Followers

Search Here...

Showing posts with label அலகனந்தா. Show all posts
Showing posts with label அலகனந்தா. Show all posts

Wednesday 27 December 2017

கங்கை நதி சரித்திரம் தெரிந்து கொள்வோமே....பூமிக்கு பாய்ந்து வந்த விஷ்ணு பாதத்தில் இருந்து உண்டான கங்கை

பூலோகம் ஆரம்பித்து சத்ய லோகமான ப்ரம்ம லோகம் வரை, தன் தவத்தால், பலத்தால் கைப்பற்றி இருந்த பலி (bali) சக்ரவர்த்தியிடம் மூன்று அடி தானமாக கேட்டு,
* ஒரு அடி பூலோகம் ஆரம்பித்து,
* மற்றொரு அடியை ப்ரம்ம லோகம் வரை அளந்து,
* இன்னும் ஒரு அடி எங்கே? என்றார் த்ரிவிக்ரம பெருமாளாக நின்ற நாராயணன்.




மூன்றாம் அடியாக தன்னையே சமர்ப்பணம் செய்தார் பலி சக்ரவர்த்தி.

இவரே அடுத்த இந்திர ராஜன் என்று நியமிக்கப்பட்டு, இன்று வரை பாதாள லோகத்தில் அரசாட்சி புரிகிறார்.
இப்படி ப்ரம்ம லோகம் வரை பெருமாள் திருவடி செல்ல, ப்ரம்ம தேவன், "விஷ்ணு பதி" என்ற பெயருடன் அங்கு ஓடிக்கொண்டிருக்கும் ஜலத்தால், அவர் திருவடியை அபிஷேகம் செய்தார்.

நாராயணன் கால் நகம் பட்ட அபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர், ப்ரம்ம லோகத்தின் கீழ் உள்ள துருவ மண்டலத்தில் விழுந்தது.
நாராயணன் பாதம் பட்ட புனித தீர்த்தம் என்பதை அறிந்து, பக்தியுடன் நீராடினார் துருவன்.

துருவ மண்டலத்தில் இருந்து ஜன மற்றும் தப லோகங்களை வந்து அடைந்தாள், 'விஷ்ணு பதி" என்ற நதி தேவதை.
அங்கு சப்த ரிஷிகளும், முனிவர்களும் ஸ்நானம் செய்தனர்.

பின் அங்கிருந்து சொர்க்க லோகம் வந்து அடைந்தாள் விஷ்ணுபதி. அங்கு உள்ள தேவர்களும், அப்சரஸ் போன்றவர்களும் நாராயண பாதம் பட்ட தீர்த்தம் என்று பக்தியுடன் கொண்டாடினர். ஸ்நானம் செய்தனர். தேவலோகத்தில் "மந்தாகினி" என்ற பெயர் பெற்றாள்.

இப்படி ப்ரம்ம லோகத்தில் இருந்து கீழ் இறங்கி வந்த விஷ்ணுபதி, பூமிக்கு வர மறுத்து, சொர்க்க லோகத்திலேயே தங்கி விட்டாள்.

சத்ய யுகத்தில், ஸ்ரீ ராமர் பிறந்த குலத்தில், ராமருக்கும் முன், ஸகர சக்கரவர்த்தி என்ற அரசன் ஆண்டு வந்தார்.

இவருக்கு 60,000 பிள்ளைகள். மூத்த பிள்ளையின் பெயர் "அஸமஞ்சன்".

இவன் யாரிடமும் சமமாக பழகாமல் இருந்ததால், ஆட்சி செய்ய தகுதி இல்லாதவனாக இருந்தான். இதனால் நாடு கடத்தப்பட்டான்.

"அம்சுமான்" என்ற ஒரு மகன் இவனுக்கு உண்டு. 'அம்சுமான்' தன் தாத்தா ஸகர சக்கரவர்த்தியுடன் இருந்து வந்தார்.

சக்கரவர்த்தியாக இருப்பதால், ராஜா "அஸ்வமேத யாகம்" நடத்த திட்டமிட்டார்.

