நம: என்ற சொல், "நான்(ம) எனக்கு இல்லை (ந)" என்று அர்த்தத்தை கொடுக்கிறது.
நம: என்ற சொல், "நான் எனக்கு சொந்தம் இல்லை. நான் பரமாத்மாவுக்கே சொந்தமானவன்" என்ற சரணாகதி புத்தியை கொடுக்கும்.
நம: என்ற சொல் "நான் வாகனம் மட்டுமே. என்னை சாரதியாக இருந்து ஓட்டுபவன் அந்த பார்த்தசாரதியே" என்ற சரணாகதி புத்தியை கொடுக்கும்.
நம: என்ற அக்ஷரத்தின் அர்த்தம் புரிந்து, உணர்ந்து கொள்ளும் போது தான்,
'இனி நாமாக எந்த முயற்சியும் செய்யாமல்.. என்னை சேர்த்து கொள்ள வேண்டிய முயற்சியை பரமாத்மாவே செய்யட்டும்.
என்னை ரக்ஷிக்கும் பொறுப்பு அவர் கையில் இருக்கும் போது, நானும் தனியாக அவரை அடைவதற்கு எதற்காக முயற்சி செய்ய வேண்டும்?
அவர் எப்போது வருவார் என்று எதிர்பார்த்து காத்து கொண்டே இருப்பதே என் வேலை"
என்று சரணாகதியின் உண்மையான நிலை ஏற்பட்டு விடும்.
சரணாகதி லக்ஷணத்தை காட்டும் "நம:" என்ற சொல்லுக்கு நிரூபணம் காட்டினாள் சீதாதேவி.
ராவணன், ராமபிரான் இல்லாத சமயம் பார்த்து, சீதாதேவியை கடத்தி, இலங்கைக்கு தூக்கி சென்று விட்டான். அசோக வனத்தில் கடுங்காவல் வைத்து, நரமாமிசம் உண்ணும் ராக்ஷஸிகள் மத்தியில் சிறைப்படுத்தி விட்டான்.
தினமும் சீதாதேவியிடம், ஆசைவார்த்தை சொல்லி, ராமபிரானை அவமானப்படுத்தி தன் பெருமையை மெச்சி பேசி, மிரட்டி, கெஞ்சி எப்படியாவது சம்மதிக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.
தன் "கற்பு என்ற அக்னியாலேயே" ராவணனை பொசுக்கி விடும் சக்தி இருந்தும், சீதாதேவி பொறுமை காத்தாள்.
தானே தப்பிக்க, சிறு முயற்சியும் செய்யாமல், சீதா தேவி "ராமபிரான் வருவார்" என்று காத்து இருந்தாள்.
ஹனுமான் இலங்கை வந்து போது, சீதாதேவியிடம் "இப்பொழுதே தூக்கி சென்று ராமபிரான் முன் நிறுத்தி விடுகிறேன்" என்று சொல்லியும், பிறர் உதவி வேண்டாம் என்று மறுத்தாள்.
இதுவே சரணாகதி தத்துவம்.
"பகவான் காப்பாற்றுவார்" என்று நிச்சய புத்தி உள்ளவனுக்கு, 'பகவான் காப்பாற்றுவாரோ?' என்ற சந்தேகம் ஏற்படாது.
'எதற்கும் நாமும் ஒரு சில முயற்சி செய்து வைப்போமே!', "எதற்கும் இன்னொரு கோவிலுக்கும் சென்று பிரார்த்தனை செய்து வைப்போமே!" என்ற சபல புத்தி ஏற்படாது.
சீதாதேவியை ராவணன் தூக்கி சென்ற போது, ராமபிரானுக்கு சீதாதேவி எங்கு சென்றாள்? என்று கூட தெரியாது.
சரணாகதி செய்த சீதாதேவி, "ராமபிரான் எப்படியும் தான் எங்கு இருக்கிறோம் என்று கண்டுபிடித்து விடுவார், நம்மை காப்பாற்றி விடுவார்" என்று திடநம்பிக்கையுடன் இருந்தாள்.
