Followers

Showing posts with label அர்த்தம். Show all posts
Showing posts with label அர்த்தம். Show all posts

Tuesday, 18 January 2022

நாரையை திருக்கண்ணபுரத்துக்கு தூது அனுப்புகிறாள் பரகால நாயகி. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம். செங்கால மடநாராய் இன்றே சென்று...

பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

செங்கால மடநாராய்

இன்றே சென்று

திருக்கண்ணபுரம் புக்கு

என் செங்கண் மாலுக்கு

என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்

இது ஒப்பது எமக்கு இன்பமில்லை

நாளும் பைங்கான மீதெல்லாம் உனதேயாக

பழனமீன் கவர்ந்து உண்ண தருவன்

தந்தால் இங்கே வந்து இனிதிருந்து 

உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் 

இனிது இன்பம் எய்தலாமே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

கொக்கில் ஒரு இனம் 'நாரை'. வெண்மையாக இருக்கும் நாரைக்கு கால் சிவப்பாக இருக்கும்.

ஒருநாள், மோகமுள்ள பக்ஷி ஒன்று (மடநாராய்) திருக்கண்ணபுரம் நோக்கி பறந்து சென்று கொண்டிருப்பதை பார்க்கிறாள் பரகால நாயகி.

அது உணவுக்காக கடலை நோக்கி தான் செல்கிறது என்று அறிந்து கொண்டாள்.


"திருக்கண்ணபுரத்தில் ஒப்பிலியப்பன் நிற்கிறாரே! அவரிடம் தனக்காக தூது செல்ல, அந்த நாரையை அழைக்கலாமா?" என்று நினைத்தாள் பரகால நாயகி.

"சிவந்த கால்களையுடைய நாரையே! நீ கடலுக்கு சென்று மீன் தேட வேண்டாம். 

நீ அதற்கு பதில் இன்றே திருக்கண்ணபுரம் செல்லேன்!

அங்கு மீன் போன்ற கண்களை உடைய சவுரிராஜன் இருக்கிறார். என் சித்தத்தை மயக்கிய செங்கண் மாலுக்கு, என் காதலருக்கு, என் துணைவருக்கு, 'இப்படி ஒருவள் உங்களுக்காக தவித்து, காத்து இருக்கிறாள்' என்று சொல்வாயாகில், அதை விட ஒரு பேருதவி ஒன்றும் இருக்க முடியாது. அதை விட பேரின்பம் ஒன்று கிடையாது எனக்கு" (செங்கால மடநாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு என் செங்கண் மாலுக்கு என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பமில்லை) என்றாள் பரகாலநாயகி

"நான் எனக்கு உணவான மீனை சாப்பிடுவதற்காக கடலுக்கு செல்லும் போது, உனக்கு தூது செல்லுமாறு அழைக்கிறாயே! உனக்கு உதவி செய்தாலும், அங்கே எனக்கு யார் சாப்பிட கொடுப்பார்கள்?" என்று நாரை கேட்க,

"கவலையே படாதே! நீ அவரிடம் என்னை பற்றி சொல்லிவிட்டு, திரும்பி இங்கே வா. பெருமாளிடம் தூது சென்ற நீ, எனக்கு உறவினன் ஆகிறாய்! 

உனக்காக  சோலையாக இருக்கும் என்னுடைய தோட்டம் முழுக்க திறந்து விடுகிறேன். தோட்டம் முழுவதும் உனக்குத்தான். உனக்கு விருந்து வைக்கிறேன்.

அதில் உள்ள பெரிய குளத்தில் துள்ளி விளையாடும் மீன்களை நானே உனக்கு உண்ண தருவேன். உங்களை விரட்டவே மாட்டேன் (நாளும் பைங்கான மீதெல்லாம் உனதேயாக பழனமீன் கவர்ந்து உண்ண தருவன்)


நீ மட்டுமல்ல, உன்னோடு உன் காதலியான பெண் நாரையையும் அழைத்து கொண்டு வா. 

இந்த பெரிய தோட்டத்திலேயே நீங்கள் இருவரும் விளையாடி மகிழலாம்.

(தந்தால் இங்கே வந்து இனிதிருந்து உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே)

என்று நாரையிடம் தூது விடுகிறாள் பரகாலநாயகி.

திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகி, நீயும் உன் பேடையும் என்று நாரையையும், முந்தைய பாசுரத்தில் இதே போல வண்டையும் சொல்கிறார். 

ஆசாரியனையும், அவருடைய தர்ம பத்னியையும் சொல்கிறார் என்பது தத்துவம்.

ஆசாரியன் தான், நமக்காக 'பெருமாளிடம் சென்று சிபாரிசு செய்கிறார்'. 

அப்படி பேருதவி செய்த குருவுக்கு, நாம் என்ன பதில் செய்து விட முடியும்?

தனக்காக தூது சென்று, பெருமாளிடம் நம்மை பற்றி சொன்ன நாரைக்கு தன் இடத்தையே கொடுத்து, அவருக்கு பிடித்த உணவை கொடுப்பது போல, குருவுக்கும், அவர் தர்ம பத்னிக்கும் சேவை செய்யவேண்டும் என்பதே தாத்பரியம்.

Friday, 14 January 2022

'என்னை அடிமையாக்கி விட்டு, ஸ்ரீரங்கம் சென்றாரே' என்று பரகால நாயகி சொல்கிறாள். பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்... மின்னிலங்கு திருவுருவும்...

பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

மின் இலங்கு திரு உருவும்

பெரிய தோளும்

கரி முனிந்த கை தலமும்

கண்ணும் வாயும்

தன் அலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கும் 

மகரம்சேர் குழையும் காட்டி

என் நலனும் என் நிறையும்

என் சிந்தையும்

என் வளையும் கொண்டு 

என்னை ஆளும் கொண்டு

பொன் அலர்ந்த நறுஞ்செருந்தி பொழிலின் ஊடே

புனல் அரங்கம் ஊரென்று போயினாரே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

மின்னல் போல ஜொலிக்கும் அவருடைய திரு உருவமும் (மின் இலங்கு திரு உருவும்), 

அவருடைய அழகிய பெரிய தோளும் (பெரிய தோளும்), 

குவலயாபீடம் என்ற யானை ஒரே குத்தில் வீழ்த்திய அந்த திரு கைகளும் (கரி முனிந்த கை தலமும்), 

அவருடைய அழகிய கண்களும், மந்தஹாசம் செய்யும் திருவாயும் (கண்ணும் வாயும்), 

அன்று மலர்ந்த நறுமணமிக்க பூக்களை கொண்டு, அவர் கழுத்தில் போட்டுக்கொண்டிருக்கும் பெரிய வைஜயந்தி மாலையும், அவர் காதில் போட்டுக்கொண்டிருக்கும் மகர குண்டலங்கள் அந்த வைஜயந்தி மாலையை ஸ்பரிசிக்கும் அழகையும் எனக்கு காட்டி (தன் அலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி), 

எனக்கு எது நலமோ, எனக்கு எது நிறைவோ, அதை தானே நிர்வாகம் செய்வதாக ஆக்கி (என் நலனும் என் நிறையும்), 

என் எண்ணத்தையும், என் வளையல்களையும் எடுத்து கொண்டு, கடைசியில் என்னையே அவருக்கு அடிமையாக்கி கொண்டு விட்டு (என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு) 'போய் வருகிறேன்' என்று சொல்லி கிளம்பிவிட்டார். 

அவருக்கு அடிமையாகிய நானும் அவர் எங்கு செல்கின்றார்? என்று பார்த்தேன். 

திடீரென்று மறைந்து விடாமல், தன்னுடைய பின் அழகையும் காண்பித்து, பொன் நிறத்தில் பூக்கும் பொய்கையில் புதர் புதராக வளரும் செருந்தி பூக்கள் (சம்பகா புஷ்பம்) பூத்த நந்தவனத்திற்கு இடையே புகுந்து, 'எங்கள் ஊர் திருவரங்கம் செல்கிறேன்' என்று சொல்லி போகின்றாரே ! (பொன் அலர்ந்த நறுஞ்செருந்தி பொழிலின் ஊடே புனல் அரங்கம் ஊரென்று போயினாரே)

Thursday, 13 January 2022

பெரியோர்களிடம் எப்படி பழக வேண்டும்? ஆளவந்தார் திருவனந்தபுரம் செல்ல வைத்த பாசுரம். அர்த்தம் தெரிந்து கொள்வோம். கெடுமிட ராயவெல்லாம் ...

பெரியோர்களை பார்க்கும் போது, "முதலில் அவர்களுடைய திருவடியை தான் பார்க்க வேண்டும். பிறகு தான் அவர்களின் முகத்தை பார்க்கவேண்டும்".

இது பெரியோர்களிடம் மரியாதையாக பழகும் முறை. 

ஒரு அரசனை பார்த்தாலும், இப்படி தான் பார்க்க வேண்டும்.

நம்முடைய ஆசாரியனை பார்த்தாலும், முதலில் அவருடைய திருவடியை பார்த்து விட்டு தான் அவருடைய முகத்தை பார்க்க வேண்டும்.

தெய்வத்தை பார்த்தாலும், முதலில் திருவடியை பார்த்து விட்டு தான், அவருடைய திருமுகத்தை பார்க்க வேண்டும்.


திருவடியை பார்த்து விட்டு, முகத்தை பார்ப்பது என்பது "மரியாதை".

முகத்தை பார்த்து விட்டு, பிறகு வெட்கப்பட்டு தலை குனிந்து திருவடியை பார்ப்பது என்பது "அன்பு".

திருவடியின் பெருமையை ஆளவந்தார் காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் நமக்கு காட்டுகிறது.

திருமங்கையாழ்வார், திருவரங்கத்தில் நம்பெருமாள் முன்பு தம்முடைய திருநெடுந்தாண்டக பாசுரங்களை அனுபவித்துப் பாடினார்

அரங்கன், “ஆழ்வாரின் விருப்பம் என்னவோ?” என்று கேட்க, 

திருமங்கையாழ்வார், ”மார்கழியின் மோக்ஷ உத்ஸவத்தன்று வடமொழி வேதங்களுடன், நம்மாழ்வாரின் திருவாய்மொழியையும் அரங்கன் கேட்டருள வேண்டும்”  என வேண்டினார். 

அரங்கன் மகிழ்வுடன் இணங்கினார்


இதை படிப்படியாக சீர்படுத்தப்பட்டு, இதில் மோஹினி அவதாரம், திருக்கைத்தல சேவை, வேடுபறி, மற்றும் நம்மாழ்வார் மோக்ஷம் போன்றவை சேர்த்து பிரமாண்ட உத்ஸவமாக நாதமுனிகள் ஆரம்பித்தார்.

அவரை தொடர்ந்து ஆளவந்தார், சுவாமி ராமானுஜர் மற்றும் மணவாள மாமுனிகள் என்னும் ஆச்சாரியார்கள், தொடர்ந்து, இன்று வரை நிர்வகித்து வருகின்றனர்.