இந்திரன் தன் பதவி் போய் விடுமோ என்று எண்ணி, அந்த யாகத்திற்காக அனைத்து நாட்டுக்கும் செல்ல தயாராக இருந்த அஸ்வமேத குதிரையை கைப்பற்றி, பாதாள லோகத்திற்கு கொண்டு சென்று, அங்கு இருந்த கபில மகரிஷியின் ஆஸ்ரமத்தில் கட்டி விட்டு சென்று விட்டான்.

சகர சக்கரவர்த்தி, அஸமஞ்சன் தவிர்த்து, மற்ற 60000 மகன்களையும், "அந்த குதிரையை மீட்டு கொண்டு வாருங்கள்" என்று சொல்ல, தேடி தேடி, இறுதியில் பாதாள லோகத்தில் கபில ஆஸ்ரமத்தில் இருப்பதை கண்டு, கபில மகரிஷி தான் திருடி கொண்டு வந்து விட்டார் என்று தவறாக முடிவு செய்தனர்.
அவரை தாக்க சண்டைக்கு தயாரான போது, தியானத்தில் இருந்த கபில மகரிஷி கண் திறந்து பார்க்க, அவரின் தவ வலிமையினால் அவர் கண்ணிலிருந்து வந்த தீ ஜ்வாலையில், அந்த இடத்திலேயே 60000 பேரும் பொசுங்கி போயினர்.
சகர சக்கரவர்த்தி அனுப்பிய பிள்ளைகள் வராமல் போக, தன் பேரனை (அம்சுமான்) அனுப்பி வைத்தார்.




அம்சுமான் இறுதியில் கபில மகரிஷியின் ஆஸ்ரமம் வந்து குதிரை இருப்பதை கவனிக்க, 60000 பேரும் (சித்தப்பா முறை) சாம்பலாகி கிடைப்பதை பார்த்து, அவசரப்பட்டுவிடாமல், நிதானமாக, பணிவுடன் கபில மகரிஷியின் முன் வந்து, நடந்த விவரத்தை கூறுமாறு வேண்டினார்.

கபில மகரிஷி, "இந்திரன் நீங்கள் செய்யும் யாகத்தை பங்கம் செய்வதற்காக, குதிரையை இங்கு வந்து கட்டி விட்டு சென்று விட்டான். இதை அறியாமல், என்ன நடந்தது என்று விசாரிக்காமல், என்னிடம் இவர்கள் செய்த அபசாரமே இவர்களை இந்த நிலைக்கு தள்ளி விட்டது" என்றார்.
துர்மரணம் அடைந்த தன் சிறிய தகப்பனார்களுக்கு நல்ல கதி கிடைக்க வேண்டும் என்று எண்ணிய அம்சுமான், கபிலரிடமே கேட்க, அவர் "இந்திரன் ஆளும் சொர்க்க லோகத்தில் இருக்கும் விஷ்ணுபதி என்ற நதியின் தீர்த்தம் இவர்களின் சாம்பல் மேல் பட்டால், இவர்கள் அனைவரும் நல்ல கதியை அடைவர்" என்று சமாதானம் செய்தார்.

விடைபெற்ற அம்சுமான், குதிரையுடன் திரும்பி வந்து, நடந்ததை சகர சக்கரவர்த்தியிடம் சொன்னான்.

சகர சக்கரவர்த்தி "அஸ்வமேத யாகம்" நடத்தி முடித்து, பின்பு நாட்டை அம்சுமானிடம் ஒப்படைத்து, சொர்க்கம் சென்றார்.

அம்சுமான் நாட்டை கவனிப்பதே பெரிய காரியமாக இருப்பதால், அவர் காலம் வரை ஆட்சி செய்து விட்டு மறைந்தார்.
"மந்தாகினி" என்ற நதியை சொர்க்க லோகத்தில் இருந்து பூமிக்கு கொண்டு வர வைப்பது என்பது சாதாரண காரியமும் இல்லை. மேலும் பின் வந்த அரசர்களுக்கு நாட்டை ஆள்வதில் உள்ள சிரமங்கள், பொறுப்புகள் அதிகமாகி போக, இதை மறந்தே விட்டனர்.

