Followers

Search Here...

Showing posts with label சோளிங்கர். Show all posts
Showing posts with label சோளிங்கர். Show all posts

Saturday 5 December 2020

தொட்டாச்சாரியார் கைங்கர்யம் செய்த தக்கான் பெருமாள்... பாசுரம் (அர்த்தம்) - "மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை". சோளிங்கர் பெருமாளுக்கு திருமங்கையாழ்வார் இங்கு மங்களாசாசனம் செய்கிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோமே!! !

சப்தரிஷிகளுக்கும் குருவாக கடிகாசலத்தில் இருக்கும் யோக ஆஞ்சநேயர், வழிபட்ட யோக நரசிம்மர் இன்றும் கடிகாசலத்தில் வீற்று இருக்கிறார்.

திருகடிகை என்றும் கடிகாசலம் என்றும் சோளிங்கர் என்றும் அழைக்கப்படும் இந்த திவ்ய தேசம், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட புண்ணிய க்ஷேத்திரம்.

திருமங்கையாழ்வார் இந்த திவ்ய தேசத்துக்கு வந்து மங்களாசாசனம் செய்த பாசுரம்:

மிக்கானை 

மறையாய் விரிந்த விளக்கை 

என்னுள் புக்கானை

புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை தக்கானை

கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை 

அடைந்து உய்ந்து போனேனே

என்று பாடுகிறார்.

பெரிய திருமொழியில் இந்த பாசுரம் உள்ளது.




கடிகாசலம் (சோளிங்கர்) பெருமாளை பார்த்து கொஞ்சி பேசுகிறார், திருமங்கையாழ்வார்.

பெருமாளின் பெருமையை நினைத்ததும்,

யாரும் சமமில்லாத, எல்லாருக்கும் மேற்பட்டவனே ! (மிக்கானை) என்று ரசிக்கிறார். 

மேலும்,

அழியாத வேத விளக்காக இருக்கிறார் (மறையாய் விரிந்த விளக்கை) என்றும் ரசிக்கிறார்.

அப்படிப்பட்ட பெருமைமிக்க பெருமாள், தன் ஆத்மாவாகவும் இருக்கிறாரே என்றதும், உடனே,

எனக்கு அந்தர்யாமியாக இருப்பவனே ! (என்னுள் புக்கானை) என்று ரசிக்கிறார்.

உடல் ரீதியாக பார்த்தால், பெருமாளும் நாமும் ஒன்றாகி விட முடியாது.. 

ஆனால், 

'ஆத்மா' என்று பார்க்கும் போது, நாமும் (ஜீவனும்), பெருமாளும் (பரமாத்மாவும்) ஞான ஸ்வரூபம் தானே..

வேதமும் ஜீவனையும், பரமாத்மாவையும் நண்பர்கள் என்று இரு கிளியை காட்டி சொல்வது ஞாபகம் வர, திருமங்கையாழ்வார், பெருமாளும், தானும் நண்பன் என்று வேதமே சொல்வதால், சமமானவன் (தக்கானை) என்று சொல்லி ஆனந்தப்படுகிறார்.

மேலும் வாக்குக்கு அப்பாற்பட்ட பெருமாளை! தெவிட்டாத இன்பமாக இருக்கும் பெருமாளை! எப்படி கொஞ்சுவது? என்று ஒரு பக்கம் திகைத்து, கொஞ்சவும் ஆசை ஏற்பட்டதால், உலகத்தில் கிடைக்கும் தித்திப்பான அக்கார வடிசில் (அக்காரமே!), கனியே! என்று ஆசை தீர கொஞ்சுகிறார்.

இப்படி திருமங்கையாழ்வார், கடிகாசலம் (சோளிங்கர்) பெருமாளை பார்த்து "தக்கானை" என்றும், "அக்கார கனி" என்றும் அழைத்ததே, பெருமாளுக்கு பெயரும் ஆனது.

இங்கு தாயார் திருநாமம் சுதாவல்லி நாச்சியார் என்ற அம்ருதவல்லி

பெருமாள் பெயரால் 'தக்கான் குளம்' எனற தீர்த்தம் உள்ளது.

தொட்டாச்சாரியார் (தொட்டையாசாரியார்) என்ற ஒரு மகான் இருந்தார்.
அவருக்கு அக்கார கனி எம்பெருமானிடம் தான் அதிக ஈடுபாடு.