இந்த உத்ஸவத்திற்காக ஆழ்வார்திருநகரியில் இருந்து நம்மாழ்வார் விக்கிரகத்தை திருவரங்கம் கோயிலுக்கு எழுந்தருள செய்வார்கள்.  

இது மார்கழி சுக்லபட்ச ஏகாதசி முதல் பத்து நாட்கள் நடைபெறும்.

இந்நாட்களில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி அரையர்களால் பாடப்பட்டு அபிநயிக்கப்பட்டு உரை சேவிக்கப்படும். 

இது பத்து  நாட்கள் இரவில் நடைபெறும். 

எனவே ’இராப்பத்து’ எனப்படுகிறது.  

இதுவே ’அத்யயன உத்ஸவம்’ என்றும் கொண்டாடப்படுகிறது.

அத்யயன உத்சவ காலத்தில், வைஷ்ணவ ஆசாரியர்கள் பெருமாளை விட்டு போகவே மாட்டார்கள்.

அத்யயன உத்ஸவத்தில் தான், திவ்ய பாசுரங்களை, பெருமாளே உட்கார்ந்து கேட்பார்.

பரம ரசிகர்களான ஆசாரியர்கள் பாசுரத்தையும், பெருமாள் கேட்பதையும் அனுபவிக்காமல் வேறு எங்காவது போக ஆசைப்படுவார்களா? 

இந்த அனுபவத்தை விடுவதற்கு யாருக்கு தான் மனம் வரும்?

இந்த அத்யயன உத்ஸவத்தை ஆரம்பித்தவரே நாதமுனிகள் தான்.

அவரை தொடர்ந்து நிர்வகித்து வந்தவர் ஆளவந்தார்.

"108 திவ்ய தேசங்களை நமது ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து, திவ்ய தேச தரிசனம் செய்ய சொல்லி இருக்கிறார்களே! 

மேல் நாட்டு, மலை நாட்டு திவ்ய தேசங்கள் அனைத்தும் பார்க்க வேண்டுமே! பார்க்க வேண்டுமே!"

என்று ஆளவந்தார் ஆசைப்பட்டு கொண்டிருந்தார்.


அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. மேலும், நம்பெருமான் அனுமதிக்காக காத்து இருந்தார்.

அத்யயன உத்சவம் நம்பெருமாளுக்கு ஆரம்பமானது.

பாசுரங்களை கேட்டு, பெருமாளையும் பார்த்து ரசித்து கொண்டிருந்தார் ஆளவந்தார்.

பத்மநாபன் மீதான பாசுரம் வந்த போது, "அனந்தபுர நகர் புகுதும் இன்றே" என்று சொல்லும்போது, கொஞ்சம் வீசி சொல்லி, ஆளவந்தாரை அரையர் பார்க்க, 'இது தான் நம்பெருமாள் நியமனம்' என்று, அப்படியே புறப்பட்டு விட்டார்.


ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டு, போகும் வழியில் உள்ள திவ்ய தேசங்கள் அனைத்தையும் சேவித்து கொண்டே, நடந்து நடந்து, 'திருவனந்தபுரம்'  வந்து சேர்ந்தார்.


பத்மநாபனை அங்கு மூன்று வாசல் வழியாக தான் பார்க்க முடியும். 

முதலில் திருவடி, பிறகு திருநாபி, பிறகு திருமுகம் என்று மூன்று ஸ்தானமாக பெருமாளை இங்கு பார்க்கலாம்.

'மூன்று உலகங்களாக விராட் புருஷனாக (வ்யாஹ்ருதி - பூ: புவ ஸுவ:) தானே இருக்கிறேன்' என்கிறார்.

ஸ்ரீரங்கத்தில் இருந்து நடந்தே வந்து, ஆசையோடு பார்க்க வந்த ஆளவந்தார், கோவிலுக்குள் வந்து, முதல் வாசலில் பெருமாளின் "திருவடியை" பார்த்தார்.

பார்த்து விட்டு, உடனேயே, திரும்பி விட்டார்.

சேவை செய்து வைப்பவர்கள், ஆளவந்தாரை கூப்பிட்டு, 'இதோ பாருங்கள் பெருமாளின் நாபி கமலம். ப்ரம்ம தேவனை படைத்த நாபி கமலத்தை பாருங்கள்' என்று காண்பித்து அழைக்க,

ஆளவந்தார் அவர்களிடம், "அதற்கு அதிகாரம் நமக்கில்லை. திரு நாபியை தரிசிக்கவோ,திருமுகத்தை தரிசிக்கவோ பிராட்டிக்கு தான் அதிகாரம். அடியேனுக்கு திருவடியே போதும்" என்று சொல்லிவிட்டு திரும்பினார்.

ஆளவந்தாரை திருவனந்தபுரம் கொண்டு வர செய்த நம்மாழ்வார் பாசுரம் :

கெடுமிட ராயவெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார் விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும் தடமுடை வயல் அனந்தபுரநகர்ப் புகுதுமின்றே

- திருவாய்மொழி (நம்மாழ்வார்)

கேசவா! என்ற மூன்றெழுத்து நாமத்தை சொன்னால் துன்பம் அனைத்தும்  தொலைந்து போகுமே! (கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன

இந்த ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கு நரக வேதனைகளை அனுபவிக்க யமலோகம் யமதூதர்கள் அழைத்து செல்லும் போது, 

இங்கு ஏன் வந்தாய்? அனைத்து பாவங்களையும் நாசம் செய்யவல்ல, கேசவனை நீ பஜிக்கவில்லையா? கேசவனின் நாமத்தை சொல்பவர்களுக்கு நரக வேதனை நேராதே! கேசவ நாமத்தை ஸங்கீர்த்தனம் பண்ணுவதும், கேசவனை பூஜை செய்ததற்கு சமம் அன்றோ!' என்று எமதர்மன் கேட்பாரே!

கேசவா! என்று சொல்பவருக்கு எம பயமில்லையே! (நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்)

ஆதிசேஷன் மேல் விரும்பி பள்ளி கொள்பவன் வீற்று இருக்கும் (விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான்)

வண்டுகள் ரீங்காரம் செய்யும், தடாகங்கள் நிறைந்த, வயல்வெளிகள் நிறைந்த (சுரும்பு அலற்றும் தடம் உடை வயல்)

திருவனந்தபுரத்திற்கு இன்றே செல்வோமே! (அனந்தபுரநகர் புகுதும் இன்றே)


இதை கேட்டதும், ஆளவந்தார், நம்பெருமாள் உத்தரவாக ஏற்று,  திருவனந்தபுரத்திற்கு கிளம்பி விட்டார். 

Tuesday, 11 January 2022

ஸ்ரீரங்கம் வா, உனக்கு இடம் தருகிறேன்' என்று பெருமாள் பரகால நாயகியிடம் சொல்கிறார். இருகையில்சங் கிவைநில்லா.. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்

 பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.


இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம்
இலங்கொலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட,பெருவயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்
பெரும் தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங்கு 
ஒரு கை மற்று ஆழி ஏந்தி
உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து
என் பொரு கயல் கண்ணீர் அரும்ப புலவி தந்து
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!
- திருநெடுந்தாண்டகம் (திருமங்கையாழ்வார்)

பெருமாளுடைய மகத்துவம் தெரிந்ததால், அவருடைய பிரிவினால் விரகம் ஏற்பட்டு, உடல் மெலிந்து, நான் அணிந்திருந்த வளையல்கள் கூட என் கையில் நிற்காமல், தானே கழண்டு விழுந்து விடுகிறதே ! (இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம்),

அவர் எப்பேர்பட்டவர் தெரியுமா?

பேரொலி எழுப்பும் அலைகளை உடைய பெருங்கடலில் உள்ள நீரை தன்னுடைய பெரிய வயிற்றில் நிரப்பி கொள்ளும் காளமேகத்தின் நிறத்தை ஒத்து இருப்பார். கருமுகில் போல வண்ணம் உடையவர். (இலங்கொலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட, பெருவயிற்ற கருமுகிலே ஒப்பர் வண்ணம்)

உலகத்தையே உண்டவர். பூமி பிராட்டி மீது அத்தனை அன்பு அவருக்கு, (உலகுண்ட பெருவாயர்) அது போல, பரகால நாயகியான என்னிடத்திலும் பேரன்பு உடையவர். என்னையும் அப்படியே விழுங்கிவிடுவார்.

பெருமாள் ஆசையோடு என்னிடத்தில் பேசுவதற்காக அருகில் வந்தார் (இங்கே வந்து). நானும் குழைந்து குழைந்து அவர் முன் நின்றேன். 

என்னிடம் பேசிக்கொண்டிருந்த பெருமாள், திடீரென்று "சற்று இரு" என்று சொல்லிவிட்டு திரும்பி சென்றார்.

இப்படி எங்கே அவசரமாக செல்கிறார்? என்று கொஞ்சம் எட்டி பார்த்தேன்..

அங்கு பெருமாளை பார்க்க, கூட்டமாக ரிஷிகள் வந்திருந்தனர். 
பல ஆயிரம் வருடங்கள் தவம் செய்து, தவம் செய்து இப்போது பெருமாளை வந்து இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ரிஷிகளுக்கு தன் தரிசனத்தை கொடுக்க பெருமாள் கிளம்பி இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன் !

பெருமாளும் அந்த ரிஷிகளுடன் பேசிக்கொண்டிருந்தார் 

இப்படி என்னை விட்டு விட்டு சென்றுவிட்டாரே! என்ற அசூயை எனக்கு இல்லை. 
அவர்கள் தவத்துக்கு பலனாக பெருமாள் தரிசனம் தருகிறார்  என்று அறிகிறேன்! (பெரும் தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ)

அவர்களிடம் பேசி விட்டு, ரிஷிகளுக்கு, 'ஒரு கையில் சங்கும், ஒரு கையில் கதை ஏந்தி தரிசனமும் கொடுத்தார்.'

(ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி)


இப்படி எப்பொழுதுமே இவரை சுற்றி ரிஷிகள் கூட்டமும், தேவர்கள் கூட்டமும் சூழ்ந்து கொண்டே இருக்க, எனக்கு நேரம் ஒதுக்க பெருமாளால் முடியவில்லையே! என்றதும் என் கண்களில் நீர் வழிய (என் பொரு கயல் கண்ணீர் அரும்ப புலவி தந்து), என்னிடம் பேரன்பு கொண்ட பெருமாள், இத்தனை காரியங்கள் இடையிலும் என்னை திரும்பி பார்த்து விட்டார்.

உடனே என்னை சமாதானம் செய்து, "நம்முடைய ஊர் ஸ்ரீரங்கம் உள்ளது. அங்கு உன்னையும் அழைத்து வைத்து கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றாரே ! (புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!) என்று பரகால நாயகி தன்னிடம் பிரியம் கொண்டுள்ள பெருமாளை நினைத்து உருகி நிற்கிறாள்.