இந்த வம்சத்தில் வந்த "பகீரதன்" என்ற அரசன், தன் மூதாதையர்கள் துர்மரணம் அடைந்து, இன்னும் விமோசனம் அடையாமல் இருப்பதை அறிந்து, தன் அரசாட்சியை தன் மந்திரிகளிடம் கொடுத்து, கடும் தவம் மேற்கொண்டான்.

மந்தாகினி என்ற நதியின் தேவதை ப்ரத்யக்ஷ்ம் ஆனாள்.

பகீரதன் நோக்கம் புரிந்தாலும், சொர்க்கம் வரை வந்த இவள், பூமியை தொடுவதற்கு அருவெறுப்பு கொண்டாள்.
மேலும் பகீரதனை பார்த்து "நான் பவன பாவனமாக, சுத்தமாக இருந்து வருகிறேன். என்னை போய் இந்த பூமிக்கு வரச் சொல்லி கூப்பிடுகிறாயே !! நான் உனக்காக வருகிறேன் என்று சம்மதித்தால், இதன் காரணமாக மகா பாவங்கள் செய்தவர்கள் எல்லாம் வந்து ஸ்நானம் செய்வார்களே !!" என்றாள்.

உடனே பகீரதன் "தேவி, பாவம் செய்தவர்கள் வந்து ஸ்நானம் செய்வார்கள் என்று நினைத்து கூசுகிறாயே, அதே ஸமயத்தில் ஹரி நாமம் சொல்லும் ஹரி தாசர்கள், பாகவதர்கள் வந்தும் ஸ்நானம் செய்வார்களே. இந்த பாக்கியத்தை நீ அனுபவிக்க வேண்டாமா ?




பாவிகள் வந்து ஸ்நானம் செய்யும் போது, அவர்கள் செய்த பாவம் உன்னை சேர்ந்து விடும். இவர்கள் கொடுத்த பாவத்தை எங்கு தொலைப்பேன் என்று நினைத்து தான் நீ பூமிக்கு வர தயங்குகிறாய் என்று அறிவேன்.

ஹரி தாசர்கள் வந்து ஸ்நானம் செய்யும் போதே உன்னிடம் சேர்ந்த பாவங்களை ஓடி விடும்.

ஹரி தாசர்களுக்கு என்ன அப்படி விசேஷம்?

உலக வாழ்வில் நாட்டம் உள்ள லௌகீகர்கள், உன்னிடம் வந்து ஸ்நானம் செய்யும் போது, 'எத்தனை குளிர்ச்சியாக இருக்கிறது, ஆஹா அருமை' என்று சொல்லிக்கொண்டு, உலக விஷயமாக பேசிக்கொண்டு ஸ்நானம் செய்வார்கள். அவர்களின் பாவங்களையெல்லாம் உன்னிடம் கரைத்து விடுவார்கள்.

புண்ணியம் செய்தவர்களோ, கரையில் அமர்ந்து சங்கல்பம் செய்து, தன் பாவங்கள் அனைத்தையும் சொல்லி உன்னிடமே கரைத்து விடுவர்.

இப்படி லௌகீகர்கள், புண்ணியம் செய்தவர்களின் மொத்த பாவத்தையும் சுமந்து இருக்கும் உனக்கு, எதையும் எதிர்பார்க்காமல், ஹரி தாசர்கள் ஸ்நானம் செய்ய வரும் போது, விஷ்ணுபதியே !! அவர்கள் வாய் நிறைய "ஹரி, ஹரி, ஹரி" என்று சொல்லி ஸ்நானம் செய்வார்கள். அந்த நாமமே உன்னிடம் சேர்ந்த அனைத்து பாவங்களும் விலகச் செய்து விடும்.

ஆகையால், அப்படிப்பட்ட பாகவதர்கள் சம்பந்தம் உனக்கு கிடைக்க இஷ்டம் இருந்தால், என்னோடு வா" என்றார்.
இதை கேட்ட மந்தாகினி தேவிக்கு பரமானந்தம் உண்டாகி பாகவதர்களை காணும் ஆசையில் சொர்க்கத்தில் இருந்து உற்சாகம் பொங்க பூமிக்கு வர ஆசை கொண்டாள்.
பகீரதனை பார்த்து "நான் இங்கிருந்து வரும் வேகத்தை பூமியில் யார் தாங்க முடியும்?" என்று கேட்டாள்.

