பெண்ணை முறைப்படி மணம் செய்து கொடுக்க, யாருக்கு உரிமை உள்ளது?
அர்ஜுனன் தீர்த்த யாத்திரை செய்து, ஒரு வருட காலம் முடிந்த பிறகு, சன்யாசி போல த்வாரகை வந்தான்.
சுபத்ரையை மணம் செய்து கொள்ளும் எண்ணத்தை கிருஷ்ணரிடம் தெரிவித்தான்.
சன்யாசி யாரோ தன் நகரத்துக்கு வந்திருக்கிறார் என்று பலராமர் வரவேற்று, தன் அரண்மனையில் தங்க சொல்லி, அவருக்கு தேவையான பூஜை காரியங்களுக்கு தன் தங்கையான சுபத்திரையை நியமித்தார்.
வந்திருப்பது தனது அத்தை மகன் அர்ஜூனன் என்று தெரிந்து கொண்ட சுபத்திரை, மணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாள்.
இவளின் எண்ணத்தை அறிந்த ஶ்ரீ கிருஷ்ணர், ருக்மினியிடம் விஷயத்தை சொன்னார்.
ருக்மிணி தேவகியிடம் சொன்னாள்.
தேவகி, ரோஹிணி, வசுதேவர், உக்ரசேனர் அனைவரும் அடுத்த 12வது நாளே நல்ல நாளாக இருப்பதால், அர்ஜுனனுக்கும் சுபத்ரைக்கும் அன்றே மணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்தனர்.
பலராமர் இதற்கு சம்மதம் கொடுப்பாரா என்ற சந்தேகத்தால், பலராமர், உத்தவர் இருவரையும் அழைத்து அடுத்த 34 நாட்கள் இரவு பகல் முழுவதும் தொடர்ச்சியாக மஹாதேவனுக்கு பூஜை செய்து, பெரிய உத்ஸவம் செய்ய சொல்லி, 4வது நாளிலிருந்து த்வாரகையில் உள்ள நான்கு வர்ணத்து மக்களையும், யாதவர்கள், பெண்கள், குழந்தைகள், உறவினர்கள், வேலையாட்கள் அனைவரையும் கடலில் உள்ள ஒரு தீவிற்கு செல்ல சொல்லி, அங்கு உத்ஸவம் நடக்கும்படியாக பறை அறிவித்தனர்.
அந்த தீவு மலைகளும் மரங்களும் நிறைந்து 7 யோஜனை அகலமும், 10 யோஜனை நீளமும் கொண்டிருந்தது. அங்கு சிறு குளங்களும், தோட்டங்களும் அமைக்கப்பட்டு இருந்தது.
சுபத்ரை கிருஷ்ணரிடம் வந்து, "அதிதியாக வந்த சன்யாசி இங்கேயே 12 நாள் இருக்கப்போகிறாராம். ஊரில் அனைவரும் சென்று விட்டால், அவருடைய பூஜை காரியங்களை யார் விடாமல் நடத்துவது? என்று கேட்டாள்.
"ரிஷிகளை பூஜிக்க நீயே சிறந்தவள். நீ இங்கேயே இருந்து சன்யாசிக்கு தேவையான உதவிகளை செய்" என்று சொன்னார் கிருஷ்ணர்.
தீவுக்கு அனைவரும் சென்ற பிறகு, அர்ஜூனன், சுபத்திரையை பார்த்து, இவ்வாறு சொன்னான்.
ஒரு பெண்ணை, அவளின் தந்தையோ, சகோதரனோ, தாயோ, தாயின் சகோதரனோ (அதாவது மாமாவோ), தந்தையின் தந்தையோ, தந்தையின் சகோதரனோ, முறைப்படி கன்னிகாதானம் செய்து கொடுக்க உரிமை உள்ளது.
இவர்கள் அனைவருமே அருகில் உள்ள மற்றொரு தீவில் சிவபெருமானுக்கு உத்ஸவம் செய்ய சென்று இருக்கிறார்கள். என் பக்கமுள்ள உறவினர்களும் இங்கு இல்லை.
க்ஷத்ரியனுக்கு காந்தர்வ விவாகம் அனுமதிக்கப்படுகிறது.
முதல் நான்கு விவாக முறையை சொல்கிறேன்.. கேள்.
சாஸ்திரப்படி வரனுக்கு, தகப்பன் தன் பெண்ணை தானமாக கொடுக்கிறான். அந்த பெண்ணுக்கு பத்னி என்று பெயர் ஏற்படுகிறது. அவள் கணவனுக்கு அடங்கியும் கற்போடும் இருப்பாள்.
தன் வேலையாட்களை காப்பாற்றவும், தன்னை காப்பாற்றவும், தன் பெண்ணை கன்னிகா தானமாக கொடுக்கிறான். இந்த முறையில் மணம் செய்து கொண்ட பெண்ணுக்கு பார்யை என்று பெயர்.
வரனுடைய தந்தை, பெண்ணை சிறு வயதிலேயே தர்மமாக பெற்றுக்கொண்டு வளர்க்கிறான்.
