய் பார்த்தாலும், கள்ளழகருக்கு உள்ள அந்த அழகு, பொலிவு வேறு எங்கும் பார்க்க முடியாது.

திருமஞ்சனம் செய்யட்டும், செய்யாமாலே இருக்கட்டும், இவர் திருமேனி மட்டும் தக தக வென்று அப்படி ஒரு பொலிவுடன் இருக்கும்.
நம்மாழ்வார் ஹ்ருதயத்தில் அத்தகைய பொலிவுடன் கள்ளழகர் காட்சி தர, அந்த பொலிவை வர்ணிக்கிறார்.

தக தக வென ஜொலிக்கும் பெருமாளின் "கன்னத்தில் (முக) வெளிப்பட்ட பொலிவு (ஜோதி) தான் கிரீடமாக (முடிச்சோதி) இருக்கிறதோ?"
என்று பார்த்து பிரமிக்கிறார் நம்மாழ்வார்.
கள்ளழகரை தான் பார்த்த காட்சியையே,
"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?"
என்கிறார்.

தங்க ஆபரணங்களை தனியாக பார்க்கும் போது ஜொலி ஜொலிக்குமாம்.
அதே தங்க ஆபரணங்களை கள்ளழகர் அணிந்துகொண்டு விட்டால், இவருடைய மேனி பொலிவுக்கு முன், தங்க நகைகள் பொலிவு இல்லாதது போல தெரியுமாம். 
இந்த அனுபவத்தை இன்று கள்ளழகரை சென்று பார்த்தால் கூட நாமும் அனுபவிக்க முடியும். 




கள்ளழகர் கன்னத்தை பார்த்தால், எதிரே நிற்பவர்களின் பிம்பம் தெரியுமாம். 
அத்தனை பொலிவு உடைய கள்ளழகரின் பொலிவை கண்டு மயங்கி, 
"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?"
என்று நம்மாழ்வார் ஆச்சர்யப்பட்டு கேட்கிறார்.

பெருமாளின் முகப்பொலிவை கண்ட பிரமித்த நம்மாழ்வார், "சரி திருவடியை பார்ப்போம்" என்று கவனிக்க,
கள்ளழகரின் திருவடியின் அடிப்பகுதி சிவந்து பெரும் பொலிவை தர,
அந்த "திருவடி பொலிவுதான் சிவந்த தாமரையாக மலர்ந்து இருக்கிறதோ?" என்று கேட்கிறார்.
கள்ளழகரை தான் பார்த்த காட்சியையே,  
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
என்கிறார்.

பெருமாள் இடுப்பில் பீதாம்பரம் அணிந்து இருந்தாலும், அந்த வஸ்திரத்தையும் மீறிக்கொண்டு, அவர் திருதொடையின் பொலிவு, பீதாம்பரத்துக்கும் மேல் பிரகாசிக்குமாம்.

இப்படி அடி முதல் முடி வரை தங்கம் போல (பைம்பொன்) தக தகவென ஜொலிக்கும் அழகரை கண்டு பிரம்பிக்கிறார் நம்மாழ்வார்.

இதையே
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் 
நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ
என்கிறார்.

எப்பொழுதுமே தங்கம் போல ஜொலிக்கும் கள்ளழகர் .
ஒரே ஒரு சமயம் மட்டும், பச்சை திருமேனியாக ஆகி விடுகிறார்.

கள்ளழகர் ஒரு சமயம் மலை மீது ஏறி, நூபுர கங்கைக்கு செல்வார்.
இந்த மலையோ பச்சை பசேல் என்று சோலையாக இருக்கும். 

போகும் வழியில், இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்று இருப்பதால், அந்த சாயம் இவர் கன்னத்தில் பிரதிபலித்து, பெருமாளே பச்சை வர்ணமாக காட்சி தருவார்.
அங்கு மட்டும் கள்ளழகர் பச்சை வண்ண பெருமாளாக இருப்பார்.
மற்ற சமயங்களில் எல்லாம், பெருமாள் மணிவண்ணனாகவே இருப்பார்.

இப்படி பெருமாளின் பொலிவை கண்டு ஆனந்தப்படுகிறார் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் பெருமாளை கொஞ்ச, 
கள்ளழகர் வீற்று இருக்கும் சோலைமலையையே கொஞ்ச வேண்டும் என்று ஆவல் வந்து விட்டது, பெரியாழ்வாருக்கு.
"சோலைமலை" தான்  பெரியாழ்வாருக்கு முக்தி ஸ்தலம்.
பெரியாழ்வார் சோலைமலையையே கொஞ்சி பாடுகிறார்.




பல பல நாழம் சொல்லி 
பழித்த சிசுபாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன்
அலங்காரன் மலை 
குலமலை
கோலமலை 
குளிர்மாமலை
கொற்றமலை
நிலமலை
நீண்டமலை 
திருமாலிருஞ்சோலையதே  
- பெரியாழ்வார் (திருமொழி)

"அலங்காரன் மலை (அழகர் மலை), குலமலை, கோலமலை, குளிர்மாமலை, கொற்றமலை, நிலமலை, நீண்டமலை
என்று திருமாலிருஞ்சோலையின் அழகை கொஞ்சி கொஞ்சி ரசிக்கிறார் பெரியாழ்வார்.
திருப்பதியில் உள்ள திருமலையை கூட ஆழ்வார்கள் இப்படி கொஞ்சியதாக தெரியவில்லை. 
ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார் வாத்சல்ய பாவம் கொண்டவர்.

இந்த வாத்சல்யம் சோலைமலையை பார்த்ததும் பெரியாழ்வாருக்கு ஏற்பட்டு, இப்படி ஆசை தீர கொஞ்சுகிறார்.

சிசுபாலனுக்கு நல்ல வார்த்தையே வாயில் வராதாம். 

சிலர் பேசும்போது, ஸ்தோத்திரம் செய்வது போல வெளியில் இருக்கும், ஆனால் கவனித்து பார்த்தால் உண்மையில் கிண்டல், கேலி இருக்கும்.

சிலர் பேசும்போது, வெளியில் திட்டுவது போல இருக்கும், ஆனால் உண்மையில் ஸ்தோத்திரம் செய்து இருப்பார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணன் சிறு பாலகனாக இருக்கும் போது வெண்ணை திருடி லீலை செய்தார். 
பக்தர்கள், "சோரன்" (திருடன்) என்று கிருஷ்ணனை சொல்வார்கள். வெளியில் திட்டுவது போல தெரியும்..
ஆனால், உண்மையில் அதீத கிருஷ்ண பிரேமையால், இப்படி ஸ்தோத்திரம் செய்வது புரியும்.

"நேரடியாக திட்டுவதோ, நேரடியாக கொஞ்சுவதோ நாகரீகம் இல்லை" என்று பண்புள்ளவர்கள் நினைப்பார்கள்.
"பிடிக்காதவர்கள் வந்தாலும், நேரடியாக திட்டுவது நாகரீகம் இல்லை"
என்று நினைப்பார்கள்.

இந்த சிசுபாலனோ, நாகரீகம் கொஞ்சமும் இல்லாதவன். 
உள்ளொன்று வெளியொன்று என்று இல்லாமல், பச்சையாக கிருஷ்ண பரமாத்மாவை திட்டுவானாம்.
 "கேட்பார் செவி சுடும்" என்பது போல, சிசுபாலன் பேசுவானாம்.

நம்மாழ்வார் "கேட்பார் செவி சுடும்" என்பது போல, சிசுபாலன் பேசுவான் என்கிறார்..

பீஷ்மர், விதுரர் போன்றோர் கண்ணன் "பரமாத்மா" என்று தெரிந்தவர்கள்
கண்ண பரமாத்மாவை யாராவது கேலி பேசினால் இவர்களுக்கு தாங்காது. 
பெருமாளிடம் பக்தி உள்ளவர்களுக்கு, பெருமாளை பற்றி அவதூறு பேசினால் தாங்காது.  இதுவும் இயற்க்கையான ஸ்வபாவம்.தான்.




ராஜசூய யாகத்தில், சிசுபாலன் கிருஷ்ணரை கண்டபடி சபையில் பேச ஆரம்பிக்க, விதுரர் கோபப்பட்டு சிசுபாலனை அதட்டினார். இது எதிர்பார்த்த ஒன்று தான்.  