நம: என்ற சொல்லுக்கு நிரூபணமாக இருந்தாள் சீதாதேவி.
சீதாதேவி சரணாகதி என்றால் என்ன? என்று நமக்கு காட்டினாள்.
ஓம் என்ற பிரணவம், ஜீவாத்மாவுக்கு, பரமாத்மாவின் உறவை மட்டும் காட்டுகிறது.
ஆனால், யார் அந்த பரமாத்மா? என்று ஓம் என்ற பிரணவம் சொல்லவில்லை.
ஓம் என்ற பிரணவத்தின் விளக்கம் தெரிந்து கொள்ள, படியுங்கள் Click_Here
இதனால், பிரணவம் குறிப்பிடும் "அந்த பரமாத்மாவை" பக்தனாக இருப்பவன், தன் இஷ்ட தெய்வங்களுக்கு பயன்படுத்தி கொள்கிறான்.
இது பக்தியின் லக்ஷணம் என்று தான் எடுத்து கொள்ள வேண்டும்.
"உண்மையில் யார் அந்த பகவான்? யார் அந்த பரமாத்மா? யார் அந்த புருஷன்?"
"ஹரி: ஓம்" என்றும், "லக்ஷ்மியின் கணவன்" என்ற புருஷ சூக்தத்தில் வேதம் அந்த பரமாத்மா, "நாராயணனே" என்று முடிவாக சொல்கிறது.
புருஷன் யார்? பகவான் யார்? என்ற கேள்விக்கு வேதமே பதில் சொல்கிறது. மேலும் படியுங்கள் Click Here
பரமாத்மா என்று மட்டும் சொன்னால், நமக்கு பக்தி செய்ய முடியாது.
ஓம் என்ற பிரணவம் "பரமாத்மாவுக்கும், நமக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது".
ஆனால் "இவர் தான் பரமாத்மா, இவைகள் தான் இவருடைய தெய்வீக குணங்கள்" என்று காட்டாததால், நமக்கு பக்தி செய்ய வாய்ப்பு இல்லாமல் போகிறது.
பக்தி இல்லாத ஞானம் தருவதால், பிரணவத்தை மட்டும் சொல்லி மோக்ஷம் அடைபவர்கள், "ஞானியாக" இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
"ஓம்" என்ற பிரணவத்தை புரிந்து கொண்டாலும், சாதாரண மக்களால், பிரணவத்தை மட்டும் சொல்லி "மோக்ஷம்" அடையும் பக்குவம் இருக்காது.
"ஏதோ ஒரு பரமாத்மா நம்மை படைத்து இருக்கிறார்" என்ற அறிவு வேண்டுமானால் வரலாம்.
அதிக பட்சம் "கைவல்யம்" என்ற மோக்ஷம் கூட அடையலாம்.
ஆனால், அந்த பரமாத்மாவை எளிதில் அடைய முடியாது.
"பக்தி கலந்த, பிரணவம்" அனைவருக்கும் மோக்ஷ வாசலை திறந்து விடுகிறது.
இந்த வைகுண்ட வாசலின் சாவியை வைத்து கொண்டிருக்கும், ஸ்ரீனிவாச பெருமாளே நமக்கு பிரணவத்துடன் சேர்த்து, திருஅஷ்டாக்ஷர மந்திரமாக கொடுத்து விட்டார்.
ஸ்ரீனிவாச பெருமாளே, தொண்டைமான் சக்கரவர்த்திக்கு, அந்த பரமாத்மா "நானே" என்று திருஅஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்தார்.
"ஓம் நமோ நாராயணா" என்ற இந்த மந்திரத்தில், "ஓம்" என்ற பிரணவத்தின் விளக்கம் தெரிந்து கொள்ள, படியுங்கள் Click_Here
இனி, "நமோ நாராயணா" என்பதின் விளக்கத்தை கவனிப்போம்.