Thursday, 6 January 2022

இப்படி ஒரு பெண்ணை பெற்றோமே! என்று ஆனந்தமும் அடைகிறாள் பரகால நாயகியின் தாய். பாசுரம் "தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத்..." அர்த்தம் தெரிந்து கொள்வோம்.

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாள !

தென் இலங்கை முன் மலங்க !

செந்தீ ஓங்கி! போர் ஆளன் !

ஆயிரம் வாணன் மாள 

பொருகடலை அரண் கடந்து புக்கு மிக்க !

பார் ஆளன் ! பார் இடந்து ! 

பாரை உண்டு ! பார் உமிழ்ந்து !

பார் அளந்து ! பாரை ஆண்ட ! பேர் ஆளன் ! 

பேர் ஓதும் பெண்ணை !

மண்மேல் பெரும் தவத்தாள் 

என்று அல்லால் பேசலாமே!

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)

பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி மேலும் பாடுகிறாள்.

"சதுரங்க சேனைக்கு மஹாரதனாகவும், கையில்  சந்திரஹாசம் என்ற வாளை வைத்து இருந்த ராக்ஷஸனான ராவணன்  (தேர் ஆளும் வாள் அரக்கன்) சீதாதேவியை இலங்கைக்கு தூக்கி சென்று விட்டான் என்றதும், முதலில் ஹநுமானை அனுப்பி, செல்வங்கள் குவிந்து இருக்கும் இலங்கையை (தென் இலங்கை), தீயில் (செந்தீ ஓங்கி) பொசுக்கி ராவணனை கலங்கடித்து (முன் மலங்க), பிறகு தானே நேருக்கு நேர் போர் செய்து (போர் ஆளன்), ராவணனை கொன்று, சீதை பிராட்டியை மீட்ட ராமபிரானே !

ஆயிரம் தோள்களை உடையனான பாணாஸுரனை (ஆயிரம் வாணன்) ஒழித்து கட்ட (மாள), அலை எறிகின்ற கடலாகிய  கோட்டையை கடந்து (பொருகடலை அரண் கடந்து) அவனுடைய இடத்திற்கே சென்று (புக்கு) போரிட்டு வெற்றிபெற்ற (மிக்க) கண்ணனே!

இந்த பூமிக்கு பதியே! (பார் ஆளன்)

பூமியை பிரளய ஜலதிதிலிருந்து தூக்கிய வராஹ மூர்த்தியே! (பார் இடந்து)

கிருஷ்ணாவதார காலத்தில் மண்ணை உண்டு, பிரளய காலத்தில், உலகத்தை உண்டு தன் திருவயிற்றில் அடக்கியவரே ! (பாரை உண்டு)

உலக ஸ்ருஷ்டி செய்ய சங்கல்பித்த போது, உலகை மீண்டும் வெளிப்படுத்தியவரே! (பார் உமிழ்ந்து) என்றும்,

திருவிக்ரமனாக இருந்து உலகை அளந்தவரே ! (பார் அளந்து

ராம அவதாரத்தில் இந்த உலகை அரசாண்டவரே (பாரை ஆண்ட) என்று, 

பெருமை பொருந்திய எம்பெருமானுடைய (பேர் ஆளன்) திருநாமங்களையே ஓயாது பாடி (பேர் ஓதும்), கண்ணீர் விட்டு கொண்டிருக்கும் இது போன்ற பெண்ணை இந்த உலகில் காண முடியுமோ? 

பெருமாளிடம் பக்தி உள்ள இப்படி ஒரு பெண்பிள்ளையை இந்த உலகில் (மண்மேல்) பெற்று தந்த பாக்கியவதி அல்லவோ இவள்! என்று தானே, என்னை அனைவரும் சொல்வார்கள்!" 

என்று திருமங்கையாழ்வாராகிய பரகால நாயகியின் தாய், 'ஒரு புறம் 'இப்படி வாடி போகிறாளே என் மகள்!' என்று வருந்தினாலும், பெருமாளிடம் இவள் கொண்டிருக்கும் பக்தியை நினைத்து, இப்படி ஒரு பெண்ணை பெற்றோமே!' என்று ஆனந்தமும் அடைகிறாள்.


தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீ ஒல்கி,

பேராள னாயிரம் வாணன் மாளப் பொருகடலை யரண்கடந்து புக்கு மிக்க

பாராளன், பாரிடந்து பாரை யுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட

பேராளன், பேரோதும் பெண்ணை மண்மேல் பெருந்தவத்தள் என்றல்லால் பேச லாமே?

'8 சீர்களை கொண்ட பாடல்' என்பதால், திருநெடுந்தாண்டகம் என்ற வரிசையில் வருகிறது. இதை பற்றி தெரிந்து கொள்ள, இங்கே பார்க்கவும்.

Tuesday, 28 December 2021

பெருமாளின் இதயத்தில் பெரியபிராட்டி இருக்கிறாள் என்று தெரிந்தும், பெருமாளை பரகால நாயகி ஆசைப்படுகிறாள். பாசுரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்வோம். முற்றாரா வனமுலையாள்...

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

முற்று ஆராவனம் முலையாள் பாவை மாயன்

மொய் அதலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்

அற்றாள் தன் நிறைவு அழிந்தாள் ஆவிக்கின்றாள்

'அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ' என்னும்

பெற்றேன் வாய் சொல்லி இறையும் பேச கேளாள்

பேர்ப்பாடி தண்குடந்தை நகரும் பாடி

பொற்றாமரை கயம் நீராட போனாள்

பொருவு அற்றாள் என் மகள்

உம் பொன்னும் அஃதே?

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)

பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.

"அழகிய முத்து ஹாரங்களை மார்பில் அணிந்து இருக்கும், அம்ருதம் கடையும் போது அம்ருதம் போல வெளிப்பட்ட அழகில் நிகரில்லாத 'பெரியபிராட்டி, ஆராவமுதனான எம்பெருமானின் அழகிய திருமார்பினுள் இருக்கிறாள்' என்பதை நேராக கண்ட பிறகும், தன் ஆசையை விட மறுக்கிறாளே என்னுடைய மகள் !

(முற்று ஆராவனம் முலையாள் பாவை மாயன் மொய் அதலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்)


'அச்சம் மடம் நாணம்' இது தானே பெண்ணுக்கு லக்ஷணம்! யார் என்ன சொல்வார்களோ! என்ற அச்சமும் இவளிடம் இல்லை. நாணமும் இல்லையே! தன்னுடைய வெட்கத்தை விட்டு, 'தனக்கும் எம்பெருமானிடத்தில் ஒரு இடம் கிடைக்குமா?' என்று கேட்டுக்கொண்டு பெரு மூச்சு விட்டு நிற்கிறாளே !

(அற்றாள் தன் நிறைவு அழிந்தாள் ஆவிக்கின்றாள்)
அருகில் இருக்கும் தோழியை பார்த்து, பயமே இல்லாமல், 'தோழீ! திருவரங்கம் சென்று ஒரு குதி குதித்து ஆடினால் தான் மனதுக்கு சமாதானம் ஆகும் போல இருக்கிறது. திருவரங்கம் சென்று ஆடுவோமா?‘ என்கிறாளே !

('அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ' என்னும்)

பெற்றவள் அருகிலேயே இருக்கிறேன். தாயிடம் சொல்லிக்கொண்டு போகவேண்டும் என்று கூட இவளுக்கு தோன்றவில்லையே! 'என் வார்த்தையை கொஞ்சமாவது கேள்' என்று சொன்னாலும் 'கேட்கமாட்டேன்' என்கிறாள்.

(பெற்றேன் வாய் சொல்லி இறையும் பேச கேளாள்)

எப்பொழுது பார்த்தாலும் வாயில் நாம சங்கீர்த்தனமே செய்கிறாள். இப்படி சதா சர்வகாலமும் பஜனை செய்தே கெட்டு போய் விட்டாளே !

'பகவத் பஜனை தானே ! செய்யட்டும்' என்று கொஞ்சம் இடம் கொடுத்தால், இவளோ இப்படி பஜனையிலேயே மூழ்கி போய் விட்டாளே !

'திருக்குடந்தை ஆராவமுதனை பார்க்க போகிறேன் என்று பஜனை செய்கிறாளே !"

(பேர்ப்பாடி தண்குடந்தை நகரும் பாடி)

'எம்பெருமானை அடைய முடியாததால் ஏற்பட்ட விரகத்தை தனித்து கொள்ள, பொற்றாமரை குளத்தில் சென்று நீராடி விட்டு வருகிறேன்' என்று சொல்லி விட்டு சென்று விட்டாளே !

(பொற்றாமரை கயம் நீராட போனாள்)

உலகத்தில் பெண்கள் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்.. என்னுடைய மகள் மட்டும் இப்படி வேறுபட்டு இருக்கிறாளே!!"

என்று பரகால நாயகியின் தாய் வருத்தப்பட்டாள்.

'பரகால நாயகியாக' இருப்பவர் திருமங்கையாழ்வார் தான்.

இவரை போலவே, 

நம்மாழ்வாரும் தன்னை 'பராங்குச நாயகியாக' வரித்து கொண்டு, எம்பெருமானை அடைய பல பாசுரங்கள் பாடி இருக்கிறார்.

திருமங்கையாழ்வாருக்கு 'நம்மாழ்வார் நிலையும், தன் நிலையும் ஒன்று போல இருக்க', தனக்கு தாயாக இருப்பவள், பராங்குச நாயகியின் தாயாரை பார்த்து, 

"தோழீ! என் மகள் (திருமங்கையாழ்வார்) தான் இப்படி இருக்கிறாளா? அல்லது உன் பெண்ணுக்கும் (நம்மாழ்வார்) இதே நிலை தானோ?"

(பொருவு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே?) என்று கேட்பது போல பாடுகிறார்.

பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.

நம்மாழ்வாராகிய பராங்குச நாயகியின் தாயார், திருமங்கையாழ்வாராகிய பரகால நாயகியின் தாய் சொன்னதை கேட்டு விட்டு சொல்கிறாள்,

"தோழீ! என் மகளை பார்த்தால், 'இவள் நப்பின்னை என்ற ஆயர் குலமகளோ! அல்லது பூமி தேவியோ! அல்லது சாக்ஷாத் மஹாலட்சுமியோ! என்பது போல, எப்பொழுது பார்த்தாலும் 'தொலைவில்லி மங்கலம்... தொலைவில்லி மங்கலம்" என்றே சொல்லி கொண்டிருந்தவள், என்னிடம் சொல்லிக்கொள்ளாமலேயே சென்று விட்டாள். உன் மகளாவது பொற்றாமரை குளம் செல்கிறேன் என்று சொல்லி விட்டு தானே சென்று இருக்கிறாள்.

