Followers

Search Here...

Showing posts with label அர்த்தம். Show all posts
Showing posts with label அர்த்தம். Show all posts

Monday 30 March 2020

பாசுரம் (அர்த்தம்) - முடிச்சோதியாய் உனது முகச்சோதி - நம்மாழ்வார் கள்ளழகர் (மதுரை) சுந்தரராஜ பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

நம்மாழ்வார் (திருவாய்மொழி) நம் கள்ளழகரை மங்களாசாசனம் செய்து பாடுகிறார்.

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? 
திருமாலே கட்டுரையே
-  நம்மாழ்வார் (திருவாய்மொழி)
அர்ச்சா திருமேனியுடன் தான் கள்ளழகர் இருக்கிறார்.
இருந்தாலும்,
பரமபதத்தில் அப்ராக்ருத (Beyond Nature) திவ்ய மங்கள வடிவை கொண்ட பரவாசுதேவன் எப்படி இருப்பாரோ, அது போலவே இருக்கிறார் கள்ளழகர்.

கள்ளழகரை பார்க்கும் போது, இவர் அர்ச்சா திருமேனி  என்று தோன்றவே தோன்றாது.




இவர் எந்த உலோகத்தால் செய்யப்பட்டு இருக்கிறார்?
என்றே சொல்ல முடியாத படி, தனித்து இருக்கிறார்.
இன்றைக்கு சென்று, நம் ஊன கண்ணால் பார்த்தாலும் இந்த அதிசயத்தை நாம் உணரலாம்.

எந்த கோவிலுக்கு சென்று போய் பார்த்தாலும், கள்ளழகருக்கு உள்ள அந்த அழகு, பொலிவு வேறு எங்கும் பார்க்க முடியாது.

திருமஞ்சனம் செய்யட்டும், செய்யாமாலே இருக்கட்டும், இவர் திருமேனி மட்டும் தக தக வென்று அப்படி ஒரு பொலிவுடன் இருக்கும்.
நம்மாழ்வார் ஹ்ருதயத்தில் அத்தகைய பொலிவுடன் கள்ளழகர் காட்சி தர, அந்த பொலிவை வர்ணிக்கிறார்.

தக தக வென ஜொலிக்கும் பெருமாளின் "கன்னத்தில் (முக) வெளிப்பட்ட பொலிவு (ஜோதி) தான் கிரீடமாக (முடிச்சோதி) இருக்கிறதோ?"
என்று பார்த்து பிரமிக்கிறார் நம்மாழ்வார்.
கள்ளழகரை தான் பார்த்த காட்சியையே,
"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?"
என்கிறார்.

தங்க ஆபரணங்களை தனியாக பார்க்கும் போது ஜொலி ஜொலிக்குமாம்.
அதே தங்க ஆபரணங்களை கள்ளழகர் அணிந்துகொண்டு விட்டால், இவருடைய மேனி பொலிவுக்கு முன், தங்க நகைகள் பொலிவு இல்லாதது போல தெரியுமாம். 
இந்த அனுபவத்தை இன்று கள்ளழகரை சென்று பார்த்தால் கூட நாமும் அனுபவிக்க முடியும். 




கள்ளழகர் கன்னத்தை பார்த்தால், எதிரே நிற்பவர்களின் பிம்பம் தெரியுமாம். 
அத்தனை பொலிவு உடைய கள்ளழகரின் பொலிவை கண்டு மயங்கி, 
"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?"
என்று நம்மாழ்வார் ஆச்சர்யப்பட்டு கேட்கிறார்.

பெருமாளின் முகப்பொலிவை கண்ட பிரமித்த நம்மாழ்வார், "சரி திருவடியை பார்ப்போம்" என்று கவனிக்க,
கள்ளழகரின் திருவடியின் அடிப்பகுதி சிவந்து பெரும் பொலிவை தர,
அந்த "திருவடி பொலிவுதான் சிவந்த தாமரையாக மலர்ந்து இருக்கிறதோ?" என்று கேட்கிறார்.
கள்ளழகரை தான் பார்த்த காட்சியையே,  
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
என்கிறார்.




பெருமாள் இடுப்பில் பீதாம்பரம் அணிந்து இருந்தாலும், அந்த வஸ்திரத்தையும் மீறிக்கொண்டு, அவர் திருதொடையின் பொலிவு, பீதாம்பரத்துக்கும் மேல் பிரகாசிக்குமாம்.

இப்படி அடி முதல் முடி வரை தங்கம் போல (பைம்பொன்) தக தகவென ஜொலிக்கும் அழகரை கண்டு பிரம்பிக்கிறார் நம்மாழ்வார்.

இதையே

படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் 
நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ
என்கிறார்.

எப்பொழுதுமே தங்கம் போல ஜொலிக்கும் கள்ளழகர் .
ஒரே ஒரு சமயம் மட்டும், பச்சை திருமேனியாக ஆகி விடுகிறார்.

கள்ளழகர் ஒரு சமயம் மலை மீது ஏறி, நூபுர கங்கைக்கு செல்வார்.
இந்த மலையோ பச்சை பசேல் என்று சோலையாக இருக்கும். 

போகும் வழியில், இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்று இருப்பதால், அந்த சாயம் இவர் கன்னத்தில் பிரதிபலித்து, பெருமாளே பச்சை வர்ணமாக காட்சி தருவார்.
அங்கு மட்டும் கள்ளழகர் பச்சை வண்ண பெருமாளாக இருப்பார்.
மற்ற சமயங்களில் எல்லாம், பெருமாள் மணிவண்ணனாகவே இருப்பார்.

இப்படி பெருமாளின் பொலிவை கண்டு ஆனந்தப்படுகிறார் நம்மாழ்வார்.

Saturday 21 March 2020

ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) நம்பெருமாள் வருவதற்கு முன் நடந்த சரித்திரம். தெரிந்து கொள்ள வேண்டாமா?

உலக ஸ்ருஷ்டி ஆரம்பமான காலம்:
ப்ரம்மாவுடைய மானஸ புத்ரன் தக்ஷன்.
ப்ரம்மாவின் ஆணையை ஏற்று தக்ஷ ப்ரஜாபதி உலக ஸ்ருஷ்டிகளை செய்தார்.
28 பெண் தேவதைகளை ஸ்ருஷ்டி செய்தார்.
இதில் 27 தேவதைகளே 'நக்ஷத்திரங்களாக' ஜொலிக்கின்றனர். மற்றொருவள் பெயர் "அபிஜித்".

"க்ஷத்ர" என்றால் "மங்கக்கூடிய" என்று பொருள்.
"ந-க்ஷத்ர" என்றால் "மங்காத" என்று பொருள்.

உலகில் மனிதர்களை "மங்காத புகழ்" என்று சொல்ல "நக்ஷரம்" என்று சொல்லி பெருமைபட்டுக்கொள்வார்கள்.
ஆனால்,
அனைவரும் ஒருநாள் மங்கக்கூடியவர்களே !




உண்மையில் என்றுமே மங்காத பெருமையுடன் இரத்தின மாலை போல ஜொலிப்பவர்கள் இந்த தேவதைகள்.

27 பெண்களின் பெயர்: (நக்ஷத்ர தேவத்தைகள்)
அஸ்வினி, பரணி, கிருத்திகா (கார்த்திகை),
ரோகினி, ம்ருகசீர்ஷா, ஆத்ரா (திருவாதிரை),
புனர்வசு (புனர்பூசம்),  புஷ்ய (பூசம்), ஆஸ்லேசா (ஆயில்யம்),
மகா (மகம்), பூர்வ பல்குனி (பூரம்), உத்தர பல்குணி (உத்திரம்),
ஹஸ்த (அஸ்தம்), சித்ரா (சித்திரை), ஸ்வாதி (சுவாதி),
விஷாகா (விசாகம்), அனுராதா (அனுஷம்), ஜ்யேஷ்டா (கேட்டை),
மூல (மூலம்), பூர்வ ஆஷாடா (பூராடம்), உத்தர ஆஷாட (உத்திராடம்),
ஸ்ரவண (திருவோணம்), தனிஷ்டா (அவிட்டம்), சதபிஷா (சதயம்),
பூர்வ பாத்ரபதா (பூரட்டாதி), உத்திர  பாத்ரபதா (உத்திரட்டாதி), ரேவதி

தன் 28 பெண்களையும், பாற்கடலில்  தோன்றிய சந்திரனுக்கே மணம் செய்து கொடுத்தார்.
பார்ப்பதற்கே குளிர்ச்சியாகவும், அழகாகவும் இருக்கும் சந்திரன், செல்வத்துக்கு அதிதேவதையான மகாலட்சுமிக்கு சதோதரன்
என்ற காரணத்தினாலேயே மனமுவந்து தன் 27 பெண்களையும் கொடுத்தார்.

பெருமாளும், தாயாரும் நமக்கு தாய் தந்தை.
அதன் காரணத்தாலேயே, மகாலட்சுமியின் சகோதரனான சந்திரனை "சந்திர மாமா" என்றும் "அம்புலி மாமா" என்று உறவு சொல்லி அழைக்கிறோம்.
இந்த அதி தேவதைகளே 27 நக்ஷத்திர மண்டலங்களாக, சந்திரனுடன் நமக்கு காட்சி கொடுக்கிறார்கள்.