2. நமோ நம: என்ற சமஸ்கிருத சொல்லையே, தமிழில் "நமோ" என்கிறோம்.
a) 'ம' என்ற சொல், "மம"காரத்தை குறிக்கும்.
தமிழில் "நான்" "எனது" என்ற அகம்பாவத்தை குறிக்கும்.
b) 'ந' என்ற சொல், "இல்லை" என்பதை குறிக்கும்.
ஆக, "நமோ" என்று சொல்லும் போது, "நான் (ஜீவாத்மா) செய்கிறேன், இது என்னுடைய (ஜீவாத்மாவின்) திறமையால் கிடைத்தது என்ற அகம்பாவத்தை விட்டு, நான் (ஜீவாத்மா) செய்யவில்லை"
என்று உணர்த்துவதே இந்த "நம:" என்ற சப்தத்தின் பொருள்.
மோக்ஷமே கிடைத்தாலும்,
துக்கமே வந்தாலும்,
சுகமே வந்தாலும்,
என்ன நடந்தாலும், "அது அந்த பரமாத்வாவின் இஷ்டம்"
என்று இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதே "நமோ" என்ற சொல்லின் அர்த்தம். இதுவே வைஷ்ணவனின் லக்ஷணம்.
திருப்பதி சென்று, ஸ்ரீனிவாசனை தரிசனம் செய்தாலும்,
அவரிடம் பக்தி செய்யவும், அவருக்கு சேவை செய்யவும் ஆசை வர வேண்டுமே தவிர, "அவரிடம் இது வேண்டும், அது வேண்டும்"
என்று கேட்க கூடாது. இதுவே வைஷ்ணவனின் லக்ஷணம். "நாம் கேட்காமலேயே நம் தேவை அறிந்து அவரே தருவார்" என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
"அவரை பார்க்க வேண்டும்" என்ற ஆசை தான் முக்கியம்.
அவருடைய இஷ்டத்துக்கு நம்மை காப்பாற்ற விட வேண்டும்.
"நமக்கு எஜமானன் அவர்" என்ற உண்மையை உணர்ந்து, "எப்பொழுதும் நம்மை காப்பாற்றுகிறார்" என்ற உண்மையை உணர்ந்து, எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும்.
இடையூறுகள் வந்தாலும், எப்படி ஸ்ரீனிவாச பெருமாள் நம்மை காப்பாற்ற போகிறார்!! என்ற ஆச்சர்யத்துடன், ஆவலுடன், அவர் எப்படி காப்பாற்றுகிறார் என்று பார்க்கிறேன்? என்று வெளி மனிதன் போல பார்க்க வேண்டும்.
"துக்கங்கள் யாவும் அவர் பார்த்து கொள்வார்" என்ற புத்தியுடன், "சேவை செய்வதே நம் கடமை" என்று, "நான்" என்ற எண்ணம் இல்லாமல், சந்தோஷமாக இருக்க வேண்டும்.
"என்னுடைய எஜமானன் (பரமாத்மா) என்னை படைத்து இதுவரை காப்பாற்றி கொண்டு இருக்கும் பொழுது, நான் தனியாக முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை" என்ற நிலையை உணர்த்தவே, "நமோ" என்று சொல்கிறோம்.
3. நாராயணா ஓம் என்ற பிரணவத்தில் அந்த பரமாத்மாவை சேர்ந்தவன் ஜீவாத்மா என்று உறவை உணர்த்துகிறது. யார் அந்த பரமாத்மா? என்ற கேள்விக்கு, "நரனாக (மனிதர்களாக) பிறப்பு எடுத்த அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் கதியாக இருப்பவனே நாராயணன். அந்த நாராயணனே பரமாத்மா" என்று "நாராயணா" என்ற சப்தம் நமக்கு வழி காட்டுகிறது.