இருவருமே அநேகமாக 'தொலைவில்லி மங்கலம்' (இரட்டை திருப்பதி) தான் சென்று இருப்பார்கள். வா 'தொலைவில்லி மங்கலம்' செல்வோம்" என்று சமாதானம் செய்தாள்.

பின்னை கொல்?

நில மா மகள் கொல்? 

திருமகள் கொல்? பிறந்திட்டாள், என்ன மாயங்கொலோ இவள்? 'நெடுமால்' என்றே நின்று கூவுமால்

முன்னி வந்தவன் நின்று இருந்து 

உறையும் தொலைவில்லி மங்கலம் 

சென்னியால் வணங்கும்  

அவ்வூர் திரு நாமம் கேட்பது சிந்தையே!

- நம்மாழ்வார் (திருவாய்மொழி)

Monday, 27 December 2021

வெட்கத்தை விட்டு 'நான் திருநீர்மலையே போய் விடுகிறேன்' என்று பேசும் பரகால நாயகியின் நிலை. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் - திருமங்கையாழ்வார்

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

கார்வண்ணம் திருமேனி !

கண்ணும், வாயும், கைத்தலமும், அடியிணையும் கமல வண்ணம் !

பார்வண்ண மடமங்கை பத்தர் ! 

பித்தர் பனிமலர்மேல் பாவைக்கு ! 

பாவம் செய்தேன் !

ஏர் வண்ண என் பேதை! என் சொல் கேளாள் !

'எம்பெருமான் திருவரங்கம் எங்கே?' என்னும்

'நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன்' என்னும்

இதுவன்றோ நிறைவு அழிந்தார் நிற்குமாறே?

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)

பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.

"எம்பெருமானின் ரூப சௌந்தர்யத்தையே நினைத்து நினைத்து மயங்கி போகிறாள் என்னுடைய பெண்குழந்தை. 

அவர் திருமேனி அங்கம் எப்படி இருக்கும் தெரியுமா? 'நீருண்ட மேகம் போல இருக்கும்' என்று சொல்கிறாள். 

(கார்வண்ணம் திருமேனி)


அவர் கண்கள் எப்படி இருக்கும் தெரியுமா? 

அவர் உதடுகள் எப்படி இருக்கும் தெரியுமா? 

அவர் திருக்கைகள் எப்படி இருக்கும் தெரியுமா? 

அவர் திருவடிகள் எப்படி இருக்கும் தெரியுமா? 

'இவை ஒவ்வொன்றும் செந்தாமரை பூத்தது போல சிவந்து இருக்கும்' என்று சொல்கிறாள்.

(கண்ணும், வாயும், கைத்தலமும், அடியிணையும் கமல வண்ணம்)

'எம்பெருமானுக்கு 'ஸ்ரீதேவி, பூதேவி' என்று இரு பிராட்டி. 

பூதேவியின் பக்தியை மதிக்கிறார். அவள் அன்புக்கு (பற்றுக்கு) கட்டுப்பட்டு இருக்கிறார்' என்று சொல்கிறாள்.

(பார்வண்ண மடமங்கை பத்தர்)

'தாமரை மேல் அமர்ந்து இருக்கும் ஸ்ரீதேவிக்கோ இவர் ஒரு பித்தர். அவளிடத்தில் அவ்வளவு மோகம் கொண்டு இருக்கிறார்.' என்று சொல்கிறாள்.

(பனிமலர்மேல் பாவைக்கு பித்தர்)

உடனே 

'நானும் ஒரு நாயகி இங்கு இருக்கிறேனே! ஆனால் எனக்கு மட்டும் இவர் கிடைக்கவில்லையே! என்ன பாவம் செய்தேனோ?' என்று சொல்லி அழுகிறாள் என் குழந்தை.


என்னுடைய பெண்பிள்ளை இப்படி இருக்கிறாளே! இது நான் செய்த  பாவமோ?" என்று பரகால நாயகியின் தாயும் வருந்துகிறாள்.

(பாவம் செய்தேன்?)

மேலும்,

"நல்ல அழகான வண்ணமுடைய என்னுடைய பெண் குழந்தை, முக்தமான ஸ்வபாவமுடைய என்னுடைய மகள், என்னுடைய பேச்சை கேட்காமல், எப்பொழுது பார்த்தாலும் 'எம்பெருமான் திருவரங்கம் எங்கே? எங்கே? என்றே பாடிக்கொண்டு இருக்கிறாளே!

(ஏர் வண்ண என் பேதை ! என் சொல் கேளாள் ! எம்பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்)

'இப்படியெல்லாம் பாடாதே! நிறுத்து !' என்று இவளை அதட்டினால், 

'நான் நீர்வண்ணன் இருக்கும் (சென்னை) திருநீர்மலைக்கே போய் விடுகிறேன்.' என்று பேசுகிறாளே! 

(நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன்! என்னும்)


ஒரு பெண்ணுக்கு, 'அச்சம், மடம், நாணம்' என்ற ஸ்த்ரீ லக்ஷணம் இருக்க வேண்டாமா? 

இப்படி வெட்கத்தை விட்டு, 'ரங்கா ரங்கா ரங்கா..  கோவிந்தா கோவிந்தா கோவிந்தா' என்று உரக்க சொல்கிறாளே! 

இப்படி வெட்கத்தை விட்டு, ஒரு பெண் இருப்பாளோ?  வெட்கத்தை விட்ட பெண்ணை பெற்றவர்களின் நிலைமை இப்படி தான் இருக்குமோ!"

(இதுவன்றோ நிறைவு அழிந்தார் நிற்குமாறே?)

என்று பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.

ஜோடி புறாக்கள் கொஞ்சுவதை கேட்டு உருகி போகும் பரகால நாயகியின் நிலை. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. பொங்கு ஆர் மெல் இளங்கொங்கை - திருமங்கையாழ்வார்

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

பொங்கு ஆர் மெல் இளங்கொங்கை பொன்னே பூப்ப !

பொரு கயல் கண் நீர் அரும்ப போந்து நின்று

செங்கால மட புறவம் பெடைக்கு பேசும்

சிறு குரலுக்கு உடலுருகி சிந்தித்து ஆங்கே

தண்காலும் தண்குடந்தை நகரும் பாடி

தண்கோவலூர் பாடி ஆட கேட்டு

நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன?

நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே!

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)

பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.

இளம் கன்னிகையாக பொற்குடம் போன்ற அழகிய மார்புடைய என் பெண் குழந்தை, கிருஷ்ண விரகம் என்ற அக்னியால், சாம்பல் பூத்தது போல ஆகிவிட்டாளே! என்னுடைய பெண், இப்படி விரகத்தில் உருக்குலைந்து போய் விட்டாளே! 

(பொங்கு ஆர் மெல் இளங்கொங்கை பொன்னே பூப்ப)


கண்களில் எப்பொழுதும் கண்ணீரோடு இருக்கிறாளே! நிலைகொள்ள முடியவில்லையே ! ஒரு இடத்தில இவளால் உட்கார முடியவில்லையே! எழுந்திருந்து எழுந்திருந்து யாரையோ தேடி தேடி எதிர்பார்க்கிறாள், உட்காருகிறாள். மறுபடியும் எழுந்திருக்கிறாள். மறுபடியும் உட்காருகிறாளே ! 

(பொரு கயல் கண் நீர் அரும்ப போந்து நின்று)
பாம்புக்கு பயந்து, புலியின் வாயிலே விழுந்தது போல, தாய் கண்டிக்கிறாள் என்று வாசலுக்கு சென்ற என் பெண் இரண்டு ஜோடி புறா கொஞ்சிக்கொள்வதை கேட்டு விட்டு, "அதைவிட கொடிய சொல் செவியிலே விழுந்தது" என்கிறாளே!

அழகியதான சிவந்த கால்களை உடைய இரண்டு ஜோடி புறாக்கள் கொஞ்சி கொண்டு இருக்க, அவை கொஞ்சி பேசிக்கொள்ளும் குரலை கேட்டு விட்டு, இவள் உடலுருகி போய் விடுகிறாளே !

"இவை கூட தம் தம் ஜோடியோடு களித்து இருக்கிறதே! நம் நிலைமை இப்படியாயிற்றே!" என்று சிந்தித்து உடலுருகி அங்கேயே நிற்கிறாளே! 

(செங்கால மட புறவம் பெடைக்கு பேசும் சிறு குரலுக்கு உடலுருகி சிந்தித்து ஆங்கே)

இப்படியே நிற்கும் இவள், அடுத்த நொடி, காஞ்சியில் இருக்கும் விளக்கொளி பெருமாளை நினைத்து கொண்டு 'திருத்தண்கால்" (தூப்புல்) என்று திவ்ய தேசத்தின் பெயரை சொல்கிறாள்.

"என்னடிம்மா சொல்கிறாய்? என்று கேட்டால்,

கும்பகோணத்தில் இருக்கும் சாரங்கபாணியை நினைத்துக்கொண்டு "திரு குடந்தை" என்று சொல்கிறாள். 

(தண்காலும் தண்குடந்தை நகரும் பாடி)


'இவள் ஒரு நிலையில் இல்லையே !' என்று கவலைப்பட்டு இருக்க, 

இவளோ த்ரிவிக்ரம பெருமாளை நினைத்து கொண்டு "திருக்கோவலூர்" என்று சொல்லி பாடுகிறாள், ஆடுகிறாள். 

இப்படி இவள் சொல்வதை கேட்டு, "குழந்தை! நம்முடைய குடும்பத்திற்கு இது பழக்கமா? இப்படி செய்யலாமா? நீ ஒரு பெண் குழந்தையாக இருந்து கொண்டு, இப்படி செய்யலாமா? நம்முடைய குடும்பத்திற்கு இது நன்றாகவா இருக்கிறது? என்று கேட்டால், 

(தண்கோவலூர் பாடி ஆட, கேட்டு, நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன?)

"அம்மா! திரு நறையூரும் (எனும் நாச்சியார் கோவில்) பாடுவேன்.. கேள்" என்கிறாளே !

(நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே)

என்று பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.

திவ்ய தேசத்தின் பெயரை சொல்லி சொல்லி உருகி போகும் பரகால நாயகியின் நிலை. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. கன்று மேய்த்து இனிது உகந்த - திருமங்கையாழ்வார்

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

'கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்' என்றும்,

'கடிபொழில் சூழ் கணபுரத்து என் கனியே' என்றும்,

'மன்று அமர கூத்தாடி மகிழ்ந்தாய்' என்றும்,

'வட திருவேங்கடம் மேய மைந்தா' என்றும்,

'வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே' என்றும்,

'விரிபொழில் சூழ் திருநறையூர் நின்றாய்' என்றும்,

'துன்று குழல் கருநிறத்து என் துணையே' என்றும்

துணைமுலை மேல் துளிசோர சோர்கின்றாளே!!

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)

பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.