பகீரதன், "அதற்கு நீயே தான் வழி சொல்ல முடியும்" என்றார்.

தேவி, "நான் வரும் வேகத்தை சிவபெருமான் மட்டுமே தரிக்க முடியும்" என்று சொல்ல, மீண்டும் பகீரதன், சிவனை நோக்கி பல வருடங்கள் தவம் செய்து, அவரின் தரிசனம் கண்டு, இந்த காரியத்துக்கு உதவி கேட்டார்.

மகிழ்ச்சியுடன் சிவபெருமான் சம்மதித்தார்.
ஹரி தாசர்களும், பாகவதர்களும் ஸ்நானம் செய்வார்கள் என்று சொன்ன காரணத்தினால் பூமிக்கு வர சம்மதித்த மந்தாகினிக்கு, முதல் பாகவதராக சிவபெருமானே முதலில் வந்து தன் தலையில் ஹரி பாத தீர்த்தம் படட்டும் என்று முன் வந்தார்.

"வைஷ்ணவானாம் யதா ஷம்பு:" என்று, சிவபெருமான் 'தானே முதல் வைஷ்ணவன்' என்று காட்டினார்.

இவர் தலையில் விழுந்து, பூமியில் இமாலய பர்வதத்தில் ஓடி வரும் வரும்போது, மந்தாகினி சிவபெருமானின் கேசத்தை ஆனந்தப்படுத்ததினால், "அலகனந்தா" என்ற பெயர் பெற்றாள்.

பகீரதனை பின் தொடர்ந்து வந்ததால், "பாகீரதி" என்ற பெயரும் கொண்டு, இமயமலையில் இருந்து, "பாகீரதி", "அலகனந்தா" என்ற பெயரில் பூமியை நோக்கி வேகமாக வந்தாள்.

இப்படி ஓடி வருபவள், பூமியை அடைந்தபோது, "பாகீரதி", "அலகனந்தா" என்ற பெயரில் தேவப்ரயாகை என்ற இடத்தில் ஒரு நதியாக இணைந்து, "கங்கா" என்ற பெயர் பெற்றாள்.

தலையில் தாங்கியதால், சிவபெருமான் "கங்காதரன்" என்று பெயர் பெற்றார்.
இப்படி பாய்ந்து வந்த கங்கை பாதாளம் வரை பாய்ந்து, அங்கு இருந்த 60000 பேரின் சாம்பலில் பட்டதற்கே, பித்ருலோகம் அடையாமல் இருந்த அவர்களின் ஆத்மாக்கள் புண்ணிய லோகம் சென்றனர்.

உயிர் போன பின், உடல் எரிந்து அந்த சாம்பலில் கங்கை பட்டாலே அந்த ஆத்மா புண்ணிய லோகம் அடையும் என்றால், உயிருடன் இருக்கும் போது நாம் சென்று ஹரி நாமம் சொல்லி ஸ்நானம் செய்தால் புண்ணிய கிடைக்கும், பாவம் தொலையும் என்பதில் சந்தேகம் என்ன !!




இப்படி பாகவதர்களை எதிர்பார்த்து வரும் கங்கையில் ஸ்நானம் செய்யும் பாக்கியம் கிடைத்தால் நாம் சொல்ல வேண்டிய ஸ்லோகம் :

விஷ்ணு பாத சமுத் பூதே ! (விஷ்ணு பாதத்தில் இருந்து உண்டானவளே )
கங்கே த்ரிபத காமினி !!
(மூன்று உலகங்களிலும் சஞ்சரிப்பவளே )
தர்மத்த்ரவேதி விக்யாதே
(தர்மத்த்ரவம் என்ற பெயர் உடையவளே)
பாபம் மே ஹர ஜான்ஹவி
(என்னுடைய பாவங்களை நீக்கு)

கங்கையை ஸ்மரித்துக் கொண்டு, பொதுவாகவே நாம் எந்த ஜலத்திலும் ஸ்நானம் செய்தாலும், கங்கையில் ஸ்நானம் செய்தது போலாகும்.