28 பெண்களை மனம் செய்து கொடுத்தாலும், சந்திரன் ரோகினியிடம் மட்டும் தனி பிரியம் கொண்டிருந்தார்.
மற்ற மனைவிகளிடம் சமமாக பழகாமல் இருந்து வந்தார்.

தங்கள் குறையை தகப்பனாரான தக்ஷனிடம் மற்ற 27 பெண்கள் சொல்ல, மனைவியிடம் பிரியம் இல்லாமல் இருக்கும் சந்திரன் மேல் கடும் கோபம் கொண்டார்,  தக்ஷ பிரஜாபதி.
மாப்பிள்ளையை சபித்தால் யாருக்கு நஷ்டம்?
தன் பெண்களுக்கு தானே நஷ்டம் !

கோபத்தில், சந்திரனை பார்த்து "உன் பொலிவான தோற்றத்தில் க்ஷய ரோகம் (தேய்மானம்) ஏற்படட்டும்" என்று சபித்துவிட்டார்.

சாபத்தால், நாளுக்கு நாள் சந்திரனின் பொலிவு தேய ஆரம்பிக்க, "அமாவாசை வருவதற்குள் நாம் முழுவதும் பொலிவு இல்லாமல் அழிந்து விடுவோம் போல உள்ளதே!!" என்று ப்ருகு முனிவரை சந்திரன் சரண் அடைந்து உபாயம் கேட்டார்.

ப்ருகு சந்திரனை பார்த்து, "நீ உடனேயே பூலோகம் சென்று, அங்கு வாசுதேவனை  ஆராதனை செய். அப்படி செய்தாய் என்றால், உனக்கு இந்த க்ஷய ரோகம் நிவர்த்தி ஆகும்" என்று சொல்ல,

சந்திர தேவன்  பூலோகம் வந்து, தானே ஒரு புண்ணிய தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, வாசுதேவனை குறித்து ஆராதனை செய்ய தொடங்கினார்.

சந்திரனால் ஏற்பட்ட இந்த தீர்த்தத்துக்கு "சந்திர புஷ்கரணி " என்று பெயர் ஏற்பட்டது.
இது காவிரி உருவாவதற்கும் முந்தைய காலம்.
திருவரங்கத்திற்கு நம்பெருமாள் இன்னும் வராத காலம்.

"சந்திர புஷ்கரணி " என்ற தீர்த்தம் அமைத்து, அதன் நான்கு பக்கங்களிலும் மேலும் (உப) சில தீர்த்தங்களும் அமைத்தார் சந்திர தேவன்.

ப்ராச்ய (கிழக்கு) திசையில், நாவல் (ஜம்பு) மரங்கள் உள்ள இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'ஜம்பு தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது.
ஜம்பு (நாவல்) மரத்துக்கு ஈஸ்வரனாக இருக்கும் சிவபெருமானை அங்கு பிரதிஷ்டை செய்தார். (திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் கோவில்).

தக்ஷிண (தெற்கு)திசையில், புன்னை மரங்கள் உள்ள இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'புன்னாக தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது.
அங்கு, ப்ருகு முனிவர் சொன்னபடி,  "வாசுதேவனை" பிரதிஷ்டை செய்தார்.

பஸ்சிம (மேற்கு) திசையில், வில்வ  மரங்கள் உள்ள இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'வில்வ தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது.
அங்கு, தன் சகோதரியான மகாலட்சுமியை பிரதிஷ்டை செய்தார்.

"சந்திர புஷ்கரணி " தீர்த்தத்துக்கு உத்திர (வடக்கு) திசையில், கதம்ப   மரங்கள் நிறைந்த இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'கதம்ப  தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது. அங்கும் புருஷோத்தமனை பிரதிஷ்டை செய்தார்.  (கதம்பனூர் என்றும் கரம்பனூர் என்றும் சொல்கிறோம். திருக்கரம்பனூர் உத்தமர் கோயில்)

சந்திரன் அமைத்த "சந்திர புஷ்கரணி"  என்ற தீர்த்த கரையில் பிற்காலத்தில், த்ரேதா யுகத்தில், விபீஷணனால், கொண்டு வரப்பட்டு, ஸ்ரீ ரங்கநாத பெருமாளே வந்து சேருகிறார்.

சந்திரன் அமைத்த மற்ற தீர்த்தங்களை ஸ்ரீ ரங்கநாதர், பங்குனி மாதம் ஒவ்வொரு தீர்த்தத்துக்கு சென்று தங்கி, ஸ்ரீரங்க எல்லையை தானே காத்து வருகிறார்.
பங்குனி திருநாள் உத்சவம் என்று ஸ்ரீரங்கத்தில் இன்றும் பெருமாள் தன் ராஜ்யத்தை நடத்தி வருகிறார்.

இப்படி பல தீர்த்தங்கள் அமைத்து, பெருமாளை வாசுதேவனாக, ஆராதனை செய்த சந்திர தேவன், தன் க்ஷய ரோகத்தில் இருந்து விடுபட்டு, அமாவாசை முடிந்து சுக்ல பக்ஷத்தில் மீண்டும் வளர்ச்சி அடைந்து விட்டார்.

தக்ஷன் சொன்ன வார்த்தையும் சத்தியம் செய்வதற்காக, கிருஷ்ண பக்ஷத்தில் மட்டிலும் க்ஷத ரோகத்தை அனுபவிக்கிறார்.

வாசுதேவனின் அனுகிரஹத்தால்
, சந்திர தேவனுக்கு ஏற்பட்ட க்ஷய ரோகம் மட்டும் நீங்காமல், தன் மனைவிகளிடத்தில் இருந்த வேற்றுமை உணர்வும் நீங்கியது.
ஸ்ரீ ரங்கத்தில் உள்ள, இந்த சந்திர புஷ்கரணியின் அருகிலேயே வாசுதேவ சன்னதி இருக்கிறது. 
இந்த வாசுதேவன் பெரிய பெருமாள் (ரங்கநாதர்) இங்கு வருவதற்கு முன்பேயே வந்தவர்.

ஸ்ரீ ரங்கத்தில் உள்ள, இந்த சந்திர புஷ்கரணியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு, க்ஷய ரோகங்கள் (தோல் சம்பந்தமான) நிவர்த்தியாகி விடும்.
ரோகங்கள் வருவதற்கான  காரணம் "நாம் செய்த பாபங்களே"
அந்த பாபங்கள் வாசுதேவனின் சாநித்தியத்தாலேயே பொசுங்கி விடும்.

ஸ்ரீரங்கநாதர் வருவதற்கு முன்பேயே வந்தவர் "வாசுதேவன்".
வாசுதேவன் சந்நிதி இன்றும் சந்திர புஷ்கரணி தீர்த்தத்துக்கு அருகிலேயே இருக்கிறது.

வாசுதேவன் சாநித்தியத்துடன் இருக்கும் இந்த சந்திர புஸ்கரணியிலே,
நாம் தீர்த்தமும், முன்னோர்களுக்கு ஸ்ரார்த்தம் செய்தால், கோடி புண்ணியம். 
நம் முன்னோர்கள் எல்லோரும் நல்ல கதியை அடைவார்கள்.


அந்த தீர்த்த கரையிலேயே வாசம் செய்யும் வேத ப்ராம்மணர்களுக்கு, நாம் அன்ன தானம், வஸ்திர தானம், கோ (பசு) தானம், தனம் முதலியவை கொடுத்தால், எந்த காலமும் செல்வம் குறையாத நிலையில் வாழும் பாக்கியம் நமக்கு கிடைக்கும்.




அழிவில்லா செல்வம் தரக்கூடிய புண்ணிய காரியங்கள் இவை.

சந்திரா புஷ்கரணி தீரத்தில், யார் ஜபம், தபசு செய்கிறார்களோ! அவர்களுக்கு சீக்கிரமாக தான் எதிர்பார்த்த பலங்கள் ஸித்தி ஆகிறது.

அனைத்து புண்ணிய நதிகளும், இந்த சந்திர புஷ்காரணியில் வசிக்கிறார்கள்.

அனைவரும் சென்று பார்க்க வேண்டும்.

Wednesday 4 March 2020

அஷ்டாங்க யோகம் என்றால் என்ன? இதற்கு அர்த்தம் என்ன? எதற்காக இதை செய்கிறோம்? யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி

'சம்சார ஆசைகள்' நம்மை விட்டு இயற்கையாக விலகி, மோக்ஷ பாதையில் செல்ல,
  1. "பக்தி யோகம்"
  2. "சரணாகதி" 
என்ற இரண்டு வழிகள் சொல்லப்படுகிறது.



இதில் "பக்தி யோகம்" என்ற வழியில் செல்ல ஆசைப்படுபவர்கள்,
"8 நிலையை கடந்து செல்ல வேண்டும்"
என்று வழிகாட்டுகிறது நம் சனாதன வேத தர்மம் (ஹிந்து தர்மம்).





பக்தி யோகத்தின் 8 அங்கங்கள் என்ன? என்று பார்ப்போம்.

மனதை அடக்கி தியானம் செய்வதை தான் "யோகம்" என்று சொல்கிறோம்.

'மனதை அடக்குவது' என்பது சாதாரண விஷயமில்லை.