வயது வந்த பிறகு, தன் பிள்ளைக்கு சாஸ்திரப்படி மணம் செய்து வைப்பது ஒரு முறை. இந்த முறையில் மணம் செய்து கொண்ட பெண்ணுக்கு தாரம் என்று பெயர். பிதிர்க்ருதை என்றும் அவளுக்கு பெயர் உண்டு.
தானே விரும்பி, வரனிடம் பிள்ளை பெற்று கொள்ள, காந்தர்வ விவாகம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு ப்ரஜாவதி என்று பெயர்.
தன் கணவனை தானே தேடி கொள்பவளுக்கு "ஜாயை" என்று பெயர்.
பத்னி, பார்யை, தாரம், ஜாயை போன்ற பெண்கள் தங்கள் கணவனை அக்னியை சாக்ஷியாக கொண்டு வரிக்கிறார்கள். தர்ம சாஸ்திரம் சொன்னபடி முறைப்படி விவாகம் செய்து கொள்கிறார்கள்.
காந்தர்வ விவாகத்துக்கு அக்னி சாக்ஷியாகவோ, சாஸ்திர முறைப்படி விவாகமோ சொல்லப்படவில்லை. காரணம் அது விருப்பத்தினால் மட்டுமே நடக்கிறது.
விருப்பமுள்ள பெண்ணும், விருப்பமுள்ள புருஷனும் மந்திரமில்லாமல் செய்து கொள்ளும் விவாகம் இது.
இந்த விவாகத்தை தான் நீ செய்து கொள்ள சம்மதிக்க வேண்டும்.
அயனமும், காலமும், மாதமும், பக்ஷமும், நாளும், கரணமும், முகூர்த்தமும், லக்ன பலமும் சேர்ந்து இருக்கிறது.
உத்தராயணம் விவாகத்திற்கு சிறந்தது.
மாதங்களில் வைகாசி விவாகத்திற்கு சிறந்தது.
பக்ஷங்களில் சுக்ல பக்ஷம் விவாகத்திற்கு சிறந்தது.
நக்ஷத்திரங்களில் ஹஸ்த நக்ஷத்திரம் விவாகத்திற்கு சிறந்தது.
திதிகளில் த்ருதியை விவாகத்திற்கு சிறந்தது.
கரணங்களில் பவ என்னும் கரணம் விவாகத்திற்கு சிறந்தது.
லக்னத்தில் மகர லக்னம் விவாகத்திற்கு சிறந்தது.
மைத்ரம் என்ற முகூர்த்தம் நம் இருவருடைய விவாகத்திற்கு உரியது.
இன்று இரவில் இவையெல்லாம் சேரப்போகிறது.
சூரியன் அஸ்தமனம் ஆகப் போகிறார்.
மேல் சொன்ன விவாக லக்னம் இந்த ராத்திரியில் வரப்போகிறது.
இது தர்ம சங்கடமான நிலைதான். தேவி! நீ ஏன் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறாய்?
என்றான் அர்ஜூனன்.
சுபத்திரை, கண்களில் நீர்மல்க நின்று கொண்டு, தன் சகோதரனான கண்ணனை நினைத்துகொண்டு, அர்ஜூனன் பேசியதை கேட்டுகொண்டே அமைதியாக இருந்தாள்.
தன் எண்ணத்தை சொல்லிவிட்ட அர்ஜூனன், தனக்கு கொடுக்கப்பட்ட குடிலுக்கு சென்று, இந்திரனை த்யானம் செய்ய ஆரம்பித்தான்.
அர்ஜுனன் தன்னை நினைக்கிறான் என்றதும், இந்திரன் தனது இந்திரானியோடு, கூடவே நாரதர் போன்ற முனிவர்கள்,கந்தர்வர்கள், தேவலோக நாட்டிய பெண்கள், சாரணர்கள், யக்ஷர்கள், கூடவே அருந்ததி, வியாசர் அனைவரையும் அழைத்துகொண்டு குசஸ்தலி என்ற இடத்திற்கு வந்தார்.
மற்றொரு தனி தீவில் உத்ஸவத்தில் இருந்த கிருஷ்ணர் இதை அறிந்து கொண்டு, தூங்கிக்கொண்டிருந்த பலராமரை விட்டுவிட்டு, தன்னோடு அக்ரூரர், சினி, சத்யகன், கதன், வசுதேவர், தேவகி, புத்திசாலியான ஆஹூகன் அனைவரையும் அழைத்துகொண்டு த்வாரகைக்கு வந்தார்.
வந்திருந்த நாரதர் மற்றும் பிற ரிஷிகளை பூஜித்து நலம் விசாரித்தார்.
இந்திரன் விவாகத்தை பற்றி கேட்க, அப்படியே ஆகட்டும் என்றார் கிருஷ்ணர்.