'யாரை பற்றி நினைத்தால் மூர்ச்சை ஆகிறதோ, அவரை பற்றி நினைக்காதே' என்று சொன்னாலும் கேட்காமல், அவரையே நினைத்து நினைத்து மூர்ச்சை அடைகிறாள் என்னுடைய பெண்.


திவ்ய தேசத்து பெயரை யாராவது தப்பி தவறி சொல்லிவிட்டால் கூட, இவள் அழுது அழுது சோர்ந்து விடுகிறாள்.


'அவரை பற்றி நினைக்காதே! பேசாதே!' என்று சொன்னால், விரகத்தினாலே இவளுக்கு உயிர் போய் விடுமோ! என்றும் கவலையாக இருக்கிறது.


'சரி அனுமதிப்போம்' என்று நினைத்து, 'நீ உன் ஆசை தீர பாடம்மா' என்று சொன்னால், பாட பாட அழுது சோர்ந்து விடுகிறாள் என்னுடைய பெண்.

'பக்தி செய்யாதே' என்று இவளிடம் சொன்னாலும் ஆபத்தாக இருக்கிறது.

'பக்தி செய்' என்று சொன்னாலும் ஆபத்தாக இருக்கிறது.


'பக்தி என்றால் என்ன?' என்று தெரியாத எனக்கோ, இவளிடத்தில் பாசம் மட்டுமே இருக்கிறது.


'என் பெண் குழந்தை இப்படி இருக்கிறாளே! இவளை எந்த வழியில் கொண்டு போய் சரி செய்வது?' என்று தெரியவில்லையே!!

பசு மாடுகளை மேய்த்து அதை காப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்ளும் இளம் பருவத்தில் இருக்கும் காளையே! கோபாலா! கோபாலா! கோபாலா! என்று அழைக்கிறாள்.. 

(கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்' என்றும்)


நாற்புறமும் நந்தவனம் சூழ்ந்த திருகண்ணபுர பெருமாளை நினைத்து 'கனியே' என்று அழைக்கிறாள்.

(கடிபொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்)


கூத்து ஆடுபவனை கண்டால், பார்ப்பவர்கள் தான் பொதுவாக ஆனந்தப்படுவார்கள். கண்ணனோ, தலையில் குடத்தை வைத்து கொண்டு அரங்கத்தில் பலர் மகிழ ஆட, பிறர் மட்டுமின்றி, தானும் தன் ஆட்டத்தை கண்டு ரசிக்கிறார்.

தலையில் குடத்தை வைத்து கொண்டு அரங்கத்தில்  (மன்று) ஆட, அந்த நடனத்தை பார்த்து மக்கள் அனைவரும் சபாஷ் போட, தன் ஆட்டத்தை கண்டு தானே மகிழும் குடக்கூத்தனே! என்று அழைக்கிறாள். 

('மன்று அமர கூத்தாடி மகிழ்ந்தாய்' என்றும்)


வட திருவேங்கடம் என்ற திருப்பதியில் வீற்று இருப்பவரே! கோவிந்தா! கோவிந்தா! என்று அழைக்கிறாள்.

('வட திருவேங்கடம் மேய மைந்தா' என்றும்)

அசுர ராக்ஷஸ கூட்டங்களை ஒழித்து வெற்றி பெற்ற பெருவீரனே! வேந்தே! என்று அழைக்கிறாள்.

('வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே' என்றும்)


எங்கும் பச்சை பசேல் என்று சோலையாக காணப்படும் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படும் திருநறையூரில் இருக்கும் பெருமானே! என்று அழைக்கிறாள்.

('விரிபொழில் சூழ் திருநறையூர் நின்றாய்' என்றும்)


நெருக்கமான, சுருள் சுருளான கேசத்துடன், நீலமேக ச்யாமள ரூபத்துடன் எனக்கு துணையாக இருப்பவரே! என்று சொல்கிறாள்.

('துன்று குழல் கருநிறத்து என் துணையே' என்றும்)

இப்படி சொல்லி சொல்லி, கண்களில் இருந்து கண்ணீர் அவர் மார்பில் விழும் படியாக அழுது அழுது சோர்ந்து விடுகிறாளே! 

(துணைமுலை மேல் துளிசோர சோர்க்கின்றாளே!!)

என்று பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.


Monday, 20 December 2021

ஆழ்வார் தன்னையே கோபிகையாக ஆகி வீணையோடு பேசிக்கொண்டு தானாக சிரிப்பதை பார்த்து, பரகால நாயகியின் தாயார் புலம்புவது போல பாடுகிறார். கல்லுயர்ந்த நெடுமதி்ள் சூழ்.. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

'கல் உயர்ந்த நெடுமதி்ள் சூழ் 

கச்சி மேய களியே' என்றும் 

'கடல் கிடந்த கனியே' என்றும்

'அல்லியம் பூ மலர் பொய்கை  பழனம் வேலி

அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான்' என்றும்

சொல் உயர்ந்த நெடுவீணை 

முலைமேல் தாங்கி தூமுறுவல் 

நகை இறையே தோன்ற நக்கு

மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே

மென்கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே 

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)


பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, பாடுகிறாள்.

"கருங்கற்களால் மதிற்சுவர்கள் ஓங்கி உயர்ந்து காஞ்சிபுரத்தை சூழ்ந்திருக்க (கல் உயர்ந்த நெடுமதி்ள் சூழ் கச்சி) அங்கு எழுந்தருளியிருக்கும் (மேய) மதயானை போன்ற ஹஸ்தி வரதனே ! என்று இவள் பாட (களியே என்றும்)

திருப்பாற்கடலில் படுத்திருக்கும் கனிபோன்றவனே! என்று இவள் பாட (கடல் கிடந்த கனியே)

சுகந்தமுடைய அல்லி பூக்கள் பூக்கும் தடாகங்களையும் (அல்லியம் பூ மலர் பொய்கை) நீர்நிலைகளையுமே (பழனம்) வேலியாக உடைய (வேலி) அழகிய திருவழுந்தூரிலே (தேரழுந்தூர்) நின்று (அணி அழுந்தூர் நின்று), உள்ளம் உகந்து இருக்கும் என் ஸ்வாமியே! என்று இவள் பாட (உகந்த அம்மான்' என்றும்

அவள் பாடிய இந்த திவ்ய நாமசங்கீர்த்தனத்தை கேட்டு (சொல் உயர்ந்த) அந்த நீண்ட வீணையும் திருப்பி பாட (நெடுவீணை), தனது நாதனை இந்த வீணையும் பாடுகிறதே என்ற பூரிப்பில், தனது மார்பின் மீது தாங்கி கொண்டு (முலைமேல் தாங்கி) பெருமாளையே ஸ்பரிசித்து விட்டது போன்று புன்முறுவல் செய்கிறாள் (தூமுறுவல்). 
பல்வரிசைகள் (நகை) தெரியும் படி (இறையே தோன்ற) தனக்கு தானே சிரிக்கிறாள் (நக்கு). 

இயற்கையாகவே சிவந்து இருக்கும் விரல்கள் இன்னமும் சிவக்கும்படி நாள் முழுவதும் தந்தி கம்பிகளை வருடி (மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி அந்த வீணையை) அதற்கும்  மேலே (ஆங்கே) தானே ஒரு கிளிப்பிள்ளை போலே (மென்கிளி போல்) மழலைச்சொற்களால் பாடிக்கொண்டு நிற்கிறாள் (மிகமிழற்றும்). 

என் வயிற்றில் பிறந்த அறியா பெண்ணான இவள், இவையெல்லாம் எங்கே கற்றாள்? (என் பேதையே)"

என்று பரகால நாயகியின் தாய், தன் பெண் (திருமங்கையாழ்வார்) நிலை கண்டு வருந்துகிறாள்.


Saturday, 18 December 2021

ஆழ்வார் தன்னையே கோபிகையாக ஆக்கிக்கொண்டு விரகத்தில் மூழ்கி கிடக்க, தனக்கு இப்படி பழி தேடி தருகிறாளே! என்று இவருடைய தாய் புலம்புவது போல பாடுகிறார். நெஞ்சுருகிக் கண்பனிப்ப.. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

நெஞ்சு உருகி !

கண் பனிப்ப !

நிற்கும்! சோரும் !

நெடிது உயிர்க்கும் ! உண்டு அறியாள் !

உறக்கம் பேணாள் !

'நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ' என்னும்

'வம்பார் பூ வயல் ஆலி மைந்தா' என்னும்

அம் சிறைய புள் கொடியே

ஆடும் ! பாடும் !

அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்,

என் சிறகின் கீழ்

அடங்கா பெண்ணைப் பெற்றேன் !

இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ! ஏ பாவம்மே !

திருநெடுந்தாண்டகம் - திருமங்கையாழ்வார்

பரகால நாயகியின் தாயார், தன் பெண்ணுடைய நிலையை பார்த்து மேலும் வருந்துகிறாள்.

"என் குழந்தை முன்பு போல சந்தோஷமாக இல்லையே! நாளுக்கு நாள் இப்படி இளைத்து கொண்டே இருக்கிறாளே! நெஞ்சம் உருகி (நெஞ்சு உருகி), கண்களில் பனி உருகி வழிவது போல கண்ணீர் கொட்ட (கண் பனிப்ப), அப்படியே அசையாமல் நிற்கிறாளே! (நிற்கும்) நின்று நின்று சோர்ந்து போய் விடுகிறாளே! (சோரும்). 

அப்படியே வானத்தை பார்த்தபடியே பெருமூச்சு விடுகிறாளே! (நெடிது உயிர்க்கும்). ஒரு பருக்கை கூட சாதம் சாப்பிடவில்லையே ! (உண்டு அறியாள்). ராத்திரி முழுவதும் தூங்காமல் விழித்து கொண்டே இருக்கிறாளே! (உறக்கம் பேணாள்)"

ராத்திரி முழுவதும், 'சேஷ சயனத்தில் படுத்து கொண்டு இருக்க கூடிய சௌந்தர்யத்துடன் கூடிய எம்பெருமானே! நாராயணா!' என்று கூவுகிறாளே! (நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்)
நல்ல சுகந்தமிக்க பூக்களை உடைய, வண்டுகள் ரீங்காரம் செய்யும், கழனிகள் சூழ்ந்த, நாகப்பட்டினத்தில் உள்ள திருவாலி என்ற திவ்ய தேசத்தில் எப்பொழுதும் இளமை மாறாது இருக்கும் எம்பெருமானே! (வம்பார் பூ வயல் ஆலி மைந்தா என்னும்) என்று கூவுகிறாளே! 

(குறிப்பு: திருமங்கையாழ்வார் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் திருவாலிக்கு பக்கத்திலுள்ள திருக்குறையலூர் என்கிற ஊரில் அவதரித்தார். சோழ அரசனின் படைத் தளபதியாக இருந்து, திருவாலி பகுதியை ஆண்டார்)

அழகிய சிறகுகள் உடைய கருடனை கொடியாக கொண்டவனே! (அம் சிறைய புள் கொடியே) என்று கூவுகிறாளே!. 