மனதை அடக்கி, தியானம் என்ற யோகத்தை அடைய சூத்திரம் (formula) எழுதியவர் "பதஞ்சலி" முனிவர்.

"திடமான முயற்சி இருந்தால் மனதை அடக்க முடியும்" என்று சொல்கிறார் பதஞ்சலி.

பதஞ்சலி அருளிய யோகசூத்திரமே "அஷ்டாங்க யோகம்" என்று சொல்கிறோம்.

பதஞ்சலி அருளிய யோகசூத்திரமே "அஷ்டாங்க யோகம்" என்று சொல்கிறோம்.

அஷ்டாங்க யோகம், 8 அங்கங்களை கொண்டுள்ளது:
அவை,
"யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யஹாரம், தாரணை, தியானம், சமாதி"
என்பதாகும்.

அஷ்டாங்க யோகத்தால், 8 ஸித்திகள் ஏற்படும்.
அவை,
"அணிமா, லகிமா, மஹிமா, கரிமா, ஈசிதா, வசிதா, ப்ராகாம்யம், ப்ராப்தி".
இந்த ஸித்திகள் ஏற்பட்டும், இதனை ஒதுக்கி விட்டு, ஈஸ்வரனை அடைவதே லட்சியம் என்று இருக்கும் யோகி, மோக்ஷம் அடைகிறான்.


  1. யமம் (புலன் ஒழுக்கம் உண்டாக தயார் செய்து கொள்வது)-
    உலக ஆசைகள் நீங்கி, நாம் மோக்ஷம் பெறுவதற்கு, "பக்தி மார்க்கத்தில்" முதல் படியாக நமக்கு தேவைப்படுவது "புலன் அடக்கம்".
    ஸத்தியம், அஹிம்ஸை, பொறுமை முதலிய நல்லொழுக்கத்திற்கு "யமம்" என்று பெயர்.
    நல்லொழுக்கம் இல்லாதவனுக்கு யோகம் பலிக்காது.

    சூதாடிக் கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும், வேசி வீட்டிற்குப் போய்க் கொண்டு பொழுது போக்கும் வணிகன் வியாபாரத்தில் லாபம் காண முடியாது.
    அதுபோல,
    நல்லொழுக்கமின்றி வீண்பொழுது போக்குபவன் யோகத்திலும் பயன்பெற முடியாது.

    நமக்கு நம் புலன்களை அடக்கும் சக்தி முதலில் ஏற்பட வேண்டும். அதற்கு தயார் செய்து கொள்வதே "யமம்"
    .

    * அஹிம்சை (பிற உயிரை கொல்லாமல் இருப்பது, மாமிசம் எக்காரணம் கொண்டும் உண்ணாமல் இருப்பது),
    * சத்தியம் (எந்த நிலையிலும் சத்தியத்தை பேசுவது),
    * பிரம்மச்சர்யம் (காம வசப்படாமல் அனைவரையும் தன் தாயாக, தன் தங்கையாக, தன் அண்ணனாக, தன் தந்தையாகவே பார்ப்பது),
    க்ஷமா (தவறு செய்தாலும் பொருட்படுத்தாமல் மன்னிப்பது),
    தயை (பணக்காரன் முதல் ஏழை வரை யாரிடத்திலும் இரக்கம் காட்டுவது, அலட்சியம் செய்யாமல் இருப்பது),
    சகிப்புத்தன்மை (பிறரின் கேலி, பொறாமை, வெறுப்பை கண்டு கொண்டும் அமைதியாக இருப்பது)

    மேல் சொன்ன 6 குணங்களையும் ஒருவன் தன் பழக்கத்தில் கொண்டு வரும் போது, அவன் புலன்கள் அவனுக்கு அடங்கி இருப்பதை அவனே உணர்கிறான்.
    அவன் இஷ்டப்படாமல், புலன்கள் அவனை தீய செயல்களில் இழுக்காது என்ற நிலையை அடைகிறான்.
    இதையே "யமம்" என்று சொல்கிறோம்.

    99% சதவீத பிராம்மணர்கள், இன்றுவரை, இந்த 6 குணங்களை கடைபிடிக்கின்றனர்.
    பிராமண சமுதாயம் என்பது 720 கோடி உலக மக்கள் தொகையில், மிஞ்சிப்போனால் 2 கோடி பேர் மட்டுமே இருக்கின்றனர்!!..
    99% சதவீத உலக மக்கள், 'மாமிசம்' உண்பவர்களாக இருக்கிறார்கள் என்று பார்க்கிறோம்.

    'அஹிம்சை'  என்ற கொள்கையே 99% சதவீத மக்களுக்கு பெரும் சவாலாக  இருக்கிறது என்று பார்க்கிறோம்.

    லட்சக்கணக்கான வருடங்களாகபரம்பரை பரம்பரையாக, 'தாய்' வழியிலும், 'தந்தை' வழியிலும் ஒருவன் கூட மாமிசம் சாப்பிடாத பரம்பரையாக, பிராம்மண சமுதாயம் இருக்கிறது
    .

    பல விதமான குணங்கள் கொண்ட மனிதர்களை ஒரு வட்டத்துக்குள் கொண்டு வந்து, மாமிசம் உண்ணாத பரம்பரையாக லட்சக்கணக்கான வருடங்களாக நிலை நிறுத்தி வைத்து இருப்பது பிராம்மண சமுதாயத்தின் பெரும் வெற்றி.
    பல விதமான மனித குணங்களை பார்க்கும் போது தான், "இது அசாதாரணமான கட்டமைப்பு" என்பது நமக்கு புரியும்.

    காலம் பல கடந்த, இந்த பிராம்மண சமுதாயத்தின் கட்டமைப்பே "ஒரு அசாதாரண செயல், ஆச்சர்யமான கட்டமைப்பு" என்பது புரியும் போது தான், இந்த சமுதாயத்தின் மேல் நமக்கு மரியாதை ஏற்படுகிறது.

    தன் குடும்ப பழக்கத்திலேயே இந்த 6 குணங்களை இவர்கள் பெற்று விடுவதால், பயிற்சி செய்து இந்த 6 குணங்களை பெற அவசியமில்லாமல் இயற்கையாகவே இந்த குணங்களை கொண்டு இருக்கின்றனர் பிராம்மணர்கள்.
    மற்ற ஜாதிகளில், ஒருவர் அஹிம்சை வழியில் மாமிசம் சாப்பிடாமல் இருக்க நினைத்தாலும், அவர் தாய், தந்தை, உறவினர்கள் என்று பார்க்கும் போது, பலருக்கு மாமிசம் உண்ணும் பழக்கம் இருக்கிறது.

    இது போன்ற குடும்ப அமைப்பில், "தான் மட்டும் அஹிம்சையை கடைபிடிப்பது" என்பதே பெரும் சவாலான விஷயமாகிறது..

    மோக்ஷத்தில் பேராசை, உலக ஆசைகள் மீது வெறுப்பு போன்றவை இவர்களுக்கு தேவைப்படுகிறது.

    'குடும்பமே மாமிசம் உண்டாலும், தான் அஹிம்சை தர்மத்தில் இருப்பேன்' என்று சொல்வது பெரும் சவாலான விஷயமாகிறது. பிராம்மணர் அல்லாத வீடுகளிலும், ஆன்மீகத்தை தேடி வந்த சாதுக்கள், மகான்கள் இன்று கூட காண்கிறோம். ஆனால், பிராம்மண சமுதாயத்தின் சிறப்பு என்று பார்க்கும் போது, இவர்களின் பரம்பரையே 99% சதவீதம் காய் கனிகளை மட்டுமே உண்டு, அஹிம்சையை கடைபிடித்தவர்கள் என்று அறிகிறோம்.

    பொதுவாகவே, தனியாக முயற்சி செய்யாமலேயே, பிராம்மணர்கள், பக்தி யோகத்தின் முதல் படியில் (யமம்) இருப்பதை அனைவரும் உணரலாம்..

    'அஹிம்சை, சத்தியம், பிரம்மச்சர்யம், க்ஷமா, தயை, சகிப்புத்தன்மை' போன்ற 6 குணங்களை ஒருவன் முயற்சி செய்து பழக்கத்தில் கொண்டு வரும் போது, "யமம்" என்ற முதல் படியை கடந்து விடுகிறான்.

    ப்ராம்மணர்களுக்கு இது இயற்கையாகவே பழக்கத்தில் உள்ளது. மற்ற ஜாதியினரும், வெளிநாட்டினரும் கூட, முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.

    மோக்ஷம் அடைய விரும்பும் அனைவருமே "அஹிம்சை, சத்தியம், பிரம்மச்சர்யம், க்ஷமா, தயை, சகிப்புத்தன்மை " என்ற 6 குணங்களை பெற முயற்சிக்க வேண்டும்.


  2. நியமம் (உடல் ஒழுக்கம் உண்டாக)
    விடி காலையில் சூரியன் உதிக்கும் முன் ஸ்நானம் செய்வது,
    சந்தியா வந்தனம் (தேவ, ரிஷி தர்ப்பணம்),
    ஏகாதசி உபவாசம்,
    விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்,
    பாகவத, பகவத் கீதை பாராயணம்,
    போன்ற உடல் சம்பந்தமான தினசரி கடமைகளை செய்து கொண்டே இருப்பது, "நியமம்" என்று சொல்கிறோம்.