நம்மாழ்வார், "அடியார் செவி சுடும் படி சிசுபாலன் பேசுவான்" என்று சொல்லி இருக்கலாம்.
மாறாக, "கேட்பார் செவி சுடும்" படி சிசுபாலன் பேசினான்" என்று சொல்கிறார்.

சிசுபாலன் கிருஷ்ணரை பச்சையாக திட்டுவதை கேட்டால், அடியார்களுக்கு மட்டும் செவி சுடும் படியாக இருக்காதாம்,
கிருஷ்ணரை கிண்டல் செய்ய சொல்லி கேட்டு ரசிக்கும் குணம் கொண்ட, கிருஷ்ணரை பிடிக்காத துரியோதனன், சகுனி போன்றவர்களுக்கே இவன் பேச்சை கேட்டால் "செவி சுடுமாம்".
சிசுபாலன் பேசுவதை கேட்பவன் அனைவருக்குமே செவி சுடும்படி கீழ்த்தரமான வசவுகளே பேசி அவமதிப்பானாம் சிசுபாலன்.

இவன் பேச்சை கேட்டு, ராஜசூய யாகத்தில் கிருஷ்ணரை தானே நிந்திக்கும் குணமுடைய துரியோதனனே எழுந்து "சிசுபாலா, இப்படி பேசாதே!!" என்று சொல்லும் அளவுக்கு கீழ்த்தரமாக பேசுவானாம் சிசுபாலன்.

அதன் காரணத்தாலேயே நம்மாழ்வார் 
"கேட்பார் செவி சுடும் கீழ்மை வசவுகளே வெய்யும் ..சிசு பாலன்" 
என்கிறார்.
இப்படி பகவானை தான் பிறந்ததிலிருந்து பல முறை நிந்திப்பதே (பல பல நாழம்) தொழிலாக வைத்து இருந்த சிசுபாலனின் அற்பத்தனத்தையும் (அலவலைமை) தவிர்த்து விட்டு,
அவனுக்கு தன் அழகான ரூபத்தை காட்டி, அவன் பேசிய பேச்சுக்கு சக்கரத்தை விட்டு அவன் உயிரை பறிக்க, உயிர் பிரிந்த போது, சிசுபாலனின் ஆத்மஜோதி, சபையில் இருந்த அனைவருக்கும் தெரிய, கண்ணனின் பாதத்தில் சேர்ந்து விட்டது.

பிறகு ஒரு சமயம், தர்மபுத்திரர், நாரதரிடம் இது பற்றி கேட்கிறார்.
தர்மபுத்திரர், 
"என்ன அநியாயம் இது!! 
பகவத் பக்தி செய்பவனுக்கு மோக்ஷம் கிடைக்கலாம். 
இந்த சிசுபாலன் பிறந்ததில் இருந்து கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்டே கிருஷ்ணரை இகழ்ந்து பேசுவான். அவனுக்கு போய், தன் திவ்ய தரிசனமும் கொடுத்து, நாங்கள் பார்க்க, அவன் ஜோதி கண்ணனின் பாதத்தில் சேர்ந்ததே!! 
மனிதர்கள் அநியாயம் செய்தாலே தவறு. 
இங்கு பகவான் அநியாயம் செய்கிறாரே! 
தன்னை நிந்தனை செய்தவனுக்கு போய் மோக்ஷம் கொடுத்துவிட்டாரே?"
என்று கேட்டார்.

"தன் அழகு பொருந்திய திவ்ய தரிசனம் சிசுபாலனுக்கு கிடைத்ததால், அந்த திவ்ய தரிசனத்தின் பலனாக மோக்ஷம் கொடுத்தார்"
என்று நாரதர் பதில் சொன்னார்.

கிருஷ்ண பரமாத்மா யாரிடமிருந்து இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்? என்று பெரியாழ்வார் மேலும் சொல்கிறார்.
சிசுபாலன் பேசிய பேச்சுக்கும் சக்கரத்துக்கு சரியாகி விட்டதாம்.
ஆனால், தன் அழகான தரிசனத்தை சிசுபாலனுக்கு காட்டி, அவன் மனத்திலும் உள்ளுக்குள்
"இத்தனை அழகான கிருஷ்ணனையா திட்டினோம்? அனாவசியமாக எதற்காக கிருஷ்ணனை திட்ட வேண்டும்?" 
என்று மனதுக்குள் நினைத்தானாம்.




தன் அழகால் சிசுபாபலன் போன்ற கீழ்த்தரமாக பேசுபவர்கள் நெஞ்சிலும், இடம் பிடித்து, அவன் தன்னை தரிசித்த பலனாக, சிசுபாலனுக்கும் மோக்ஷம் கொடுத்துவிட்டாராம். 

கிருஷ்ண பரமாத்மா யாரிடமிருந்து இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்? 
"அழகுக்கு உரிமையாளனான திருமாலிருஞ்சோலையில் இருக்கும் கள்ளழகரிடமிருந்து, இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்" 
என்று பெரியாழ்வார் கொஞ்சுகிறார்.!!

அதையே,
பல பல நாழம் சொல்லி 
பழித்த சிசுபாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன்
என்று ரசிக்கிறார்.

இப்படி,
அழகே உருவான நம் கள்ளழகர், தன் அழகை மேலும் பிரகாசிக்க செய்வது போல, 'கிரீடம், வைஜயந்தி மாலை, பீதாம்பரம், கௌஸ்துபம்' என்று அலங்காரமும் செய்து கொண்டு (அலங்காரன்) சோலைமலையில் வீற்று இருக்க,
இந்த சோலைமலை எப்படி இருக்கிறது? என்று பார்த்த பெரியாழ்வார், மலையை வர்ணிக்கிறார்.

"அனைவருக்கும் குல தெய்வமாக (குலமலை), 
அழகு மலையாக (கோலமலை), 
குளிர்மாமலை, 
தனக்கு அபிமானத்துக்கு பாத்திரமான பக்தனுக்கு  ஸம்ஸாரம் துக்கம், வாசனைகள் புகாதபடி செய்து, வெற்றியை கொடுக்கும்  மலையாக (கொற்றமலை), 
நல்ல மரங்கள் முளைக்கும் நிலத்தையுடைய மலையாக (நிலமலை), 
நீண்டமலையாக இருக்கும் திருமாலிருஞ்சோலையில் நம் கள்ளழகர் வீற்று இருக்கிறார்" 
என்று மலையை கொஞ்சி வர்ணிக்கிறார்.

தெய்வத்தை தவேஷிக்கும் சிசுபாலன் போன்ற கீழ்தரமானவர்கள் கூட அர்ச்ச ரூபத்தில் இருக்கும் கள்ளழகரை தன் ஊன கண்களால் பார்த்தால் கூட, மனம் மாறி விடுவான். 
"அழகர் என் குலதெய்வம்" என்று சொல்ல ஆரம்பித்து விடுவான்.

சிசுபாலன் போன்றவர்களுக்கு கூட மோக்ஷத்தை தன்னை தரிசனத்தின் பலனாக கொடுத்து விடும் பெருமாள், மதுரையில் அழகர்கோவில் இருக்கிறார்.

"அழகரை தரிசித்தாலே மோக்ஷம்" என்பதால்,
பேரழகு உடையவர் என்பதால்,
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி, பிறகு மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுக்கும் காட்சியை பார்ப்பதற்காகவே, 5 லட்சம் மக்கள் சித்ரா பௌர்ணமி அன்று கூடி விடுகிறார்கள்.

அனைவரும் அழகரை கண்களால் தரிசிப்போம்.
நாம் அனைவரையும் கள்ளழகரை, அவர் வீற்றுஇருக்கும் அழகர்மலையை காண அழைக்கிறார்.



Sunday 22 March 2020

மதுரை கூடலழகர் பெருமாள் சரித்திரம் - பாசுரம் (அர்த்தம்) - பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு - பெரியாழ்வார் கூடலழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

கூடலழகர் பெருமாள் கோவில் - மதுரை (பாண்டிய தேசம்)
எப்படி ஸ்ரீரங்கத்தில் பெரியபெருமாளை வளைத்துக்கொண்டு, ஒரு பக்கம் "காவிரி"யும், மறுபக்கம் "கொள்ளிடம்" என்ற பெயருடன் நதி ஓடுகிறதோ!! 
அதுபோல, 
மதுரையை தென் பக்கத்தின் வழியாக "க்ருதமாலா" என்ற நதியும், வடபக்கத்தின் வழியாக "வைகை" என்ற நதியும் ஓடிக்கொண்டிருந்தது.
(இன்று, க்ருதமாலா வற்றி விட்டது).