திடீர் திடீரன்று ஆடுகிறாள். தானே பாடுகிறாளே! (ஆடும் பாடும்)

தோழீ! நாம் திருவரங்கத் துறையிலே போய் ஆடுவோமா?" (அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்) என்கிறாளே! 

தன் குஞ்சு பறவையை, தன் சிறகை மூடி பத்திரமாக காப்பது போல, என் குழந்தையை காப்பாற்றி வந்தேனே! 

அந்த குஞ்சு பறவை பறக்க சக்தி வந்ததும், எப்படி தன் அம்மாவை விட்டு பறந்து போய் விடுமோ! அது போல, இவள் என்னை விட்டு விட்டு ஸ்ரீரங்கமே சென்று விடுவாள் போல இருக்கிறதே! (என் சிறகின் கீழ்) நாலு பேர் என்ன சொல்லுவார்கள்? பெண்ணை அடக்க தெரியாத தாய் என்று என்னை சொல்ல மாட்டார்களா? (அடங்கா பெண்ணைப் பெற்றேன்)

விசாலமான இந்த உலகத்தில் (இரு நிலத்து) நல்ல பெயர் வாங்கி கொடுக்காமல், இப்படி ஒரு பழி தேடி தருகிறாளே ! (ஓர் பழி படைத்தேன்). அந்தோ! (ஏ பாவம்மே)"

என்று புலம்புகிறாள் பரகால நாயகியின் தாய்.Friday, 17 December 2021

ஆழ்வார் தன்னையே கோபிகையாக ஆக்கிக்கொண்டு விரகத்தில் மூழ்கி கிடக்க, தன் நிலை கண்டு தாய் புலம்புவது போல பாடுகிறார். பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும்... பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே கோபிகையாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

பட்டு உடுக்கும் அயர்ந்து இரங்கும் 

பாவை பேணாள்

பனி நெடுங்கண்ணீர் ததும்ப 

பள்ளி கொள்ளாள்

எள் தினைப்போது 

என் குடங்கால் இருக்க கில்லாள்

எம்பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்

மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல்

மடமானை இதுசெய்தார்? 

தம்மை, மெய்யே கட்டுவிச்சி சொல் என்ன? 

சொன்னாள் நங்காய்

கடல்வண்ணர் இது செய்தார் 

காப்பார் யாரே

திருநெடுந்தாண்டகம் - திருமங்கையாழ்வார்


'பொன்னானாய்' என்ற பாசுரம் வரை, "தான் திருமங்கை மன்னன்" என்ற நினைவோடு பாடினார்.

அடுத்த பத்து பாடல்கள் பாடும் போது, ஆழ்வாருக்கு "நாயிகா-பாவம்" வந்து விட்டது.

"தான் திருமங்கைமன்னன் என்ற நினைவு மறந்து, தன்னை ஒரு கோபிகையாக நினைத்து", பாடுகிறார்.
போர்களில் பங்கேற்று, எதிரிகளுக்கு எமனைப்போன்று வீரம் காட்டியதால் "பரகாலன்" என்று பெயர் பெற்ற திருமங்கைமன்னன், தன்னை "பரகால நாயகியாக" பாவித்து பாடுகிறார்.

கண்ணனை அடைய முடியாத விரகத்தில் தவித்து புலம்புகிறார்.


தானே ஒரு கோபிகையாக ஆகி, தான் படும் வேதனையை பெருமாளுக்கு சொல்ல, தனக்கு "ஒரு அம்மா" இருப்பது போல பாவித்து, தன் பெண் படும் வேதனையை பார்த்து, அந்த தாய் கதறுவது போல ஒரு பத்து பாசுரம் பாடுகிறார். 


அந்த தாய், "தன் மகள் எப்பொழுதும் போல இல்லாமல், இப்பொழுதெல்லாம் ஒரு மாதிரி இருக்கிறாளே! இதற்கு என்ன காரணம்?" என்று ஆலோசிக்கிறாள்.

"அடிக்கடி அலங்காரம் செய்து கொள்கிறாள்.  காரணமே இல்லாமல் குறுக்க நெடுக்க நடக்கிறாள்.  வளையலை குலுக்கி, திடீரென்று பெருமூச்சு விடுகிறாள். இதற்கு என்ன காரணம்? இவள் நிச்சயம் எம்பெருமான் வலையில் அகப்பட்டு இருக்கிறாள். " என்று ஆலோசிக்கிறாள்.

இது நாள் வரை 'குளித்து, நல்ல ஆடையாக அணிந்து கொள்' என்றால் முடியாது என்று வீம்பு செய்தவள், சில நாட்களாக இருக்கும் பட்டு வஸ்திரத்தை எல்லாம் எடுத்து எடுத்து கட்டி கொள்கிறாளே! (பட்டு உடுக்கும்

நல்ல அலங்காரம் வேறு செய்து கொண்டு, வாசலில் போய் போய் நிற்கிறாளே! 

யாரையோ எதிர்பார்க்கிறாள். எதிர்பார்த்தவர் வராது போக, உடனே வாடி போய், அயர்ந்து விடுகிறாள் (அயர்ந்து இரங்கும்).


என் பெண்ணுக்கு விளையாட அழகான பொம்மைகள் செய்து கொடுத்த இருக்கிறேன். எப்பொழுதும் அந்த பொம்மையை வைத்து கொண்டு, அதற்கு அழகாக அலங்காரம் செய்து, செய்து, அதனோடு விளையாடுவாளே!

அந்த பொம்மையை வீட்டின் ஒரு மூலையில் தூக்கி எறிந்து விட்டாளே!

பொம்மை வைத்து விளையாடும் சிறு பெண்ணல்லவா என் குழந்தை (பாவை பேணாள்)

எப்பொழுது பார்த்தாலும் கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருக்கிறாளே! (பனி நெடுங்கண்ணீர் ததும்ப). 

ராத்திரி முழுவதும் கண் இமைக்காமல் வானத்தை பார்த்து கொண்டு, அழுது கொண்டே இருக்கிறாளே!  தூங்குவதே கிடையாது என் மகள் (பள்ளி கொள்ளாள்)

சரி, இவளை என் மடியில் போட்டு கொண்டு தட்டி தூங்க வைப்போம் என்று நினைத்தாலும், ஒரு திணை பொழுது கூட கண் மூடி தூங்க மாட்டேன் என்கிறாளே! (எள் தினைப்போது என் குடங்கால் இருக்க கில்லாள்)


அருமையாக வளர்த்த பெண், தூங்காமல் இப்படி அவதிப்பட, அந்த தாய், "என்னம்மா செய்கிறது உனக்கு? சொல்லேன்" என்று வாஞ்சையோடு கேட்க, இந்த பெண் (திருமங்கைமன்னன் என்ற கோபிகை), "அம்மா, எம்பெருமான் வசிக்கும் திருவரங்கம் எப்படி போவது? எங்கே இருக்கிறது?" (எம்பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்), என்றே திரும்ப திரும்ப கேட்டு அழ ஆரம்பித்தாள்.

"இது என்ன இது? வியாதியா? யாராவது சூனியம் வைத்து விட்டார்களா? பைத்தியமா?" என்று அந்த தாய் கவலைப்பட, அங்கிருந்தவர்கள், 'நீ உன் பெண்ணை ஒரு கட்டுவிச்சியிடம் (கட்டுவிச்சி) காட்டு. அவள் குறிபார்த்து சொல்லிவிடுவாள்" என்றனர்.


குழந்தைகள் தண்ணீர் குடிக்காமல் வெறும் சாதமே சாப்பிட்டால் விக்கும். அது போல, தேனையே அதிகமாக குடித்ததால், விக்கி கொண்டு (மட்டு விக்கி) அழகிய பொன் வண்டு (மணிவண்டு) முக்தமான மான்விழி கொண்ட என் பெண் மகளின் (மடமானை) கூந்தலில் சூட்டியுள்ள பூவையே சுற்றி கொண்டு இருக்கும் (முரலும் கூந்தல்).

அப்படி குதூகலமாக இருந்த என் பெண்ணை யார் இப்படி செய்தார்கள்? (இதுசெய்தார்?).

ஹே கட்டுவிச்சி! எனக்கு உண்மை என்ன? என்று சொல் (தம்மை, மெய்யே கட்டுவிச்சி சொல் என்ன) என்று அந்த தாய், தன் மகளின் விரகத்திற்கு காரணம் கேட்கிறாள்.

அப்பொழுது, அந்த தாயாரின் தோழி சொல்கிறாள். (சொன்னாள் நங்காய்.)

"உன் மகளுக்கு பேய் பிசாசு எல்லாம் பிடிக்கவில்லை. வியாதியும் இல்லை. இவள் இப்படி ஆனதற்கு காரணம் அந்த நீலவர்ணத்தில் உள்ள பெருமாள் தான்." என்று உண்மையை சொல்லிவிட்டாள்.

உலகம் படுத்தும் பாட்டை பார்த்து, துக்கப்பட்டு நாம் அனைவரும் பெருமாளிடம் வந்து சொல்லி கொள்கிறோம்.

இங்கு என் பெண் இப்படி பாடு படுகிறாளே! இவள் இப்படி ஆனதற்கே 'பெருமாள் தான் காரணம்' என்றால், யாரிடம் குறைபட்டு கொள்வது? (கடல்வண்ணர் இது செய்தார் காப்பார் யாரே?

என்று அந்த தாய் தன் மகளின் நிலையை கண்டு வேதனைப்படுகிறாள்.

பெருமாளிடம் சேர முடியாமல் விரகத்தில் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே கோபிகையாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விருப்பத்தை தெரிவிக்கிறார்.


Sunday, 12 December 2021

பெருமாளை "தங்கம்" என்றும், "யானை" என்றும் ஆழ்வார் பாடிய அழகிய பாசுரம். அர்த்தத்துடன் தெரிந்து கொள்வோம். பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட புகழானாய்

 பெருமாளை தங்கம் என்றும், யானை என்றும், ஆழ்வார் பாடிய அழகிய பாசுரம்.  அர்த்தத்துடன் தெரிந்து கொள்வோம்.   

பொன்னானாய்!

பொழில் ஏழும் காவல் பூண்ட புகழானாய்!

இகழ்வாய தொண்டனேன் நான் !

என்னானாய்? 

என்னானாய்?

என்னல் அல்லால்

என் அறிவன் ஏழையேன்!

உலக மேத்தும் 

தென்னானாய் !

வடவானாய் !

குட பாலானாய் !

குணபால மதனானாய் !

இமையோர்க்கு என்றும் முன்னானாய் !

பின்னானார் வணங்கும் சோதி!

திருமூழி களத்தானாய் முதலானாயே !