    இந்த நியமங்கள் மூலம், உடல் ரீதியாக, நம்மை தெய்வ சம்பந்தமான காரியங்களில் அதிக நேரம் நம்மை ஈடுபடுத்திக் கொள்கிறோம்
    .

    வெளி உலக காரியங்களுக்கு நேரம் செலவிடுவதை இது போன்ற நியமங்கள் இயற்கையாகவே குறைத்து விடும்.




    நியமத்தில் இருப்பவனுக்கு
    - டிவி பார்க்கவும்,
    - வீண் பேச்சு பேசுவும்,
    - தூங்கவும்,
    - ஊர் வம்பு பேசவும் நேரம் இல்லாமல் போகும்.
    நியமத்தில் இருப்பவன் லட்சியவாதியாக இருப்பான்.
    இப்படி இருப்பவர்களை "நியமமாக இருப்பவர்கள் என்று பொதுவாக நாம் சொல்வதுண்டு.
    பெரும்பான்மையான பிராம்மணர்கள், இன்று வரை, நியமமாக தான் இருக்கின்றனர். 


    "மிதமான ஆஹாரம், மிதமான நித்திரை, மிதமான பேச்சு, மிதமான உழைப்பு' இவைகளுக்கு "நியமம்" என்று பெயர்.

    நியமம் இல்லாதவனுக்கு யோகம் பலிக்காது.
    இரு கரைகளால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு ஆறுதான் கடலை நோக்கிச் செல்ல முடியும்.
    கரை உடைந்த ஆறு கடலை அடைய முடியாமல் சிதறிப் போய்விடும்.
    அதுபோல,
    நியமத்துடன் கூடியவன்தான் தனது யோகத்தின் லட்சியத்தைப் பெற முடியும்.
    நியமம் இல்லாதவன் யோக மார்க்கத்தில் சிதறிப் போவான்.

  3. ஆசனம் (புத்துணர்ச்சி உண்டாக)
    * பத்மாசனம் (இரு பாதங்களை இரு தொடைகளுக்கு மேல்புறத்தில் உள்ளங்கால்கள் மேலே தெரியும்படியாக தூக்கி வைத்துக்கொண்டு உட்கார்வது)
    ஸ்வஸ்திகாஸனம் (இரு பாதங்களையும் மடித்து இரு தொடைகளுக்கு அடியில் அடக்கி உட்கார்வது)
    ஸித்தாஸனம் (ஒரு குதிகாலை பிறப்புறுக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து, மறு குதிகாலை பிறப்புறுப்பின் மேல் வைத்து கொண்டு,
    இடது உள்ளங்கையின் மீது வலது பின்னங்கையை வைத்து தொடைகளுக்கு இடையில் வைத்து கொண்டு,
    முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி, அமர்ந்து கொண்டு,
    புருவ மத்தியை நோக்கிப் பார்வையைச் செலுத்துவது),
    போன்ற பலவித முறையில் உடலை ஒரு நிலையில் வைக்க பயிற்சி கொடுப்பது "ஆசனம்" என்று சொல்கிறோம்.




    இடுப்பு, தண்டுவடம் போன்ற உடல் உறுப்புகள் பலப்படும்.
    தண்டுவடத்தில் தான் முக்கியமான சுஷும்னா நாடி உள்ளது. அதை தட்டி எழுப்ப, உடல் உறுதி மிக அவசியமாகிறது.
    அதற்கு நம்மை தயார் செய்வதே யோக ஆசனங்கள்.
    ஆசனங்கள் செய்ய செய்ய, சுறுசுறுப்பு அதிகரிக்கும். இரத்தம் நன்கு சுத்திகரிக்கப்படும். உடல் புத்துணர்ச்சி பெறுகிறது.


  4. பிராணாயாமம்  (மனதை மயக்கி அடக்குவது)- 
    ஆசனங்கள் மூலம் உடல் தகுதி பெற்றவன், 'பிராணாயாமம்' என்ற மூச்சு பயிற்சி மற்றும் பிரணவ மந்திரத்தின் மூலம் சுஷும்னா நாடியை எழுப்பி, 8 விதமான ஸித்திகளை, தெய்வங்களின் அனுகிரஹத்தை, மோக்ஷத்தை அடைய முயற்சி எடுக்கிறான்.

    'பிராணாயாமம்' என்பது
    * பூரகம் (மூச்சை முறைப்படி உள் இழுத்து),
    கும்பகம் (முறைப்படி மூச்சை அடக்கி),
    ரேசகம் (மூச்சை முறைப்படி வெளியில் தள்ளி)
    போன்றவற்றின் மூலம் "நாடிகளை சுத்தி" செய்யும் பயிற்சி.

    சுஷும்னா நாடியை பிராணாயாமத்தால் எப்படி எழுப்புவது? பூணூல் ஏன் அனைவரும் அணிய வேண்டும்? தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்.

    பிராணாயாமம் செய்ய செய்ய, அங்கும் இங்கும் அலையும் மனம் ஓய்வதை உணரலாம். மகுடி ஊதி ஊதி, "கருநாகம்" அதன் அசைவால் மயங்கி இருப்பது போல, பிராணாயாம பயிற்சியால் மனம் மயங்கி இருக்கும்.
    மனம் அடங்கி மூச்சு நிதானமாக ஓடுவதை அனுபவத்திலேயே உணரலாம். எந்த நிலையிலும், பதட்டம் அடையாத நிலையில் தான் இருப்பதை அனுபவத்திலேயே உணரலாம்.


  5. ப்ரத்யாஹாரம் (மயங்கி கிடக்கும் மனதில் இஷ்ட தெய்வத்தை காட்டுவது)
    அங்கும் இங்கும் அலையும் நம் மனம், பிராணாயாம பயிற்சியால் மயங்கி இருக்க,
    நம் மனதை மெல்ல நம் இஷ்ட தெய்வத்தின் ரூபத்தை காட்டி காட்டி,
    நம் மனதை நம் இஷ்ட தெய்வத்தின் ரூபத்திலேயே 'நிலை நிறுத்த' செய்வதற்கு 'ப்ரத்யாஹாரம்' என்று பெயர்.

    மாட்டை மனதுக்கு உதாரணமாக காட்டுவதுண்டு.
    வெளியில் அலைந்து அலைந்து மேய்ந்து பழகிய மாட்டை, தொழுவத்தில் அலையாமல் நிறுத்த, அதை சாமர்த்தியமாக அழைத்து வந்து, கயிறு கொண்டு கட்டுவது போன்றது
    "ப்ரத்யாஹாரம்". மயங்கி இருக்கும் மனதை கட்டு படுத்தாமல் (ப்ரத்யாஹாரம்) இருந்தால், சுதாரித்து கொண்டு மீண்டும் ஓடி விடும். பிறகு, மீண்டும் பிராணாயாமம் செய்து மயக்கி, பிறகு கட்டுப்படுத்த (ப்ரத்யாஹாரம்) வேண்டியதாகி விடும்.

    மனதை கட்டி போடுவது (ப்ரத்யாஹாரம்) எப்படி? இந்த சமயத்தில் பெருமாளின் குணங்களை பற்றி சொல்லும் சாத்வீக புராணங்களான வராஹ புராணம், பாகவதம் போன்றவை படிக்க படிக்க, மனம் பெருமாளின் மீது காதல் கொள்ள ஆரம்பிக்கும்.
     


  6. தாரணை (இஷ்ட தெய்வத்திடமே மனதை கட்டி போடுவது)
    சாமர்த்தியமாக கட்டப்பட்ட மாடு, "தன்னை தொழுவத்தில் கட்டி விட்டான்" என்றதும் அறுத்துக்கொண்டு ஓட பார்க்கும்.
    அது போல,
    மயங்கி கிடக்கும் மனம், "நம் இஷ்ட தெய்வத்தின் ரூபத்தை பார்த்தாலும்" விஷய சுகங்கள் அனுபவித்து இருப்பதால், அறுத்துக்கொண்டு அங்கேயே ஓட பார்க்கும்.
    ஆதலால், "ப்ரத்யாஹாரம்" என்ற நிலையிலேயே இருந்து விட கூடாது.
    "தாரணை" என்ற நிலைக்கு மனதை கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.
    அதற்கு அந்த தொழுவம் பிடித்து போகும்படியாக செய்து, வெளியில் போக முடியாத படி நல்ல கயிறு கொண்டு பல நாள் கட்டிப்போட்டு விடுவது போன்றது "தாரணை"
    மனம் நம் தெய்வத்தின் ரூபத்தை காட்டி காட்டி, இஷ்ட தெய்வத்தின் ரூபத்திலேயே நிறுத்தி விட்ட நிலையே "தாரணை" என்று சொல்லப்படுகிறது.