"சத்யவ்ரதன்" என்ற அரசன், ஆண்டு கொண்டிருந்தார்.




இவர் இப்போது நடக்கும் "வைவஸ்வத மனு"வுக்கும்  முன்னர் இருந்த சாக்ஷுச என்ற மனுவின் காலத்தில் இருந்தவர்.

"மதுரை" என்ற இந்த நகரம் எத்தனை காலங்களாக இருந்துள்ளது? என்பது மனுவின் காலத்தை கணக்கிட்டாலேயே நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்த சத்யவ்ரதனே 'சாக்ஷுச மனு'வின் ஆட்சி காலம் முடிந்தபின், வைவஸ்வத மனுவாக அவதரித்தார்.

மதுரைக்கு சம்பந்தப்பட்ட ஒரு அரசன், இன்று பூலோகத்தை வைவஸ்வத மனுவாக ஆட்சி செய்கிறார் என்பது நமக்கு பெருமை.

சத்யவ்ரதனாக ராஜ்யத்தை கவனித்து கொண்டிருந்த இவர், தர்மத்தில் மக்களை வைத்து இருப்பதிலும், தர்மம் மீறாமல் ஆட்சி செய்வதிலும் கவனமாக இருந்தார்.
அரசனாக இருந்தும், போகங்களை விரும்பாதவர்.
"தர்மத்தில் இருக்க வேண்டும், மக்களை இருக்க செய்ய வேண்டும்" என்று "கர்ம யோகியாக" ஆட்சி செய்து வந்தார் சத்யவ்ரதன்.

ராஜனாக இல்லாமல், ராஜரிஷியாக இருந்தார் சத்யவ்ரதன்.

சத்யவ்ரதன், "க்ருதமாலா என்று அழைக்கப்பட்ட வைகை" ஆற்றங்கரையில், பகவத் தியானம் செய்து கொண்டிருந்தார்.

திடமான சித்தம் கொண்டவர், சத்யவ்ரதன்.
புலன்களை அடக்கியவர், சத்யவ்ரதன்.
வைராக்கியம் உடையவர், சத்யவ்ரதன்.
தபஸ்வியாக இருப்பவர், சத்யவ்ரதன்.
எந்த காரியத்தை செய்தாலும் சிரத்தையாக செய்பவர் சத்யவ்ரதன்.

ராஜரிஷியான சத்யவ்ரதன், பகவானை தியானித்து கொண்டே, சந்தியா வந்தனம் செய்து, ஜலத்தை எடுத்து அர்க்யம் விட்டு கொண்டிருந்தார்.

அப்போது, ஜலத்தை கையில் எடுக்கும் போது, இவர் கையில் ஒரு சிறிய "மீன்" தானாக அகப்பட்டது.
கையில் மீன் (மத்ஸ்ய) இருப்பதை பார்த்த சத்யவ்ரதன், அதை மீண்டும் ஆற்றிலேயே கீழே போட்டார்.
இவர் கையில் தானாக வந்து விழுந்த அந்த மீன், அரசனை பார்த்து தேவ பாஷையில் பேசஆரம்பித்தது..
"உம்மை நான் சரண் அடைகிறேன். என்னை காப்பாற்றும். என்னை மீண்டும் ஆற்றிலேயே போட்டு விட்டீர்களே ?!
என்னை விட பெரிய மத்ஸ்யங்கள் உள்ள இந்த ஆற்றில் என்னை நீங்கள் விட்டு விட்டால், என்னை இவைகள் சாப்பிட்டு விடுமே !!"
என்று சொல்ல,
மீன் பேசியதை கண்டு ஆச்சர்யப்பட்ட சத்யவ்ரதன், இது சாதாரண மீன் அல்ல, தேவதை என்று உணர்ந்து, உடனே அந்த மீனை தன் தீர்த்தபாத்திரத்திலேயே போட்டு கொண்டு, தன் ஆஸ்ரமத்துக்கு வந்து சேர்ந்தார். 

அன்று ராத்திரியே அந்த மீன், பெரிய மீனாக வளர்ந்து, "இங்கு எனக்கு போதுமான தண்ணீர் இல்லையே!" என்று சொல்ல,
அரசர், தன் தீர்த்த பாத்திரத்தில் இருந்து அந்த மீனை எடுத்து, பெரிய தீர்த்த குடத்தில் மாற்றினார். 
சற்று நேரத்துக்கெல்லாம், அந்த மீனுக்கு அந்த இடமும் போதாதபடி குடம் முழுவதும் வளர்ந்து கிடக்க, அந்த மீனை எடுத்து தன் மாளிகையின் பின்புறம் உள்ள பெரிய கிணற்றில் விட்டு விட்டார்.
பொழுது விடிந்து பார்த்தால், அந்த கிணறு முழுவதையும் அடைத்துக்கொண்டு அந்த மீன் பெரிதாக ஆகி, "இந்த தண்ணீரும் எனக்கு போதவில்லையே!!" என்றது.

அரசர், தன்னுடைய சிஷ்யர்களோடு கூட அந்த மீனை எடுத்துக்கொண்டு போய், தக்ஷிண சமுத்திரத்தில் (indian ocean ) கொண்டு விட்டார்.

சமுத்திரத்தில் விடப்பட்ட மீன் உடனே சத்யவ்ரதனை பார்த்து சொல்கிறது,
"மீன் ஜாதியான எங்களுக்குள் பங்காளி பொறாமைகள் மிக அதிகம்.
ஒரு மீன், இன்னொரு மீனை சாப்பிட்டுவிடுவார்கள்.
மற்ற மீன்கள் என்னை பொறாமைப்பட்டு சாப்பிட்டுவிடுமே !
உங்களை சரணம் அடைந்தால்,  ஒரு தோஷமும் (குற்றமும்)  இல்லாத என்னை போய் சமுத்திரத்தில் தள்ளிவிட்டீர்களே?
தோஷம் இருந்தால் கூட அபயம் (பாதுகாப்பு) கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கேள்விப்பட்டது இல்லையா?
என்னிடம் ஏதாவது தோஷம் இருந்தாலும், இப்படி நீங்கள் என்னை தள்ளலாமா?"

என்று அந்த மீன் கேள்வி கேட்டது.

"மீன் பேசுமா? அதிலும் தேவபாஷையில் பேசுகிறதே இந்த மீன்! 




இது ஏதோ தேவலீலை, வந்திருப்பது ஒரு தேவன்" என்று புரிந்துகொண்ட சத்யவ்ரதன், அந்த மீனை பார்த்து,

"நீ ஒரு சாதாரண மீன் அல்ல. நீ யாரோ ஒரு மஹாபுருஷன், இப்படி ஒரு மீன் ரூபத்தில் வந்து, என்னிடத்தில் இப்படி விளையாடுகிறாய் என்று நினைக்கிறன்.

பரவாசுதேவனுக்கு தான் செய்யும் அவதாரங்கள் மட்டுமே லீலை (விளையாட்டு) அல்ல..  தான் செய்யும் உலக படைப்புகளும், உலகை காப்பதும், உலகை அழிப்பதும் கூட லீலை தான் என்று வேதம் சொல்கிறது.

உலக நிர்வாகத்தையே விளையாட்டாக செய்து கொண்டு போகிறார் பரமாத்மா நாராயணன் என்று வேதம் சொல்கிறது.

அப்படி இருக்க, இப்போது எனக்கு காட்சி தருவது மாய மீன் என்று அறிகிறேன்.
மீனை போல காட்சி தருகிறாயே தவிர, நீ மீன் அல்ல என்று அறிகிறேன்.
நீ சாக்ஷத் பரமாத்மா என்று நினைக்கிறேன்"
என்று சத்யவ்ரதன் சொன்னதுமே, மத்ஸ்ய (மீன்) ரூபத்தில் இருந்த பகவான் பேசலானார்,
"ஹே சத்யவ்ரதா ! ராஜன்.. உன் பகவத் பக்திக்கு நான் ப்ரசன்னமானேன். நீ சொல்வது சத்யம்.
நான் மத்ஸ்ய ரூபத்தில் வந்திருக்கும் பரமாத்மா தான்.