- திருநெடுந்தாண்டகம் (திருமங்கையாழ்வார்)


தங்கத்துக்கு உள்ள குணங்களை, தங்கத்துக்கு உள்ள மதிப்பை கவனிக்கிறார் ஆழ்வார். 

'பெருமாளும் தங்கம் போல இருக்கிறாரே' என்று கொஞ்சுகிறார்.


இரும்பு சகஜமாக எங்கும் கிடைக்கிறது

தங்கம் இரும்பை போல சகஜமாக கிடைக்குமா? தேடி தேடி தங்கத்தை சம்பாதிக்க வேண்டி இருக்கிறது.

மக்கள் தங்கத்தை வாங்க எத்தனை பாடுபடுகிறார்கள் என்று பார்க்கிறோம். 

வாங்கிய பிறகு, ஜாக்கிரதையாக வைத்து கொள்ள எத்தனை பாடுபடுகிறார்கள்.


தங்கம் போன்று பெருமாள் இருக்கிறார். எளிதில் கிடைக்காதவர் அல்லவா இவர்.

'பெருமாளும் தங்கம் போல இருக்கிறாரே' என்று பெருமாளின் அருமையை நினைத்து, "பொன்னானாய்" என்று கொஞ்சுகிறார் திருமங்கையாழ்வார்.
கிடைக்காத தங்கம், கையில் கிடைத்து விட்டால், 

"ஆஹா..  இந்த தங்கத்தை எங்கு பாதுகாப்பாக வைத்து  கொள்வது? எப்படி பார்த்து கொள்வது? யாரும் எடுத்து கொண்டு போய் விட கூடாதே!" என்றெல்லாம் தோன்றி, எப்படி தூக்கமே வராதோ!, அது போல, கிடைக்காத பெருமாள் நம் கைக்குள் ஒரு சிறிய விக்ரஹ ரூபமாக கிடைத்து விட்டால் கூட, தூக்கமே வராது. அவர் நினைவாகவே இருக்கும்.

"பெருமாள் தான் நம்மை காக்கிறார்" என்பது தெரிந்தும், 

"கிடைத்த பெருமாளை எப்படி காப்பது? யாரும் இவரை தொட்டு விட கூடாதே! பத்திரமாக வைத்து கொள்ளலாமா? காவல் போடலாமா?" என்றெல்லாம் தோன்றி, பக்தியோடு 'ப்ரேமை'யும் சேர்ந்து விடும்.

ஒரு சில நாள் இரவலாக பெருமாளை மற்றவரிடம் கொடுக்க கூட மனம் வராது.

இப்படி 'பெருமாளும் தங்கம் போல இருக்கிறாரே' என்று பெருமாளின் அருமையை நினைத்து, "பொன்னானாய்" என்று கொஞ்சுகிறார் திருமங்கையாழ்வார்.

எப்படி தங்க செயின் போட்டு இருப்பவள், ஒரு வெள்ளி மாலை போட்டு இருப்பவளை கண்டால், "பாவம். உனக்கும் தங்க செயின் கிடைத்தால் நன்றாக இருக்கும்" என்று வெள்ளி மாலையை கண்டு சபலம் அடையாமல், அதற்கும் மேலாக தனக்கு கிடைத்த தங்கத்தில் திருப்தியோடு இருப்பாளோ, அது போல, 

வேறு தெய்வத்தை கொண்டாடுபவர்களை கண்டால், பெருமாளை தன் இஷ்டமாக கொண்டவன், "எனக்கு கிடைத்த 'பெருமாள், உனக்கும் ஒரு நாள் கிடைக்கட்டும்'" என்று இருப்பார்கள். மற்ற தெய்வங்களின் வழிபாட்டை கண்டு சபலம் அடையமாட்டார்கள்.

இப்படி பொன் போன்று பெருமையுடைய பெருமாளை "பொன்னானாய்" என்று கொஞ்சுகிறார் திருமங்கையாழ்வார்.

கிடைத்த தங்கத்தை தொலைத்தவன் எப்படி புலம்பி அழுவானோ, 

அது போல, 

பெருமாளை அனுபவித்தவன் அவரை இழக்க நேர்ந்தால், உலகமே இருண்டது போல, சமாதானமே செய்ய முடியாதபடி, தசரதன் ராமபிரானை இழந்து விரகத்தில் அழுது அழுது உயிரை விட்டது போல விரகத்தில் மூழ்கி விடுவான்.

இப்படி பொன் போன்று பெருமையுடைய பெருமாளை "பொன்னானாய்" என்று கொஞ்சுகிறார் திருமங்கையாழ்வார்.


பித்தளையை காட்டிலும், தாமிரத்தை காட்டிலும், வெள்ளியை காட்டிலும், தங்கம் உயர்ந்தது

அது போல, 

கிராம தேவதைகளை காட்டிலும், முப்பது முக்கோடி தேவர்களை காட்டிலும், இந்திரனை காட்டிலும், பிரம்மாவை காட்டிலும், ருத்ரனை காட்டிலும், பெருமாள் சிறந்தவர் என்பதாலும், பெருமாளை "பொன்னானாய்" என்று கொஞ்சுகிறார் திருமங்கையாழ்வார்.

எப்படி தங்கமே, குண்டலமாகவும், மாலையாகவும் ஆகிறதோ.. 

குண்டலமாக ஆனாலும் எப்படி தங்கம் அழிவதில்லையோ, 

அது போல, வைகுண்டத்தில் தங்கமாக இருக்கும் பெருமாள், ராமனாகவும், கண்ணனாகவும் வருகிறார்..

அது போதாதென்று, எப்பொழுதும் இருக்கும் படி, கோவில்களில் அர்ச்சா ரூபத்துடன் வருகிறார்.

எப்படி குணடலத்திலும் அதே தங்கம் இருக்கிறதோ, அது போல, கோவிலில் நாம் காணும் அர்ச்சா ரூபத்திலும், ராம கிருஷ்ண நரசிம்ஹ போன்ற விபவ அவதாரத்திலும் 'பெருமாள், பெருமாளாகவே' இருக்கிறார்.


தங்கமே குண்டலம், மாலை என்று ஆனாலும், எப்படி தங்கம் என்ற பொருள் மறைவதில்லையோ

அது போல, 

கோவிலில் அர்ச்ச்சா ரூபத்துடன் பெருமாள் வந்து நின்றாலும், தன் ஈஸ்வரத்தன்மையுடனேயே இருக்கிறார்.  


இப்படி தங்கம் போல, பெருமாள் இருக்க, "பொன்னானாய்" என்று கொஞ்சுகிறார் திருமங்கையாழ்வார்.


பித்தளை பார்க்க நன்றாக இருக்கும், ஆனால் மதிப்பு குறைச்சல் தான்.

ஆனால், தங்கத்தை பார்த்தாலும் நன்றாக இருக்கும். ஹிதமாகவும் இருக்கும்.

அது போல, 

பெருமாளை எத்தனை முறை பார்த்தாலும், பார்த்து கொண்டே இருக்க தோன்றும். அதே சமயம் ஹிதமான காரியங்களே நமக்கு செய்வார். அவரை வணங்குவதாலேயே நம் மதிப்பும் உயரும்

இப்படி தங்கம் போல, பெருமாள் இருக்க, "பொன்னானாய்" என்று கொஞ்சுகிறார் திருமங்கையாழ்வார்.

எப்படி தங்கத்தோடு ரத்தினம் பதிக்கப்படும் போது, அதன் ஒளி மேலும் பிரகாசம் அடையுமோ! அது போல ஸ்ரீ என்ற லக்ஷ்மி இவர் வக்ஷஸ்தலத்தில் இருக்க, மேலும் பிரகாசமாக இருக்கிறார்.

இப்படி தங்கம் போல, பெருமாள் இருக்க, "பொன்னானாய்" என்று கொஞ்சுகிறார் திருமங்கையாழ்வார்.


எப்படி தங்கத்தோடு முத்துக்கள் சேர்ந்தால், தனி அழகு கொடுக்குமோ, அது போல, பகவான் பக்தர்களான பாகவதர்களோடு இருக்கும் போது, தனிப்பொழிவுடன் இருக்கிறார்.


மற்ற உலோகம் எல்லாம், தேய்த்து வைத்தால் தான் சுத்தம். ஆனால் தங்கம் ஸ்வயமே சுத்தமாக இருக்கிறது. 

அது போல, பெருமாளும் ஸ்வயமே சுத்தமாக இருக்கிறார்.

இப்படி தங்கம் போல, பெருமாள் இருக்க, "பொன்னானாய்" என்று கொஞ்சுகிறார் திருமங்கையாழ்வார்.

திருமங்கையாழ்வார் 'பொன்னானாய்' என்று சொன்ன ஒரு சொல்லுக்கு, இப்படி ஆச்சர்யமாக 10 அர்த்தங்களை காட்டி, ஆழ்வாரின் ஹ்ருதயத்தை நமக்கு காட்டுகிறார் பெரியவாச்சான்பிள்ளை (கும்பகோணம் அருகே சேங்கனூரில் அவதரித்தார்)


விபீஷணன் "ராமபிரானிடம் அபயம்" தேடி வந்த பொழுது… அனைவரும் பல காரணங்கள் சொல்லி  தடுத்தும், ரக்ஷிக்கும் வ்ரதம் உடைய ராமபிரான், அடைக்கலம் கொடுத்து, இலங்கைக்கே அதிபதி ஆக்கிவிட்டார். 

ஈரேழு 14 உலகங்களையும் காத்து, ரஷிக்கும் திறன்  படைத்த பெரும் காவலாளி என்று தோன்றியதும், "பொழில் எழும் காவர் பூண்ட புகழ் ஆனாய்" என்கிறார் ஆழ்வார்.

தங்கம் போன்றவர், உலகுக்கே அபயம் தருபவர் என்று பெருமாளின் மகத்துவத்தை நினைத்ததும், "என்னை போன்ற மட்டமான தொண்டனுக்கும் க்ருபை செய்கிறாரே? என்ன ஆனது பெருமாளுக்கு?"என்று பெருமாளை பார்த்து "இகழ்வாய தொண்டனேன் நான், என்னானாய்?" என்கிறார்.
தங்கத்தை ஒப்பிட்டு 'பொன்னானாய்' என்று சொன்ன ஆழ்வார், 

"மட்டமான தன்னையெல்லாம் நம்பி பெருமாள் வந்துவிட்டாரே! பெருமாள் யானைக்கு உள்ள குணத்தோடும் இருக்கிறாரே" என்று நினைத்ததும் "என் ஆனாய்" என்று 'என் யானையே' என்கிறார்.


ராம அவதார சமயத்தில், ராமபிரானின் நடை அழகை வால்மீகி வர்ணிக்கும் போது, "யானை போல மிதிளா நகர வீதியில் நடந்தார்" என்று சொல்கிறார்.

யானைக்கு உள்ள சில குணங்கள் பெருமாளுக்கு உண்டு.