சில சந்தர்ப்பம், காஞ்சி வரதன் சேவைக்கு இவர் வருவார்.

வரதராஜன் சந்நிதியில், பிரம்மோற்சவம் போன்ற உத்சவ காலங்களில், கைங்கர்யத்துக்கு வருவது வழக்கம்.

மற்ற கோவில்களின் அர்ச்சகர்களை, சில சமயம் ஆச்சார்யர்களையும்  உத்சவ காலங்களில் வரதனுக்கு கைங்கர்யம் செய்ய அழைப்பார்கள்.
அவரவர்கள் முடிந்த கைங்கர்யம் செய்வார்கள்.

கருட சேவைக்கு மிகவும் ப்ரஸித்தமானவர் காஞ்சி வரதன்.

இங்கு இருக்கும் விசாலமான வீதியில், கருடன் மேல் அமர்ந்து பெருமாள் புறப்படும் அழகும், வேகமும், ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாத பெருமாள் கருடசேவையை காட்டிலும் அழகாக இருக்கும்.

பெருமாள் ஒவ்வொரு இடத்தில் ஒரு தனியான அழகுடன் இருக்கிறார்.
திருப்பதியில், ரத உத்சவம் ப்ரஸித்தி.
திருமாலிருஞ்சோலையில் குதிரை (வையாளி) சேவை மிகவும் ப்ரஸித்தி.
அதேபோல, 
ரங்கநாதருக்கும் குதிரை (வையாளி) சேவை மிகவும் ப்ரஸித்தி.
இது பக்தர்களின் அனுபவம்.

அந்த ஊரிலேயே பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யும் ஒருவர், கருட சேவையில் காஞ்சி வரதன் வரும் அழகை பார்த்து பெருமிதத்துடன், அருகில் நின்று கொண்டிருந்த, அக்காரகனி எம்பெருமானுக்கே கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் தொட்டாச்சாரியாரிடம் தன் மன உகப்பை பகிர்ந்து கொண்டார். 
அந்த வைஷ்ணவர், காஞ்சி வரதனை பார்த்து கொண்டே, 
"ஆஹா.. ஆஹா.. இந்த சேவை வேறு எங்கு கிடைக்கும்?..." என்று சொல்ல,தொட்டாச்சாரியார் "ஆஹா.. என்ன தரிசனம்..என்ன தரிசனம்" என்று என்று சொல்லியிருக்கலாம்!!.

அந்த வைஷ்ணவர் "இந்த சேவை வேறு எங்கு கிடைக்கும்?" என்று சொன்ன சொல் இவருக்கு சுருக்கென்று குத்த, 
அக்கார கனி (தக்கான்) பெருமாள் மீது கொண்ட அன்பினால், தொட்டாச்சாரியார் உடனே "தக்கானுக்கு மிக்கான் இல்லை" என்று தன் பெருமானிடம் உள்ள பிரியத்தால், சொல்லிவிட்டார்.
கடிகாசலத்தில் இருக்கும் பெருமாளுக்கு மிஞ்சி யாரும் இல்லை (தக்கானுக்கு மிக்கான் இல்லை) 
என்று இவர் சொன்னதும், கூட இருந்த வைஷ்ணவருக்கு, 'காஞ்சி வரதனை குறைத்து பேசி விட்டாரே!!' என்ற வருத்தம் உண்டானது. 

'பெருமாள் ஒன்று தான்' என்பதால், 'காஞ்சி வரதனை விட சோளிங்க பெருமாள் உயர்ந்தவரா?' என்று பெருமாளையே தாழ்த்தி பேசவும் முடியாது.. 

தக்கானிடத்தில் இருந்த பக்தி விசேஷத்தால் தொட்டாச்சாரியார் இப்படி பேசிவிட்டார் என்பதால், வைஷ்ணவர்களுக்குள் சண்டை வேண்டாம், பகவத் அபசாரமும் வேண்டாம் என்று  அமைதியாக இருந்து விட்டார்.

"இனி இது மாதிரியான சங்கடங்கள் ஏற்பட கூடாது. 
அதற்கு ஒரே வழி.. இனி தொட்டாச்சாரியாரை வரதன் கைங்கர்யத்துக்கு அழைக்க கூடாது" என்று தீர்மானித்து விட்டனர் அங்கு இருந்த வைஷ்ணவர்கள்.




