Followers

Search Here...

Friday, 3 April 2020

யோகி, போகி, ரோகி... ப்ராம்மணர்கள் எத்தனை வேளை சாப்பிட வேண்டும்?

யோகி, போகி, ரோகி... தெரிந்து கொள்ள வேண்டிய ரகசிய உண்மைகள்.. (முக்கியமாக ப்ராம்மணர்கள்)
மூன்று வேளை சாப்பிடுபவன் "ரோகி",
இரண்டு வேளை சாப்பிடுபவன் "போகி",
ஒரு வேளை சாப்பிடுபவன் "யோகி".

கலியில் வேதம் முழுவதும் கற்க ஒருவனால் முடியாது என்று உணர்ந்து, ஒன்றாக இருந்த 'வேதத்தை நான்காக பிரித்து கொடுத்தார்' வேத வியாசர்.




அன்றைய காலங்களில் மூன்று வேளைக்கு மேல் சாப்பிடுபவர்கள் மனிதர்கள் என்றே கருதுவது இல்லையோ என்னவோ தெரியவில்லை. மூன்று வேளைக்கு மேல் சாப்பிடுபவர்களை பற்றி நம் ரிஷிகள் சொல்லவில்லை அல்லது சொல்ல பிரியப்படவில்லை என்றே தெரிகிறது.

ப்ராம்மணர்கள் எத்தனை வேளை சாப்பிட வேண்டும்? என்ற குறிப்பு சந்தியா வந்தனத்தில் இருக்கிறது.

என்ன சொல்கிறது இந்த மந்திரம்? 
இதன் அர்த்தம் என்ன?
"தண்ணீர் (ஜலதேவதை), தனக்கு உறைவிடமாகிய 'பூமியை' புனிதமாக்கட்டும்.

தண்ணீரால் புனிதமாக்கப்பட்ட பூமி, 'என்னை' புனிதமாக்கட்டும்.

தண்ணீரால் புனிதமாக்கப்பட்ட பூமி, வேதத்தை கற்ற 'வேதியனை' புனிதமாக்கட்டும்.

என்றும் புனிதமாயுள்ள வேதம், 'என்னை' புனிதமாக்கட்டும்.

பிறர் உண்ட பிறகு பெறப்பட்ட உணவோ,
புசிக்கத் தகாததுமான உணவோ,
துர்நடத்தை உள்ளவர்களிடம் இருந்து ஏற்றுக் கொண்ட உணவோ,
அவை எல்லாவற்றினின்றும் 'என்னை' ஜலதேவதை புனிதமாக்கட்டும் என்று பிரார்த்தித்து, புனிதமான என்னைப் பரமாத்ம ஜோதியில் ஹோமம் செய்கின்றேன்."

இப்படி சாப்பாட்டை பற்றி ஒரு இடத்தில் மட்டும் தான் வருகிறது.

இப்படி ஒரு மந்திரம் மதிய வேளையில் சந்தியாவந்தனம் செய்யும் போது வருகிறது..

"மாத்யானிக சந்தியா வந்தனம் செய்து விட்டு, சாப்பிட உட்கார்" என்று சொல்லும் பழக்கம் சந்தியா வந்தனம் செய்யும் பிராம்மண குடும்பத்தில் இன்றும் இருப்பதை காணலாம்.

சாப்பாட்டை பற்றி இது போன்ற மந்திரம், காலையில், மாலையில் செய்யும் சந்தியா வந்தனத்தில்  இல்லை.

"பிராம்மணன் ஒரு வேளை சாப்பிட்டு யோகியாக வாழ்வான்"
என்று தான் ரிஷிகள் ஆசைப்பட்டு, இப்படி ஒரு முறையை அமைத்து இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

அர்த்தங்கள் புரிந்து கொள்ளும் போது, சந்தியா வந்தனம் "நம்மை ரோகியாக வாழாதே!" என்று எச்சரிப்பது புரியும்.




ஒரு வேளை சாப்பாட்டை குறைத்து கொண்டால்,
நம் உடலுக்கு ஆரோக்யம் கூடுவது மட்டுமல்ல, 130 கோடி மக்கள் கொண்ட பாரத நாட்டுக்கே நாம் பெரும் உபகாரம் செய்கிறோம் என்று தோன்றும்.

மந்திரம்:
ஆப: புனந்து ப்ருதிவீம் ப்ருதிவீ பூதா புனாது மாம் !
புனந்து ப்ரஹ்மணஸ்பதிர் ப்ரஹ்ம பூதா  புனாது மாம் !
யதுச்சிஷ்ட மபோஜ்யம் யத்வா துச் சரிதம் மம !
ஸர்வம் புனந்து மாமாபோ அஸதாஞ்ச ப்ரதிக்ரஹ ஸ்வாஹா !!

Morning சந்தியாவந்தனம் with meaning
https://youtu.be/aHW0UEmZwKo

Afternoon சந்தியாவந்தனம் with meaning
https://youtu.be/q3gr3oWadqs

Evening சந்தியாவந்தனம் with meaning
https://youtu.be/dZbJ8KWZl0w

Monday, 30 March 2020

பாசுரம் (அர்த்தம்) - அடியோமோடும் நின்னோடும்... பெரியாழ்வார் (மதுரை) கூடலழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம், பல்லாண்டு!
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும், பல்லாண்டு!
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு!
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
--  பெரியாழ்வார் (மதுரை) கூடலழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம் (திருமொழி

தெய்வத்திடம் "சாமானியன் பழகும் முறை" வேறுபடுகிறது. 