சரணாகதி செய்தவனை ரக்ஷிப்பதின் பெருமையை உனக்கு தெரிவிக்கவே இப்படி விளையாடினேன்.

ஒரு மீனாக இருந்தாலும், சரண் அடைந்து விட்டால், அதை காப்பாற்ற வேண்டும்.
ஒரு பிராணி நம் வீட்டில் நம்பி இருந்தாலும், அதை நாம் காப்பாற்ற வேண்டும்.

ஜீவகாருண்யம் உயர்ந்த கர்மம்!
அதை உனக்கு காட்டவேண்டும் என்பதற்காக நான் இந்த விளையாட்டு விளையாடினேன்.

இந்த மத்ஸ்ய ரூபம் உனக்காக மட்டும் எடுத்துக்கொண்டது ல்ல.
முன்பு பிரளய காலத்தில் இந்த மத்ஸ்ய ரூபம் எடுத்துக்கொண்டேன்.

யோகநித்ரையில் நான் இருக்கும் பொழுது, என் நாபிகமலத்தில் இருந்து "ப்ரம்ம தேவனை" படைத்தேன். 
ப்ரம்ம தேவன் 'வேத ஸ்வரூபன்'. 
அவர் நான்கு தலைகளும் நான்கு வேதங்கள்.

வேதத்தை கொண்டுள்ளதால், ப்ரம்ம தேவனுக்கு "வேத கர்பன்"என்று பெயர். 

ஒரு சமயம் "மது கைடபர்"கள் இந்த நான்கு வேதத்தையும் எடுத்துக்கொண்டு ப்ரளயஜாலத்துக்குள் ஓடி ஒளிந்துகொண்டு விட்டார்கள்.
அந்த வேதத்தையும் மீட்க வேண்டும், இவர்களையும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக, பிரளய ஜலத்தில் நீந்தி வேதத்தை மீட்க அதற்கு ஏற்ற மத்ஸ்ய ரூபத்தை அன்று தரித்துக்கொண்டேன்.
பிரளய காலமாக இருந்ததால், என் அவதாரத்தை பார்த்து ரசிக்க அப்போது ஒரு பக்தன் இல்லை. 
நான் எந்த அவதாரம் செய்தாலும், அந்த அவதாரத்தை பார்த்து ரசிக்க ஒரு பக்தன் தேவை. அதனால், உம்மிடத்தில் வந்து மத்ஸ்ய அவதாரம் செய்து விளையாடினோம்.
இன்றிலிருந்து 7வது நாள், ஒரு பெரிய பிரளயம் வரப்போகிறது.
அந்த சமயத்தில் நீ என்னை தியானிக்கும் போது, நான் உன்னை ரக்ஷிப்பேன்." 
என்று சொல்லிவிட்டு, பகவான் மறைந்து விட்டார்.




ப்ரம்மாவின் 100 ஆயுசு முடியும் போது, மஹா பிரளயம் ஏற்பட்டு, 14 லோகங்களும் (சத்ய லோகம் முதல் பாதாளம் வரை)  அழிந்து விடும்.

ப்ரம்மாவின் ஒரு பகல் முடிந்து, அவர் தூங்கும் காலத்தில் 'நைமித்திய பிரளயம்' ஏற்படும்.
இந்த நைமித்திய பிரளய காலத்தில், 
14 லோகங்களுக்கும் கீழே இருக்கும் பிரளய ஜலம் எழும்பி, பாதாளம் தாண்டி, பூலோகம், புவர்லோகம் தாண்டி, சொர்க்க லோகம் வரை பொங்கி, பிரளய ஜலத்தில் அழித்து விடும்,

பூலோகத்திற்கு மேல் உள்ள புவர்லோகம், சொர்க்க லோகம்  உள்ளது.
பூலோகத்திற்கு கீழ் உள்ள 7 லோகங்கள் (அதள, விதள, சுதள, தலாதள,மஹாதள, பாதாள,ரஸாதல) உள்ளது.

இவை அனைத்தும் நைமித்திய பிரளய ஜலத்தில் அழிந்து விடும்.

சொர்க்க லோகம் வரை உயர்ந்து கிடைக்கும் பிரளய ஜலத்தில், அந்த பிரளய ஜலத்துக்கு ஏற்ற பெரிய ரூபத்துடன் மத்ஸ்ய அவதாரம் லீலையாக (விளையாட்டாக) செய்தார் பெருமாள். 

இப்படி பிரளய ஜலத்தில் "மீனாக அவதாரம்" செய்த பெருமாள், தன் வாலை சுழற்றி பிரளய ஜலத்தில் ஒரு அடி அடிக்க, 
அதனால் தெறித்த தண்ணீர், சொர்க்க லோகத்துக்கும் மேல் உள்ள மகர லோகம், ஜன லோகம், தப லோகம் தாண்டி, ப்ரம்ம லோகம் வரை சென்று விழுந்து, ஈரமாக்கியதாம்.
அப்படியென்றால், எத்தனை பெரிய அவதாரம் மத்ஸ்ய அவதாரம் என்று தெரிகிறது.

பகவான் சொன்னபடியே, 7வது நாளில் பிரளயம் ஏற்பட்டு, பூலோகம் தண்ணீரில் மூழ்கி விட,  சத்யவ்ரதன் பகவானை தியானிக்க, 
ஒரு பக்கம் ஸ்ரீதேவியுடன், மறுபக்கம் பூதேவியுடன் ஆதிசேஷன் மேல், உட்கார்ந்து இருந்த திருக்கோலத்தில் பகவான் ஒரு கையால் சத்யவ்ரதனை தன் அருகில் கூப்பிட்டு, மறுகையால் அபய முத்திரையுடன் காட்சி கொடுத்தார். 

சத்யவ்ரதனை காக்க, பகவான் மத்ஸ்ய ரூபத்தை எடுத்துக்கொள்ள, சத்யவ்ரதன் கூடவே சப்த ரிஷிகளும் பெருமாளின் மேல் ஏறிக்கொள்ள,
பிரளய ஜலத்தில் நீந்தி கொண்டே பகவான், தன் மீது அமர்ந்து இருக்கும் சத்யவ்ரதனுக்கு தர்ம உபதேசங்கள் செய்தார்.
பிரளய ஜலம் வடிந்ததும், சத்யவ்ரதன் வைவஸ்வத மனுவாக ஆகி, உலகை ஆட்சி புரிந்துகொண்டு இருக்கிறார்.

'தனக்கு மத்ஸ்ய ரூபத்தில் எப்படி பெருமாள் காட்சி கொடுத்தாரோ, அதே போல, ஒரு கோவில் அமைத்தார்' சத்யவ்ரதன் என்ற வைவஸ்வத மனு.

சத்யவ்ரதன் அமைத்த கோவில் இந்த தான், மதுரையில் உள்ள "கூடலழகர் திருக்கோவில்". 
'மதுரை' என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு "கூடல்" என்று தமிழில் பொருள்.

திருமாலிருஞ்சோலையில் உள்ள கள்ளலழகரும் அழகர் தான். 
கூடல் மாநகரில் உள்ள பெருமாளும் அழகர் தான். 

கள்ளழகர் பெருமாள் (திருமாலிருஞ்சோலை), வட மதுரையில் இருக்கிறார்.
கூடலழகர் பெருமாள், தென் மதுரையில் இருக்கிறார்.

கூடலழகர் பெருமாள் ஒரு பக்கம் ஸ்ரீதேவியுடன், மறுபக்கம் பூதேவியுடன் ஆதிசேஷன் மேல், உட்கார்ந்து இருந்த திருக்கோலத்தில், பரமபதத்தில் இருப்பது போல கம்பீரமாக இருக்கிறார்.




திருமாலிருஞ்சோலையில், பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருக்கிறார்.

கூடலழகர் விமானமும், திருக்கோஷ்டியூர் போல, அஷ்டாங்க விமானத்துடன் உள்ளது.
பெருமாளும் ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்து இருக்கும் அழகை பார்த்தால், வாசலில் இருக்கும் நம்மை கூப்பிடுவது போல இருக்கும்.