  7. தியானம் (சிரமமில்லாமல் நிலையாக இஷ்டதெய்வத்தை தியானம் செய்வது) 
    தொழுவத்தில் பலநாள் கட்டப்பட்ட மாடு, தொழுவத்திலேயே இருக்க பழகிய நிலையில், வெளியில் மேய கூட்டிக்கொண்டு போனால், ஆசையோடு நன்றாக மேயும்.
    அதே சமயம்,
    மீண்டும், தொழுவத்தில் கூட்டிக்கொண்டு வந்தாலும் அடம்பிடிக்காமல் அமைதியாக இருக்கும்.
    இதுவே தியான நிலை.
    தியானம் ஸித்தி ஆனவன், தன் மனதை "உலக விஷயங்களில் போ!" என்றால் வெளி விஷயங்களில் ஈடுபடும்.
    தியானம் ஸித்தி ஆனவன், தன் மனதை "போதும் நிறுத்து.. 4 மணிக்கு பெருமாளை தியானம் செய்!" என்றால் மனம் எதிர்க்காமல், அவன் ஆசைப்பட்ட நேரத்தில், உலக நினைவை இவனுக்கு கொண்டு வராமல், "பெருமாளை மட்டுமே தியானம் செய்யும்"
    இந்த தியான நிலையை "பரத யோகி" அடைந்து இருந்தார்.
    மனம் இஷ்ட தெய்வத்தின் ரூபத்திலேயே நின்று, உலகமே மறந்து விட்ட நிலையே "தியானம்" என்று சொல்லப்படுகிறது.


  8. சமாதி (இஷ்ட தெய்வத்தோடு கலந்து விடுவது)
    'தியானம்' ஸித்தியான பரத யோகி, "சமாதி" என்ற மோக்ஷ நிலையை அந்த ஜென்மத்திலேயே அடைய முடியவில்லை.

    தொழுவத்திலேயே இருக்க பழக்கப்பட்ட மாடு, ஒரு நிலையில், வெளியில் கூட்டிகொண்டு போனாலும், மேய ஆசைப்படாமல், மீண்டும் தொழுவத்திற்கே செல்ல ஆசைப்படும். இதுவே "சமாதி" நிலை.

    சமாதி நிலையில் ஸித்தி ஆனவன், மனதை "வெளி விஷயங்களில் போ" என்றாலும், மனம் பகவானை மறக்க முடியாமல் இருக்கும்.
    உலக விஷயங்களில் இவர்கள் ஈடுபட்டாலும், ஈடுபட முடியாத நிலையில் இருப்பார்கள்.
    இந்த நிலையிலேயே ஸ்ரீ சுகர் இருந்தார்.
    இந்த நிலையிலேயே கிருஷ்ண சைதன்யர் இருந்தார்.

    மனம் இஷ்ட தெய்வத்தின் ரூபத்திலேயே நின்று, உலகமே மறந்த நிலையில்,
    தெய்வத்தோடு ஒன்றி விட்டோம் என்றால், அதுவே "சமாதி" நிலை.


    இந்த சமாதி நிலையில் கிருஷ்ண சைதன்யர் பல முறை மூர்ச்சை ஆகி விடுவார் என்று பார்க்கிறோம்.
    பிருந்தாவனத்தில், கிருஷ்ண சைதன்யர் இந்த சமாதி நிலையை அடைந்த போது நடந்த சுவையான சம்பவத்தை அறிய இங்கே படிக்கவும்
    .
பக்தி யோகத்தின், இந்த 8 அங்கங்களை, பொதுவாக "அஷ்டாங்க யோகம்" என்றும் சொல்லுவார்கள்.

பரத ரிஷி (ராஜ ரிஷி) தன் முயற்சியால் பகவானை அடைய ஆசைப்பட்டார், மோக்ஷம் அடைய ஆசைப்பட்டார்.

பக்தி யோகத்தில் சொல்லப்பட்டுள்ள அஷ்டாங்க யோகத்தை எடுத்து கொண்டார்.
ராஜ்யத்தை விட்டு,
மனைவி மக்களையும் விட்டு,
ஆசைகளை, சொத்துக்களை எல்லாம் தியாகம் செய்து விட்டு,
காட்டுக்கு சென்றார்.
"யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை, தியானம்" வரை அதே ஜென்மாவில் ஸித்தி ஆகி விட்டது...

தன் முயற்சியால் மோக்ஷம் அடைய நினைக்கும் தீரர்களான இவர்களுக்கு சோதனைகளும் வரும்.
பரிக்ஷைக்கு தயார் என்று சொல்பவனை பகவான் அவன் ஆசைப்படியே பரிக்ஷிக்கிறார்.

தன் மனைவி மக்களையே விட்ட இவர், ஒரு குட்டி மானை அந்த காட்டில் வளர்க்க,


அந்த குட்டி மான் வளர்ந்ததும் அவரை விட்டு ஓடிவிட, அது என்ன ஆனதோ? என்ன ஆனதோ? என்று மானை நினைத்து புலம்பிக்கொண்டே உயிரை விட்டு விட்டார்.
அடுத்த பிறவியில் மானாகவே பிறந்து விட்டார்.
அதற்கு பிறகு ஜட பரதராக, 7 யோகங்களை கடந்து, 8வது நிலையான சமாதி நிலையிலேயே பிறந்தார். 
கடைசி வரை சமாதி நிலையை விட்டு கொஞ்சமும் வராமல், வாழ்ந்து, கடைசியில் மோக்ஷம் பெற்றார். 

இந்த பக்தி யோகத்தின் வழியாக மோக்ஷம் அடையலாம் என்று நமது ஹிந்து தர்மம் வழி காட்டுகிறது.





பக்தி யோக மார்க்கம் கடினமாக இருப்பதாக தோன்றினால், "சரணாகதி" என்ற மார்க்கமும் நமக்கு காட்டப்படுகிறது
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கடைசி மார்க்கமாக நமக்கு "சரணாகதி" மார்க்கத்தை சொல்கிறார்.
"சர்வ தர்மான் பரித்யஜ்ய 
மாம் ஏகம் சரணம் வ்ரஜ 
அஹம் த்வா சர்வ பாபேப்யோ 
மோக்ஷ இஷ்யாமி மா சுச:" 
என்று சொல்கிறார்.

பக்தி யோகம் செய்ய நமக்கு திறன் இல்லை என்றால், நமக்கு 'மோக்ஷம் கிடையாது என்று நினைக்க வேண்டாம்'.. 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் "உனக்கு விதித்த தர்மங்கள் அனைத்தையும் விடு, என்னை ஒருவனையே சரண் அடைந்து விடு. உன் அனைத்து பாவங்களையும் நான் பொசுக்கி, உனக்கு என் இஷ்டத்தால், உனக்கு மோக்ஷம் தந்து விடுகிறேன். கவலையே அடையாதே !  
என்று சரணாகதி மார்க்கத்தை கடைசியாக சொல்கிறார்.

பக்தி யோகம் செய்ய விருப்பமுள்ளவர்கள், அஷ்டாங்க யோகம் செய்து, மோக்ஷம் அடையலாம்.
நாராயணனே கதி என்று இருக்க விருப்பமுள்ளவர்கள், சரணாகதி செய்து, மோக்ஷம் அடையலாம்.

ஹிந்து தர்மம் மற்ற போலி மதங்களை போல, ஒரே வழி, ஒரே தத்துவம் என்று நம்மை கொடுமை படுத்துவதில்லை.

அவரவர் திறனுக்கு ஏற்ற வழியை காட்டி, அனைவருக்கும் தெய்வ அருள் கிடைக்க செய்து, அனைவரையும் மோக்ஷம் அடைய செய்கிறது.

வாழ்க ஹிந்து தர்மம்.
ஹிந்துவாக வாழ்வதே நமக்கு பெருமை.. 

மேற்சொன்ன விளக்கம் மகாத்மா - ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் (ஸ்ரீ ஸ்ரீ அண்ணா) உபன்யாசத்தில் இருந்து தொகுக்கப்பட்டது.
இந்தியா மற்றும் அதன் வரலாறு, மதிப்புகள், வேதக் கடவுள்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள, விரும்பும் அனைத்தையும் பற்றிய நுண்ணறிவைப் பெற srisrianna.comஇலிருந்து தெய்வீக சொற்பொழிவுகளைப் பதிவிறக்கவும்.


Monday 2 March 2020

பாசுரம் (அர்த்தம்) - ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை - திருமங்கையாழ்வார் திருக்கண்ணமங்கை பெருமாளுடன், திருநின்றவூர் பெருமாளை சேர்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருமங்கை ஆழ்வார், திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவத்சல பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது,
அதே பெயரில் திருநின்றவூரில் இருக்கும் பக்தஜீவன பெருமாளின் நினைவு வர, அவரையும் சேர்த்து இங்கு மங்களாசாசனம் செய்தார்.




இரண்டு திவ்ய தேசங்களை சேர்த்து கொண்டு மங்களாசாசனம் செய்கிறார்.

பாசுரம்:
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை!
இம்மையை மறுமைக்கு மருந்தினை!
ஆற்றலை அண்டத் அப்புறம் உய்த்திடும் ஐயனை!
கையில் ஆழி ஒன்று ஏந்திய கூற்றினை!
குரு மாமணிக் குன்றினை!
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை!
காற்றினை!
புனலை!
சென்று நாடிக் கண்ணமங்கையுள் 
கண்டு கொண்டேனே!
- (பெரிய திருமொழி)
என்று திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவத்சல பெருமாளை பார்க்கும் போது பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.




திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணமங்கையில் எழுந்தருளி இருக்கும் பக்தவத்சல பெருமாளை பார்க்கும் போது, திருநின்றவூரில் எழுந்தருளி இருக்கும் பக்தஜீவனன் என்ற பெயருடைய பெருமாள் ஆழ்வாருக்கு வலுவில் வந்து தரிசனம் தர,
'நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை'
என்று இந்த திவ்ய தேச பெருமாளை கொஞ்சி மங்களாசாசனம் செய்கிறார்.