தெய்வத்திடம் "பக்தன் பழகும் முறையும்" வேறுபடுகிறது.

"தன்னை பெருமாள் பார்த்து கொள்ள வேண்டுமே!என்று சாமானியன் நினைக்கிறான்.

"தான் பல்லாண்டு பாட, பெருமாள் தனக்கு வேண்டுமே ! அவர் நன்றாக இருக்க வேண்டுமேஎன்று பக்தன் நினைக்கிறான்.
"தான் செய்யும் பஜனையை பார்க்க, பெருமாள் ரூபத்துடன் வேண்டுமே" என்று பக்தன் கேட்க,
ரூபம் கடந்த, குணங்கள் கடந்த, நாமங்கள் கடந்த பரமாத்மா, 
"பக்தன் செய்யும் பஜனைக்காக, நாம, ரூப, குணங்களை எடுத்துக்கொண்டு" பாரத தேசம் முழுவதும் விபவ அவதாரமும், அரச்ச அவதாரமும் செய்து தோன்றி விட்டார்.

பக்தனான பெரியாழ்வாருக்கு "பெருமாள் பல்லாண்டு சுகமாக இருக்க வேண்டும்" என்று தோன்ற, 
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 
பலகோடி நூறாயிரம் ஆண்டு" 
என்று மங்களாசாசனம் செய்கிறார். 

"பெருமாள் மட்டும் பல்லாண்டு இருந்தால் போதுமா? 
பெருமாளுக்கு பல்லாண்டு பாடும் பக்தனும் பல்லாண்டு இருக்க வேண்டுமே" 
என்று நினைவு வர, பெருமாளும் (நின்னோடும்), பக்தனும் (அடியோமோடும்) பிரியாமல் பல்லாண்டு இருக்க வேண்டும் என்று மங்களாசாஸனம் செய்கிறார்.



அதையே
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு 
என்கிறார்.


அடுத்ததாக பெருமாளின் ஸ்ரீவத்சம் உடைய திருமார்பில் பிராட்டி இருக்க, மஹாலக்ஷ்மி  தாயாருக்கும் பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.
அதையே
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
என்கிறார்.

பெருமாள் மட்டுமே அழகு, அவர் கையில் வைத்து இருக்கும் சக்கரமும் (சுடராழி), சங்கும் (பாஞ்சசன்யமும்) கூட அழகாய் இருக்க, 
அந்த சங்கு சக்கரத்துக்கு பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.
அதையே
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு!
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
என்கிறார்.




பாஞ்சசன்யம் (சங்கும்) பெருமாள் கையில் தான் உள்ளது.
பெருமாள் பெரியாழ்வாருக்கு  எதிரில் தான் காட்சி கொடுக்கிறார். 

கண் எதிரே தெரியும் பாஞ்சசன்யத்தை பார்த்து, "இந்த பாஞ்சசன்யம்" என்று சொல்லாமல்,
"அந்த பாஞ்சசன்யம்" (அப் பாஞ்சசன்யமும்) 
என்று குறிப்பிட்டு சொல்கிறார் பெரியாழ்வார்.

ஏன் அப் பாஞ்சசன்யமும் என்று குறிப்பிட்டு சொன்னார்?
அவர் மனதை அறிந்த மகான்கள் அதன் ரகசியத்தை நமக்கு சொல்கிறார்கள்.
பெருமாள் வைத்திருக்கும் சங்கு வெண்மையானது
அன்ன பக்ஷியும் வெண்மையானது.
அன்ன பக்ஷிக்கு ஒரு பக்கம் கொண்டையும், கூரான மூக்கும் இருப்பது போல, சங்கிற்கும் உண்டு

அன்ன பக்ஷி ஒரு தாமரை பூவில் இருந்து மற்றொரு தாமரை பூவில் அமரும் போது, "கீச்" என்று கூவுவது போல, 

பெருமாளின் கையில் இருக்கும் இந்த வெண் சங்கு, அவர் கையிலிருந்து அவர் உதரத்துக்கு (உதட்டுக்கு) அருகில் சென்றது, சங்க நாதம் முழங்குமாம்.
 "பாஞ்சசன்யமும் பல்லாண்டே" 
என்று பாட வந்த பெரியாழ்வாருக்கு இந்த நினைவு வர, அந்த நிமிஷத்தில் கண்ணை மூடி பெருமாளை தியானிக்க,
வெண் சங்காக இருந்த அந்த பாஞ்சசன்யம், பெருமாளின் கொவ்வை சிவப்புடன் உள்ள உதரத்திற்கு அருகில் சென்றதும்,
வெண் சங்கு, சிவப்பாக தெரிய, பெருமாளின் அழகில் மயங்கி நின்ற பெரியாழ்வார், 'சிவப்பு ஏறிய அந்த பாஞ்சசன்யத்துக்கு பல்லாண்டே' என்று மங்களாசாசனம் செய்கிறார்.

அதையே
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
என்கிறார்.

அனைவரும் கூடலழகரை தரிசிப்போம். பல்லாண்டு பாடுவோம்.