பெருமாளின் முத்திரையும் அதற்கு ஏற்றார் போல இருக்கிறது.

அர்ச்சா (பூஜிக்கத்தக்க) திருமேனியுடன் இருக்கும் பகவான், ஒவ்வொரு இடத்திலும் ஒரு வித முத்திரையுடன் நமக்கு காட்சி தருகிறார்.
கூடல் நகரில் இருக்கும் இந்த அழகர், 
ஒரு கையால் நம்மை கூப்பிடுவது போல முத்திரையுடன், 
அருகில் வந்த தன் பக்தனுக்கு, மற்றொரு கையால் அபயம் (பயப்படாதே!) என்ற முத்திரையுடன் இன்றும் காட்சி தருகிறார்.

எப்படி சத்யவ்ரதனுக்கு காட்சி கொடுத்த்தாரோ! அதேபோல, 
நம்மையும் கூப்பிட்டு, உன் பயத்தை போக்க, "நான் இருக்கிறேன்" என்று அபயம் தருகிறார்.

இப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாளுக்கு, சத்யவ்ரதன் என்ற வைவஸ்வத மனு, வைகானச முறைப்படி பூஜைகள் நடக்குமாறு ஏற்பாடு செய்தார் கூடலழகர்.

இந்த பெருமாளுக்காக பிரத்யேகமாக பாடப்பட்டது தான் 
"பல்லாண்டு..." என்ற பிரசித்தி பெற்ற "பெரியாழ்வார் பாசுரம்".

பெரியாழ்வார் காலத்தில், வல்லபதேவன் என்ற பாண்டிய ராஜன், "அனைத்து சமயங்களிலும் சாரதமமான (மிகவும் உயர்ந்த) சமயம் எதுவோ, அதை தான் ஆச்ரயிக்க வேண்டும்" 
என்று ஆசைப்பட்டார்.

அதற்காக கூடல்நகர் என்ற மதுரையில் "பெரிய வித்வத் மேளா" ஒன்றை ஏற்பாடு செய்தார்.

இந்த மேளாவில், பல வித வைதீக வித்வான்களும், வைதீகம் அறியாத மற்ற சமய வித்வான்களும் கலந்து கொண்டு, அவரவர் சமயத்துக்கு சார்பாக பேச ஆரம்பித்தனர்.

எந்த சமயம் தெய்வ சம்மதமோ, அந்த சமயத்தை தான் ஏற்க ஆசைப்பட்ட அரசர், ஒரு பொற்கிழியை உயரே கட்டி விட்டு, 
"எந்த சமயம் தெய்வத்துக்கு சம்மதமோ, அந்த சமயத்தை தெய்வமே இந்த பொற்கிழி தானாக கீழே விழ செய்து பதில் சொல்லட்டும்" 
என்று சொல்லிவிட்டார்.




விஷ்ணுசித்தர், ஸ்ரீவில்லிபுத்தூரில், பெருமாளுக்கே தொண்டு செய்து கொண்டு, பெருமாள் ப்ரஸாதத்தையே பெற்றுக்கொண்டு, எளிமையான வாழ்க்கை நடத்திக்கொண்டு இருந்தார்.

இப்படி அரசன் பரிக்ஷை  வைக்க, கூடலழகர் பெருமாளே, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் விஷ்ணுசித்தர் கனவில் தோன்றி, கூடல் நகருக்கு வர சொல்லி, "தன்னை பற்றி அந்த சபையில் நிர்ணயம் செய்யவும்" 
என்று சொல்ல,
"எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, பெரிய சபையில், அனைவரும் ஏற்கும் விதமாக பேசும் சாமர்த்தியம் உண்டோ" என்று விஷ்ணுசித்தர் கேட்க,
"நாமே உம்முடைய வாயிலிருந்து பேசுவோம்.. வாரும்" 
என்று பகவான் அழைத்தார்..

அதே சமயத்தில், அரசனுக்கும் "இப்படி ஒரு ஒருவர் வருகிறார்" என்று கனவில் அசரீரியாக கேட்க, விஷ்ணுசித்தர் கூடல்நகர் வந்ததும், தகுந்த மரியாதை செய்து வரவேற்றான்.

சபைக்கு வந்து சேர்ந்தார் விஷ்ணுசித்தர். 
மிக பெரிய சபை ஏற்பாடாகி இருந்தது.

"குதர்க்கமாக" பேசுபவர்கள், 
"நோக்கத்துடன்" பேசுபவர்கள், 
"சாஸ்திர பிரமாணமாக" பேசுபவர்கள், 
"சாஸ்திர விரோதமாக" பேசுபவர்கள், 
என்று பல கோஷ்டிகள் குழுமி இருந்தார்கள்.

"தான் பேச போவதில்லை.. பகவான் தான் உள்ளிருந்து பேச போகிறார்" என்பதால், 
"இவர்கள் மத்தியில் பேசவேண்டுமே !!" 
என்ற எந்த ஒரு கவலையும் இல்லாமல் நிம்மதியாக உட்கார்ந்தார் விஷ்ணுசித்தர்.

இப்படி ஒவ்வொருத்தரும் தன் தரப்பில் பேச ஆரம்பிக்க, இவர் தரப்பு பேச நேரம் வர, அரசர் மரியாதையோடு 
"தாங்கள் தங்கள் பக்க அபிப்ராயத்தை சொல்ல வேண்டும்" என்றதும்,
"வேண்டிய வேதங்கள் ஓதி" என்று "வேதத்தின் சாரம் என்ன?" என்பதை எடுத்து, பகவானின் பரத்துவத்தை நிர்ணயம் செய்ய, 
அனைவரும் பார்க்க, மேலே கட்டி இருந்த பொற்கிழி தானாகவே அவிழ்ந்து, விஷ்ணுசித்தர் அமர்ந்து இருக்கும் இடம் நோக்கி வளைந்து கொண்டு, அவர் மடியில் தானாகவே வந்து விழுந்தது.

அந்த காலங்களில், "பகவானை அடைய எது சிறந்த வழி? என்று தெரிந்து கொள்ளவே அனைவரும் ஆசைப்பட்டனர். 
தன் சமயத்தை பிடித்துக்கொண்டு, வீண் பிடிவாதம் செய்த காலம் இல்லை. 

"இவர் மகிமை பொருந்தியவர்" என்று புரிந்து கொண்ட மற்றவர்களும், இவரை பெரிய ரதத்தில் வைத்து ஊர்வலமாக அழைத்து மரியாதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

அரசரும், இவரையே ஆஸ்ரயித்து, விஷ்ணுசித்தரை பட்டத்து யானையில் ஏற்றி, ஊர்வலமாக தானே அழைத்து கொண்டு வருகிறார்.

மற்ற பண்டிதர்கள் எல்லோரும், ஆசையோடு கூடவே வந்தனர். 
சிலர் சத்ர-சாமரம் போட்டுக்கொண்டே அழைத்து வந்தனர்.




இப்படி "விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார்" மதுரையின் நான்கு வீதியை சுற்றிக்கொண்டு வரும் போது, 
தன் குழந்தைக்கு விழாவில் மரியாதை செய்வதை பார்க்க தாயும் தந்தையும் பார்க்க ஆசைப்படுவது போல,

கூடலழகர் பெருமாள் இருப்பு கொள்ளாமல், தானும் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன், கருடவாகனத்தில் வர, 
எம்பெருமானை ஆகாசத்தில் கருடவாகனத்தில் பார்த்த பெரியாழ்வார், தன்னுடன் கூட வந்திருக்கும் பண்டிதர்களில்,  
சிலர் பரமாத்மா என்று ஒருவர் இல்லவே இல்லை என்றும்,
சிலர் அணுக்கள் தான் உலகம் என்றும்,
சிலர் இயற்கையே தான் உண்மை என்றும்,
சிலர் கர்மா (action-reaction ) தான் என்றும் 
சிலர் காலம் தான் என்றும்,
சிலர் வேதத்திலேயே சொன்ன உபதெய்வங்களையே பரமாத்மா என்றும்,
சிலர் தெய்வம் உண்டு, ஆனால் தெய்வத்துக்கு நாமம் இல்லை, ரூபம் இல்லை, குணம் இல்லை என்றும் வாதிட்டவர்கள்.
இவர்கள் மத்தியில், இப்படி அப்பட்டமாக நாம, ரூப, குண, சௌந்தர்யத்துடன் "தானே பரமாத்மா" என்று வந்து விட்டாரே?!!  
"இவர்களால் பெருமாளுக்கு கண் திருஷ்டி பட்டு விடுமோ!!" என்று நினைத்தார் பெரியாழ்வார்.