அத்தனை பெரிய யானை, ஒரு சாதாரண பாகனுக்கு கட்டுப்பட்டு நிற்கும்.

'இவனோடு அலைகிறோமே, நமக்கு எத்தனை பெரிய வயிறு இருக்கிறது. நமக்கு இவன் சோறு போட முடியுமா?' என்று கவலையே அடையாமல் பாகனோடு நிற்கும்.அதுமட்டுமல்ல, 

தன் கையில் யாராவது காசு, பழம் கொடுத்தாலும், பாகன் கையில் கொடுத்து விடும்.

அது போல, 

'சாதாரண தொண்டனான என்னோடு இருந்து கொண்டு, தனக்கு கிடைக்கும் மரியாதை, செல்வத்தை கூட தன் பக்தனுக்கே கொடுத்து கொண்டு பெருமாள் நிற்கிறாரே? என்ன ஆனது பெருமாளுக்கு? என்ன ஆகுமோ பெருமாளுக்கு?' என்று நினைத்து "என்னானாய்? என்னானாய்?" என்கிறார்.

யானை பார்ப்பதற்கே நன்றாக இருக்கும்

ஆண், பெண், குழந்தைகள், வயோதிகர் என்று பாகுபாடு இல்லாமல், யானை நடந்து வரும் போது, அதன் நடை அழகை ரசிப்பார்கள். 

அனைவரும் யானையை பார்க்க, யானையோ ஒரு வித சஞ்சலமும் இல்லாமல், யாரையும் திரும்பி பார்க்காமல் சென்று கொண்டே இருக்கும். 

யானை கவனிக்காமல் போனாலும், அது தெருக்கோடி வரை செல்லும்வரை பார்த்து கொண்டே இருப்பார்கள்.

அது போல,

மிதிலையில் ராமபிரான் நடந்து வரும் போது, 'தோள் கண்டார் தோளே கண்டார்' என்று, அனைவரும் வைத்த கண் மாறாமல் ராமபிரானையே பார்த்து கொண்டிருந்தனர். ராமபிரான் 'தன்னை தான் அனைவரும் பார்க்கிறார்கள்' என்று தெரிந்தும், சஞ்சலமே இல்லாமல் சாதாரணமாக நடந்தார். 

தெருக்கோடி வரை செல்லும்வரை ராமபிரானையே பார்த்து கொண்டே இருந்தார்கள்.

யானைக்கு சில சமயம் மதம் பிடித்து விடும்.  

அது போல, சில சமயம் பெருமாளுக்கும் அதர்மம் தலை தூக்கி, சாதுக்கள் ஹிம்சிக்கப்படும் போது, 'என்னால் உலகுக்கு பிரயோஜனமே தவிர, யாரால் எனக்கு என்ன ஆக போகிறது?"' என்று சிலநேரம் மதத்தோடு இருப்பாராம்.


பாகனுக்கு யானை கட்டுப்பட்டு நின்றாலும், தனக்கு பிடித்தவரையோ, பாகனுக்கு பிடித்தவரையோ கண்டால், தூக்கி தன் தலையில் வைத்து கொண்டு விடும்.

அது போல,

பகவான், ஒரு பக்தனை பார்த்து சந்தோஷப்பட்டுவிட்டால் தலையில் வைத்து கொண்டாடிவிடுவார்.

யானை மீது ஏற வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டால், யானை தன் கால்களை காட்டும்

முதலில் கால்களை பற்றி கொண்டால், யானேயே தன் மீது ஏற்றி கொண்டு விடும்..

அது போல, 

பெருமாளும், தன்னை அடைய ஆசைப்படுபவர்களுக்கு தன் திருவடியை முதலில் கொடுத்து, பிறகு தன்னிடமே சேர்த்து கொண்டு விடுகிறார்.


யானைக்கு துன்பம் கொடுக்க நினைத்தால், தூக்கி எறிந்து விடும். 

அது போல, தன்னிடம் அபசாரம் செய்பவர்களை, அசுர குணமுள்ளவர்கள் கடுமையாக தண்டித்து விடுவார் பெருமாள்.


ஒரு முறை பார்த்தால் போதும் என்றே தோன்றாது. யானை எப்போது பார்த்தாலும் பார்க்க ஆனந்தமாக இருக்கும்.. அதன் ஒவ்வொரு அசைவும் கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கும்.

அது போல, பெருமாளை ஒரு முறை பார்த்தால் போதுமென்றே தோன்றாது. எத்தனை முறை பார்த்தாலும், அலுக்கவே அலுக்காது.

யானை தனியாக வந்தாலும் நன்றாக இருக்கும்.

பெரிய கோவில் திருவிழாவில் கூட்டத்தோடு கூட்டமாக வந்தாலும் நன்றாக இருக்கும். 

அது போல, பெருமாள் பெரிய தேரில் கூட்டமாக வந்தாலும், தனியாக கம்பீரமாக தெரிவார். கோவிலில் தனியாக சன்னதியில் இருந்தாலும் கம்பீரமாக இருப்பார்.


பசுமாட்டை புல் மேய அழைத்து கொண்டு போனால், கயிற்றை கட்டி,  திருப்பி அழைத்து வந்து விடலாம். யானையை கயிற்றை கட்டி இழுக்க முடியுமா?

கோவில் உற்சவங்களில், ரங்கநாதருக்கு ப்ரபோதனம் போன்ற சமயத்தில் யானை வரும். தன் வேலை முடிந்ததும், பெருமாளிடம் பிரசாதம் வாங்கி கொண்டதும், தானே தன் கொட்டகைக்குள் சென்று விடும். பாகன் இதன் பின்னால் ஒடுவான். 

யானையை கட்டி இழுக்க முடியுமோ? 


கொட்டகைக்கு சென்றாலும், பாகனால் இழுத்து யானையை கட்ட முடியாது.. பாகனுக்கு கட்டுப்பட்டு, அந்த யானை தானாகவே சங்கிலியை எடுத்து பாகனிடம் கொடுத்து கட்ட சொல்லும்

/"தான் கட்டிவிட்டோம்" என்று பாகன் நிற்பான். 

அது போல, 

யாராலும் இழுக்க முடியாத பெருமாள், தன் பக்தன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருகிறார்

பக்தனுக்கு பிரியப்பட்டபடி தானே வருகிறார். 

அவன் விருப்பத்துக்கு கட்டுப்பட்டு, பக்த பராதீனநாக (பக்தனுக்கு அடிமையாக) நிற்கிறார். 

பக்தன் பகவானை பார்த்து, "நீங்கள் எங்கள் இடத்துக்கு ஒருமுறை வரவேண்டும்" என்பான்.

இவனால் எனக்கு என்ன ஆகப்போகிறது? என்று நினைக்காமல், அவனை மதித்து, அவன் பின்னால் வந்து விடுவார்.

ஏதோ அவனால் முடிந்தவரை ஒரு கூரை பந்தல் போட்டு வைத்து இருப்பான். அந்த குட்டி இடத்தில் வந்து, தானே உட்கார்ந்து கொண்டு, 

அவன் தன்னிடம் பக்தி செய்ய, திருவாராதனை என்ற பக்தி கயிற்றை தானே கொடுத்து

தன் திருவடியையையும் தானே கொடுத்து, 

அந்த பக்தி கயிற்றினால் இவரை பிடித்துக்கொள்ளும் புத்தியையும் கொடுத்து

அவனுக்கு தான் அகப்பட்டவன் போல காட்டி கொள்கிறார். 

"என்ன இப்படி செய்கிறீர்கள்?" என்று யாராவது கேட்டால், "நான் பக்தனுக்கு அடிமை. அப்படி ஒரு பக்தி என்னிடம் செய்கிறான். அவனுக்கு நான் அடிமையாக இருக்கிறேன்" (அஹம் பக்த பராதீன:) என்று சொல்லிக்கொள்கிறார்.

மதுரை அழகர் திருவிழாவில், இந்த அனுபவத்தை நேரில் காணலாம்.

கள்ளழகரை நூற்றுக்கணக்கான பக்தர்கள் அழைக்க, ஒவ்வொரு மண்டகப்படியிலும் வந்து, சிறிது நேரம் உட்கார்ந்து, அவர்கள் கொடுக்கும் திருவாராதனையை ஏற்று கொண்டு போகும் அழகை பார்த்தால், பகவானை ஆழ்வார் "என் ஆனாய்" என்று சொன்னதன் அர்த்தம் நமக்கு புரியும்.

பொன் போன்று இருக்கிறார், யானை போன்று இருக்கிறார் என்று ஏதோ புரிந்த அளவுக்கு சொல்கிறேனேவொழிய, உங்களை பற்றி எனக்கு என்ன தெரியும்? என்கிறார். 

இதையே "என்னல் அல்லால் என்னறிவன் ஏழையேன்?" என்று சொல்கிறார் ஆழ்வார்


14 லோகங்களும் உங்களையே துதிக்கிறது (உலக மேத்தும்), நான்கு திசையிலும் உங்கள் ஆட்சி தான் நடக்கிறது. தெற்கு திசை எங்கும் திருவரங்கத்தில் இருந்து ஆட்சி செய்கிறீர் (தென்னானாய்),  வடக்கு திசை எங்கும் திருமலையிலிருந்து ஆட்சி செய்கிறீர் (வடவானாய்),  மேற்கு திசை எங்கும் மேல்கோட்டையிலிருந்து ஆட்சி செய்கிறீர் (குட பாலானாய்),  கிழக்கு திசை எங்கும் திருக்கண்ணபுரம் இருந்து ஆட்சி செய்கிறீர் (குணபால மதனானாய்)


தேவர்களையும் படைத்த தேவன் நீங்கள் (இமையோர்க்கு என்றும் முன்னானாய்) தேவர்களுக்கெல்லாம் தேவன் என்று வைகுண்டத்திலியே இருந்து விடாமல், மனிதர்களுக்காக பூமியில் ராம, கிருஷ்ண அவதாரங்கள் செய்தீர்கள்.

ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் செய்த போது, அப்போது இருந்தவர்கள் தானே பார்த்து இருக்க முடியும்!! 

ராம, கிருஷ்ண அவதார காலத்தில் பிறக்காமல் பிறகு பிறந்தவர்களும் தன்னை தரிசிக்க ஏற்றவாறு, 

'அரச்சா ரூபம் எடுத்து கொண்டு' கோவில்களில் அனைவரும் வணங்கும்படியாக காட்சி தருகிறீர்களே! (பின்னானார் வணங்கும் சோதி), என்று சொல்லும் போதே, 

திருமங்கையாழ்வாருக்கு, கேரளா தேசத்தில் உள்ள திருமூழிக்களம் என்ற திவ்ய தேச பெருமாள் நினைவு வர, 

உடனேயே, "திருமூழிக் களத்தில் எழுந்தருளி இருப்பவரே!" (திருமூழிக் களத்தானாய் முதல் ஆனாயே) என்று திருமூழிக்கள பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்கிறார்.