பரமபதத்தில் (வைகுண்டம்) எம்பெருமான் எழுந்தருளி இருக்கிறார்.
க்ஷீராப்தியிலும் (பாற்கடல்) எம்பெருமான்  எழுந்தருளி இருக்கிறார்.
யாரும் எளிதில் போக முடியாத இமயமலையில் பதரிநாத் போன்ற திவ்ய தேசங்களிலும் எம்பெருமான் எழுந்தருளி இருக்கிறார்.
நம்மால் அத்தனை தூரம் வர முடியுமோ!! என்று கருணை கொண்டு, அதே எம்பெருமான், மஹாலக்ஷ்மி ஸ்திரமாக நிற்கும் திருநின்றவூருக்கு நமக்காக வந்து நிற்கிறாரே!!
என்று பகத்ஜீவனனாக இருக்கும் எம்பெருமானை கொஞ்சி மகிழ்கிறார், திருமங்கை ஆழ்வார்.
திருநின்றவூரில் நிற்கும் எம்பெருமான், 'ஒரு முத்து குவியல் போல' பேரழகுடன், குளிர்ந்த திருமேனியுடன் கண் எதிரே தரிசனம் தர, "குரு மாமணிக் குன்றினை" என்று கொஞ்சுகிறார்.




இங்கு "நித்தில தொத்தினை" என்று திருநின்றவூர் எம்பெருமானை என்று அழைக்கிறார்.
"நித்தில தொத்து" என்றால் "பவள கொத்து" என்று அர்த்தம்..
பவளத்திற்கு இயற்கையாகவே ஒரு குளிர்ச்சி உண்டு.
பவள மணியை, மாலையாக கழுத்தில் போட்டு கொண்டால், உடல் குளிர்ச்சியாகும்.

இங்கு, "பவள கொத்து" என்று திருநின்றவூர் எம்பெருமானையே சொல்லி கொஞ்சுகிறார் திருமங்கை ஆழ்வார்.

ஒரு முத்து குவியல் போல பேரழகுடன், குளிர்ந்த திருமேனியுடன் இருக்கும் திருநின்றவூர் பெருமாளை பார்த்ததுமே, 'பெருமாளையே ஒரு பவள மாலையாக ஆக்கிக்கொண்டு, தன் கழுத்தில் போட்டு கொண்டு விட வேண்டும்' என்று ஆசை உண்டாகி விட்டது ஆழ்வாருக்கு.

வெயிலில் வாடி, வியர்த்து போன ஒருவனுக்கு, தென்றல் காற்று வீசினால் எப்படி சுகமாக இருக்குமோ!  அது போல, உலகத்தில் ஏற்படும் பலவித சிரமங்களால் துக்கப்பட்டு துவண்டு போகும் நமக்கு, இவர் தரிசனமே குளிர்ந்த காற்று வீசுவது போல சுகத்தை தருகிறதே!! என்றதும் "காற்றினை" என்று கொஞ்சுகிறார்.

வெயிலில் வாடி, உடம்பில் தண்ணீர் வற்றி, உயிர் போய் விடும்!! இனி தாளாது!! என்று தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு, சுவையான நீர் கிடைத்தால் எத்தனை சுகம் அடைவானோ, அது போல, தாபத்தோடு வரும் பக்தனுக்கு, தாபத்தை போக்கும் புனல் (தண்ணீர்) போல திருநின்றவூர் எம்பெருமான் தரிசனம் தருகிறாரே!! என்றதும் "புனலை" என்று கொஞ்சுகிறார்.

திருக்கண்ணமங்கையில் பக்தவத்சல பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது,
திருநின்றவூர் பக்தஜீவனன்  (பக்தவத்சல என்றும் சொல்கிறார்கள்) என்ற எம்பெருமான், வலிய இடையில் புகுந்து கொண்டு, திருமங்கை ஆழ்வாரிடம் தனக்கும் ஒரு மங்களாசாசனம் வாங்கி கொண்டு விட்டார்.


Saturday 22 February 2020

பாசுரம் (அர்த்தம்) - அலங்கெழு தடக்கை ஆயன் - திருமங்கையாழ்வார் திருபுட்குழி, திருநீர்மலை, திருவிடந்தை பெருமாளை சேர்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற் கழியுமால் என் உள்ளம் என்னும்,
புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும் !!
போதுமோ நீர்மலைக் கென்னும் !!
குலங்கெழு கொல்லி கோமள வல்லி
கொடியிடை நெடுமழைக் கண்ணி !
இலங்கெழில் தோளிக்
என் நினைந்து இருந்தாய்?
இடவெந்தை எந்தை பிரானே.
-- பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார்)




இங்கு ஒரு திவ்ய தேசத்தோடு இன்னொரு திவ்ய தேசத்தை சேர்த்து கொண்டு பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

திருமங்கையாழ்வாரே  பரகால நாயகி என்ற பெண்ணாகி, தன் நாயகனான பெருமாளிடம் தீராத காதல் கொண்டு, தன் நாயகன் உகந்து இருக்கும் திவ்ய தேசங்களுக்கு சென்று தரிசிக்கலாமா என்று தன் தாயிடமே கேட்க துணிகிறாளாம்.
பெருமாளிடம் ஏற்பட்ட தீராத காதலால், இந்த பரகால நாயகிக்கு,
அவளுடைய காதலன் இருக்கும் இடம் கூட இனிக்கிறது.
அவளுடைய காதலன் இருக்கும் ஊர் கூட இனிக்கிறது.

ஆழ்வாருக்கு ஏற்பட்ட இதே அனுபவத்தை ஆண்டாளும் சொல்கிறாள் என்று பார்க்கிறோம்.

ஆண்டாள், பெருமாளிடம் காதல் கொண்டு, 'பெருமாளின் கோவில் வாசல் கதவில் கூட தனக்கு நேசம் உண்டு' என்று சொல்கிறாள்.
ஆண்டாள், திருப்பாவையில் "நிலைக் கதவம்" (கதவு) என்று வெறுமனே சொல்லாமல்,
"நேய நிலைக் கதவம்" (நேசமுள்ள கதவு) என்று குறிப்பிட்டு சொல்கிறாள் என்று கவனிக்கிறோம்.

பெருமாளின் சம்பந்தம், ஒரு ஜட பொருளின் மேல் ஏற்பட்டால் கூட, அதில் கூட நேசம் உண்டாகி விடுமாம் உண்மையான வைஷ்ணவனுக்கு.

"கோவிலை பூட்டி, பெருமாள் தரிசனம் இப்போது இல்லை" என்று சொன்னாலும்,
ஸ்ரீ ரங்கத்தில் உள்ள பக்தர்கள் "சரி.. கோவில் நடை திறந்த பிறகு பெருமாளை பார்த்து கொள்ளலாம்" என்று நகர மாட்டார்களாம்.
மாறாக,
பெருமாளுக்கு சம்பந்தப்பட்ட அந்த பூட்டிய கதவையே ஆசையோடு பார்த்துக்கொண்டு, அதன் அருகிலேயே உட்கார்ந்து இருப்பார்களாம் உண்மையான பக்தர்கள்.
இப்படிப்பட்ட வைஷ்ணவர்களுக்கு, பெருமாள் சம்பந்தப்பட்ட கதவு கூட "நேய நிலைக் கதவாக" தோன்றுமாம்.

பெருமாளிடம் பக்தி கொண்டவர்களுக்கு,
கோவில் கதவை பார்க்கும் போதே, இவர்களுக்கு ஒரு நேசம் உண்டாகுமாம்..
கோவில் கதவை பார்க்கும் போதே, இவர்களுக்கு பெருமாளின் நினைவே ஏற்படுத்துமாம்.

இப்படி காதல் கொண்டு நிற்கும் இந்த பரகால நாயகி (திருமங்கையாழ்வார்),
  • இப்பொழுது தன் நாயகன் எங்கு இருப்பார்?
  • திருபுட்குழியில் இருக்கிறாரோ?
  • அல்லது,
  • திருநீர்மலைக்கு சென்று இருக்கிறாரோ?
  • அங்கு சென்று கொஞ்சம் அவரை பார்க்கலாமா?
என்று தன் தாயிடமே துணிந்து வெட்கத்தை விட்டு கேட்கிறாளாம்.







இங்கு திருபுட்குழியை பற்றி சொல்லும் போது,
"புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும்" என்று வர்ணிக்கிறார்.
இன்று கூட, திருபுட்குழி என்ற திவ்ய தேசம் வயல் சூழ்ந்து, தண்ணீர் நிறைந்த சோலையாக தான் இன்று வரை உள்ளது.

"புலங்கெழு பொருநீர்" என்ற சொல்லுக்கு 2 அர்த்தங்களை நமக்கு காட்டுகிறார் பெரியவாச்சான் பிள்ளை.