"குழுமி இருக்கும் அத்தனை பேரும் பெருமாளின் அருமை தெரிந்து இருப்பார்களா? 

பக்தர்கள் நடுவில், பெருமாள் இப்படி திவ்ய காட்சி கொடுத்தால், ஆசை தீர ஆடுவார்கள், பஜிப்பார்கள்.
இவர்களோ! இத்தனை காலமும், குதர்க்கம் செய்து கொண்டிருந்தார்கள். பெருமாளின் மகிமையை உணராது இருந்தார்கள்.
இவர்களும் பார்க்கும் படியாக, கொஞ்சம் அவசரப்பட்டு தரிசனம் தந்துவிட்டாரோ?" 
என்று பெரியாழவார் மனதுக்குள் நினைத்துக்கொண்டார். 

"பெருமாளுக்கு திருஷ்டி பட்டு இருக்குமோ!!" என்று தோன்ற, பெரியாழ்வார், "பெருமாளுக்கு பல்லாண்டு பாடி திருஷ்டி கழிக்க வேண்டும்" என்று ஆசைப்பட்டார்.

பெரியாழ்வார் அழகாக இசையோடு பாடுவார். 
"வித்வத் சபைக்கு வருகிறோமே" என்பதால், பஜனை செய்ய விடமாட்டார்கள் என்பதால் தாளம் எடுத்துக்கொண்டு வரவில்லையாம் பெரியாழ்வார்.

பெருமாள் கருடனில் அமர்ந்து காட்சி கொடுக்க, இப்போது பஜனைக்கு அவசியம் வந்ததும், பெரியாழ்வாருக்கு தாளம் தேவைப்பட்டது.

யானையின் இருபக்கமும் தொங்கி கொண்டிருந்த மணிகளையே தாளமாக எடுத்துக்கொண்டு, ஒன்றோடு ஒன்று மொத்திக்கொண்டு, பகவானுக்கு மங்களாசாஸனம் செய்கிறார் பெரியாழ்வார்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா 
உன் சேவடி செவ்வி திருக்காப்பு 
-- பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு 

பெருமாள் கருடவாகனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கும் போது, பெருமாளின் திருவடி இருபக்கமும் தொங்கிக்கொண்டு இருக்க, பெரியாழ்வார் அந்த சிவந்த திருவடியை, அனைவருக்கும் சரணமாக இருக்கக்கூடிய திருவடியை (சேவடி) பார்த்துவிட்டார்.




பெருமாள் "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்று "என்னை ஒருவனையே சரணடைந்து விடு" என்று தான் தன் திருவடியை அனைவருக்கும் காட்டினார்.

முத்தும்மணியும் வைரமும் நன்பொன்னும்
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
--  பெரியாழ்வார் அருளிச்செய்த திருமொழி

"சங்கு சக்ர யவ வஜ்ர ரேகைகள் உடையதாக, 
முத்தும் மணியும், வைரமும், நன் பொன்னும் (தங்கமும்), தத்திப் பதித்து தலைபெய்தார் போல, எங்கும் பத்து விரலும், மணிவண்ணன் பாதம்" என்று பெருமாளின் திருவடியை கொஞ்சும் பெரியாழவார், 
கூடல் நகரில், பலரும் பார்க்க தன் திருவடியை பெருமாள் காட்டி விட, பெரியாழ்வாருக்கு அற்புதமான இந்த திருவடியை பார்த்து இவர்கள் கண் பட்டு விடுமே!! என்று திருவடியை பாதுகாக்க நினைத்து, அந்த திருவடிக்கு ஒரு திருக்காப்பு (பாதுகை) போட்டு மறைத்தாராம். 
அதையே
'உன் சேவடி செவ்வி திருக்காப்பு' 
என்கிறார்.

பெருமாளின் அங்கங்கள் ஜொலிஜொலிப்புடன் காந்தியுடன் இருப்பதை, மணிவண்ணா என்று அழைக்கிறார்.

முஷ்டிகன் சாணுரன் என்ற இரு மல்லர்களோடு சண்டையிடும் திண் (உறுதியான) தோளை கொண்ட பெருமாள் இவர் என்றதும், திண்தோள் என்று அழைக்கிறார்.

இந்த பெருமாளுக்கு தான் "சுந்தர பாகு" என்று பெயர். அழகிய தோள் உடையவர்.

இது திருஷ்டி கழிப்பு பெருமாளுக்கு போதாது என்று, மேலும் பாடுகிறார்.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம், பல்லாண்டு!
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும், பல்லாண்டு!
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு!
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
--  பெரியாழ்வார் அருளிச்செய்த திருமொழி

"தன்னை பெருமாள் பார்த்து கொள்ள வேண்டுமே!" என்று சாமானியன் நினைக்கிறான்.

"தான் பல்லாண்டு பாட, பெருமாள் தனக்கு வேண்டுமே ! அவர் நன்றாக இருக்க வேண்டுமே" என்று பக்தன் நினைக்கிறான்.

"தான் செய்யும் பஜனையை பார்க்க, பெருமாள் ரூபத்துடன் வேண்டுமே" என்று பக்தன் கேட்க,
ரூபம் கடந்த, குணங்கள் கடந்த, நாமங்கள் கடந்த பரமாத்மா, 
"பக்தன் செய்யும் பஜனைக்காக, நாம, ரூப, குணங்களை எடுத்துக்கொண்டு" பாரத தேசம் முழுவதும் விபவ அவதாரமும், அரச்ச அவதாரமும் செய்து தோன்றி விட்டார்.

பக்தனான பெரியாழ்வாருக்கு "பெருமாள் பல்லாண்டு சுகமாக இருக்க வேண்டும்" என்று தோன்ற, 
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 
பலகோடி நூறாயிரம் ஆண்டு" 
என்று மங்களாசாசனம் செய்கிறார். 

"பெருமாள் மட்டும் பல்லாண்டு இருந்தால் போதுமா? 
பெருமாளுக்கு பல்லாண்டு பாடும் பக்தனும் பல்லாண்டு இருக்க வேண்டுமே" 
என்று நினைவு வர, பெருமாளும் (நின்னோடும்), பக்தனும் (அடியோமோடும்) பிரியாமல் பல்லாண்டு இருக்க வேண்டும் என்று மங்களாசாஸனம் செய்கிறார்.





அதையே
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு 
என்கிறார்.


அடுத்ததாக பெருமாளின் ஸ்ரீவத்சம் உடைய திருமார்பில் பிராட்டி இருக்க, மஹாலக்ஷ்மி  தாயாருக்கும் பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.
அதையே
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
என்கிறார்.

பெருமாள் மட்டுமே அழகு, அவர் கையில் வைத்து இருக்கும் சக்கரமும் (சுடராழி), சங்கும் (பாஞ்சசன்யமும்) கூட அழகாய் இருக்க, 
அந்த சங்கு சக்கரத்துக்கு பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.
அதையே
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு!
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
என்கிறார்.

பாஞ்சசன்யம் (சங்கும்) பெருமாள் கையில் தான் உள்ளது. பெருமாள் எதிரில் தான் காட்சி கொடுக்கிறார். 
இருந்த போதிலும், 
"இந்த பாஞ்சசன்யம்" என்று சொல்லாமல், "அந்த பாஞ்சசன்யம்" (அப் பாஞ்சசன்யமும்) என்று குறிப்பிட்டு சொல்கிறார் பெரியாழ்வார்.