"நாராயணாயேதி" என்று சொல்லும் போது, அந்த "யேதி" என்ற சப்தம், நாராயணன் "ஒருவனே" பகவான், வேறு யாரும் பகவான் இல்லை, மற்ற தேவதைகள் யாவும் இவர் அங்கங்களே என்று உறுதி செய்கிறது. திட விசுவாசம், ஏக பக்தியே மோக்ஷத்திற்கு வழி.
இப்படி, திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை உணர்ந்து சொல்ல, அந்த நாராயணன் பிறவி கடலில் இருந்து நம்மை கை தூக்கி, பரமபதம் என்ற தன் வைகுண்டத்தை கொடுத்து நித்யமாக வாழ வைக்கிறான்.
ஓம் நமோ நாராயணா.
"ஓம்" என்ற பிரணவத்தை யார் வேண்டுமானாலும் சொல்ல கூடாது.
பிரணவத்தை தகுந்த குருவை கொண்டு உபதேசம் பெற்று,
அதற்குரிய காலத்தில்,
அதற்குரிய நியமத்துடன் சொல்ல வேண்டும். உண்மையான ஞானத்த்துடன் சொல்ல வேண்டும். உணவிலும், பழக்கத்திலும் ஒழுக்கம் தேவை.
இப்படி பல நியமங்கள் கொண்ட பிரணவ மந்திரம், தன்னை தானே சுலபமாக்கி கொண்டு, "ராம" என்ற மற்றொரு பிரணவ மந்திரமாக தன்னை வெளிப்படுத்தியது.
ராம நாமத்தை யாரும் சொல்லலாம்.
ராம நாமத்தை எங்கும் சொல்லலாம்.
ராம நாமத்தை குண சீலனும், குணம் கெட்டவனும் சொல்லலாம்.
ராம நாமத்தை சனாதன தர்மத்தில் உள்ளவனும் சொல்லலாம்,
ராம நாமத்தை மற்ற பொய் மதங்களில் விழுந்து தடம் மாறியவனும் சொல்லலாம்.
ஆஞ்சநேயர் அனுதினமும் சொல்வது "ராம" மந்திரமே.
சிவபெருமான் காசியில் அனுதினமும் சொல்வது "ராம" மந்திரமே.
வால்மீகியை ராமாயண காவியம் எழுதும் முன், அவருக்கு ஞானத்தை கொடுத்ததும், "ராம" நாம மந்திரமே.
ஞானம் அடைந்த வால்மீகியை, ப்ரம்ம தேவன் காண வந்து, அந்த ராம நாமத்திற்கு சொந்தக்காரரான பரவாசுதேவன், ஸ்ரீ ராமராக அவதரிக்க போவதை சொல்லி, ஸ்ரீ ராமாயணம் எழுத சொன்னார். ஸ்ரீ ராமரை அவதரிக்க செய்ததும், ராம நாமமே.
பிரணவ (தாரக) மந்திரமான "ராம" நாமத்தை சொல்ல சொல்ல, பரவாசுதேவனை அறியும் ஞானம் கிடைக்கும்.
உலக சுகங்கள் யாவும் தானாக வந்து சேரும்.
தாரக மந்திரம் என்ற "ராம" நாமத்தை, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம்.
"தாரகம்" என்றால் "கடப்பது" என்று பொருள்.
ராம நாமத்தை சொல்பவன், பிறவி என்ற கடலை கடந்து விடுகிறான். வைகுண்டம் அடைகிறான். பரமாத்மாவை அடைகிறான்.
ஓம் என்ற தாரக மந்திரம், தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே.
தன்னை சுலபமாக்கி கொண்ட "ராம" என்ற தாரக மந்திரம், அனைவருக்கும் சொந்தமானது. அனைவரும் எப்பொழுதும் சொல்வோம் ராம ராம ராம.... Hare Rama Hare Krishna - Listen to Bhajan