முதல் அர்த்தம்:
  • புலம் என்றால் வயல்
  • வயல்கள் நிறைந்து தண்ணீர் சூழ்ந்த, பசுஞ்சோலையாக இருக்கிறது "திருப்புட்குழி" என்று ஒரு அர்த்தம்.
விசேஷ அர்த்தம்:
  • புலம் என்றால் புலன் என்றும் அர்த்தம் உண்டு.
  • திருப்புட்குழியில் உள்ள விஜயராகவ பெருமாளை பார்த்தாலே, நமது 5 புலன்களும் புஷ்டியாகி ஆரோக்கியத்தை அள்ளி தரும் என்று இன்னொரு அர்த்தம்.
இந்த பரகால நாயகி, பெருமாளிடம் தனக்கு ஏற்பட்ட அடக்கமுடியாத காதலால், தன் அருகில் அவள் தாய் இருப்பதை அறிந்தும், பயப்படாமல் "கலப்பை போன்ற உறுதியான கைகளுடைய, யாதவ குலத்தில் உதித்த  என் நாயகன், தன்னுடைய சிவந்த உதட்டில் இலையினால் செய்யப்பட்ட சிறு ஊதுகுழல் கொண்டு நிற்க, 
இந்த காட்சி என் மனதை விட்டு அகலாமல், என் நெஞ்சம் அவர் நினைவாகவே இருக்கிறது. (அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற் கழியுமால் என் உள்ளம்).
 என் நாயகனை திருப்புட்குழி சென்று நான் காணலாமா? (புலங்கெழு பொருநீர்ப் புட்குழி)
திருநீர்மலை சென்று காணலாமா? (போதுமோ நீர்மலை)"
என்று தைரியமாக வெட்கத்தை விட்டு கேட்கிறாளாம்.

கூச்சத்தை விட்டு இந்த பரகால நாயகி கேட்கிறாள் என்பதால் "பாடும்" என்ற பதத்தை பயன்படுத்துகிறார் ஆழ்வார். - "புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும்"

உலகம் என்ன நினைக்குமோ! என்ற கூச்சப்படாமல்,
பக்தன் பெருமாளிடம் தைரியமாக பக்தி செய்கிறான் என்பதையே இங்கு ஆழ்வார், தன்னை பரகால நாயகியாகவும், பெருமாளை நாயகனாகவும் ஆக்கிக்கொண்டு பாடுகிறார்.
ஸ்ரீ கிருஷ்ண அவதார சமயத்தில், ருக்மிணி தேவி 'சிசுபாலனுக்கு தன் அண்ணன் ருக்மி, தன்னை மணம் செய்து கொடுக்க முயற்சிக்கிறான்' என்றதும், பெரும் தாபத்தை அடைந்த ருக்மிணி, வெட்கத்தை விட்டு, துணிந்து ஸ்ரீ கிருஷ்ணருக்கு "காதல் கடிதம்" கொடுத்து அனுப்பி விட்டாள் என்று பார்க்கிறோம்.
ஸ்ரீ கிருஷ்ணர் "என்ன இப்படி தைரியமாக எழுதி இருக்கிறாளே ருக்மிணி?" என்று தன்னை தவறாக நினைத்து விடுவாரோ என்று, அவளே "மணந்தால் உங்களை தான் மணப்பேன் என்று எனக்கு ஏற்பட்ட தவிப்பால் தான் இப்படி துணிந்து எழுதி விட்டேனே தவிர, ருக்மிணி இப்படி வேறு ஒரு புருஷனுக்கு வெட்கத்தை விட்டு கடிதம் எழுதுவாளோ என்று கூட நினைத்து விட வேண்டாம்"
என்று தன் தாபத்தின் காரணத்தை சொல்கிறாள்.

பரகால நாயகி, தன் தாயிடத்தில் வெட்கத்தை விட்டு,
"தன் நாயகனை பார்க்க, திருப்புட்குழி போகட்டுமா? 
திருநீர்மலை போகட்டுமா?" என்று கேட்க,

இப்படி வெட்கத்தை விட்டு, தாயான தன்னிடமே "தன் காதலனிடம் செல்லலாமா?" என்று கேட்க,
தன் மகள் பரகால நாயகி (திருமங்கை ஆழ்வார்) படும் தாபத்தை  கண்டு, அவள் தாயே, தன் மகளுக்காக திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமானிடம் சென்று முறையிடுகிறாள்.

திருமங்கைஆழ்வார், தன்னையே தாயாகவும் மகளாகவும் பாவித்துக் கொண்டு,
மகள் படும் பாட்டைத் தாய் முறையிடுவது போல எம்பெருமானிடம்
முறையிடுகிறார்
"எம்பெருமானே! 
என் மகள் உங்கள் மீது காதல் பித்துப் பிடித்து அலைகிறாள். 
அழகு பொருந்திய தடக்கைகள் (தோள்) கொண்ட ஆயனாக வந்த கண்ணபிரானின் ஆம்பல் நிற வாயைச் சுவைக்கவே என்னுள்ளம் அழிகிறதென்கிறாள். 
திவ்ய தேசத்து எம்பெருமானின் பேரழகையெல்லாம் சொல்லிச் சொல்லி மாய்கிறாள். 
பல திவ்ய தேசத்து எம்பெருமான்களை நினைத்துப் பார்க்கிறாள். 
திடீரென அவளுக்கு புட்குழியெம்பெருமானின் நினைவு வருகிறது. 
திருப்புட்குழி எம்பெருமானை வாயாரப் பாடுகிறாள்! 
அக்கணமே, 
திருநீர் மலை எம்பெருமானின் நினைவு வருகிறது. 
திருநீர்மலைக்குப் போக மாட்டேனோ? என்று பொருமுகிறாள். 

கொல்லிமலைப்பாவை போன்றல்லவா இவள் இருக்கிறாள். 
கோமள வதனமும், கொடியிடையும், மழைமேகம்
போன்ற கூந்தலில் அழகிய மலர்களைச் சூடி, எழில்கொஞ்சும் தோள்களைக்
கொண்டு கொல்லியம் பாவை போன்ற பேரழகுபொருந்திய இவள் பொருட்டு,
நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?"என்று தன் மகள் பொருட்டு தாயொருத்தி கேட்பது போல் திருமங்கை ஆழ்வார்  கேட்டு மங்களாசாசனம் செய்கிறார்.




நாராயணன் மட்டுமே ஆண். 
அவர் முன் நாம் அனைவருமே பெண் தான்.

ஒரு பெண்ணுக்கு எப்படி பிறந்து வீடு, புகுந்த வீடு உண்டோ,
அது போல,
நமக்கு புகுந்த வீடு, வைகுண்டமே!
நமது நாதன் நாராயணனே! 

இங்கு, பரகால நாயகி என்ற பெண்ணாக ஆகி, ஆழ்வார், "நாராயணனை அடைவதே நமக்கு லட்சியமாக இருக்க்க வேண்டும்" என்று காட்டுகிறார்.

நமது பக்தியின் நிலையை கண்டு, தாயை போல ஒரு ஆத்ம குரு வந்து, நமக்காக பெருமாளிடம் பிரார்த்தித்து பெருமாளிடம் நம்மை சேர்கிறார் என்று காட்டுகிறார்.

மூன்று பக்தி நிலைகள் என்ன? என்று தெரிந்து கொள்ள...





Friday 14 February 2020

பாசுரம் (அர்த்தம்) - அத்தியூரான் புள்ளையூர்வான் - பூதத்தாழ்வார் காஞ்சி அத்திவரதரை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அத்தியூரான்! 
புள்ளையூர்வான்!
அணிமணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான்!
முத்தீ மறையாவான்!
மாகடல் நஞ்சுண்டான்றனக்கும் இறையாவான்!
எங்கள் பிரான்!
-- இரண்டாம் திருவந்தாதி (பூதத்தாழ்வார்)
காஞ்சி அத்திவரதரை, 'பூதத்தாழ்வார் மங்களாசாசனம்' செய்து பாடுகிறார்.




கஜேந்திரன் (ஹஸ்தி) என்ற யானையின் சரீரமே மலையாகி, அந்த சிறு மலையில் (கிரி) வீற்று இருக்கும், அத்திவரத பெருமாளே!  - (அத்தியூரான்)

கருட வாகனத்தில் வருபவரே! - (புள்ளையூர்வான்)

தொடுத்து வைத்தது போல மாணிக்கங்கள் ஆயிரம் தலைகளிலும் ஜொலிக்க, படமெடுக்கும் ஆதிசேஷன் மேல், துயில் கொண்டிருக்கும் பெருமாளே! - (அணிமணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான்)
என்று பெருமாளை கூப்பிடுகிறார் பூதத்தாழ்வார்.

அடுத்து "முத்தீ மறை ஆவான்" என்று கூப்பிடுகிறார் ஆழ்வார்.
'முத்தீ' என்ற பதத்துக்கு, 2 அர்த்தங்களை சொல்கிறார், சேங்கனூரில் அவதரித்த  ஆச்சாரியார் பெரியவாச்சான் பிள்ளை.
முதல் அர்த்தம் : மூன்று தீ (முத்தீ)
இரண்டாவது அர்த்தம் : முக்தி/மோக்ஷம் (முத்தீ)
வேதத்தை, தமிழில் 'மறை' என்று சொல்கிறார்கள்.
காரணம்,
வாக்குக்கு எட்டாத பரப்ரம்மத்தை பற்றி நேரிடையாக பேச, வேதமே தயங்குவதால், பரப்ரம்மமான நாராயணனை மறைத்து மறைத்து பேசுகிறது.
இப்படி மறைத்து பேசுவதாலேயே, தமிழர்கள், வேதத்தை அழகாக "மறை நூல்" என்று சொல்கிறார்கள்.