பெருமாள் வைத்திருக்கும் சங்கு வெண்மையானது
அன்ன பக்ஷியும் வெண்மையானது.
அன்ன பக்ஷிக்கு ஒரு பக்கம் கொண்டையும், கூரான மூக்கும் இருப்பது போல, சங்கிற்கும் உண்டு

அன்ன பக்ஷி ஒரு தாமரை பூவில் இருந்து மற்றொரு தாமரை பூவில் அமரும் போது, "கீச்" என்று கூவுவது போல, 
பெருமாளின் கையில் இருக்கும் இந்த வெண் சங்கு, அவர் கையிலிருந்து அவர் உதரத்துக்கு (உதட்டுக்கு) அருகில் சென்றது, சங்க நாதம் கொடுக்குமாம். 

"பாஞ்சசன்யமும் பல்லாண்டே" 
என்று பாட வந்த பெரியாழ்வாருக்கு இந்த நினைவு வர, அந்த நிமிஷத்தில் கண்ணை மூடி பெருமாளை தியானிக்க, வெண் சங்காக இருந்த அந்த பாஞ்சசன்யம், பெருமாளின் கொவ்வை சிவப்புடன் உள்ள உதரத்திற்கு அருகில் சென்றதும், வெண் சங்கு, சிவப்பாக தெரிய, பெருமாளின் அழகில் மயங்கி நின்ற பெரியாழ்வார், 'சிவப்பு ஏறிய அந்த பாஞ்சசன்யத்துக்கும் பல்லாண்டே' என்று மங்களாசாசனம் செய்கிறார்.

அனைவரும் கூடலழகரை தரிசிப்போம். பல்லாண்டு பாடுவோம்.


Saturday 21 March 2020

ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) நம்பெருமாள் வருவதற்கு முன் நடந்த சரித்திரம். தெரிந்து கொள்ள வேண்டாமா?

உலக ஸ்ருஷ்டி ஆரம்பமான காலம்:
ப்ரம்மாவுடைய மானஸ புத்ரன் தக்ஷன்.
ப்ரம்மாவின் ஆணையை ஏற்று தக்ஷ ப்ரஜாபதி உலக ஸ்ருஷ்டிகளை செய்தார்.
28 பெண் தேவதைகளை ஸ்ருஷ்டி செய்தார்.
இதில் 27 தேவதைகளே 'நக்ஷத்திரங்களாக' ஜொலிக்கின்றனர். மற்றொருவள் பெயர் "அபிஜித்".

"க்ஷத்ர" என்றால் "மங்கக்கூடிய" என்று பொருள்.
"ந-க்ஷத்ர" என்றால் "மங்காத" என்று பொருள்.

உலகில் மனிதர்களை "மங்காத புகழ்" என்று சொல்ல "நக்ஷரம்" என்று சொல்லி பெருமைபட்டுக்கொள்வார்கள்.
ஆனால்,
அனைவரும் ஒருநாள் மங்கக்கூடியவர்களே !




உண்மையில் என்றுமே மங்காத பெருமையுடன் இரத்தின மாலை போல ஜொலிப்பவர்கள் இந்த தேவதைகள்.

27 பெண்களின் பெயர்: (நக்ஷத்ர தேவத்தைகள்)
அஸ்வினி, பரணி, கிருத்திகா (கார்த்திகை),
ரோகினி, ம்ருகசீர்ஷா, ஆத்ரா (திருவாதிரை),
புனர்வசு (புனர்பூசம்),  புஷ்ய (பூசம்), ஆஸ்லேசா (ஆயில்யம்),
மகா (மகம்), பூர்வ பல்குனி (பூரம்), உத்தர பல்குணி (உத்திரம்),
ஹஸ்த (அஸ்தம்), சித்ரா (சித்திரை), ஸ்வாதி (சுவாதி),
விஷாகா (விசாகம்), அனுராதா (அனுஷம்), ஜ்யேஷ்டா (கேட்டை),
மூல (மூலம்), பூர்வ ஆஷாடா (பூராடம்), உத்தர ஆஷாட (உத்திராடம்),
ஸ்ரவண (திருவோணம்), தனிஷ்டா (அவிட்டம்), சதபிஷா (சதயம்),
பூர்வ பாத்ரபதா (பூரட்டாதி), உத்திர  பாத்ரபதா (உத்திரட்டாதி), ரேவதி

தன் 28 பெண்களையும், பாற்கடலில்  தோன்றிய சந்திரனுக்கே மணம் செய்து கொடுத்தார்.
பார்ப்பதற்கே குளிர்ச்சியாகவும், அழகாகவும் இருக்கும் சந்திரன், செல்வத்துக்கு அதிதேவதையான மகாலட்சுமிக்கு சதோதரன்
என்ற காரணத்தினாலேயே மனமுவந்து தன் 27 பெண்களையும் கொடுத்தார்.

பெருமாளும், தாயாரும் நமக்கு தாய் தந்தை.
அதன் காரணத்தாலேயே, மகாலட்சுமியின் சகோதரனான சந்திரனை "சந்திர மாமா" என்றும் "அம்புலி மாமா" என்று உறவு சொல்லி அழைக்கிறோம்.
இந்த அதி தேவதைகளே 27 நக்ஷத்திர மண்டலங்களாக, சந்திரனுடன் நமக்கு காட்சி கொடுக்கிறார்கள்.

28 பெண்களை மனம் செய்து கொடுத்தாலும், சந்திரன் ரோகினியிடம் மட்டும் தனி பிரியம் கொண்டிருந்தார்.
மற்ற மனைவிகளிடம் சமமாக பழகாமல் இருந்து வந்தார்.

தங்கள் குறையை தகப்பனாரான தக்ஷனிடம் மற்ற 27 பெண்கள் சொல்ல, மனைவியிடம் பிரியம் இல்லாமல் இருக்கும் சந்திரன் மேல் கடும் கோபம் கொண்டார்,  தக்ஷ பிரஜாபதி.
மாப்பிள்ளையை சபித்தால் யாருக்கு நஷ்டம்?
தன் பெண்களுக்கு தானே நஷ்டம் !

கோபத்தில், சந்திரனை பார்த்து "உன் பொலிவான தோற்றத்தில் க்ஷய ரோகம் (தேய்மானம்) ஏற்படட்டும்" என்று சபித்துவிட்டார்.

சாபத்தால், நாளுக்கு நாள் சந்திரனின் பொலிவு தேய ஆரம்பிக்க, "அமாவாசை வருவதற்குள் நாம் முழுவதும் பொலிவு இல்லாமல் அழிந்து விடுவோம் போல உள்ளதே!!" என்று ப்ருகு முனிவரை சந்திரன் சரண் அடைந்து உபாயம் கேட்டார்.

ப்ருகு சந்திரனை பார்த்து, "நீ உடனேயே பூலோகம் சென்று, அங்கு வாசுதேவனை  ஆராதனை செய். அப்படி செய்தாய் என்றால், உனக்கு இந்த க்ஷய ரோகம் நிவர்த்தி ஆகும்" என்று சொல்ல,

சந்திர தேவன்  பூலோகம் வந்து, தானே ஒரு புண்ணிய தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, வாசுதேவனை குறித்து ஆராதனை செய்ய தொடங்கினார்.

சந்திரனால் ஏற்பட்ட இந்த தீர்த்தத்துக்கு "சந்திர புஷ்கரணி " என்று பெயர் ஏற்பட்டது.
இது காவிரி உருவாவதற்கும் முந்தைய காலம்.
திருவரங்கத்திற்கு நம்பெருமாள் இன்னும் வராத காலம்.

"சந்திர புஷ்கரணி " என்ற தீர்த்தம் அமைத்து, அதன் நான்கு பக்கங்களிலும் மேலும் (உப) சில தீர்த்தங்களும் அமைத்தார் சந்திர தேவன்.

ப்ராச்ய (கிழக்கு) திசையில், நாவல் (ஜம்பு) மரங்கள் உள்ள இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'ஜம்பு தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது.
ஜம்பு (நாவல்) மரத்துக்கு ஈஸ்வரனாக இருக்கும் சிவபெருமானை அங்கு பிரதிஷ்டை செய்தார். (திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் கோவில்).

தக்ஷிண (தெற்கு)திசையில், புன்னை மரங்கள் உள்ள இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'புன்னாக தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது.
அங்கு, ப்ருகு முனிவர் சொன்னபடி,  "வாசுதேவனை" பிரதிஷ்டை செய்தார்.

பஸ்சிம (மேற்கு) திசையில், வில்வ  மரங்கள் உள்ள இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'வில்வ தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது.
அங்கு, தன் சகோதரியான மகாலட்சுமியை பிரதிஷ்டை செய்தார்.