வருடாவருடம் வரதன் கைங்கர்யத்துக்கு தொட்டாச்சாரியாரை அழைப்பது வழக்கம்.
அடுத்த வருடம், இவருக்கு அழைப்பு வரவில்லை.

அழைப்பு வராததால், இவர் காஞ்சிபுரம் வரவில்லை. 
சோளிங்க பெருமாளுக்கே கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்.

அன்று விடியற்காலை வரதனுக்கு காஞ்சியில் கருட சேவை ஆரம்பமானது.
தொட்டாச்சாரியார் வழக்கமாக, தக்கான் குளத்தில் தான் விடியற்காலை தீர்த்தமாட வருவார்.

தீர்த்தமாடி முடித்து விட்டு வந்ததுமே, காஞ்சி வரதனின் கருட சேவை நினைவுக்கு வந்தது.
"போன வருடம் இதே சமயம் காஞ்சி வரதனின் கருட சேவையை தரிசனம் செய்து கொண்டிருந்தோமே!! தேவப்பெருமாள், இந்த சமயம் கருட சேவையில் கிளம்பி இருப்பாரே! இந்த வருடம் நாம் போக பிராப்தி இல்லையே!" 
என்று கண்ணீர் பெருகி நினைக்க, அந்த குள கரையிலேயே அவர் கண்ணெதிரே காஞ்சி வரதன் கருட சேவையில் காட்சி அளித்தார்.
உடனே "தேவப்பெருமாள்… இதோ வந்துட்டார்… தேவப்பெருமாள் இதோ வந்துட்டார்… தேவப்பெருமாள் … இதோ பாரும்…" என்று இவர் கத்த, அங்கே குளித்து கொண்டிருந்த மற்றொருவன், "பைத்தியம் ஏதாவது பிடித்து இருக்கோ? தேவப்பெருமாள் இங்கு வந்து இருக்கிறாரா?" என்று சொல்ல, தொட்டாச்சாரியார் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதே சமயம், இந்த ஊரிலிருந்து சிலர் கருட சேவையை பார்க்க, காஞ்சி வரதனை பார்க்க சென்று இருந்தனர்.
காஞ்சி வரதன், கருட சேவையில் கிளம்பி வாசலில் வேகமாக வரும் போது, ஜல் என்று நின்றுவிட்டார் அன்று.
ஸ்ரீபாதம் தாங்கிகளால் பெருமாளை சில நிமிடங்கள் நகர்த்தவே முடியவில்லை..
என்ன காரணம்? என்றே தெரியாமல் போக, பெருமாளிடமே இவர்கள் விண்ணப்பிக்க, காஞ்சி வரதனே, அர்ச்சகரிடம் ஆவேசித்து, 
"நாம் தொட்டாச்சாரியாருக்கு சேவை சாதிக்க, கடிகாசலம் போய் இருக்கிறோம்" என்று சொல்ல, 
அதை பார்த்த இந்த ஊர் ஜனங்கள், உத்சவம் முடிந்து, ஊர் திரும்பி, நடந்த விஷயத்தை பேசி கொள்ள, அதே சமயம், தொட்டாச்சாரியார் தக்கான் குளத்தில் "தேவப்பெருமாள்…இதோ வந்துட்டார்… தேவப்பெருமாள் இதோ வந்துட்டார்… தேவப்பெருமாள் … இதோ பாரும்…" என்று கத்தியதை சொல்ல, தொட்டாச்சாரியாரின் 'அனுபவம் சத்தியம்' என்று அறிந்து கொண்டார்கள்.

தொட்டாச்சாரியார் பெற்ற அனுகிரஹத்தை இன்று நாமும் ஸ்மரிக்க காஞ்சி வரதன் கருட சேவை சாதித்து புறப்படும் போது, கருடனை போல வேகமாக கிளம்பும் போது, ஒரு நிமிடம் நின்று விட்டு, செல்கிறார்.

அக்கார கனி எம்பெருமானையே ஆஸ்ரயித்து வாழ்ந்த தொட்டாச்சாரியார் போன்ற பக்தர்கள் வாழ்ந்த புண்ணிய ஸ்தலமாக இருக்கிறது "கடிகாசலம்" என்ற சோளிங்கர் என்ற திவ்ய தேசம்.