ஆஹூகன், வசுதேவர், அக்ரூரர், சாத்யகி ஆகிய நால்வரும், இந்திரனை பார்த்து, "தேவர்களுக்கு தேவனே! உலகத்துக்கு தலைவனே! உலகை காப்பவனே! உனக்கு நமஸ்காரம். உலகை ஜெயிப்பவனே! ப்ரபுபே! நீங்களே கேட்டதனால், நாங்களும் எங்கள் சுற்றத்தாரும் க்ருதார்த்தம் அடைந்தோம்" என்றார்கள்.
பிறகு இந்திரனுக்கு பூஜை செய்து, இந்திரன் அனுமதி பெற்று, ரிஷிகளுடன் சேர்ந்து கொண்டு இந்திரனின் பிள்ளையான அர்ஜுனனுக்கு சாஸ்திர முறைப்படி விவாகம் செய்து வைத்தனர்.
அருந்ததி, இந்திராணி இருக்க, இவர்களோடு ருக்மிணிதேவி, தேவகி சேர்ந்து கொண்டு சுபத்ரைக்கும் அர்ஜுனனுக்கும் மங்களமான உபசாரங்கள் செய்தனர்.
காஸ்யப ரிஷி ஹோமம் செய்தார்.
சபையில் இருந்த நாரதர் போன்றவர்கள் அர்ஜுனனுக்கு ஆசிர்வாதம் செய்தனர்.
அனைத்து தேவர்களும் இந்திரனை ஸ்தோத்திரம் செய்ய, இந்திரன் திக்பாலர்களுடன் சேர்ந்து கொண்டு, அர்ஜுனனுக்கு ஸ்நானம் செய்து, கிரீடம், தோல்வளைகள், கழுத்தில் ஹாரங்கள், தோடாக்கள், குண்டலங்கள் அணிவித்து, 2வது இந்திரனை போல அலங்கரித்து, அர்ஜுனனை தழுவிக்கொண்டு மகிழ்ந்தான்.
அதே போல சுபத்ரைக்கு இந்திராணியும், யாதவ பெண்களும், அருந்ததி போன்றவர்களும் அலங்கரித்து மங்களம் செய்தனர்.
அங்கு இருந்த தேவலோக பெண்கள், தங்களின் நகைகளை சுபத்ரைக்கு அலங்காரம் செய்து, அவளையே இந்திராணி போல அலங்கரித்தனர்.
இவ்வாறு அன்றைய விவாக நாள் ஜொலித்தது
அப்போது அர்ஜூனன் அக்னியில் மந்திரங்கள் சொல்லி ஹோமம் செய்த பிறகு. சுபத்ரையை சாஸ்திரப்படி கரம் பிடித்தான்.
அப்போது அவர்களை பார்ப்பதற்கு இந்திரன் இந்திராணி போன்றே அனைவருக்கும் தோன்றியது.
கரம் பற்றிய உடனேயே அழகான சுபத்திரை அர்ஜுனனிடம் பெரும் பாசம் கொண்டு விட்டாள்.
அப்போது இந்திரன் மற்றும் மற்ற தேவர்கள், "அர்ஜுனனுக்கு, சுபத்திரை தான், வயதிலும் அழகிலும் உத்தம லக்ஷணங்களிலும் தகுதி உள்ளவளாக இருக்கிறாள்." என்று பேசிக்கொண்டனர்.
இவ்வாறு வாழ்த்தி விட்டு, தேவர்கள் அனைவரும், கந்தர்வர்களும், அப்சரஸ்கள் அனைவரும், யாதவர்கள் அனைவரும் விவாகம் செய்வித்து விடை பெற்று சென்றனர்.
யாதவர்கள் அர்ஜுனனிடம் விடைபெற்று, உத்ஸவம் நடக்கும் மற்றொரு தீவுக்கு சென்றனர்.
அப்போது ஶ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனை பார்த்து, "அர்ஜுனா! 22 நாட்கள் இங்கேயே வாசம் செய். ஸைப்யம், சுக்ரீவம் போன்ற குதிரைகள் பூட்டப்பட்ட என்னுடைய ரதத்தில் சுபத்திரையை கூட்டிக்கொண்டு காண்டவப்ரஸ்தம் செல்.
யாதவர்களோடு பிறகு நானும் அங்கு வருகிறேன்.
நீ சன்யாசி வேஷத்தில் நியமத்தை விட்டு விடாமல், அதுவரை இங்கேயே ருக்மிணி க்ருஹத்தில் இரு" என்றார்.
இவ்வாறு சொல்லி விட்டு ஶ்ரீ கிருஷ்ணரும் உத்ஸவம் நடக்கும் தீவுக்கு சென்றார்.
சீதையோடு சேர்ந்த ராமரை போல, சுபத்திரை அர்ஜுனனை அடைந்தாள்.
தன்னை அழைத்து கொண்டு போகும் வரை, சுபத்திரை கன்னிகைகள் வசிக்கும் அந்தப்புரத்தில் இருந்து கொண்டு, அவனையே நினைத்துக்கொண்டிருந்தாள்.
ஆதி பர்வம்
வியாச மஹாபாரதம்