"சந்திர புஷ்கரணி " தீர்த்தத்துக்கு உத்திர (வடக்கு) திசையில், கதம்ப   மரங்கள் நிறைந்த இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'கதம்ப  தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது. அங்கும் புருஷோத்தமனை பிரதிஷ்டை செய்தார்.  (கதம்பனூர் என்றும் கரம்பனூர் என்றும் சொல்கிறோம். திருக்கரம்பனூர் உத்தமர் கோயில்)

சந்திரன் அமைத்த "சந்திர புஷ்கரணி"  என்ற தீர்த்த கரையில் பிற்காலத்தில், த்ரேதா யுகத்தில், விபீஷணனால், கொண்டு வரப்பட்டு, ஸ்ரீ ரங்கநாத பெருமாளே வந்து சேருகிறார்.

சந்திரன் அமைத்த மற்ற தீர்த்தங்களை ஸ்ரீ ரங்கநாதர், பங்குனி மாதம் ஒவ்வொரு தீர்த்தத்துக்கு சென்று தங்கி, ஸ்ரீரங்க எல்லையை தானே காத்து வருகிறார்.
பங்குனி திருநாள் உத்சவம் என்று ஸ்ரீரங்கத்தில் இன்றும் பெருமாள் தன் ராஜ்யத்தை நடத்தி வருகிறார்.

இப்படி பல தீர்த்தங்கள் அமைத்து, பெருமாளை வாசுதேவனாக, ஆராதனை செய்த சந்திர தேவன், தன் க்ஷய ரோகத்தில் இருந்து விடுபட்டு, அமாவாசை முடிந்து சுக்ல பக்ஷத்தில் மீண்டும் வளர்ச்சி அடைந்து விட்டார்.

தக்ஷன் சொன்ன வார்த்தையும் சத்தியம் செய்வதற்காக, கிருஷ்ண பக்ஷத்தில் மட்டிலும் க்ஷத ரோகத்தை அனுபவிக்கிறார்.

வாசுதேவனின் அனுகிரஹத்தால்
, சந்திர தேவனுக்கு ஏற்பட்ட க்ஷய ரோகம் மட்டும் நீங்காமல், தன் மனைவிகளிடத்தில் இருந்த வேற்றுமை உணர்வும் நீங்கியது.
ஸ்ரீ ரங்கத்தில் உள்ள, இந்த சந்திர புஷ்கரணியின் அருகிலேயே வாசுதேவ சன்னதி இருக்கிறது. 
இந்த வாசுதேவன் பெரிய பெருமாள் (ரங்கநாதர்) இங்கு வருவதற்கு முன்பேயே வந்தவர்.

ஸ்ரீ ரங்கத்தில் உள்ள, இந்த சந்திர புஷ்கரணியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு, க்ஷய ரோகங்கள் (தோல் சம்பந்தமான) நிவர்த்தியாகி விடும்.
ரோகங்கள் வருவதற்கான  காரணம் "நாம் செய்த பாபங்களே"
அந்த பாபங்கள் வாசுதேவனின் சாநித்தியத்தாலேயே பொசுங்கி விடும்.

ஸ்ரீரங்கநாதர் வருவதற்கு முன்பேயே வந்தவர் "வாசுதேவன்".
வாசுதேவன் சந்நிதி இன்றும் சந்திர புஷ்கரணி தீர்த்தத்துக்கு அருகிலேயே இருக்கிறது.

வாசுதேவன் சாநித்தியத்துடன் இருக்கும் இந்த சந்திர புஸ்கரணியிலே,
நாம் தீர்த்தமும், முன்னோர்களுக்கு ஸ்ரார்த்தம் செய்தால், கோடி புண்ணியம். 
நம் முன்னோர்கள் எல்லோரும் நல்ல கதியை அடைவார்கள்.


அந்த தீர்த்த கரையிலேயே வாசம் செய்யும் வேத ப்ராம்மணர்களுக்கு, நாம் அன்ன தானம், வஸ்திர தானம், கோ (பசு) தானம், தனம் முதலியவை கொடுத்தால், எந்த காலமும் செல்வம் குறையாத நிலையில் வாழும் பாக்கியம் நமக்கு கிடைக்கும்.




அழிவில்லா செல்வம் தரக்கூடிய புண்ணிய காரியங்கள் இவை.

சந்திரா புஷ்கரணி தீரத்தில், யார் ஜபம், தபசு செய்கிறார்களோ! அவர்களுக்கு சீக்கிரமாக தான் எதிர்பார்த்த பலங்கள் ஸித்தி ஆகிறது.

அனைத்து புண்ணிய நதிகளும், இந்த சந்திர புஷ்காரணியில் வசிக்கிறார்கள்.

அனைவரும் சென்று பார்க்க வேண்டும்.

Friday 20 March 2020

மரியாதை சொற்கள் பற்றி தெரிந்து கொள்வோமே...

தெய்வத்துக்கு சமமாக பூஜிக்க  தகுந்த மாகாத்மாக்களை கண்டால், "தேவரீர்" என்று அவரை சொல்கிறோம்.
நர்குணங்கள் நிரம்பிய இவர்களை காணும் போது,
நம்மை "தாசன்" என்றும், "இவன்" என்றும், "இது" என்றும் கூட சொல்லிக்கொள்கிறோம்.

"தாசன், இவன், இது" என்று நம்மை சொல்லிக்கொள்வது, நம்மை தாழ்த்திக்கொள்வதற்காக அல்ல.
நம்மை தாழ்த்தி, அவரை உயர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசையால், குருநாதரின் உயரிய குணத்தால், இப்படி சொல்கிறோம்.

ஹனுமான் ராமபிரானை விட வயதில் மூத்தவர். நன்கு படித்தவர், ஞானம் உடையவர்.
இருந்தாலும், ராமபிரானின் எல்லையில்லா நற்குணங்கள் இவரை "தாசன்" என்று சொல்லிக்கொள்ள செய்தது.

பூஜிக்க தக்கவர்களிடம், கர்வத்தை காட்டும் படியாக  "நான்" என்று கூட சொல்லிக்கொள்வதில்லை.

வைஷ்ணவர்கள், தன்னை
"அடியான்" என்றும்,
"தாசன்" என்றும்
பெருமாளை பார்த்தும்,
ஆச்சாரியனை பார்த்தும், மற்ற வைஷ்ணவர்களை பார்த்தும், இப்படி தன்னை சொல்லிக்கொள்வார்கள் என்று பார்க்கிறோம்.

அடுத்த நிலையில், மரியாதைக்கு உரியவர்களை, "தாங்கள்" என்று சொல்லி அழைக்ககிறோம்.
இவர்களிடம் "நீங்கள்" என்ற சொல் கூட மரியாதை குறைவான சொல் என்று தோன்றும். ஆதலால், "தாங்கள்" என்று சொல்லி அழைக்ககிறோம்.

இவர்களிடம் பேசும் போது, "தாங்கள் நம் வீட்டுக்கு வர வேண்டும்" என்று விண்ணப்பம் செய்வோமே தவிர,
"நீங்கள் என் வீட்டுக்கு வர வேண்டும்" என்று சொல்வது கூட, அதிக பிரசங்கி தனமோ என்று கூட நமக்கு தோன்றும்.




அதற்கும் கொஞ்சம் கீழ் உள்ளவர்களிடம் பழகும் போது, "நீங்கள்" என்று சொல்கிறோம்.
நம்மைவிட வயதில் மூத்தவர்களை "நீங்கள்" என்று பொதுவாக சொல்வது வழக்கம்.

அதற்கும் கீழ் உள்ளவர்களிடம் பழகும் போது, "நீர்" என்று சொல்கிறோம்.

அதற்கும் கீழ் உள்ளவர்களிடம் பழகும் போது, "நீ" என்று சொல்கிறோம்.
நண்பர்களை "நீ" என்று பொதுவாக சொல்வது வழக்கம்.

பொதுவாக இவை அனைத்துமே குணத்தை வைத்து ஏற்பட்ட மரியாதை சொற்கள்.

அவரவர் யோக்யதைக்கு தக்கபடி, இப்படி பல வித மரியாதை சொற்களை பயன்படுத்துகிறோம்.