Followers

Search Here...

Tuesday 3 October 2017

கூரத்தாழ்வார் ஏன் மதுரை அழகர் கோவிலை தேர்ந்தெடுத்தார்?


சோழ அரசன், "சிவனே முதற்கடவுள்" என்று ராமானுஜரை சம்மதிக்க வைக்க முடிவு செய்தான்.
தன் சோழ படையை அழைத்து வர சொல்லி கட்டளையிட்டான்.



அரசன் மூலம் வரப்போகும் ஆபத்தை உணர்நது, சிறிது வயதில் மூத்தவரான "கூரத்தாழ்வார்", ராமானுஜர் போன்று காவி உடுத்தி, ராமானுஜரை சாதாரண வெள்ளை உடை உடுக்க சொல்லி, தப்பிக்க வைத்தார்.

ராமானுஜர் சில சிஷ்யர்களுடன் சோழ படைகள் வருவதற்கு முன் தப்பித்தார்.

சோழ படை, கூரத்தாழ்வாரை ஸ்ரீ ராமானுஜர் என்று நினைத்து, அரசவைக்கு கூட்டி சென்றனர்.

"சிவனே முதற்கடவுள்" என்று எழுதிக் கையெழுத்து போட சொல்ல, கூரத்தாழ்வார் மறுத்தார்.

அவரின் கண்களை பிடுங்கி எறிய ஆணை இட்டான்.
கூரத்தாழ்வார் தன் கண்களை தானே பிடுங்கி விட்டார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஸ்ரீ ராமானுஜர் நிலை எவ்வாறு இருந்தது? அவருடைய சிஷ்யர் கூரத்தாழ்வார் நிலை எவ்வாறு இருந்தது?

ஸ்ரீ ராமானுஜர் அடுத்த 12 வருடங்கள் ஸ்ரீ ரங்கத்தை விட்டு இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இனி நான் எங்கு போய் இனி இருப்பது? என்று தனக்கு வந்த நிலைமையை நினைத்தும் புலம்பவில்லை.
ஸ்ரீ ரங்கநாதருக்கு வந்த நிலைமையை நினைத்தும் புலம்பவில்லை.
தன் சிஷ்யர்களுக்கு வந்த நிலைமையை நினைத்தும் புலம்பவில்லை.


இது பகவான் இஷ்டம் என்று கவலையை மனதில் கொண்டு வராமல், இனி தான் செய்ய வேண்டிய காரியங்களை நோக்கி மேலும் பயணித்தார்.
அவருக்கு சோழ அரசனிடம் கோபமும் இல்லை.
இதுவே வைஷ்ணவ லக்ஷணம்.

குரு தன் ஞான நிலையில் இருப்பது ஆச்சரியமில்லை. கஷ்ட காலத்தை பகவான் இஷ்டம் என்று அறிந்து, மேலும் தனக்கான கடமையை தொடர்ந்தார்.

ஸ்ரீ ரங்கத்தை விட்டு செல்ல வேண்டிய கஷ்ட நிலைமையில்,  கண்ணை இழந்து இருந்த கூரத்தாழ்வார், பிருந்தாவனம் சென்று விடலாம் என்ற ஆசை கொண்டார்.
ஆனால், கண் தெரியாமல் ஸ்ரீ ரங்கத்தில் இருந்து, பிருந்தாவனம் செல்வது முடியாத காரியமாக இருந்தது.

பிருந்தாவனத்திற்கு இணையாக அழகர் கோவிலை கருதினார். அங்கு இருக்கும் சுந்தரராஜ பெருமாளை கண்ணனாக பாவித்தார். அருகில் இருக்கும் மதுரையை, மதுராவாக பாவித்தார்.
அழகர் கோவிலையும் அதை சுற்றி இருக்கும் வனத்தையும் பிருந்தாவனம் என்று பாவித்து, தனக்கு வந்த துக்கத்தை மறந்து, தன் 12 வருட காலத்தை கண் தெரியாமல், பூ கைங்கர்யம் செய்து, சுந்தரராஜ பெருமாளுக்கு பூ மாலை கட்டி கொடுத்து சாத்வீகமாக கழித்தார்.

கூரத்தாழ்வார், ஸ்ரீ ராமானுஜர் போன்றே மனப்பக்குவம் கொண்டிருந்தார்.

"ஐயோ! இப்படி ஒரு கஷ்டம் வர வேண்டுமா?
குருவை இழந்தேனே !
ஸ்ரீ ரங்கநாதரை இழந்தேனே !
ஸ்ரீ ரங்க வாசத்தையும் இழந்தேனே!
கண்களையும் இழந்து குருடானேனே!
இனி நல்ல காலம் வருமா?" என்ற எந்த புலம்பலும் இல்லாமல், ஸ்ரீ ராமானுஜரை போன்ற மனப்பக்குவத்துடன் மதுரைக்கு அருகில் உள்ள அழகர் கோவிலுக்கு சென்று அங்கு நந்தவனம் அமைத்து பூ கைங்கர்யம் ஸ்ரீ ராமானுஜர் திரும்பி ஸ்ரீரங்கம் வரும்வரை 12 வருடங்கள் செய்து கொண்டு இருந்தார்.



ஒரு நாள் கூட, தன் கவலையை, குறையை, "சுந்தரராஜ" பெருமாளிடம் சொல்லி கொண்டது கூட இல்லை.
சோழ அரசன் மீது கோபமும் இல்லை.
கண் தெரியாமலேயே 12 வருட காலங்கள், பூ கைங்கர்யம் பெருமாளுக்கு செய்தார்.

ஸ்ரீ ராமானுஜருக்கு நிகராக, துக்க காலத்தில் வைராக்கியத்துடன், பகவான் இஷ்டம் என்று சமாதானமாக, சாத்வீகமாக பொறுமையுடன் இருந்தார் கூரத்தாழவார்.
அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

No comments: