Followers

Search Here...

Showing posts with label திரு அஷ்டாக்ஷர. Show all posts
Showing posts with label திரு அஷ்டாக்ஷர. Show all posts

Wednesday 3 July 2019

மந்திரங்களில் சிறந்தது "காயத்ரி மந்திரம்". அதையும் விட சிறந்தது எது? தெரிந்து கொள்வோம். ஜபம் செய்வோம்

மந்திரங்களில் சிறந்தது "காயத்ரி மந்திரம்".


காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்தது "அஷ்டாக்ஷர மந்திரம்".
"காயத்ரி மந்திரத்தையும்" விட "அஷ்டாக்ஷர மந்திரம்" ஏன் சிறந்தது?
அஷ்டாக்ஷர மந்திரத்தின் விளக்கம் இதோ

கம்சன் கூட "காயத்ரி மந்திரத்தை" ஜபித்தான்.
ராவணனுக்கு புலஸ்திய மகரிஷியே "காயத்ரி மந்திரத்தை" உபதேசம் செய்து, வேத அத்யயனமும் செய்து வைத்தார். தினசரி அக்னி ஹோத்ரம் செய்து வந்தான் ராவணன். ப்ராம்மணன்.
ஹிரண்யகசிபுவும் கஷ்யப ரிஷியிடம் "காயத்ரி மந்திர" உபதேசம் பெற்றவன் தான்.


காயத்ரி மந்திரம் ஜெபித்து விஸ்வாமித்ரர் - "ரிஷி" என்ற அந்தஸ்தை பெற்றார்.
ஆனால் அதே மந்திரம் அனைவரையும் காப்பாற்றவில்லை.

காயத்ரி மந்திரத்தை ஜபித்தும் -  சிசுபாலன், கம்சன், ஹிரண்யகசிபு, ராவணன் அனைவரும் அழிந்து போனார்கள்.
கர்வம் உள்ளவர்களை கை விட்டு விடும் காயத்ரி மந்திரம்.

நாராயண மந்திரம், தீயவனாக இருந்து ஜபித்தாலும், நரர்களான நமக்கு பரமாத்மாவான நாராயணனை துதிப்பதால், நம் தீய குணத்தையும் சரி செய்து, நம் பக்தியை உயர்த்தி, மோக்ஷம் வரை கிடைக்க செய்திடும்.

விளையாட்டாக, தன் மகனை "நாராயணா" என்று மரண தருவாயில் கூப்பிட்ட அஜாமிலன் போன்றவர்கள் கூட, மோக்ஷத்தை அடைந்து விட்டார்கள்.
திருவஷ்டாக்ஷர மந்திரத்தை ஆச்ரயித்து ஜபித்தவன், இன்று வரை அழிந்து போனான் என்ற சரித்திரம் இல்லை. இனிமேலும் இருக்க போவதில்லை.

ஆனால் காயத்ரியை ஜெபித்து 'எல்லோரும்' கறையேறி விட்டார்கள் என்று சொல்ல முடியாது.

உலக தர்மத்துக்காக கொடுக்கப்பட்டது காயத்ரி மந்திரம். காப்பாற்றினாலும் காப்பாற்றும். ராவணன் போன்றவர்கள் ஜபித்தால்,  கைவிட்டாலும் கைவிடும்.
பகவானால் கொடுக்கப்பட்டது திருவஷ்டாக்ஷர மந்திரம். இந்த மந்திரம் அனைவரையும் காப்பாற்றவே காப்பாற்றும். மந்திரத்தை ஜபித்தவனை கை விடவே விடாது.


காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால், காயத்ரி தேவி பலன் கொடுக்கிறாள்.

திருவஷ்டாக்ஷர மந்திரத்துக்கு சாஷாத் பரமாத்மா நாராயணனே பலன் தருகிறார் என்பதால், இந்த மந்திரம் அனைவரையும் காப்பாற்றவே காப்பாற்றும்.
"நமே பக்த ப்ரநஸ்யதி" என்று
"என் பக்தன் நாசமாக மாட்டான்" என்று பகவானே வாக்கு கொடுக்கிறார்.

திருமந்திரம் அனைவருக்கும் பொதுவானது.
அனைவரையும் காப்பாற்றக்கூடியது.

மந்திரங்களில் மிகவும் உயர்ந்தது. நிச்சயமாக மோக்ஷம் வரை தர கூடியது என்று கண்டு கொண்ட ஆழ்வார்கள்,
"கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்" என்று ஆனந்தபட்டதில் ஆச்சர்யம் இல்லையே.
4000 திவ்ய ப்ரபந்தமும் நாராயணனையே துதி செய்கிறது.

அதே நாராயணன் தான் நமக்காக கோவிலில் அர்ச்ச அவதாரம் செய்து, நமக்காக காலம் காலமாக காத்து கொண்டு இருக்கிறார்.
சிலையாக அர்ச்ச அவதாரமாக நாராயணன் கோவிலில் இருக்கிறார்.. அவர் பேசுவாரா?
கல்லாக காட்சி கொடுக்கும் அவரிடம் எப்படி பக்தி செய்வது?
என்று நாம் நினைப்போம் என்று தானோ, ஆழ்வார்கள் பூமியில் அவதரித்து, கோவிலில் இருக்கும் அதே அர்ச்ச அவதார பெருமாளிடம் பக்தி செய்து காட்டி, திவ்ய பிரபந்தங்களை பாடியும், பேசியும் பக்தி செய்து, நமக்கும் அந்த திவ்ய பிரபந்தங்களை கொடுத்து விட்டனர்.






'சாஷாத் நாராயணன், அர்ச்ச அவதாரமாக உள்ளார்' என்று அறிந்தும், மோக்ஷத்துக்கு ஆசைப்படும் ஆழ்வார்கள் பக்தி செய்யாமலா இருப்பார்கள்.

அவர்கள் அர்ச்ச அவதாரமாக இருக்கும் நாராயணனிடம் பேசி, உரையாடியதை 4000 திவ்ய ப்ரபந்தமும் நமக்கு காட்டுகிறதே...

கோவிலுக்கு, சென்று பெருமாள் முன் நிற்கும் போது, ஏதாவது சொல்லி பேச வேண்டும் என்று பக்தியுள்ள நமக்கு தோன்றும்.
ஒரு பாசுரம் மனப்பாடம் செய்து சொன்னாலும் மனதில் பக்தி துளிர்க்குமே...  ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டாமா?

சிலர் பேசினாலும் ப்ரயோஜனமில்லாத பேச்சாக இருக்கும்.
பெருமாள் பேசாமல் இருந்தாலும், ப்ரயோஜனமாக இருக்கும்.

பெருமாள் சந்நிதி முன் பக்தன் நிற்கும் போது, பேசாமல் இருக்கிறார் என்று போல தோன்றினாலும், பெருமாள் நம்மிடம் பேசாமல் பேசுகிறார்.

நம் பக்தியை பொறுத்து, நாம் என்ன நினைத்து நிற்கிறோமோ, அதை செய்து கொடுக்கிறார் பெருமாள்.

பக்தன் பெருமாள் சன்னதியில் நின்று கண்ணீர் விடுகிறான். 'மனதில் உள்ள ஒரு குறையை, தெய்வம் தான் தீர்த்து வைக்க வேண்டும்' என்று நினைக்கிறான்.
அங்கு அர்ச்சகர் வேறு யாரையோ பார்த்து "கவலைப்படாதீர்கள்.. பெருமாள் உங்கள் குறையை தீர்ப்பார்" என்று சொல்கிறார்.

தன் குறையை பெருமாளிடம் சொல்லிக்கொண்டு நிற்கும் இந்த பக்தனுக்கு, அர்ச்சகர் சொல்வது காதில் விழுகிறது.
தனக்கு ஏற்பட்ட குறைக்கு, அர்ச்சகர் மூலமாக பெருமாள் தான், தனக்கு பதில் சொல்கிறார் என்று பெரும் நிம்மதியை அடைகிறான் பக்தன்.


பக்தியின் முதல் படியில், பகவான் பேசும் முறை இது.

தன்னிடம் பேச ஆசைப்படுகிறார் என்று உணர்ந்த பக்தன்,
தன் பக்தியை இன்னும் வளர்த்து கொள்ள முயற்சித்தான் என்றால், கனவில் யாரோ ஒருவனை போல வந்து "நீ திருப்பதி போ... " என்று பேச ஆரம்பிக்கிறார்.
ஏதோ தெய்வ சங்கல்பம் என்று நினைத்து பக்தன் திருப்பதி செல்ல, அவன் குறைகள் தானாக தீருகிறது.

தன்னிடம் பெருமாள் பேச ஆசைப்படுகிறார், வழி காட்டுகிறார், காப்பாற்றுகிறார் என்று உணர்ந்த பக்தன், தன் பக்தியை இன்னும் வளர்த்து கொள்ள முயற்சித்தான் என்றால், கனவில் பெருமாளே திவ்ய காட்சி கொடுத்து, பேச ஆரம்பிக்கிறார்.
"தான் இப்படி ஒரு திவ்யமான காட்சி கண்டோமே" என்று தனக்குள்ளேயே ஆச்சர்யப்படுகிறான் பக்தன்.

ஆண்டாள் பெருமாளிடம் பக்தி செய்து, பெருமாளை அடையவேண்டும் என்று திருப்பாவை இயற்றினாள். பெருமாளையே மணம் முடிக்க முடிவு செய்தாள்.
ஆண்டாளுக்கே பெருமாள் முதலில் கனவில் தான் காட்சி கொடுத்தார். இதை ஆண்டாளே 'நாச்சியார் திருமொழி'யில் தான் கண்ட கனவை, கனவில் தன்னை பெருமாள் மணந்ததை சொல்கிறாள் ஆண்டாள்.

வாரணம் ஆயிரம் சூழ
வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என் எதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்
இதற்கு பின்பு தான் பெருமாள் உண்மையிலேயே வந்து ஆண்டாளை மணந்து கொள்கிறார்.

தெய்வ கனவுகள் எதுவுமே வீணான கனவுகள் இல்லை.