வேதத்தை பற்றிய ஆழ்ந்த அறிவு உடையவர்களாக தமிழர்கள் இருந்ததால் தானே, வேதத்துக்கு ஈடான தமிழ் சொல்லை பயன்படுத்தினர் என்று பார்க்கிறோம்.

வேதம் வெளியோட்டமாக 'இந்திரன், வருணன், அக்னி' என்று சொல்லி ஸ்துதி செய்கிறது.
அஞானி, வேதம் பல தெய்வங்களை சொல்கிறது என்று நினைக்கிறான்.
இந்திரன் என்ற தேவனை நினைக்கிறான்.
அக்னி என்ற தேவனை நினைக்கிறான்.

வெளிப்படையாக வேறு அர்த்தத்தை காட்டும் வேதம்,
வாக்கும் எட்டாத பரப்ரம்மமான நாராயணனை நேரிடையாக ஸ்துதி செய்ய பயப்படுகிறது.
அதே சமயம்,
ஒரே பரமாத்மாவை தான் இப்படி பல வித பெயர்களை கொண்டு அழைக்கிறேன் என்றும் வேதமே சொல்கிறது.

'இந்திராய ஸ்வாஹா' என்று சொல்லும் போது, உண்மையில் வேதம், இந்திர பதவியில் உள்ள தேவனை குறிப்பிடவில்லை.
மாறாக,
அந்த விராட் புருஷனான பரமாத்மாவின் கைகளே 'இந்திரன்' என்று பூஜிக்கிறது.
'சோமாய ஸ்வாஹா' என்று சொல்லும் போது, பெருமாளின் இதயத்தை பூஜிக்கிறது.

இப்படி வேத மந்திரங்கள் அனைத்துமே, நாராயணனுக்கு ஒரு அங்க பூஜையாக தான் இருக்கிறது என்ற ரகசியத்தை ஞானிகளே அறிந்து கொள்கிறார்கள்.

ஆதலால் தான்,
வேதம், அஞானிக்கு கர்ம காண்டமாகவும், 
வேதம், ஞானிக்கு ஞான காண்டமாகவும் தெரிகிறது.

வெளியோட்டமாக பார்த்தால்,
வேதம் 'யாகம் செய்! யோகம் செய்!' என்று கர்ம காண்டம் போல தெரியும்.
அதே வேதம்,
ஞானிகளுக்கு பிரம்மமாகிய பரமாத்மாவை அடைய வழிகாட்டுவதாக தோன்றுகிறது.
"மூத்தீ மறையாவான்" என்ற சொல்லுக்கு முதல் அர்த்தம்:

  • மூன்று அக்னி (முத்தீ) (லௌகீகாக்னி, ஒளபாசனாக்னி, ஸ்ரௌதாக்னி) வளர்த்து, கர்ம காண்டமாக யாகம் செய்து, வேதங்களால் யஞ்ய நாராயணனனாக புகழப்படும் பெருமாளே! என்பது சாமானிய அர்த்தம்.





"மூத்தீ மறையாவான்" என்ற சொல்லுக்கு இன்னொரு அர்த்தம்:

  • வேதமே (மறை), உண்மையில் நாராயணனுக்கு செய்யும் அங்க பூஜை தான். சகல தேவதைகளும் அவர் அங்கங்களே! இந்த ஞானத்தோடு வேதத்தை உச்சரித்தாலேயே, வேதத்தை கேட்டாலேயே, அதன் பலனாக நமக்கு மோக்ஷத்தை (முக்தி) கொடுக்கும் பெருமாளே!! என்பது மற்றொரு அர்த்தம்.


ப்ரம்ம தேவன் போன்ற ஞானிகளும், வேத மந்திரங்களை நாராயணின் அங்க பூஜையாக செய்து, மோக்ஷம் அடைகின்றனர் - (மூத்தீ மறையாவான்).
உலக ஆசைகள் உள்ள சாமானிய ஜனங்களும், வேத மந்திரங்கள் சொல்லி மூன்று காலங்களில் யாக தீ வளர்த்து உம்மையே பூஜிக்கின்றனர் - (மூத்தீ மறையாவான்)
என்று பூதத்தாழ்வார், அத்தி வரதரை மங்களாசாஸனம் செய்கிறார்.  
விஷ்ணுவின் பரத்துவத்தை அறிந்தவரும், 
எப்பொழுதும் தாரக மந்திரம் (ராம) ஜபிப்பவரும், 
ஞான ஸ்வரூபனும்,
பாற்கடலிலிருந்து கிடைத்த நஞ்சினை உண்ட சிவபெருமானுக்கு, அந்தர்யாமியாக இருக்கும் எம்பெருமான், 
அத்திகிரியில் எழந்தருளியிருக்கிறாரே!! 
(மாகடல் நஞ்சுண்டான்றனக்கும் இறையாவான் எங்கள் பிரான்)
என்று, காஞ்சி வரதராஜ பெருமாளை, மங்களாசாசனம் செய்கிறார் பூதத்தாழ்வார்.


பாசுரம் (அர்த்தம்) - இசைந்த அரவமும், வெற்பும், கடலும் - பேயாழ்வார் சொன்ன வண்ணம் செய்த பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இசைந்த அரவமும், வெற்பும், கடலும்
பசைந்தங்கு அமுது படுப்ப!
அசைந்து கடைந்த வருத்தமோ?
கச்சி வெஃ காவில் கிடந்திருந்து
நின்றதுவும் அங்கு?
--  மூன்றாம் திருவந்தாதி (பேயாழ்வார்) 
'தன் பர்த்தாவான "ப்ரம்ம தேவனின்" யாகத்தை அழிக்க, 
நதி ரூபமாக அதி வேகத்துடன் வந்த வேகவதியை (சரஸ்வதி தேவி) தடுப்பதற்காக, 
பெருமாளே ஒரு பெரிய அணை போல, காஞ்சியில் உள்ள திருவெஃ காவில், படுத்துக்கொண்டார்' 
என்பது புராண காலத்தில் நடந்த சரித்திரம்.







இந்த பெருமாளுக்கு தான் "யதோத்தகாரி" என்றும் "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" என்று பெயர்.
காஞ்சியில் உள்ள இந்த திவ்ய தேசத்துக்கு "திருவெஃ கா" என்று பெயர்.
'பெருமாள் இங்கு அணை போல படுத்துக்கொண்டது, வேகவதியை தடுப்பதற்காக தான்' என்ற போதிலும்,
'பெருமாள் படுத்துக்கொண்டதற்கான காரணம் வேறோ?'
என்று கேட்கிறார் பேயாழ்வார்.
பெருமாளை பார்த்து கேட்கிறார்,
"முன்பு ஒரு சமயம், 
பாற்கடலை கடைந்து தேவர்கள் அம்ருதம் எடுத்து கொள்ள, 
பாற்கடலை கடைவதற்கு, 
தகுதியான (இசைந்த) மந்திர மலையையே (வெற்பும்) மத்தாக ஆக்கி, 
தகுதியான (இசைந்த) வாசுகி என்ற பாம்பையே (அரவமும்) கயிறாக்கி, 
நீங்களே க்ஷீராப்தியில் கடைந்தீர்களே (பசைந்து)

தேவர்களுக்காக நீங்களே அம்ருதம் கடைந்தீர்களே ! 
விஷம் வந்ததும், தேவர்களும், அசுரர்களும் பாதியில் விட்டு விட்டு ஓடிய பிறகும், அந்த வாசுகியின்  தலையையும், வாலையும் பற்றி கொண்டு, நீரே கடைந்தீரே ! 

ஆயிரம் தலைகளுடன் நீரே அந்த மலையின் கொடு முடியை பிடித்துக்கொண்டு இருந்தீரே ! 

முதுகை கொடுத்து மலையை நீரே கிளப்பி கொண்டு, தாங்கி கொண்டு இருந்தீரே !
அவ்வளவும் நீரே செய்து விட்டு, 
கடைசியில் கிடைத்த அம்ருதத்தை ((அங்கு அமுது படுப்ப) அப்படியே அவர்களுக்கு கொடுத்து விட்டு, 
அங்கு க்ஷீராப்தியில் ஓய்வில்லாமல் நின்று வேலை செய்ததால் (நின்றதுவும் அங்கு) ஏற்பட்ட களைப்பினால், 
காஞ்சியில் உள்ள இந்த திரு வெஃகாவில் வந்து இளைப்பாறுகிறீரோ? (அசைந்து கடைந்த வருத்தமோ)"
என்று பேயாழ்வார், திருவெஃகாவில் உள்ள யதோத்தகாரி பெருமாளை பார்த்து கேட்பது போல, நமக்கு பாசுரத்தை தருகிறார்.
திருவெஃகாவில் உள்ள யதோத்தகாரி என்ற சொன்ன வண்ணம் செய்த பெருமாள், காஞ்சி வரதராஜனுக்கும் (அத்தி வரதர்) முன்பே தோன்றிய அர்ச்சா அவதாரம். 

அருமையான பாசுரம்.
திவ்ய தேசத்தில் நாம் பாடவேண்டிய பாசுரம்.