வேண்டாத கன்னா பின்னா கனவுகள் தான் எப்போதும் வரும். அது தான் இயற்கையும் கூட.

திவ்ய கனவுகள் அபூர்வமாக தான் வரும்.
திவ்ய கனவுகள் தெய்வ அருளால் மட்டுமே காண்கிறோம்.

தெய்வ கனவுகள் நமக்கு ஏற்பட்டால் அதுவே பாக்கியம்.

தூங்குவதற்கு முன், தினமும் "நாராயணா.. நாராயணா.." என்று தெய்வ பக்தியுடன் (அன்புடன்) உண்மையாக பகவானை பிரார்த்தித்து, நமக்கும் திவ்ய காட்சிகள் கிடைக்க பெருமாளிடம் பிரார்த்தித்து பின் தூங்க செல்லலாம்.
நம் உண்மையான அன்புக்கு, பகவான் ஒரு நாள் அணுகிரஹம் செய்வார்.

பகவான் நமக்கு ஏதாவது ரகசியமாக ஏதாவது சொல்ல நினைத்தால், கனவு மூலம் தெரிவிப்பார்.
பெருமாள் நேராக வந்து சொல்லலாமே என்று கேட்கலாம். அவர் வருவதற்கு தயாராக இருந்தாலும், நம் நம்பிக்கை, பக்குவத்தின் நிலையை அறிந்து இருப்பதால், வராமல் இருக்கிறார்.

உலக ஆசைகளே இல்லாத ஸ்ரீராமகிருஷ்ணர், கிருஷ்ண சைதன்யர் போன்ற மகாத்மாக்களே, கிருஷ்ண தரிசனத்தை நேரில் பெற்ற பின், உன்மத்தமான நிலையை அடைந்து, உலக நினைவில்லாமல் இருந்தனர்.
அவர்களால் கூட தான் கண்ட திவ்ய காட்சியை ஜீரணித்துக்கொண்டு, உலகத்தோடு பழக முடியவில்லை.

கனவில் காட்சி தரும் பகவான், நேரில் வந்து நமக்கு காட்சி கொடுத்தால், நமக்கு உள்ள பக்குவ நிலையில் தாங்கி கொள்ள முடியாமல் உயிர் பிரிந்து விடும் இல்லை மனம் பேதலித்து விடும்.

நம் பக்தியை உயர்த்தி விட தான் பெருமாளுக்கு விருப்பமேயொழிய நம் உயிரை பறிப்பதில் விருப்பம் இல்லை.

தன்னிடம் பேச ஆசைப்படுகிறார் என்று உணர்ந்த பக்தன், தன் பக்தியை இன்னும் வளர்த்து கொள்ள முயற்சித்தான் என்றால், கனவில் பேச ஆரம்பித்த பெருமாள், ஆபத்தான காலங்களில், சமயத்திற்கு யாரோ போல வந்து உபகாரம் செய்து விட்டு மறைந்து விடுவார்.
துளசிதாஸ், நாம தேவர், சக்குபாய், பத்ராசல ராமதாசர் போன்ற பக்தர்கள் வாழ்வில் பாண்டுரங்கன் யாரோ போலவோ வந்து, சமயத்தில் சக்குபாய் போலவும் வந்து லீலைகள் செய்தார்.

தன்னிடம் பெருமாள் உறவாட ஆசைப்படுகிறார் என்று புரிந்து கொண்டு, மேலும் பெருமாளிடம் பக்தி செய்ய,
அர்ச்ச அவதாரமாகவே இருந்தாலும், பெருமாள் நம்முடன் பேச ஆரம்பிக்கிறார்.

திருமழிசை ஆழ்வார் போன்றவர்கள் பேசினால், பேசுவது மட்டுமின்றி, அவர் கூப்பிட்டார் என்றதும், கல் சிலையாக இருந்து கொண்டே, எழுந்து கொண்டு அவருடன் கிளம்பி விட்டார் காஞ்சியில் என்று பார்க்கிறோம்.
யதோகத்காரி பெருமாள், திருமழிசை ஆழ்வார் கூப்பிட்டார் என்று கிளம்ப, சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்று பெயர் பெற்றார்.

நாராயணா என்று சொல்லும் அனைவருக்கும் மோக்ஷம்.
நாராயணா என்று சொல்லும் யாருமே நாசம் போவதில்லை.
நாராயணா என்று பக்தியுடன் சொல்ல சொல்ல, பகவான் நாராயணன் தன்னை வெளிக்காட்ட ஆசைப்படுகிறார். மறைமுகமாக தான் இருப்பதை உணர செய்து, பக்தியை (தன்னிடம் அன்பு) ஏற்படுத்தி, படிப்படியாக தன்னை வெளிக்காட்டுகிறார் பெருமாள்.

திருவஷ்டாக்ஷர மந்திரத்தை ஆச்ரயித்து ஜபித்தவன், இன்று வரை அழிந்து போனான் என்ற சரித்திரம் இல்லை. இனிமேலும் இருக்க போவதில்லை.


ஹிந்துவாக வாழ்வதில் பெருமை கொள்வோம்.